19 Jul 2020

சாவு விளைச்சல்

செய்யு - 510

            சுப்பு வாத்தியாரு ஏழு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு ஏழரைக்கெல்லாம் தயாரா ஆக ஆரம்பிசிட்டாரு. மனசு பூரா அந்த நெனைப்பே இருந்ததால வேற வேலையில கவனம் ஓடல. செரித்தாம் கெளம்பி மின்னாடியே உக்காந்துப்புடுவோம்ன்னு அந்த வேலையில எறங்கிட்டாரு. மனசுக்குள்ள என்னத்தெ பேசணும், எப்பிடிப் பேசணுங்ற நெனைப்பு வேற ஓடிட்டு இருந்துச்சு.
            "வாத்தியரய்யா! மோசம் போச்சுங்க வாத்தியாரய்யா!"ங்ற குரலு வாசப் பக்கம் கேட்டுச்சு. கேட்டதும் வூட்டுல இருந்த சனங்க எல்லாம் பதறியடிச்சி வாசப் பக்கம் ஓடுனுச்சுங்க.
            வேற்குடியில விநாயகம் வாத்தியாருக்கு வேலை பாக்குற வயக்காட்டு ஆளு வந்தவரு, "வாத்தியாரய்யா தவறிட்டாங்க!"ன்னாம் பாருங்க சுப்பு வாத்தியாரு அந்த ஒரு நொடியில அப்பிடியே நெலை கொழைஞ்சிட்டாரு.
            "நேத்திதான பாத்துட்டு வந்தேம். எப்பிடி ஆச்சு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "மாரடைப்புங்க. காலங் காத்தாலயே வயக்காட்டுப் பக்கம் போனவக, நெஞ்சு படபடன்னு வருது வூட்டுக்கு வந்திருக்காக. தோள்பட்டெ, கையெல்லாம் வலின்னு சொல்லிருக்காக. ஒடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுனுச்சு. கக்குசு வருதுன்னு போயிருக்காக. அங்கயே உக்காந்தவுகத்தாம். அதெ கூட முழுசா போவ முடியலீங்க. அதெ வழிச்சி அந்தாண்டப் போட்டுப்புட்டு, அங்கேந்துத் தூக்கிட்டுக் கார்ல போட்டுட்டுக் கொண்டுட்டுப் போனா காடுவெட்டிகிட்டெ போறப்பவே உசுரு பிரிஞ்சிருக்கு. லச்சுமாங்குடியில எதுத்தாப்புல வந்தா டாக்கடர்ர நிறுத்திப் பாக்கச் சொல்லிருக்காக. உசுரு பிரிஞ்சிட்டதாவும் வூட்டுக்குக் கொண்டுட்டுப் போவச் சொல்லிட்டாக!"ன்னாரு அந்த ஆளு.
            "நெஞ்சு வலின்னா திருவாரூருக்குக் கொண்டு போவாம ஏம் ஆர்குடி பக்கமா கொண்டு போனாங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆவேசமா.
            "தஞ்சாவூருக் கொண்டு போறதா ஒரு திட்டமுங்க!"ன்னாரு அந்த ஆளு. பெறவு தலையச் சொரிஞ்சிக்கிட்டு, "இன்னும் நாலு பேத்துக்குச் சேதி சொல்லி வுட்டுருக்காக. சொல்லியாவணும்! ஒரு டீயி குடிச்சா தேவலாம் போலருக்கு! போற வழியில கடையில குடிச்சிட்டுப் போவேம்!"ன்னாம் அந்த ஆளு. சுப்பு வாத்தியாரு வெங்குவப் பாத்தாரு. வெங்கு உள்ளார வந்து இருவரு ரூவாய எடுத்துக் கொடுத்துச்சு. அந்த ஆளு ஒரு கும்புட போட்டுட்டுக் கெளம்புனாம்.
            சுப்பு வாத்தியாரு விகடுவப் பாத்தாரு. விசயத்த வெளங்கிக்கிட்டாம்.  அவருக்குத் தலையெல்லாம் கிறுகிறுன்னு வராப்புல இருந்துச்சு. எதையும் தெளிவா சொல்லற நெலையிலயும் இல்ல. அப்பிடியே தரையில உக்காந்தவரு எழுந்து நடந்தா மயக்கம் அடிச்சி விழுவுறவரு போல இருந்தாரு.
