14 Jul 2020

வெளைச்சல்ல அதிசயம் காண வெச்ச ரகசியம்!

செய்யு - 505

            வெவசாயங்றது ஒரு தொழில் மொறை கெடையாது. அது ஒரு வாழ்க்கை மொறை. அதெ நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க வயக்காட்ட நல்லா சீர்திருத்தம் பண்ணி அதோட வாழவே ஆரம்பிச்சிடுறாங்க. விநாயகம் வாத்தியாரு அப்பிடித்தாம் வாழ ஆரம்பிச்சிருந்தாரு.
            தெரு கோணல்மாணலா இருந்தாலும் ஆடத் தெரிஞ்சவேம் அநாயசமா ஆடுவாம். அதுவே அந்தத் தெருவே அருமையா இருந்தா ஆடத் தெரியாதவனும் அற்புதமா ஆடுவாம். அது போலத்தாம், வயக்காடு மொறையா இருந்தா வெளையாததும் பெரமாதமா வெளையும். வெளையுற வயக்காடா இருந்தாலும் மொறையா பராமரிக்கலன்னா வெளையாம கெடந்துடும். தெருவும் மொறையா அமைஞ்சு ஆட்டக்காரனும் அருமையா அமைஞ்சா அங்க ஆட்டத்தெப் பத்திச் சொல்லவா வேணும். விநாயகம் வாத்தியாரும் வயக்காடும் அப்பிடி அமைஞ்சதுல்ல வெளைச்சல் பெனாட்டி எடுத்துச்சு.
            கொஞ்சம் வயக்காட்ட சீர்திருத்தம் பண்ணணும். அதுக்குக் கொஞ்சம் வெவசாயி மெனக்கெடணும். சீர்திருத்தமா ஒரு காலத்துல இருந்த வயலுக காலப்போக்குல கொஞ்சம் மாறிப் போயிக் கெடக்குது. தண்ணி வேணுங்றப்ப வாராத தண்ணி, தண்ணி வேணாங்குறப்ப வெள்ளமா உள்ளார பூந்து வெளியில போவ முடியாதுன்னு அடம் பிடிக்கும். வயலுக்குத் தண்ணி வாரதையும், போறதையும் முறையா சீர்த்திருத்தம் பண்ணிட்டாவே போதும் வெள்ளாமையில நல்ல வெளைச்சலப் பாக்கலாம். பாசன வாய்க்கா, வடிகால் வாய்க்கான்னு இருந்த காலத்துல அதெல்லாம் ரொம்ப சுளுவா இருந்துச்சு. அப்போ இருந்த வாய்க்காலுக ஒவ்வொண்ணும் ஆத்துல கால்வாசியா இருக்கும். ஆத்துல தண்ணி சுண்டுறப்போத்தாம் வாய்க்கால்லயும் தண்ணி சுண்டும். அப்படி பெரிசு பெரிசா இருந்த வாய்க்கா, வரப்புக இப்போ கெடையாது.
            வாய்க்கா, வரப்புக பெரிசா இருந்த காலகட்டத்துல வாய்க்கால்லயே மீனு பிடிச்சி சாப்புட்டுருக்குங்க சனங்க. வாய்க்கால்லேந்து வயக்காட்டுக்கும், வயக்காட்டுலேந்து வாய்க்காலுக்கும் மீனுங்க துள்ளிப் பாய்ஞ்ச காலம் அது. அதுப்படி அதெ வயல்ல வெளைஞ்ச நெல்லுக்கு, அங்கயே மீனு பிடிச்சு அதுக்கேத்த வெஞ்சனமா தின்ன சனங்களுக்கு அதுக்குப் பைசா காசி செலவில்ல. இப்போ என்னமோ பண்ணைக் குட்டைன்னு வெட்டில்லா அதுல மீனு குஞ்சுகள காசிக்கு வாங்கி விட்டு சனங்க மீன்கள வளக்குதுங்க. அந்த மீன காசி கொடுத்துல்லா வாங்கிச் சாப்பிடுதுங்க.
