செய்யு - 511
"போனவரு போயிச் சேந்துட்டாரு. இந்த
மனுஷன் இப்பிடிக் கெடக்குறதால திரும்பியா வந்துடப் போறாரு? பொண்ணு கலியாணத்துக்காகக்
கொஞ்சமாவது மெனக்கெட்டாத்தானே காரியம் ஆவும். அப்பாருதாங் மனசு சரியில்லாம கெடக்குறார்ன்னா
இந்தப் பயலாவது கொஞ்சம் மெனக்கெட்டா ன்னடான்னா, அதெல்லாம் யப்பங்காரர்தாம் பாக்கணுங்ற
மாதிரிக்கி ஒதுங்கி போவாம். பொட்டச்சி நாம்மத்தாங் எறங்கி காரியத்தெ பாத்ததாங் ஆவும்
போல!"ன்னுச்சு வெங்கு.
மவளெ இதுக்கு மேலயும் வூட்டுல வெச்சுக்கக்
கூடாது, கலியாணம் கட்டிக் கொடுத்துடணுங்றதுல வெங்கு உறுதியா இருந்துச்சு. அதுக்கு
ஏத்தாப்புல ஏற்பாடுகத்தாம் சட்டுன்னு ஆவாம எதாச்சிம் தடங்கலா வந்துட்டு இருந்துச்சு.
"பயலுக்குக் கலியாணம்ன்னு ஆரம்பிச்சதுதாங், ஆரம்பிச்சதும் தெரியல. முடிஞ்சதும்
தெரியல. இவ்வே பொண்ணுக்கு ஆரம்பிச்சால எதாச்சிலும் வந்து முட்டிக்கிட்டுல்லா நின்னுடுது!"ன்னுச்சு
வெங்கு.
நாளுக்கு நாளு வெங்குப் பேசுறதெ தாங்க
முடியல சுப்பு வாத்தியாருக்கு. எதாச்சும் பண்ணியாவணும்ன்னா யார வெச்சு வெசாரிக்கிறதுங்றது
புரியாம கொழம்பி நின்னாரு. அவர்ரப் பொருத்த வரையில விநாயகம் வாத்தியாரோட மரணத்துலேந்து
மீண்டு வாரதுக்கு ஒண்ணரை மாசக் காலத்துக்கு மேல ஆயிடுச்சு. அவரு போக்குல போயி அவர்ரா
மீண்டு வந்தாத்தாம் இத்து சரிபட்டு வரும்ன்னு வூட்டுலயும் யாரும் அவர்ரப் போட்டு எந்தத்
தொந்தரவும் பண்ணல. வெங்கு ஒரு ஆளுதாம் எப்பயாச்சிம் பொண்ணுக் கலியாணத்தப் பேசிட்டு
இருந்தது, இப்போ அடிக்கடி பேச ஆரம்பிச்சிருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கு சில விசயங்கள்ல
மனத்திருப்தி முக்கியம். அவருக்குப் பொண்ணுக் கலியாணத்துக்கான தோது தஞ்சாவூரு நேரியப்ப
பத்தரு மூலமா கெடைக்கணும், இல்லேன்னா விநாயகம் வாத்தியாராச்சும் அதெ பத்தி ஒரு நல்ல
அபிப்ராயத்தெ சொல்லணும், அதுவும் இல்லாட்டி அனுக்கிரமா அதுவா எதாச்சிம் ஒரு சாதகம்
அமைஞ்சிக் கலியாணம் நடக்கணும்ன்னு நெனைச்சாரு.
சொந்தப் பந்தத்துல அவரா போயிக் கேக்கறதுக்குக்
கொஞ்சம் தயங்கிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு. விநாயகம் வாத்தியாரு உசுரோடு இருந்திருந்தா
இந்நேரத்துக்கு லாலு வாத்தியாருட்டெ போயி விசாரிச்சு முடிச்சுப் பொண்ணோட கலியாணம்
குறித்து ரண்டுல ஒண்ணு முடிவாயிருக்கும். ஒரு வேள அது முடியாட்டிப் போயிருந்தாலும்
அவரு தெரிஞ்சவங்கிட்டெ சொல்லி வுட்டுருந்தார்ன்னா ஒரு தோதான சாதகத்தெ கொண்டாந்துருப்பாரு.
