23 Jul 2020

புயலடிச்சு ஓஞ்சாப்புல ஒரு அமைதி!

செய்யு - 514

            லாலு மாமாவோட மூத்த மவ்வே ஈஸ்வரி வந்து செய்யுவோட கலியாண வெசயமா பேசிட்டுப் போன பெற்பாடு வூட்டுல வெங்குவோட தொந்தரவெ சுப்பு வாத்தியாரால தாங்க முடியல. "சாதவத்தெ வெச்சுக்கிட்டு இன்னும் ஏம் ச்சும்மா உக்காந்திருக்கணும்? சாதவமும் பாக்க வாணாம், ஒண்ணுத்தையும் பாக்க வாணாம். எஞ்ஞ சின்னம்மா புருஷங்காரரு சோசியருத்தானே. அவரு பாக்காமலா பொண்ணப் பாக்க சொல்லி வுடுன்னு சொல்லிருப்பாரு?"ன்னு ஆரம்பிச்சிடுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் கொழம்பி நெதானம் ஆனாரு.
            இந்த நெலையில ஒண்ணுஞ் சொல்ல முடியாம அவரு பாலாமணி, செய்யுன்னு ரண்டு பேத்தோட சாதகத்தையும் எடுத்துக்கிட்டு நாட்டியத்தாங்குடி சோசியர்கிட்டெ கெளம்பிட்டாரு.  நாட்டியத்தாங்குடி சோசியரான தேசிகரு சாதகத்தெப் பாக்குறதுக்கு மின்னாடி பொண்ணு மாப்புள்ளையோட நட்சத்திர ராசியைத்தாம் கேட்டாரு. ரெண்டு பேத்துக்குமே பூராட நட்சத்திரம், தனுசு ராசின்னதும், அப்படியெல்லாம் ஏக நட்சத்திரம், ஏக ராசிக்கெல்லாம் பொருத்தம் பாத்துச் சொல்லுறதில்லன்னுட்டாரு எடுத்த எடுப்புலயே. இருந்தாலும் சுப்பு வாத்தியாரு பொண்ணு, மாப்புள ரண்டு பேத்துமே சொந்தம்ன்னு சொன்னதுக்குப் பெற்பாடு பாக்குறதுக்கு ஒத்துக்கிட்டாரு.
            பாத்தவருக்கு அவ்வளவா திருப்தியில்ல. "வேணும்ன்னா ஒரு வருஷத்துக்குக் கழிச்ச பெற்பாடு செய்யலாம்!"ங்ற மாதிரிக்கிச் சொன்னாரு. அவரு இன்னொரு காரணத்தையும் சொன்னாரு, "பொதுவா பொண்ணு மாப்புளல யாருக்காச்சியும் ஒருத்தருக்கு வயசு முப்பதாயிட்டுன்னா சாதகத்துல ஒண்ணுமில்ல. பொண்ணுக்கு வயசு இருவத்து மூணுன்னாலும், பையனோட வயசு முப்பத்தாறு. இதுல அந்த வெதத்துல பாக்குறதுக்கு ஒண்ணுமில்லே! அப்பிடியும் சாதவத்தெ எடுத்துக்கிடலாம். ஏன்னா ஒஞ்ஞ மொகத்தப் பாக்குறப்போ இத்தெ முடிச்சாவணுங்ற எண்ணம் தெரியுது!"ன்னுட்டாரு.
            அந்த முப்பது வயசுக்கு மேல சாதவத்தெ பாக்க வாணாங்ற ஒரு வெசயந்தாம் சுப்பு வாத்தியாருக்குக் கொஞ்சம் திருப்தியா இருந்துச்சு. மித்தபடி நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்னதுல வேற எதுவும் திருப்தியா இல்ல. அதெயும் அவரோட மொகத்தப் புரிஞ்சிக்கிட்டவரு போல நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்னாரு, "மனநெலைகள் சரியா இருந்தா கெரக நெலைகள் ஒண்ணும் பண்ணப் போறதில்லே! அதெயும் பாத்துக்கிடணும்! இந்த கெரக நெலைகள் மனநெலைகளத் தீர்மானிக்கிது! அதாலச் சொல்றேம்!"
