21 Jul 2020

கம்முன்னு கெட!

செய்யு - 512

            பாலாமணிக்கு வேற எடத்துல பொண்ணப் பாக்குற வேலைக நடக்குறதா சுப்பு வாத்தியாரு சொன்னதுக்குப் பெறவு, வெங்குவுக்கு ரொம்ப மனகஷ்டமா இருந்துச்சு. "இனுமே இதுல போயி நாம்ம முண்டக் கூடாது!"ன்னு சுப்பு வாத்தியாரு கறாரா சொல்லிட்டாரு. யாருகிட்டெ இதெ சொல்லி ஆறுதல் தேடுறதுன்னு வெங்கு நெனைச்சிட்டு இருந்தப்போ ஒரு நாளு தேன்காடு சித்தியும், சிப்பூரு பெரிம்மாவுக்கும் திட்டைக்கு வந்துச்சுங்க. அதுக ரண்டு பேத்துகிட்டெயும் அழுது புலம்புனுச்சு வெங்கு. "ஏம்டி ஒனக்குப் பிரியம்ன்னா நீயே சின்னம்மாட்டெ ஒரு வார்த்தெ கேக்க வேண்டியதுதானே?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "நாமளே போயி தஞ்சார்ல லாலு மாமாவப் பாத்துப் பேசிட்டேம் வந்தேம் யக்கா! மாமா பேசி வுடுறதாத்தாம் சொல்லிச்சு. பாக்குக்கோட்டெ போவுற நம்மளயும் போவ வுடாம அடிச்சிது. செரி அது பேசி முடிச்சிடும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். இந்த வெசயத்துல நம்மள வுட பெரியவங்க பேசுனா செரியா இருக்கும்னு இருந்துட்டேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "பெறவென்னடி? அதாங் நம்ம சார்புலயும் ஒருத்தி பேசியிருக்கா! அதுக்கு மேல கொடுத்தா கொடுக்கட்டும். கொடுக்காட்டியும் போவட்டும்."ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "என்னக்கா நீயும் இப்பிடிப் பேசுறே? எஞ்ஞ வூட்டுக்காரரு ஒரு வார்த்தெ கேட்டுருந்தா ஆயிருக்கும்லா?"ன்னுச்சு வெங்கு.
            "அப்பிடில்லாம் போயி நிக்கணுங்ற அவசியமில்லடி. நம்ம பொண்ணுக்கு மாப்புள்ளயா யில்ல. பாத்துக்கிடலாம் வாடி!"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "யக்கா சொல்றதும் செரித்தாம். டாக்கடருன்னா நாம்ம போயி கால்லயா வுழுவ முடியும்? எறங்கிப் போயிக் கேட்டாச்சு! யாரு கேட்டா ன்னா? பிடிச்சிருந்துச்சுன்னா வந்திருப்பானுவோ. பிடிக்காட்டியும் வுட்டுப்புடு. அவ்வேம் அதிர்ஷ்டம் அம்புட்டுத்தாம். இந்த மாதிரிக்கிப் பொண்ணு எஞ்ஞ கெடைக்கும்? அவ்வேம் ஒருத்தந்தாம் நாட்டுல டாக்கடர்ரா இருக்காம்ன்னா அதிசயமா? நாட்டுல எம்புட்டோ டாக்கடருக இருக்காம். நம்ம ராசாத்திக்கு டாக்கடர்ரு மாப்புள்ளத்தாம் அமையணும்னு இருந்தா எஞ்ஞ இருந்தாவது ஒருத்தெம் வருவாம். இனுமேத்தாம் இவளுக்கு ஒருத்தெம் பொறந்து வாரப் போறானா? இந்நேரத்துக்கு பொறந்து வளந்து நிப்பாம்! வருவாம் ஒரு நாளு அவனா தேடி! சித்தெ பொறுக்கா!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            ஆளாளுக்கு ஆறுதல் சொல்லியும் வெங்குவுக்கு அழுகெ நின்ன பாடில்ல. "சுந்தரி புருஷன் இருக்காம்ல சித்துவீரன் அவ்வேங் கூட இனுமே எஞ்ஞயும் மாப்புள பாக்க வாணாம்னு சொல்லிட்டுப் போனாம்டி!"ன்னுச்சு வெங்கு.
