15 Jul 2020

வயக்காட்டு சேதிகள்!

செய்யு - 506

            விநாயகம் வாத்தியாரு மாவுக்கு இருவது மூட்டெ காணும்னு சொன்னது சரித்தாம். வெளைச்சல் சவட்டி எடுத்திருந்துச்சு. இப்படி மணி மணியா கதிர்ரப் பாக்குறது அதிசயமாத்தாம் இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. மொத முறையா நாலு எடத்துல போர்ர குத்தி கோடை வெவசாயத்தப் பண்ணிருந்தாரு விநாயகம் வாத்தியாரு. சுத்துப்பட்டுல போரு இருக்குறவங்க பருத்தி போட்டப்போ இவரு மட்டுந்தாம் நெல்லப் போட்டிருந்தாரு. அதெ கேட்டாக்கா, "ஆலைக்குக் கொடுக்குறதெ வுட மனுஷனோட வயித்துக் கொடுப்புறாப்புல பண்ணுறதுதாங் சரியான வெவசாயம்!"ம்பாரு விநாயகம் வாத்தியாரு. இந்த அதிசயத்தெ காட்டத்தாம் சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு நாலைஞ்சு தடவே வந்து பாக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு. ஒரு மாத்தமா இருக்கணுங்றதுக்காக உளுந்துப் பயிறெ கூட இந்த வருஷத்துல வயல்ல போடாம, ரோட்டு மேல மட்டும் போட்டுக்கிட்டு, வயலு முழுக்க நரிப்பயிற போட்டு மடக்கி உழுதுப்புட்டு இந்த வேலையப் பண்ணிருந்தாரு.
            "ன்னா வாத்தியார்ரே! இப்பிடி அசந்துப் போயி பாக்குதீயளே? நீஞ்ஞ அஞ்ஞ இஞ்ஞன்னு எதுக்கு நெலத்த வாங்கிட்டு? தம்பியோள்ட்ட சொல்றேம்! இஞ்ஞயே பக்கத்துலயே நெலத்த வாங்கிப்புடுவேம் ஒஞ்ஞளுக்கு. காசிய மெதுவா நீஞ்ஞ கெடைக்கறப்போ தம்பியோள்ட்ட கொடுங்க பாத்துக்கிடலாம்! இப்போ நெலங்களும் கொஞ்சம் வெலைக்கு வாரது! அஞ்ஞ ஒஞ்ஞளுக்கும் ரண்டு போர்ர குத்திப்புட்டா முப்போகம் வெவசாயம் பண்ணலாம் பாருங்க!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு. அவருக்கு மனசுல இதுக்கு மேல நெலபுலன்ங்கள வாங்கிச் சமாளிக்க முடியாதுங்ற எண்ணம் உண்டாயிருந்துச்சு. அதால தெரிஞ்சவங்களா பாத்து பக்கத்துல நெலபுலத்த வாங்கிக் கொடுத்தா அவுங்கிட்டேயிருந்து வெளையுறத வாங்கி வித்துக் கொடுக்கலாங்ற நெனைப்புல விநாயகம் வாத்தியாரு அதெ சொன்னாரு.
