10 Jun 2020

உன்னோட நாற்காலிய நீயே எடுத்துக்கோ!

செய்யு - 474

            பூர்ணி அத்தாச்சியின் பேச்சு இருக்கே, ‍அதெ அடிச்சிப் பேசுறதுன்னா ஞாயம் தர்க்கம் தெரிஞ்சிருந்தாத்தாம் முடியும். இன்னதுக்கு இன்னதுன்னு நறுக்குத் தெரிச்சாப்புல பேசும். அதெ நேரத்துல அந்தப் பேச்சு மூஞ்ச முறிக்கிறாப்புல இருக்காது. மனசுல படுற மாதிரிக்கி லாவகமாவும், கொழைவாவும் இருக்கும். சட்டுன்னு இப்படி மனச துலக்கி ஒரு விசயத்தெ வேகமா வெளக்கத் தெரிஞ்சவங்க யாரா இருந்தாலும் அவுங்க சொல்றபடி தலையாட்டிக்கிட்டு வேலையப் பாக்க சனங்க தயாரா இருப்பாங்க. அந்தத் தெறமெதாம் அவ்வளவு நெலத்தையும் ஒத்த ஆளா நின்னு ஆளுகள வெச்சிப் பாக்குற ஆளுமையக் கொடுத்துச்சு பூர்ணி அத்தாச்சிக்கு.
            அநேவமாக வயசுக்கு வந்துட்டப் பொண்ணு, கலியாண வயசுக்கு ஆளாயிருக்கிற பொண்ண  இந்த அளவுக்கு பெரியவரு வூடா இருந்தாலும், சின்னவரு வூடா இருந்தாலும் ரண்டு பேரும் வுட்டதில்ல. வயசுக்கு வந்துப்புட்டாவே வூட்ட வுட்டு வெளியில வுடாம, வூட்டு வேலைகளப் பாக்குற அளவுக்குப் பண்ணுற ஆளுங்க ரண்டு பேரும். வயசுக்கு வந்தப் பொண்ணுகள வெச்சி ரொம்ப வெளி வேலைகளப் பாக்கக் கூடாதுங்றது குடியான ஆட்களோட ஒரு கருத்தும் கூட. ஒரு கருத்துன்னா அதுபடியாவ எல்லா குடும்பத்துலயும் நடந்துட முடியுது? ஒண்ணு ரண்டு வெலகிப் போற நெலமைகளும் இருக்குத்தாம் செய்யுது, பக்திப்பழமா இருக்குற ஒரு குடும்பத்துலேந்து சாமியே இல்லன்னு ஒரு புள்ள கெளம்புறாப்புலத்தாம் அது. பூர்ணி அத்தாச்சி இந்த அளவுக்கு வெளியில வந்து வெவசாயத்தெ கையில எடுத்ததுக்குக் காரணம் காலமாத்தமா? சின்னவரோட சூழ்நெலையா?ன்னு யோசிக்க யோசிக்க அது ஒரு ஆச்சரியமாத்தாம் இருக்கு. பொம்பளைப் புள்ளைகளுக்கு இந்த அளவுக்கு அந்த எடத்துக்கு வர்ற அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஆளுங்க கெடையாது பெரியவரு, சின்னவரு ரெண்டு பேருமே.
            பூர்ணி அத்தாச்சிக்கு அந்த எடத்தெ சின்னவரு கொடுக்கல, ரசா அத்தையும் கொடுக்கல. அதுவாவே எடுத்துகிடுச்சு. சில எடங்க அப்பிடித்தாம். யாரும் கொடுத்து எடுத்துக்கிறதோ, வாங்கிக்கிறதோ கெடையாது. அந்த எடத்த அவுங்களாவே எடுத்துக்கிடணும். நாமளா போயிக் கேட்டத்தாம் பெரச்சனெ. அவுங்கள எடுத்துக்கிட்டா சில நாளு வரைக்கும் குசுகுசுன்னு அதெ பத்தி பேசிட்டு இருந்துட்டு அப்பிடியே விட்டுப்புடுவாங்க. பூர்ணி அத்தாச்சி அதுவா அப்பிடி அந்த எடத்தெ எடுதூதுக்கிட்ட ஆளு. அதுகிட்டெ கேட்டாக்கா, "ஒன்னோட நாற்காலியா நீந்தாம் செஞ்சிக்கிடணும். செய்யத் தெரியலன்னா செஞ்சி வெச்சிக்கிறதெ எடுத்துக்கிடணும். அத்த யாரு எடுத்துக் கொடுப்பா?"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொல்லும்.
