11 Jul 2020

வளையம் ஒம்போது!

செய்யு - 503

            லாலு மாமாவுக்கு மொதல்ல ராத்திரி சாப்பாடு நடந்துச்சு சித்துவீரன் வூட்டுல. இட்டிலியும் வெங்காயச் சட்டினியும், அத்தோட மொளவா தொவையலும் சேர்ந்துச்சுன்னா லாலு மாமா ஒரு பிடி பிடிக்கும். அதுக்கேத்தாப்புல செஞ்சு வெச்சிருந்துச்சு சுந்தரி. சாப்பாட்டோட சாப்பாடா பேச்சு ஆரம்பிச்சிது. "பொம்பளைங்க கையால சமைச்சுச் சாப்புடுறதுதாம்டா ந்நல்ல சாப்பாடு!"ன்னுச்சு லாலு மாமா.
            "ஏம் சித்தப்பா! நீயி ஏம் தனியா கெடந்து தஞ்சார்ல்ல செருமப்படுறே? யாரு இருக்கா அஞ்ஞ ஒமக்கு? கெளம்பி இஞ்ஞ வந்துப்புடு. நல்லவெதமா சாப்புட்டுக் கெட! நாளுக்கு ஒண்ணா சமைச்சிப் போடச் சொல்றேம்!"ன்னுச்சு சித்துவீரன்.
            "நாம்ம ஒருத்தெம் அஞ்ஞ கெடக்குற மாதிரிக்கி, ஒம்மட மச்சாங்கார்ரேம் சென்னைப் பட்டணத்துல கெடக்குறாம் ஞாபவமிருக்கா?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆம்மா சித்தப்பா! இனுமே தாமசம் பண்ணாமா பாத்துக் கலியாணத்த முடிச்சி வுட்டுப்புடணும்!"ன்னுச்சு சித்துவீரன்.
            "ன்னடா இத்து நாம்ம எதெ நெனைச்சிட்டு வந்தேமோ அதெப் பட்டுன்னுப் புடிச்சிப்புட்டு பத்திட்டுப் பேசுறீயே?"ன்னுச்சு லாலு மாமா.
            "சித்தப்பா! நீயி பாட்டுக்குப் பொண்ணுல்லாம் பாத்துத் தொலைச்சிப்புடாதே! நாம்ம பாத்து வெச்சிருக்கேம் அருமையானப் பொண்ணு!"ன்னுச்சு சித்துவீரன். அதெ கேட்டதும் லாலு மாமாவுக்குப் பொசுக்குன்னுப் போச்சு. நாம்ம ஒரு பொண்ணப் பாத்து, இவ்வேம் ஒரு பொண்ணப் பாத்து ரண்டு பொண்ணையா கட்டி வைக்க முடியும்ன்னு நெனைப்பு லாலு மாமாவுக்கு. சித்துவீரன் பிடிச்சா பிடியில்ல நிக்குற ஆளு. அவ்வேம் எந்தப் பொண்ணப் பாத்து வெச்சிருக்கானோங்ற நெனைப்புல, "நாஞ்ஞ பெரிய மனுஷங்க யில்லங்ற நெனைப்புல நீயாவே பாத்துட்டீயாடா?"ன்னுச்சு லாலு மாமா.
