13 Jul 2020

கேட்டுக்கிட்டுதாம் உள்ள வாரதோ! போறதோ!

செய்யு - 504

            சுப்பு வாத்தியார் ரிட்டையர்டு ஆகி ரண்டு வருஷம் கழிச்சி விநாயகம் வாத்தியார் ரிட்டையர்டு ஆனாரு. சுப்பு வாத்தியாரு வேலையில இருக்குறப்போ மவனுக்குக் கலியாணத்தச் செஞ்சிருந்ததப் போல விநாயகம் வாத்தியாரு பொண்ணுக்குக் கலியாணத்தெ செஞ்சிருந்தாரு. சுப்பு வாத்தியாருக்குக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டிய நெலையில பொண்ணு இருந்ததெப் போல, விநாயகம் வாத்தியாருக்கு பையன் இருந்தாம். ரண்டு பேருக்கும் சமயத்துல பேச்சு கலியாணம் பண்ணி வைக்க வேண்டிய நெலையில இருக்குற பொண்ணு புள்ளீயோளப் பத்திப் போவும்.
            ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு எப்பிடி பொழுது போகப் போகுதுன்னு கணக்குப் போட்டுகிட்டெ இருந்த சுப்பு வாத்தியாருக்கு பொழுது பத்தாம போவ ஆரம்பிச்சிடுச்சு. வய வேல, எதுத்தாப்புல கொல்ல வேல, வூட்டு ‍வேல, பேத்தியோட இருக்குறதுன்னு அவரு எந்நேரத்துக்கும் பம்பரமா சொழண்டுகிட்டு இருந்தாரு. வேலையில இருந்த காலத்துல கூட பல பேரு வாத்தியாருமாருக வூட்டுக்குப் போயிட்டும், வந்துட்டும் இருந்தாரு சுப்பு வாத்தியாரு. இப்போ ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு என்னவோ நேரமே இல்லாததெ போல ஒருத்தரு வூட்டுக்கும் போறதில்லெ. விநாயகம் வாத்தியாரு ஒருத்தரு மட்டுந்தாம் சுப்பு வாத்தியாரைப் பாத்துட்டுப் போயிட்டு இருந்தாரு. அவருக்கு ரொம்ப நாளு மனவருத்தம், மின்ன மாதிரி வூட்டுப்பக்கம் வாரதில்லன்னு.
            ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு விநாயகம் வாத்தியாரு வெவசாயத்துல முழுசா எறங்கிட்டாரு. அதுக்குத் தகுந்தாப்புல அவரோட சென்னைப் பட்டணத்துல இருந்த தம்பிமாருக ஏகத்துக்கும் நெலபுலன்கள வேற்குடியில வாங்கிப் போட்டிருந்தாங்க. அப்பங்காரரு வித்திருந்த நெலபுலங்க அத்தனையையும் புள்ளைங்க தலையெடுத்து மீட்டுருந்தாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து வெவசாயத்தெ விநாயகம் வாத்தியாருதாங் பாத்துட்டு இருந்தாரு. வேற்குடியில பெருங்கையில ஒருத்தருன்னா அதுல இப்போ விநாயகம் வாத்தியாரும் ஒருத்தர்ங்ற அளவுக்கு ரண்டரை வேலி நெலம் அவரு கையில இருந்துச்சு. அம்புட்டு நெலமும் அங்கொண்ணு, இங்கொண்ணுன்னு இல்லாம அடைச்சாப்புல ஒரே எடத்துல இருந்துச்சு. அதுதாங் பெரமாதம். ஊருல நெலம் அப்பிடிக்கிப் பல பேத்துக்கு அமையாது.
