4 Jun 2020

சீமெண்ணெய்ய குடிச்ச அத்தாச்சி!

செய்யு - 469

            சொந்தப்பந்தத்துல எதுவும் சில காலம்தாம். சந்தோஷம் வந்தாலும் அப்பிடித்தாம். துக்கம் வந்தாலும் அப்பிடித்தாம். பிரிவு வந்தாலும் அப்பிடித்தாம். உறவு வந்தாலும் அப்பிடித்தாம். குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசா பாசம் இருக்கு. எல்லாத்தையும் குடும்பங்ற ஒத்த நூல வெச்சி இழுத்துப் பிடிக்கிறதுங்றது சாமானியமில்ல. யாரோட ஆசைய சரிங்றது? யரோட ஆசைய தப்புங்றது? அவங்கவங்களுக்கு அவங்களோட ஆசைங்றது சரியாத்தாம் படும். மத்தவங்களுக்கு அது சரியாவும் படலாம், தப்பாவும் படலாம். அதெ தவித்துக்க முடியாது. அனுசரிக்கிறதுங்ற ஒரு விசயத்தெ வெச்சித்தாம் குடும்பத்த ஒரு நூல்ல இழுத்துக் கட்ட முடியும். ஒரு குடும்பத்துலயே இவ்வளவு சிக்கல் இருக்குறப்போ, குடும்பங்க ஒண்ணு சேர்ற சொந்தப் பந்தத்துல அது இடியாப்ப சிக்கலு. எதுக்கு இந்தப் பிரிவு வருது? எதுக்கு பிரிஞ்ச உறவு ஒண்ணு சேந்து வருதுங்றது புரிஞ்சிக்கிறதுக்குள்ள தாவு தீந்துப்புடும். அதெத்தாம் சனங்க பேசிப் பேசித் தீத்துப்பாங்க. ரொம்ப நேரம் பேசுறாங்கன்னா அந்த அளவுக்கு மனத்தாங்கல் இருக்குன்னு அர்த்தம். பேசி முடிஞ்சா எல்லாம் தீந்துப் போயிருக்கும்.
            இப்போ இருக்குற சனங்களுக்கு அந்த அளவுக்கு நேரம் இருக்கா இல்லியாங்றது தெரியல. அதாலயே குடும்பத்துக்குள்ளயே ஒவ்வொண்ணும் நவக்கிரகத்தெ போலத்தாம் இருக்குதுங்க. அப்பிடி இருந்தாத்தாம் இப்போல்லாம் குடும்பங்றதெ ஒரு நூல்ல பிடிச்சி இழுத்து கட்ட முடியுது. குடும்பத்துலயே அப்பிடின்னா சொந்தப் பந்தத்த பத்திச் சொல்ல வேண்டியதில்ல. நெறைய விசயங்கள ஒண்ணும் கண்டுக்கிடாம இருக்க வேண்டியதா இருக்கு. கண்டுகிட்டா மொதல்ல ஒறவு முறியுது. ரெண்டவாதா உறவுங்ற பேரு அடிபட்டப் போயி எதிரிங்ற பேரு வந்து சேருது. கல்யாணங்க காட்சியா, சாவா, கருமாதியா வந்து தலையக் காட்டிட்டுப் போறதோட நிப்பாட்டிக்கங்ற மாதிரிக்கி உறவு அது ஒரு போக்குல போயிட்டு இருக்குறப்ப பெரியவரு, சின்னவரு குடும்பத்துல ஒண்ணுக்கு ஒண்ணா ஆனதுல சுப்பு வாத்தியாருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இத்தனெ வருஷமா அதெத்தாம் தன்னோட கனவுல ஒண்ணா நெனைச்சிக்கிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு.