            விநாயகம் வாத்தியாரு வூட்டுக்கு விகடு போனப்போ வேற்குடி சனங்க ஒட்டுமொத்தமும் அங்க கூடியிருந்துச்சு. கூட்டம் கொள்ளல. கூட்டத்தெ வெலக்கி வூட்டோ நடுக்கூடத்துல கூலர் பொட்டியில இருந்த விநாயகம் வாத்தியார்ர பாக்குறது சாமானியமா இல்ல. நடுக்கூடம் முழுக்க வயக்காட்டுப் பொண்டுகளாக உக்காந்திருந்துச்சுங்க. யாரயும் உள்ளாரப் போவவும் வுட மாட்டேங்குதுங்க, பாக்கவும் வுட மாட்டங்கதுங்க. கூலர் பொட்டியக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு ஒவ்வொண்ணும் ஒப்பாரி வெச்சதுங்க.
            "வெள்ளாமையில வித்தியாசம் கண்டவர்ரே விநாயகம் வாத்தியார்ரே
            சொல்லாம கொள்ளாம விட்டுப் போனவர்ரே விநாயகம் வாத்தியார்ரே
            நோவு வந்து கெடந்து நொம்பலப்பட்டு சாவலியே
            சாவு வந்து போகப் போறேன்னு வார்த்தெ சொல்லலியே
            காவு ஒன்னயக் கொடுத்த பின்ன எஞ்ஞள காக்க இஞ்ஞ யாரு இருக்கா
            சாவு வெளைச்சல கண்டுபுட்டு சட்டுன்னு போனா ஞாயம் இருக்கா
            ஒறவுக்கார சனத்துக்கும் வயக்காட்டுச் சனத்துக்கும் வித்தியாசம் பாக்காதவரு
            அய்யா மகராசான்னு வந்து நின்னுபுட்டா எதுக்குக் காசின்னு கேக்காதவரு
            ஊரு ஒலகத்துல ஒண்ணுக்கு ரெண்டா போண்டாவப் போட்டுத் தந்தவரு
            எதுக்க எமனே வந்து நின்னாலும் ஏன்டா எவண்டான்னு நெஞ்ச நிமுத்துறவரு
            ஒண்ணுக்கு ரண்டா மூட்டையத் தூக்குவாரு
            மண்ணத் தொட்டு பொன்னா ஆக்குவாரு
            எவனுக்கும் எந்தக் குத்தமும் பண்ணலியே
            எமனுக்குக் கண்ணுருக்கா எடுபட்ட மூஞ்சிலயே
            சாமிக்கு மனசிருக்கா சந்தனத்தெ எடுத்துக்கிட்டெ

            பூமிக்கு மனசிருக்கா பொன்மகனெ வுட்டுப்புட்டெ
            வேற்குடியில வெளைஞ்சிருந்த வீரஞ் சாமி ஏஞ் சாமியேய்
            சுடுகாட்டு மண்ணு திங்க ஆசப்பட்டு போயிடுச்சே  போயிடுச்சேய்
            ஒங் காலு பட்ட மண்ணு எடுத்து நெத்தியில வைக்க ஆசை யிருக்கு
            மண்ணுல பாதம் படாம பாடையில பறந்து போவீய்யோ
            பாடையில போவீய்யோ அய்யோ பாடையில போவீய்யோ"
ஒப்பாரிச் சத்தம் நாலு ஊரு காதெ கிழிச்சிது. யாரும் நடுக்கூடத்துல போயி பாத்து மாலையப் போட முடியல. அந்த அளவுக்கு சனங்க சுத்தி உக்காந்திருந்துங்க. அவுக அழுவுறதுப் பாத்துட்டு, ஒப்பாரியக் கேட்டுட்டு யாருக்கும் அவுகள வெலகச் சொல்ல மனசில்லாம, போட வந்த மாலைய அதுங்ககிட்டேயே கொடுத்தா மாலை கை மாறி மாறிப் போயி கூலர் பாக்ஸ் மேல மலையப் போலக் கெடக்குது. விநாயகம் வாத்தியாரோட தலைமாட்டுல அழுத மூஞ்சோட அவரோட பொண்டாட்டி உக்காந்திருந்தாங்க. சனங்க ஒவ்வொண்ணும் அவுங்களக் கட்டிப் பிடிச்சிருந்துச்சுங்க.
