2 Jun 2020

ஒரு ஆபீஸ் உதயமாகிறது!

செய்யு - 467

            கார்த்தேசு அத்தான் சந்தானம் அத்தானோட ஸ்மார்ட் இன் ஸ்மார்ட் ஆபீஸ்ல போயி நின்னுச்சு. "யண்ணே! எம்.எம்.டி.ஏ. காலனியில ஒரு எடம் வந்துச்சு, ஆபீஸ் போடுறாப்புல. இப்போ வுட்டா பெறவு கெடைக்காதுங்ற மாதிரிக்கி இருந்துச்சு. அதாங் ஆபீஸ் போடுறோமோ இல்லியோ பிடிச்சிப் போட்டுப்புடுவேம்ன்னு புடிச்சிப் போட்டா, பழக்க வழக்கத்துல இருக்குறவேம் எல்லாம் ஆபீஸப் போட்டுத் தொலைன்னு நச்சரிப்புத் தாங்க முடியல. செரி ஒரு எடம் கெடக்கட்டும்ன்னு பேருக்கு புக் பண்ணிப் போட்டிருக்கேம்! நம்ம வேலையோட கொஞ்சம் வெளி வேலையையும் சேத்துப் பண்ணிட்டு இருக்கேம்! அப்பிடியே மாரி யண்ணன், ராமு யண்ணங்கிட்டேயும் கேட்டு கொஞ்சம் வேலையெடுத்துப் பண்ணிட்டு இருக்கேம்!"ன்னுச்சு.
            "நாமளே ஒனக்கு ஒரு ஆபீஸப் போட்டுத் தர்றணும்னு நெனைப்புத்தாம். எடம் அமைஞ்ச வரைக்கும் சந்தோஷந்தாம். இப்பிடி வடபழனி, அரும்பாக்கம்ன்னு இருந்தா நல்லா இருக்கும். பரவாயில்ல. மொதல்ல போட்டுப்பேம். பெறவு வேணும்ன்னா மாத்திக்கிடலாம். நம்ம ஆபீஸூ மாதிரியே போட்டுப்புடுவோம். போட்டு ஒரு நாளு கிராண்ட் ஓப்பனிங் பண்ணிப்புடுவோம்! அதுக்குப் பெரிய பெரிய ஆளுகள வர வெச்சத்தாம் நெறையக் கான்டராக்ட்ட பிடிக்க முடியும்! ஓப்பனிங் செலவு கொஞ்சம் பலமாத்தாம் வெளம்பரம்லாம் கொடுத்துப் பண்ணியாவணும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "யண்ணே!"ன்னு ஒரு இழுப்பு இழுத்து கார்த்தேசு அத்தான் சொன்னுச்சு, "ஏம் பெரிசா செலவுல்லாம் பண்ணிக்கிட்டுன்னு எளுமையா ஆரம்பிச்சிட்டேம் யண்ணே! யாரயும் கூப்புடல. அப்பாவும், யம்பீயும், அத்தானும் ஊர்லேந்து வேலைக்கு வந்திருந்துச்சுங்க. அதுகள வெச்சி ஆரம்பிச்சாச்சு யண்ணே! ஒஞ்ஞளுக்கு வேல அலைச்சால இருக்கா? ஏம் போட்டு தொந்தரவு பண்ணிக்கிட்டுன்னு..."ன்னு மறுக்கா ஒரு இழுப்பு இழுத்துச்சு கார்த்தேசு அத்தான்.
            சந்தானம் அத்தானுக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. ஒரு வகையில ஒடம்பு முடியாம இருந்த ‍நெலையில கார்த்தேசு அத்தான ஆளாக்கி வுட்டதுன்னா அது பெரியவருதாம். சென்னைப் பட்டணத்துல அதெ ஒரு மனுஷனா ஆக்கி வுட்டதுன்னா அது சந்தானம் அத்தான்தாம். ஆபீஸ் போடுறதுக்கு மின்னாடி ஒரு வார்த்தெ சொல்லிருந்தா சந்தானம் அத்தானே மின்னாடி வந்து நின்னு, ஆபீஸப் போடுற அன்னிக்கு பெரியவரு, சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் சென்னைப் பட்டணம் கொண்டாந்து வெச்சு, அவுங்ககிட்டெயெல்லாம் கொடுத்த வாக்கெ காப்பாத்திப் புட்டேம்னு பெருமிதமா சொல்லி, ஆபீஸத் தொறக்க வைக்கணும்னு ஒரு நெனைப்பு சந்தானம் அத்தானுக்கு இருந்துச்சு. அதுக்குள்ள கார்த்தேசு அத்தான் இப்பிடி ஒரு வேலையப் பண்ணிருந்துச்சு.