            சின்னவரு குடும்பத்துல அதிகம் படிச்ச ஆளும் அதுதாம். பசங்க எல்லாம் பத்தாப்பு முடிச்சிட்டு ஐ.டி.ஐ.க்குப் போனப்போ, இத்து ஒரு ஆளுதாம் பதினொண்ணாவது, பன்னெண்டாவது வரைக்கும் படிச்சிது. பன்னெண்டாவது ப்யூர் சயன்ஸ் குரூப்புல எழுநூத்து அம்பதுக்கு மேல மார்க்கு. அப்போ அத்து ரொம்ப பெரிய மார்க்குத்தாம். மித்தப் பொண்ணுங்க ரண்டும் ஒம்பதாப்பு, பத்தாப்புல அதுவா படிப்ப முடிச்சிக்கிட்ட ஆளுங்க. இத்து ஒண்ணுத்தாம் படிப்புலயும் இப்பிடி ஓங்கு தாங்கலா போன ஆளு. பன்னெண்டாவதுக்குப் பெறவு காலேஜூக்குல்லாம் அனுப்பி படிக்க வைக்க சின்னவரு பிரியப்படல. அப்பிடியே வுட்டுப்புட்டாரு. "பயலுகளே காலேஜூக்குப் போவதப்போ இதெ எப்பிடி அனுப்புறது?"ன்னு இருந்துட்டாரு.
            சின்னவரு வயலுக்குக் கெளம்புனா அவரு கெளம்புறதுக்கு மின்னாடியே வயக்காட்டுக்குப் போற ஆளு பூர்ணி அத்தாச்சி. அவருக்கு  வயக்காடு சம்பந்தமா ஒரு யோசனெ வர்றதுக்கு மின்னாடி அதெ சொல்ற ஆளு அது. இப்பிடி தானா ஒரு ஆளு எல்லா விசயத்துக்கும், தானா தொடங்குறதுக்கு மின்னாடி எடுத்துக் கொடுத்தா அந்த ஆளெ வுடுறதுக்கு மனசுல தோணாது. மனுசனோட கொணப்பாடு அது. எல்லா விசயத்துக்கும் முட்டுக் கொடுத்து, தொடுப்பு வேலை செய்ய வேணும்ங்றதெ மனுசனோட மனசு எதிர்பார்க்கும். அந்த எடத்துலத்தாம் பூர்ணி அத்தாச்சி நின்னுச்சு.
