3 Jun 2020

திருவேற்காட்டுப் பட்டாளம்!

செய்யு - 468

            நம்ம சனங்களோட வாழ்க்கைய எடுத்துகிட்டா அவங்களோட மொத தலைமுறை வாழ்க்கை கிராமத்துல இருந்தா, ரெண்டாவது தலைமுறை வாழ்க்கை பட்டணத்த நோக்கிப் போயிடுது. கறந்த பாலு என்னைக்குக் காம்புக்குத் திரும்புனுச்சு? அது போலத்தாம் பட்டணத்துக்குப் போற சனம் என்னைக்கும் கிராமத்துக்குத் திரும்புனதில்ல. ஏதோ கொஞ்ச சனங்க இருக்கணுங்றதுக்காக கிராமம் இருக்கா? கிராமம்னு ஒண்ணு இருக்குங்றதுக்காக அங்க கொஞ்ச சனங்க இருக்கா?ங்றது விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வி. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, கிராமத்துலயே இருந்து பழகிப் போன சனங்க அங்கப் போயி பழகுறதுக்கு யோசனைப்பட்டுகிட்டு கிராமத்துலயே இருக்குறதாலயோ, பட்டணத்துக்குப் போயி எப்பிடிப் பொழைக்குறதுன்னு யோசிக்கிற சனங்க கொஞ்சம் இருக்குறதாலயோ, பட்டணத்துல இருக்குற சனங்க தீவாளி, பொங்கல்ன்னு வந்துட்டுப் போகணுங்றதுக்காகயோ இன்னும் கிராமங்க இருக்குன்னு தோணுது.  ஒரு வகையில பார்த்தா கிராமத்துல இருக்குற சனங்க எல்லாம் பட்டணத்தால கைவிடப்பட்ட சனங்க அல்லது பட்டணத்தைக் கைவிட்ட சனங்க.
            பட்டணம்னு போயி அடி எடுத்து வெச்சிட்டா ஒரு வேலையத் தேடிக்கணுங்றது மொத எண்ணமா உண்டாவும். அந்த எண்ணம் நிறைவேறிட்டா அடுத்தாப்புல ஒரு எடத்தெ வாங்கிப் போடணுங்ற எண்ணம் ரெண்டாவதா உண்டாவும். அந்த எண்ணம் உண்டான பிற்பாடு கிராமத்துக்கும் பட்டணத்துக்குமான தொடர்பு கிட்டதட்ட அறுந்துப் போயிடும். அதுக்குப் பெறவு கிராமங்றது டியூப்லேந்து பிதுக்கி வுட்ட பேஸ்ட்டு போலத்தாம் அவுங்களுக்கு. ஏதோ ஒரு விஷேசமோ, சாவு காரியமோத்தாம் பெறவு அவுங்கள கிராமத்துக்கு வர வைக்கும். பட்டணத்துக்குப் போன எல்லா சனங்களோட பொதுவான கதை இதுதாம். வேலங்குடி சனங்களோட மொதெ தலைமுறை மற்றும் ரெண்டாம் தலைமுறையோட கதையும் கிட்டதட்ட அதுதாம். வேலங்குடி குடும்பத்தோட மொத தலைமுறைதாம் வேலங்குடியில இருந்துச்சுன்னா, ரெண்டாவது தலைமுறை சென்னைப் பட்டணத்துல இருந்துச்சுங்க. எந்த ஊரு தண்ணியக் குடிக்கிறோமோ, அந்த ஊரு சனமாவே மாறிப் போறதுதானே நம்ம சனங்களோட கொணம். கார்ப்பரேஷன் தண்ணியக் குடிச்சிப் பழக பழக சென்னைப் பட்டணந்தாம் தங்களோட ஊருன்னு வேலங்குடி சனங்களுக்கு தோண ஆரம்பிச்சதுல அடுத்த கட்டமா எடத்தெ வாங்கிப் போடுற வேலைகள்ல எறங்குனதுங்க. அந்த வேலைய ஆரம்பிச்சி வெச்சதும் சந்தானம் அத்தான்.
