செய்யு - 513
வாழ்க்கை அப்பிடியே போயிடுறது இல்ல. அது
ஒவ்வொரு போக்குலயும் வெவ்வேறு வெதமா மாறும். மனுஷன் நெனைக்குற மாதிரியும் இல்லாம,
நெனைக்காத மாதிரியும் இல்லாம அது ஒரு போக்குல போவும். அதுல ஏம் இப்பிடி நடக்குது,
அப்பிடி நடக்குதுன்னு நெறைய விசயங்களல நடக்குறப்போ புரிஞ்சிக்க முடியுறதுல. அப்பிடி
நடக்குறதுக்குன்னா காரணத்தெ காலங்றது காலம் கடந்துதாங் சொல்லுது.
திருச்சியில இருக்குற லாலு மாமாவோட மொத
பொண்ணு ஈஸ்வரி திடீர்ன்னு ஒரு நாளு திட்டைக்கு வந்துச்சு. வெங்குவப் பாத்து,
"ன்னா சின்னம்மா நீயி அந்தப் பக்கமும் வார மாட்டேங்றே? ஒண்ணும் மாட்டேங்றே? நாஞ்ஞல்லாம்
திருச்சிப் போய்ட்டா ன்னா வந்தா பாக்கக் கூடாது? அப்பிடியே இஞ்ஞ சுந்தரியப் பாக்கலாம்ன்னு
வந்தேம். வந்துதாங் வந்தாச்சு. அப்பிடியே ஒன்னயும் பாத்துட்டுப் போவலாம்ன்னு வந்தேம்.
எப்பயாச்சும் இப்பிடி வார்றப்ப பாத்தாத்தாங்!"ன்னுச்சு.
"நீஞ்ஞல்லாம் பணக்கார வூட்டுப் பொண்டுகடியம்மா!
எஞ்ஞ வூட்டுப் பக்கம்லாம் வருவியளா?"ன்னுச்சு வெங்கு.
"அப்டில்லாம் யாரு சொன்னது ஒனக்கு?
நீயா ஒன்னத்தெ நெனைச்சிக்கிட்டுச் சொன்னா அப்பிடி ஆயிடுமா? இப்ப வாரப்பயும் இஞ்ஞ வாரணும்ன்னு
அவசியமா ன்னா நமக்கு? வர்றோம்லா. பேசுதீயே?"ன்னுச்சு ஈஸ்வரி. அதானே, இத்தனெ நாளும்
வாரதவ இப்ப வர்றதுக்கு என்ன காரணம்ன்னு சட்டுன்னு புடிபடல வெங்குவுக்கு.
"மவனுக்குப் பொண்ணு பொறந்திருக்கு.
ஒரு சேதியும் நமக்குச் சொல்லல. யப்பா யப்பவாச்சும் வாரப்ப சொல்றதுதாங். கேள்விப்படுறதுதாங்.
ஒம் மவ்வேன் கலியாணத்துக்கு தஞ்சாரூக்கு வந்துதாங். பெறவு பிந்துக் கலியாணத்துல எட்டத்துல
பாத்ததுதாங். கலியாண அலமலப்புல ஒண்ணும் பேச முடியாம போயிடுச்சு!"ன்னுச்சு ஈஸ்வரி.
அது வந்த நேரம் சுப்பு வாத்தியாரு வயக்காட்டுப் பக்கமா வெளியில போயிருந்தாரு. விகடு
பள்ளியோடத்துக்குப் போயிருந்தாம். வெங்கு மருமவ்வே, பேத்தி, பொண்ணு எல்லாத்தையும்
அழைச்சாந்து பேச வெச்சது. பேச வெச்சுக்கிட்டெ டீத்தண்ணியும், பண்டமும் கொடுத்துச்சு.
கொடுத்துப்புட்டு, "தங்காச்சி குயிலி எப்டி இருக்கா? நீயாவது இன்னிக்கு வந்துப்புட்டே!
அவ்வே என்னிக்கு வருவாளோ? வந்துப் பாப்பாளோ?"ன்னுச்சு வெங்கு.
"அவ்வே ந்நல்லா இருக்கா சென்னைப்
பட்டணத்துல. நீயி ஒரு வூட்டுக்குப் போயிடாதே. எல்லாமும் ஒம்மட வூட்டுக்கு வாரணணும்ன்னு
மட்டும் சொல்லு. செரி, அதெ வுடு. ஆர்குடியில சிநேகிதி ஒருத்தியோட தங்காச்சிக் கலியாணம்.