ஒரு காரியத்தெ சவாலா எடுத்துச் செஞ்சிக் காட்டுறதுல அவருக்கு அலாதிப் பிரியம் இருந்துச்சு.
என்ன நேரத்துல அவரு போயிச் சேந்தாரோ? நெறைய தடைகளா உருவாயிருந்துச்சு. சுப்பு வாத்தியாரு
முருகு மாமவையோ, லாலு மாமாவையோ எப்பிடி அணுகுறங்குறதுல ரொம்ப யோசிச்சுக்கிட்டு
இருந்தாரு. அணுகலாம்ன்னாலும் தோதான ஒரு ஆளெ வெச்சு அணுகணுங்றதுலயும் பிடிவாதமா இருந்தாரு.
அப்பிடி இருந்த ஒரு நாளுல பஞ்சு ஆச்சாரியோட
ரெண்டாவது மவ்வேன் ஆனந்தன் வந்து ஓகையூர்ல வெவசாயம் சம்பந்தமா முருகு மாமா சேதிப் பேசணும்ன்னு
கூப்ட்டு வுட்டதா சொல்லிட்டுப் போனாம். இதெ ஒரு வாய்ப்பாப் பயன்படுத்தி பாலாமணியப்
பத்தி வெசாரிச்சுப் பாருங்கன்னுச்சு வெங்கு. "அதாங் ஏற்கனவே அவரோட மவ்வேன் வந்து
வேற எடத்துல மாப்புளப் பாக்க வாணாம்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காம்ல. நாம்ம ஓரிடத்துலயும்
மாப்புளப் போயிப் பாக்கல. மேக்கொண்டு வந்து சொன்னாக்க பாத்துக்கிடலாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"வலிய வர்ற சம்பந்தத்தையே வாணாம்ன்னு
சொல்லிப்புடுவாரு போலக்கே! இந்த மனுஷன நம்பி இனுமே பிரயோஜனம் ல்லேங்!"ன்னு
முணுமுணுத்துக்கிட்டுப் போனுச்சு வெங்கு.
சுப்பு வாத்தியாரு ரொம்ப நாளுக்குப் பெறவு
அன்னிக்குத்தாம் மொகத்தச் சவரம் பண்ணிக்கிட்டு, தேய்ச்சு இஸ்திரிப் போட்ட வெள்ளைச்
சட்டையும், வெள்ளை வேட்டியுமா டிவியெஸ்ஸக் கெளப்பிக்கிட்டுப் போனாரு முருகு மாமா வூட்டுக்கு.
பேச்சுல வாய்ப்பா வந்தா வெங்கு சொல்லறதெப் பத்தியும் வெசாரிச்சுப்புடுறதுங்ற முடிவுக்கு
வந்திருந்தாரு. வெசாரிப்புங்றது அதுவா வந்தா வெசாரிக்கணும், நாமளா வலியக்க கேக்குறதா
இருக்கக் கூடாதுங்றதையும் திட்டம் பண்ணிக்கிட்டாரு. மொகச் சவரத்துக்கும், வெள்ள வேட்டி,
வெள்ள சட்டைக்கும் அதுதாங் காரணம். அவரு சாயுங்காலமா போனதும், "ன்னா இந்தப் பக்கமே
ஆளெ காங்கல!"ன்னுச்சு முருகு மாமா. அது கடைக்கு வெளியில உக்காந்திருந்துச்சு.
இவரு வந்ததெப் பாத்ததும் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலிய எடுத்துப் போட்டு உக்காரச் சொன்னுச்சு.
