செய்யு - 470
வேலங்குடி சின்னவரு ஆஸ்பிட்டலேந்து எல்லாத்தையும்
மணமங்கலம் கண்ணாடிதாசு அத்தானோட வூட்டுக்குக் கொண்டாந்து பஞ்சாயத்த வெச்சாரு. மச்சாங்காரரு
சுப்பு வாத்தியாரையும் கூட வெச்சிக்கிட்டாரு.
"வாத்தியாரு மச்சாங்கிட்டெ ஆயிரத்து
ஐநூத்து வாங்கியிருக்கீயேளே மாப்புள! நெசந்தான்னா?" அப்பிடின்னு கண்ணாடிதாசு அத்தானப்
பாத்துக் கேட்டாரு வேலங்குடி சின்னவரு.
"அவ்ளோல்லாம் வாங்கல மாமா!"ன்னுச்சு
கண்ணாடிதாசு அத்தான்.
"செரி! வாத்தியாரு மச்சாங் கூடச்
சொல்றதாவே வெச்சிப்போம்! எம்மாம் வாங்குனீயே?"ன்னாரு சின்னவரு.
"வாங்கியிருக்கேம்! எம்மாம்ன்னு கணக்குல்லாம்
வெச்சிக்கில. கணிசமா கொஞ்சமா இருக்கும்!"ன்னுச்சு கண்ணாடிதாசன் அத்தான்.
"ரொம்ப வாங்குனதா வெச்சிக்க வாணாம்.
பத்து ரூவா வாங்குனதாவே வெச்சிப்போம்! அதெ திருப்பிக் கொடுத்தீயளா மாப்புளே?"ன்னாரு
சின்னவரு.
கண்ணாடிதாசன் அத்தான் ஒண்ணும் சொல்லாம
கெக்கே பிக்கென்னு சிரிச்சிது. "அத்து வந்து மாமா... அத்து வந்து மாமா... கொடுக்கலாம்னு
நெனைக்குறதுதாங். அதுக்குள்ள வேற எதாச்சிம் வேல வந்து... அதெ பாத்து... அப்பிடியே முடியாம
போயிடுச்சு!"ன்னுது.
"அப்பிடி ன்னா முக்கியமான வேல மாப்புளே,
வாங்குன காசியக் கொடுக்குறதெ வுட? காசிய வாங்க வாரப்ப மட்டும் அந்த முக்கியமான வேல
இல்லாமலா போயிடுதோ? அப்போ அந்த முக்கியமான வேலய ஒத்தி வெச்சிட்டுத்தான காசிய வாங்க
வந்திருப்பீயே? இதெல்லாம் பேச்சுல்லா. இப்பிடில்லாம் பேசப்படாது மாப்புளே!"ன்னாரு
காட்டமா சின்னவரு.
"ன்னா மாமா நம்மகிட்டெயே எகுறாப்புல
தெரியுது? இத்து எங் குடும்பப் பிரச்சனெ. அவனவனும் குடித்தனம் நடத்துறது எம்மாம் கஷ்டம்ன்னு
குடித்தனம் பண்ணுற நமக்குத்தாம் தெரியும். ஒஞ்ஞளுக்கு ன்னா? ஒண்ணுக்கு ரண்டு புள்ளையா
சம்பாதிக்கிது! இன்னொரு மருமவ்வேம் துபாயிலேந்து சம்பாதிச்சி அனுப்புறாம். கையுல காசி
அது பாட்டுக்குப் பொரளுது. வயலுக அது பாட்டுக்கு வெளைஞ்சித் தள்ளுது. மைனரு மாரில்லா
கையில இருக்குற காசிய வெச்சிட்டு அஞ்ஞயும் இஞ்ஞயும் ரூவா நோட்ட கையிலயும் பையிலயும்
வெச்சிக்கிட்டு வெளுத்த வேட்டியும், சலவெ பண்ண சட்டையுமா அலைஞ்சிட்டு இருக்கீயே! கஷ்டமா?
