1 Jul 2020

கல்யாணங்றது கல்யாணந்தாம்!

செய்யு - 493

            கல்யாணத்தப் பத்திப் பேசுறப்ப, நடக்கணும்னு இருந்தா அதுவா நடக்கும்பாங்க. அது எதுவும் நம்ம கையில இல்ல ஆண்டவன் கையில இருக்கும்பாங்க. ஒரு ஆணோ, பொண்ணோ பொறக்குறப்பவே இன்னாருக்கு இன்னாருன்னு முடிவாயிட்டதாவும் சொல்லுவாங்க. அதது நேரம் வந்தா அதது பாட்டுக்கு ஆவும்பாங்க. பொண்ணு தேடியோ, மாப்புள்ள தேடியோ பேரலைச்சல் பட்டவங்களுக்குச் சொல்ற சமாதானம் இது.
            சரித்தாம் அமையட்டும்ன்னு உக்காந்திருந்தா, அப்படியே உக்காந்திருந்தா காரியம் ஆயிடுமா? சாதவத்தப் பாக்கணும். நாலு எடத்துக்கு அலையணும். ஒண்ணுக்கு நாலு தாட்டிக்கிட்டுத்தாம் போவும். ச்சும்மா உக்காந்திருந்தா தட்டுல வந்து காசி வுழுந்துடுமா? அதுக்கும் பிச்சக்கார்ரேம் நாலுக்கு நாப்பது தடவெ அம்மா தாயேன்னு வாயிக் கிழிய கத்துனாத்தாம் ஆவும்பாங்க. செரித்தாம் பொண்ணோ, மாப்புள்ளையோ அமையட்டும்ன்னு உக்காந்திருந்தா அதெ உசுப்பி வுடுறதுக்குச் சொல்ற வாசகம் இது. ஒலக்கைய ரண்டு பக்கதுலயும் வெச்சுக் குத்துலாங்ற மாதிரிக்கி பேச்சையும் இப்பிடி ரண்டு பக்கமாவும் வெச்சுப் பேசுங்க ஒறவுக்கார பெரிசுங்க. அதுகளுக்குப் பல்லு போன காலத்துல இப்பிடி எதையாச்சிம் சொல்லி மென்னுகிட்டு இருந்தாவணும்.
            பொண்ணு புள்ளைகள்ல கலியாண வயசு புள்ளீயோள வெச்சிட்டு அந்த ரண்டு பக்கத்துல இப்பிடியும் இருந்துட முடியாது, அப்பிடியும் இருந்துட முடியாது. ரண்டுக்கும் இடையில ஒரு மாதிரியாத்தாம் கலியாணம் ஆவுற வரைக்கும் இருந்தாவணும். அத்தோட கலியாண வயசுல பொண்ணோ, புள்ளையோ இருக்குற வூட்டுல இந்த ரண்டு வெதமான சமாதான வாசங்களைப் பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ கேட்டுத்தாம் ஆவணும். ஒரு சில வூட்டுப் புள்ளைங்களுக்கு வெரசா ஆவுற கல்யாணம், சில வூடுகள்ல நெதானமா கூட ஆவாது. பொண்ணு மாப்புள பாக்குறதுல அபூர்வமா ஒரு சிலருக்குத்தாம் ஒரு பையனையோ, பொண்ணையோ மொத தடவெ போயிப் பாப்பாங்க, கலியாணம் சட்டுபுட்டுன்னு முடிஞ்சிடும். மிச்ச எல்லாத்துக்கும் அலைஞ்சலைஞ்சுத்தாம் கலியாணம் ஆவும். அதுலயும் இந்த பொண்ணோடயோ, மாப்புள்ளையோடயோ கலியாணம் ஆயிடும்ன்னு நெனைச்சிட்டு இருக்குறப்ப அது நடக்காது. அதுக்கு நேர்மாறா இந்தச் சம்பந்தம் ஆவாதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறது ஆவும். அதாச்சி கயித்த கயிறுன்னு நெனைச்சு மிதிச்சா பாம்பு போல சீறும், சரித்தாம் பாம்புன்னு நெனைச்சு தாண்டுனா பாம்பு கயித்தப் போல கெடக்குங்ற கதைத்தாம்.
