செய்யு - 509
வூட்டுக்கு வந்த சுப்பு வாத்தியார்ர,
"ஒரு வாயி டீத்தண்ணியக் கூட ஊத்திக்கிடாம எங்க கெளம்பி எங்க போயிட்டு வாரது?"ன்னுச்சு
வெங்கு.
"காலச் சாப்பாடு இட்டிலியச் சுட்டு
தயாரா இருக்கு மாமா! அவுங்க சாப்புட்டுப் பள்ளியோடம் கெளம்பிட்டாங்க மாமா!"ன்னுச்சு
ஆயி.
"காலச் சாப்பாடு ஆயாச்சு. விநாயகம்
வாத்தியாரு வூட்டுக்குப் போனேம். அஞ்ஞயே சாப்புடறாப்புல ஆயிடுச்சு. தங்கப் புள்ளே
சாப்புட்டுச்சா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெங்குகிட்டெ பேச விருப்பம் இல்லாதவரு
போல மருமவ்வேகிட்டெ.
"ஒஞ்ஞ தங்கப்புள்ளெ எழும்பி ஒஞ்ஞள
எஞ்ஞன்னு தேடி அழுதுப்புட்டு, பெறவு ரண்டு இட்டிலிய முழுங்கிட்டு அவுக அத்தையோட வெளையாண்டுகிட்டு
கெடக்குது!"ன்னுச்சு ஆயி. அதெ கேட்டுக்கிட்டெ உள்ளாரப் போயி சட்டையக் கெழட்டிப்
போட்டுட்டு, கை வெச்ச பனியனோட வேட்டிய மடிச்சி கட்டிக்கிட்டு, பேத்திய கொல்லைப்
பக்கமா ஒரு பார்வை பாத்தவரு, அத்து அத்தைக்காரியோட கல்லுபுல்லுன்னு பேசிட்டு வெளையாண்டுகிட்டு
இருந்ததப் பாத்துட்டு, அப்பிடியே கெளம்பி வூட்டுக்கு வெளியில வந்து, எதுத்தாப்புல இருக்குற
கொல்லைப் பக்கம் போனாரு.
"ஒம் நாத்தனாரு கலியாண வெசயமாத்தாம்
பேச போயிருக்காரு. நம்மகிட்டெ சொல்லிட்டுப் போனா ன்னாவாம்?"ன்னுச்சு வெங்கு
நைசா ஆயிகிட்டெ.
"மாமாவப் போட்டு ரொம்ப பேசாதீயே
யத்தெ! பாவம் ரொம்ப நொந்தாப்புல இருக்காக. அவுங்களுக்கும் நல்ல எடமா பாத்துக் கலியாணத்தப்
பண்ணி வுடணும்ன்னு ஆசெ இருக்காதெ பின்னே?"ன்னா ஆயி.
"ஒமக்கும் ஒம் புருஷனுக்கும் கலியாணமாயி
நாலு வருஷம் ஆவப் போவுது. பேத்தியாளுக்கு வயசு மூணு ஆயாச்சு. இத்தனெ வருஷமா நாத்தனார்ர
வூட்டுக்குள்ள வெச்சிப்பாங்க?"ன்னுச்சு வெங்கு.
"வெச்சிப்பாங்கன்னா அவுங்க படிச்சிட்டு
இருந்தாங்க. இப்பத்தாம் பரீட்சல்லாம் எழுதி முடிச்சிட்டு இருக்காங்க. இனுமே பாத்தாதான
செரியா இருக்கும்?"ன்னுச்சு ஆயி.
"ஒங்கிட்டெ ஒம்மட மாமனார்ரப் பத்திப்
பேய முடியா. பேசுனா அவருக்குச் சாதவமாத்தாம் பேசுவே! ஒங்கிட்டெ போயி பேசுனேம் பாரு!"ன்னு
முகத்தெ திருப்பிக்கிட்டு போனுச்சு வெங்கு.