அதுக்கு வந்துப்புட்டு, அப்பிடியே சுந்தரியப் பாத்து நாளாச்சா? அதெயும் பாத்துப்புட்டு,
அப்பிடியே ஒன்னய வந்து வேற பாக்கலையா வந்துப் பாத்துப்புடுவேம்ன்னு வந்தேம். மவளுக்கு
மாப்புள்ளையா பாத்துட்டு இருக்கே? அப்பிடியே அத்துச் சம்பந்தமாவும் பாக்கலாம்ன்னுத்தாம்
இம்புட்டு தூரம் வந்தேம்!"ன்னுச்சு ஈஸ்வரி.
அதெ கேட்டதும் வெங்குவுக்கு மூளை வேல செய்ய
ஆரம்பிச்சிடுச்சி. "அதான்னே ன்னாது இம்புட்டுத் தூரம்ன்னு யோஜனெ பண்ணேம்?"ன்னுச்சு
வெங்கு.
"ச்சேய் அப்பிடில்லாம் பேயாதே சின்னம்மா!
ஆர்குடி வந்த நமக்கு அப்பிடியே திரும்புறதுக்கு எம்மா நேரம் ஆவும் சொல்லு? வந்ததுதாங்
வந்தேம். வந்து அப்பியே பாத்துப்புட்டுப் போயிடுவேம்ன்னு வந்தேம். வெசயம் இல்லன்னாலும்
வந்துட்டுப் போவணும்ன்னு நெனைக்குறதுதாங். எதாச்சிம் ஒரு வேல அலமலப்புல ஓடியிடுறதுதாங்.
இந்த வெசயம் ல்லன்னாலும் இன்னிக்கு வந்திருப்பேம்தாம்!"ன்னுச்சு ஈஸ்வரி.
"நாஞ்ஞ ஒண்ணும் நெனைக்கல. நீயி வந்த
காரியத்தெப் பத்திச் சொல்லு, மக கலியாணத்தப் பத்தின்னு சொன்னீயே?"னுச்சு வெங்கு.
"எல்லாம் ந்நல்லா காரியந்தாம். சரசு
யத்தெ மவ்வேம் இருக்காம்ல டாக்கடர்ரு பாலாமணி அவனுக்குப் பல எடத்துலயும் பொண்ணு பாத்துக்கிட்டு
இருக்கேம். என்னவோ பாக்குற பொண்ணுக எல்லாத்தியும் பிடிக்கலன்னு சொல்லிட்டுக் கெடக்கறாம்.
வயசு வேற ஏறிட்டுல்லா கெடக்குது. எஞ்ஞ செட்டுல கலியாணம் ஆவாம கெடக்குறவேம் அவ்வேம்
ஒருத்தம்தாம். அவனுக்கு ஒரு கதெயப் பாத்து முடிச்சு விட்டுடலாம்ன்னு பாத்தா அவனுக்குன்னு
ஒண்ணும் அம்புடவனாங்குது. அதாங் சின்னம்மா ஒம் பொண்ணையும் அழைச்சாந்து காட்டிப்புடுவேம்.
பிடிச்சிருக்குன்னா கட்டிக்கிடட்டும். ல்லன்னா தலயெழுத்து இன்னொன்ன பாத்துப்புடுவோம்ன்னு
நெனைச்சிக்கிட்டுத்தாம் ஒங்கிட்டெ வந்தேம். ஒங்கிட்டேதான பொண்ணு இருக்கு. பொண்ணு
இருக்குறவுகளப் பாத்துதானே கேட்டாவணும். அதாங் வூடு தேடி வர வெச்சிட்டீயே! வந்தாச்சு.
சித்து வந்துப் பேசுனாச்சாமே. நீஞ்ஞத்தாம் மேக்கொண்டு ஒண்ணும் பதிலெ சொல்லன்னு கொற
பட்டுக்கிடுச்சு!"ன்னுச்சு ஈஸ்வரி.
"நமக்கென்னடியம்மா தாரளமா வந்துப்
பொண்ணப் பாருங்க. பிடிச்சா கட்டிக்குங்க. ல்லன்னா பிடிச்ச எடத்துலப் பாத்துக் கட்டிக்கிடுங்க.