            வேலங்குடியிலேந்து போன ஒவ்வொருத்தரும் வேலை வேலைன்னு சென்னை முழுக்க அலையுற ஆளுங்க. ஒரு காலத்துல சென்னைன்னு ஒரு எடத்தை அடையாளம் பண்ணிருக்கலாம். அது அப்போ பாரீஸ் கார்னராவோ, எக்மோரோவா இருந்திருக்கும். இப்போ சென்னைன்னு எதைச் சொல்றது? கிண்டி வெளச்சேரியும் சென்னைதாம், கோயம்பேடு வடபழனியும் சென்னைதாம், மதுரவாயலு திருவேற்காடும் சென்னைதாம், தாம்பரமும், மாதவரமும் சென்னைதாம். காஞ்சிபுரத்திலேந்து, செங்கல்பட்டுலேந்து எங்க நொழைஞ்சாலும் அதுக்கு சென்னைன்னு பேரு வந்துடுச்சு. சென்னைன்னு சொல்ற அத்தனெ ஏரியாவுலயும் அலைய ஆரம்பிச்ச பிற்பாடு எங்கெங்க வூட்டுமனை கம்மியா கெடைக்குதுங்ற சங்கதிங்க வேலங்குடி சனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது.
            கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கத்தைச் சுத்தி சென்னை வளர ஆரம்பிச்ச பிற்பாடு அது மதுரவாயல், திருவேற்காடுன்னு விரிய ஆரம்பிச்சிது. திருவேற்காட்டுல வூட்டு மனைக்கான ப்ளாட்டுங்க உண்டாயி அங்க வூட்டு வேலைக கனஜோரா போவ ஆரம்பிச்சப்போ அங்க வூட்டுமனைக வெலை கொறைவா இருக்குறப் பாத்து சந்தானம் அத்தான்தான் மொத மொதல்லா எடத்தெ வாங்கிப் போட ஆரம்பிச்சிது. சந்தானம் அத்தானுக்கு அப்போ காசு கையில நெறையப் புரள ஆரம்பிச்சி, அந்தக் காசிய என்னப் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்போ அப்படி ஒரு காரியத்தெ பாத்துச்சு. ஒரு எடத்தெ ரியல் எஸ்டேட்டு புரோக்கர பிடிச்சி வாங்கிப் போட்டா, பெறவு ரியல் எஸ்டேட்டு புரோக்கரு இருக்காரே, அவரு எடத்தெ வாங்குன ஆள பிடிச்சிப் போட்டுப்புடுவாரு. அதுவும் சந்தானம் அத்தான் போல வலுத்த கையின்னா சொல்ல வேணாம். ஒண்ணுக்கு ரெண்டா எடத்தெ வாங்கிக் கொடுத்து கமிஷன் பாக்குலாங்ற கணக்கு புரோக்கருக்கு மனசுல உண்டாயிடும். சந்தானம் அத்தானுக்கு அந்த நேரம் ரொம்ப நல்லா காசு பொரள்ற நேரமா இருந்துச்சு. ஒண்ணுக்கு நாலா எடத்தெ திருவேற்காட்டுல வாங்கிப் போட்ட பிற்பாடும் புரோக்கரோட நச்சரிப்பு தாங்க முடியல.
            இதுக்கு மேல எப்பிடிடா எடத்தெ வாங்குறது எப்பிடின்னு யோசிச்சப்பத்தாம் நம்ம வேலங்குடி சனத்தையே திருவேற்காடுக்குக் கொண்டாந்துட்டா எல்லாம் ஒண்ணா அக்கம் பக்கத்துலயே இருக்கலாங்ற எண்ணம் வந்துச்சு சந்தானம் அத்தானுக்கு. மொதல்ல மலரு அத்தாச்சிக்கு திருவேற்காட்டுலல கொஞ்சம் இதுவும் காசியப் போட்டு, அவுங்ககிட்ட இருந்த காசியையும் சேத்து ஒரு எடத்தை வாங்கிக் கொடுத்துச்சு. இதெ பாத்துப்புட்டு ராமு அத்தான், மாரி அத்தான், சுப்புணி அத்தான்னு எல்லாத்துக்கும் ஒரு ஆசை வந்துப்புடுச்சு. வரிசைக்கட்டி வந்து சந்தானம் அத்தாங்கிட்டெ நின்னு ஆளாளுக்கு தங் காசியக் கொஞ்சம் போட்டு, சந்தானம் அத்தான் காசியக் கொஞ்சம் சேத்துகிட்டு ஒரு எடத்தெ வாங்கிப் போட ஆரம்பிச்சிதுங்க. அந்தப் படியே கலா அத்தாச்சியும் வரிசை கட்டி நின்னு ஒரு எடத்தை வாங்கிக்கிடுச்சு.
