7 Jun 2020

சொன்னபடி வாராமல் போன காசு!

செய்யு - 471

            குடித்தனம் பண்ணுதுல கொஞ்சம் உக்காந்திருக்கலாம்னு நெனைச்சா உக்காந்தே இருக்குறாப்புலயே ஆயிடும். எப்பவும் ஓடிட்டே இருக்கணுங்ற நெனைப்பு இருந்துகிட்டே இருந்தாத்தாம் ஓடிகிட்டெ இருக்க முடியும். சம்சாரித்தனங்றது காலம் பூராவும் ஓடிட்டே இருக்குறதுதாம். எங்கயும் நிக்குறது கெடையாது. கரையைக் கடக்கணும்ன்னா கப்பல் நகர்ந்துகிட்டெத்தாம் இருக்கணும். அதுக்குக் கப்பல்ல இருக்குற எந்திரங்க இயங்கிக்கிட்டெ இருக்கணும். நிக்கணும்னு நெனைச்சா நடுக்கடல்லயே நிக்க வேண்டியதுத்தாம். கப்பல் கரையேறணும்ன்னா அது எப்பிடி நகர்ந்துகிட்டெ இருக்கோ, அப்பிடித்தாம் குடும்பம்ங்ற கப்பல்ல கரை‍யேறணும்ன்னா அதுக்கு எந்திரமா இருக்குற சம்சாரிங்க ஓடிட்டெ இருக்கணும். ஒரு வெதத்துல ரெட்‍டை மாடு பூட்டுன வண்டித்தாம் குடும்பங்ற கப்பல்ன்னு வெச்சுக்கிட்டா, அந்த ரெண்டு மாடும் எந்திரமா இருந்து இழுக்குற இழுப்புலத்தாம் குடும்பங்ற கப்பல் அசையுறதும், நகர்றதும். ரெண்டு மாடும் ஒண்ணா இழுத்தா எந்த செருமமும் இல்லாம ஓடிட்டே இருக்கும். ஓடிட்டு இருக்குற ரெண்டு மாட்டுல ஒண்ணு சொணங்குனாவோ, முணகுனாவோ சங்கட்டம்தாம்.
            குடித்தனத்துக்காக ஒழைச்சு ஒழைச்சே தேயுற கட்டைங்கத்தாம் இல்லியா சம்சாரிங்க! அப்பிடி ஒழைச்சித் தேயாலன்னா எந்தக் குடித்தனம் குடித்தனமா இருக்கும்றீங்க? குடித்தனத்துல பெத்தவங்க புள்ளைகள வளைச்சு, நெளிச்சு வளக்குறது அதுக்குத்தாம். அவுங்கள கேட்டா அஞ்சுல வளையாதது அம்பதுல வளையாதும்பாங்க. கொறைஞ்சது அம்பது வயசு வரைக்கும் குடித்தனத்துக்காக பாடுபட்டாவணும். அம்பது வரைக்கும் பாடுபடாம அம்பதுக்குப் பெறவு பாடுபட நெனைச்சாலும் அஞ்சுல வளையாம இருந்ததால அம்பதுல வளையாமல்லா போயிடும். கிராமத்து குடும்ப வளப்புக பெரும்பாலும் அப்பிடித்தாம் இருக்கும். குடும்பமே ஒண்ணு சேந்து பாடுபட்டாத்தாம் கிராமத்துல வேல ஆவும்ங்றதால புள்ளெ, குட்டிகன்னு அதது வயசுக்குத் தக்கப்படி வேலை எந்நேரத்துக்கும் இருந்துகிட்டெ இருக்கும். அதெ பழக்கத்துல வர்ற புள்ளைகளா ஒழைக்காம உக்கார முடியாது. அதெ பழக்கமாயி உக்காந்திருப்பயும் எதாச்சியும் வேலையப் பாத்துக்கிட்டெ இருக்குமுங்க. பெறவு கலியாணமாயி குடித்தனம் ஆவுறப்போ அதெ பழக்கத்துல வந்துப்புடுறதால எந்தக் கொறையும் இருக்காது. அதெ பழக்கம்அதது  புள்ளைக் குட்டிகளுக்கும் தொத்திக்கும்.
