16 Jul 2020

ரசனையான வீடும், ரசனையான சாப்பாடும்!

செய்யு - 507

            சுப்பு வாத்தியாரு விநாயகம் வாத்தியாரு வூட்டுக்குள்ள நொழைஞ்சதுமே ஜன்னல்ல போட்டிருந்த கம்பியிலத்தாம் பார்வைய ஓட்டுனாரு. அதுல எந்த வெதமான கிரில் டிசைனும் இல்லாம கம்பி கம்பியா மேலேயிருந்து கீழே சொருகி இருந்துச்சு. கம்பிக்கெல்லாம் மஞ்சள் வர்ணம் அடிச்சிருந்துச்சு. அந்தக் கம்பியில மேல கைய வெச்சு கீழ வரைக்கும் ஒரு இழுப்பு இழுத்தாரு சுப்பு வாத்தியாரு. அவருக்கு அப்பிடியே புல்லரிச்சாப்புல இருந்துச்சு. அவரோட நெனைப்புல்லாம் அப்படியே பின்னோக்கிப் போனுச்சு. சொல்லுற யோசனையே கேட்டு அப்பிடியே அட்சரம் பெசகமா செஞ்சி வெச்சதெ பாக்குறப்போ பழைய ஞாபவங்களோட தாக்குதல சமாளிக்க முடியாது.
            விநாயகம் வாத்தியாரு ரிட்டையர்டு ஆயி ரண்டு வேலையப் பண்ணாரு. ஒண்ணு வயல சீர்திருத்தம் பண்ணது. இன்னொண்ணு அதுக்கு மின்னாடியே பழைமையா இருந்த ஓட்டு வூட்ட தாட்டி வுட்டுப்புட்டு, மாடி வூட்டக் கட்டுனது. வூட்டக் கட்டுன ஒவ்வொரு நெலையிலயும் அதுக்குச் சுப்பு வாத்தியாரோட யோசனைத்தாம். விநாயகம் வாத்தியாரு புதுசா கட்டுறது மாடி வூடா இருந்தாலும் அது பழைமைக்குப் பழைமையா இருக்கணும்ன்னு நெனைச்சாரு. அதுக்குச் சுப்பு வாத்தியாருதாங் தோது பட்டு வருவார்ன்னு அவருகிட்டெ யோசனெ கேட்டுக்கிட்டாரு. ஜன்னல் செய்யுறப்போ சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "கிரில் வேண்டாம்!"ன்னு.
            "கிரில் இல்லாம சன்னல் அழகா இருக்காதே!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "இன்னிக்குப் புதுசா இருக்குற கிரில் டிசைன் நாளைக்குப் பழசா போயிடும். காலத்துக்கும் பழமைக்குப் பழமையா, புதுமைக்குப் புதுமையா இருக்குறது கம்பிங்கத்தாம். கம்பி போடுறதுல இருக்குற பலம் கிரில் போடுறதுல இருக்காது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "எப்பிடிச் சொல்லுதீங்க?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு ஆச்சரியம் வெலகாம.