            "அப்புறம், அவ்ளதாம்டி! வுடுடி! வந்தா வாராணுவோ. வாராட்டியும் போறானுவோ! என்னவோ ஊரு ஒலகத்துல இல்லாத அதிசயக் கொடுக்கா? ஒனக்கு யாரு அந்தப் பயலுக்கு வேற எடத்துல பொண்ணு பாக்குறதா சொன்னது?"னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "வூட்டுக்காரர்தாம் முருகு மாமா வெள்ளாமச் சம்பந்தமா பேசணும்ன்னு வாரச் சொல்லிச்சுன்னு, போயிப் பேசிட்டு வந்தாரு. அவரு சொன்னததாத்தாம் சொன்னாரு!"ன்னுச்ச வெங்கு.
            "யத்தானும் அதுக்கு மேல என்னத்ததாம் பண்ணுவாரு? நாம்மப் போயி கால்ல நக்கிட்டா கெடக்கா முடியும்? அந்தப் பயலுவோ அப்பிடித்தாம்டி. அதெ எதிர்பார்ப்பானுவோ. நாம்ம வளந்து நின்னப்போ, அப்பிடிப் பண்ண பயலுவோதானே. நம்மட யப்பங்காரரு அப்பிடிப் போயி நிக்கணும்ன்னு எதிர்பாத்தானுவோ. யப்பா யப்போ தெளிவா சொன்னுச்சா இல்லியா? பிடிச்சிருந்தா வந்து கேளு. கட்டித் தர்றேம். நாமளாப் போயில்லாம் நிக்கவும் மாட்டேம், கேக்க மாட்டேம்ன்னு. அவரு ரத்தத்துல ஒரு சொட்டு கூடவாடி ஒம் ஒடம்புல ஓடல. அந்தப் பயலுவோ கட்டிக்கிட முடியாதுன்னதும் நமக்கெல்லாம் கலியாணம் ஆவாமலா போச்சு? கொழந்தெ குட்டிகப் பொறக்காமலா போச்சு? அதல்லாம் ஆவ வேண்டிய நேரம் வந்தா அதுவா நடக்கும்! அத்தாம் ரிட்டையர்டு ஆயி காசிய வெச்சிருக்காரு. மவ்வேம் வாத்தியாரு வேலையில இருக்காம். பொண்ணு கிளி மாதிரிக்கி இருக்கா. எவனாச்சும் வந்து கொத்திட்டுல்லா போவாம். அந்தப் பயெ ஒருத்தம் மாப்புள்ளன்னு நெனைச்சா அப்பிடித்தாம் தோணும். அவனெ வுட்டுப்புட்டு வேற வெதத்துல யோசனையப் பண்ணு. நீ மட்டும் உம்ன்னு ஒரு வார்த்தெ சொல்லு. நாளைக்கே நூத்து சாதவத்தெ கொண்டாந்து போடுறேம் உம் மின்னாடி!"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            அந்த நேரமா பாத்து சுப்பு வாத்தியாரு வந்தவரு, சிப்பூரு பெரிம்மாவுக்குப் பதிலச் சொல்ல வேண்டியதாப் போச்சு. "ஏம்த்தாம்! நீஞ்ஞ போயி ஒரு வார்த்தெ கேக்கலன்னு வெங்கு கொறைபட்டுக்கிடுறா?"ன்னு கேட்டுச்சு.
            "பொண்ணப் பெத்துட்டு வூட்டலயா வெச்சிக்கிட போறாம். கால நேரம் கூடி வந்தா கட்டிக் கொடுக்கத்தாம் போறேம். பொண்ணு இருக்குங்ற வெவரம் தெரிஞ்ச பெற்பாடு கேட்டு வந்தா மேக்கொண்டு பேசலாம். நாமளும் போயிப் பேசலாம்ன்னா அவுங்க தரப்புலந்து இனுமே மாப்புள்ளப் பாக்க வாணாம்ன்னு சொல்லிருக்காக. செரித்தாம்ன்னு நாமளும் ஒண்ணும் மாப்புளப் பாக்கல. பாக்கலன்னா பாக்குற மாதிரிக்கி தோது இல்லாம சில சம்பவங்க ஆயிப் போச்சுது. அதால பாக்க முடியாம போச்சுது. மித்தபடி பாக்குறதுக்கு தெராணி யில்லாமல்லாம் யில்ல. சொன்னவங்க அப்பிடி வந்துப் பாக்க வேண்டித்தானே. வர்றவங்கள வாணாம்ன்னா, இப்போ கேக்குறது செரித்தாம்! யாரு வார வாணாம்ன்னு சொன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதத்தாம் யத்தாம் நாமளும் சொன்னேம்! இவ்வே மனசு ஆற மாட்டேங்குது. இன்னும் ஒலகம் தெரியாதவளா இருக்கா. பொண்ண ஒரு நல்ல எடத்துல கட்டிக் கொடுத்துப்புடணும்னு நெனைப்பு. வேற ஒண்ணுமில்லத்தாம். நீஞ்ஞ கூட செரியா பேசலன்னு கொறை பட்டுக்கிடுறா?