செய்யு - 472
வேலங்குடி பெரியவருக்கு அமைஞ்சது போல
ஒரு நெலை சின்னவருக்கு அமையல. அவருக்கு எந்நேரமும் ஒரு அலைச்சலோ, உளைச்சலோ இருந்துச்சு.
பெரியவருக்குப் போகப் போக குடும்பப் பொறுப்புகள புள்ளைகளும், மருமவனுங்களும் தாங்குனது
போல சின்னவருக்கு கொடுத்து வைக்கல. சின்னவருக்கு புள்ளைகளாலும், மருமவன்களாலும் எதாச்சிம்
ஒரு வெதத்துல இடறல் இருந்துகிட்டெ இருந்துச்சு. பெரியவர்ர பாக்கணும்னு வேலங்குடி போனா
ஒண்ணு அவரு வூட்டுல இருப்பாரு, யில்ல வயல்ல இருப்பாரு. அவருக்கு ஒரு நெலையான வாழ்க்கைப்
போல அவரோட தலையெழுத்து இருந்துச்சு.
சின்னவரு எங்க இருப்பாங்றதெ கண்டுபிடிக்கிறது
பெரும்பாடா இருக்கும். வேலைக்குப் போறதுன்னா, எங்க வேலெ அமையுதோ அந்த எடம் வரைக்கும்
ஆளுகள கெளப்பிக்கிட்டுப் போயிட்டே இருப்பாரு. ஒரு எடத்துக்குப் போறதுக்கே மூணு மணி
நேரம் ஆவுதேன்னு நெனைக்க மாட்டாரு. மூணு மணி நேரத்துக்குச் சைக்கிள மிதிக்க வெச்சு
ஆளுகளப் போட்டு அதகளப்படுத்திப்புடுவாரு. அவரோட வேலைக்குப் போவ ஆரம்பிச்ச பிற்பாடு
கண்ணாடிதாசு அத்தான் கேட்டுருக்கு, "ன்னா மாமா! இம்மாம் தூரம் மிதிச்சிட்டுப்
போயித்தாம் வேல பாக்கணுமா? இதுவே பெரிய வேலை போலல்லா இருக்கு?"ன்னு. அதுக்கு
சின்னவரு, "நாட்டுல அவனவனுக்கும் வேல கெடைக்கிறது பெரும்பாடா இருக்கு. நமக்கு
வேல கெடைச்சு அத்து தூரமா இருக்குன்னு கொறைபாடா இருக்குல்லா?"ன்னுருக்காரு. இந்தப்
பதிலுக்குப் பெறவு கண்ணாடிதாசு அத்தான் ஒண்ணும் சொல்லல. வேலைக்குன்ன நூத்து மைல் சைக்கிளு
மிதிக்கணும்னாலும் மிதிச்சிக்கிட்டுப் போயிருந்திருக்கு.
கிராமத்துல சம்சாரிங்கள குடியானவங்ற வார்த்தையில
சொல்றதுண்டு. ஓரிடத்துல குடி ஆகி அங்க இருந்துகிட்டு தன்னோட நெல புலன்களைப் பாக்குறதால
அப்பிடி ஒரு பேரு. அப்பிடி ஒரு எடத்துல குடியாயி நெலபுலத்த சரியா பாத்தாரு பெரியவருன்னா,
சின்னவரு அப்படி குடி ஆகியும் மவ்வேம் கார்த்தேசுக்காக சென்னைப் பட்டணத்துக்கும், மருமவ்வேம்
கண்ணாடிதாசுக்காக கெடைக்கிற எடத்துல வேலைக்குன்னும், ரெண்டாவது மக சுவாதி அத்தாச்சியோட
குடும்பத்தெ தாங்குறதுக்காகன்னும் மெனக்கெட்டதால அவரால பெரியவரு போல நெலபுலத்தை அம்மாம்
மெனக்கெட்டுப் பாக்க முடியல. அலைஞ்சுகிட்டும், திரிஞ்சுகிட்டும் ஏதோ ஒரு வெதமா பாத்தாரு.