            "ன்னா சித்தப்பா! பொண்ணு இத்துன்னு சொல்லப் போறேம். பிடிச்சிருந்தா மேக்கோண்டு பேசப் போறேம். ல்லன்னா வுட்டுப்புடு. வேற எடத்தெ பாத்துப்பேம்!"ன்னுச்சு சித்துவீரன். இவ்வேம் எப்பிடிடா இந்த அளவுக்குப் பக்குவமா மாறுனாம்னு நெனைச்சிக்கிட்டு லாலு மாமா, "சொல்லு நீயி எந்தப் பொண்ண பாத்து வெச்சிருக்கேன்னுத்தாம் பாப்பேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அத்து வந்துச் சித்தப்பா! கெராமத்துலேந்து பாத்தாத்தாம் பொண்ணு பொண்ணா இருக்கும். டவுனு பொண்ணுக எல்லாம் ப்போ சரியில்ல. படிக்கிற காலத்துலயே கெட்டுப் போயிக் கெடக்குறாளுவோ. அதெ நம்ம அனுபவத்துலயே பாத்தாச்சுன்னு வெச்சக்கோயேம்!"ன்னு ஒரு பீடிகையோட சொல்லிட்டு சித்துவீரன் சுந்தரிய ஒரு மொறைப்பு மொறைச்சிட்டு, "வேத்துக் குடும்பத்துல போயி ஒரு பொண்ணு எப்டி இருக்கும்ன்னு ஏம் ஆராய்ச்சிப் பண்ணிட்டுங்றேம்? தேவையில்ல சித்தப்பா! நமக்குத் தெரிஞ்ச எடமாவே பொண்ணப் பாத்துப் பிடிச்சிப் போட்டோம்ன்னா வெச்சுக்கோ பெரச்சன கெடையாது. ஒம் மனசுல என்னத்தெ ‍நெனைக்குதீயோ தெரியல. நாம்ம மனசுல நெனைச்சது சுப்பு வாத்தியோட பொண்ணு இருக்காளே செய்யு. பரவால்ல அதெ பிடிச்சிக் கட்டி வெச்சிப்புடலாம்!"ன்னு சித்துவீரன் சொல்ல சொல்ல லாலு மாமாவுக்கு மொகத்துல சந்தோஷம். அதெ வெளிக்காட்டிக்காம சித்துவீரன் சொல்றதையே கேட்டுக்கிட்டு இருந்துச்சு.
            "பொண்ணும் பெரிய படிப்புல்லாம் படிச்சிருக்கு. குடும்பமும் நல்ல குடும்பம். நாம்ம சொல்றதெ தட்டாத ஆளு சுப்பு வாத்தி. நாம்ம மின்னாடி சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வேலைக்குப் போறப்ப பொண்ணப் பாத்தவே முடிவு பண்ணிட்டேம். அப்போ ஒண்ணுத்தையும் சொல்லிக்கிடல. அதெ கணக்குப் பண்ணித்தாம் அந்தப் பொண்ணு காலேஜூக்குப் போறப்ப சைக்கிளு ஸ்டாண்டுல போட்டுட்டுப் போவும் பாரு, அதெ நம்ம வூட்டுக்கு மின்னாடி போட வெச்சேம். அப்போ அஞ்ஞ சுப்பு வாத்தி வூட்டுல வேல. அஞ்ஞயும் கவனிக்கிறது, இஞ்ஞயும் ஒவ்வொரு நாளும் பொண்ண கவனிக்கிறது. பதுவிசா வரும், சைக்கிளப் போடும். பதுவிசா சைக்கிள எடுத்துட்டுப் போயிடும். வூட்டு வேலையப் பாக்கும். படிக்கும். யாருட்டயும் சிரிச்சிக்கிட்டு நின்னுப் பாத்தது கெடையா. ஒரு வார்த்தெ பேசாது. செளரியமான்னு கேட்டா செளரியம்ன்னு சொல்லிட்டுக் கெளம்பிடும். அத்தனெ நாளு சைக்கிளப் போட்டிருக்கு. அதுவா ஒரு வார்த்தெ பேசாது. நாம்ம பேசுனாத்தாம் வார்த்தெ வரும். அதுவும் நாலு வார்த்தெக்கு ஒரு வார்த்தெதாம் பதிலு வரும். அஞ்ஞ இஞ்ஞ நிக்குறது கெடையாது. வர்றதும் போறதும் தெரியாது. பொண்ணுன்னா அப்பிடி இருக்கும். அப்பவே முடிவு பண்ணிட்டேம், இந்தப் பொண்ணுத்தாம் பாலாமணிக்குன்னு! எல்லாம் கணக்குப் போட்டுத்தாம் வெச்சிருக்கேம். நீயி நெனைக்குறாப்புல வெட்டியா இருக்குறதா நெனைச்சிப்புடாதே சித்தப்பா!"ன்னுச்சு சித்துவீரன்.