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "நமக்குக் கூட இந்தப் பேச்சு இத்தோட முடிஞ்ச வரைக்கும் செரித்தாம். ஏழைக்கேத்த எள்ளுருண்டங்ற மாதிரிக்கி நமக்கேத்தாப்புல மாப்புள பாத்துக்கிடறதுதாங் நல்லது. டாக்கடரு, எஞ்சினியர்ன்னா அவ்வேம் தோது வேற. நம்ம தோதுக்கு ஒரு வாத்தியார்ரோ, கிளார்க்கோ, வீயேவோவா கவர்மெண்டு வேலையில இருக்குறவனா பாப்பேம். அப்பிடி நாட்டுல இல்லாமலா போயிட்டாம்? கொஞ்சம் மெனக்கெட்டு மறுக்கா தஞ்சாரூ நேரியப்ப பத்தர்ட்டெ போனா பிடிச்சிடுவேம். அவருகிட்டெயும் சொல்லித்தாம் வெச்சிருக்கேம். இந்திந்த மாதிரிக்கி சாதவம் வந்தா அனுப்புங்கன்னு. மூணு நாலு மாசத்துக்கி மின்னாடி ரண்டு அனுப்புனாரு. எல்லாம் தூர தேசமா இருக்கு. திருநெவேலியும், தூத்துக்குடியுமா இருந்துச்சு. அம்புட்டுத் தூரமா கொண்டுப் போயிக் கொடுத்துட்டு எதுக்குன்னு யோஜிச்சி நிறுத்துனதுதாங்! நாம்ம பாக்காமலா இருக்கேம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. பெறவு என்னத்தெ நெனைச்சாரோ, ஏதோ வெளக்கத்த சொல்ல வர்றாப்புல, அவரே மறுக்கா பேச ஆரம்பிச்சாரு வுடாம, "மொதல்ல பொண்ண கேட்டுத்தாம் போவாங்க. நாம்ம நம்ம பயலுக்கு மொதல்ல பொண்ணக் கேட்டுத்தாம் இன்னொரு வூட்டுக்குப் போனோம். அதாங் மொறெ. நாமளும் போயிக் கேக்கறதும் உண்டுதாங். இல்லன்னு சொல்ல வாரல. பெறவு எதுக்கு இவுனுவோ இனுமே மாப்புள பாக்க வாணாம்ன்னு வந்துச் சொல்லிட்டுப் போறானுவோ? பெறவு பேச்சு வார்த்தையே இல்லாம கெடக்குறானுவோ? வேற எடத்துல பொண்ணு பாத்துட்டு இருக்குறதா நூலு வுடுறானுவோ? இவுனுவோ என்னான்னா நாம்மா போயி நிக்கணும்ன்னு எதிர்பாக்குறானுவோளா என்னவோ! நமக்குப் புடிபடல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யத்தாம் சொல்றது சரிதாங். யக்கா நீயி கொஞ்சம் பேயாம யிரு. நாம்ம வெசாரிக்க வேண்டிய வழியில வெசாரிக்கிறேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "என்னவோ அந்தப் பயலப் பிடிச்சி நம்மப் பொண்ணுக்குக் கட்டி வைக்கலன்னா உசுரையே வுட்டுப்புடுவா போலருக்கே? ஒம் மவ்வேம் என்னத்ததாங் சொல்றாம்? அந்தப் பயலே போயி ன்னா ஏதுன்னு கேக்கலாம்ல?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "ஒஞ்ஞ யத்தான கூட ஒரு கணக்குல சேத்துக்கிடலாம். அந்தப் பயெ அவர்ரத் தாண்டி மொறையா போவணும்ன்னு நிப்பாம்!"ன்னுச்சு வெங்கு.