            பெரிசு பெரிசா இருந்த வரப்புகள்ல நடந்தா போதும் ஒரு நூத்து மூலிகைகள பறிச்சிட்டுத் திரும்புலாம். எதுவும் நட்டு வெச்சது கெடையாது. அதுவா கெளம்புறது.வாய்க்கால்ல ஓடுற தண்ணி நெல்லுக்கும், பயிருக்கும், புல்லுக்கும் மட்டும் கெடையாது, வரப்புல வெளையுற மூலிகைக்கும் சேத்துதாங். கரிசாலை, மொடக்கத்தான், வல்லாரை, கானாங்கோழை, சேமங்கெழங்கு, ஆனநெருஞ்சிலு, ஊமத்தெ, கீழாநெல்லி, ஓரிதழ் தாமரை, சிறுகண்பீளை, அம்மான் பச்சரிசி, தூதுவளை, கண்டங்கத்திரி, துத்தி, நாயுருவி, அருகம்புல்லுன்னு வயலுகள்ல அது பாட்டுக்கு மண்டிக் கெடக்குமுங்க. ஊருல கெடக்குற நாய்களுக்கு ஒடம்பு சரியில்லன்னா போதும், அதுக வயக்காட்டுப் பக்கமா ஓடித்தாம் எதாச்சிம் மூலிகையெ தின்னு சரிபண்ணிக்குமுங்க. நாயிக்கு கெராமத்துல யாரு வைத்தியம் பாத்தா? நாய்களாவே அததுக்கு வைத்தியம் பாத்துக்கும்.
            சுப்பு வாத்தியாரு டிவியெஸ் பிப்டியில போயி எறங்கி பாத்தப்ப வேப்பங்குச்சியில பல்ல  வெளக்கிட்டு விநாயகம் வாத்தியாரு வயக்காட்ட ஒரு சுத்து சுத்திட்டு இருந்தாரு. வயக்காட்ட சுத்தி படிப்படியா வேலிய வைக்குற வேலையிலயும் எறங்கியிருந்தாரு விநாயகம் வாத்தியாரு. படிப்படியா கிளேரியா, நுனா, ஓதியன், பூவரசு, இலுப்பைன்னு போத்துக் கால்களப் போட்டு வெச்சிருந்தாரு. வேப்பமரமும், நாட்டுக் கருவ மரமும் அங்கங்க இருந்துச்சுங்க. பனைமரமும் திக்குக்கு நாலுக்கு மேல இருந்துச்சு. வெளைச்சல் நல்லா வெளைஞ்சிருந்துச்சு.
            இந்த வருஷம் விநாயகம் வாத்தியாரு ஒரு வேலையப் பண்ணிருந்தாரு. குட்டையில கெடந்த தண்ணிய எறைச்சி நரிப்பயிறைப் போட்டிருந்தாரு. நரிப்பயற மகசூல் பண்ணி ஒண்ணுத்துக்கும் ஆவப் போறதுல்ல. ஒண்ணுத்துக்கும் ஒதவாததுக்கு ஆத்த கட்டி இறைக்குறாம் விநாயகம் வாத்தின்னு அதுக்கும் ஊர்ல பேச்சு. அப்படி அவரு ஏஞ் செஞ்சார்ன்னா, ஆத்துல தண்ணி வந்தப்போ தண்ணிய வெச்சிக் கட்டி நரிப்பயிறை அப்படியே மடக்கி உழவு பண்றதுக்குத்தாம். இந்த யோசனையும் சுப்பு வாத்தியாரு தந்ததுதாம். மாட்டு எருவா அடிச்சி வெவசாயத்த பண்ணணுங்ற எண்ணம் விநாயகம் வாத்தியாருக்கு வந்தப்போ அவரால அவ்வளவு நெலத்துக்கும் அதெ செய்ய முடியல.
            விநாயகம் வாத்தியாரு வூட்டுலயே பத்துக்கு மேல மாடுக இருந்துச்சு. அது போக ஊர்ல மாடு இருக்குறவங்க எல்லாத்து வூட்டு எருவ வாங்கியடிச்சும் அவரால அத்தனெ நெலத்துக்கும் சாண எருவ போட முடியல. ஒரு வேலி நெலத்துக்குத்தாம் ஊருல இருந்த எரு கெடைச்சது. அந்த அளவுக்கு ஊருல மாடு கண்ணுக கொறைஞ்சிருந்துச்சு.
