செய்யு - 508
"வாரத்துக்கு ஒது மொறை வந்தா கூட
போதும். அது கூட வாணாம், மாசத்துக்கு ஒரு மொறை வந்தாலும் போதும்!"ன்னு சுப்பு
வாத்தியார்ரப் பத்திப் பொண்டாட்டிக்கிட்டே பேசிட்டு இருந்தாரு விநாயகம் வாத்தியாரு.
அவரு எதிர்பார்க்கல, அவரு அப்பிடிப் பேசிட்டு இருக்குறப்பவே மறுநாளு சுப்பு வாத்தியாரு
வந்து வூட்டுக்கு மின்னாடி நிப்பாருன்னு.
டிவியெஸ்ஸ வெளியில நிப்பாட்டிட்டு உள்ள
வந்தவர்ர, பாத்ததுமே, "இப்பிடி நெதமும் வந்தா ரொம்ப சந்தோஷம்!"ன்னாரு விநாயகம்
வாத்தியாரு. சுப்பு வாத்தியார்ர பாத்ததும் சோபாவுல உக்காந்து பேசிட்டு இருந்த விநாயகம்
வாத்தியாரோட பொண்டாட்டி எழும்பிட்டாங்க.
"வயக்காட்டுல இருப்பீங்கன்னோ நேரா
அஞ்ஞப் போயிட்டேம்! கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் காங்கல. செரித்தாம் வூட்டுக்கு
வந்திருப்பீயோன்னு வந்துட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இந்நேரம் வாரதுக்கு ஒரு மணி நேரத்து
மின்னாடி வரைக்கும் நின்னுட்டுத்தாங் இருந்தேம். படபடன்னு வர்றாப்புல இருந்துச்சு.
ஒடம்பெ கொண்டு போயி தள்ளுறாப்புல இருந்துச்சு. செரிதாம்ன்னு வேப்பங்குச்சிய ஒடிச்சிப்
பல்ல கூட வெளக்கல. கெளம்பி வந்துட்டேம். ஒடம்புக்கு என்னவோ பண்றாப்புல இருக்கு. என்னன்னு
வெளங்கல!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"இப்பிடி கருக்கலங் காட்டியும் எழுந்திரிச்சி
வயக்காட்டுக்குப் போறத நிப்பாட்டுங்க. காலங்காத்தால வந்துப் பாக்கலன்னா வயலு ன்னா
கோவிச்சிக்கவா போவுது? ராத்திரியும் தூங்குறதுக்கு நெடுநேரம் ஆவுது. ஒடம்பு அசந்துப்
போவுமா இல்லியா? வாரத்துல ஒரு நாளு, ரண்டு நாளாச்சிம் ஒடம்ப அசர வுட்டு படுத்தாதானே
ஒடம்பு தாங்கும்? ஒடம்பா ன்னா இரும்பா? ஒடம்பப் போட்டு அன்ன பாடு படுத்திக்கிட்டு?"ன்னாங்க
விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி.
"அட ச்சும்மா கெட. கெராமத்தான் ஒடம்புக்கு
ஒண்ணும் பண்ணாது. அப்பிடியே பண்ணாலும் இழுத்துக்கிட்டுக் கெடந்துட்டுல்லாம் சாவ மாட்டேம்.
பொட்டுன்னு போயிடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"எதாச்சும் ஒண்ணு கேட்டுப்புட்டால
இப்பிடித்தாம் பதிலு வாரது. நாம்ம ஒண்ணும் பேசல!"ன்னு சமையல்கட்டுப் பக்கம் காப்பிய
வைக்கப் போயிட்டாங்க. அவுங்கப் போறதெப் பாத்துப்புட்டு சுப்பு வாத்தியாரு,
"காப்பி வாணாம். சாப்புட முடியாது!"ன்னாரு.
"பாத்தியா ராசம்! சாப்புடுற தோதோட
வந்திருக்காப்புல வாத்தியாரு! சாப்பாட்ட தயாரு பண்ணு! காப்பிய கட் பண்ணு!"ன்னுட்டாரு
விநாயகம் வாத்தியாரு.
"அதில்லீங் வாத்தியார்ரே! கெளம்புறப்பத்தாம்
வூட்டுல டீத்தண்ணிய குடிச்சிட்டுக் கெளம்புனேம். அதெ சொன்னா காலச் சாப்பாட்டுக்கு
அச்சாரம்ல போட்டுட்டீயே?"ன்னு அவுத்து வுட்டாரு சுப்பு வாத்தியாரு.
"நேத்தி என்னத்தெ சொல்லி கெளம்புனீயே?