            எல்லாருக்கும் சேதி சொல்லிட்டதாவும் எப்படியும் மூணு மணிக்கெல்லாம் வந்துச் சேந்துடுவாங்கன்னும் இன்னிக்கு எந்நேரமா இருந்தாலும் எடுத்துப்புடுறதுன்னும் வேற்குடி கிராமத்துப் பெரிசுங்க பேசிக்கிட்டுங்க. 
            "வெளைச்சல்ன்னா வாத்தியாருக்கு இந்த தவா சொல்ல முடியாத வெளைச்சலு. யாருக்கும் வேற்குடியில இந்த அளவுக்குக் கண்டதில்ல. மொதல்ல என்னத்தெ இப்பிடிப் பண்ணிட்டுக் கெடக்குறாரேன்னு ஊருல பேச்சுதாங்க. வெளைஞ்சதெ பாத்த பெற்பாடுதாங் பேச்சு அடங்குனுச்சு. வயலுக்குத் தெரிஞ்சுப் போச்சுங்க. ஆளுப் போயி சேந்துடுவாருன்னு. வெளைஞ்சித் தள்ளிடுச்சு. போயிச் சேர்றப்ப அதெ பாத்துப்புட்டு மவராசானா போவணும்னுத்தாம் அந்த வெளைச்சல் சாவு வெளைச்சல் கண்டுடுச்சு!"ன்னு வேற்குடி சனங்க பேசிக்கிட்டாங்க.
            பதினோரு மணி வாக்குல பரமுவோட அப்பா வண்டியில வந்து எறங்குனாரு சுப்பு வாத்தியாரு. பின்னாடியே ஆட்டோவுல வெங்கு, ஆயி, செய்யு, பவ்வு பாப்பான்னு வந்ததுங்க.
            விகடு கெளம்பி விநாயகம் வாத்தியாரு வூட்டுக்கு வந்த பெற்பாடு உக்காந்திருந்தவரு அப்பிடியே படுத்துட்டாத சொன்னாரு பரமு அப்பா. "யப்பா வரவே முடியாதுன்னுட்டு. நம்மால மொகத்தப் பாக்க முடியாதுன்னு சின்ன புள்ளையாட்டாம் அடம். ஊருல நாலு பேத்தக் கொண்டாந்து பேச வெச்சுல்லா கொண்டாந்திருக்கேம்! அதுலயே ரொம்ப நேரம் ஆயிடுச்சு! யப்பா இன்னும் காலையில சாப்புடுவம் இல்ல. ஒண்ணுமில்ல!"ன்னாரு.
            "மொகத்த ஒரு மொற பாத்துடுங்க!"ன்னாரு விநாயகம் வாத்தியாரோட கடைக்குட்டி தம்பி. வேற்குடி பெரிசுங்களும் வந்து, கைத்தாங்லா கொண்டு போயி காட்டிப்புடுங்க பாத்திடட்டும்ன்னாங்க. சுப்பு வாத்தியாரு முடியவே முடியாதுன்னுட்டு நாற்காலியப் பிடிச்சவரு, எழுந்திரிக்க முடியாதுன்னுட்டாரு. கொஞ்ச நேரம் ஆளாளுக்குச் சொல்லிப் பாத்தாங்க. பெறவு மனசு தாங்கல வுட்டுப்புடுங்கன்னு வுட்டுப்புட்டாங்க. சுப்பு வாத்தியாரு அந்த நாற்காலியில உக்காந்தவருதாங். விநாயகம் வாத்தியார்ர எடுக்குற வரைக்கும் எழுந்திரிக்கல. சாவுக்கு வர்றவங்க போனவங்க எல்லாம் சுப்பு வாத்தியாரு பக்கத்துல உக்காந்து வெசாரிச்சுப் பாக்குறாங்க. ஒண்ணும் பேசல.