மொறை இருக்குங்றப்போ வந்துப் பாக்குறதுல ன்னா குத்தங்றேம்?"ன்னுச்சு வெங்கு.
"அதாங் சின்னம்மா நீயி விகடுவோட
யப்பாகிட்டெயும் ந்நல்லா கலந்துக்கிட்டு சொன்னீன்னா பொண்ண வந்துப் பாத்துட்டு அவ்வேம்
பாலாமணிக்கு பிடிச்சிருக்கான்னா தெரிஞ்சா மேக்கொண்டு பாக்கலாம்! ந்நல்லா பதிலா சித்துவோட
வூட்டுல சொல்லி வுட்டீன்னா பேசுவோம்!"ன்னுச்சு ஈஸ்வரி.
"நமக்கும் மனசுக்குள்ள அப்பிடியொரு
நெனைப்புதாம்டியம்மா! மாமா பிந்து கலியாணத்துக்குப் பத்திரிகெ வைக்கறப்பவே பேசுனேம்.
பெறவு சரசு சின்னம்மா வந்தப்பயும் அதுகிட்டேயும் பேசுனேம். தேன்காட்டுக்காரி இருக்கால்லே
அவளும் தஞ்சார்ல மாமாவப் பாத்துப் பேசிருக்கா! ஆண்டவன் மனசு வெச்சா எல்லாம் நல்லபடியா
நடக்கும்ன்னு அப்பிடியே உக்காந்த ஆளுதாங். உக்காந்திட்டேம். ஒம் மூலமா நல்லா சேதியா
வந்துச் சேரணும்ன்னு இருக்கு! மவராசியா வந்தேடியம்மா! மங்கலமா சேதியச் சொல்லிருக்கேடியம்மா!"ன்னுச்சு
வெங்கு.
"வர்ற அவசரத்துல புள்ளைகளுக்கு ஒரு
பிஸ்கோத்துப் பாக்கெட்டு கூட வாங்காம வந்துப்புட்டேம். ஏதும் நெனைச்சிக்காதெ சின்னம்மா!"ன்னுச்சு
ஈஸ்வரி. அப்பதாங் வெங்கு கவனிச்சிக் கேட்டுச்சு, "இந்நேரத்துக்கு எப்பிடியம்மா
வந்தே? பஸ்ஸூ கூட கெடையாதே?"ன்னு.
"வடவாதி வந்தேம்லா! சித்து வூட்டுல
அதோட வண்டி கெடந்துச்சு. எடுத்துக்கிட்டு நேரா வந்துட்டேம். வண்டி ஓட்ட தெரிஞ்ச வாச்சு
செளரியமா போச்சு. ல்லன்னா இஞ்ஞ வார்றதுக்கு யாராச்சும் எதிர்பாத்துட்டுத்தானே இருக்க
வேண்டிதா இருக்கு. அத்து ஒரு காரணம். இந்தப் பக்கம் வார்றப்ப வர்ற முடியாம போறதுக்கு!"ன்னுச்சு
ஈஸ்வரி.
"அடியே ஏம் ராசாத்தி! நீயா வண்டியில
வந்துட்டுப் போனதே போதும்டியம்மா! ஒன்னயப் போயா பிஸ்கோத்துப் பாக்கெட்டு வாங்கிட்டு
வாரலன்னு நெனைச்சிக்கிட போறேம். அதெ வெட நல்லா சேதியா வேறல்லா சொல்லிருக்கே. செரிடி
ராசாத்தி புள்ளே யில்லாம இருக்குறதா கேள்விப்பட்டேமே. பிந்துக் கலியாணத்துல நாலு வயசுல
ஒரு புள்ளையத் தூக்கி வந்தீயே?"ன்னுச்சு வெங்கு.
"அத்து வந்து சின்னம்மா, டாக்கடர்களப்
பாத்ததுல இனுமே கொழந்தெ பொறக்க சாத்தியம் இல்லன்னுபுட்டாங்க. பாலாமணியும் கொஞ்ச
நாளு வரைக்கும் மருந்துல்லாம் கொடுத்துப் பாத்தாம். ஒண்ணும் சரிபட்டு வாரல. பெறவு
பாலாமணியேப் பாத்துப்புட்டு ஒரு கொழந்தையத் தத்தெடுக்குறாப்புல வாங்கிக் கொடுத்துப்புட்டாம்.