            மொறையா வெவசாயத்தப் பண்றதுங்ற முடிவுல எறங்குனாரு விநாயகம் வாத்தியாரு. அதுக்கு அப்பப்போ சுப்பு வாத்தியாருதாங் ஆலோசனெ. அவரோட ஆலோசனப்படி வயக்காட்டுக்குப் போயிட்டு வாரதுக்கு வரப்ப அகலம் பண்ணி மண்ண அணைச்சி ரோடாவே போட்டுடுறதுங்றது ஒரு யோஜனெ. செலவப் பாக்காம விநாயகம் வாத்தியாரு இந்த வேலையில எறங்குனாரு. இதுக்குன்னு ஜேசிபியக் கொண்டாந்து, கோடையில ஊருல ஒரு கொளம் வுடாம அத்தனை கொளத்துலேந்தும் மண்ண அடிச்சி ரொம்ப பிரமாண்டமா இந்த வேலையப் பாத்தாரு. அம்பது மா நெலத்துல மொறையா கணக்குப் பிரிச்சி மண்ண அணைச்சதுல ஏழெட்டு மா நெலத்துக்கு இந்த ரோடே இருந்துச்சு. குத்துமதிப்பா ரண்டரை வேலியில அரை வேலி ரோடாவே இருந்துச்சு. ரோடுன்னா ரோடு மண்ணு ரோடுன்னாலும் லாரியே வயலுக்கு உள்ளார போயிட்டு வெளியில வரலாங்ற அளவுக்கு நல்லா ஏத்திப் போட்டுருந்தாரு. வயலச் சுத்திலும் அப்பிடிப் பண்ணி, வயலுக்கு உள்ளாரயும் எந்த வயல்ல போயி நெல்லு மூட்டைய ஏத்திட்டு வாரப்புலயும் குறுக்காலயும் நெடுக்காலயும் போட்டுருந்தாரு. கிட்டதட்ட பழங்காலத்து மொறையில வேற்குடியில ஒரு காலத்துல நெல புலம்ங்க எப்பிடி இருந்திருக்குமோ அப்பிடி மாத்தி வெச்சிருந்தாரு.
            ஒவ்வொரு ரோட்டுக்கு உள்ளாரயும் ஆழமான வாய்க்கால்களா வேற வெட்டி வெச்சிருந்தாரு தண்ணிய தேக்கி வெச்சிருக்கிறாப்புல. அத்தோட தண்ணியத் தேக்கிக்கிறாப்புல ரண்டு மாமா நெலத்தையும் குட்டையா வெட்டிப் போட்டிருந்தாரு. அதெ சுத்தி வேப்பங்கொளத்துலேந்து குட்டைத் தென்னைகளா வாங்கிப் போட்டுந்தாரு. தென்னம் புள்ளைகள வாங்கியாறப்போ சுப்பு வாத்தியாரையும் அழைச்சிட்டுப் போனாரு. அப்போ, "இந்த மாதிரிக்கி ஒரு வெவசாயப் பண்ணைய நீஞ்ஞளும் உருவாக்குங்க வாத்தியாரே!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு. "பொண்ணு கலியாணத்தெ முடிச்சிப்புட்டுத்தாம் காசி மிஞ்சுனா பாக்கணும்! இதுல வுட்டுப்புட்டுப் பொண்ணுக்குக் கலியாணம்ன்னா ச்சும்மா நிக்க முடியாதுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            விநாயகம் வாத்தியாரு பண்ண இந்த வேலைய வேலையத்த வேலையாத்தாம் ஊரு சனங்கப் பாத்துச்சு. "வெள்ளாமயில அப்பிடி என்னத்தெ வருமானத்தப் பாத்துட முடியும்ன்னு நெனைச்சிட்டு விநாயகம் வாத்தி இந்த வேலையப் பாக்குறாம்? எந்தப் பயெ யோஜனனு இத்துன்னு தெரியலயே?"ன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. ரோட்ட அணைச்சி முடிச்சப்போ சுப்பு வாத்தியாரு ஒரு தவா போயிப் பாத்திருந்தாரு. விநாயகம் வாத்தியாரு அந்த ரோட்டுல நெல்லு அறுவடைய முடிச்சிட்டு ஒரு வேலையப் பண்ணிருந்தாரு. ரோட்டுக்கு ரண்டு பக்கமா துவரையும், ரோட்டு முழுக்க உளுந்துமா தெளிச்சி வுட்டுருந்தாரு. புதுசா அணைச்ச மண்ணு, அத்தோட கொளத்துலேந்து அள்ளுன மண்ணுங்றதால துவரையும், உளுந்தும் ச்சும்மா பிய்ச்சுக்கிட்டு வெளைஞ்சுச்சு. உளுந்து ச்சும்மா சடைசடையா காய்ச்சுத் தொங்குனுச்சு. அத்தோட வயல்ல வெதைச்ச உளுந்தும், பயிறும் ஏகப்பட்ட வெளைச்சல். அதெ தூக்கிச் சாப்புடுறாப்புல ரோட்டுல வெளைஞ்சிருந்த துவரையும், உளுந்தும் இருந்திருந்துச்சு. அதெ ஒரு மறுக்கா ஒரு போயிப் பாத்துட்டு வந்ததுதாங் சுப்பு வாத்தியாரு. பெறவு போகவே யில்ல. சுப்பு வாத்தியாரு சொன்ன யோசனையில விநாயகம் வாத்தியாருக்கு நல்ல லாவம். வயலுக்கு ரோடு போடுறதுக்குன்னு பண்ண செலவு அத்தனையையும் உளுந்துலயும் துவரையிலயும் எடுத்தாரு.