            என்னவோ பூர்ணி அத்தாச்சி வயக்காட்டுக்கு வர்றப்போ, போறப்பல்லாம் சின்னவருக்கு வேல சுலுவா ஆவுறதா ஒரு மனக்கணக்கு உண்டாயிப் போச்சுது. பொண்ணு சொல்ற யோசனைக ஒவ்வொண்ணும் அவருக்கு யோசிக்கிற வேலைய மிச்சமாக்குனுச்சு. இப்பிடி யோசிக்கிற வேலைய மிச்சமாக்குறவங்க விதிவிலக்கான ஒரு சூழ்நிலைய உண்டு பண்ணிடுவாங்க. அவங்க அசாத்தியமான ஆளுங்க போல ஒரு மனத்தோற்றம் உண்டாயிடும். இப்படிப்பட்ட ஆளுங்க மத்தவங்கள மயக்கிடுவாங்களே தவுர, தன்ன யாரும் மயக்க வுட்டுப்புட மாட்டாங்ற ஒரு நம்பிக்கெயும் கூடவே உண்டாயிடும். அப்பிடி ஒரு எண்ணமும், நம்பிக்கையும் உண்டானா, அதுக்குப் பெறவு சொல்லவா வேணும்? அந்த ஆளு வைக்கிறதுதாங் சட்டம், அந்த ஆளு சொல்றதுதாம் வேதவாக்குன்னு ஆயிடும். அத்தோட சின்னவரு அப்போ இருந்த நெலையில வெவசாயத்தைப் பாத்துக்கிறதுக்கு ஒரு ஆளு இந்த மாதிரிக்கித்தாம் தேவையா இருந்துச்சு. அவரோட மனசுல பெரியவரோட வெள்ளாமைய ஒரு பொம்பளையா தன்னோட பொண்ண வெச்சி முறியடிக்கணுங்க எண்ணமும் உண்டாயிடுச்சு. அப்பிடித்தாம் பூர்ணி அத்தாச்சி தன்னோட எடத்தப் பிடிச்சிது.
            ஒரு தடவெ பொழுது மசங்குன நேரமா சின்னவரு வயக்காட்டுப் பக்கம் போறாரு. பூர்ணி அத்தாச்சியும் கூட போவுது. "பொழுது மசங்குன நேரத்துல வயசான பொண்ணுக்கு வயக்காட்டுப் பக்கம் என்னத்தெ வேல?"ன்னு ரசா அத்தை ஒரு சத்தம் வைக்குது. சின்னவரு ரசா அத்தைய ஒரு மொறைப்பு மொறைச்சிட்டு, "நீயி போயி வூட்டுல இரு ஆயி! ஒரு பார்வெ பாத்துப்புட்டு வர்றேம்!"ன்னு பூர்ணி அத்தாச்சிக்கிட்ட சொல்லிட்டுக் கெளம்புறாரு. கெளம்பிப் போனவரு இருவது நிமிஷம் இருக்கும். வூடு திரும்புனாரு. திரும்புனவருக்கு ஒடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது. வெடவெடத்துப் போவுது. வூடே அல்லோகலப்படுது. என்னான்னு வெசாரிச்சா வயக்காட்டுல எதோ லேசா கடிச்ச மாதிரிக்கோ, முள்ளு குத்துன மாதிரிக்கோ இருந்தாப்புல சொல்றாரு. கடிச்சதா? முள்ளு குத்துனுச்சாங்றதெ தெளிவா சொல்ல மாட்டேங்றாரு சின்னவரு. அவருக்கு அதெ உறுதியா சொல்லத் தெரியல.

            எல்லாரோட மொகத்துலயும் ஒரு பயம் கவ்விப் போச்சுது. பூர்ணி அத்தாச்சி மொகத்துல மட்டும் எந்தச் சலனமும் இல்ல. அஞ்சரைப் பெட்டிய எடுத்தாந்து நாலு நல்ல மொளகெ கொடுத்து மெல்லுங்கப்பாங்குது. அதெ மென்னு தின்னுட்டு இன்னும் நாலு இருந்தா கொடுங்றாரு சின்னவரு. அப்பிடியா விசயம்ன்னு வெளியில ஓடிப் போயி வேப்ப மரத்துலேந்து ஒரு கொத்து வேப்பலையப் பறிச்சி அதுல கொஞ்சத்த உருவி இதெ தின்னுக் காட்டுங்கப்பாங்குது பூர்ணி அத்தாச்சி. அதையும் என்னவோ மாடு சொகமா தின்னு அசைப்போடுறாப்புல தின்னு அசைபோடுறாரு சின்னவரு. ஒடனே டார்ச் லைட்ட எடுத்துக்கிட்டு கொல்லைக் கடைசிக்குப் போவுது பூர்ணி அத்தாச்சி. சிறியாநங்கைச் செடி அங்ஙன இருக்கும். பொதுவா ஒவ்வொரு வூட்டுலயும் கொல்லக் கடைசியில அந்த செடி இருக்கும். இல்லன்னா அந்தச் செடிய ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவட்டுமேன்னு கொண்டாந்து வெச்சிப்புடுவாங்க கெராமத்துல. அதுல ஒரு கைப்பிடி நெறைய இலையப் பறிச்சது அதெ அப்படியே தண்ணியில ஒரு அலசு அலசிக் கொண்டாந்து, இதெ அப்பிடியே தின்னுங்கப்பான்னு கொடுக்குது. சின்னவரு என்னவோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவரு போல அதெ வாங்கித் தின்னுறாரு. தின்னு ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும். ஆளு நல்லா கெழங்காட்டம் உக்காந்திருக்காரு. எந்த பெரச்சனையும் இல்ல. ஆளு கொணங் கண்டுட்டாரு.