            அதெ விட வேடிக்கெ, பொண்ணும் மாப்புள்ளயும் ஒண்ணுக்கொண்ணுப் பாத்துப்புட்டு இத்துதாம் நமக்கு அமையப் போற புருஷன்னோ, இத்துதாம் நமக்கு அமையப் பொற பொண்டாட்டின்னோ வேற நெனைச்சிக்கும். இப்பிடியே நாலைஞ்சு தடவெ இத்துதாம் புருஷன், இத்துதான் பொண்டாட்டின்னு நெனைச்சு நெனைச்சு அது கைகூடாம, ஆவாம அதெ ரப்பர்ர வெச்சு அழிக்குறாப்புல அழிச்சு, கடெசியா ஒண்ணுத்தப் பாத்து, இத்துவும் எங்க அமையப் போவுதுன்னு நெனைச்சு அதெயும் பழக்க தோஷத்துல ரப்பர்ர வெச்சு அழிச்சா அத்துதாம் பொண்டாட்டியாவோ, புருஷனாவோ அமையும். 
            காதலிச்சு ஓடிப் போயி கலியாணம் பண்ணிக்கிறவங்க விசயத்துல மட்டுந்தாம் கலியாணங்றது அவுங்க முடிவா மட்டும் இருக்கும். பொண்ணு பாத்து, மாப்புள்ள பாத்து பண்ணி வைக்குற கலியாணத்துல எல்லாம் கலியாணங்றது பல பேத்தோட முடிவாத்தாம் இருக்கும். பொண்ணு, மாப்புள்ள எல்லாத்துக்கும் பிடிச்சிப் போயி தாய்மாமனுக்குப் பிடிக்காம போயி நின்ன கலியாணங்க உண்டு. பொண்ணுக்கு மாப்புள்ளையப் பாத்துப் பிடிக்காம, மாப்புள்ளைக்குப் பொண்ண பாத்து பிடிக்காம மித்தவங்க எல்லாத்துக்கும் பிடிச்சிப் போயி நடந்த கலியாணங்களும் உண்டு. எந்தக் கதிக்கு இந்தக் கலியாணங்க நடக்குதுன்னு ஆராய்ச்சிப் பண்ணுறவேம் மந்தக் கதிக்குப் போவ வேண்டியதுதாம். நம்ம கலியாண நடைமொறைக அப்பிடி. நாட்டுல பொண்ணுக்கோ, மாப்புள்ளைக்கோ கொறைச்சல் இல்லாதது போல, கலியாணத்துக்கான நடைமொறைகளும் கொறைச்சல் இல்ல.
            மொத்தத்துல இப்பிடித்தாம் ஒரு கலியாணம் நடக்கும்ஙறதுக்கோ, இந்த வெதத்துலத்தாம் ஒரு கலியாணம் நடக்காதுங்றதுக்கோ எந்த ஒரு பொதுவான விதியும் இங்க இல்லாமத்தாம் இருக்குது. அதுவா நடந்தாலும் நடந்துதாம், நடக்காம போனாலும் நடக்காம போனதுதாம், மொதல்ல நடக்குறாப்புல ஆரம்பிச்சி பின்னால நடக்காம போனாலும் போனதுதாம், மொதல்ல நடக்காதது போல ஆரம்பிச்சு பின்னால நடந்து போனாலும் நடந்ததுதாம். ஒரு கலியாணங் காட்சி நடக்குறதுல மட்டும் எந்த எடத்துல அத்து எப்பிடி ஆவும்ன்னே சொல்ல முடியாது. தாலி கட்டி முடியுற வரைக்கும் எந்த நேரத்துலயும் எது வாணாலும் நடக்கலாம். மணமேடையில உக்காந்திருக்குறப்ப மாரடைப்பு வந்து செத்துப் போன மாப்புள்ளைக்காரனெல்லாம் இருக்காம். பிந்துவப் பொருத்த மட்டுல இந்த விசயத்துல மூர்த்தோலை எழுதுறதுக்கு மின்னாடியே மாப்புள்ளக்கார்ரேம் போயிச் சேந்துட்டாத்தால தப்பிச்சு. இல்லன்னா ஒரு பயெ அதெ கட்டுறதப் பத்தி யோசிக்க மாட்டாம். அந்த வெதத்துல பிந்துவுக்கு நெலமெ கொஞ்சம் பரவால்லன்னு ஆறுதல் பண்ணிக்கிடலாம். மத்த ஒரு வகையா மணமேடையில மாப்புள்ளக்காரம் உக்காந்திருக்க, மணப்பொண்ணு ஓடிப் போனதால, அந்த எடத்துலயே வேற ஒரு பொண்ணப் பாத்து மாறி நடந்த கலியாணங்களும் உண்டு. அதுதாங் மூணு முடிச்சுக்குள்ள ரகசியம் போலருக்கு.