            மாடுக கொறைஞ்சிருந்தாலும் கிராமத்துக்குள்ள பாலு பாக்கெட்டு மட்டும் கொறைவில்லாம பாக்கெட்டுகள்ல வந்துகிட்டே இருந்துச்சு. மாடு நெறைய இருந்தாத்தான பாலு நெறைய வரும். மாடுக கொறைய கொறைய பாலு நெறைய எப்பிடி வருதுன்னு தெரியாமலே சனங்களும் பாக்கெட்டுல பாலையும், தயிரையும் வாங்கிச் சாப்புட்டுட்டுக் கெடந்துச்சுங்க. விநாயகம் வாத்தியாரு வூட்டுல பாக்கெட்டு பாலோ, தயிரோ எட்டிப் பாக்கல. வூட்டுல மாடு கறந்தாவணும் அவருக்கு. அவரோட கூட இருந்த கடைக்குட்டித் தம்பிக்கு அதுதாம் வேல. பத்துக்கு மேல இருக்குற மாடுகள்ல கறவெ எதுவும் இல்லன்னா,ஒடனே அவரோட தம்பிக் கெளம்பிடுவாரு. கறவ மாட்ட வாங்கியாந்துக் கட்டிப்புடுவாரு.

            சாண எருவெ அடிக்குறதுல இருந்த ஒரு நுட்பமனா வெசயத்த விநாயகம் வாத்தியாரு கண்டுபிடிச்சாரு. சாண எருவெ அடிச்ச வயல்கள்ல உளுந்தும், பயிறும் கெளைச்சுக்கிட்டுக் கெளம்புனுச்சு. அத்தோட பூச்சியும் அடிக்கல, பூச்சிக்கு மருந்தும் அடிக்கல. ரசாயன உரம் போட்ட எந்த வயல்லயும் உளுந்து பயிறு அந்த அளவுக்குக் கெளம்பல. அத்தோட பூச்சியும் அடிச்சி, அதுக்கு மருந்தும் அடிக்க வேண்டியதா இருந்துச்சு. அந்த எடத்தெதாம் விநாயகம் வாத்தியாரு பிடிச்சிக்கிட்டு, ரசாயன உரத்த கொறைச்சி சாண எருவெ அடிக்கிறதுங்ற முடிவுக்கு வந்திருந்தாரு. சாண எருவுல பூச்சிய அழிக்குற ஏதோ விசயம் இருக்குங்றத அவரு கண்டுகிட்டாரு. ஆனா அவருக்கிட்டெ அந்த அளவுக்கு சாண எரு இல்லாம போனதால அதுக்கு மாத்தா என்னத்தெ பண்ணலாங்ற யோசனையில சுப்பு வாத்தியாருகிட்டெ வந்துக் கேட்டப்பத்தாம் இந்த நரிப்பயிறு யோசனையச் சொல்லப் போயி இப்போ ஏகத்துக்கும் வெளைச்சலா கெடந்துச்சு நெலம்ங்க.
            விநாயகம் வாத்தியாரு ரசாயன உரத்த விட்டுட்டு சாண எருவுக்கு மாறுனதுக்கு அது ஒரு காரணம்ன்னா, அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துச்சு. சென்னைப் பட்டணத்துல இருந்த அவரோட தம்பிமாருகளுக்கு வேற்குடியிலேர்ந்துதாம் அரிசி போனுச்சு. அவுங்களோட சொந்தக்காரவங்க பல பேத்தும் அவருகிட்டெயிருந்து அரிசி வாங்கிட்டு இருந்தாங்க. இதுக்குன்னே வூட்டுக்குப் பக்கத்துல ஒரு பெரிய சார்ப்ப போட்டுருந்தாரு விநாயகம் வாத்தியாரு. அங்க நெல்லு மூட்டைகளா அடுக்கியிருக்கும். மாசத்துக்கு ஒரு தவா பாஞ்சு இருவது மூட்டைக்குக் கொறைவில்லாம ஆளுகள வெச்சி அவிப்பாரு. அவிச்சி காய வெச்சி அரிசியாக்கி திருவாரூரு கொண்டு போயி பார்சல்ல போட்டார்ன்னா, அரிசி பாட்டுக்குப் போவ வேண்டியவங்களுக்குப் போயிச் சேந்துப்புடும்.
            அதுக்கான காசியா தம்பிமாருகளும், ஒறவுக்காரவங்களும் வேற்குடி வர்றப்போ அவரோட கையில பத்தாயிரம், இருவாதியிரம்ன்னு திணிச்சிட்டுப் போயிடுவாங்க. அத்தோட வெதைப்பு நேரத்துல, அறுவடை நேரத்துலன்னு வெள்ளாமைக்கு வேண்டிய காசியும் தம்பிமார்ககிட்டேயிருந்து விநாயகம் வாத்தியாரோட பேங்குக் கணக்குக்கு அது பாட்டுக்கு வந்து சேந்துகிட்டெ இருக்கும். அதுக்கு ஏத்தாப்புல வெளையுற நெல்லு, உளுந்து, பயிறு, துவரையெல்லாம் அங்கப் போயிகிட்டே இருக்கும். அதுக்கு ஏத்தாப்புல நெல்லு மூட்டைகள இருப்ப வெச்சிக்கிட்டுத்தாம் மிச்சத்த யேவாரிகிட்டெ போடுவாரு. யேவாரிகள்ட்ட போடுறதுக்கு மின்னாடி வெவரம் தெரிஞ்சவங்க வேற விநாயகம் வாத்தியார்ட்டேயிருந்து யேவாரியோட வெலைக்கு நெல்லா வாங்கிட்டுப் போயிடுவாங்க.