            அவரு அப்போ ஒரு வார்த்தெ சொன்னாரு பாருங்க, "அதாங் கெளம்புறப்ப அம்மனப் போல தொணைக்கி ஆயி வர்றேங்றா! அதெ நந்தி மாதிரிக்கிக் குறுக்க நின்னு தடுத்தாப் பாரு ஒங்க ஆயாக்காரி! எம் பொண்ணு வந்திருந்தா நமக்குத் தெரிஞ்சிருக்கும் எந்த வரப்புல போவணும், எதுல போவக் கூடாதுன்னு!"ன்னு. இதெ சுத்தி நின்னு கேட்டவங்களுக்கு ஒண்ணும் சொல்ல முடியல. ரசா அத்தை மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டுது, "என்னவோ வய வரப்புல போவத் தெரியாத ஆளு மாதிரியும், நேத்திக்கிப் பொறந்த பொண்ணு காட்டுற வழியிலத்தாம் சின்ன புள்ளையாட்டம் கையப் பிடிச்சிட்டு நடந்து போறவரு மாரில்லா பேசுறாரு. இனுமே எஞ்ஞ கூட போனாலும் அழைச்சிட்டுப் போயித் தொலையட்டும். நமக்கென்ன வேண்டிக் கெடக்கு? ஊரு ஒலகத்துல சொல்லாததையா நாம்ம சொல்லிட்டேம்?"ன்னு நெனைச்சிக்கிட்டு.
            சுவாதி அத்தாச்சிக் கூட கேட்டுச்சு, "யப்பாவுக்கு என்ன கடிச்சிருக்கும்? அதெ எப்பிடி நீயி கொணம் பண்ணே?"ன்னு. அப்போ பூர்ணி அத்தாச்சி சொன்னுச்சு, "யப்பாவ கடிச்சது என்னான்னு தெரியல. கடிச்சாப்புலயும் ஒரு தடிப்பு மட்டுந்தாம் தெரியுது. ஒருவேள எதுனாச்சிம் கடிச்சிருந்தாலும் அது விஷப்பூச்சியாத்தாம் இருக்கும். அதாங் யப்பாவுக்கு மொளகோட காரம் தெரியல, வேப்பலையோட கசப்புப் புரியல. அத்து எந்தப் பூச்சிக்கடியா இருந்தாலும் செரித்தாம், பாம்பு கடியாவே இருந்தாலும் செரித்தாம் சிறியாநங்கைய வாயில வெச்சி தின்னுப்புட்டா போதும் ஒண்ணுந் தெரியாது!"ன்னுச்சு.