            கலியாண விசயத்துல இப்படியே வயசாயி, கலியாணம் ஆவுமா? ஆவாதான்னு தடுமாறிப் போயி அதுலயே கெழடாவோ, கெழவியாவோ ஆன முதிர்க்கண்ணன்களும், முதிர்கன்னிகளும் நாட்டுல நெறையப் பேரு இருக்காம். ஆயுசுக்கும் பிரம்மச்சாரியாவோ, கன்னியாவோ இருந்துப்புடலாம்ன்னு நெனைக்குற ஆளுங்கத்தாம் இந்த வம்படி கொழப்படியிலேந்து தப்பிக்குறது. அப்பிடி இருக்குற ஆளுகளையும் கலியாணம் ஆவாம கெடக்குதீயேன்னு கொழப்பி விடுற ஆளுகளும் உண்டு. ரொம்ப நாளா கலியாணம் ஆவாமா எப்பிடியும் ஆயிடும்ன்னு நெனைச்சுக்கிட்டு நம்பிக்கையில இருக்குள ஆளுகளப் போயி இனுமெ என்னத்தெ கலியாணத்தப் பண்ணி, என்னத்தெ குடித்தனத்தப் பண்ணின்னு அவுகள வேற மாதிரியா கொழப்பி வுடுற ஆளுகளும் உண்டு. ஆணும் பொண்ணும் சேர்ந்து கொழந்தைப் பெத்துக்கிடுறது சுலுவா இருக்கலாம், இந்தச் சமுகத்துல ஆணும் பொண்ணுமா சேர்ந்து கலியாணத்தப் பண்ணிக்கிடுறது சல்லையான காரியத்துல ஒண்ணு.        

            பிந்துவுக்குக் கலியாண விசயம் தாட்டிக்கிட்டுப் போனதுல ஆளாளுக்குக் கவலெ. வானத்துலேந்து ஒரு வந்து குதிச்சிட மாட்டான்னு நெனைச்சப்பத்தாம் லாலு மாமா வேலனெ கட்டி வைக்கிறதப் பத்திப் பேசுனாரு. இருக்குற நெலையில கேட்ட ஒடனே கட்டி வெச்சுடுற நெலையிலத்தாம் பாக்குக்கோட்டை குடும்பத்துச் சனங்க இருந்தாங்க. இருந்தாலும் நடைமொறைன்னு ஒண்ணு இருக்குல்ல. அதெத்தாங் சம்மதச் சங்கிலின்னு சொல்லுவாங்க. சங்கிலியில எல்லா வளையமும் கோத்திருந்ததாத்தாம் முழுசா ஒரு சங்கிலியா இருக்கும். ஒரு வளையம் கொக்காம இருந்தாலும் ஒரு சங்கிலி ரண்டு சங்கலியா போயிடும். அந்தச் சம்மதச் சங்கலியில கேக்க வேண்டிய ஆளுகளெ கேட்டு சம்மதம்ன்னு ஒத்த வார்த்தெ வந்துப்புட்டா அத்து ஒத்த சங்கிலியா இருக்குறதா அர்த்தமாயிடும். பின்னாடி ஒரு பேச்சுக்கு எடம் இருக்காது. அந்தச் சங்கிலியோட மொத வளையம் யாருன்னா சித்துவீரன்தாம். ஆக மொதல்ல சம்மதம் சொல்ல வேண்டிய ஆளான சித்துவீரனோட பதில எதிர்பாத்துக்கிட்டுக் கிடந்ததுங்க சனங்க.