            லாலு மாமாவுக்கு இப்போ என்னத்தெ சொல்றதுன்னு ஒரு தெகைப்பு உண்டானுச்சு. இருந்தாலும் பேசியாவணுமேன்னு பேசுனுச்சு. "நமக்கும் அப்பிடி ஒரு நெனைப்புத்தாம். கேட்டுப் பாக்கணும் அவுங்க எப்பிடி ஒரு நெனைப்புல இருக்காங்கன்னு. அத்தோட நம்ம பய டாக்கடருல்லா. செய்மொறைகளயும் பாத்துக்கிடணும். அதெ வுட்டுப்புடக் கூடாது சொந்தக்கார்ரேம் கால்ல போயி விழுவுறேம்ன்னு!"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்மப் போயிக் கேட்டோம்ன்னா வெச்சுக்கோ, சொத்த அழிச்சிச் செய்யுறத்துக்குத் தயாரா இருபபாங்க தெரிஞ்சிக்கோ சித்தப்பா! இந்தக் காலத்துல பாலாமணியப் போல ஒரு மருமவ்வேன் கெடைக்க அவுங்க கொடுத்து வெச்சிருக்கணும். ஒரு கெட்டப் பழக்கம் கெடையா. வயசு இம்புட்டு ஆகியும் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறது இல்ல. கவர்மெண்டு உத்தியோகம். கைநெறையச் சம்பளம். அவுங்களே தேடுனாலும் இப்பிடி ஒரு மாப்புள்ளயப் பிடிக்க முடியாது. கட்டிக் கொடுக்குறதுதாங் அவுங்களுக்கு நல்லது. போயிச் சொன்னா போதும் கலியாணத்தெ நாளைக்கே முடிச்சிப்புடலாம்! ஓம் நெனைப்பென்ன சித்தப்பா அதெ சொல்லு மொதல்ல! நீயி வந்திருக்கிறதப் பாத்தா நீயி ஒரு பொண்ண பாத்துட்டு வந்திருப்பே போலருக்கு. எப்பிடிப் பாத்தாலும் நீயி பாத்துட்டு வந்த பொண்ணு நாம்ம சொல்ற பொண்ணுக்குக் கொஞ்சம் கூட ஈடாவாது பாத்துக்கோ! இப்போ சொல்லு நீயி பாத்துட்டு வந்தப் பொண்ணப் பத்தி!"ன்னுச்சு சித்துவீரன்.
            "நமக்கும் அப்பிடி ஒரு நெனைப்பு உண்டுத்தாம். ஒன்னப் பத்திதாம் நமக்கு யோஜனையா இருந்துச்சு. நீயி பாட்டுக்கு எதாச்சிம் ஒரு பொண்ணப் பாத்துட்டு அதெ கட்டி வைக்கணும்னு பிடிவாதமா நின்னீன்னா என்னத்தெ பண்ணுறதுன்னு? பரவால்ல சரியாத்தாம் பிடிச்சிருக்கே. பாலாமணிய ஒரு வார்த்தெ கேட்டுப் பிடிச்சிருக்கான்னா வெசயம் முடிஞ்சிடுச்சு. நீயி இதாங் பொண்ணுன்னு நெலையா நிக்குறது தெரிஞ்சா அவ்வேம் செரின்னு கட்டிக்கிடுற ஆளுதாம். இருந்தாலும் அவங்கிட்டெயும் கேட்டுட்டா நல்லது!"ன்னுச்சு லாலு மாமா.
            "இந்தாரு சித்தப்பா! நாம்ம பாத்துருக்குற பொண்ணுன்னே சொல்லாதே. இதாங் பொண்ணு, எப்பிடின்னு நீயா கேக்குற மாதிரிக்கிக் கேளு. என்ன பதிலு வர்றதுன்னு பாரு. அப்பிடி பிடிக்கலன்னு வுட்டுப்புடு. அவ்வேம் ராசி அம்புட்டுத்தாம். அதுக்கு நாம்ம என்னத்தெ பண்ணுறத?"ன்னுச்சு சித்துவீரன்.