            "இந்தச் சங்கதியெல்லாம் ஒனக்கு எப்பிடிடி தெரியும்?"ன்னுச்சு சுவாதி அத்தாச்சி. "வய வேலைக பாக்குறப்போ ஆளுக பேசிக்கிறதுதாங். அதெ கேட்டுக்கிடறதுதாங். வயக்காட்டுல கெடக்காத பூச்சியா? பாம்பா? அதுக்கெல்லாம் பாத்தா வெள்ளாம ஆவுமா? ராக்காயி மவ்வே இருக்காளே வடக்குத் தெருவுல. அவளுக்கு இப்பிடித்தாம் நடுசாமத்துல ஒண்ணுக்குப் போறேன்னு ஒதுங்குனவளுக்கு ஆயிடுச்சாம். என்னா கடிச்சிது ஏது என்னான்னு தெரியலயாம். சரிதாம் கடிபட்ட எடத்துல வெளக்க எடுத்தாந்து பாத்தாலும் ஒண்ணுங் காங்கலயாம். பெறவு, இப்போ யப்பாவுக்குப் பண்ணுன மாதிரிக்கி பண்ணதுல சரியாச்சுன்னு ஒரு பேச்சு ஓடுனுச்சு. அந்தப் பேச்சு அப்பிடியே மனசுல தங்கிப் போச்சு. அப்பிடித் தங்கிப் போனது யப்பாவுக்கு இப்பிடின்னதும் சட்டுன்னு ஞாபவத்துக்கு வந்துப் போச்சு. அதுல வந்த உபகாரந்தாம்!"ன்னுச்சு பூர்ணி அத்தாச்சி. அதெ கேட்டதும் பூர்ணி அத்தாச்சிக்கு நெட்டி முறிச்சி வுட்டுது சுவாதி அத்தாச்சி. 
            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு சின்னவரு குடும்பத்துல பூர்ணி அத்தாச்சி எது செஞ்சாலும் சரியா இருக்குங்ற நெலமெ உண்டாயிடுச்சு. எந்த விசயம் செய்யுறதா இருந்தாலும் அதுகிட்டெ கலந்துகிட்டா சரியான முடிவு சொல்லுங்ற சூழ்நெல ஆயிடுச்சு. வேலங்குடி சின்னவரு வூட்டுல ரசத்துக்கான பொடியை அரைச்சு காலியான மொகத்துக்குப் பூசுற புட்டா மாவு டப்பாவுல அதெ அலம்பி சுத்தம் பண்ணிக்கிட்டு அதுல போட்டு வெச்சிறது வழக்கம். அப்போல்லாம் புட்டாமாவு டப்பா தகரத்துல இருக்கும். மொகத்துக்குப் புட்டா மாவ கொட்டிக்கிறது போல, அந்தப் புட்டா மாவு டப்பாவுல பெரிய தொளையா போட்டுக்கிட்டு அதெ மாதிரிக்கி ரசப்பொடியக் கொட்டிக்கிறது. ஒரு தவா மொகத்துக்குப் பூசுற புட்டா மாவ ஏதோ ஞாபவத்துல ரசப்பொடிக்குப் பதில போட்டு ரசத்தெ வைச்சுப்புடுச்சு பூர்ணி அத்தாச்சி. வூட்டுல இருக்குற அத்தனெ பேத்துக்கும் ரசத்துல இருக்குற மாறுபாடு புரியுது. சின்னவருக்கு மட்டும் புரிபடல. பூர்ணிப் பொண்ணு வெச்சா செரியத்தாம் இருக்கும்னு நெலையா நிக்குறாரு சின்னவரு. அந்த அளவுக்குச் செல்வாக்கு ஆயிப் போயிடுச்சு பூர்ணி அத்தாச்சிக்கு சின்னவரு வூட்டுல.