            சுப்பு வாத்தியாரு கருக்கல்லயே போயி மொத ஆளா பாத்துட்டு இருக்குறதுக்குள்ளாரயே நாலு பேத்து வந்து நின்னதெப் பாத்துப்புட்டு, அதுக்கு மேல எதுவும் பேச வேண்டாத அளவுக்குச் சோசியரு முடிவா சொல்லிட்டதா நெனைச்சுக்கிட்டு நூத்து ரூவா நோட்டெ ஒண்ண எடுத்து நீட்டிட்டுக் கெளம்புனாரு. அவரு நாட்டியத்தாங்குடி சோசியருகிட்டெ மேக்கொண்டு ரொம்ப பேசாம வந்ததுக்கு இன்னொரு காரணம், அடுத்தா அவரு கொண்டு போயி காட்டுற கொத்தூரு சோசியர்ர மனசுல வெச்சித்தாங். வேற என்ன சந்தேகமா இருந்தாலும் அவருகிட்டெ கேட்டுக்கிடலாம்ன்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            மறுநாளு பொழுதெ விடிய வுட்டுப்புட்டு, கொத்தூரு சோசியரு சங்கு சுப்புரமணியத்தையும் போயிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. சாதகத்தப் பாத்தவரு அப்பிடியே சாதகத்தெ தூக்கி அந்தாண்ட வெச்சிட்டாரு. இதெப் பத்திப் பேச வாணாம்ன்ட்டாரு. சுப்பு வாத்தியாருக்கு ஓரளவுக்கு அதோட வெசயம் புரிஞ்சிது. சோசியரோட வாயால வெசயம் வாரணும்ன்னு எதிர்பாத்து, "நெலவரம் என்னான்னு சொல்லிப்புட்டா, நாம்ம ஒரு முடிவு எடுக்க வசதியா இருக்கும்!"ன்னாரு. சங்கு சுப்பிரமணியம் ஒரு நிமிஷம் கண்ண மூடித் தொறந்தாரு. "வேற எடம் இருந்தா பாருங்களேம்! அப்பிடி வாய்ப்பு இல்லன்னா கடெசியா வேணும்ன்னா இதெ செய்யலாம். அதுலயும் அப்பிடி இதெத்தாம் செய்யணும்ன்னா காலத்தெ தாழ்த்திப் பண்ணுங்க! வேற ஒண்ணுத்தையும் வெளிப்படையா சொல்றதுக்கில்ல!"ன்னாரு.
            "பொதுவா முப்பது வயசுக்கு மேல மாப்புள்ளைக்குப் போயிட்டா சாதவத்தெ பாக்க வாணாம்னும் சொல்றாங்களே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவு எதுக்குச் சாதகத்தத் தூக்கிட்டு வந்தீயே?"ன்னாரு சங்கு சுப்புரமணியம். சுப்பு வாத்தியாருக்கு மூஞ்சுல அடிச்சாப்புல போயிடுச்சு. மேக்கொண்டு என்னத்தெ பேசுறதுன்னு தெரியாம அப்படியே உக்காந்திருந்தாரு. எழுந்து கெளம்ப அவருக்கு மனசில்லெ. அதெ பாக்க சங்கு சுப்புரமணியத்துக்கெ பாவமா போச்சோ என்னான்னு தெரியல. அவராவே பேச ஆரம்பிச்சாரு.
