9 Jun 2020

ராசி மவராசி! வந்துடும் நல்ல சேதி!

செய்யு - 473

            ஒரு சில பேத்துக்குப் பொறப்புலயே ஆளுற தெறமெ கூடி வந்தாப்புல இருந்துச்சு பூர்ணி அத்தாச்சியப் பாக்குறப்போ. பெரியவருக்கான நெலம் ஒன்றரை வேலி கணக்குல இருந்துச்சுன்னா, சின்னவருக்கும் நெலம் ஒரு வேலிய எட்டுன அளவுக்கு இருந்துச்சு. அதெ தாண்டி ரெண்டு பேரும் நெலத்த ப்ளாட்டு பிடிச்சும் வெள்ளாம பண்றதுண்டு. அப்பிடி பண்ணுறதெ கணக்கெடுத்த பெரியவரு மொத்தத்துக்கு ரெண்டரை வேலிலேந்து மூணு வேலி வரையிலான கணக்குல பண்ணுவாரு. சின்னவரு ரெண்டு வேலி அளவுக்காவாவது பண்ணுவாரு. வேற வெளி வேலைக்குப் போவாத பெரியவரு அம்மாம் நெலத்த சாகுபடிக்குப் ப்ளாட் பிடிச்சி பண்ணுறதுல ஒரு ஞாயம் இருக்குன்னா, வெளிவேல, சென்னைப் பட்டணத்துக்கு வேலைத்தோது, குடும்பப் பெரச்சனைன்னு அலைஞ்சிட்டு கெடக்குற சின்னவரு இருக்குற நெலத்தை வெள்ளாம பண்ணாலே போதும். ஆன்னா பெரியவருக்குப் போட்டியா இப்பிடி சில வெசயங்கள பெரியவர்ரத் தாண்டிப் பண்ணாத்தாம் சின்னவருக்குத் திருப்திப்படும்.
            நெலத்தை வாங்கிப் போட்டுட்ட சம்சாரி அதுல வெதைக்காம விட மாட்டாம், வெதைக்காம வுடுறது கேவலம் மட்டுமல்ல, தரித்திரமும் கூட. வெதைக்காம நெலத்தப் போடுறதெ உசுரு போறதப் போல ஒரு அவமானமா நெனைப்பாம். ஒரு துண்டு துணி நெலத்த வெதைக்காம வுட்டாலும் அதுல பரவுற களையும் செடிகளும் அப்பிடியே வூட்டுக்கும் பரவிடுங்றது ஒரு நம்பிக்கெ. வெதைச்சிப் போட்டுருக்குற நெலத்தைப் பாத்துப்புட்டு வூட்ட நோக்கி சீதேவியும், வெதைக்காம போட்டுருக்குற நெலத்தைப் பாத்துப்புட்டு வூட்ட நோக்கி மூதேவியும்ன்னு கெளம்பி வரும்ன்னு எந்தச் சம்சாரியக் கேட்டாலும் நின்னு அதுக்கு ஒரு கதையெச் சொல்லுவாம்.
            பெரியவரு அவ்ளோ நெலத்தைப் பிடிச்சாலும் வெதைக்காம போடாத அளவுக்குச் செய்யுறதுக்கு அவருக்கு உறுதுணை இருக்கு. சின்னவருக்கு? அது இல்லன்னு தெரிஞ்சாலும் மல்லுகட்டிக்கிட்டு மல்லுக்கு நிப்பாரு சின்னவரு. எல்லாம் பொண்ணு பூர்ணி இருக்குற தெகிரியம்தான். எதாச்சிம் ஒரு வருஷமாவது பெரியரோட நெலம், அவரு சாகுபடிக்குப் பிடிக்கிற நெலத்தத் தாண்டி அதிக அளவுக்குப் பிடிச்சி வெள்ளாம பண்ணிப்புடணும்னு ஒரு நெனைப்புத்தாம் சின்னவருக்கு. பெரியவர்ரத் தாண்டி ஒரு மரக்கா நெல்லாவது கூட வெளைச்சல்ல எடுத்துப்புடணும்ன்னு எந்நேரத்துக்கும் மனசுல நெனைச்சிட்டெ இருப்பாரு சின்னவரு.