மறுக்கா வர்றப்பா சாப்புடுறதா சொல்லிட்டுத்தான கெளம்புனீங்க! நாம்ம ஒண்ணும் தப்பா
சொல்லிப்புடலீயே? நீஞ்ஞ சொன்னீங்க! அதெ அப்பிடியே திருப்பிப் போட்டுச் சொன்னேம்.
என்ன குத்தத்த கண்டுபுட்டீயே? அதுவுமில்லாம அத்து அஞ்ஞ சமையல்கட்டுல இருந்தா நாம்ம
கொஞ்ச எதாச்சிம் பேசலாம்ன்னா பேசலாம் பாருங்க. இஞ்ஞயே பேசிக்கலாமா? வயக்காட்டுப் பக்கம்
போயிக்கலாமா?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
மனசெ அப்பிடியே கப்புன்னு பிடிச்சதுல அசந்துதாம்
போனாரு சுப்பு வாத்தியாரு. இத்தனெ வருஷப் பழக்க வழக்கத்துல தன்னைய நல்லா புரிஞ்சிக்கிட்ட
ஒரு ஆளுன்னு விநாயகம் வாத்தியார்ரப் பத்தி நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. "கப்புன்னு
பிடிச்சிட்டீங்க!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்றப்ப அவரோட கண்ணு கலங்கிட்டு.
"ஒஞ்ஞளப் பத்தி நமக்குத் தெரியாதா?
நேத்திக்கு வந்துட்டு இன்னிக்கு வர்றப்பவே புரிஞ்சிக்கிட்டேம்! இப்பிடி வர்ற ஆளு கெடையாதுல்லா!
மவ்வேம் என்னாச்சிம் மறுபடியும் ஆடுறானா? சொன்னா கேக்குற பயதாம்! வந்து ஒரு ஆட்டத்தெ
போட்டேம்ன்னா சரியாயிடுவாம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு மொல்லமா.
சுப்பு வாத்தியாரு வெளியில வர்ற வார்த்தைய
உள்ளார முழுங்குறதெ பாத்தாரு. "வயக்காட்டுக்குன்னா போயிடலாமா?"ன்னாரு விநாயகம்
வாத்தியாரு மறுக்கா மொல்லமா.
"இஞ்ஞ பேசக் கூடிய வெசயந்தாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"சித்தே இருங்க! ஏய் ராசம்! வெந்நிய
கொஞ்சம் கொண்டா! நெஞ்ச அப்பிடியே படபடன்னு வருது!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"ஒடம்புக்கு முடியலியா? இன்னொரு
நாளுக்குன்னா பேசுவமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அட நீஞ்ஞ வேற வாத்தியார்ரே! அப்டித்தாம்
நெஞ்ச பிடிச்சாப்புல இருக்கும். வெந்நியக் குடிச்சு கொஞ்சம் வேர்த்துச்சுன்னா வுட்டுப்
போயிடும்! வேல கடிசுதாங் போட்டு அலட்டிக்கிறதுதாங். சாயுங்காலமா காத்தாட ஒரு நடெ
போயிட்டு வந்தா அப்டியே ஒடம்ப பிடிச்சி விட்டாப்புல சரிபட்டு வந்துடும்."ன்னாரு
விநாயகம் வாத்தியாரு.
விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி வெந்நித்
தண்ணியப் போட்டு ரண்டு தம்பளர்ல ஆத்துனபடியே கொண்டாந்து கொடுத்தாங்க. அதெ அவரு
கையில வாங்குன தொனியிலயே புரிஞ்சிக்கிட்டவங்க போல சட்டுன்னு உள்ளாரப் போயிட்டாங்க.
எதாச்சும் முக்கியமான விசயம் பேசுறப்போ விநாயகம் வாத்தியாரு முகம் எப்பிடி இருக்குங்றது
அறிஞ்சவங்க.
"அவுங்களும் கூட இருக்கலாம்! கேக்குறதுல
தப்பு ஒண்ணும் இல்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நாம்ம கலந்துகிட்டு சொல்லிக்கிடலாம்!"ன்னு
வெந்நிய குடிச்சிக்கிட்டெ கண்ண அடிச்சாரு விநாயகம் வாத்தியாரு. நெஞ்ச பிடிச்சி லேசா
நீவி விட்டுக்கிட்டாரு. மீசைய ரண்டு பக்கமுமா அதயும் சேர்த்து நீவி விட்டுக்கிட்டாரு.