            "ஒஞ்ஞ தேவைக்கு இப்போ நெலம் இன்னும் நெறைய வேணும். சுத்தி நெறைய வாங்கிப் போட்டு நல்ல வெதமா அரிசியத் தயாரு பண்ணிக் கொடுங்க! நமக்கு இருக்குறதெ பாத்துக்கிட்டா போதும்ன்னு இருக்கு. ஒஞ்ஞளுக்கு இருக்குறது போல ஊருல தொணையா ஒரு தம்பின்னும், பணத்துக்குத் தொணையா பட்டணத்துல நெறைய தம்பின்னும் நமக்கு இல்ல. இருக்குறதெ வெச்சிட்டுப் பாத்துட்டு இருந்தாவே போதும்ன்னு இருக்கு. அஞ்ஞ இஞ்ஞ இருக்குற நெலத்த ஒரு எடமா கொண்டாந்து ஒரு பத்து மா நெலம் இருந்தா போதும்ன்னு நெனைக்கிறேம். பாக்கலாம் பொண்ணு கலியாணம் முடியட்டும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தப் பயலுவோ வேற ச்சும்மா இருக்க மாட்டேனுங்றானுவோ. அஞ்ஞ சென்னையில அரிசிக்கடை ஆரம்பிக்கணும், நெறைய நெலத்த வாங்கிப் போடுங்றானுவோ. பாக்கணுமில்லே. அதெ நெனைக்க மாட்டேங்றானுவோ. பாக்குறதுன்னா நமக்கு நறுவிசா நல்ல வெதமா பாத்தாவணும். ஏப்ப சாப்பயா வெச்சிட்டுப் பாக்குறது நமக்குப் பிடிக்காது. இஞ்ஞ கருக்கல்ல அஞ்சரைக்கு வந்தாத்தாம் வாத்தியார்ரே வூட்டுக்கு எட்டு மணிக்காவது திரும்ப முடியுது. அதாங் சொல்லிட்டேம். நீஞ்ஞ சாப்புடுற அரிசியோட நிறுத்திக்குங்க. ஆளாளுக்கு வெளைவிச்சிக் கொடுத்து நம்மால அலமலந்து போவ முடியாதுன்னு. சமயத்துல இதுக்கே நமக்கு மனசுக்குள்ள இறுக்கம் தாங்க முடியல வாத்தியார்ரே! ஆன்னாலும் இப்பிடிப் போறதா, அப்பிடி போறதான்னு ஒரு கொழப்பம் மட்டும் விட்ட பாடில்ல. செருமத்தோட செருமமா இன்னும் நாலஞ்சு மூட்டைகளக் கூடுதலா போட்டு அவிச்சிக் கொடுத்துட்டுத்தாங் இருக்கேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஒவ்வொண்ணுத்துக்கும் ஆளுகள வெச்சிப் பாக்குற நீஞ்ஞளே இப்பிடிச் சொன்னா, நம்ம கெதிய ன்னா கணக்குல்ல சேக்குறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அந்தக் கதெய வேற கேளுங்க வாத்தியார்ரே! ஆளுங்க வேலையில திருப்தி இல்லன்னா நாமளே எறங்கிப்புடுறது. இந்த வருஷத்துல நாமளே மூட்டைகள தூக்கி அடிக்கியிருக்கிறேம். ஐநூத்து இருவத்து ரண்டு மூட்டையில நூத்து அம்பது மூட்டைகள யேவாரிக்குப் போட்டா, நூத்து மூட்டைக்கு மேல தெரிஞ்சவங்க கொண்டவங்க வாங்கிட்டுப் போயிட்டாங்க. அது போவ நாமளே எரநூத்து சொச்சம் மூட்டையில நூத்து சொச்சம் மூட்டையத்  தூக்கி சார்ப்புல அடிக்கியிருப்பேம். மூட்டெ தூக்க ஆளுங்க அசந்துப் போயி நிக்கானுவோ. ஆன்னா பாருங்க மறுநாளே மூச்சப் பிடிச்சிக்கிடுச்சு. முடிய மாட்டேங்குது. நாம்ம எறங்கி வேலையப் பாத்ததாதாம் ஆளுகளேட வேல மொறையா இருக்கு. நாம்ம நின்னுகிட்டு வேடிக்கெ பாத்துட்டு அதெ இப்பிடிச் செய்யி, இதெ அப்பிடிச் செய்யின்னா வேல ஒறுப்பா ஆவ மாட்டேங்குது!