            சின்னவரு அவரு வெச்சிருந்த ரெண்டு காலையும் சேத்துலயே வெச்சிருந்தா அவரு நெனைச்சதெ போல அதெ செஞ்சிக் காட்டக் கூடிய ஆளுதாம். அவரு நெலமைக்கு சேத்துல ஒத்த காலையும் மித்த மித்ததுல இன்னொரு காலையும்ல வைக்குறாப்புல இருந்துச்சு. பூர்ணி அத்தாச்சி தலையெடுத்த பிற்பாடு சின்னவரு சேத்துல வெச்சிருந்த ஒத்தக் காலையும் வெளிய எடுக்க வெச்சு, பூர்ணி அத்தாச்சி ரண்டு காலையும் சேத்துல வெச்சிது. வயல்ல கோடை ஒழவு ஓட்டி வுடுறதுலேந்து, சொந்த நெலம், ப்ளாட்டுக்குப் பிடிச்ச நெலம்னு சேர்த்து மொத்த நெலமான அம்பது மாவுலேந்து அறுவது மா வரைக்கும் நாத்தாங்கால் பாத்து வெதை வுடுறதுலேந்து, நாத்தாங்கால்லேந்து நாத்தப் பறிச்சி, அத்தனெ வயலுகளுக்கும் நடுறது வரைக்கும் ஒத்த ஆளா நின்னு ஆளுகள வெச்சிச் சுத்திச் சொழண்டு பாத்துப்புடும். ஆளுக கூட நின்னு வேலையையும் அங்கன இங்கனன்னு பாத்துக்கிட்டு, அம்பது அறுவது மாவையும் ஒரு நாளைக்கு பத்து சுத்தாவது சுத்திச் சுத்தி வந்துப்புடும். அப்படி அஞ்சு சுத்து வர்றதுக்குள்ள சராசரியான ஒரு ஆளு சொழண்டு சுருண்டு வுழுந்துடுவாம். பூர்ணி அத்தாச்சி அதுக்குல்லாம் அலுத்துக்கிறதில்ல. அதுக்கு வேலைச் செய்யாம, ‍சுத்திச் சொழலாம இருந்தாத்தாம் அலுத்துப் போவும், இல்லன்னா சலிச்சிப் போவும்.
            நடவு முடிஞ்சா களைப் பறிக்கிற வேலை ஆரம்பமாவும். களை பறிக்கிற வேலை ஆரம்பிச்சுன்னா களையப் பறிச்சி வயல்லயே போட்டு மிதிச்சி வுடச் சொல்லும். களையே இல்லன்னாலும் ஆளுகள பயிர்களுக்கு இடையில எறங்கி ஒரு மிதி மிதிச்சி வுடச் சொல்லும். அப்பிடிப் பண்ணாத்தாம் பயிருங்க நல்லா கெளம்பும்ன்னு சொல்லும். ஊர்ல அவனவனும் வயல்ல களை இல்லன்னா ஆளுகள வயல்ல எறங்க வுட மாட்டாம். ஏம் பெரியவரே ஆளுகள வயல்ல வுட மாட்டாரு. பூர்ணி அத்தாச்சி அதுலயும் வித்தியாசமாத்தாம் பண்ணும். அது சொன்னபடி களை இல்லன்னாலும் ஆளுகள எறங்கி மிதிச்சி வுட்ட அதுவோட வயலுக நல்ல வெளைச்சல் காணும். மித்த மித்த வயல்கள ஒரு மூட்டை, ரண்டு மூட்டை வெளைச்சல் கம்மியாத்தாம் காணும்.
            களை பறிப்பு முடிஞ்சா நெல்லு கதிரு வுட்டதப் பாத்து அறுவடை வேலைத்தாம். அம்பது மாவோ, அறுவது மாவோ பூர்ணி அத்தாச்சிக்கு ஒரு நாளு அறுவடைன்னா, அடுத்த மறு நாளு கண்டுமொதல்தாம். சின்னவரோட மொறை அது. ரெண்டு நாள்ல சோலிய முடிச்சிட்டாம் ஆச்சாரின்னு ஊர்ல பேசிக்கிடணும்னு நெனைப்பாரு. சின்னவருக்கு அறுவடைன்னா ஊரு சனமெ தெரண்டு வந்தாவணும். அந்த அளவுக்கு வெளியில தெரியாம கூலியக் கூடகொடுத்து காரியத்தெ முடிப்பாரு. அப்பிடி ஆளுகப் பத்தாமப் போனா பக்கத்துப் பக்கத்து ஊர்லேந்து ஆளுகள கொண்டாந்து எறக்கி வேலையப் பாக்கவும் யோசிக்க மாட்டாரு சின்னவரு.