            "முப்பது வயசுக்கு மேல போனா வாழ்க்கையில ஒரு அனுபவம், நெதானம் வந்துடுங்றதால அப்பிடிச் சொல்றது. மனசுக்கு நெதானம் வந்த பெற்பாடு சாதகத்துல உள்ளது வேல செய்யாதுங்ற கணக்குல சொல்றது. அதாச்சி மனசு கட்டுக்குள்ள வந்துட்டா சாதகம் கட்டுக்குள்ள வந்துட்டதாவும், சாதவத்துல சொல்றதெ மாத்தி அமைக்குற சக்தி வந்துட்டதாவும் அர்த்தம். நீஞ்ஞ பாத்துட்டு வந்துருக்குற மாப்புள்ளைக்கு மனசு நெதானம் ஆயிட்டுன்னு எப்பிடி கண்டுபிடிப்பீயே? அதுக்கு எதாச்சும் சாதவத்தெ வெச்சிருக்கியளா? அப்பிடி இருந்தா சாதவமெ பாக்க வேண்டியதில்லா. வெசயம் அம்புட்டுத்தாங். மனசுல வைராக்கியமா எழுந்துட்டா பெறவு கெரகமும் கெடையா, சாதவமும் கெடையா. அம்மா வைரக்கியமா எழுந்தப் பயெ எவ்வேம் அவ்வேம்? அவனெ நாம்ம கண்ணால பாக்கணுமே?"ன்னாரு.
            "மாப்புள்ளப் பையேம் டாக்கடர்ரு. அதுவும் ஆயுர்வேதத்துல டாக்கடர்ரு! அதாலத்தாம் கேக்குறேம்! அத்தோட சொந்தம் வேற!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "சொந்தத்துல டாக்கடர்ரு மாப்புள்ங்றதால யோசிக்குதீயோ? சித்தா டாக்கடர்மாரு, ஆயுர்வேத டாக்கடர்மாருன்னா மனசுக்குள்ள ஒரு நெதானம் இருந்தாத்தாம் முடியும். இல்லன்னு சொல்லிட முடியா. அத்து பரம்பரை பரம்பரையா மருத்துவனா வர்றாம்லா அவனுக்குப் பொருந்தலாங். இவுனுவோ ஏட்டெ படிச்சில்லா வாரணுவோ. பரம்பரெ அனுபவத்துல ரத்தத்துல வாரதில்லீயே. அந்த ஒரு எடத்தெத்தாங் யோஜிக்க வேண்டிருக்கு. அதுல நீஞ்ஞ ஒரு வேள பெலமா நின்னா, வேணும்ன்னா பண்ணிக்குங்க. அந்த எடத்துக்கு நாம்ம உத்தரவாதம் பண்ண முடியா!"ன்னுட்டாரு சங்கு சுப்புரமணியம்.
            சுப்பு வாத்தியாரு சங்கு சுப்புரமணியத்தோட மொகத்தையே பாத்துட்டு இருந்தாரு.
            "அதுக்குத்தாங் செல விசயங்கள மேக்கொண்டு நாம்ம சொல்றதில்லெ. சாதவத்தெ வெச்சிப்புட்டேம்ன்னா அதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்றது கணக்கு. நீஞ்ஞ நமக்குத் தெரிஞ்ச ஆளா போயிட்டதால நாம்ம கொஞ்சம் உணர்ச்சிவசபட்டாச்சு. நாம்ம அனுபவிக்காத கஷ்டமில்லே, தர்ம சங்கடமில்லெ. நமக்கே மனசுக்கு அந்த அளவுக்குத்தாங் நெதானம்ன்னா பாத்துக்கோங்க. இப்போ அறுவதுக்கு மேல வயசாவுது. முப்பதுக்கு மேல சாதவத்தெ பாக்காம கலியாணத்தப் பண்ணலாம்ன்னா நமக்கு ரண்டு பங்குக்கு மேல அறுவதெ கடந்தாச்சே, நாம்ம இன்னொரு கலியாணத்த சாதவத்தப் பாக்காம பண்ணிக்கிடலாமா? நீஞ்ஞத்தாம் சொல்லணும்!"ன்னாரு சங்கு சுப்புரமணியம்.