            விநாயகம் வாத்தியாருக்கு வெளைவிச்சதெ விக்குறது ஒரு பெரச்சனையா இருந்ததில்ல. அவுங்க குடும்பத்துக்குள்ளயே வாங்கிக்கி நெறைய பேரு இருந்தாங்க. வெளைவிச்ச நெல்ல அரிசியாக்கிக் கொடுக்குறதுதாங் அவருக்குப் பெரும் வேலையா இருந்துச்சு. அதுக்காக ரொம்ப மெனக்கெட வேண்டியது இருந்துச்சு. அவரால அவுங்க எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து அரிசியக் கொடுக்க முடியலங்றதுதாம் செருமமா இருந்துச்சு. அவரு சொல்லிப் பாத்தாரு, நெல்லு மூட்டையா எடுத்துக்கோங்க, அரிசியாக்குறது கஷ்டமா இருக்குன்னு. அதுக்கு அவுங்க டவுன்ல எஞ்ஞ நாஞ்ஞ வாங்கிப் போட்டு அரிசியாக்குறதுன்னு விட்டுப்புட்டாங்க. அத்தோட அவரோட தம்பிமார்களோட தொடர்புல இருந்த பலபேரும் அரிசியா வாங்கிக்கிக்கத்தாம் தயாரா இருந்தாங்க. அதுக்கு ஏத்தாப்புல இன்னும் கொஞ்சம் நெலபுலன வேற்குடியில வாங்கிப் போடணுங்ற முடிவுல விநாயகம் வாத்தியாரோட தம்பிமாருக இருந்தாங்களே தவுர, நெல்ல அரிசியாக்குறதுல இருக்குற கஷ்டத்த அவுங்க புரிஞ்சிக்காம இருந்துட்டாங்க.
            விநாயகம் வாத்தியாரு அரிசிக்காக இருப்பு வெச்சிருக்குற நெல்லு மூட்டைங்க இருநூத்துக்கு மேல இருக்கும். அதெ பக்குவமா வெச்சிக்கிறது ஒரு பெரும் சிரமம்ன்னா அதெ அரிசியாக்குறதுக்குன்னே பெரிய பெரிய அண்டா, வெறவுக்குன்னே ஒரு கொட்டகெ, கொல்லையில இருந்த பெரிய பெரிய அடுப்பு, நெல்ல காய வைக்கிறதுக்குப் பெரும் படுதான்னு நெறைய தயாரிப்புகள அவரு பண்ண வேண்டிருந்துச்சு. நெல்ல ஆவாட்டிப் போட்டா, அதெ காய வெச்சி அரைக்குறதுக்குள்ள ரொம்பவே தொவண்டுப் போவ ஆரம்பிச்சாரு விநாயகம் வாத்தியாரு. ஒரு குடும்பத்துத் தேவை, ரண்டு குடும்பத்துத் தேவைன்னு ஒரு அஞ்சு குடும்பத்துத் தேவையைக் கூட சமாளிச்சிப்புடலாம். விநாயகம் வாத்தியாரு இந்த விசயத்துல தம்பிமாருக, சொந்தபந்தம்ன்னு இருவதுக்கு மேல குடும்பங்களுக்கு இந்த வேலையப் பண்ணிட்டு இருந்தாரு.  