            ஆன்னா பாருங்க! ஒரு கதிருல்ல இருக்குற நெல்ல உருவுனா எல்லா நெல்லுமா நெல்லா இருக்கு? ஒண்ணு ரண்டு பதரும் இருக்கத்தானே செய்யுது. கெராமத்துல அப்பிடி கணக்கெடுத்தா எல்லா புள்ளைகளும் ஒழைச்சுத் தேயுற கட்டைகளாத்தாம் இருக்கும்னாலும், ஒண்ணு ரண்டு செல்லம் கொடுத்து வளந்த பதரு புள்ளைகளா இருக்குமுங்க. இதெ ஏம் இப்போ இவ்ளோ விரிவா சொல்லணும்னுத்தானே கேக்குறீங்க? அப்பிடி ஒண்ணு ரண்டுல சின்ன வயசுல பதரா ஆன புள்ளீயோள்ல கண்ணாடிதாசு அத்தானும் ஒண்ணு. அது குடும்பத்துல ரண்டே புள்ளைக. ரெண்டும் ஆம்பளெ புள்ளீயோளா போனதுல, கண்ணாடிதாசு அத்தான் அதுல கடைக்குட்டிப் புள்ளையா போனதுல ஏகத்துக்குச் செல்லம்.
            செல்லம்ன்னா செல்லம் அத்து எப்பிடின்னா, வூட்டுல அம்மாக்காரி முந்தானையில முடிஞ்சி வெச்சிருக்கிற காசிய அந்து தூங்குற நேரமா பாத்து அறுத்து எடுத்துட்டுப் போயி, வாலிப வயசுல கள்ளுக் கடையில கள்ள குடிச்சிட்டு வார்ற அளவுக்குச் செல்லம். அதெ கண்டிக்கணும்னு கூட தோணாத அளவுக்கு ஒரு அம்மாக்காரியோட வளப்புத்தாம் கண்ணாடிதாசு அத்தான வளத்த வளப்பு. வூட்டுல ஒரு வேளையும் பாக்குறதில்ல. வெளையாடிட்டும், தின்னு தின்னுத் தூங்கிக்கிட்டும், எந்தப் பேச்சுப் பேசுனாலும் அதுக்கு எகனைக்கு மொகனையா பெச்சு வெச்சுக்கிட்டு வளந்த ஆளு.  
            கலியாணம் ஆவுறதுக்கு மின்னாடி ஒரு ஆளு எப்பிடி இருந்தாலும் கலியாணம் ஆனதுக்குப் பெறவு பொறுப்புங்றது யாரும் சொல்லிக் கொடுக்காம தானா வந்துப்புடணும். பொதுவா தோளுக்கு மேல வளந்த புள்ளீயோளுக்குப் புத்திச் சொல்ல கெராமத்துல யோசிப்பாங்கன்னா, புள்ளையப் பெத்துட்டப் பெறவு ரொம்பவே யோசிப்பாங்க. கண்ணாடிதாசு அத்தானுக்கு சின்ன வயசுலயும் புத்திச் சொல்ல ஆளில்லன்னா, தோளுக்கு மேல வளந்தப்ப யாரு புத்திச் சொல்லிருப்பா? அதெத் தாண்டி கொழந்தை போறந்த பெறவு யாரு புத்திச் சொல்லிருப்பா? அதுவும் சின்னவரு குடும்பத்துக்கு மூத்த மாப்புள அவரு. குடும்பத்தல எதாச்சிம் செய்யணும்னா அதுகிட்டேயும் ஒரு வார்த்தெ கலந்தாவணும்ங்றப்ப, மாப்புள்ள முறுக்கெ காட்டுறாப்புல வுட்டுப்புடக் கூடாதுன்னு சின்னவரு பல வெசயங்கள்ல அடக்கியே வாசிச்சாரு. அதெல்லாம் சேந்துத்தாம் இப்போ எல்லாத்துக்கு எதிரா போயி நின்னுச்சு.
            இப்போ ஓரளவுக்குக் கண்ணாடிதாசு அத்தானெப் பத்தி புரிஞ்சிப் போயிருக்கும். இனுமே பாதியில நிக்குற பஞ்சாயத்தெ பாத்தா மிச்சமும் புரிஞ்சிடும்.