நஷ்டமா? ஒஞ்ஞளுக்கு எத்து இருக்கு?"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
"அட ஒப்பந் தன்னானே! மொதல்ல கேட்டதுக்கு
நம்மட மச்சாங்காரரையே நம்மட மின்னாடி கொறை சொல்றே! இப்போ கேக்குறதுக்கு நம்மளையும்
சேத்துல்லா கொறை சொல்றீயே மாப்புளே! ஒங் கருத்துப்படியே வர்றேம். குடித்தனம் பண்றது
கஷ்டந்தாம். புள்ளெ பொறந்துட்டாம். ஒடம்புக்கு முடியாம கொள்ளாமத்தாம் போவும். கையில்ல
காசி இல்லாமலும் போவும். வேல எல்லா நாளும் கெடைக்காது. ஒரு சமயத்துல ஓகோன்னு கெடைக்கிற
வேல இன்னொரு சமயத்துல இருக்காது. எல்லாத்தையும் ஒத்துக்கிடறேம். இல்லன்னு எதையும்
சொல்லல..."ன்னு சின்னவரு சொல்லிட்டு இருக்குறப்பவே, கண்ணாடிதாசு அத்தான் குறுக்கால
பூந்து, "அதாங் மாமா சொல்றேம். இப்பத்தாம் சரியான பேச்சுக்கு வருதீயே!"ன்னுச்சு.
"சித்தெ பொறுங்க. வாயெ சித்தெ மூடுங்க
மாப்புளே! இன்னும் நாம்ம விசயத்துக்கு வரல!"ன்னாரு சின்னவரு. சொல்லிட்டு மேக்கொண்டு
பேச ஆரம்பிச்சாரு, "ஒஞ்ஞ கருத்துப்படி எல்லாஞ் சரித்தாம். கஷ்ட நஷ்டம் இருக்குங்றது
ஒண்ணு. வேலப்பாடு தொடர்ந்து கெடைக்கலங்றது ரெண்டு. கொழந்த குட்டிகளுக்கு ஒடம்புச்
சரியில்லாம போவும்ங்றது மூணு. கைமாத்தா பணத்தெ வாங்காம இருக்க முடியாதுங்றது நாலு.
திடீர்ன்னு பணங்காசித் தேவ வர்றப்போ தவிச்சிப் போயி நிக்குறதுங்றது அஞ்சு. இந்த அஞ்சும்
ஒண்ணு சேர்றப்போ நமக்கு நேரம் சரியில்லாம போயிடுதுங்றது ஆறு. எல்லாத்தையும் ஒத்துக்கிடுறேம்!"ன்னு
சின்னவரு சொன்னாரு பாருங்க, அதுக்கு இடையிலயும் கண்ணாடிதாசு அத்தான் பூந்து,
"அதாங், அதுவேதாங் மாமா! இப்பத்தாம் மாமா நம்மப் போக்குக்கு வருதீயே!"ன்னுச்சு.
"சித்தெ இருங்கன்னு சொல்றேம்லா!
ஏம் ஊடல பூந்து வார்த்தையெ வுடுறீயே மாப்புளே! பய பொறந்து நாலு வருஷமாவப் போவுது. அவனுக்கு வயசு நாலு ஆவுது.
மொத்தத்துல அஞ்சு வருஷ குடித்தனமா ஆவப் போவுது. இத்தனெ வருஷத்துல புருஷனும் பொண்டாட்டியுமா
சேர்ந்து என்னத்தெ செத்து வெச்சிருக்கீயே? ரொம்ப பெருசா ஒண்ணுத்தையும் கேக்கல. ஒரு
அண்டா குண்டா உண்டா? அவசரத்து அடகு வைக்கிறதுக்கு ஒரு அண்டா இருந்தா போதுமே! வாங்கிக்கிட்டுக்
காசியக் கொடுக்குறதுக்கு அடவு கடெ நாட்டுல இருக்கு. இத்து ஒண்ணாச்சா! இதெ அப்பிடியே
வுடுங்க. புருஷன் பொண்டாட்டி சாமர்த்தியமா யில்லாம பைசா காசிச் சேக்கலன்னே வெச்சிப்போம்!
பரவாயில்ல! எல்லா குடும்பத்துலயும் அத்து சாத்தியம் இல்லன்னே வெச்சிப்பேம்!"ன்னாரு
பாருங்க சின்னவரு, ஒடனே கண்ணாடிதாசு அத்தான், "நம்மள அப்போ ஒண்ணுக்கும் லாயக்கில்லாத
ஒதவாக்கரை பயலுன்னு சொல்ல வருதீயே, அப்பிடித்தானே?"ன்னுச்சு.
"ஊடாலு பூந்து பேசாதீயே! அவசரப்படாதீயேன்னு
சொல்லிட்டேம்! நாமளும் பாக்குறேம்! வுட்டேம் வுட்டேம் அப்போலேந்து குறுக்கால பூந்து
குறுக்கு சாலு ஓட்டிக்கிட்டு, தப்புத் தப்பா தொளைய அடிச்சி தப்புத் தப்பா சட்டத்தெ
மாட்டிக்கிட்டு? இந்தாருங்க மாப்புளே சொல்ற வெசயத்த மனசுல வாங்கிக்கிட்டு பெறவு எதுவா
இருந்தாலும் பேசணும் ஆம்மா! யில்லன்னா நமக்குக் கெட்ட கோவம் வந்துப்புடும் பாத்துக்குங்க!