            அப்பத்தாம் கார்த்தேசு அத்தானும் சந்தானம் அத்தாங்கிட்டெ வந்து நின்னுச்சு அதுக்கும் ஒரு எடத்தெ வாங்கிப் போடணும்னு. சின்னவருதாம் அப்பவும் அதுக்குத் தகுந்தாப்புல தூண்டி வுட்டு, தூண்டில போட்டு வுட்டாரு. "ஏம்டா என்னவோ யண்ணே யண்ணேன்னு நிப்பீயே! நீயி ஆபீஸூ போட்டத்துக்கு என்னவோ அவங்கிட்டெ மின்னாடியே சொல்லலங்ற மாதிரிக்கி அவ்வேங்கிட்டெ போயிட்டு வந்ததுலேந்து மனசுக்குள்ளார பொருமிக்கிட்டுச் சலிச்சிக்கிட்‍டீயே? இப்போ போயி ஒன்னத்தாம் நம்பியிருக்கேம்! ஒரு எடத்தெ வாங்கிக் கொடுன்னு சொல்லிப் பார்றேம்! என்னத்தெ சொல்றாம்னு பாத்துப்புடலாம். அவனெப் பத்தியும் ஆளு எப்பிடிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சிக்க ஒனக்கு ஒரு சந்தர்ப்பம் ஆவும்ல. உண்மையான யண்ணங்கார்ன்னா இப்போ தெரிஞ்சிப் போயிடும்லா?" அப்பிடின்னாரு சின்னவரு.

            சின்னவரு நெனைச்சாப்புல, சந்தானம் அத்தான் கார்த்தேசு அத்தான் வந்து கேட்டதெ விகற்பமா பாக்கல. யாரு நம்ம சித்தப்பாரு மவம்தானேன்னு பெரிய மனசோட கொஞ்சம் காசியப் போட்டு அதுக்கும் ஒரு ப்ளாட்ட வாங்கிக் கொடுத்துச்சு. வாங்கிக் கொடுத்துட்டு சிரிச்சிக்கிட்டெ ஒரு கேள்விய மட்டும் கேட்டுச்சு, "ஏம்டாம்பீ நீயி எடத்தை வாங்கிப் போட்ருப்பேன்னு நெனைச்சேம்! வாங்கிப் போட்டுட்டுல்லா நம்மகிட்டெ வந்து சோல்வேம்ன்னு எதிர்பார்த்தேம்! ஒமக்குத்தாம் எங்கெங்க எடம் சீப்பா கெடைக்கும்ன்னு தெரியுமே!"ன்னு மட்டும் ஒரு வார்த்தெ சொன்னுச்சு. கார்த்தேசு அத்தானுக்கு சந்தானம் அத்தான் ஏன் இப்பிடிக் கேக்குதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சிச்சு. அதெ கேட்டுக்கிட்டு பல்ல இளிச்சிக்கிட்டுச் சிரிச்சிக்கித்தாம் முடிஞ்சுச்சே தவுர அதுக்கு ஒரு பதிலெ சொல்ல முடியல. இத்தனைக்கும் கார்த்தேசு அத்தானுக்கு வாங்கிக் கொடுத்த எடம் சந்தானம் அத்தானோட கூடப் பொறந்த தம்பிக்கும், அக்காவுக்கும் வாங்கிக் கொடுத்த எடத்துக்கு மின்னாடி வேற இருந்துச்சு. சந்தானம் அத்தான் தனக்குன்னு சேந்தாப்புல ரெண்டு ப்ளாட்ட வாங்கிப் போட்டிருந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே இருக்குறாப்புல ஒரு ப்ளாட்ட வாங்கிக் கொடுத்திருந்துச்சு கார்த்தேசு அத்தானுக்கு. யாரும் சித்தப்பா மவ்வேங்றதுக்காக கடெசியில எடத்தெ வாங்கிக் கொடுத்துப்புட்டாம்ன்னு சொல்லிடக் கூடாதுன்னு ஒரு நெனைப்பு சந்தானம் அத்தானுக்கு.