"நேத்திக்கு நாம்ம இஞ்ஞ வந்த நேரத்துக்கு
வெடிக்கடெ முருகு இருக்கார்ல அவரோட மவ்வேம் சித்துவீரன் வந்திருப்பாம் போலருக்கு!
வந்தவம் வூட்டுல இனுமே மாப்புளப் பாக்குற வேலய நிப்பாட்டிப் புடுங்க. மச்சாம் பாலாமணிதத்தாம்
மாப்புளேன்னு சொல்லிருப்பாம் போலருக்கு!"ன்னு சொல்லி நிப்பாட்டுனாரு சுப்பு
வாத்தியாரு.
"அட பாருங்களேம்! நல்லதாப் போச்சு.
அவுங்களே வந்துப்புட்டாங்கன்னா, அவுங்களாவே வந்துக் கேட்டதாதான்னே அர்த்தம். பெறவென்னா
சோலி முடிஞ்சாச்சு. பொண்ண வந்து பேருக்கு பாக்கச் சொல்லுவேம். நாமளும் மாப்புள்ளையப்
போயி பேருக்குப் பாப்பேம். பெறவு நெதானிச்சிக்கிட்டு நமக்குள்ள யோஜனெ கலந்துகிட்டு
மூர்த்தோலைய வெச்சி கலியாணத்த முடிப்பேம்! இதுக்குதாங் என்னவோ ஏது போல படபடப்பா
வந்து எறங்குனீயளா? நமக்கு ஒஞ்ஞ மொகத்தப் பாத்ததுமே குப்புன்னு ஆயிடுச்சு. லேசா வலிச்சிட்டு
இருந்த நெஞ்சுவலி அதிகமாப் போயிடுச்சு, இப்பிடி வாராத மாமணி வந்து நிக்குதேன்னு! இப்பத்தாம்
வலி கொறைஞ்சிருக்குப் பாருங்க!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
சுப்பு வாத்தியாரு விநாயகம் வாத்தியாரு
அவ்வளவு சொல்லியும் தயக்கமா உக்காந்திருந்தாரு.
"நாம்ம எதாச்சிம் தப்பா சொல்லிட்டோமோ?
வார்த்தெ வார மாட்டேங்குதே?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"வூட்டுல போட்டு நச்சரிக்குது. போயி
வெடிக்கடெ முருகப் பாரு, லாலு வாத்தியார்ரப் பாருன்னு. கொஞ்சம் நெதானிக்கணும் போல
மனசுக்குத் தோணுச்சு. அதாங் யோஜனையில அப்பிடியே உக்காந்துட்டேம். சாயுங்காலமா அஞ்ஞ
முருகு வூட்டுக்காவது போவேம்ன்னு நெனைச்சிருக்கும் போலருக்கு வூட்டுல. நாம்ம ராத்திரி
படுக்கையிலயும் கொஞ்சம் யோஜிப்பேம், ஒடனடியா போயா கேக்கணும்னு நெனைப்பு. அத்தோட
ஒஞ்ஞளயும் கலந்துக்கிடணும்னு நெனைச்சேம். வெசாரிக்கிறது வெசாரிக்கிறேம். ஒரு நல்ல நாளா
பாத்துக்கிடணும்ன்னு அத்து ஒரு யோஜனெ. அதுக்குள்ள வூட்டுல அவ்சரப்பட்டு பொண்ணு கலியாணத்தெ
நாம்மத்தாம் முடிக்காம இருக்கேம், போட்டு இழுத்து அடிக்கிறேம், இப்பிடில்லாம் இருந்தா
என்னத்தெ குடும்பத்தெ பண்ணுறதுன்னு ரா முழுக்க அழுகாச்சியாப் போயி நமக்கு ராத் தூக்கமே
யில்லாமப் போச்சு. அதாங் எப்படா பொழுது விடியும்ன்னு நெனைச்சிட்டுப் படுத்திருந்தேம்.
ராத்தூக்கம் சட்டுன்னு வாரததால என்னவோ எழுந்தப்போ ஏழு மணிக்கு மேல ஆயிடுச்சு. சட்டுன்னு
பல்ல வெளக்கி வாயக் கொப்புளிச்ச நாம்மத்தாம் டீத்தண்ணி கூட குடிக்கல. கெளம்பிட்டேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஒண்ணும் வெசனப்படுற மாதிரிக்கி வெசயம்
இல்லீயே? தேவையில்லாம மனசுல போட்டு அலட்டிக்கிறாப்புல படுது! நாமன்னா இன்னிக்குச்
சாயுங்காலமா அவரு வெடிக்கடெகாரர்ட்ட பேசுவோமா? பேசிட்டு அப்பிடியே தஞ்சாரூப் போயி
லாலு வாத்தியார்ரயும் பாத்துப் பேசுவேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"இன்னிக்கு வாணாம்! நாளைக்குச் சாயுங்காலமா
பேசிப் பாப்பமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"செவ்வாயி வெறுவாயின்னு நெனைக்குதீயளோ?