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "வாஸ்தவந்தாம்! வயக்கார்ரேம் கொஞ்சமாச்சும் எறங்கி வேல பாக்காத வரைக்கும் வயக்காடு வயக்காடா இருக்காது! வயக்காடே எதிர்பாக்கும் போல, வயக்கார்ரேம் எறங்கி தன்னைய மிதிச்சிப் பாக்கணும்ன்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ சொல்லுங்க! நமக்கு இன்னொரு யோஜனையும் கூட உண்டு. இருக்குற நெலத்துல ஒஞ்ஞகிட்டெ கொஞ்சம் கொடுத்துப்புட்டு கொறைச்சிப் புடலாம்ன்னு கூட பாக்குறேம். இந்தப் பயலுவோளுக்கு அஞ்ஞ காசிங்றது தண்ணியா வர்றதுல நெலத்த இஞ்ஞ வாங்கிப் போடணும்னு நிக்குறானுவோ! அஞ்ஞ அரிசிக் கடெ ஆரம்பிச்சா கொளுத்த லாவம்ன்னு பேசிட்டுக் கெடக்கறானுவோ! போடா நீஞ்ஞளும் ஒஞ்ஞ அரிசிக் கடையின்னும் சொல்லிப்புட்டேம். கூடப் பொறந்த பொறப்புக்காக அரிசியாக்கி ஆள வெச்சு இவனுங்களுக்குச் செஞ்சிப் போடலாம். அவ்வளவுதாங் நம்மால முடியும். அதெ வுட்டுப்புட்டு அவனவனும் இப்பிடித்தாம் அரிசி வேணும்ன்னா நெனைச்சா, அவனவனும் எறங்கி ஒழைச்சித்தாம் அப்பிடிச் சாப்புடணும்ட்டேம். எல்லா பயலுகளும் சேர்ந்து காசிய வெச்சிருக்கேம், தர்றேம், நீயே வெளைவிச்சிக் கொடுன்னு நம்ம மடியிலயே கை வெச்சானுவோன்னா, நம்மால செய்ய முடியணும்ல. வெளைவிக்குறதுல கூட பெரச்சனயில்ல. அதெ அரிசியாக்குறதுக்குள்ள கெடந்து சின்னாபின்ன பட வேண்டியதா இருக்கு. நாம்ம ன்னா ஆலையா? நாம்ம பாட்டுக்கு நெல்ல வுட்டுக்கிட்டு அரிசியா கொட்டுறதுக்கு கேக்குறேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "கொஞ்சம் மெனக்கெட்ட வேலத்தாம். இல்லன்னு சொல்லல. ஆன்னா வாங்கிச் சாப்புடுறவேம் திருப்தியாசச்  சாப்புடுவாம். ஒரு புண்ணியம்ன்னு நெனைச்சுக்குங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதல்லாங் இருக்குற புண்ணியம் போதும் வாத்தியார்ரே! அதுல பாருங்க! பட்டணத்துல கெடக்குறவனுவோ நீராவியில ஆவாட்டுன்ன அரிசியல்லா சாப்புடுறானுவோளாம். அதுல வெற சுகரு வர்றதுங்றானுவோ, கொழுப்பு வர்றதுங்றானுவோ கொழுப்பெடுத்த பயலுவோ! இஞ்ஞ வந்து கெடந்து வயக்காட்டுல வேல பாத்துட்டுக் கெடந்தா ஒடம்புக்கும் ஒரு கொறையும் வாராது. சொன்னாக்கா கேட்டாத்தானே? என்னவோ சம்பாத்தியம் சம்பாத்தியாம்ன்னு நிக்குறானுவோ! நிக்கட்டும்! கடெசீல சோறுதாம்ன்னு எல்லாம்ங்ற ஒரு நெல வரும். அன்னிக்கு கெராமத்த வுட்டா வேற வழியில்ல! அவனுவோ பட்டணத்தை இழுத்து அடைச்சிக்கிட்டாலும் நம்மால கெராமத்துல இருக்க முடியும். அதுவே நாம்ம கிராமத்தெ இழுத்து அடைச்சிப்புட்டா நெனைச்சிப் பாருங்க, அவனுங்க பட்டணத்துல வெச்சிருக்குற காசிய வெச்சு மசுத்தையாப் புடுங்குவானுவாங்க?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு உணர்ச்சிவசப்பட்டாப்புல.