ஊர்ல இருக்குறப்போ பாக்குறது, மெனக்கெடுறதுன்னா
நெலபுலம் எப்பிடி வெளையும்? ஆளுகள வெச்சிப் பாக்குறதுன்னாலும் மேம்பார்வை சரியில்லன்னா
வெள்ளாமை வூடு வந்து சேராது. பெரியவரு வூட்டுலன்னா பெரியவரு, செயா அத்தெ, குமாரு அத்தான்னு
மூணு பேத்துக்கும் வூட்டுல கெடக்குறதெ வுட வயல்ல கெடக்குற நேரந்தாம் அதிகம். சின்னவரு
வூட்டுல அப்பிடியே எல்லாம் நேர்மாறு. ரசா அத்தையா இருந்தாலும், சுவாதி அத்தாச்சியா
இருந்தாலும் வயல்ல கெடக்குற நேரத்தெ வுட, வூட்டுல கெடக்குற நேரந்தாம் அதிகம். இதெ பாத்துப்புட்டு
சின்னவரு கேப்பாரு, "நாம்ம வேலைக்கிப் போற நேரத்துல இப்பிடி வூட்டுல கெடக்குறதுக்கு
வயல்ல கெடந்தா வேலெ கொஞ்சம் ஆவுமுல்ல?"ன்னு. "ஆம்மாம்! என்னத்தெ வயல்லயும்,
வெயில்லயும் கெடந்துகிட்டு? நாம்ம போனாலும் செரித்தாம், போவலன்னாலும் செரித்தாம்
வயல்ல ஆவுற வேலைத்தாம் ஆவப் போவுது? வயல்ல வெளைஞ்சு வூடு வாரணும்ன்னு விதி இருந்தா
வந்துட்டுப் போவுது!"ன்னு பதிலெச் சொல்லும் ரசா அத்தை.
பெரியவருக்கும் நெலபுலம் அதிகமாயிடுச்சு,
சின்னவருக்கும் நெலபுலம் அதிகமாயிடுச்சு. வேலைக்கு என்னத்ததாம் ஆளெ வுட்டாலும், அந்த
வேல நடந்து முடிஞ்சிருக்கான்னு பாக்கவாவது ஆளு வேணுமில்ல? என்னத்தாம் சின்னவரு எந்நேரத்துக்கும்
வயல்ல கெடக்க முடியாட்டியும், பெரியவரு அளவுக்கு எப்பிடியும் வெள்ளாம பாத்துடுவாரு.
அதெப்படி வயல்ல எந்நேரமும் கெடக்குறவனுக்கும் ஒரே வெள்ளாம, எப்பவாச்சிம் போயிட்டு
வாரவனுக்கும் ஒரே வெள்ளாமன்னா? அந்த எடத்துலத்தாம் சின்னவரோட மூணாவது பொண்ணு பூர்ணிமா
அத்தாச்சி நின்னுச்சு. சின்னவருக்கு தன்னோட புள்ளைக மேல எப்பவும் அபாரமான நம்பிக்கெ
உண்டு. எந்நேரத்துக்கும் பாக்குறவங்கிட்டெயெல்லாம் பொண்ணு புள்ளைக புராணந்தாம் பாடுவாரு.
அதுலயும் பூர்ணிமா அத்தாச்சி மேல அது அதிகம்ன்னு சொல்றதா? ரொம்ப ரொம்ப அதிகம்ன்னு
சொல்றதா?
கார்த்தேசு அத்தானும், தாசு அத்தானும்
சென்னைப் பட்டணம் போன பெறவு, இங்க வூட்டுல அப்பங்காரரு வேல வெட்டின்னு அலையுறப்ப ஆம்பளையப்
போல குடும்பத்தெ தாங்கி நின்னது சின்னவரோட மூணாவது பொண்ணு கடைகுட்டிப் புள்ளெ பூர்ணிமா
அத்தாச்சித்தாம். பூர்ணிமா அத்தாச்சி சின்னவரெ போல ஒறுப்பான ஒடம்பு, ரசா அத்தையப்
போல செவப்பான ஒடம்பு. அதெ மாதிரிக்கி அப்பங்காரரோட வேகம், பேச்சு, அம்மாக்காரியோட
பொறுமெ, நெதானம் எல்லாம் கலந்த பொண்ணா இருந்துச்சு. ஒலகத்துல இப்பிடி ஒரு புள்ளெ
இருக்குறது அபூர்வம்தாம். ஏன்னா பெரும்பாலும் புள்ளீயோளுக்கு அப்பங்கார்ரெம் கொணம்
இருக்கும், இல்லன்னா அம்மாக்காரி கொணம் இருக்கும். கொணத்துல மட்டும் இல்ல, ஒடம்பு,
நெறம், தலைமுடின்னு எல்லாத்திலயும் யாரோ ஒருத்தரோட ஒடம்போ, நெறமோ, தலைமுடியோத்தாம்
இருக்கும். ரெண்டு பேத்தோட ஒடம்பு, நெறம், தலைமுடின்னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாகக்
கலவையா இருந்தது பூர்ணிமா அத்தாச்சித்தாம். பாக்குறதுக்கு ஒல்லியா வேலையில வெடவெடன்னு
பூர்ணி அத்தாச்சிய பாக்குறவங்களுக்கு ஒடனே பிடிச்சிப் போயிடும்.