இருக்கட்டும் இருக்கட்டும் நாளைக்கே சாயுங்காலம் ன்னா? காலையிலப் பாத்துப் பேசிப்புட்டு
அப்பிடியே ஆர்குடி வரைக்கும் நம்மட வண்டியிலயே போயி தஞ்சாரூக்கு ஒரு எட்ட வெச்சு லாலு
வாத்தியார்ட்டயும் கலந்துகிட்டு வந்துப்புடுவேம்! போதும்ல?"ன்னு சொல்லிட்டுச்
சிரிச்சாரு விநாயகம் வாத்தியாரு.
"அத்து வந்து..."ன்னு இழுத்த
சுப்பு வாத்தியாரு, சொல்ல வேண்டாம்ன்னு நெனைச்சி நிப்பாட்டிக்கிட்டாரு.
"நமக்கொண்ணும் அலைச்சல் இல்ல. நாளைக்கு
லாலு வாத்தியாரு வரைக்கும் போயி பாத்துப்புடுறேம்! லாலு வாத்தியார்ர நாளைக்கு ஒஞ்ஞளப்
பாக்க வைக்கிறேம். அத்து நம்ம பொறுப்பு. இதெ இன்னியத் தேதியப் போட்டு காலண்டர்ல எழுதி
வெச்சுக்குங்க. இந்த விநாயகம் வாத்தியாரு வாக்கு கொடுக்குறதில்லே. கொடுத்தா அதெ செஞ்சு
காட்டாம வுடுறதில்ல. போதும்ல வாத்தியார்ரே!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
"அதுக்கு மின்னாடி நாம்ம கொஞ்சம்
கலந்துக்கிட்டா..."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"கலந்துக்காமலா? போயி ரண்டு பேத்தையும்
பாத்து பேசுவேம். பேசிட்டா நமக்கு செல விசயங்கப் புரிஞ்சிப்புடும்லா! பெறவு வந்து அவுங்க
என்ன நெனைப்புல இருக்காங்றதெ நாம்ம புட்டு புட்டு வைக்கிறேம் பாருங்க!"ன்னாரு
விநாயகம் வாத்தியாரு.
"முக்கியமான பேச்சு நடக்குறாப்புல
இருக்கு. அந்தப் பக்கம் வாரலாமா? சாப்பாடு தயாரு!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட
பொண்டாட்டி.
"பாத்தீங்களா பொண்டுக எப்பிடி கப்புன்னு
நெலமெயப் பிடிச்சிக்கிறாங்க. அவுங்க அப்பிடித்தாம்! நாம்ம லாலு வாத்தியார்ர பாத்துட்டு
வந்துச் சொல்லிக்கிடலாம்!"ன்னு சிரிச்சாரு விநாயகம் வாத்தியாரு.
மிளகுப் பொங்கலும், இட்டிலிக்குக் கெட்டிச்
சட்டினியும், கடப்பா சாம்பாருமா ஓட்டல் சாப்பாட்டப் போல அங்க வயிறு முட்ட சாப்புட்டுக்
கெளம்ப தயாரானாரு சுப்பு வாத்தியாரு.
"நாளைக்குக் காத்தால சாப்புட்டுப்புட்டு
தயாரா இருங்க. ஒம்போது மணிக்குல்லாம் டாண்ணு வந்து நிப்பேம்!"ன்னாரு விநாயகம்
வாத்தியாரு. அதெ அவரோட பொண்டாட்டியும் கேட்டுக்கிட்டுத்தாங் இருந்தாங்க. எங்கப் போறீங்க
என்ன ஏதுன்னு எதுவும் கேக்கல. சுப்பு வாத்தியார்ர மட்டும் பாத்து, "அடிக்கடி வந்துட்டுப்
போங்க! நீஞ்ஞ வந்தாத்தாம் மொகத்துல சிரிப்பாணியப் பாக்க முடியுது. இல்லன்னா பட்சணத்தெ
பாக்குறப்போ மட்டுந்தாம் மொகத்துல சிரிப்பாணியப் பாக்க முடியுது!"ன்னாங்க விநாயகம்
வாத்தியாரோட பொண்டாட்டி.
*****
No comments:
Post a Comment