"யத்தே! யத்தே!"ன்னு கத்திக்கிட்டெ
பின்னாடி ஓடுனா ஆயி.
*****
மவளுக்கு படிப்புச் செலவுக்கோ, கலியாணச்
செலவுக்கோ ஆவும்ன்னு நெனைச்சி எதுத்தாப்புல வெலைக்கு வந்த எடத்தெ வாங்கிப் போட்டுருந்தாரு
சுப்பு வாத்தியாரு. எம்பது குழி கொல்லை. வூடு கட்டிக்கிறதுன்னாலும் கட்டிக்கிடலாம்.
தெக்குப் பாத்த வூடா இருக்கும். மொதல்ல அம்பது குழி நெலந்தாம் வெலைக்கு வந்துச்சு.
அதெ முடிச்சிக் கொடுக்குறதுக்கு தொணை நின்னவரு அப்போ நெருங்கரெ வாத்தியாரு. பெறவு
பக்கத்துலயே முப்பது குழி நெலமும் வெலைக்கு வந்துச்சு. அதெ முடிச்சிக் கொடுக்குறதுக்கு
தொணை நின்னவரு விநாயகம் வாத்தியாரு. வாங்குன ரண்டு கொல்லையையும் இடையில இருந்த வேலியப்
பிரிச்சி ஒண்ணாக்குனாரு சுப்பு வாத்தியாரு. ஊருல ஒண்ணுக்கு ரண்டா எடம் வெச்சிருக்குற
ஆளுல்ல சுப்பு வாத்தியாரும் ஒருத்தரு.
ரெண்டு கொல்லையிலயுமா சேர்த்து ஒம்போது
தென்னை மரம் இருந்துச்சு. கொல்லைக் கடைசியில அஞ்சு புளிய மரம் வரிசையா நின்னுச்சு.
மொத கொல்லையில ஒரு மாமரமும் ரண்டு எலுமிச்சம் மரமும், அடுத்தக் கொல்லையில ஒரு முருங்க
மரமும், ஒரு எலுமிச்ச மரமும், ஒரு நாரத்தை மரமும் நின்னுச்சு. சுப்பு வாத்தியாரு மொத
கொல்லையில வரிசையா ஏழு வாழை கட்டைகள வாங்கிப் போட்டுருந்தாரு. வாழையடி வாழையா வளந்த
அதுல அஞ்சு போயி இப்போ ரண்டு மட்டும் கொல்லைக்கு நடுவுல இருந்துச்சு. இன்னும் ரண்டு
மாசமோ மூணு மாசமோ கொலை தள்ளுனா தள்ளும். கொல்லைக்கு மின்னாடி விகடு ரண்டு மாதுளங்
கண்ணும், ஒரு இருவாச்சிக் கண்ணும், ஓமவல்லியும், வல்லாரையும், துளசியும் வெச்சு நல்லாவே
கெளப்பி இருந்தாம். அந்த கொல்லைய வாங்குனதிலேந்து தேங்காயிக்குப் பஞ்சமில்லே, புளிக்குப்
பஞ்சமில்லே, எலுமிச்சம் பழத்துக்குப் பஞ்சமில்லே, வாழைஇலைக்கோ, வாழைப் பழத்துக்கோ
பஞ்சமில்லே, முருங்கைக்காயி, முருங்கை கீரைக்குப் பஞ்சமில்லாம இருந்துச்சு. போத்துகள்ளல
பெரும்பாலும் கலியாண முருங்கையா இருந்ததால, மழைக்காலத்துல அடை செய்யுறதுக்கு எலை பறிக்கிறதுக்கும்
வசதியா இருந்துச்சு. அத்தோட பூவரசு ஒண்ணும் ரண்டாவது கொல்லையில வடவண்டைப் பக்கமா
இருந்துச்சு. பிள்ளையாரு சுத்தின்னா மோதகக் கொலுக்கட்டை எலை பறிக்குறதுக்கு அது வசதியா
இருந்துச்சு. மெலண்டை வேலியில இருந்த சீத்தாப்பழ மரம் இப்போ இல்லே. இப்பத்தாம் கொஞ்ச
நாளுக்கு மின்னாடி பட்டுப் போனுச்சு. என்ன காரணம்ன்னு புரியல.