எங்க வுட்டேம்! அதாங் குடும்பத்துல பொண்ணு புருஷன் ரண்டுக்கும் சாமர்த்தியம் பத்தாது.
செரி பரவாயில்ல. இருந்துட்டுப் போவட்டும். அத்து ஒரு விசயமில்ல. நாம்ம எம் பொண்ணுக்குன்னு
போட்டோமே பாஞ்சு பவுனு நகெ, சீரு சனத்தி சாமாஞ் செட்டுக. அத்து இருக்கணுமா இல்லியா?
இத்தோ வூட்டெப் பாக்குறேம். சமைக்குறதுக்குத் தவுர வேற ஒரு சாமாஞ் செட்டுக் கூட இருக்குறாப்புல
தெரியல. அதெல்லாம் எஞ்ஞ இருக்குதுன்னு தெரியல.
சாமாஞ் செட்டுக போவட்டும். எங்கயோ பரண் மேல கெடக்குன்னு வெச்சிப்போம்!"ன்னு
சின்னவரு சொன்னாரோ இல்லியோ, தேவி அத்தாச்சிக்கு அழுகெ விம்மி வந்து அது பேசுனுச்சு,
"ஒண்ணுமில்லப்பா நீஞ்ஞ செஞ்ச ஞாபவமா? எல்லாமும் அடவுக் கடைக்குப் போயாச்சு. வூட்டுல
புள்ளையையும், புருஷனையும் பட்டினியா போட்டுட்டு நாம்ம என்னத்தெ அண்டாவையும் குண்டாவையும்
வெச்சிக்கிட்டு ஊருல மவராணின்னு சோக்குக் காட்டப் போறேம்?"ன்னு.
"மாப்புள! இத்து ஒஞ்ஞ வூட்டுக்காரியோட
வாக்குமூலம். சாமாஞ் செட்டுக ஒண்ணு கூட இல்லங்றது. ஒஞ்ஞளுக்கு ஏத்தும் ஆட்சபனே இருந்தா
இப்பச் சொல்லலாம். பெறவு பேசுறப்ப வூடால பூரக் கூடாது!"ன்னாரு சின்னவரு.
"ஏம் நீஞ்ஞ பேசுனப்போ ஊடால பூந்து
ஒஞ்ஞ மவ்வே பேசலீயா? அத்து குத்தமில்லையாக்கும்?"ன்னுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
"இந்தக் கொசக்கெட்ட பேச்சுத்தாம்
வாணாம்ங்றேம். பேச்சு எதெப் பத்தி ஓடிட்டு இருக்கு? நீஞ்ஞ எதெப் பத்தி பேசிட்டு இருக்கீயே?
இப்பிடிப் பேசிப் பேசித்தாம் எதெ பேச வர்றோமொ அதெ பேச வுடாம அடிக்கிறது. நாம்ம இன்னிக்கு
வுடுறாப்புல இல்ல. எஞ்ஞ நிப்பாட்டுனேம்? சாமாஞ் செட்டு யில்ல. செரியாப் போச்சு. அதெ
வுட்டுத் தள்ளிப்புடலாம். நக நெட்டு எஞ்ஞ? அதெ இப்போ எடுத்தாந்து காட்டியாவணும்? அம்புட்டுத்தாம்
சேதி! அம்புட்டுத்தாம் கேள்வி. அம்புட்டுத்தாம் விசயம். அதெ எடுத்தாந்துக் காட்டிப்புட்டா
நாம்ம ஒண்ணும் பேசல. கெளம்பிப் போயிட்டெ இருப்பேம். ஏம் கேக்குறம்ன்னா அத்து இருந்திருந்தா
ஒரு அரை பவுனையோ, கா பவுனையோ அடவு வெச்சா கூட போதுமே காசிக்கு? நம்மட மச்சாங்கார்ரேம்
கேட்ட ஒடனேய காசிக் கொடுக்கலங்ற குத்தம் வர்றாதுல்லா? அம்புட்டுத்தாம். இனுமே மாப்புளே
பேசலாம்!"ன்னாரு சின்னவரு.
கண்ணாடிதாசு அத்தானுக்கு மூக்கு முழி பொரண்டு
போயிடுச்சு. கண்ணு காதுல்லாம் வெறிச்சிக்கிடுச்சு. "நம்மள நம்ப மாட்டீயோளோ?"ன்னுச்சு
கண்ணாடிதாசு அத்தான்.