            "முடிவா ஒண்ணுத்தெ சொல்லிட்டீங்கன்னா சஞ்சலம் தீந்துப்புடும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சங்கு சுப்பிரமணியம் சிரிச்சாரு. "சொந்தம், அத்தோட ஆயுர்வேதத்துல டாக்கடர்ரு. வெசாரிச்சுக்குங்க. வூட்டுல கலந்துக்குங்க. நல்ல எடமா இருக்குறப்போ சாதவத்தெ மட்டும் பாத்துட்டு விட்டுடவும் முடியா. சாதவம் நல்லா இருக்குறதால மோசமான எடத்துல கொண்டு போயிக் கொடுத்துடவும் முடியா. அனுபவிக்கிறதுன்னு சில விதிப்பாடுக இருந்தா எதெயும் ஒண்ணும் தடுத்துட முடியாது, விதி முடிஞ்சா விரியன் பாம்பு தேடி வந்து கடிக்குங்ற மாதிரிக்கி!"ன்னாரு சங்கு சுப்புரமணியம்.
            "இன்னும் கொஞ்சம் முடிவா சொல்ல முடியுங்ளா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பரிதாபமா.
            "மாப்புள்ள பையனெ மட்டும் ந்நல்லா வெசாரிச்சுங்க. சொந்தத்துல ன்னா வெசாரிக்குறதுன்னு விட்டுப்புட வாணாம். ந்நல்லா வெசாரிச்சப் பெறவு மனசுக்குத் திருப்திப்பட்டா செய்யுங்கோ. எல்லா நேரத்துலயும் சாதவத்துல சொல்ற மாதிரிக்கி நடக்குறதுமில்லே, சொல்லாதத் தாண்டியும் நடக்குறதில்லே. இதாங் சாதவத்தெ தாண்டி நாம்ம சொல்ல வாரது! சிவ சிவ ஓம் நமச்சிவாயா! கொத்தூரானே சுயம்பு சுந்தரேஸ்வரா!"ன்னு சங்கு சுப்புரமணியம் எழும்பிக்கிட்டாரு. சுப்பு வாத்தியாரு எழும்பிக்கிட்டாரு.
            கொத்தூர்லேந்து சுப்பு வாத்தியாரு ஒரு மாதிரியான யோசனையிலயே வூடு வந்து சேந்தாரு. நேத்திக்கு நாட்டியத்தாங்குடி போயிட்டு வந்தவரெ வெங்கு தொளைச்சு எடுத்துப் பாத்துச்சு. அவரு முடிவா ஒண்ணும் சொல்லாம, நாளைக்கு ஒரு நாளு பொறுன்னு சொன்னாரு. அதால இன்னிக்கு வூட்டுக்கு வந்தவர்ர வெங்குப் போட்டு அரிச்சி எடுக்க ஆரம்பிச்சிது. மொத கேள்வியா, "பொருத்தம் இருக்கா?"ன்னு ஆரம்பிச்சது.
            "இருக்கு! ஆன்னா கலியாணத்தெ தள்ளிச் செய்யணும்ங்றாப்புல சொல்றாங்க சோசியக்காரவுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பேச்சு வார்த்தெ, பொண்ணு பாக்குறது, மாப்புள பாக்கறது, கலியாணத்துக்கு மண்டபத்தெ பாக்கறதுன்னு அத்து இழுத்துக்கிட்டுதாங் போவும். அதால தானாவே தள்ளித்தாம் கலியாணங்றது நடக்கும்! வேறென்ன சொன்னாங்க சோசியருங்க?"ன்னு அதுக்கு ஒரு பதிலச் சொல்லி, மேக்கொண்டு ஒரு கேள்வியையும் கேட்டுச்சு வெங்கு.
            "மாப்புள்ள பொண்ணுல யாராச்சும் ஒருத்தருக்கு முப்பது வயசுக்கு மேல போயிட்டா சாதவம் தேவல்லன்னுத்தாம் சோசியத்துலயே சொல்லுதாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவு என்னத்துக்கு சோசியத்தப் போயிப் பாத்து அதுக்கு வேற தண்டக் காசிய அழுதுட்டு வந்தீரு?"ன்னுச்சு வெங்கு.