அந்த நேரத்துல வேலங்குடி சின்னவரு வூட்டுல
இருந்ததுன்னா ரசா அத்தை, சுவாதி அத்தாச்சி, அதோட பொண்ணு ஒண்ணு, அத்தோட பூர்ணி அத்தாச்சி.
சின்னவருக்கு வேலையப் பொருத்துத்தாம் வூட்டுல இருக்குறதும், இல்லாம இருக்குறதும்.
சுவாதி அத்தாச்சிக்கு மூளை வேலை செய்யுற அளவுக்கு ஒடம்பு வேலை செய்யாது. வேலையில அது
ஒரு மக்கு மதாஸ்ஸூ. பெரசவத்துல கொழந்தை பொறந்த பெற்பாடு, கொழந்தையப் பெத்துப் போட்டதே
பெருவேலைன்னு நெனைச்சிக்கிட்டு ஒரு வேலையும் செய்யாம பழகிப் போயி, ரசா அத்தைக்கு அதால
சுவாதி அத்தாச்சியப் பாக்கறதெ பெரு வேலையா இருக்கும் பல நேரத்துல. அப்பிடியிருந்தா
குடும்பத்துல மித்த வேலைகள யாரு பாக்குறதுன்னு கேள்வி எழும்புதுல. அதெயெல்லாம் சேர்த்து
வெச்சுப் பார்த்தது பூர்ணி அத்தாச்சித்தாம். விடுவிடுன்னு பேசுறதா இருந்தாலும் செரித்தாம்,
சடுசடுன்னு வேலையப் பாக்குறதா இருந்தாலும் செரித்தாம் பூர்ணி அத்தாச்சியப் போல முடியாது.
சின்னவரு மனசுல நெனைச்ச வேகத்துல பூர்ணி அத்தாச்சி வேலையச் செஞ்சு முடிக்கும். பூர்ணி
அத்தாச்சி வூட்டுல இருக்குற நெனைப்புலத்தாம் சின்னவரு எங்க வேணாலும், எவ்வளவு தூரம்ன்னாலும்
வேலைக்குக் கெளம்பிப் போறதும், சென்னைப் பட்டணத்துக்கு தெகிரியமா கெளம்பிப் போறதுமா
இருந்தாரு.
ஒரு கட்டத்துல வூட்டு வேலைக மட்டுமில்லெ,
வூட்டு நிர்வாகமும் பூர்ணி அத்தாச்சிக் கையில வந்துச்சு. பெறவு சின்னவரு வூட்டுல இல்லாத
நேரத்துல வூட்டை நிர்வாகம் பண்ணணுமே! ஆத்திர அவசரத்துக்குப் பணங்காசி தேவைன்னா வெளியில
போயிருக்குற சின்னவரா வந்து கொடுக்கு முடியும்? அதால சின்னவரு குடும்பத் தேவைக்கான
பணத்தையும் பூர்ணி அத்தாச்சிய வெச்சித்தாம் நிர்வாகம் பண்ணாரு. வய வேலைகளுக்கு ஆளுகள
விட்டுப்புட்டு சாயுங்கால நேரத்துல கரையேறுறப்போ ஒழைச்சதுக்குக் காசியக் கொடுக்கலன்னா
எப்பூடி? அதுக்கான காசு பணமும் பூர்ணி அத்தாச்சிக் கையிலத்தாம் இருக்கும்?