"நம்புறாப்புல இல்ல. கண்ணுல கொண்டாந்து
நகெ நட்ட காட்டுனா நம்புறேம்!"ன்னாரு சின்னவரு. அத்தோட வுடாம, "வூட்டுக்காரர்கிட்டெ
பதிலு இல்லே. வூட்டுக்காரியாச்சும் பதிலெ சொல்லு!"ன்னாரு சின்னவரு.
"ஏம்ப்பா இப்பிடி நம்மள போட்டு வாயு
வுட்டு வாய வாங்க வைக்குதீயே! வூட்டுல சாமாஞ் செட்டெ யில்லன்னா நக நெட்டு எப்பிடிப்பா
இருக்கும்? எல்லாம் அடவுக் கடையிலத்தாம் பத்திரமா இருக்கு!"ன்னு அழுதுச்சு தேவி
அத்தாச்சி.
"அத்து ஊர்ல நாட்டுல ஒலகத்துல திருட்டுப்
பயம் அதிகமா இருக்கு. அடவு கடையிலன்னா பாதுகாப்பா இருக்கும்ன்னு வெச்சதுதாங்! அடவுக்
கடையில வெச்சா அப்பிடியாவே வுட்டுப்புடுவேம்? நாளைக்கி நாளா நாளிக்கி மீட்கத்தாம் போறேம்.
இதெல்லாம் ஒரு பேச்சுன்னு வெச்சிக்கிட்டு?" அப்பிடினுச்சுப் பாருங்க கண்ணாடிதாசு
அத்தான். சின்னவருக்குக் கோவம் வந்துடுச்சு. "அடிச் செருப்பால! வூட்டுக்கு மொத
மாப்புளன்னு பாக்க மாட்டேம்! மருவாதிக் கெட்டுப் போயிடும்! ஒரு பொண்ணு புள்ளைய வெச்சுச்
சோறு போட வக்கில்ல. நாம்ம செஞ்சதெ அடவு வெச்சியும், வித்தும் இத்தனெ நாளும் சாப்பிட்டுப்புட்டு
இருந்திருக்கீயே! இதுக்கு எதுக்கு நாம்ம கலியாணம் பண்ணி வைக்கணும்? நம்மட வூட்டுலயே
வெச்சிருந்திருப்பேமே! நமக்கு ன்னா சோத்தப் போட வக்கில்லன்னு நெனைச்சு கட்டிக் கொடுத்திருக்கோம்ன்னு
நெனைப்பாக்கும்? இப்பவே பொண்ணையும் பேர புள்ளையையும் வூட்டுல கொண்டு போயி வெச்சுக்கிட்டு
போடா மசுராம்ன்னு நின்னு ஆளாக்கிக் காட்டிப்புடுவேம். இன்னும் கிட்டாம் ஆச்சாரின்னா
வூடு தேடி வந்து வேலைக்குக் கூப்புட ஊரு ஒலகத்துல ஆளா பறக்குறாம் தெரியும்ல! டேய் இந்தாருடா!
ஒண்ணுக்கு ரண்டா மச்சங்கார்ரேம் ஒனக்கு. ரண்டு பயலுவோலும் ஒறுப்பான பயலுவோ. சங்கதி
இந்த மாதிரிக்கின்னு சொன்னா போதும். ஒன்னய இங்ஙன வெச்சியே மிதிச்சி வவுத்துல இருக்குற
மொத்த பீயையும் பிதுக்கி வெளியில எடுத்துப்புடுவானுவோ! மாப்புள்ளன்னா மருவாதிக் கொடுத்துப்
பேசுனா என்னவோ மேக்கரிச்சாப்புல பேசுறாம்? இந்தப் பேச்சுல்லாம் நம்மகிட்டெ வாணாம்!
ஏந் தேவி! நீயி மொதல்ல பயலத் தூக்கிக்கிட்டு வேலங்குடிக்குக் கெளம்பு! தனியா இருந்து
தஞ் சோத்துக்காவது இந்த எடுபட்ட பயலுக்குச் சம்பாதிக்க முடியுதுன்னா பாப்பேம்?"ன்னு
எகிறிக் குதிச்சாரு சின்னவரு.
கண்ணாடிதாசு அத்தானுக்கு ஒடம்பு ஒதறல்
வுட ஆரம்பிச்சது. என்ன பேசுறோம்ன்னு புரியாம கெக்கெ பிக்கென்னு ஒளற ஆரம்பிச்சிது.