            இந்த வேலையச் செஞ்சதுக்குப் பிற்பாடு அந்த வருஷம் வந்த வெள்ளத்துல சுத்துப்பட்டுல பாதிக்கப்படாத நெலபுலம்ன்னா அது விநாயகம் வாத்தியாரோடதா இருந்துச்சு. வயலெ சுத்திலும், உள்ளாரயும் ரோட்டு அளவுக்கு ஏத்தி அவரு எடுத்திருந்த தடுப்பால வெள்ளமா பாய்ஞ்ச தண்ணி உள்ளார போவ முடியல. அதுக்கு அடுத்த வருஷம் பஞ்சமா கெடந்தப்போ விநாயகம் வாத்தியாரு நெலபுலங்க மட்டும் காய்ச்சல் இல்லாம கெடந்துச்சு. எழும்பிக் கெடந்த தடுப்புக்குள்ள வெட்டியிருந்த வாய்க்கால்கள்லயும், குட்டையிலயும் தண்ணி வந்த நேரமா பாத்து தண்ணியா நல்லா வுட்டுக் கட்டிருந்தாரு விநாயகம் வாத்தியாரு. எப்ப ஆத்துல தண்ணி வந்தாலும் தண்ணி உள்ளார வந்து நெரம்பிடும். பெறவு தண்ணி வார ரண்டு மாச காலத்துக்கு ஆனாலும் விநாயகம் வாத்தியாருக்கு மட்டும் கவலெயில்ல. மித்த வயலுங்க எல்லாம் தண்ணி வராம மூணு வாரத்துக்குள்ள சுருண்டுச்சுன்னா விநாயகம் வாத்தியாரோட வயலுங்க ரண்டு மாசத்தத் தாண்டியும் தாங்கும். அந்த அளவுக்கு விநாயகம் வாத்தியாரு செஞ்சிருந்தாரு.

            ஆத்துலேந்து தண்ணி வெள்ளமா வந்தாலும் செரித்தாம், ஆத்த நனைச்சி வுடுறாப்புல தண்ணி ஊர்ந்து வந்தாலும் செரித்தாம் விநாயகம் வாத்தியார்ர கேட்டுட்டுத்தாம் அவரோட வயலுக்குள்ளு வெள்ளம் நொழைய முடியும், அது போல அவர்ர கேட்டுட்டுத்தாம் வயலுக்குள்ள உள்ளார வந்த தண்ணி வெளியில போவ முடியும். பெரிய வரப்பா இருந்தாலும் வயக்காரன் அசந்த நேரமா பாத்து, பக்கத்து வயக்காரனுவோ தண்ணிய அந்தாண்ட இந்தாண்ட வெச்சிட முடியும். சின்ன வரப்பா இருந்தாலும் நண்டு தோண்டி வைக்குற வளையில தண்ணித் தங்காம போயிடும். ஒரு ரோட்டையில்லா போட்டு வெச்சிருக்காரு விநாயகம் வாத்தியாரு. சுப்பு வாத்தியாரு தந்த யோசனையில கெழக்கு டெல்டா பகுதியில மொத மொதலா வெள்ளாமையில காச அள்ள ஆரம்பிச்ச வெவசாயி ஆனாரு விநாயகம் வாத்தியாரு. அதால அடிக்கடி அவரு சுப்பு வாத்தியாருகிட்டெ கலந்துக்கிட வந்துடுவாரு.