            "நாளைக்கு பொண்ணு மாப்புளப் பாக்குற எடத்துல சாதவத்தெப் பாத்துட்டீங்கன்னா மூஞ்செ எஞ்ஞக் கொண்டு போயி வெச்சிக்கிடறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் பாத்தாச்சுல்லா! பெறவென்ன? இதுக்கு மேலயும் தேடி வந்த சாதவத்தெ வுட்டுட முடியா. போயிப் பேசி ஆவ வேண்டியதப் பாருங்க!"ன்னுச்சு வெங்கு.
            "கொஞ்சம் பொறுத்துப் பண்ணா தேவலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பழைய எடத்தெ பிடிச்சிக்கிட்டு.
            "இதுக்கு மேல பொறுத்தா உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு உக்காந்துக்கிட வேண்டியதுதாங். எவானச்சும் டாக்கடர்ரு மாப்புள்ளையா இருக்காம்ன்னே கொத்திட்டுப் போயிடுவாங். பெறவு ஒஞ்ஞளுக்கு ஒஞ்ஞ வேகத்துக்கு மாப்புள்ள பாக்கறதுன்னா அத்து ரண்டு வருஷம் ஆயிடும். இப்பிடியே போயிடுச்சுன்னா அவ்வே செய்யுவுக்கும் நீஞ்ஞ சொல்றாப்புல, முப்பது வயசாயி சாதவமே பாக்க வேணாங்ற நெல ஆயிடும். பெறவு எந்தப் பெரச்சனையும் இருக்கா. எந்தச் சாதவம் வந்தாலும் கட்டிக் கொடுத்துட்டுப் போயிட்டே இருக்கலாங். கேக்குறேம்ன்னு தப்பா நெனைச்சுக்காதீயே? காத்தடிக்குறப்பா தூத்துறதா? கதிரடிக்குறப்போ காய வைக்குறதா? ஆறு பொரள்றப்போ தண்ணி வைக்குறதா? வெறவு எரியுறப்போ ஒலைய போடுறதா? தூபம் காட்டுறப்போ தரிசனம் பண்ணிக்கிறதா? தள்ளிப் போட்டுகிட்டெ இருந்தா போட்டுக்கிட்டெ இருக்க வேண்டியதுதாங். தள்ளிப் போட்டவேம் எந்தக் காரியத்தெ செஞ்சி முடிச்சாம்? தள்ளிப் போடுறவேம் புத்திக் கொள்ளியில போனாலும் போவாது. நல்ல எடமா வருதா? சோலி முடியுதான்னு பாக்கோணும்! இவ்வனெ மட்டும் வுட்டுப்புட்டு வேற எவனாச்சும் பிடிச்சி கலியாணத்தப் பண்ணிப் பின்னாடி எத்துவும் சரியில்லாம போச்சுன்னா நாம்ம பொம்பளையாவே இருக்க மாட்டேம். ருத்ர தாண்டவத்தெ ஆடிப் புடுவேம் பாத்துக்கோ மனுஷா? நாம்ம பொல்லாதவளா ஆயிடுவேம் பாத்துக்கோ!"ன்னுச்சு வெங்கு.
            சுப்பு வாத்தியாருக்கு அடிச்சப் புயல் காத்துல தெளிஞ்சாப்புல இருந்துச்சு. இப்போ சாதவத்தப் பத்தின கொழப்பம் எதுவும் அவரோட மனசுல யில்ல. வருங்காலத்துல வெங்கு சொன்னாப்புல, இந்தச் சம்பந்தம் அமையாம, வேற எதாச்சிம் மோசமான சம்பந்தமா அமைஞ்சா தன்னோட நெலமையக் கொஞ்சம் யோசனெ பண்ணிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. அவரோட மனசுக்குள்ள முருகு மாமா, சித்துவீரன்னு ரண்டு பேத்து வூட்டுக்கும் போயி பேசுறதுங்ற முடிவு உண்டாயிடுச்சு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...