            "சன்னல்ல கம்பிப் போட்டு செய்யுறதுங்றது அந்தக் காலத்து வேல. இப்பதானே கிரில்ல்லாம். கிரில் கூட சமயத்துல பொறிஞ்சிப் போவும். கம்பியில அந்த வேல இருக்காது. போடுற கம்பிகள குறுக்குவாட்டுல போடுறதெ வுட நெடுக்கு வாட்டுல போட்டாக்கா இன்னும் செளரியந்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இன்னுங் கொஞ்சம் புரியுறாப்புல சொல்லுங்க! அது ஏம் நெடுக்குவாட்டுல?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "கம்பி குறுக்குவாட்டுல இருக்குறப்போ மேல தூசி படியும். நெடுக்குவாட்டுல இருக்குறப்போ அதுவும் படியாது. கிரில்ன்னா அதோட டிசைனுக்குள்ள துணியை வுட்டு மாசத்துக்கு ஒரு தவா அதெ தொடைச்சி ஆவணும். கம்பியில அதுவும் நெடுக்குவாட்டுக் கம்பியில அந்தப் பெரச்சனையே யில்ல. தொடைக்காம வுட்டாலும் பெரச்சனெ இருக்காது. தொடைக்கணும்னு நெனைச்சாலும் துணிய கம்பிக்கு மேல வெச்சு கீழே ஒரு இழுப்புதாம். ரொம்ப சுலுவா சித்தெ நேரத்துல வேல முடிஞ்சிடும். பெயிண்ட்டு வைக்குறதுன்னாலும் கிரிலுக்கு ஆவுற நேரம் கம்பிக்கு ஆவாது. பெயிண்டும் ரொம்ப சிலவு ஆவாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            விநாயகம் வாத்தியாரு சுப்பு வாத்தியாரு சொன்னதெ பிடிச்சிக்கிட்டாரு. வூடு முழுக்க இருந்த அத்தனெ சன்னல்களையும் கம்பிகள வெச்சே போட்டாரு. அதுல அவருக்கு செலவு மிச்சப்பட்டதோட வேலையும் சுலுவா முடிஞ்சிது. வூட்டுக்கு டைல்ஸோ சலவைக்கல்லோ போடலாமான்னு கேட்டப்போ அதுவும் வேணாம்ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு. சிமெண்டப் போட்டு செவப்புக் காவிய அடிச்சி வுடுங்கன்னாரு. அதெயும் பிடிச்சிக்கிட்டாரு விநாயகம் வாத்தியாரு. நடுக்கூடத்துல கால வெச்சப்போ செவப்புக் காவியோட நெறம் அப்பிடியே காலு வழியா மேலேறி ஒடம்புக்குள்ள போறாப்புல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. கூடத்துல சோபா செட்டுச் செஞ்சிப் போட்டிருந்தாரு விநாயகம் வாத்தியாரு. அதுவும் மரத்துல செஞ்சி உக்கார்ர எடத்துக்கும், சாயுற எடத்துக்கும் இலவம் பஞ்சுல சதுரிச்சித் தைச்சுப் அதுக்கு மேல உறையப் போட்டுருந்தாரு.
            "வூட்ட இன்னிக்குப் பாக்குறாப்புலல்லா ரசிச்சுப் பாத்தாவுது!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு. அப்பத்தாம் சுப்பு வாத்தியாரு பழைய நெனைவ வுட்டுத் திரும்புனாரு.
            "நாம்ம அன்னிக்குப் பேசுன ஒவ்வொண்ணும் இன்னிக்குப் பேசுனாப்புல இருக்குது வாத்தியார்ரே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "லாப்ட்லாம் கூட ஒஞ்ஞ யோசனைப்படியே அடைச்சிக் கதவெ போட்டு சாமாஞ் செட்டுகள அதுக்குள்ள போட்டு மூடி வூடே எந்த வெதமான அடைசல் இல்லாம இருக்குப் பாருங்க!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            அவுங்க ரண்டு பேரும் பேசிட்டு இருக்குறப்பவே, விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி ரண்டு தட்டுல காரசேவோடயும், காப்பி தம்பளரோடயும் வந்துட்டாங்க. காப்பியோட வாசம் வீடு முழுக்க வீசுனுச்சு. அவரோட பொண்டாட்டிக்கு வூட்டுக்குள்ள ஒருத்தரு காலடி எடுத்து வைக்குற சத்தத்தெ சமையல்கட்டுல இருக்குறப்பவே கண்டுபிடிச்சி, காப்பியோட வந்து நிக்குற கொணம். வூட்டுல காலடி எடுத்து வெச்சவங்க நடுக்கூடத்துல வந்து உக்காந்து ரண்டு வார்த்தெ பேசிட்டு இருக்குறதுக்குள்ள அவுங்க காப்பியோட வந்துடுவாங்க.
            கறந்த பால்ல போடுற காப்பித் தண்ணிக்கு தனி ருசி வந்துடுது. அதெ குடிக்குற சுகமே சுகந்தாம். அந்தச் சுகத்த அனுபவிக்கனும்னா விநாயகம் வாத்தியாரு வீட்டுக்குப் போனாத்தாம் ஆவும். அந்தக் காப்பியே குடிச்சாலே நாளு முழுக்க பசி போன எடம் தெரியாம பறந்து போயிடும். கள்ளிப் பால்ல போட்டாப்புல அப்பிடி ஒரு திக்கு. அந்தக் காப்பி கசப்பா இனிப்பான்னு கண்டுபிடிக்க முடியாத கலவையில அதெ சாப்புட்டு முடிச்சா போதையில ஒரு தூக்கு தூக்குறாப்புலத்தாம் இருக்கும். அந்தக் காப்பிய குடிச்சிட்டே சோறு தண்ணி யில்லாம ஆயுசையும் ஓட்டிப்புடலாம்ன்னு ஒரு நெனைப்பு வந்துப்புடும்.