            சுப்பு வாத்தியாருக்கு அத்து தன்னோட யோசனைங்றதுல ஒடம்பாடு கெடையாது. அதெ விநாயகம் வாத்தியாரு ஒத்துக்கிட மாட்டாரு. பெருந்தன்மையும், பணிவும் அப்பிடிச் சொல்ல வைக்குறதா சொல்லுவாரு. சுப்பு வாத்தியாரு ஒத்துக்கிடாம சொல்வாரு, "ஒஞ்ஞளுக்குச் சந்தேகம்ன்னா ஒஞ்ஞ பொறப்புக்கு மின்னாடி வாய்க்கா வரப்புக எப்பிடி இருந்துச்சுன்னு வெவரம் தெரிஞ்ச ஆளுங்ககிட்டெ கேளுங்க. அப்பிடித்தாம் இருந்திருக்கும்!"ம்பாரு சுப்பு வாத்தியாரு. "இதென்ன புதுக் கதெ?"ம்பாரு விநாயகம் வாத்தியாரு.
            "புதுக் கதெல்லாம் வாத்தியார்ரே! பழயக் கதெதாங். அப்போ வயலுக்கு எரு அடிச்சாவணும், வெளைஞ்சதெ கொண்டாந்து ஆவணும். எல்லாம் மாட்டு வண்டியிலத்தாம். மாட்டு வண்டி தாராளமா போயிட்டு வர்றதுக்கு ஏத்தாப்புல வரப்புகளே ரோடாத்தாம் இருக்கும். அத்தோட களம் பொழங்கியாவணும். அதுக்கும் வசதியா இருக்கும். இப்போ எவ்வேம் களத்துல பொழங்குறாம்? களம் எஞ்ஞ இருக்கு? தார் ரோட்டுல போட்டுல்லா களம் பொழங்கி அந்தாண்ட இந்தாண்ட வாகனங்கள போவவும் வுட மாட்டேங்றாம், வரவும் வுட மாட்டேங்றாம்! அந்த வரப்புகள்ளத்தாம் கறிகாய்ங்களயும், வரப்பு உளுந்தையும் அப்போ போட்டு வைக்கிறது. வயக்காட்டுப் பக்கம் போனாக்க அவரையும், வெண்டையுமா ஆம்பளைன்னா துண்டுலயும், பொம்பளைன்னா முந்தியிலயும் முடிஞ்சிட்டு வாரது. எப்போ ரசாயன உரம் வந்துச்சோ, டிராக்கடருங்க வந்துச்சோ அன்னிக்கே எல்லாம் போச்சு. நாலு மாட்டு வண்டியில அடிச்ச எருவெ ரண்டு மூட்டை ரசாயன உரத்தெ தலையில தூக்கிட்டுப் போயி அடிக்க ஆரம்பிச்சாம். நடந்துப் போறதுக்கு எதுக்குடா அம்மாம் பெரிய வரப்புன்னு ரோடு போல இருந்த வரப்ப அவனவனும் ஒத்தையடிப் பா‍தெ அளவுக்குச் சுருக்குனாம் பாருங்க, அதுல எளைச்சித் துரும்பா போனதுதாங் வரப்புக ஒவ்வொண்ணும். மனுஷனுக்கு ஆசெ வேற. வரப்பு இருக்குற எடத்தெ கொஞ்சம் வயலா ஆக்குன்னா போடுற ரசாயன ஒரத்துக்கு வெளைஞ்சித் தள்ளும்ன்னு. அதாங் வெளைஞ்சித் தள்ளுனுச்சு வர்ற வெள்ளத்த தாக்குப் பிடிக்க முடியாமலும், தண்ணி வாராம போனா உண்டாவுற வறட்சிய எதுத்து நிக்கு முடியாமலும்! அதால நாம்ம யோஜனங்றது பழங்காலத்தது. பாரம்பரியமான மொறை. தண்ணிங்றது நம்மள கேட்டுட்டு உள்ள வந்து, நம்மள கேட்டுட்டு வெளியில போனா வெவசாயம் நல்லா இருக்குங்றது ஒரு மொறெ. நம்மப் பக்கத்துல பெரிசுங்க பேசிக்கிடுவாங்க. அதெ சொன்னேம். பாக்குறவங்கிட்டெ எல்லாந்தாம் சொல்றேம். எவ்வேம் கேட்டாம்? கேட்டது நீஞ்ஞத்தாம் வாத்தியார்ரே! இதுல நமக்கென்ன பெருமெ இருக்கு?"