            சித்துவீரனுக்கும் லாலு மாமா முக்கியமான ஆளு. சுந்தரிக்கும் லாலு மாமா முக்கியமான ஆளு. சித்துவீரனுக்குச் சித்தப்பான்னா, சுந்தரிக்குத் தாய்மாமாங்ற மொறையில மட்டுமில்ல, ரண்டு பேத்துக்கும் சண்டைன்னா அதெ தணிச்சி விட்டுப்புட்டுப் போறதும் லாலு மாமாதாம். அப்படிப்பட்ட லாலு மாமா தன்னோட மவனெ பிந்துவுக்குக் கொடுக்க நெனைக்குதுன்னு சேதியக் கேள்விப்பட்டதுமே சித்துவீரனுக்கு சரித்தாம்ன்னு ஆயிடுச்சு. சுந்தரியப் பத்திச் சொல்ல வேண்டியதில்ல. அதுக்கும் அப்பிடியே பண்ணிப்புடலாம்ன்னு தோணுச்சு. எதாச்சிம் தப்பு நடந்துப் போயி இன்னொரு அபார்ஷ்ன்னா வந்து நிக்கப் போற மவராசன் அவருதானே. அவரோட மவனெ வேண்டாம்ன்னு சொல்லி தனக்குத் தானே தீம்பு தேடிக்க சுந்தரிக்கு விருப்பமில்ல. ஒரு சங்கிலியோட ரண்டு வளையம் இப்பிடியா கோத்துக்கிட்டுச்சு.
            ராசாமணி தாத்தாவுக்கும் இதுக்கு மேல மாப்புள்ளயத் தேடி அலைஞ்சி எவ்வேம் கெடைக்கப் போறாம்ன்னு சரித்தாம்ன்னு தோணுச்சு. அவரு அரைகொறையுமா சாதகத்தெ பாத்து முடிச்சதுல பொருத்தமும் பரவாயில்லங்ற மாதிரிக்கி இருந்துச்சு. "இவ்வா பொண்ணும் குட்டி யானெ மாதிரிக்கி இருக்குறா. பயலும் குட்டி யா‍னெ மாதிரிக்கி இருக்காம். அந்த வகையிலயும் பொருத்தமாத்தாம் ஆவுது!"ன்னு மனசுக்குள்ளயே நெனைச்சுக்கிட்டு, "அந்தப் படியே ஆவட்டும்!"ன்னுடுச்சு ராசாமணி தாத்தா. சங்கிலியோட மூணாவது வளையமும் இந்தப் படிக்குக் கோத்துக்கிட்டுச்சு.
            சித்து வீரங்கிட்டெயிருந்து சம்மதம்னு தகவல் வந்த பெற்பாடும், சரசு ஆத்தாத்தாம் கொஞ்சம் யோசனெ பண்ணுச்சு, ஒரு பொண்ண அண்ணங்கார்ரேன் மவ்வனுக்கே கொடுத்து, இப்போ ரண்டாவது பொண்ணையும் இன்னொரு அண்ணங்கார மவனுக்கே கொடுக்கணுமான்னு. வேற வெளி எடம் போனாலுந்தாம் ஒத்து வார்ற மாட்டேங்குதே என்ன பண்ணறதுன்னு ஒரு தயக்கம் சரசு ஆத்தா லாலு மாமா சொன்னப்போ.