            இவ்வளவு வருஷமா பாடுபட்டு நம்மாள முடியாத ஒண்ண நேத்திக்கிப் பொறந்த சின்னப் பயெ சந்தானம் சாதிச்சுப்புட்டானேங்றதுல அவருக்கு சந்தானம் அத்தானப் பத்தித் தாங்க முடியாத பெருமெ. இப்போ சுப்பு வாத்தியாரு எதெ செய்யுறதா இருந்தாலும் வயசுல சின்னவனா இருந்தாலும் சந்தானத்துக்கிட்டெ யோசனெ கேக்குறதெ ஒரு மொறையா வெச்சிக்கிட்டாரு. சந்தானம் அத்தானும் எதெச் செய்யுறதா இருந்தாலும் மாமங்காரரான சுப்பு வாத்தியாருகிட்டெ ஒரு வார்த்தெ கேக்குறதெ ஒரு மொறையா வெச்சிக்கிட்டு. அதால இந்தக் குடும்பங்க மத்தியில சுப்பு வாத்தியாருக்கோ, சந்தானம் அத்தானுக்கோ தெரியாம எதுவும் நடக்காதுங்ற அளவுக்கு ஒரு நெலமெ உண்டானுச்சு. கார்த்தேசு அத்தான் செல விசயங்கள்ல மொகத்த முறிச்சாப்புல பண்ணப்பவும், மொகம் முறியாத அளவுக்குச் சந்தானம் அத்தான் நடந்துகிட்டதுக்கு ஒரு காரணம், இந்தச் சங்கதிங்கள கேள்விப்பட்டு மாமங்காரரான சுப்பு வாத்தியாரு ஏதும் மனச்சங்கடப்பட்டுடக் கூடாதுங்றதுதாம். தன்னெ புள்ளையப் போல தூக்கி வளர்த்த சுப்பு வாத்தியாரு தன்னெப் பத்தி பெருமயா நெனைக்கணுங்றதுக்காவே சந்தானம் பல வெசயங்கள்ல ரொம்ப பெருந்தன்மையா நடந்துக்கிட்டு.
            சந்தானம் அத்தானும், கார்த்தேசு அத்தானும் திருவேற்காட்டுல எடத்தெ வாங்கிப் போட்டதோட நிற்கல. வேலங்குடியிலயும் வயல்கள வாங்கிப் போட ஆரம்பிச்சுதுங்க. அதுல பெரியவருக்கும், சின்னவருக்கும் ஒரு போட்டி இருந்துச்சுங்றதெ சொல்லாம இருக்க முடியாது. இருந்தாலும் அத்து ஆரோக்கியமான ஒரு போட்டியப் போலத்தாம் ஆரம்பத்துல தெரிஞ்சுச்சு. போவப் போவ சின்னவருக்கு பெரியவர்ர வுட அதிகமா மவ்வேன் மூலமா நெலத்த வாங்கிப் போடணுங்ற எண்ணமும் உண்டாச்சு. நெலம் அதிகமாவ அதிகமாவ ஆளுகள அதிகமா வெச்சித்தாம் வேலையப் பாக்க வேண்டியதா கெடந்துச்சு. பெரியவருக்கு அதுல செருமம் அதிகமில்லே. அவருக்குத் தொணையா குமாரு அத்தான் ஊர்லயே கெடந்துச்சு. செயா அத்தை ஒரு ஆளு போதும், பெரியவரும், குமாரு அத்தானும் செய்யுற வெலைய ஒத்த ஆளா பாக்குறதுக்கு.
            சின்னவருக்குத்தாம் நெலத்தப் பாக்குறதுல ஏகப்பட்ட சங்கடம் இருந்துச்சு. அவரு தச்சு வேலக்காரரு. வேலைக்குப் போவாரு. சமயத்துல சென்னைப் பட்டணத்துலேந்து போன் வந்துச்சுன்னா வரிஞ்சிக் கட்டிட்டு சென்னைப் பட்டணத்துல போயிக் கெடப்பாரு மவனுக்காக வேலையச் செய்ய. ஊருல கெடந்த தாசு அத்தானையும் கெளப்பிக்கிட்டுச் சென்னைப் பட்டணத்துல கொண்டு போயி வுட்டு அண்ணனுக்குத் தொணையா கெடடான்னு வுட்டுப்புட்டாரு. ரசா அத்தை குடும்பத்துல சமையல் வேலையத்தாம் அதிகம் பாக்கும். வயலுக்குப் போயி நிக்குறது, பாக்கறதோட செரி. எறங்கியெல்லாம் வேலையப் பாக்காது.