            சின்னவரு மாதிரி பெரியவரு அப்பிடி அறுவடை பண்ண மாட்டாரு. ஒரு நாளைக்கு பத்து மா அறுவடைன்னா மறுநாளு அதுக்குக் கண்டுமொதல் ஆவும். அது கண்டுமொதல் ஆவுற அன்னிக்கு காலையில அடுத்த பத்து மாவுக்கு அறுப்பு ஆவும். அந்த அறுத்துப் போட்ட பத்து மாவுக்கு மறுநாளு கண்டுமொதல் ஆனா, அதுக்கடுத்த பத்து மாவுக்கு காலங்காத்தால அறுப்பு ஆவும். இப்பிடி அறுப்பு, கண்டுமொதல்ன்னு எப்பிடியும் அவருக்கு பத்து பாஞ்சு நாளாவது ஆவும் அறுத்து கண்டுமொதல் காண. இத்தனைக்கும் அவரோட ஒவ்வொரு அறுப்புக்கும், கண்டுமொதலுக்கும் அவரு ஒரு ஆளு, செயா அத்தை ரெண்டாவது ஆளு, குமாரு அத்தான் மூணாவது ஆளுன்னு குடும்பமெ வந்து நின்னு ஆவும்.

            சின்னவரோட அறுப்பும் கண்டுமொதலும் வித்தியாசந்தாம். பூர்ணி அத்தாச்சி இருந்ததால அப்பிடிப் பண்ண முடிஞ்சிது. அந்த ஒரு ரெண்டு நாளுக்கு மட்டும் எங்க வேலைன்னாலும் சின்னவரு நிறுத்திப்புட்டு வயக்காட்டுக்கு வந்து களத்து மேட்டுல உக்காந்துப்புடுவாரு. பூர்ணி அத்தாச்சிக்கு அந்த அளவுக்கு ஆளுகள வெச்சி வேலை வாங்குற நெளிவு சுளிவு அத்தனையும் அத்துப்படி. கண்டுமொதல் ஆவுற அன்னிக்கு வூட்டுக்குத் திரும்ப எப்படியும் ராத்திரிக்கிப் பத்து பதினோரு மணி ஆயிடும். கண்டுமொதல் ஆன மூட்டைகள்ல இருவது மூட்டை வரைக்கும் வூட்டுக்கு வரும். அத்தோட பூர்ணி அத்தாச்சி வூட்டுக்கு வந்துப்புடும். மித்தது எல்லாம் அன்னிக்கே யேவாரிக்கிட்டெ போயிடும். ராத்திரி ஒரு மணி ஆனாலும், ரெண்டு மணி ஆனாலும் அத்தனை மூட்டைகளையும் சின்னவரு யேவாரிட்டு நின்னு போட்டுப்புட்டு, கையில காசோடத்தாம் வூடு திரும்புவாரு.
            அறுப்புக்கு வயலுக தயாரு ஆவுறப்பயே சேத்தோட பதம் பார்த்து உளுந்தோ, பயிறோ அடிச்சிப்புடுறது. அந்தப் பதம் பூர்ணி அத்தாச்சிக்கு நல்லாவே தெரியும். செல வயல்கள்ல உளுந்து தறிகெட்டுப் போயி கெளம்பும். சில வயல்கள்ல பயிறு பெனாட்டி எடுத்துப்புடும். அப்பிடி ஒவ்வொரு வயலுக்கும் ஒரு கொணப்பாடு இருக்கு. அதெ பாத்து அடிச்சா வெதைச்சது அத்தனையும் பொன்னா வூடு திரும்பும். அந்த உளுந்து பயிற வித்தக் காசிய கடைக்குக் கொண்டு போன நகையா வாங்கிட்டுத் திரும்பிடலாம். அப்பிடி அதெ வெதைக்குறப்பத்தாம் சரியா இருக்கணும். உளுந்து நல்லா காய்க்குற வயல்ல பயிறையோ, பயிறு நல்லா கெளம்புற வயல்ல உளுந்தையோ மாத்தி அடிச்சிப்புட்டா சோலி முடிஞ்சது. வெளைஞ்சா எவ்ளோ வரும்ன்னு கணக்குப் போடுறதுல காவாசி வூடு வந்து சேர்ந்தா அதிர்ஷ்டம். இந்த வெசயத்தை எல்லாம் பெரியவரு அனுபவப்பட்டு கண்டுகிட்டார்ன்னா, பூர்ணி நெலபுலம்னு எறங்குன காலத்துலயே எப்பிடியோ அறிஞ்சி கத்துகிடுச்சிங்றதுதாங் ஆச்சரியம். அத்தோட அது கையால நாத்து வுட நெல்லு வெதை வெதைச்சாலும் சரித்தாம், உளுந்து பயிறு வெதைச்சாலும் சரித்தாம் வெளைஞ்சுத் தள்ளிடும். அப்பிடி ஒரு கைராசி.