"நம்ம வாத்தியாரு தவறிட்டார்ல. அதுலேந்து
மனசு சரியாயில்ல. ஒரண்டியும் வெளியில கெளம்பல. இன்னிக்குத்தாங் கெளம்பி வர்றேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அவ்வேம்லாம் ன்னா சொந்தக்கார பயலா?
பழக்கத்துக்கு இருந்தப் பயதானெ. அவ்வேம் செத்ததுக்குல்லாம் மனசெ போட்டுக் கொழப்பிக்கிட்டு?
இந்த லாலு பயெ கூட அவரு சாவுக்கு வந்தாம். நம்மளயும் கூப்ட்டாம். ஒம் பழக்கத்துக்கு
நீயிப் போறதோட நிப்பாட்டிக்க. நம்மளயும் இழுக்காதேன்னுட்டேம்!"ன்னுச்சு முருகு
மாமா. முருகு மாமா பேசுனது சுப்பு வாத்தியாருக்குச் சுத்தமா பிடிக்கல. அதெ வெளிக்காட்டிக்கிடல.
அவருக்குச் சொந்தக்காரனெ வுட ஒரு படி மேல விநாயகம் வாத்தியாரு. அதெ போயி முருகு மாமாட்ட
சொல்லிட்டு, புரிய வெச்சிட்டு இருக்க முடியாதுங்றதால பேசாம இருந்தாரு.
"அது கெடக்கட்டும் கருமத்தெ! இந்த
வருஷமாச்சும் தண்ணி வெள்ளையாத்துல நேரத்துக்கு வருமான்னு தெரியல. ஓகையூர்ல நடவா? தெளிப்பா?
ன்னா பண்றதுன்னு ஒரு யோஜனெயும் இல்லாம கெடக்கேன்னு ஒரு நெனைப்பு. அதாங் ஆனந்தன் பயலப்
பாத்தப்போ, அந்தப் பக்கம் போனாக்கா கொஞ்சம் வாரச் சொல்லுன்னு சொன்னேம்!"ன்னுச்சு
முருகு மாமா.
"ஜூன் பன்னெண்டுல தண்ணி தொறந்த காலம்
மலையேறிப் போச்சு. அந்தத் தேதிக்குத் தொறக்க முடியாட்டியும் ஆடி மாசத்துப் பதினெட்டாம்
பெருக்குக்காவது எப்பிடியாச்சும் தண்ணி வந்துப்புடும். அந்தக் காலமும் மலையேறிப் போச்சு.
தண்ணி வர்றதும், வராமப் போறதும் தாயம் வுழுறாப்புல ஆயிடுச்சு. வுழுந்தாலும் வுழுந்ததுதாங்.
வுழுவாமப் போனாலும் போனதுதாங்! தோதுக்குத் தகுந்தாப்புல பாத்துக்கிட வேண்டியதுதாங்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"நமக்கும் பெரிசா ஆர்வம் யில்லாமப்
போச்சு. நெலபுலத்த புடிச்சி வித்துப் புடுவோமான்னு நெனைக்குறதாங். ன்னா வருது அதுல?
ஆன்னா அதெயும் வித்துப்புட்டு பொழுது போவணுமேன்னு நெனைக்குறப்போ சரிதாங் கழுதெ கெடந்துட்டுப்
போறதுன்னு நெனைக்குறதாங். இன்னிக்கு வெவசாயம் பண்ணுறது நிப்பாட்டுன்னாலும் வருஷத்துக்கு
நாப்பதாயிரம் மிச்சந்தாம். ன்னா பண்றது? பண்ணித் தொலைய வேண்டியதா இருக்கு. இந்த லாலு
பயெ கெட்டிக்கார பயெ. எல்லாத்தையும் வித்துப்போட்டு சொகமாப் போயி தஞ்சார்ல்ல உக்காந்துட்டாம்.
பட்டணத்துக்கார்ரேம் மாரியே மாறிப் போயிட்டாம்!"ன்னுச்சு முருகு மாமா.