            விநாயகம் வாத்தியாரோட தம்பிமார்கள்லேந்து ஒறவுக்காரவுங்க வரைக்கும் அத்தனெ பேருக்கும் யாருக்குமே ரசாயன உரம் தெளிக்கிறதும், பூச்சி மருந்து அடிக்கிறதும் பிடிக்காம போயிடுச்சு. அதாலத்தாம் ஒடம்பு கொண்ட அத்தனெ நோய்ப்பாடும் வர்றதா அவுங்களுக்குள்ள ஒரு நெனைப்பு உண்டாயிருந்துச்சு. அவுங்க அப்போ துணிஞ்சி சொல்லிருந்தாங்க, ரசாயன உரத்தப் போடாம வெளைச்சல் கொறைஞ்சாலும் பரவாயில்லன்னு. கொறைச்சலா வெளைஞ்சாலும் ரசாயனம் இல்லாம வேணுங்றதுல அவுங்க பிடிவாதமாவும் இருந்தாங்க. சாண எருவெ போட்டு வெவசாயத்தப் பண்ணணுங்றதுல விநயாகம் வாத்தியாரோட மெனக்கெடு அதிகமாவுறதுக்கு அதுவும் முக்கியமான காரணமா இருந்துச்சு. அந்த வெசயத்துல சாண எருவு போதுமான அளவு இல்லாட்டியும் இனுமே நரிப்பயித்தக் கொண்டு சமாளிக்கலங்றது தெரிஞ்சதும் அவருக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவே இல்லாம இருந்துச்சு.
            அவரு இப்பிடி ரசாயனம் போடாம வெளைவிச்சிட்டு இருக்குறதெ கேள்விப்பட்டு அவரு அரிசிய பார்சல் போடுவாரு பாருங்க திருவாரூர்ல, அந்த கம்பெனிய நடத்திட்டு இருந்த மொதலாளியே மாசத்துக்கு நமக்கும் அரிசியப் போட்டு வுடுங்கன்னு கேட்டுப் பாத்தாரு. அரிசியக் கொடுத்தா மாசா மாசம் சரியா கொடுக்கணும். ஒரு மாசம் கொடுத்து இன்னொரு மாசம் கொடுக்க முடியாம போயிட்டா சங்கடம்ன்னு, "பாக்கலாம்! பாக்கலாம்!"ன்னு சொல்லிட்டே இருந்தாரு விநாயகம் வாத்தியாரு. அவரோட நெலமெ அப்போ அப்பிடி அந்த நேரத்துல பெரும் வேலைப்பாடா இருந்துச்சு.
            "அதென்ன ஒரு பயலும் நெல்ல வாங்கிக்கிடான்னா வாங்கிக்கிட மாட்டேங்றாம்! எல்லா பயலும் அரிசியா கேட்டாக்கா நாம்ம வூட்டயும் பாத்துக்கிட்டு, மாடு கண்ணுகளயும் பாத்துக்கிட்டு, வெள்ளாமையையும் பாத்துக்கிட்டு, நெல்லயும் ஆவாட்டி அரிசியாக் கொட்டணும்ன்னா யாருக்குடா இருக்கு சாமி ஒடம்புல தெம்பு?"ன்னு சொல்றாப்புல அவருக்கே ஒரு அலுப்பு உண்டாயிருந்துச்சு. அதெ பத்தித்தாம் விநாயகம் வாத்தியாரு, கையில இருந்த வேப்பங்குச்சியத் தூக்கிப் போட்டுட்டு, சுப்பு வாத்தியார்ர பாத்த ஒடனே சொல்ல ஆரம்பிச்சாரு.
            போன வருஷ கணக்குக்கு அவருக்கு மாவுக்கு பதினாலு மூட்டை கண்டுச்சு. இந்தப் பகுதிக்கு அது ரொம்ப அதிகமான வெளைச்சல். அத்தோட அவரு ரசாயன உரத்த வேற ரொம்ப அநியாயத்துக்குக் கொறைச்சிருந்தாரு. உரத்துக்கான செலவு இல்லாம போயி, உளுந்து பயிறுல சக்கைப் போடு போட்டதால அவருக்குத் தாங்க முடியாத மன திருப்தியல இருந்தாரு. இந்த வருஷம் எப்படியும் மாவுக்குப் பதினெட்டு காணுங்ற அளவுக்கு இருந்துச்சு. அதெ அவரு வாயாலயே சொன்னாரு, "சொல்ல முடியாது வாத்தியார்ரே! இருவது மூட்டை கண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல! நாமத்தாம் அதெ அரிசியாக்கி ஆவாட்டுறதுக்குள்ள என்ன ஆவப் போறோனோ?"ன்னு.
            "காணட்டும்! எல்லாம் ஒஞ்ஞளோட ஒழைப்பும் வெயர்வையும்தாம் நெல்லு மணியா வெளைஞ்சிக் கெடக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒஞ்ஞளோட யோஜனையும் சேந்துதாம் இப்பிடி வெளைஞ்சிக் கெடக்கு! ஒஞ்ஞளுக்கு நெலம் இல்லன்னா வெச்சுக்கோங்க இருவது மூட்டெ நெல்ல வூட்டுக்கு அனுப்பிச்சிப்புடுவேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...