            உளுந்து, பயிறு வெதைச்ச வயல்கள்ல அதுக செடி செடியா நிக்கும். பூர்ணி அத்தாச்சி வெதைச்சுதுன்னா ஒவ்வொண்ணும் கொடி கோடியா கெளம்பி சடை சடையா காய்ச்சிக் கெடக்கும். பொதுவா வரப்புல வெதைக்குற வரப்பு உளுந்துதாம் அப்பிடிக் காய்ச்சித் தள்ளும். வயலு உளுந்து அப்பிடிக் காய்ச்சித் தள்ளுறதில்ல. பூர்ணி அத்தாச்சி வெதைச்சா மட்டும் அப்படி ஆவும். அதால நல்லா ராசிக்காரப் பொண்ணுன்னு பூர்ணி அத்தாச்சிக்குப் பேரு உண்டானுச்சு. பெரியவரே சமயத்துல உளுந்து பயிறு வெதைக்குறப்போ பூர்ணி அத்தாச்சிய வயக்காட்டுப் பக்கம் பாத்துப்புட்டார்ன்னா போதும், "ஏ பொண்ணு! ராசிக்கார பொண்ணு! நம்ம வயலுக்கும் கொஞ்சம் தூவி வுட்டுப்புட்டுப் போறது!"ம்பாரு சிரிச்சிக்கிட்டெ. பூர்ணி அத்தாச்சி, "அதுக்கென்ன பெரிப்பா!"ன்னு பெரியவரு கையில இருக்குற கொட்டான்ன வாங்குனுச்சுன்னா இப்பிடிங்றதுக்குள்ள வெதைச்சிட்டு வரும்.
            "யே யப்பாடி! நாம்ம சின்ன புள்ளையில இருந்த வேகம்லா இருக்கு! இதுக்கு மட்டும் அமையுறவேம் ஒறுப்பான ஆள அமைஞ்சிப்புட்டா பொண்ணு வேலங்குடியையே வெலைக்குல்லா வாங்கிப்போட்டுடும் போலருக்கே!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிபாரு. நெனைச்சிக்கிட்டெ, "பூர்ணி பொண்ணு ஒமக்கு மாப்புள்ள பாக்கணும்ன்னா வடக்கத்திப் பக்கமோ, தெக்கத்திப் பக்கமோ தேடி அலைஞ்சித்தாம் மாப்புள்ளயக் கொண்டாரணும். இஞ்ஞப் பாத்தா இப்பிடி பொண்ணு வேகமா வேலப் பாக்குதே, பொண்ண அந்த வேகத்துல வேல பாக்குறப்போ கண்ணாலயே காங்க முடியலன்னு பாக்குறவேம் ஓடிப் போயிடுவாம்!"ம்பாரு சிரிச்சிக்கிட்டெ.
            "ச்சும்மா இருங்க பெரிப்பா! அதுல்லாம் அமைய வேண்டியப்படி அமைஞ்சிடும். நீஞ்ஞல்லாம் தேடி அலையுற அளவுக்கு இருக்காது. அப்பிடி ஒரு அலைச்சலையும் ஆண்டவேம் கொடுக்க மாட்டாம்!"ங்கும் பூர்ணி அத்தாச்சி. "அத்துச் சரித்தாம்டி பொண்ணே! நீயிப் பாக்குற வேல சுத்துப்புட்டு சனத்துக்கு எதுக்குத் தெரியாம கெடக்கு? இந்நேரத்துக்கு ஒன்னயப் பத்தி தெரியாதப் பயெ எவ்வேம் இருப்பாம். ஒமக்குச் சடங்கச் சுத்தித்தாம் மாப்புள்ளயத் தேடணும்னு இல்ல. கலியாணம் பண்ணப் போறதா ஒரு பேச்சு அடிப்பட்டாவே போதும், பொண்ணுக் கொடுடா கிட்டாம்! சடங்கெ சுத்திப் பொண்ண கொண்டுட்டுப் போறேம்ன்னு நிப்பாம் அவனவனும் ஒம்மட அப்பனுக்கு. பவுனு நகென்ன கூட ஒண்ணும் போட வேண்டியதில்லா. பொண்ணே பவுனு மாதிரித்தானே இருக்குதுன்னு ராவோட ராவா பிரித்திவிராசன் கணக்கா குதுரையில கொண்டுட்டுப் போயிடுவாம்!"ம்பாரு பெரியவரு. பூர்ணி அத்தாச்சி தலையக் குனிஞ்சிக்கிட்டு வெக்கப்பட்டுக்கிட்டுச் சிரிச்சிக்கிடும்.