இந்த வருஷத்துலத்தாம் வாழைக அஞ்சும் எப்பிடி
அழிஞ்சதுன்னு தெரியல. அழிஞ்சிடுச்சு. தென்னையில ஒம்போதுல நாலு தொவண்டாப்புல இருந்துச்சு.
வயசாயி தொவளுதா? வெயாதி வந்து தொவளுதா?ன்னு அனுமானிக்க முடியல சுப்பு வாத்தியாரால.
அதெத்தாம் விநாயகம் வாத்தியாருகிட்டெ கேக்க நெனைச்சிருந்தாரு. வெசயம் தெரிஞ்சிருந்தா
இந்நேரத்துக்குச் சுப்பு வாத்தியார்ர கெளப்பிட்டு வேப்பங்கொளத்து தென்னை ஆராய்ச்சி
நெலையத்துல நிப்பாரு விநாயகம் வாத்தியாரு. அத்தோட வாழையப் பத்தியும் கேக்கணும்ங்ற
நெனைப்பு. நேத்திக்கே கேக்கணும்னு நெனைச்சிருந்தவரு, விநாயகம் வாத்தியாரோட வயக்காட்டப்
பாத்து அசந்துப் போயி அதுல மறதியில வுட்டுப்புட்டாரு. இன்னிக்கு பொண்ணு விசயத்தோட
அதெ பத்தியும் ஒரு வார்த்தெ கேட்டுப்புடணுங்ற நெனைப்பு இருந்துச்சு. விநாயகம் வாத்தியாரு
நெஞ்சுவலின்னு சொன்னதெ கேட்டுட்டு வுட்டுப்புட்டாரு. சொல்லியிருந்தார்ன்னா ஒடனே வண்டியக்
கெளப்பிட்டு வந்து பாத்துட்டுத்தாங் மறுவேல பாப்பாரு. அதெ யோசனெ பண்ணிக்கிட்டுத்தாங்
சுப்பு வாத்தியாரு சொல்லல.
நாளைக்குதாங் வரப் போறார்ல, வர்றப்ப சொல்லக்
கூடாது, வெசயத்தப் பேசிட்டு திரும்புறப்போ கொல்லைக்கு அழைச்சிட்டுக் காட்டிப் புடணும்னு
முடிவெ பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. கொல்லையப் பாத்தப் பெறவு மனசு கொஞ்சும்
மாறுனாப்புல இருந்துச்சு. பொண்ணு கலியாண வெசயம் பத்தின நெனைப்பு வந்த ஒடனே அதெ பத்தி
யோசிக்க ஆரம்பிச்சாரு.
நாளைக்குக் காத்தால கெளம்பித் தயாரா இருந்தாவணும்,
வூட்டுல கேட்டா ஆர்குடி டிரஷரி வரைக்கும் விநாயகம் வாத்தியாரோட போறததாங் சொல்லணும்,
என்னா ஏதுன்னு முழுசா வெசாரிச்சிட்டுத்தாங் பெறவு இதெ பத்தி ஒரு முடிவா சொல்லிக்கிடணும்ன்னு
மனசுல ஒரு திட்டத்தெ வகுத்துக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
மவ்வேன் வெச்சிருந்த இருவாச்சிக் கண்ணையும்,
மாதுளங் கண்ணையும் பாத்தாரு. "வேல, புத்தகம்ன்னே இருந்துடுவாம்ன்னு நெனைச்சேம்.
பரவால்ல வெவசாயத்துக்கும் மொல்லமா வந்துடுவாம். வாரணும். வாரட்டும்!"ன்னு நெனைச்சிக்கிட்டெ
வூட்டுப்பக்கமா வந்தாரு. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல இதெ பல வெதமா யோஜனெ பண்ணிட்டுத்தாம்
வூட்டுக்குள்ள அடியெடுத்து வெச்சாரு.