            "நல்ல குடும்பம்டி! அவனோட படிச்சவேம் எவனாச்சிம் வாத்தியாரு வேலையில இருப்பாம்லா. அவனெ கேட்டியா?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "அவனுவோ சிநேகிதினுங்களே சில பேரு கலியாணம் ஆவாம கெடக்குறானுவோளாம் வாத்தியார்ரா இருந்தும். அந்தப் பயலுக்கு அதுல இஷ்டந்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            "பெறவென்னடி? கட்டி வைச்சிட்டுக் காரியத்தெ முடிச்சிட்டுப் போவ வேண்டியதுதானே?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "நீயி ன்னா கூறு கெட்ட ஆளா இருப்பீயா? அவுனுவோ சாதி ன்னா? நம்ம சாதி ன்னா? வேத்துச் சாதிக்காரப் பயலெ கொண்டாந்து கட்டி வைக்கணும்ன்னு நிக்காம். கேட்டாக்கா நமக்குத் தெரிஞ்சவங்களாத்தாம் சொல்ல முடியும். தெரியாதவங்களப் பத்தி நம்மகிட்டெ கேட்டா நமக்கென்ன தெரியும்ங்றாம். ன்னா நெனைச்சிட்டுப் பேசுறானோ? அவ்வேம் செரியில்லடி. சாமி ல்லங்றாங். சாதி ல்லங்றாம். தங்காச்சிட்ட எப்பிடிப் பேசணும்ன்னு தெரியாம, ஒங் கூட படிச்சவேம் எவனாச்சும் பிடிச்சிருந்தா அவனையே கட்டிக்கங்றாம். பாத்தேம் ஒரு நாளு! இனுமே கலியாணம் சம்பந்தமா எதாச்சிம் பேசுனா ந்நல்லா இருக்காதுன்னேம். அன்னிக்கு வுட்டவம்தாம். எதெயும் பேசுறதில்ல!"ன்னுச்சு வெங்கு.
            "அந்தப் பயெ இப்பிடித்தாம். கண்டதையும் படிச்சிக் கெட்டுப் போயிக் கெடக்குறாம். அது கெடக்கட்டும், தங்காச்சிக்குக் கலியாணம்ன்னு காசி பணம் செலவாவும்ன்னு நெனைக்குறாம்ன்னா? அதுக்காக இப்பிடிப் பேசிட்டுத் திரியுறானோ?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "அதல்லாம் கெடையாதுடி. இன்னிக்கும் குடும்பத்துல வரவு சிலவு அவருதாங் பண்ணுறாரு. சம்பாதிக்கிறதெ கொண்டாந்து கொடுத்துப்புடுவாம். நாமளா பாத்துதாங் காசியக் கொடுக்கணும். அவ்வேங்கிட்டெ கொடுக்குறதயும் ஆயிகிட்டெ கொடுத்துடுவாம். அவ்வேதாங் ஞாபவமா வெச்சி வெளியில போறப்ப கொள்ள கொடுத்தாவணும். இந்தப் பயெ வேலைக்குப் போறதுக்கு மின்னாடி ஷேர் மார்க்கெட்டோ ஏத்தோ ஒரு மார்க்கெட்டுன்னு நின்னாம்டி. அவருக்குப் பிடிக்கல. நல்லத்தாங் சம்பாதிச்சாம், வாத்தியாரு வேலையில கெடைச்சதெ வுட. அவருக்குப் பிடிக்கல. இவ்வேம் பாட்டுக்குக் காசியக் கொண்டு போயி அதுல வுட்டுப்புடுவாம்ன்னு நெனைச்சி சம்பாத்தியத்த வூட்டுல கொடுத்துப்புடணும்ன்னு ஒரு நாளு சத்தத்தெ வெச்சாரு. அதுக்கு மின்னாடியும் நம்மகிட்டெத்தாம் கொண்டாந்து காசியக் கொடுப்பாம். அதுக்குப் பின்னாடியும் செரித்தாம் அவ்வேம் காசியக் கையால தொடுறதுல்ல. எதாச்சிம் படிச்சிப்புட்டு அத்து இத்துன்னு பேசுவானெ தவுர கொஞ்சம் நாம்ம கொரல ஒசத்திப் பேசிட்டா போதும், செரித்தாம்ன்னு கேட்டுட்டு அவ்வேம் பாட்டுக்குப் போயிடுவாம்! யிப்பத்தாம் செத்துப் போனாரு விநாயகம் வாத்தியார்ன்னு. அவரு வந்துப் பேசுனா போதும் பொட்டிப் பாம்பா ஆயிடுவாம்! பேச்சுதாங் பிடிக்காது! மித்தபடி நடப்புல்லாம் செரியா இருப்பாம்!"ன்னுச்சு வெங்கு.
            "நீயேம்டி கவலப்படுறே? நடக்கணும்ன்னு இருக்குறதெ நாம்ம நடத்தாட்டியும் நடக்கும். நடக்காதுன்னு இருக்குறெ ஒண்ண நாம்ம என்னத்தெ மல்லுக்கட்டுனாலும் நடக்காது. கம்முன்னு கெட கொஞ்ச நாளிக்கு. பாத்துக்கிடலாம் வா! கத்திரிக்காயி முத்துனா சந்தைக்கு வந்துதாங் ஆவணும். வெம்பிப் போயி வதியழியணும்ன்னு அது தலையில எழுதிருக்கா ன்னா?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...