"இப்பிடில்லா பேசுனா... அப்பிடிக்கா ஆன்னா... கஷ்ட நஷ்டம்... மான மருவாதி... ன்னத்தா
ஆவுறது... நாலு பேத்துக்குத் தெரிஞ்சா... கயித்துல தொங்குறதா..." அப்பிடி இப்பிடின்னு
சம்பந்தம் இல்லாம பேசுனுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
அதுவரைக்கும் பேசாம இருந்த சுப்பு வாத்தியாரு
இப்பத்தாம் பேச ஆரம்பிச்சாரு. "அத்தாம் நாமளும் ஒரு அளவெ தாண்டிப் பேசப் படாது.
பேசவும் கூடாது. இந்தாருங்க யம்பீ! நீஞ்ஞளும் தப்பா நெனைச்சிக்கக் கூடாது. ஒருத்தரு
இந்த அளவுக்குப் பேசுற அளவுக்கு நடந்துப்புடக் கூடாது. நல்ல வெச்சுப்பீங்கங்றதுக்குத்தாம்
பொண்ணு புள்ளயக் கட்டிக் கொடுக்குறது. இப்பிடி ஒரு கோலத்தப் பாத்தா அத்தானுக்குக்
கோவம் வர்றதிலயும் தப்புன்னு சொல்ல முடியல. நீஞ்ஞ ஒளர்ற ஒளர்லப் பாத்தா நமக்கு என்னா
சொல்றதுன்னு தெரியல. ரொம்ப அநத்தமா பேசிட்டு இருக்குறதுல ஒண்ணும் ஆவப் போறதில்ல.
நடந்ததெ போயி இனுமே மாத்துறதுக்கில்ல. இனுமே நடக்குறதெ வெச்சித்தாம் நடந்ததுக்கு நல்ல
வெதமான ஒரு மாத்தத்த நடக்கப் போற காலத்துக்குக் கொடுக்க முடியும். அதெப் பத்திப்
பேசுனாத்தாம் சரிபட்டு வரும்! ன்னா பண்ணலாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாங் மாமா! ஒழுங்கா வேலைக்குப்
போயி சம்பாதிக்கிற மாதிரி இருந்தா கேட்டுச் சொல்லுங்க. இருந்து குடித்தனம் பண்றேம்.
இல்லன்னா யப்பா சொல்றதுதாங் செரி. அஞ்ஞ வேலங்குடியில போயிக் கெடந்துக்கிட்டு, கெடைக்குற
வேலயச் செஞ்சிக்கிட்டுக் கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு எம் புள்ளையோடப் பொழைச்சிக்கிறேம்!"ன்னுச்சு
தேவி அத்தாச்சி.
"எம் பொண்ணு செரியா சொல்லிட்டு
மச்சாம்! நீஞ்ஞத்தாம் இனுமே சொல்லணும்?"ன்னாரு சின்னவரு.
"யப்பாடி கண்ணாடிதாசு நீயி என்னத்தெ
சொல்றே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
பொண்டாட்டிக்காரியே இப்பிடி பேசுனத்துக்குப்
பெறவு, "பெரியவங்க நீஞ்ஞல்லாம் இருக்குறப்ப நாம்ம என்னத்தெ சொல்றது?"ன்னு
இப்போ கொஞ்சம் அடக்கத்துக்கு வந்தாப்புல பேசுனுச்சு கண்ணாடிதாசு அத்தான்.
"நடந்தது நடந்துப் போச்சு. இப்பயும்
ஒண்ணும் கெட்டுப் போயிடல. இந்த நெலையிலயும் சுதாரிச்சிக்கிடலாம்! வாழ்க்கையில எல்லாம்
தப்புப் பண்ணிக் கத்துக்கிட்டவங்கத்தாம். ஆம்மா கத்துக்கிட்டவங்க. கத்துக்கிட்டவங்கன்னா
கத்துகிட்ட பெற்பாடு மின்னாடி பண்ண தப்ப பண்ணாதவங்கன்னு அர்த்தம். யம்பீக்குப் புரியும்ன்னு
நெனைக்கிறேம். மறுக்கா இத்து மாதிரியான தப்பு நடக்காதுன்னா மேக்கொண்டு பேசலாம்! யம்பீ
என்னத்தெ சொல்லுது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
கண்ணாடிதாசு அத்தான் ஒரு ரண்டு நிமிஷம்
பேசாமலே நின்னுச்சு. மொல்லமா வாயைத் தொறந்து பெறவு, "மேக்கொண்டு இனுமே இப்பிடில்லாம்
நடக்காது!"ன்னு சொன்னுச்சு.
*****
சிறப்பான விளக்கம்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
Delete