            சுப்பு வாத்தியாரு அறுத்துக் கட்டுனாப்புல பேசுனாரு, "நீஞ்ஞ நல்ல புள்ளத்தாம். வேலக்காரருதாம். அதுல எல்லாம் ஒரு குத்தமும் காண முடியாது. வேலைக்கி தொடந்தாப்புல போவாத ஒரு கொறைத்தாம்..."ன்னு இழுத்தாரு சுப்பு வாத்தியாரு.
            "வேற எதாச்சிம் கொறை இருந்தாலும் சொல்லிடுங்கண்ணே! கொறை சொல்றதுன்னு முடிவான பெற்பாடு அதுல கொறைச்சி ன்னாவப் போவுது?"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான் நக்கலா.
            "ஆமாம்பீ! ஒரே கதெயா முடிச்சிப்புடணும். ரண்டு கதையாக்கி முடிச்சிப் போடக் கூடாது. ஒரே மூச்சா தாண்டிப்புடணும். பாதிக் கெணறு தாண்டி மீதிக் கெணற மறுக்கா தாண்டுறதுங்ற வேலயே இருக்கக் கூடாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுத்தாம். எல்லாத்தையும் பேசி முடிச்சி வுட்டாவணும்!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாரு அதெ பேச வாணாம்னு நெனைச்சு வேறொண்ணுக்குப் போவ நெனைச்சா, ரெண்டு பேத்தும் பேசுன பேச்சு, அவர்ர அந்த வெசயத்தைப் பத்தியும் பேச வெச்சிடுச்சு. "அத்து ஒண்ணுமில்லத்தாம்! கொஞ்சம் குடிக்கிறதாவும் கேள்வி. அதாங் குடும்பம் இப்பிடி இருக்குற நெலைக்குக் காரணம்ன்னு நெனைக்கிறேம். நாம்ம சரிபண்ணணும்னு அதுலேந்துத்தாம் சரி பண்ணியாவணும். குடிச்சிப் பழகுனவங்க நிறுத்த முடியாதுதாங். அளவா குடிச்சிக்கிறதால தப்பு ஒண்ணுமில்லே!"ன்னு ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம குடிக்கிறதெ யண்ணேம் என்னவோ பக்கத்துல நின்னு ஊத்திக் கொடுத்தாப்புலல்லா சொல்றாப்புல! அந்தப் பழக்கமெல்லாம் நமக்குக் கெடையா. எத்தெ சொல்றதா இருந்தாலும் ஞாயமா சொல்லணும். வாயிக்கு வந்த படியெல்லாம் பேசப் படாது. எதெ ஞாயமா சொன்னாலும் அதெ கேட்டுக்கிடறேம்!"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.

            சுப்பு வாத்தியாருக்கு இந்தப் பதிலு சுருக்குன்னு தைச்சாப்புலத்தாம் இருந்துச்சு. அப்பிடி சுருக்குன்னு ஆவாதப்படி அந்த எடத்துல தேவி அத்தாச்சி முனுக்குன்னு பேசுனுச்சு.
            "ச்சும்மா நிறுத்துங்க! அந்தச் சேதி என்னவோ யாருக்கும் தெரியாத மாதிரிக்கிப் பேசுதீயே! ஊருக்குத்தானே தெரியும். குடிச்சிட்டு வந்து எத்தனெ நாளு நம்மள இழுத்துப் போட்டு அடிச்சிருப்பீயே? குடிக்கப் பணம் இல்லன்னு இல்லன்னுத்தானே வூட்டுல இருக்குற அண்டாவ,குண்டாவ அத்தனையையும் அடகு வெச்சீங்க. அடகு வெச்சதுல பாதி குடிக்குறதுக்குப் போனுச்சு, பாதித்தானே குடும்பத்துக்கு வந்துச்சு. இருந்த நகையில அடகு வெச்சதுல பாதி குடிக்குறதுக்குதானே போனுச்சு! வேலைக்கும் போயிட்டுக் குடிச்சிட்டும் கெடந்தா ஒண்ணும் தெரியாது. வேலைக்கே போவாம குடிக்கிறதுன்னா அதாங் ஆட்டம் காலி படுதா மிச்சமாயிடுச்சு!"ன்னுச்சு தேவி அத்தாச்சி.