            லாலு மாமா அந்தத் தயக்கத்தப் புரிஞ்சிக்கிட்டு, "நமக்குப் பிடிச்சிருக்கு. மனசுல வெச்சுக்கிடாம கேட்டுட்டேம். ஒனக்கும் பிடிச்சிருந்தா பாப்பேம். இல்லன்னா நீயி ஒந் தோதுக்குப் பாத்துக்கோ. நாம்ம எந் தோதுக்குப் பாத்துக்கிடறேம்! ஏம் சொல்றேன்னா அவ்வேம் பாலாமணியும் ஆயுர்வேதத்துல டாக்கடர்ரா இருக்காம். இவ்வேம் வேலனும் ஆயுர்வேதத்துல டாக்கடர்ரா இருக்காம். வருங்காலத்துல ஒருத்தருக்கொருத்தம் தொணையா நின்னுப்பானுங்கோ. ரண்டு பயலும் சென்னைப் பட்டணத்துல கெடக்குறதால ஒத்தாசையாவும் போயிடும் பாரு!"ன்னு. அதெ கேட்டதும் ரண்டு வெதமான ஊடாட்டம் சரசு ஆத்தாவுக்கு. ஒண்ணு, சித்துவீரன் சரின்னு சொன்ன பிற்பாடு இதுல சரசு ஆத்தா என்னத்தெ மறுத்துச் சொல்ல முடியும்ங்றது. இன்னொண்ணு, இப்பிடித் தேடி வர்ற சம்பந்தத்தெ வுட்டுப்புட்டு, நாளைக்கு உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணான்னு நிக்குறாப்புல ஆயிடுமாங்றது. அதால "பொண்ணுல ஒண்ணாவது வெளியில போவும்ன்னு பாத்தா எல்லாம் குடும்பத்துக்குள்ளேயே ஒண்ணுக்குள்ள ஒண்ணால போவுது!"ன்னு சரசு ஆத்தா மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாலும், அதோட மனசுல பட்ட சொணக்கத்த வெளிக்காட்டிக்கிடாம, "ஒனக்கு இஷ்டம்ன்னா நமக்கும் இஷ்டம்தாண்ணே!"ன்னு லாலு மாமாகிட்டெ பாலிஷா சொல்லிடுச்சு. ஆக சங்கிலியோட நாலாவது வளையமும் சரியா கோத்துக்கிடுச்சு.
            பாலாமணிகிட்டெ கேட்டப்போ, "இத்துவும் ஒரு பேரல். அவனும் ஒரு பேரல். ரண்டு பேரலுக்கும் பொருத்தமாத்தாம் இருக்கும். இதெ வுட்டுப்புட்டா இந்த பேரலுக்கு ஒரு பேரல்ல தேடுறதோ, அந்தப் பேரலுக்கு ஒரு பேரல்ல தேடுறதோ செருமமா போயிடும்! எப்பிடியோ கதெ முடிஞ்சா செரித்தாம்! நாமளா தேடிப் போற மாப்புளத்தாம் சரியா அமைய மாட்டேங்குது. அதுவா தேடி வர்ற சம்மதமாவது சரியா அமையட்டும்!"ன்னாம். அத்தோட லாலு மாமா எப்பிடின்னா பாலாமணி சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டுற ஆளு. அந்த வெதத்துல ரொம்பவே வசதியாப் போயிடுச்சு பாலாமணிக்கு. இந்த வெதத்துல சங்கிலியோட அஞ்சாவது வளையமும் சரியா கோத்துக்கிடுச்சு.
            திருச்சியில கட்டிக் கொடுத்துருக்குற லாலு மாமாவோட மூத்தப் பொண்ணு ஈஸ்வரியும், சென்னைப் பட்டணத்துல கட்டிக் கொடுத்துருக்குற ரண்டாவது பொண்ணு குயிலியும் சேர்ந்துகிட்டெ வேற இதுல ஆளாளுகிட்டே பேசுனுதுங்க. "எல்லாம் குடும்பத்துக்குள்ளயே ஒண்ணுக்குள்ள ஒண்ணா போயிட்டா நாளைக்கு ஒரு பெரச்சனைன்னாலும் உக்காந்துப் பேசித் தீத்துக்கலாம்! செய்வினை கொடுப்பினையையும் கூட கொறைச்சலா செஞ்சுக்கலாம்!"ன்னு பேசி வுட்டதுங்க. சங்கிலியோட ஆறாவது, ஏழாவது வளையமும் இந்த வெதத்துல கோத்துக்கிடுச்சு.