அவரு வந்ததும் பவ்வு பாப்பா ஓடியாந்து
அவரு மேல ஏறிகிட்டா. "தங்கப்புள்ளே!"ன்னு அதெ தூக்கிக் கொஞ்சுனாரு. கொஞ்சிக்கிட்டெ,
"ஒஞ்ஞ அப்பன் கொல்லையில வெச்சிருக்குற செடியளா பாத்தீயளா தங்கப்புள்ளே?"ன்னாரு
பேத்திக்கிட்டெ.
"ம்ஹூக்கும்! அதாங் கொறைச்சலு. படிக்குற
புள்ளீயோ செடி கொடிகள வளத்தாத்தாம் மனசு நல்ல வெதமா வளருமாம். அதெ சொல்லி அஞ்ஞ பள்ளியோடத்துல
செடி கொடிகள வாங்கிக் கொடுத்தாவுது. அதுல எவனாச்சிம் ஒருத்தெம் தப்பித் தவறி வூட்டுப்
பக்கம் வந்து, எஞ்ஞ வாத்தியார்ரே நீஞ்ஞ வளக்குற செடி கொடிகளா காட்டுங்கன்னு சொல்லிட்டா
ன்னாத்த பண்ணுறதுன்னு முழிச்சிக்கிட்டு ரண்டு செடியக் கொண்டு போயிப் பேருக்கு கொல்லையில
வெச்சாவுது. செடி கொடியள வெச்சுப்புட்டா போதுமா? அதுக்கு தண்ணிய ஊத்துறது யத்தெதாங்.
நீஞ்ஞ வேற வெவரம் புரியாமா? வெச்சதோட செரி! அதெ ஆடிக்கொரு தடவே அமாவாசிக்கு ஒரு தடவெத்தாம்
போயிப் பாக்குறது!"ன்னா ஆயி அதெ கேட்டுக்கிட்டு.
"செரி எப்பிடியோ நெனைப்பு வந்து
செடி கொடியோள வெச்சா செரித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இப்பதாம்டி ஒம்மட மாமனாரு மொவம்
பாக்குறதுக்குச் சகிக்குது! இம்மாம் நேரம் அந்த மொவம் எந்தச் சில்லாவுக்குப் போயிருந்துச்சோ?
வூட்டுல பொண்டுகன்னு இருந்தா ரண்டு வார்த்தெ கேக்கத்தாம் செய்வாங்க! அதுக்குல்லாம்
மொகத்தத் தூக்கி வெச்சிகிட்டா?"ன்னுச்சு வெங்கு.
"யாத்தா! தாத்தவ டிஸ்டர்ப் பண்ணாதே!
பேயாம யிரு!"ன்னா பவ்வுப் பாப்பா. சுப்பு வாத்தியாருக்குச் சிரிப்பு பொத்துக்கிட்டு
வந்துடுச்சு.
"ந்நல்ல பொண்ண பெத்து வெச்சிருக்கீயேடி
ஆய்யா! கெழவனெ பாத்துப்புட்டா போதும் நம்மள கரிச்சிக் கொட்ட ஆரம்பிச்சிடுவா!"ன்னுச்சு
வெங்கு.
"இன்னும் கொஞ்ச நேரத்துக்கு மாமா
மின்னாடி மொகத்தக் காட்டாதீயே யத்தே! இன்னும் கொஞ்சம் மொகம் தெளிவாகட்டும்!"ன்னா
ஆயி.
"ம்ஹூக்கும்! இதுக்கொண்ணும் கொறைச்சலு
யில்ல! நமக்கென்னடியம்மா?"ன்னு மொகத்தச் சுளிச்சிக்கிட்டுத் திரும்பவும் கொல்லைக்குப்
போனுச்சு வெங்கு.
"யத்தே! யத்தே!"ன்னு பின்னால
ஓடுனா ஆயி.
*****
No comments:
Post a Comment