            "ஓ! இந்தக் கதெ வேறயா? என்னத்தெ பண்ண? இவ்வேம்கிட்டெ வெச்சு என்னத்தெ குடித்தனம் பண்ண வுடுறது பொண்ண? இவ்வேங்கிட்டெ வுட்டுப்புட்டு அஞ்ஞ வூட்டுல நாம்ம கோழிக்கனாவ கண்டுட்டு இருக்குறது?"ன்னாரு சின்னவரு.
            "எப்பவாச்சிம் ஒடம்பு முடியாத நாளுக்கு ஒடம்பு வலின்னு கொஞ்சம் குடிக்குறதுதாங். வெளியில வேலைக்குப் போற நாம்ம கட்ட அடிச்சி, பலவையத் தூக்கிக் கோத்து வேல பாக்குறப்போ ஒடம்பு வலி இருக்காத்தானெ செய்யும். என்னிக்கோ ஒரு நாளு குடிச்சிட்டு வாரது, அன்னிக்குன்னு பாத்து வாயச் சும்மா வெச்சிட்டுக் கெடக்காமா ஒண்ணு கெடக்க ஒண்ணு வூட்டுல இருக்குற பொம்முனாட்டிச் பேசுறப்போ எதாச்சிம் அப்பிடி இப்பிடின்னு நடக்குறதுதாங். எல்லாத்தையும் கணக்குல வெச்சுப் பாத்தா எந்த ஆம்பளெ உத்தமன்னு சொல்லுங்க பாப்பேம்? ஏம் நீஞ்ஞல்லாம் ஒரு நாளு கூடெ வூட்டுல இருக்குற பொம்முனாட்டியப் போட்டு அடிச்சது இல்லியாக்கும்?"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
            "இப்பிடிப் பேசிட்டுக் கெடந்தா பேசிட்டே போவ வேண்டியதுதாங். அதுக்கு ஒரு முடிவே கெடையாது! மொதல்ல மச்சாங் கேட்டப்போ குடிக்கிறதெ கெடையாதுங்றது. சாட்சியோட சொன்னாக்கா ஆமாங் கொஞ்சம் குடிக்கிறதுங்றது. இதுல எதெ நம்புறது? எதாச்சிலும் ஒண்ணுத்துல இப்பிடிச் சொன்னா பரவாயில்ல. எல்லாத்துலயும் இப்பிடியேன்னா என்னத்தெ பண்ணுறது? பணத்தெ வாங்குனீயான்னா இல்லேங்றது. பெறவு ஆதாரத்தெ வெச்சிக் கேட்டா ஆமாங் கொஞ்சம் வாங்குனங்றது. ச்சேய்! என்ன பொழப்போ? என்ன சென்மமோ? இத்தெல்லாம் சரிபட்டு வாராது யம்பீ! நீஞ்ஞ அவுங்க வூட்டுல பாத்துச் சொல்லி வுட்டுப்புடுங்க. நாம்ம பொண்ணயும், புள்ளையயும் அழைச்சிட்டுக் கெளம்புறேம். ஒண்ணும் வெச்சி சோறு போட முடியாம இல்ல. அழைச்சிட்டுப் போனாத்தாம் கட்டுன பொண்டாட்டி, புள்ளய வெச்சிச் சோத்தப் போட வக்கில்லன்னு ஊருல நாலு பேத்துப் பேசுவாம். அப்பிடிப் பேசுனாத்தாம் கொஞ்சமாச்சிம் சொரனெ வரும். சுத்தமா சொரனெகெட்ட தனமா பேசுனா என்னத்தெ பண்ணுறது?"ன்னு எழுந்து நின்னு வேட்டிய மடிச்சிக் கட்டுனாரு சின்னவரு.
            இதெ பாத்ததும் கண்ணாடிதாசு அத்தானுக்குத் திரும்ப ஒதறலும், நடுக்கமும் வந்துப் போச்சுது. சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "என்ன யண்ணே! நீஞ்ஞ பாட்டுக்கு மாமனாரு முன்னாடி வெச்சுப் பேசுனா எப்பிடி ஒத்துக்கிட முடியும்? அதாங் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு பேசிப்புட்டேம். தப்புத்தாம். யண்ணே! பாத்துக் கொஞ்சம் பேசி வுடுங்கண்ணே!" அப்பிடின்னு கையப் பிடிச்சிக் கெஞ்சுனது. சுப்பு வாத்தியாருக்கு மின்னாடி கண்ணாடிதாசு அத்தான் பேசுனதுல, மனசு கொஞ்சம் கடுப்பா இருந்தாலும், கண்ணாடிதாசு அத்தான் இப்போ கையப் பிடிச்சிக் கெஞ்சுனதுல மனசுல இருந்த கடுப்பு கொஞ்சம் கொறைஞ்சுது.