ம்பாரு சுப்பு வாத்தியாரு. இப்பிடி ஆரம்பிச்சப் பேச்சுதாங் சித்துவீரன் காலங்காத்தாலயே வந்ததுக்கு மொத நாளு சாயுங்காலமா சுப்பு வாத்தியாரு வூட்டுல அவருக்கும் விநாயகம் வாத்தியாருக்குமா கொஞ்சம் இப்பிடி நீண்டுப் போச்சு.
            "என்னத்தெ இருந்தாலும் ஒஞ்ஞளுக்கும் அப்பிடி ஒரு அமைப்ப உண்டு பண்ணிக் கொடுக்காம ஓயுறதில்ல!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "நமக்கென்ன அம்புட்டு நெலபுலமா இருக்கு? இருக்குறதும் ஓர் எடமா யில்ல. இஞ்ஞ ஒண்ணும் அஞ்ஞ ஒண்ணும்ன்னு துண்டு துண்டால்லா கெடக்கு. பிற்காலத்துல பாக்கலாம் அஞ்ஞ இஞ்ஞன்னு வாங்கிப் போட்டு ஒண்ணா ஆக்க முடியுமான்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏஞ் சொல்றேம்ன்னா, இப்போத்தாம் வெள்ளாம பண்றதுக்கே ஆசயா இருக்கு வாத்தியார்ரே! இந்த வருஷத்து வெளைச்சல வந்துப் பாக்கலயே நீஞ்ஞ? நாளைக்கிக் காத்தால வந்துட்டுப் போனீங்கன்னா தேவலாம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "எஞ்ஞ பேத்திய வுட்டுப்புட்டுக் கெளம்புறதுக்கு மனசு வார மாட்டேங்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞத்தாம் செரியா பண்ணிருக்கீங்க வாத்தியாரே! மவனுக்குக் கலியாணத்தப் பண்ணி பேத்தியாள தூக்கிக் கொஞ்சுறாப்புல. நாம்ம மவளுக்குக் கலியாணத்தப் பண்ணி பேத்தியாள அஞ்ஞ வுடறாப்புலல்லா ஆச்சு. கொஞ்சணும்ன்னா இதெயெல்லாம் போட்டுப்புட்டுல்லா மவ்வே புகுந்த வூட்டுப்பக்கமா போயாவணும்! அத்தெப் பேசி இனுமே கதெக்கு ஆவப் போறதில்ல. செரி கருக்கல்ல நாளைக்கு வந்துப்புடுங்க. நேரா வயக்காட்டுக்கே வந்துப்புடுங்க. அஞ்ஞயிருந்து வூட்டுக்கு வந்துப்புடலாம். நாளைக்கு எதிர்பார்க்கிறேம்! இப்போ கெளம்புறேம்! கறிகாயி வாங்க வந்த நாம்ம! பேசிட்டே நின்னுட்டேம்!"ன்னாரு விநாயகம் வாத்தியாரு.
            "பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பாக்குறதுல்லாம் யில்ல! நாளைக்கி வார்றீங்க!"ன்னு ஆர்டரு பண்ணாப்புல டிவியெஸ் சுஸூகியில ஏறிக் கெளம்புனாரு விநாயகம் வாத்தியாரு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...