காலையில எழும்புனா வூட்டு வேலைகளப் பாத்து
சமைச்சி வைக்கிறது வரைக்கும் வெச்சிப்புட்டு, பெரியவரு வயலுக்குக் கெளம்புறதுக்கு மின்னாடி
வயல்ல போயி நிக்கும் பூர்ணி அத்தாச்சி தாவணி போட்ட சிட்டைப் போல. பெரியவரு வயலை
வந்துப் பாத்து நின்னு நெதானிச்சி, வெத்தலைப் பாக்குல்லாம் போட்டு வயல்ல சேத்துல காலடி
எடுத்து வெச்சார்ன்னா, பூர்ணி அத்தாச்சி போன வேகத்துல பாவாடைய லேசா மேல இழுத்துச்
செருகிக்கிட்டு வயல்ல எறங்கிப்புடும். பெரியவரு வயலுக்குப் போறப்போ, வர்றப்போ அதையெல்லாம்
கவனிச்சிப் பாப்பாரு. இந்தப் பொண்ணு மட்டும் பொம்பளப் புள்ளையா பொறக்காம, ஆம்பளெப்
புள்ளையா பொறந்திருந்தா நூறு வேலி நெலத்த ஒத்த ஆளா நின்னு சாகுபடி பாக்கும்ன்னு மனசுக்குள்ள
நெனைச்சிப்பாரு. வெவசாய வேலையில்ல அப்பிடி ஒரு ஆர்வமும், வேகமும் பூர்ணி அத்தாச்சிக்கு.
வயல்ல எறங்கி நிக்குறதுப் போல இருக்கும்
அத்தாச்சி. எப்போ எடையில வூட்டுக்கு வரும் போவும்ன்னு தெரியாது, வூட்டுக்கு வந்து
அது பாட்டுக்கு வேல பாக்குற ஆளுகளுக்கு டீத்தண்ணியப் போட்டுக்கிட்டு, பச்சியோ, போண்டாவோ
பட்சணத்தெ போட்டுக்கிட்டு சுருக்கா போயி வயல்ல நிக்கும். பூர்ணி அத்தாச்சி எப்பிடி
வயல்லேர்ந்து வூட்டுக்கு வர்றதும், போறதும் தெரியாதோ, அதெ போலத்தாம் வூட்டுலேந்து
வயலுக்குப் போறதும், வர்றதும் தெரியாது. எல்லாத்திலயும் அப்பிடி ஒரு வேகம் இருக்கும்,
கிட்டதட்ட சின்னவரு தச்சு வேல பாக்குறாப்புலத்தாம், அப்பிடி அவரு வேலப் பாத்து அதிரடி
ஆச்சாரின்னு பேரு வாங்குனாப்புலத்தாம். இந்தப் பொண்ணையும் அதிரடி வேலைக்காரின்னு சொல்லிப்புடலாம்.
சின்னவர்ரப் பத்தித்தாம் ஒங்களுக்குத்
தெரியும். வேலைக்குக் கெளம்புறார்ன்னா காலாங்காத்தாலயே ஏழு ஏழரைக்கெல்லாம் கெளம்பி
நிக்குற ஆளாச்சா? அதுக்கு ஈடு கொடுத்து காலைச் சாப்பாட்டையும் தயாரு பண்ணிப்புட்டு,
மத்தியானச் சாப்பாட்டையும் சருவு எலையில வெச்சிக் கட்டிக் கொடுத்துப்புடும் பூர்ணி
அத்தாச்சி. அவரு அப்போ வேலை பாத்த காலந்தொட்டு, இப்போ வேல பாத்த காலம் வரைக்கும்
சருவு எலையில வெச்சித்தாம் மத்தியானச் சாப்பாட்ட கட்டியாவணும். தாம் ஒரு எடத்துல எத்தனெ
நாளு வேல பாத்தோங்றதெ அங்க கெடக்குற சருவு எலைய வெச்சி எண்ணிப்புடலாம்பாரு சின்னவரு.
அதுல அவருக்கு ஒரு அசட்டுப் பெருமெ.
ஆக மொத்தம் சின்னவரு வூட்டுல காலைச் சாப்பாடும்,
மத்தியானச் சாப்பாடும் ஒண்ணாவே ஆயிப்புடும். அவரு வூடு தங்குனாத்தாம் மத்தியானச் சாப்பாடு
தனியா ஆவும். இப்போல்லாம் அவரு வூடு தங்குறது ரொம்ப அபூர்வமால்லா இருக்கு. அதால அதுக்குப்
பெறவுன்னா ராச் சாப்பாடுதாம். வூட்டுல இருக்குற சனங்களுக்கு இட்டிலி மாவை அரைச்சி வைக்குற
ஒரு வேலைத்தாம். சாயுங்காலத்துக்கு மேல பொழுது மசங்குனத்துக்குப் பின்னாடித்தாம் வயல்லேர்ந்து
பூர்ணி அத்தாச்சி வரும். வந்த ஒடனேயே ஒரு குளியல்ல போட்டுச்சுன்னா இட்டிலிக்கோ, தோசைக்கோ
தொடுகறி எதுவோ அதெ செஞ்சி முடிக்கும். அதோட மொகத்துல களைப்போ, சலிப்போ ஒண்ணு
தெரியாது. அப்பங்காரரு வர்ற வரைக்கும் அன்னிக்கு வரவு செலவு கணக்கெ ஒரு பார்வெ பாக்கும்.