            "அப்பிடியே காத்தவராயன் நாடத்துல பாக்குற ஆரியமாலா கணக்கால்ல இருக்கே!"ன்னு பெரியவரு கையி ரெண்டையும் மண்டைக்குக் கொண்டு போயி நெட்டி முறிச்சிக்கிவாரு. அவரு அப்பிடி நெட்டி முறிக்கிறதப் பாத்துப்புட்டு, "போங்க பெரிப்பா! எப்பப் பாத்தாலும் வேடிக்கைத்தாம், வெகடந்தாம் ஒஞ்ஞளுக்கு!"ன்னு கொட்டான்னா தூக்கி அவருக்கு மின்னாடி போட்டுப்புட்டு வெக்கப்பட்டுக்கிட்டெ மொகத்த மூடிட்டு ஓடும் பூர்ணி அத்தாச்சி. அது ஓடுறதப் பாத்துக்கிட்டெ பெரியவரு சொல்வாரு, "நம்ம வமிசத்துலயே இல்லாத பொறப்பால்ல இருக்கு! அழகா இருக்குறது வேலைக்கித் தேறாதும்பாவோ! வேலைக்குத் தேறுறது அழகா இருக்காதும்பாவோ! இத்து என்னவோ வேலைக்கும் தேறுது, அழாகவும்லா இருக்கு! யோ யப்பாடி பொம்மி மாதிரிக்கி என்னா ஒரு மொக லட்சணம்! கட்டிக்கப் போறவேம் கொடுத்துதாங் வெச்சிருக்கணும். கிட்டாம் பயலுக்கு மொத மருமவ்வேம் சோம்பேறியா அமைஞ்சி, ரண்டாவது மருமவ்வேம் வெளிநாடெ கதின்னு கெடந்து இப்போ மூணாவது மருமவ்வேம் இந்தப் பொண்ணுக்கு வர்றவேம் அதிர்ஷ்டக்காரப் பயலா அமையப் போறாம்! கிட்டானுக்கு அமைஞ்சதுல ஒண்ணு பீடை, இன்னொண்ணு சோடைன்னாலும் மூணாவது மேடைதாம்! அதுவாவது நல்ல வெதமா அமைஞ்சி கிட்டானோட சோதனெ கொறையட்டும்! ஆன்னா பயெ ரண்டு அப்பிடி அமைஞ்சதுக்கே அந்த ஆட்டம் போடுறவேம், மூணாவது மட்டும் அந்த மாதிரிக்கி அமைஞ்சா ஓட்டாம்மால்லா ஓடுவாம்! செரி அந்தப் படிக்கி அமைஞ்சி சந்தோஷமா இருக்கட்டும் கிட்டாம் பயெ! பொறந்த நாள்லேர்ந்து ஓடக் கெளம்புன பயெ. இன்னும் ஓடிட்டுல்லா இருக்காம் ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் பொறந்த பயெ!"ம்பாரு அவருக்குக் கேக்குற அளவுக்கு கொஞ்சம் சத்தமா. அப்பிடிச் சொல்லிக்கிட்டு தனக்குத் தானே ஒரு சிரிப்பும் சிரிச்சிப்பாரு. அந்தச் சிரிப்புல எந்த கவுடு சூதும் கெடையாது.
            பூர்ணி அத்தாச்சிக் காலத்துல சின்னவரோட முன்னேத்தம் வானத்தெ நோக்கி நேரா மேல ஏறுனுச்சு. மித்த ரெண்டு பொண்ணுகள வுட இதுக்கு நகெ நட்டுன்னு கூட செய்யணும்னு நெனைச்சிக்கிட்டாரு சின்னவரு மனசுக்குள்ள. அதுக்கேத்தாப்புல நெல்லு வித்தக் காசி, உளுந்து, பயிறு வித்தக் காசின்னு பூர்ணி அத்தாச்சி மூலமா வந்துக் காசி மரத்துல பணமா காய்ச்சித் தொங்குறாப்புல அதிகமாவே சின்னவரு கையில வெளையாண்டுச்சு. அத்தோட இன்னொரு கணக்கும் சின்னவருக்கு இருந்துச்சு, பூர்ணிக்குப் பாக்குற மாப்புள்ளய மட்டும் வூட்டோட மாப்புள்ளையாப் பாத்துப்புட்டா வேலங்குடியில தன்னைப் போல தலையெடுத்த ஆளெ பாக்க முடியாதுன்னு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...