            "ன்னடா இத்து? பொசுக்குன்னு இப்பிடிச் சொல்லிப்புட்டே?"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்ம பாத்து வெச்சிருக்குற பொண்ணு அப்பிடிப்பட்ட பொண்ணு சித்தப்பா. பிடிக்காதுன்னாலும் சொல்ல முடியா. கையிலத்தாம் போன வெச்சிருக்கீயே! இப்பவே அடிச்சிக் கேளேம்! ன்னா பதிலு வாரதுன்னு பாப்பேம்!"ன்னுச்சு சித்துவீரன்.
            "அவரசப்படாதடா பித்துக்குளிப் பயலே! நாம்ம வேலனெ வுட்டுக் கேக்கச் சொல்றேம்! அவனுவோ ரண்டு பேரும்தான ஒண்ணுக்குள்ள ஒண்ணா கெடக்குறானுவோ! நாம்ம கேட்டாக்க மாமா கேட்டுப்புடுச்சேன்னு கூட சம்மதம்ன்னு சொல்லுவாம். அவ்வேம் வேலன் கேட்டான்னா வெச்சுக்கோ ன்னா நெனைக்குறாங்றது தெரிஞ்சிப்புடும் பாரு!"ன்னுச்சு லாலு மாமா.
            "செரி யப்போ கேக்கச் சொல்லு!"ன்னுச்சு சித்துவீரன்.
            "நீயென்ன நாளைக்கே கலியாணத்த முடிச்சி காரியத்தெ முடிச்சிப்புடுவே போலருக்கே. குடும்பத்துல இன்னும் கொஞ்சம் கலந்துப்பேம்டா! பேச்ச எடுத்த ஒடனே ஆச்சா போச்சான்னா முடிஞ்சிட்டாடா?"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்ம பாத்து வெச்சிருக்குற பொண்ணு அந்த மாதிரிக்கிச் சித்தப்பா!"ன்னுச்சு சித்துவீரன்.
            "இந்தாருடா வேலனுக்கே மொறை வந்துச்சுன்னா நாமளே சுப்பு வாத்தியோட பொண்ணத்தாம் கட்டி வெச்சிருப்பேம்!"ன்னுச்சு லாலு மாமா சிரிச்சிக்கிட்டே.
            "பெறவென்ன? பாலாமணிக்குக் கட்டி வையி!"ன்னுச்சு சித்துவீரனும் சிரிச்சிக்கிட்டே.
            லாலு மாமா சுந்தரியப் பாத்துச்சு. "என்னவோ இதுல ஒண்ணுலத்தாம் எல்லாம் செரியான தெசையில போறாப்புல இருக்கு!"ன்னுச்சு சுந்தரி.
            "கலியாணத்துக்கு கட்டிலு, பீரோ, டைனிங் டேபிளு சாமாஞ் செட்டுல்லாம் நாம்மத்தாம் நம்ம கையாலத்தாம் செஞ்சுத் தர்றதா இருக்கேம்! அத்து முழுக்க நம்ம வேலைப்பாடுத்தாம்! சுப்பு வாத்தி அதுக்கான காசிய எடுத்து வெச்சிப்புடணும்னு"ன்னுச்சு சித்துவீரன்.
            "கலியாணம்ன்னா இன்னும் செல பேச்சுகல்லாம் இருக்குடா. அவ்சரப்படாதடா! ஒங் கையால செஞ்சுக் கொடுப்பீயோ? யில்ல வெளியில செஞ்சதெ வாங்கிக் கொடுப்பீயோ? அத்துல்லாம் பெறவுடா!"ன்னுச்சு லாலு மாமா.
            "பாத்தீயா சித்தப்பா! நீயும் நம்மள நக்கல் பண்ணி கால வாரி வுட்டுகிட்டு? பாரீன்ல செய்யுறாப்புல எப்பிடிச் செய்யுறேம் பாரு! நம்ம வேல எப்பிடின்னு சுப்பு வாத்தி வூட்டுக்கு ஒரு பீரோ செஞ்சிக் கொடுத்துருக்கேம் பாரு! அதெ பாத்துப்புட்டு வந்துப் பேசு!"ன்னுச்சு சித்துவீரன்.