அப்பங்காரரு வந்துட்டார்ன்னு தெரிஞ்சா அடுப்புல இட்டிலி வேவும், யில்லன்னா தோசைக்கல்ல
போட்டு தோசையா சுட்டுத் தள்ளும். ராச்சாப்பாடு முடிஞ்சிதுன்னா அன்னைய வரவு செலவ அப்பங்காரர்கிட்டெ
ஒண்ணு வுடாம மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்குறாப்புல சொல்லி முடிச்சிட்டுத்தாம் தூங்கும்
பூர்ணி அத்தாச்சி.
பூர்ணிமா அத்தாச்சி பொண்ணா? இல்ல எந்திரமா?
இல்ல ராட்சசியா?ன்னு ஊருலயும், ஒறவுலயும் கண்ணு வைக்காத ஆளெ கெடையாது. இந்தப் பொண்ண
கட்டிக்க எந்த மவரானுக்குக் கொடுத்து வெச்சிருக்கோன்னு சனங்ககிட்டெ அடுத்தப் பேச்சு
உண்டாவும். அந்தக் காலத்துல பெரியவருக்கு ஈடா, பெரியவர்ர வுட ஒரு நூலு மேல வெவசாயத்தைச்
சின்னவரு பாத்தாருன்னா அது பூர்ணி அத்தாச்சியாலத்தாம். சுப்பு வாத்தியாரு வேலங்குடி
வர்றப்போ பூர்ணி அத்தாச்சியப் பாத்து பல நேரத்துல அசந்துப் போவாரு. "இந்தப்
பொண்ணு மட்டும் இல்லன்னா யத்தாம் ஒஞ்ஞளுக்கு உண்டாவுறப் பெரச்சனையில குடும்பத்தெ தூக்கி
நிறுத்த முடியாது!"ம்பாரு.
"இதெப் பாத்தாவது ஆம்பளப் பயத்தானே
அந்த மணங்கலத்துப் பயெ அவ்வேம் திருந்தோணும்பீ! இந்தப் பொண்ணோட மூத்திரத்தெ வாங்கிக்
குடிச்சாலும் அந்தப் பயலுக்குப் புத்தி வாராதும்பீ! இன்னிய நெலைக்கு அந்தப் பயலுக்காக
நாம்ம அஞ்ஞ இஞ்ஞன்னு வேலையத் தேடி வெச்சிக்கிட்டு அலைஞ்சிட்டு இருக்க வேண்டிதா இருக்கும்பீ!
சென்னைப் பட்டணத்துக்கு வேலைக்குன்னுக் கொண்டு போறப்ப ஒரேடியா அஞ்ஞ தள்ளி வுட்டுப்புட்டு
வந்துப்புடணும். அப்பிடி தள்ளி வுட்டுப்புட்டு வந்துப்புட்டா, இஞ்ஞ ஊர்ல வெவசாயத்துல
பொண்ணுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்குலாம் பாரும்பீ! பாவம் ஒத்தப் பொண்ணா மொத்த
வேலையையும் பாத்துட்டு எம்மாம் செருமப்படுது! நம்மள சின்ன வயசுல அசலெடுத்துப் பாக்குறாப்புல
இருக்கும்பீ! என்னா ஒரு கொறைன்னா இத்து மட்டும் ஆம்பளப் புள்ளீயா பொறந்திருந்துச்சு,
பக்கத்துல இருக்குற எஞ்ஞ அண்ணன் கண்ணுல வெளக்கெண்ணெய்ய வுட்டு ஆட்டுவேம்! இப்பவும்
ன்னா கொறைஞ்சுப் போச்சு வெளக்கெண்ணெய்ய வுட்டுத்தாம் ஆட்டிக்கிட்டு இருக்கேம்!"ம்பாரு
சின்னவரு.
*****
No comments:
Post a Comment