            அதெ வந்துப் பாத்துப்புட்டு சின்னவரு பேசுன பேச்ச இருக்கே, அப்பிடியே உல்ட்டா அடிச்சாப்புல பேசுனாரு. "எங்க யண்ணேம் மவ்வேம்ன்னா யண்ணேம் மவ்வேம்தாம். அவரு கொணத்துல நூத்துல ஒரு பங்காவது இருக்காதா? அவரு எட்டடி பாஞ்சார்ன்னா மவ்வேம் பதினாறு அடில்லா பாஞ்சிருக்காம்! நம்மள வேலங்குடியில குடிவெச்சி ஆளாக்குனவரு யண்ணேம்தாம். இப்போ அதெ போல ஒன்னய இஞ்ஞ குடிவெச்சி ஆளாக்குனது யண்ணேம் மவ்வேம்தாம். அவரு ராசிக்காரரு. அவரு குடிவெச்சி நல்ல வெளக்கமாத்தானே இருக்கேம். அவரு பெத்த புள்ளைக்கி மட்டும் அந்த ராசி யில்லாமலா போயிடும்? நீயும் வெளக்கமாத்தாம் இருப்பே! நாம்ம கூட நீயி கேட்டு செய்வானோ, மாட்டானோன்னு ஒரு நெனைப்புல இருந்துப்புட்டேம்! புலிக்குப் பொறந்து அத்து பூனைக்குட்டியாவா போயிப்புடும்? புலிக்குட்டி மாதிரிக்குத்தானே கொணத்த காட்டும். அந்தக் கொணத்த காட்டிப்புட்டாம் எஞ்ஞ யண்ணேம் மவ்வேம்! ரண்டு பேரு எடமும் பக்கத்து பக்கத்துல வேற இருக்கா. அண்ணம் தம்பியா ரண்டு பேரும் ஒருத்தருக்கொரு ஒத்தாசியா நின்னு நல்லபடியா இருக்கணும்!"ன்னு சின்னவருக்கு அதுக்கு அப்புறம் அண்ணங்கார்ரேம் புள்ளைகள நெனைச்சுத் தாங்க முடியாத சந்தோஷம். ரெண்டு குடும்பமும் அதுக்குப் பெறவு ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயி, கூடிக் குலாவ ஆரம்பிச்சாங்க, அப்படி ஒரு அண்ணன் தம்பி வகையறா குடும்பத்தையே பாக்க முடியாதுங்றது போல.
            கிராமம்ன்னா ஒரு எடத்தெ வாங்குனோமோ, அதுல ஒரு குச்சி வூட்டெ கட்டுனோமா, குடியேறுனோமான்னு வேல முடிஞ்சிடும். பட்டணத்துல அதாங் முடியாது. காசு பணத்தெ சேர்த்தா மொதல்ல எடத்தத்தாம் வாங்கிப் போட முடியுது. மறுக்கா திரும்பவும் காசு பணத்தெ சேத்தாத்தாம் வூட்டைக் கட்டி முடிக்க முடியுது. ஒரு தடவைக்கு இப்பிடி ரெண்டு தடவ அல்லாடுனாத்தாம் பட்டணத்துல ஒரு எடத்துல குடியேற முடியும். கிராமம்ங்றது மனுஷங்கள தனக்குள்ளார குடி வெச்சுக்க காக்க வைக்கிறதில்ல. பட்டணம்ங்றது அப்பிடிக் கெடையாது, காக்க வெச்சி காசி பணத்தெ சேத்துட்டு வா, பெறவு குடி வைக்கிறோம்ன்னு தயவு தாட்சிண்யம் இல்லாம சொல்லிப்புடும்.