            "யத்தாம்! கொஞ்சம் சித்தெ பொறுங்க. பேசிட்டுத்தானே இருக்கோம்லா. நீஞ்ஞ ஒஞ்ஞ மனசுல உள்ளதெ சொல்லுங்க. அதுக்குச் சரிபட்டு வர முடியுதான்னு யம்பீயக் கேப்போம்! சரிபட்டு வந்தா பாக்கலாம். இல்லன்னா மேக்கொண்டு பெரியவங்கள வெச்சிப் பேசலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாருங்க யண்ணே! நீஞ்ஞளுந் செரித்தாம், மாமாவும் செரித்தாம் ன்னா வாணாலும் வெச்சிப் பேசிக்குங்க. இன்னும் கடுமெயா பேசுனாலும் செரித்தாம், கேவலமா பேசுனாலும், திட்டுனாலும் செரித்தாம். அதெ ஏத்துக்கிடுறேம், தாங்கிக்கிடுறேம். சம்பந்தம் இல்லாம வேற யாரையும் வெச்சிப் பேசக் கூடாது. நீஞ்ஞ எதெ பேசுனாலும் நாம்ம கட்டுப்படுறேம். இதுக்கு மேல ஒரு ஆம்பளெ எறங்கி வந்து பேச முடியாது பாத்துக்கிடுங்க!" அப்பிடினுச்சு.
            இந்த எடத்துல சின்னவரு பிடிச்சிக்கிட்டாரு, "இந்தாருங்க யம்பீ! அடவு வெச்ச நகெ பூராத்தயைும் நாம்மளே மீட்டுத் தர்றேம். சாமாஞ் செட்டு எல்லாத்தையும் மீட்டுத் தர்றேம். மாசா மாசம் மளிகெ சாமானுங்க அரிசி, பருப்பு வரைக்கும் வாங்கியாந்து போடுறதுல நமக்கு ஒண்ணும் அட்டியில்லே. செஞ்சிப்புடுறேம். ஆன்னா இனுமே மாப்புளே சைக்கிள மிதிச்சிக்கிட்டு வேலங்குடி வந்தாவணும். நம்மளோடத்தாம் வேல பாத்தாவணும். வேலையப் பாத்தா அன்னனிக்கு வந்துட்டுப் போறதுக்கான காசியத்தாம் தருவேம். மிச்சத்தெ நாம்மத்தாம் வெச்சிப்பேம். மாசத்துல ரண்டு தடவெ இஞ்ஞ வந்து விசாரிச்சேம்ன்னா பொண்ணுகிட்டேயிருந்து எந்த மொணகலும் வாரக்கூடாது. இஞ்ஞ வூட்டுல எந்தச் சங்கதின்னாலும் அஞ்ஞ வேலங்குடிக்கு நம்ம காதுக்கு வந்துப்புடணும். இதுக்குல்லாம் சம்மதம்ன்னா கேட்டுச் சொல்லுங்க யம்பீ!"ன்னாரு சின்னவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "ஒரு வழியா அத்தாம் எல்லாத்தையும் ஒரே அடியா மேக்கோண்டு பேச வழியில்லாத அளவுக்கு பேசி முடிச்சிப்புட்டாப்புல. இனுமே நீஞ்ஞத்தாம் யம்பீ பதிலெச் சொல்லணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கண்ணாடிதாசு அத்தானப் பாத்து.