            காரச்சேவுல கொஞ்சத்த எடுத்து வாயில போட்டுக்கிட்டு காபிய ஒரு வாயி வாயில ஊத்திக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. காப்பி காரச்சேவோட கலந்து அதெ சாப்புடுறது தனி ருசியா இருந்துச்சு. "காராச்சேவு அருமையா இருக்கே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒஞ்ஞ வாத்தியாருக்கு என்ன வேலங்றீயே? நெதமும் வேல பாக்குற ஆளுங்களுக்கு நாளுக்கொண்ணா பட்சணம் செஞ்சுப் போட்டாவணும்! எத்தனெ நாளுதாம் வடெ, போண்டா, சுழியம்ன்னு போடுவேன்னு சொல்லிட்டு காராச்சேவ போட வெச்சிட்டாங்க. நேத்திப் போட்டது. வூட்டுல ஆளுங்க வேல செய்யுதே, நமக்கு வேல சோலி கொறையும்ன்னு பாத்தா அந்த ஆளுங்களுக்கு இப்பிடி வேல பாக்குறதே நமக்கு பெரு வேலையா ஆயிப் போயிடுது. பதினோரு மணியான்னா டீயும் பட்சணுமும், மத்தியானம் ஆனா சாப்பாடு, மூணரை நாலு மணியான்னா திரும்ப டீயும் பட்சணம்ன்னு இத்து வூடா? கெளப்புக் கடையா?ன்னு நமக்கே சமயத்துல சந்தேகமாப் போயிடுது. இவுங்க வெள்ளாம செஞ்சிக் கிழிக்கிறதுக்கு ஒரு கெளப்புக் கடைய வெச்சா அதெ தாண்டி சம்பாதிக்கலாம்!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரு பொண்டாட்டி.

            சாப்பாட்டு விசயத்துல ரொம்ப ரசனையான ஆளு விநாயகம் வாத்தியாரு. வூட்டுலயும், வயக்காட்டுலயும் எந்நேரத்துக்கும் ஆளுங்க வேலை செஞ்சிட்டு இருக்குறதால டீத் தண்ணிக்கும் பட்சணத்துக்கும் எப்பவும் பஞ்சம் இருக்காது அவரோட வூட்டுல. வேலை செய்யுற ஆளுங்க அங்க சாப்புடுற மாதிரிக்கி வேற எங்கயும் சாப்புட முடியாது. அதுக்கே ஆளுங்க அலை மோதிக்கிட்டுச் சாப்புட வரும்ங்க. தெனமும் குடிக்குறதுல டீத்தண்ணிதாம் மாறாம இருக்குமே தவுர, பட்சணம் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொண்ணா இருக்கும். ஒரு நாளைக்கு உளுத்தம் வடைன்னா, மறுநாளு சுழியமோ, அதுக்கடுத்த நாளு போண்டாவோன்னு மாறி மாறித்தாம் இருக்கும். அப்பிடி மாறித்தாம் இருந்தாவணும். விநாயகம் வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணு செய்யணும். அதெ கடையிலயும் வாங்கிக் கொடுத்துடப் படாது. வூட்டுல செஞ்சித்தாம் கொடுத்தாவணும். அதெ வுட வூட்டுல இருக்குற பொண்டுகளுக்கு வேற என்ன வேலன்னு பேசுற ஆளு அவரு. ஒரு நாளைக்கு ஒடம்பு முடியல, கடையில வாங்கிக் கொடுங்கன்னு சொன்னா கோவம் வந்துப்புடும் விநாயகம் வாத்தியாருக்கு.
            சுப்பு வாத்தியாரு காரச்சேவையும் காப்பியையும் குடிச்சி முடிச்சதும், "நீஞ்ஞளும் கொஞ்சம் வேலையக் கொறைச்சிக்கிடலாம். வூட்டுலயும் கொஞ்சம் வேலையைக் கொறைச்சி வுடலாம்!"ன்னாரு.