            சுப்பு வாத்தியாரு அதுக்குப் பதிலு எதையும் சொல்லாம அமைதியா இருந்தாரு. விநாயகம் வாத்தியாரு கொஞ்சம் ‍நெதானத்துக்கு வந்தாப்புல, "நாம்ம ஒரு ஆளு! இப்பிடித்தாம் அடிக்கடி நெனைச்சு நெனைச்சு உணர்ச்சிவசப்பட்டுப் புடுறேம், எங் கதெயையே பேசிக்கிட்டு. ஒங்க கதெய கேக்கவே இல்லே பாருங்க. மவனெப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்லன்னு நெனைக்கிறேம். இப்பிடி ஆவான்னு நெனைக்கல. இருக்குற எடம் தெரியாம மண்ணுமுட்டால கெடக்குறாம். அதெ வுட்டுத் தள்ளுங்க! மவளுக்கு எங்கனாச்சிம் வரனப் பாத்திருக்கீயளா?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "பழைய கதெதாம். புதுசா ஒண்ணுமில்லே. புதுசுன்னா லாலு வாத்தியாரு இருக்காருல்லா அவரோட தங்காச்சி மவ்வேம் ஒருத்தெம் படிச்சிப்புட்டு சென்னைப் பட்டணத்துல ஆயுர்வேத டாக்கடர்ரா இருக்காம். அவனெ புடிச்சிக் கட்டி வைக்கணும்ன்னு எஞ்ஞ வூட்டுல நிக்குது! நாம்ம அதெ வேணாம்ன்னு நிக்குறேம். வூட்டுல அதாங் வேணும்ன்னு நிக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்குத்தாங் வரச் சொன்னேம். செல விசயங்கள்ல வூட்டுல பேசுறதெ வுட, இப்பிடி வயக்காட்டுல பேசுறதுதாங் வசதி. மனசு வுட்டுப் பேசலாம் பாருங்க! ஒஞ்ஞளுக்குத் திருப்தின்னா பண்ணுங்க வாத்தியார்ரே! ஒஞ்ஞ யோஜனைல்லாத்தாம் நம்ம வயக்காடு இப்பிடி வெளைஞ்சிக் கெடக்கு. ஒஞ்ஞ யோஜனைப்படித்தாம் வூட்டெ கட்டி வூடும் இப்போ ரொம்ப வசதியா இருக்கு. அதால நமக்கு ஒஞ்ஞ திருப்தித்தாம் முக்கியம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதெத்தாம் நாமளும் நெனைக்கிறேம். வூட்டுல போட்டுப் புடுங்கி எடுக்குது. நம்ம நெலமைக்குப் பாத்துக்கிட்டா எல்லா காலத்துக்கும் நல்லது. அப்பிடி இல்லன்னா குருவி தலையில பனங்காய்யத் தூக்கிச் சொமக்குறதுதாங் அது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பையனப் பத்தி வெசாரிச்சிங்களா? சொந்தக்கார பயங்றதால தெரிஞ்சிருக்கும்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "கஷ்டப்பட்ட குடும்பத்துலேந்து மின்னுக்கு வந்த பயதாங். கஷ்டநஷ்டம் தெரிஞ்சவனாத்தாம் இருப்பாம்ன்னு நம்ம நெனைப்பு. வெசாரிச்ச வரைக்கும் துடிப்பான பயலுன்னுத்தாம் சனங்க சொல்லுறாங்க. வருமானத்துக்கோ வாழ்க்கைக்கோ கொறைவு இருக்காது. இருந்தாலும் பாருங்க வேற சின்ன வேலைன்னாலும் பரவால்ல. தெகிரியமா கட்டிக் கொடுத்துப்புடலாம். அதுல ஒண்ணும் பெரச்சன யில்ல. ஆன்னா டாக்கடர்ரா இருக்காம் பாருங்க அதாங் பெரச்சனெ. நாளைக்கு நாம்ம டாக்கடருங்ற மெதாப்புல அவ்வேம் எப்பிடி வேணும்னாலும் நடந்துக்கிடலாம் பாருங்க. அந்தப் பயம் ஒண்ணு மனசுக்குள்ள இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் லாலு வாத்தியாருல்லாம் இருக்காருல்ல அந்த வகையறாவுல. பெரச்சன வந்தாலும் பாத்து வுட்டுப்புட மாட்டாரா? பெறவென்ன பெரச்சனெ?