            "ஒம் புருஷன் போறப் போக்க பாத்தா, கலியாணத்த முடிச்சி கொழந்தெ ‍பொறந்து தொட்டிலும், நடவண்டியும் செய்யுறதுல போயி நிப்பாம் போலருக்கே! படுத்து எழும்பிக் காலையில பேசுவேம்டா!"ன்னுச்சு லாலு மாமா சுந்தரியப் பாத்து பேசுறாப்புல, சித்துவீரன பாக்காம.
            "ந்நல்ல காரியத்தெ தள்ளிப் போடக் கூடாது சித்தப்பா!"ன்னுச்சு சித்துவீரன்.
            "தள்ளில்லாம் போடலடா! பொறுத்து நெதானிச்சிச் சேய்வேம்ங்றேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            அதுக்குப் பெறவு பேச்சு தொடர்ந்தாப்புலத்தாம் இருந்துச்சு. இவுங்க பேச்சைக் கேக்க முடியாம புள்ளீயோ ரண்டும் எப்பயோ படுத்துடுச்சுங்க. இவுங்களும் பேசிட்டே இருந்தவங்க எப்போ படுத்தாங்கன்னு தெரியாம படுத்து உறங்கியிருந்தாங்க. விடியக் காத்தால லாலு மாமா எழுந்திரிச்சிப் பாத்தப்போ சித்துவீரனெக் காணும். நமக்கு மின்னாடி எழுந்திரிச்சி எஞ்ஞப் போனாங்ற நெனைப்புலயே லாலு மாமா, "எஞ்ஞ அவ்வேம் காங்கல?"ன்னுச்சு டீத்தண்ணியப் போட்டுக்கிட்டு இருந்த சுந்தரியப் பாத்து.
            "சித்தப்பா வந்திருக்குன்னு காலாங்காத்தாலே நல்ல ஆட்டுக்கறியும் ரத்தமும் எடுக்கணும்னு கெளம்பிப் போயிருக்கும்! இன்னிக்கு மத்தியானச் சாப்பாடு சாப்புடாம கெளம்ப முடியாது!"ன்னுச்சு சுந்தரி.
            "காலச் சாப்பாட்ட முடிச்சிட்டாவது கெளம்புலாம்னு பாத்தேம். முடியாது போலருக்கே!"ன்னுச்சு லாலு மாமா.
            "அஞ்ஞ தஞ்சார்ல என்னத்தெ வெச்சிருக்கே? ன்னவோ பொதையல காவலு காக்குற பூதத்தெ போல கெளம்பணும்னு நிக்குதீயே? இருந்து தங்கிச் சாப்புட்டுட்டுப் போ!"ன்னுச்சு சுந்தரி.
            லாலு மாமா எழுந்து கொல்லைப் பக்கமா போயிட்டு திரும்புனுச்சு. அதுக்குள்ள சுந்தரி டீத்தண்ணிய நீட்டுனுச்சு. "காலையில ஒண்ணாச்சும் எழுந்திருக்குதா பார்ரேம்?"ன்னு புள்ளீயோள எழுப்பி வுட்டு கொல்லைப் பக்கம் அடிச்சி வுட்டது. பொறுமையா டீயக் குடிச்சி முடிச்ச லாலு மாமா இப்போ கெளம்புறதுக்கு இல்லன்னு ஆனதும் பெஞ்சுல ஒடம்ப சாய்ச்சு படுத்துக்கிடுச்சு. சுந்தரி காலைச் சாப்பாட்டுக்கான வேலைகள ஆரம்பிச்சிது. ஏழரை மணி வாக்குல சுந்தரி சொன்னாப்புல சித்துவீரன் ஆட்டுக்கறியோடயும், ஆட்டு ரத்தத்தோடயும் டர்புர்ருன்னு டிவியெஸ் எக்ஸெல்ல வந்து எறங்கி உள்ளார வந்துச்சு.
            "ன்னடா இத்து காலங்காத்தாலேயே? எழுப்பிருந்தின்னா நாமளும் வந்திருப்பேம்லா! கறிக்கடைய எல்லாம் பாத்து நாளாச்சு!"ன்னுச்சு லாலு மாமா.