            "வேலையைக் கொறைச்சி என்னத்துக்கு ஆவப் போவுதுங்குதீயே? இந்த வேலைத்தாம் நம்மளோட அடையாளம். இந்த வேலை இருக்குற வரைக்குந்தாம் நாம்ம இருக்குறேம். வேலையில்லன்னா மனுஷன் செத்துப் போன பொணந்தாம். இந்த அளவுக்கு வேலையப் பாக்குற அளவுக்கு நல்ல கதி இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கிடுறேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "நமக்கென்னவோ வேலைக்காக வேல மாதிரிக்கித் தெரியல. ஒரு நாளு வுடாம எதாச்சிம் வெத வெதமா செஞ்சிச் சாப்புடணுங்றதுக்காவே ஆளுகள யிப்படி வேலை செய்யுறதுக்கு வுடுறாங்க ஒஞ்ஞ வாத்தியாரு! முடியலீங்க நம்மாள! இடுப்பு ஒடைஞ்சிப் போவுது!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி.
            "அதாங் கடெ கண்ணிக வந்துடுச்சு. டீயும் வடையும் தாரளமா கெடைக்குதே. காலத்துக்குத் தகுந்தாப்புல மாறிடுறதுல ஒண்ணும் தப்புல்லத்தாம். அவுங்களுக்கும் வேல சொமை கொஞ்ச கொறைஞ்சாப்புல இருக்கும்லா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெல்லாம் மொறைய மாத்த முடியாது வாத்தியார்ரே! ஒஞ்ஞகிட்டெ நமக்குப் பிடிச்சதே அந்த பழமைத்தாம். அதெ நீஞ்ஞளே மாத்தச் சொன்னா எப்பிடி?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதெல்லாம் இல்லீங்க வாத்தியார்ரே! இவங்களுக்கு ஆளுகளுக்குச் செஞ்சி போடுறதுக்காக எல்லாம் அப்பிடிச் செய்யச் சொல்லல. அந்த வேலைய எல்லாம் இவுங்களுக்காகப் பண்ணச் சொல்றதுதாங். ஆளுங்கங்றது ஒரு சாக்கு. இவுங்க சாப்புடறதெப் பாத்தா நமக்கே பயமா இருக்கு சமயத்துல. வடை, பொண்டான்னா ஒண்ணு ரண்டு சாப்புடலாம். சுட்டுப் போட்டா சூடா எடுத்து ஆளுகளுக்குப் போறதுக்கு மின்னாடி, அடுப்புக்குப் பக்கத்துலயே உக்காந்துகிட்டு ஏழெட்டு வடெ உள்ளாரப் போயிடுது. ஆளுகளுக்குக் கொண்டு போயிக் கொடுத்துப்புட்டு, அதுக்குப் பெறவு நாலஞ்சு உள்ளாரப் போவுது. நேத்திப் போட்ட காரச்சேவுல போடுறப்போ ‍அரைக்கிலோ உள்ளாரப் போயிருக்கும். பெறவு இந்தப் பக்கம் வர்றப்போ, அந்தப் பக்கம் போறப்போ அது பாட்டுக்கு எம்மாம் உள்ளப் போச்சுதுங்றதுக்கு கணக்கே யில்ல. இப்பிடி எண்ணெய்ல பொரிச்சதெ இந்த வயசுக்க மேல சாப்புட்டா என்னத்துக்கு ஆவுறதுன்னு அது வேற தெரியல. அதுக்காகவே வூட்டுல இனுமே பட்சணத்தெ போடுறதெ நிப்பாட்டிப்புடலாமான்னு பாக்குறேம். அரை மணி நேரத்துக்கு ஒரு தவா வூட்டுல இருந்தா காப்பி உள்ளார போயிட்டே இருக்குது. ஒடம்புல ரத்தம் ஓடுதா? காப்பி ஒடுதா?ன்னு ஒஞ்ஞ வாத்தியார்ர நீஞ்ஞத்தாம் கேக்கணும்! ஒடம்பையும் பாத்துக்கிடணும்ல!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி.