            சின்னவருக்கு அதோட ரெண்டாவது பொண்ணான சுவாதி அத்தாச்சிக் குடும்பத்தையும் வேற கூடுதலா பாத்துக்கிட வேண்டியதா இருந்துச்சு. சுவாதி அத்தாச்சியக் கட்டுன அத்தான் வெளிநாட்டுலயே கதியா கெடந்தாரு. சுவாதி அத்தாச்சியாவது கூட மாட நின்னு வயலு வேலைகளப் போயிப் பாக்கலாம். அது வூட்டை வுட்டு வெளியில கெளம்பாது. மொத பொண்ணான தேவி அத்தாச்சி மணமங்கலத்துல கண்ணாடிதாசு அத்தானுக்குக் கட்டிக் கொடுத்து, அதாலயே ரொம்பச் செருமப்பட்டுக்கிட்டுக் கெடந்தாரு சின்னவரு. சின்னவருக்கு எந்தப் பக்கம் நகர்ந்தாலும் அந்தப் பக்கம் வேல மெனக்கெடு இருந்துச்சு.
            மணமங்கலத்துல தேவி அத்தாச்சியக் கட்டிக் கொடுத்த கண்ணாடிதாசு அத்தான் ரெண்டு நாளைக்கு வேலைக்குப் போனா நாலு நாளைக்கு வூட்டுல வந்து படுத்துப்புடும். ரெண்டு நாளைக்கு வேலைக்குப் போயி சம்பாதிச்ச காசி சரியா போனாத்தாம், நாலு நாளு கழிச்சித் திரும்பவும் வேலைக்குப் போவும். இப்பிடி ஒரு ஆளு இருந்தா குடும்பத்தெ எப்பிடி ஓட்ட முடியும்? மொதல்ல கூட்டுக்குடும்பமா கண்ணாடிதாசு அத்தான் அண்ணங்கார்ரேம் குடும்பத்தோட இருந்த வரைக்கும் அதோட கஷ்டம் தேவி அத்தாச்சிக்குத் தெரியல. கண்ணாடிதாசன் அப்பிடியே இருந்து காலத்தெ ஓட்டியிருந்தா எந்தப் பெரச்சனையும் வந்திருக்காது. கண்ணாடிதாசு அத்தானுக்கு வாய்க்கொழுப்பு எப்பவும் கொஞ்சம் சாஸ்தியா இருந்துச்சு. தேவையில்லாம ரோஷம் வேற வந்துப்புடும். "ன்னடா இப்பிடி ரண்டு நாளு சம்பாதிச்சிக் கொடுத்துப்புட்டு, அதெ வெச்சி ஏழு நாளைக்கு ஒட்டணும்ன்னா..."ன்னு அண்ணங்கார்ரேம் வாயெடுக்கப் போவ, அதுல கண்ணாடிதாசு அத்தான் அண்ணங்காரனோட சண்டையெ வெச்சிக்கிட்டு குடும்பத்தெ வுட்டு ரோஷமா வெளியில வந்துடுச்சு.
            குடும்பத்தெ வுட்டு மருமவன் வெளியில வந்த பிற்பாடு, மாமனாரு சும்மா இருக்க முடியுமா? சின்னவருதாம் களத்துல எறங்கி, சுப்பு வாத்தியார்ர தொணைக்கு வெச்சிக்கிட்டு அலைஞ்சுத் திரிஞ்சி வெசாரிச்சி மணமங்கலத்துலயே ஒரு வாடகை வூட்டப் பாத்து குடி வெச்சிட்டு வந்தாரு.  தனியா குடித்தனம் வந்த பெற்பாடாவது கண்ணாடிதாசன் அத்தான் திருந்தணுமில்லே, திருந்தல. தொட்டில் பழக்கம் சுடுகாட்டு மட்டும்ன்னு கெராமத்துல ச்சும்மாவா சொல்லுவாங்க. கூட்டுக்குடும்பா இருந்த வரைக்குமாவது கேக்க ஒரு நாதி இருந்துச்சு. தனியா வந்த பெற்பாடு கேக்க யாரு நாதி இருக்கா? பொண்டாட்டிக்காரி கேக்குறதையெல்லாம் எந்த புருஷங்கார்ரேம் ஒரு பொருட்டா நெனைக்குறாம்? கண்ணாடிதாசு அத்தான் அந்த வகெ. தேவி அத்தாச்சி எவ்ளோ சொல்லிப் பாத்துச்சு. கண்ணாடிதாசன் கேக்கல, "ஏம்டி நாமல்லாம் ஒரு நாளு வேல பாத்தா அத்து நாப்பது நாளு வேல பாத்த மாதிரிக்கி. நம்மள மாதிரி வேல பாக்க இந்த சில்லாவுல யாரு ஆளு இருக்கா? நாம்மத்தாம் வந்து வேலய்யப் பாக்கணும்னு அவனவனும் தவெம் கெடக்குறாம். வேலக் கொடுக்குற பயலுகளே நம்மள ஒண்ணும் கேக்குறதில்ல. நாம்ம வந்தாப் போதும்ன்னு கெடக்குறாம். கலக்டரு உத்தியோகம் போலடி நம்ம உத்தியோகம். நாம்ம நெனைக்குறப்பத்தாம் வேல, நாம்ம பாக்குறப்பத்தாம் வேல. வேலயில கோதாவா எறங்குனோம்ன்னா வெச்சுக்கோ பத்து நாளு வேல ஒத்த நாள்ல முடியும் பாத்துக்கோ!"ன்னு வாய்ச்சவடலா வுட்டுக்கிட்டுக் கெடந்துச்சு.