            "அசந்து தூங்கிட்டு இருந்தே! அதாங் ஏம் எழுப்புணும்ன்னு கெளம்பிட்டேம்! போனதுதாங் போனேம்! நேர்ரா வண்டிய சுப்பு வாத்தி வூட்டுக்கு வுட்டேம்!"ன்னுச்சு சித்துவீரன். அதெ கேட்டதும் பக்குன்னு ஆயிடுச்சு லாலு மாமாவுக்கு.
            "அஞ்ஞ ஏம்டா காலங்காத்தாலேயே போனே?"ன்னுச்சு லாலு மாமா படபடப்பு அடங்காம.
            "வெசயத்தெ சொல்லிப்புடணும்லா சித்தப்பா! யில்லன்னா அவுங்க வேற எங்காச்சிம் மாப்புள்ளயப் பாத்து அதுல எதாச்சிம் கதெ முடிஞ்சிருந்துச்சுன்னா? ஒரு வார்த்தெ சொல்லிப்புட்டேம்னா நல்லதுதான சித்தப்பா?"ன்னுச்சு சித்துவீரன்.
            லாலு மாமாவுக்கு மொகத்துல எரிச்சல் தாங்கல. இப்பிடி ஒரு மோடுமுட்டிப் பயல வெச்சுக்கிட்டு என்னத்தெ பண்ணுறதுங்ற கோவம் மனசுக்குள்ள. அதெ வெளியில காட்டிக்கிட முடியாம, "என்னத்தடா போயி அஞ்ஞ சொன்னே? இன்னும் இஞ்ஞ கலந்துக்கிட வேண்டியது நெறைய இருக்கே?"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்ம போன நேரம் சுப்பு வாத்தி யில்லே. வேற்குடி விநாயகம் வாத்தியாருக்கு சோலியா போயாச்சு. வூட்டுல வெங்கு யத்தாச்சித்தாம் இருந்துச்சு. இந்த மாதிரிக்கிச் சங்கதி, நாம்ம பேசிட்டு இருக்கேம், வேற எடத்துல மாப்புள்ள பாக்க வாணாம்ன்னு சொன்னேம். அதோட மொகத்தப் பாக்கணுமே. சந்தோஷத்துல அப்பிடியே வானத்துக்கேப் பறந்துப்புடும் போலருக்கு. நாம்ம வேண்டுன ஆண்டவேம் நம்மள கைவுடலன்னு அது பாட்டுக்குப் பொலம்ப ஆரம்பிச்சிடுச்சு. மனசுல பட்டுச்சுன்னா அத்தெ மனசுலயே வெச்சிக்கிட கூடாது சித்தப்பா. சட்டுபுட்டுன்னு சொல்லிப்புடணும். மனசுங்றது மாறிட்டே இருக்குறது. சூழ்நெலயும் மாறிட்டே இருக்கும். வெளியில சொன்னத்தாம் இன்னதுங்றது தெரியும்!"ன்னுச்சு சித்துவீரன்.
            "பேசுறேன்னுத்தானே சொன்னே? வேற ஒண்ணுத்தையும் சொல்லலயே?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆம்மா சித்தப்பா ஒனக்கு எல்லாத்துலயும் சந்தேகந்தாம்! அதாங் கதெ முடிஞ்சிடுச்சே! ஆவுற அடுத்த கதெயப் பாரு!"ன்னு சொல்லிட்டு சித்துவீரன், "சித்தப்பாவுக்கு ஆட்டுரத்தத்தெ சமைச்சி இட்டிலியச் சுட்டுப் போடு! அதெ தொட்டுக்கிட்டு நாப்பது ஈடு சாப்புடும்!"ன்னுச்சு சித்துவீரன். வழக்கமா இது போல செய்யுறப்போ சந்தோஷத்துல குதிக்குற லாலு மாமாவோட ரத்தம், இப்போ கோவத்துல கொதிக்க ஆரம்சிச்சிடுச்சு.
            இப்பிடியா எட்டு வளையங்களா சேந்துகிட்டு இருந்த சங்கிலி, அதுவா இறுக்கி பிடிக்கிறதுக்கு மின்னாடி, ஒம்போதாவது வளையம் ஒண்ணே மொத்த சங்கிலியும் செய்ய வேண்டிய காரியத்தெ செஞ்சு இறுக்கி முடிச்சிடுச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...