            வேலங்கு சனங்க திருவேற்காட்டுல வாங்கிப் போட்ட ப்ளாட் ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்பிடியே கெடந்துச்சு. அந்த ரெண்டு மூணு வருஷத்துல சந்தானம் அத்தாங்கிட்டெ வாங்குன காசிய எல்லா சனமும் திருப்பிக் கொடுத்துச்சுங்க. அதெ வெச்சி சந்தானம் அத்தான் இன்னும் ரெண்டு ப்ளாட்டுகள திருவேற்காட்டுல வாங்கிப் போட்டுச்சு. அப்பிடியே ஒவ்வொருத்தரும் திருவேற்காட்டுல வூட்டைக் கட்ட ஆரம்பிச்சிதுங்க. மொதல்ல மலரு அத்தாச்சியும், கலா அத்தாச்சியும்தாம் வூட்டைக் கட்டி முடிச்சிதுங்க. அதுங்க வூட்டைக் கட்டி முடிக்க பேங்க்லேந்து லோனை வாங்கித் தந்து, அதுக்கு கியாரண்டி கையெழுத்து எல்லாம் போட்டுத் தந்தது சந்தானம் அத்தான்தாம். பெறவு மாரி அத்தானும், ராமு அத்தானும் வூட்டைக் கட்டிட்டுப் போனுச்சுங்க. கடெசியாத்தாம் கார்த்தேசு அத்தான் வூட்டைக் கட்டிட்டுப் போனுச்சு. அதுக்கு பேங்க் லோன் போட்டுக் கொடுத்து கியாரண்டி கையெழுத்து போட்டு ஒத்தாசையெல்லாம் பண்ணதும் சந்தானம் அத்தான்தாம். ஒவ்வொருத்தரும் வூட்டைக் கட்டுனதும் அதெ ரொம்ப பெருமையா பேசிட்டு இருந்துச்சுங்க வேலங்குடி பெரியவரு, சின்னவரு, சுப்பு வாத்தியார்ன்னு எல்லாரும். அதுல சுப்பு வாத்தியாருக்கு, "எஞ்ஞ யக்கா மவனுங்க எல்லாம் சென்னைப் பட்டணத்துல ஆகா ஓகோன்னு இருக்கானுவோ!"ன்னு பாக்குற வாத்தியாருமாருககிட்டெ சொல்றதுல ஒரு பெருமெ.
            எல்லாரு வூடம் திருவேற்காடு மாரியம்மன் கோயில்லேர்ந்து ஒரு பர்லாங் தூரத்துல பின்னாடி இருந்துச்சு. வூடு ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரே தெருவுல ஒரு வூடு, ரெண்டு வூடு தள்ளித் தள்ளி வரிசையா இருந்துச்சுங்க. திருவேற்காடு மாரியம்மன் கோயில்லேர்ந்து பின்னாக்கப் போனா கொஞ்ச தூரத்துல மொத வூடா கார்த்தேசு அத்தானோட வூடு வரும். ஒரு பத்து வூடு தள்ளிப் போனா கலா அத்தாச்சியோட வூடு, அதுக்குப் பக்கத்துலு ராமதாஸ் அத்தானோட வூடு. அதுக்கு அடுத்தாப்புல ரெண்டு வூடு தள்ளி மலரு அத்தாச்சி வூடு. மலரு அத்தாச்சி வூட்டுக்கு எதுத்தாப்புல போற சந்துல ரெண்டு வூடு தள்ளிப் போனா மாரி அத்தானோட வூடு. அதுலேந்து எதுத்தாப்புல மூணு வூடு தள்ளுனா சுப்புணி அத்தானோட வூடு. ஒரு ஆத்திரம் அவசரம்ன்னா ஒருத்தருக்கொருத்தரு கூப்புட்டுக்கோ வசதியா இருந்துச்சுது எல்லாத்துக்கும். திருவேற்காட்டுல வேலங்குடி சனங்க குடியேறுற வரைக்கும் அதுகளுக்குச் சொந்தக்காரங்க, ஒறவுக்காரவுங்க மத்தியில பேரு 'வேலங்குடி பட்டாளம்'ங்றது. இப்போ எல்லாம் திருவேற்காட்டுல ஒண்ணு பக்கத்துல ஒண்ணு வூட்டைக் கட்டிட்டுக் குடியேறனத்துக்குப் பெறவு அதுகளோட பேரு 'திருவேற்காடு பட்டாளம்'ங்றது. இப்போ வேலங்குடியில இருக்குற பெரியவரு, சின்னவரையும் சேத்துச் சொந்தக்கார சனங்க அப்பிடித்தாம் 'திருவேற்காட்டுப் பட்டாள'முல்லான்னு பேச ஆரம்பிச்சிதுங்க. அந்த மாதிரிக்கி வேலங்குடி பட்டாளத்தெ திருவேற்காட்டுப் பட்டாளமா பேரு மாத்தி வெச்சதுக்குப் பின்னாடி அத்தனெ வேலைகளையும் பாத்ததுல சந்தானம் அத்தான் இருந்ததுல பெரியவருக்கு ஒரு மனநெறைவுன்னா, சந்தானம் அத்தானப் பத்தி ஒரு மனக்கொறையும் பெரியவருக்கு இருந்துச்சு.