            முருகு மாமா அந்த விசயத்துல அடிச்சிப் பேசுனுச்சு. சரசு அத்தாகிட்டெ, "இன்னும் எத்தனெ காலத்துக்குப் பொண்ண வெச்சிக்கிட்டு மாப்புள்ளயத் தேடிட்டு இருக்கப் போறே? தேடிட்டு இருந்தா தேடிட்டே இருக்க வாண்டியதுதாங், தங்கப் பொதையல வரைபடத்தெ வெச்சுக்கிட்டு தேடிட்டு இருக்குறாப்புல. காலாகாலத்துல செய்ய வேண்டியதெ செஞ்சு முடிச்சிறதுதாங் செரி. இன்னிக்கு இருக்குற நாம்ம நாளைக்கி இருக்கோமாங்றதுக்கு உத்தரவாதம் இல்லே. அததெ அதுவா அமையுறப்போ முடிச்சிப்புடணும். புள்ளீயோளுக்குக் கலியாணத்தப் பண்ணி வுட்டுப்புட்டா ஒரு சோலி வுட்டுச்சு. நாளைக்கே உசுரு போறன்னாலும் நிம்மதியா கண்ண மூடலாம் பாரு!"ன்னு. சங்கிலியோட எட்டாவது வளையமும் இந்த கதிக்குக் கோத்து விட்டதால கலியாணத்துக்கான சம்மதச் சங்கிலியில அஞ்சு வளையம் சேந்தாலே எப்பிடியும் காரியம் முடிஞ்சிடும். இதுல லாலு மாமாவையும் சேத்துக்கிட்டு ஒம்போது வளையம்லா இருக்கு. சரியா இந்தச் சங்கிலி கலியாணத்துல போயி நிக்குற அளவுக்குப் பெலமா இருந்துச்சு.
            இப்பிடியா ஒரு வழியா வேலனுக்கும், பிந்துவுக்கும் கலியாணத்தப் பண்ணி முடிச்சிப்புடுறதுன்னு முடிவாயிடுச்சு.
            பொண்ணுக்குப் பையனத் தெரியும். பையனுக்குப் பொண்ணத் தெரியும். இதுல என்னத்தெ கொண்டு போயி பொண்ணு பாக்குறது, மாப்புள்ள பாக்குறுதுன்னு சடங்குகள வெச்சிக்கிறதுன்னு லாலு மாமா சொன்னதெ எல்லா சனமும் ஒத்துக்கிடுச்சு. முக்கியமா பாலாமணி. பாலாமணிக்கு தங்காச்சிக்குப் பொண்ணு பாக்குறது, மாப்புள்ள பாக்கறது, ஓல எழுதுறதுன்னு மின்னாடி வந்துட்டுப் போயிட்டு இருந்ததுல ஏகப்பட்ட நாளுங்க கிளினிக்க தொறக்க முடியாம, வேலைக்கு விடுப்ப போட்டுட்டு அத்து ஒரு பெரும்பாடா இருந்ததால, லாலு மாமா சொன்னபடிக்கு பண்ணுறது ரொம்ப செளகரியமா பட்டு அதெ பத்தி ஒண்ணும் வாயத் தொறக்கல. நாமளே இப்பிடி ஒரு யோஜனையச் சொல்லலாம்ன்னு நெனைச்சா அதெ மாமாவே சொல்றதுல ஒரு சந்தோஷம். அத்தோட செலவு வேறல்லா கொறையுதுன்னு ஒரு கணக்கெ போட்டது பாலாமணி மட்டுமில்லெ எல்லா சனமுந்தாம்.
            செரித்தாம் செலவு கொறையுதேன்னு நெனைச்ச, அந்த எடத்துலத்தாம் லாலு மாமா சொன்னுச்சு, "மூர்த்தோலையும் வாணாம்! எதுக்கு அதுக்குக் காசிய தண்டம் பண்ணிக்கிட்டு. அதுக்கு ஆவுற சிலவெ பொண்ணு மாப்புள கையில கொடுத்துப்புட்டா அதுங்க எதுக்காச்சிம் சிலவெ பண்ணிக்கிடும் பாருங்க!"ன்னு. ஆக கொறையுற செலவக் கணக்கெ எப்பிடியே நிமுத்திப்புடுறானுவோளேன்னு பாலாமணிக்கு அந்த எடத்துல அதுக்கு ஒண்ணுத்தையும் சொல்ல முடியல. அப்பிடியே ஆவட்டும்ன்னு கலியாணத்துக்கான ஏற்பாடுகள பண்ண ஆரம்பிச்சதுங்க.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...