            கண்ணாடிதாசு அத்தான் குனிஞ்சிக்கிட்டெ, "நமக்குச் சம்மதம்தாம் யண்ணே! ஒரே ஒரு வெசயம். ஞாயித்துக் கெழமெ ஒரு நாளு மட்டும் காசியக் கோடி கொட்டிக் கொடுத்தாலும் நாம்ம வேலைக்கி வர மாட்டேம். அன்னிக்கு ஒரு நாளு மட்டும் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு குடிக்கிறதுக்குச் சம்மதம் கொடுத்தாவணும். ஏம் சொல்றேம்ன்னா இப்போ ஒப்புக்கிட்டு பெறவு பெசண்டுப்புட்டாம்னு பேச்சு வந்துப்புடக் கூடாதுல்லா! இதுக்கு நீஞ்ஞத்தாம் மாமாகிட்டெ கேட்டுச் சொல்லணும்!"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
            சுப்பு வாத்தியாரு எதுவும் பேசாம மெளனமா இருந்தாரு. சின்னவருதாம் பேசுனாரு, "செரித்தாம் யம்பீ! வாரத்துல ஒரு நாளு வேலைக்கி வார்ற வாணாம். அன்னிக்குக் குடி தேவ யில்ல. அப்பிடி குடிச்சித்தாம் ஆவணும்ன்னா வூட்டுல வாங்கி வெச்சிக் குடிச்சிட்டு வூட்டுலயே படுத்துக்கிடணும். வெளியில போவக் கூடாது எஞ்ஞயும்! சம்மதமான்னு கேளுங்க யம்பீ!"ன்னாரு சின்னவரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "அதுல்லாம் மாமா சொல்றது ஞாயந்தாம் யண்ணே! நமக்கொண்ணும் அட்டியில்ல. நம்ம நல்லதுக்குதானே சொல்லுதீங்க!"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
            "இதுக்கு மேல எதயும் பேச வாணாம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "செரித்தாம் யம்பீ! கெளம்புவோம்!"ன்னாரு சின்னவரு.
            பேச்சு வார்த்தே இப்பிடியா ஒரு முடிவுக்கு வந்துச்சு. எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு சின்னவரு கெளம்புறப்போ கொஞ்சம் காசிய தேவி அத்தாச்சிக்கிட்டெ கொடுத்தாரு. சுப்பு வாத்தியாரும் ஒரு நூத்து ரூவா தாளெ எடுத்து தேவி அத்தாச்சிக்கிட்டெ கொடுத்தாரு. ரெண்டு பேரும் சைக்கிள்ல கெளம்புனாங்க. சின்னவரு சைக்கிளு மணமங்கலத்துலேந்து மேற்கால வேலங்குடி நோக்கிக் கெளம்புனுச்சு. சுப்பு வாத்தியாரோட சைக்கிளு மணமங்கலத்துலேந்து கெழக்கால திட்டைய நோக்கிக் கெளம்புனுச்சு. கடெசீயா, "போயிட்டு வார்றேம்பீ!"ன்னுச் சொல்லிக் கெளம்புனவரு, கொஞ்சம் நிறுத்தி, "மாப்புள ஒஞ்ஞகிட்டெ வாங்குன பணத்தெ கூடிய சீக்கிரமே திருப்பித் தர்ற ஏற்பாட்ட பண்றேம்! அடுத்த மொறை வர்றப்ப ஒஞ்ஞப் பணம் ஒஞ்ஞ கையில இருக்கும்!"ன்னாரு சின்னவரு.
            "அதால என்னத்தாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ரெண்டு பேரும் எதிரெதிர் தெசையில சைக்கிள கெளப்பிட்டுப் போனாங்க. எதிரு தெசையில போனதால என்னவோ சின்னவரு என்னத்தெ சொன்னாரோ, அதுக்கு எதிரா சொன்னபடிக்குக் காசிய கடெசீ வரைக்கும் சுப்பு வாத்தியாருகிட்டெ கொடுக்கல. சுப்பு வாத்தியாரும் அதெ வாயைத் தொறந்து கடெசீ வரைக்கும் கேக்கல. அத்தாங்கார்ரேம் கொடுக்காட்டியும், அக்கா மருமவனுக்காக செஞ்சதா இருக்கட்டும்னு நெனைச்சிக்கிட்டாரு. அதுக்குப் பெற்பாடு கண்ணாடிதாசு அத்தான் காசின்னு வந்து நின்னு கேட்டா கொடுக்கக் கூடாதுங்ற முடிவுல மட்டும் உறுதியா நின்னுகிட்டாரு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...