            எல்லாரும் வூட்டைக் கட்டுன பிற்பாடும் வூட்டைக் கட்டாத ஒரே ஆளுன்னா சந்தானம் அத்தான்தாம். அது அரும்பாக்கத்துல வாடகை வூட்டுலத்தாம் இருந்துச்சு. அதுக்கு சென்னை முழுக்க சுத்தி சுத்தி வேலையப் பாக்க வேண்டி இருந்ததால அலையுற அலைச்சலுக்கு அரும்பாக்கத்துல இருக்குறதுதாம் வசதியா இருந்துச்சு. திருவேற்காட்டுல வூட்டைக் கட்டுன்னா அது ஒரு பக்கமாவும், வேலை நடக்குற எடமெல்லாம் அதுக்கு நேரேதிரா இன்னொரு பக்கமாவும் இருக்கும்னு யோசனெயைப் பண்ணிட்டு அதெ தள்ளிப் போட்டுக்கிட்டு இருந்துச்சு. பெரியவருக்கு அதுதாங் ஒரு மனக்கோறை. அவர்ரப் பொருத்த மட்டுல அவருக்குச் சந்தானம்தான ஆம்பள புள்ளையில மூத்தது. அவ்வேம் வூட்டைக் கட்டுன பெற்பாடுதாம் மித்தவங்க வூட்டைக் கட்டணம்ன்னு நெனைச்சாரு பெரியவரு. இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு வழியப் பண்ணி வுட்டுப்புட்டு அவனுக்கு ஒரு வழியப் பண்ணணும்னா அதுக்கு நேரம் ஆவத்தானெ செய்யும்ன்னு தனக்குத் தானே ஆறுதல் பண்ணிக்கிறாப்புலயும் நெனைச்சிக்கிட்டாரு.
            அது எல்லாத்தையும் வுட தன்னோட குடும்பம், தம்பிக்காரனோட குடும்பம் எல்லாம் ஒண்ணடி மண்ணடியா கெடந்ததெ நெனைச்சி ரொம்பவே சந்தோஷப்பட்டாரு பெரியவரு. நம்ம தலைமொறையில கொஞ்சம் சேந்திருந்து கொஞ்சம் முன்ன பின்ன பிணக்குன்னாலும், இந்தத் தலைமொறையில ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆனதுல அவருக்கு ஒரு திருப்தி. இப்போ சின்னவரு எதைச் செய்யுறதா இருந்தாலும் பெரியவர்ர கலந்துக்காம செய்யுறது இல்ல. கார்த்தேசு அத்தானும் அப்பிடித்தாம். சந்தானம் அத்தான கலந்துக்காமலயோ, ராமு அத்தானை கலந்துக்காமலயோ எதையும் செய்யுறதில்ல. ரெண்டுக் குடும்பத்து ஒறவுகள வேலங்குடியிலேந்து பாத்தாலும் செரி, சென்னைப் பட்டணத்துலேந்து பாத்தாலும் செரித்தாம் எந்தக் குடும்பம் அண்ணங்கார வம்சாவழிக் குடும்பம்? எந்தக் குடும்பம் தம்பி வம்சாவழிக் குடும்பம்ன்னு பாக்குறவங்களுக்குச் சந்தேகம் வந்துப்புடும். ஒறவுங்றது அதுதாம் ஒரு காலத்துல சேர்ந்திருந்து பிரியுறாங்க, பெறவு பிரிஞ்சிருந்து சேருறாங்க. பிரியுறது சேர்றதுக்குன்னு நெனைச்சிக்க வேண்டியதா இருக்கு. அப்பிடின்னா சேர்றது பிரியுறதுத்துக்குன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான்னா?ன்னு ஒரு கேள்வியக் கேட்டாக்கா, அப்பிடித்தாம் சொல்ல வேண்டிக் கெடக்கு. ஏன்னா அதுக்கு அடுத்தாப்புல நடந்த சம்பவங்க அப்பிடித்தாம் இருந்துச்சு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...