            மூணு மணி வாக்குல சென்னைப் பட்டணத்துலேந்து விநாயகம் வாத்தியாரோட தம்பிமாருக, அவரோட மவ்வேன் எல்லாரும் வந்துட்டாங்க. நாலு மணி வாக்குல பிரேதத்த எடுக்குற ஏற்பாடுகள ஆரம்பிச்சாங்க. அந்த நேரத்துலதாங் சேதி கேள்விப்பட்டு தஞ்சாவூர்லேந்து லாலு வாத்தியாரும் வந்தாரு. கையில ஒரு மாலையும், பத்திக்கட்டும் இருந்துச்சு. அவராலயும் உள்ளாரப் போயி மாலையப் போட முடியல. அப்பிடியே கொடுத்து வுட்டு கை மாறி கை மாறி உள்ளாரப் போனுச்சு. "போவக் கூடிய வயசில்லீங்க! இத்துப் போவக் கூடிய வயசில்லீங்க! நாஞ்ஞல்லாம் இல்லியா வயசாயி?"ன்னு முணுமுணுத்துக்கிட்டெ சுப்பு வாத்தியாரு பக்கத்துல வந்து உக்காந்தார்ரு. சுப்பு வாத்தியாருக்கு அப்பிடியே சிலிர்த்துப் போனாப்புல ஆயிடுச்சு. குலுங்கிக் குலுங்கி அழுவ ஆரம்பிச்சிட்டாரு. லாலு வாத்தியாரு சுப்பு வாத்தியார்ர தோள சுத்திப் பிடிச்சிக்கிட்டு, "நம்ம கையில ன்னா இருக்கு? போறக்குறப்பவே போயி சேர்ற நாளையும் எழுதியாயிடுது. ஒருத்தருக்கொருத்தரு முன்ன பின்ன போயி ஆவ வேண்டியதுதாங். போவாம இருக்க முடியாது!"ன்னாரு லாலு வாத்தியாரு ஆறுதல் பண்ணுறாப்புல.
            "சொன்னபடி செஞ்சுப்புட்டீங்களே! சொன்னபடிக்கிப் பாக்க வெச்சுப்புட்டீங்களே! சொன்னபடிக்குச் செஞ்சுப்புட்டீங்களே!"ன்னு முணுமுணுத்தாரு சுப்பு வாத்தியாரு. அவரு அப்பிடிச் சொல்றது யாருக்கும் ஒண்ணும் புரியல. என்னத்தெ சொல்ல வர்றார்ன்னு தெரியாம கொழம்புனாங்க. அதுக்கு மேல ஒண்ணும் சொல்லல சுப்பு வாத்தியாரு. திரும்பவும் மெளன சாமியார்ரப் போல உக்காந்துட்டாரு.
            அவரோட மனசுல செத்துப் போன விநாயகம் வாத்தியாரு எழுந்திரிச்சு வந்து, "நாளைக்குப் பொண்ணு கலியாண வெசயமா லாலு வாத்தியார்ரப் பாத்து பேச வைக்கிறேம். இல்லன்னா அவர்ர இஞ்ஞ வார வைக்கிறேம். நாம்ம வாக்குக் கொடுக்குறதில்ல. கொடுத்தா அந்த வாக்க நிறைவேத்தாம இருக்குறதில்ல!"ன்னு  சொல்றாப்புல இருந்துச்சு. அவரோட கண்ணுத் தண்ணி பொங்கிப் பொங்கி ஊத்த ஆரம்பிச்சிது. லாலு வாத்தியாரு சமாதானம் பண்ணப் பாத்தாரு. பக்கத்துல இருந்த பெரிசுங்க, "வுடுங்க! ஒண்ணும் சொல்லாதீங்க! அதுவா அழுது முடியட்டும்! அப்பத்தாம் மனசு ஆறும்! ஒரு உசுரும் ரண்டும் ஒடம்புமா இருந்த ஆளுங்க. தாங்க முடியாது இதெ. மொகத்தப் பாக்கக் கூட தெராணி யில்லாம உக்காந்திருக்காரு. வுட்டாச்சி. அழுது வடிஞ்சாத்தாம் இத்து செரிபட்டு வாரும்!"ன்னாங்க.