அந்தக் கொழந்தெதாங் அது. இனுமே அதாங் நம்மட கொழந்தெ. பாவம் சின்னம்மா பாலாமணி எல்லாத்துக்கும்
நல்லது செய்யுறாங். அவனுக்கொரு பொண்ணு அமைய மாட்டேங்குது. பாப்பேம்! ஒம் பொண்ணாவது
அமையுதான்னு? சாதவம்லாம் பாத்திருப்பீயேன்னு நெனைக்குறேம். ல்லன்னாலும் இந்தச் சாதவம்.
கையோட எடுத்துட்டு வந்தேம். பாத்துப்புட்டே சேதியச் சொல்லி வுடு சித்துகிட்டெ. அப்புறம்
சித்துகிட்டெ சொன்னாலும் சரித்தாம், முருகு பெரிப்பாகிட்டெ சொன்னாலும் செரித்தாம்!
வந்து நேரமாச்சு. கெளம்புறேம். மூணரைக்கு எம்மெல்ஏ பஸ்ஸூ. பிடிச்சேம்ன்னா நேரா திருச்சில
போயி எறங்கிடுவேம்!"ன்னுச்சு ஈஸ்வரி.
"இப்பத்தாம் வீடு கட்டி வந்திருக்கே.
ரவ்வச் சோத்தச் சாப்புடாம கெளம்புதீயே?"ன்னுச்சு வெங்கு.
"சோத்தெல்லாம் தின்னாச்சு சின்னம்மா!
கெளம்புறேம். நல்ல சேதியா சொல்லி அனுப்பு. பொண்ண பாக்க வர்றப்ப விருந்துச் சாப்பாடாவே
சாப்புட்டுக் கெளம்புறேம்!"ன்னுச்சு ஈஸ்வரி. கெளம்புறப்போ செய்யுவோட பக்கத்துல
வந்து மொகத்தெ உள்ளங்கையால வாரி எடுத்து நெத்தியில வெச்சு நெட்டி முறிச்சிது.
"யடி யாத்தீ! எங் கண்ணெ பட்டுடும் போலருக்கே. வந்துப் பாக்கட்டும் டாக்கடர்ருப்
பயெ. இந்தப் பொண்ண மட்டும் பிடிக்கலன்னு சொன்னா பெறவு வெச்சிக்கிடுறேம்!"ன்னு
சொல்லிட்டு வெளியில கெளம்பி வந்து சித்துவீரனோட டிவியெஸ் எக்செல்ல கெளப்பி ஸ்டார்ட்
பண்ணிக்கிட்டு டர் டர்ன்னு போனுச்சு. சனங்க எல்லாம் வெளியில வந்து ஈஸ்வரி வண்டிய ஓட்டிட்டுப்
போற அழகெ பாத்துச்சுங்க. பாத்துப்புட்டு உள்ளார வூட்டுக்ளுள்ள வார்றப்போ, ஆயி கேட்டா,
"யத்தெ! நீஞ்ஞ நெனைச்சது நடக்கப் போவுது. இனுமே சந்தோஷந்தானே? இனுமேலாவது ந்நல்லா
சாப்புடுவீங்க, நல்லா தூங்குவீங்களே?"ன்னு.
"ஆம்மா ஒமக்கு எல்லாம் வெளையாட்டுத்தாம்.
வாரட்டும் ஒம் மாமனாரு. அவருகிட்டெ கலந்துக்கிட்டு ஒரு முடிவெ சொல்லி விடுவேம்!"ன்னுச்சு
வெங்கு.
"இதுக்கு மேல மாமாவோட முடிவு என்னாது?
நீஞ்ஞ சொல்றதெ கேட்டுக்கிட்டு, அஞ்ஞப் போயி சொல்ல வேண்டியதுதாங். மேக்கொண்ட கலியாண
ஏற்பாடுகளப் பாக்க வேண்டியதுதாங். எப்பிடியோ எஞ்ஞ யத்தெ மொகத்துல சிரிப்பாணி வந்தா
செரித்தாம்!"ன்னா ஆயி. வெங்குவுக்குச் சிரிப்பெயும் சந்தோஷத்தயும் இப்போ நேரடியா
மொகத்துல காட்டிக்கிட முடியலன்னாலும் மனசுக்குள்ள அலை அலையா பெருக்கெடுத்து விரிய
ஆரம்பிச்சது.
*****
No comments:
Post a Comment