            ஒரு வேலி சொச்சம் தாண்டி இருக்குற நெலத்துக்கு அத்தனைக்கும் நாட்டு எரு அடிக்கிறதுன்னா சுலுவா? வூட்டுல இருக்குற மாடு போடுற சாணத்த தாண்டி அக்கம் பக்கத்துல இருக்குறவங்களோட வூட்டுலயும் எருக்குழியிலேந்து அள்ளுனாத்தாம் சமாளிக்கலாம். ஊருல யாரு யாரு வூட்டு எருக்குழியிலேந்து நாட்டு எரு எடுத்து அடிக்கலாம்ங்ற வெவரம் வரைக்கும் பூர்ணி அத்தாச்சிக்கு வெரலு நுனியில இருக்கும். அந்தந்த வூடுகள முங்கூட்டியே சரியா பாத்து வெச்சிக்கிட்டு, முங்கூட்டியே பேசி கொஞ்சம் காசு பணத்தெ கொடுத்து வெச்சிக்கும். நாட்டு எரு அடிச்சாத்தாம் நெல்லு வெவசாயத்துக்குப் பின்னாடி போடுற உளுந்து, பயிறு நல்லா வெளையுங்றதெ அத்து கண்டுபிச்சி வெச்சிருந்துச்சு. அதுக்குத் தகுந்தாப்புல எரு எடுத்து வயல்ல அடிக்கிறதுக்கு வசதியா மாட்டு வண்டி வெச்சிருக்கிற ஆளுககிட்டேயும் முங்கூட்டியே பேசி வெச்சி கொஞ்சம் காசு பணத்தையும் கொடுத்து வெச்சிப்புடும். இப்பிடி ஒரு வேலையப் பாத்தா ஊர்ல மித்த எவனும் வயலுக்கு நாட்டு எரு அடிக்க முடியாத அளவுக்கு எல்லாமும் சின்னவரு வூட்டு வயல்லயே கெடக்கும். நாட்டு எரு போடாம வெறும் ரசாயன உரம் மட்டும் போடுற வயலுகள்ல வெதைக்கிற உளுந்து, பயித்த பூச்சித்தாம் அடிச்சிட்டுப் போவுங்ற வரைக்கும் அதோட வெவசாய ஞானம் வளந்தாப்புல அது பேச ஆரம்பிச்சுச்சு.
            அத்தோட நெல்லு வெவசாயத்துக்கு நாத்துகளுக்குக் கொஞ்சம் யூரியா அடிக்கிறதா இருந்தாலும், நடவுக்குப் பின்னாடி டி.ஏ.பி. அடிக்கிறதா இருந்தாலும், கடெசியா மணி மணியா நெல்லு நல்லா கெளம்புறதுக்கு பொட்டாஷ் அடிக்கிறதா இருந்தாலும் செரி மாட்டு வண்டிய கட்டிக்கிட்டு இதுவே சொசைட்டிக்குப் போயி ஒத்த ஆளா நின்னு, ஆளுகள தொணைக்கு வெச்சிட்டு எடுத்தாந்து மின்னல் வேகத்துல வயலுக்குத் தெளிச்சி அடிச்சி முடிச்சிப்புடும். இப்பிடி எந்தெந்த ரசாயன உரத்த எப்போ கொடுக்கணும், எந்த அளவுல கொடுக்கணும்ங்ற அறிவும் அதுக்கு அத்துப்படி. இந்த வேலையை எல்லாம் ஊருல வெவசாயம் பண்ணுற ஆளுங்க செய்ய ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடி மொத ஆளா பூர்ணி அத்தாச்சி பண்ணிப்புடும். இதெ பாத்துப்புட்டுத்தாம் மித்த மித்த ஆளுங்க அந்த சோலியப் பண்ணுவாங்க. இதுல எல்லாம் சின்னவருக்கு ஒரு பெருமெதாம்.
            அத்தோட பெரியவரே சமயத்துல பூர்ணி அத்தாச்சிக்கிட்டெ யோசனெ கேப்பாரு. "நாத்த பிடுங்கிப் பாத்தா கொஞ்சம் செருமமால்ல இருக்கு. பறிக்கிறப்போ என்னவாப் போவுதுன்னு தெரியலயே பொண்ணே? வேரு அந்துத்தாம் போவப் போவுது!"ன்னு அவரு சொன்னா போதும், "கொஞ்சம் சிப்சத்தெ வாங்கி அடிச்சி வுட்டுப் பாருங்களேம் பெரிப்பா!"ங்கும் சர்வ சாதாரணமா பூர்ணி அத்தாச்சி. அப்பிடி செஞ்சிப் பாத்தா அத்து சரியா இருக்கும். பெரியவரே அசந்துப் போயிடுவாரு, நேத்திப் பொறந்த பொண்ணு நமக்குப் பாடம் சொல்லுதுன்னு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...