"நமக்கென்ன ஓகையூர்ல ரண்டரை மா, திட்டையில
எட்டரை மா கெடக்குது. ஒண்ணும் அலட்டிக்கிடுறது யில்ல. அலட்டிக்கிட்டும் ஒண்ணும் ஆவப்
போறதில்ல. வெள்ளாமையும் பழைய மாதிரிக்கி யில்ல. ஆனாலும் நெலம் ஒண்ணும் ஏமாத்திப்புடல.
தண்ணி வந்தா வெளைவிச்சித்தாங் கொடுக்குது. நெல்லுல போனாலும் உளுந்து பயித்துல நமக்குத்
தேத்தி வுட்டுப்புடுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நெதானமான ஆளுங்க எதெப் பத்தியும்
கவலப்படுறதில்ல. நாலு காசு பாக்கணும்னு நெனைக்குறவனெ வெள்ளாம சத்தியமா சோதிச்சிப்புடும்.
இத்து நம்ம அனுபவம். செல வருஷம் கொஞ்சம் காசி வந்தா குடும்பச் சிலவுக்குத் தேவையா
இருக்குமேன்னு நெனைச்சா அந்த வருஷம் நெலம் நம்மள ஏமாத்திப்புடும். செரித்தாம் இந்த
வருஷம் செரிப்பட்டு வாராதுன்னு நெனைக்குற வருஷம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிப்புடும்!"ன்னுச்சு
முருகு மாமா. அது பாட்டுக்கு எதோ பேசுறதுக்காக பேசுறது போல பட்டுச்சு சுப்பு வாத்தியாருக்கு.
கெளம்பலாமாங்ற யோசனைக்கு வந்திருந்தாரு.
அதெ புரிஞ்சிக்கிட்டது போல முருகு மாமா,
"தண்ணி வாரதுக்கு மின்னாடியே வெள்ளாம எப்பிடி பண்றாப்புலங்றதெ கொஞ்சம் கலந்துக்கிடுங்க.
ஒரே மாதிரிக்கிப் பண்ணா தேவலாம் பாருங்க!"ன்னுச்சு.
"சொல்லாமல போயிடுவேம்!"ன்னு
சொல்லிட்டு, "வேற ஒண்ணும் சோலியில்லல! கெளம்பட்டுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒரு வாயி டீத்தண்ணிச் சாப்புடுறது!"ன்னுச்சு
முருக மாமா.
"விநாயகம் வாத்தியாரு சாவுக்குப்
பெற்பாடு சரியா பசியெடுக்க மாட்டேங்குது. ஒடம்புக்குள்ள எதுவும் எறங்க மாட்டேங்குது.
இப்போ டீத்தண்ணி வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"செர்ரி! வயசான நாம்ம. சித்தெ உக்காந்து
பேசிட்டுத்தாங் போறது!"ன்னுச்சு இப்போ முருகு மாமா.
"அதுக்கென்ன பேசுவேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"நம்ம பாலாமணி பய கெடக்கறானே! அதாங்
அந்த பாக்குக்கோட்டையாம் மவ்வேம். அந்த டாக்கடர்ருப் பயெ. அவனுக்குப் பொண்ணு பாக்குறது
சம்பந்தமா அல்லோகலப்பட்டுக்கிட்டுக் கெடக்கதுங்க சனங்க. டாக்கடர்ரால்லா இருக்காம்.
அதால பெரும் தோதுல நக நெட்டு, காரு, சீரு சனத்தின்னு செய்யுற எடமா பாக்குறாங்க. செரியா
அமைய மாட்டேங்குது!"ன்னு நூல விட ஆரம்பிச்சிது முருகு மாமா.
"டாக்கடர்ன்னா அதுக்கேத்தாப்புலத்தாம்
பொண்ணப் பாத்தாவணும்!"ன்னு ஒரு வாக்கியத்துல அதுக்கான பதில முடிச்சாரு சுப்பு
வாத்தியாரு.