            தேவி அத்தாச்சி இந்தப் பதிலெ எத்தன நாளுத்தாம் பொறுத்துக்கும்? ஒரு கொழந்தைன்னு ஆவுற வரைக்கும் சகிக்கிக்கிட்டுக் கெடந்துச்சு. ஒரு கொழந்தையான பிற்பாடு அதுக்கு ரொம்ப செருமமாப் போவ ஆரம்பிச்சிது. இதுக்கு எடையில கண்ணாடிதாசு அத்தான் சுப்பு வாத்தியார்கிட்டெ வேற வந்து கைமாத்தா பணத்தெ வாங்கிட்டுப் போறதும், அதெ திருப்பிக் கொடுக்காம இருக்குறதுமா இருந்துச்சு. பெரும்பாலான நேரங்கள்ல சுப்பு வாத்தியாரு கொடுத்துட்டு இருந்தாரு. சில சமயங்கள்ல புள்ளைக்கி ஒடம்பு சரியில்லன்னு கூட பணத்தெ வாங்கிட்டுப் போவும் கண்ணாடிதாசு அத்தான். ஆன்னா வெசாரிச்சிப் பாத்தா பணத்தெ வாங்குறதுக்காக அத்து சொன்ன பொய்யிங்றது பெறவுத்தாம் தெரியும். அப்பிடித்தாம் ஒரு தவா, கொழந்தைக்கு நெசமாவே ஒடம்பு சரியில்லாம் போயி, சுப்பு வாத்தியாருகிட்டெ பணத்தெ கேக்க வந்துச்சு கண்ணாடிதாசு அத்தான். ஏற்கனவே கைமாத்தா வாங்குன காசி வேற நெறைய இருந்ததாலாயும், கண்ணாடிதாசு அத்தான் சொல்றது மெய்யா? பொய்யான்னு கண்டுபிடிக்க முடியாம போனதாலும் சுப்பு வாத்தியாரு கைய விரிச்சிட்டாரு.
            கொழந்தைய டாக்கடருகிட்டெ காட்டலாமுன்னு வூட்டுல காத்திருந்த தேவி அத்தாச்சிக்கிட்டெ கண்ணாடிதாசு அத்தான், "என்னத்தெ பெரிய தாய்மாமென் ஒம்மட தாய்மாமேன்? கொழந்தைக்கி ஒடம்புச் சரியில்லன்னு பணத்தெ கேட்டாலும் கொடுக்க மாட்டேங்றாம். அவனெல்லாம் ஒரு வாத்திப் பயலா? என்னத்தெ புள்ளைகளுக்குப் பாடத்தெ சொல்லிக் கொடுக்குறாம்னே தெரியல. ஒரு கஷ்டம்ன்னு போயி நின்னா அதெ புரிஞ்சிக்கத் தெரியாத பயெ. சொந்தம்ன்னு இருந்தும் ஒரு புண்ணியமில்ல!"ன்னு கதையளக்க ஆரம்பிச்சிடுச்சு. அக்கம் பக்கத்துல கடனா காசியக் கேக்கலாம்னு பாத்தா ஒவ்வொரு வூட்டுலயும் வாங்குன காசியத் திருப்பிக் கொடுக்குறதுக்கே நாலு மாசம் வேல தொடர்ச்சியா பாத்தாவணும்ங்ற நெலமெ. தேவி அத்தாச்சிக்கு மனசு வெறுத்துப் போயிருக்கணும். இந்த மனுஷன் சரியா வேலைக்கும் போவ மாட்டேங்றாம், கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லாதப்பயும் பணத்தெ தெரட்ட தெம்பு இல்லாதவனா இருக்காம்ன்னு நெனைச்சிக்கிட்டு மனசு வெறுத்துப் போயி ரேஷன் கடையிலேந்து வாங்கி வெச்சிருந்த சீமெண்ணெய்ய புருஷங்கார்ரேம் மின்னாடி வந்து என்னவோ லோட்ட நெறைய டீத்தண்ணிய குடிக்குறாப்புல ஊத்தி வெச்சிருந்த பாட்டில்லேந்து அது பாட்டுக்குக் குடிச்சிப்புட்டு.