            "அதெல்லாம் ஒண்ணும் ஆவாது ஒடம்புக்கு. வேல அந்த அளவுக்குப் பாக்குறேம்? நாலு ஆளு வேலய ஒத்த ஆளா பாத்தா, நாலு ஆளு சாப்புடுற பட்சணந்தாம் உள்ளாரப் போவும்! அதெ வுடு! மணி ஒம்போதுக்கு மேல ஆவுது. சாப்பாட்டா தயாரு பண்ணா வாத்தியாரு சாப்புடுவாப்புல!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "சாப்பாடுல்லாம் தயாராத்தாம் இருக்கு. கைய அலம்பிட்டு வந்தீங்கன்னா சாப்புடலாம்! நீஞ்ஞ பலவாரம் திங்குறதுல கொஞ்சம் வாயைக் கட்டுங்க!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி.
            "இனுமே சாவப் போற வயசுல வாயைக் கட்டி, வயித்தக் கட்டி என்னத்தெ ஆவப் போவுது வாத்தியார்ரே! அதெ புரியுறாப்புல எடுத்து இவளுக்குச் சொல்லுங்க! மனுஷன் இருக்குற வரைக்கும் நல்லா சாப்புடணும். அதுலயும் இந்த வயசுல இப்பிடிச் சாப்புடுறாப்புல ஒடம்பு கொடுத்திருக்காம் ஆண்டவேம். இத்தெல்லாம் யாருக்குக் கெடைக்கும்? ஒடம்புல சுகரு கெடையாது, பிரஷர் கெடையாது, கொலஸ்ட்ரால் கெடையாது, ஒரு மண்ணும் கெடையாது. மண்ணு திங்கப் போற ஒடம்பு, மண்ணு திங்குறதுக்கு மின்னாடி இந்த ஒடம்பு கண்டத்தையும் தின்னுப் பாத்துப்புடணும். நாளைக்கே சாவு வந்தாலும் தயாராத்தாம் இருக்கேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "மவனுக்கு இன்னும் கலியாணம் ஆவல. பேசுறப் பேச்சப் பாருங்க வாத்தியார்ரே! ஒரு மருமவ வந்து அவ்வே கையால மொத்துப் பட்டாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட போண்டாட்டி.
            "அவ்வேந்தாம் ஒங் கொழுந்தன்களோட சென்னைப் பட்டணத்துல போயிக் கெடக்குறானே! கலியாணம் ஆனாக்கா கட்டுன பொண்டாட்டியோட அஞ்ஞ அடிச்சி வுட்டுப்புட்டு இஞ்ஞ ஒம் கையால சாப்புட வேண்டியதுதாங்! நீயி மொதல்ல இப்போ சாப்பாட்ட எடுத்து வைக்குற வேலையப் பாரு! வாத்தியாரு எம்மா நேரம் பசியோட உக்காந்திருப்பாரு?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "இப்பத்தானே காப்பியும் காராச்சேவும் ஆனுச்சு. ஒடனே சாப்புட முடியாது. வந்தும் நேரமாச்சு. கெளம்புறேம். அவ்வே வூட்டுல பேத்தியா கெளம்பிட்டான்னா தேடுவா! அழுது அடம் பண்ணிப் புடுவா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்போ கொஞ்சம் உக்காந்துச் சாப்புட்டுப் போங்க! வூட்டுக்கு வந்து சாப்புடாம போனா எப்பிடி?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஒரு நாளைக்கு பேத்தியாளையும், ஒஞ்ஞ வூட்டுலயும் அழைச்சாந்து கொண்டாந்து தங்குங்களேம்! நமக்கும் இஞ்ஞ வூட்டுல பொழுது போவும்ல!"ன்னாங்க விநாயகம் வாத்தியாரோட பொண்டாட்டி.
            "வாரணும்ன்னுதாம் நெனைக்குறது. வேலப்பாடு அப்பிடி. பாக்கலாம். இன்னொரு நாளுக்கு வந்துச் சாப்புட்டுப்புட்டுப் போறேம்!"ன்னு சுப்பு வாத்தியாரு எழுந்திரிச்சிட்டாரு. அதுக்கு மேல செரின்னு விநாயகம் வாத்தியாரும் வுட்டுப்புட்டாரு. இன்னொரு நாளு வாரேன்னு சுப்பு வாத்தியாரு சொல்லிக் கெளம்புன நாளு மறுநாளே வரும்ன்னு அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...