"லாலு பயெ வந்தப்பவும் ஒஞ்ஞப் பொண்ண
பாக்கலாமாங்ற மாதிரிக்கி ஒரு யோஜனெ ஓடுறதாவும் சொன்னாம் பாருங்க. சொன்னாம் அவ்ளவுதாங்.
இப்போ என்னவோ வேற எடத்துல பாக்குறதா ரண்டு நாளுக்கு வந்தப்போ பேசிட்டுப் போனாம்.
அதாலத்தாம் நாம்ம அத்து சம்பந்தமா ஒஞ்ஞகிட்டெ எதெயும் கலந்துக்கிடல பாருங்க. நமக்கென்ன
எங்காச்சிம் புடிச்ச எடமா பாத்துத் தொலையட்டும். நம்மப் பொண்ண கட்டிக்கிட அவனுக்குக்
கொடுத்து வைக்கல!"ன்னுச்சு முருகு மாமா.
"அப்பிடில்லாம் சொல்ல வாணாம். நம்மப்
பொண்ண வுடயும் ந்நல்ல பொண்ணுங்க நாட்டுல இருக்குங்க. எல்லாம் நல்ல வெதமா அமைஞ்சா
எல்லாத்துக்கும் சந்தோஷந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ்ஞ ன்னா பொண்ணுக்கு எங்காச்சிம்
எடத்தெ பாத்துட்டா இருக்கீயே?"ன்னுச்சு முருகு மாமா.
"மின்னாடிப் பாத்ததுதாங். நாலைஞ்சு
மாசம் இருக்கும்ன்னு நெனைக்கிறேம். தடங்கால நின்னுப் போயிடுச்சு. பாக்கணும். இனுமே
கொஞ்சம் மெனக்கெட்டுப் பாத்தாவணும். வயசும் ஆவுதுல்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
பெறவு பேச்ச அப்பிடியே பஞ்சு ஆச்சாரி மவனுங்க,
முருகு மாமாவோட மவனுங்களப் பத்தி போயி நின்னப்போ, நேரம் கடந்துப் போவ சுப்பு வாத்தியாரு
கெளம்புறேம்ன்னு சொல்லிட்டுக் கெளம்புனவரு, வூட்டுக்கு வந்து களைப்பா இருக்குதுன்னு
படுத்துட்டாரு.
வெங்குவுக்கு வெளியில போயிட்டு வந்தவரு
சேதி சொல்வார்ங்ற எதிர்பார்ப்பு. அதுக்கு ஒரு பதிலு கெடைக்காத கோவம் மனசுக்குள்ள.
விகடுகிட்டெ வந்து, "யப்பா எதாச்சும் சொன்னுச்சாடா?"ன்னுச்சு.
"எங்கிட்டெ எதெ சொல்லிருக்காங்க?
போயி ஒம் மருமவ்வேகிட்டெ கேளு!"ன்னாம் விகடு.
"இவ்வேம் ஒருத்தெம்! குடும்பத்துக்கும்
தமக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிக்கே பேசிட்டு இருப்பாம். இவனுக்கு ஒரு பொண்ண கட்டி
வெச்சு அத்து படுற பாடு இருக்கே! தங்காச்சிக்குக் கலியாணம் ஆவணுமே? அத்துச் சம்பந்தமா
எதாச்சிம் பண்ணணுங்ற நெனைப்பு இருக்கா? எந்நேரத்துக்கும் புத்தகத்தப் போட்டுகிட்டெ
நோண்டிகிட்டெ? அத்துல எப்பிடி என்னத்தாம் இருக்கோ? இவ்வேம் வெச்சிருக்குற செடி கொடிகள
தண்ணி வுடாம கருகடிச்சாத்தாம் செரிபட்டு வருவாம்!"ன்னு சலிச்சுகிட்டெ போனுச்சு
வெங்கு.
*****
No comments:
Post a Comment