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதாங் பெரச்சனெ! அவரு இல்லன்னா கூட தெகிரியமா கட்டிக் கொடுத்துப்புடலாம். கொல்லு ஆச்சாரி பஞ்சு இருக்காருல்லா அவரு வூட்டுல நடந்த சம்பவம், வெடிக்கடெகாரரு இருக்காரே முருகு அவரு வூட்டுல நடந்த சம்பவத்தயல்லாம் வெச்சி யோஜிக்கிறப்ப குடும்ப வெவகாரத்துக்கு ஒத்து வார மாட்டாரு அந்த ஆளு. அவரு குடும்பத்து வெவகாரமே நாறுன வெவகாரமல்லா இருக்கு. எந்தப் பொண்ண நல்ல வெதமா கட்டிக் கொடுத்திருக்காரு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெச் சொல்லுங்க! இருந்தாலும் நம்ம பொண்ணு போயி வாழப் போறதுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்ல. இத்து சமத்தா பையனோட குடும்பத்தெ நடத்துனா எந்தப் பெரச்சன வந்தா ன்னா? நாளைக்குக் கட்டிட்டுப் போறது அஞ்ஞப் போயிக் குடும்பத்தெ பிடிச்சிக்கிடணும். அதாங் ஒண்ணு. அதுக்கு தெறமெ இல்லன்னா குடும்பத்துல பூந்து குடி கெடுத்து வுட்டுப்புடுவானுவோ! எல்லா குடும்பத்துலயும் நடக்குற கதெதாங். பொண்ணு கொடுக்குற நாம்ம ஆயிர வெதமா யோஜிச்சுதாங் கொடுக்கணும்! ஒரு நல்ல வழியா பொறக்காமல போயிடும்?"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "ஆளே கொஞ்சம் தொவண்டாப்புலல்ல இருக்கீங்க?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "வேலப்பாடுதாங் காரணம். இத்த அறுத்து முடிச்சிதாங் கொஞ்சம் ஓய்வா இருக்கலாம். அதுக்குள்ள நெல்லவிக்கிற வேல வேற வந்துப்புடும். ஓட்டமா ஓடிட்டு இருக்குறாப்புல இருக்கு நம்ம பொழப்பு. ஒரு ரண்டு நாளைக்கு எந்த வேலையும் செய்யாம அப்பிடியே படுத்தே கெடக்கணும் போல இருக்கு. நெனைப்புத்தாங் இருக்கே தவுல, மாட்டப் பாக்குறப்போ, வயக்காட்டப் பாக்குறப்போ அடங்க ஒடங்கி உக்கார முடியல. அதாங் சமயத்துல வண்டியக் கெளப்பிட்டு ஒஞ்ஞ வூட்டுக்கு வந்துப்புடறது. அஞ்ஞ வந்தாத்தாம் சித்தெ நேரம் இதெல்லாம் மறந்தாப்புல இருக்கு.  செரி வண்டிய எடுங்க! அப்பிடியே வூட்டுக்கு வுட்டு ஒரு காப்பியக் குடிச்சிட்டுக் கெளம்பலாம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதாங் வயலப் பாத்தாச்சு. கெளம்புறேன்னே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. இந்தப் பேச்செ பேசிக்கிட்டெ வயல ஒரு சுத்து சுத்தி வந்துப்புட்டாங்க ரண்டு பேரும்.
            "ந்நல்லா கதெயக் கெடுத்தீங்க! வண்டிச் சாவியக் கொடுங்க. நாமளும் டிவியெஸ் பிப்டிய ஓட்டி ரொம்ப நாளாவது!"ன்னு வண்டியச் சாவிய வாங்கிக்கிட்டு விநாயகம் வாத்தியாரு ஸ்டார்ட் பண்ணாரு. சுப்பு வாத்தியாரு வண்டிக்குப் பின்னாடி ஏறி உக்காந்தாரு. வண்டி வயக்காட்டுலேந்து விநாயகம் வாத்தியாரு வூட்ட நோக்கி போனுச்சு.
            விநாயகம் வாத்தியாரு வெள்ளாமையில வந்த வெளைச்சல்ல ஒரு மெதப்பா இருந்தாலும், அதுக்காகப் பாடுபட்டதுல ஆளு கொஞ்சம் தொவண்டுத்தாம் இருக்கிறாங்றதெ சுப்பு வாத்தியாரு வண்டியில போறப்ப நெனைச்சுக்கிட்டாரு. அவருக்கு சம்பா தாளடி வெதைப்பும் மரண வெளைச்சலா வேற வெளைஞ்சிருந்துச்சு. இப்போ கோடை வெவசாயத்துலயும் பயங்கர வெளைச்சலா கண்டிருந்துச்சு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...