            பொண்டாட்டிக்காரி சீமெண்ணய்ய குடிச்சிப்புட்டா புருஷங்கார்ரேம் என்ன செய்யணும்? ஆஸ்பிட்டலுக்குல்லா தூக்கிட்டுப் போவணும். இல்ல அக்கம் பக்கத்துல சொல்லி எதாச்சிம் பண்ணணும் இல்லியா? கண்ணாடிதாசு அத்தான் அது எதையும் பண்ணல. நேரா சைக்கிள எடுத்துக்கிட்டு திட்டைக்குச் சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வந்துச்சு. வந்ததும் வராதுமா, "நீஞ்ஞல்லாம் என்னத்தெ தாய்மாமேம்? கொழந்தைக்கி ஒடம்பு சரியில்லன்னு பணத்தெ கேட்டா கொடுக்கலயா? இந்தச் சங்கதிய நாம்ம தேவிகிட்டெ சொன்னோமா? அதால அத்தெ தாங்க முடியல. இப்பிடி ஒரு மாமங்கார்ரேம் நமக்கு இருக்குறதும் ஒண்ணுத்தாம், இல்லாம இருக்குறதும் ஒண்ணுத்தாம்ன்னு சொல்லிட்டு சீமெண்ணய்யக் குடிச்சிப்புட்டு!"ன்னு சொன்னதும் சுப்பு வாத்தியாரு பதறிப் போயிட்டாரு. ஒடனே அவரு தன்னோட சைக்கிள எடுத்துக்கிட்ட கண்ணாடிதாசு அத்தானோட கெளம்பிப் போயி, தேவி அத்தாச்சிய சைக்கிள்ல வெச்சே கூத்தாநல்லூரு ஆஸ்பத்திரி வரைக்கும் மிதிச்சிட்டுப் போயி அங்க வெச்சு தாயிக்கும், சேயிக்கும் வைத்தியம் பார்த்து ரெண்டு நாளு வரைக்கும் மெனக்கெடுறாப்புல ஆயிடுச்சு. 
            இந்தச் சங்கதிய எல்லாத்தையும் கேள்விப்பட்டு ஓடியாந்தாரு சின்னவரு. அவருக்கு மனசெல்லாம் துடியா துடிச்சிடுச்சு. அவரு வந்ததும் வராதுமா கண்ணாடிதாசு அத்தான் அவரு மனசுல ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லி வுட, மச்சாங்காரனான சுப்பு வாத்தியாரு மேல கோவம் சின்னவருக்கு. "என்னாம்பீ! நீஞ்ஞல்லாம் பக்கத்துல இருக்கேங்றதாலத்தான நாம்ம அஞ்ஞ வேலங்குடியில நிம்மதியா இருக்கேம். இப்பிடி பண்ணிப்புட்டீங்களே? மருமவ்வேம் காசிக் கேட்டா ன்னா? கொடுத்துப்புட்டு நம்மகிட்டெ சொன்னா தந்துப்புட போறேம்!"ன்னாரு சின்னவரு.
            சுப்பு வாத்தியாருக்கு என்னத்தெ சொல்றதுன்னு தெரியாம, அது வரைக்கும் கண்ணாடிதாசு அத்தான் கைமாத்தலா வாங்குன அத்தனெ காசியையும் மனசுக்குள்ளயே ஒருவாறா கணக்குப் பண்ணி அதெ சொன்னாக்கா சின்னவருக்கு மயக்கமே வந்துப்புடுச்சு. இம்மாம் காசிய வாங்குற அளவுக்கு அப்பிடி என்ன அவ்வேம் குடித்தனம் பண்ணாம்ன்னு கண்ணாடிதாசு அத்தான ஒரு பிடி பிடிச்சா அப்பத்தாம் நெறைய சங்கதிங்க வெளியில வருது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...