            விநாயகம் வாத்தியார்ர குளிப்பாட்ட ஆரம்பிச்சாங்க. தலையில எண்ணெய்ய வைக்கச் சொல்லி, சீயக்காய வைக்கச் சொல்லி அப்பங்காரரெ குளிப்பாட்டச் சொல்லி மவ்வேங்கிட்டெ சொன்னா, "யப்பா நீந்தானே நம்மள குளிப்பாட்டுவே! நாம்ம எப்பிடிப்பா ஒன்னயக் குறிப்பாட்டுறது?"ன்னு வெடிச்சு அழுதாம் பாருங்க. கூடியிருந்த சனங்க ஒவ்வொண்ணும் ஒண்ணு மேல ஒண்ணு சாஞ்சி விழுந்து அழுதா எல்லாம் சீட்டுக்கட்டுக போல சரிஞ்சி விநாயகம் வாத்தியாரு மேல விழுந்துடிச்சுங்க. ஒரு வழியா அதெ சரி பண்ணி ஆவ வேண்டிய காரியத்தெ பாத்து விநாயகம் வாத்தியார்ர சுடுகாட்டுல‍ கொண்டு போயி வெச்ச பிற்பாடு இப்பிடி ஒரு சாவ கண்டதில்ல, பாத்ததில்லன்னு சனங்க பேசிட்டே கெளம்புனுச்சுங்க.
            சுப்பு வாத்தியாரு அப்பயும் உக்கார வெச்ச நாற்காலியலத்தாம் உக்காந்திருந்தாரு. பரமு அப்பாத்தாம் வண்டியில பின்னாடி உக்கார வெச்சு கவனமா கொண்டாந்து வூட்டுல வுட்டுட்டுப் போனாரு. மறுநாளு பாலு தெளிக்கு, கருமாதின்னு எதுக்கும் சுப்பு வாத்தியாரு போவல. துக்கத்துக்குப் போயிட்டு வந்து படுத்துவருதாங். இருவது இவருத்தஞ்சு நாளு வரைக்கும் அப்பிடியே படுத்துக் கெடந்தாரு. செரியா சாப்புடுறது இல்ல. தூங்குறது இல்ல. ஒடம்பு இளைச்சு அப்பிடியே துரும்பா போயிருந்தாரு.
            ஒரு நாளு விநாயகம் வாத்தியாரோட மவ்வேன் வூட்டுக்கே வந்து பேசிட்டுப் போனாம். "யப்பா போயிடுச்சு. இனுமே பாக்க முடியாது. ஒஞ்ஞளையெல்லாம் பாக்குறப்போ ஒஞ்ஞ மூலமா யப்பாவப் பாத்துப்பேம்! யப்பா போனதெ வுட நீஞ்ஞ இப்பிடிக் கெடக்குறதுதாங் ரொம்ப சங்கட்டமா கெடக்கு! யம்மா வந்துப் பாக்கணும்னு சொன்னாங்க!"ன்னு சொன்னாம்.
            "வாணாம்!"ன்னு எழுந்து உக்காந்துப் பதிலச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ரண்டு நாளு போவட்டும். நாமளே வார்றேம்!"ன்னு அவரே தொடந்தாப்புல பேசுனாரு.
            ரண்டு நாளு கழிச்சி மவனெ அழைச்சிட்டுப் போயி விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டியப் பாத்து ஆறுதல் சொல்ல நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அவரால ஒண்ணும் சொல்ல முடியல. அவரால அவரையே ஆறுதல் பண்ண முடியாததுப் போல இருந்துச்சு.
            அத்தனெ நெலபுலத்தையும் கொழுந்தங்கிட்டெ ஒப்படைச்சிட்டதாவும், மவ்வேன் கூட சென்னைப் பட்டணத்துக்கே போவப் போறதாவும் சொன்னாங்க விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி. "ன்னா ஒண்ணு மவ்வேம் கலியாணத்தப் பாத்துட்டுப் போயிச் சேந்திருந்தா இவ்ளோ வெசனம் வந்து சேந்திருக்காது!"ன்னு கண்ணுத் தண்ணிய தொடைச்சிக்கிட்டாங்க அவுங்க.
            "எம்மட பொண்ணுக் கலியாணத்தையும்தாம்!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரும் கண்ணத் தொடைச்சிக்கிட்டாரு. ஆளாளுக்கு கண்ணுத் தண்ணி வுட்டுக்கிட்டு இருக்கறத சிரிச்சிக்கிட்டு பாத்தாரு போட்டோவுல இருந்த விநாயகம் வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...