            சந்தானம் அத்தானோட நெனைப்பு இதெ கேட்டதும் பல வெதமா ஓடுனுச்சு. "ஆபீஸ் போடப் போறேன்னு ஒரு வார்த்தெ சொல்லிருந்தா அதெ நாமளே முன்னால செஞ்சிருக்கலாம். மாரி பயெ, ராமு பயென்னு ஒவ்வொருத்தரும் அப்பிடித்தாம் தனித்தனியா ஆபீஸ் போட்டுட்டுப் போறப்போ அடுத்ததா கார்த்தேசு பயலுக்கும் அதத்தானே செஞ்சாவணும். இல்லன்னா சித்தப்பாரு மகங்றதுக்காக அப்பிடி பண்ணாம இருக்குறதா நம்ம மேல ஒரு கொறை வரும். இந்தத் தொழில்ல அனுபவம், பழக்க வழக்கம், பேச்சு சமார்த்தியம் இதெல்லாம்தாம் ஒரு ஆபீஸ் போடுறதுக்கான தகுதியாவும். அதுல முக்கியமா அனுபவம்ங்றது ரொம்ப பெரிய தகுதி. அது வளரட்டும்னுத்தாம் மூணு வருஷமா கொஞ்சம் பொறுத்திருந்தா அதுக்குள்ள இவ்வேம் ஏம் இம்மாம் அவசரப்பட்டாம்? நம்ம மேல எதாச்சம் சந்தேகப்படுறானோ? நாம்ம செஞ்சி வுட மாட்டேம்ன்னு நெனைச்சு வுட்டுப்புட்டான்னோ?" இப்பிடி சந்தானம் அத்தானுக்கு மனசு கெடந்து பெரண்டுகிட்டு கெடந்துச்சு.
            கார்த்தேசு அத்தான் சொல்லாம கொள்ளாம ஆபீஸப் போட்டதுல சந்தானம் அத்தானுக்குக் கொஞ்சம் வருத்தம்ன்னாலும், மனசுக்குள்ள கொஞ்சம் பெருமெயும் இருந்துச்சு. நாம்ம கொண்டாந்து வளத்து வுட்ட பயெ நம்ம தயவு இல்லாமலேயே ஆபீஸூ போடுற அளவுக்கு வந்துப்புட்டானேன்னு. சந்தானம் அத்தான் ஒரு முடிவெ பண்ணிக்கிட்டது, இப்போ சொல்லாம கொள்ளாம ஆபீஸப் போட்டுட்டாங்ற வருத்தத்தெ மனசுல வெச்சிக்கிறதெ வுட, நம்மகிட்டெ வளந்த பயெ நம்ம தயவு இல்லாமலேயெ ஆபீஸப் போட்டுட்டாங்ற பெருமெயம்த்தாம் மனசுல வெச்சிக்கிடணும்னு.
            "ரொம்ப சந்தோஷந்தம்டா யம்பீ! நீயாவே ஒரு ஆபீஸப் போட்டதுல. அன்னிக்கு வேலங்குடியில அப்பாவுக்கு, மாமாவுக்குக் கொடுத்த வாக்கெ, அப்பாவும் மாமாவும் சொன்ன சொல்ல நிறைவேத்திப்புட்டேங்ற நெறைவு உண்டாயிப் போச்சுது மனசுல. அந்தப் பக்கமா வர்றப்போ ஆபீஸூக்கு வர்றேம்டாம்பீ!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அதெ கேட்டுப்புட்டு, கார்த்தேசு அத்தான் ஆபீஸோட விசிட்டிங் கார்டெ நீட்டுனுச்சு. அதுல 'அல்ட்ரா ஸ்மார்ட் இன்டீரியர் டெகரேட்டர்ஸ்'ன்னு ஆபீஸோட பேரு எழுதி வெலாசம் எழுதியிருந்துச்சு. பரவாயில்லே ஆபீஸோட பேர்ர கூட நம்ம ஆபீஸோட பேரான ஸ்மார்ட் இன் ஸ்மார்ட்ங்றதுலேந்துதாம் எடுத்திருக்காம், ஆன்னா என்னா ஆபீஸையல்லாம் போட்டுப்புட்டு, விசிட்டிங் கார்டையும் அடிச்சிப்புட்டு, வேலை பிடிச்சிக் கொடுன்னு சொல்றதுக்குத்தாம் வந்திருக்கான்னு நெனைச்சுக்கிட்டு சந்தானம் அத்தான்.
            இருந்தாலும் மனசுக்குள்ள இப்பிடிப் பண்றதுல ஒரு கொறை இருக்கத்தானே செய்யும். அதெ பெரியவர்கிட்டெ போன்ல பேசுனப்போ சந்தானம் அத்தான் சொன்னுச்சு. அதுக்குப் பெரியவரு, "வுடுடா யம்பீ! அவனுவோ பொழைப்பே அப்பிடித்தாம். சொல்லாம கொள்ளாம பண்ணுவானுவோ! என்னவோ நாம்ம போனா கண்ணு வெச்சி ஆகாமப் போயிடும்ன்னு. அவ்வேம் ஒம்மட சித்தப்பம் காலந்தொட்டே இப்பிடித்தாம். என்னவோ ஆண்டவேம் புண்ணியத்துல நம்மாள முடிஞ்ச அளவுக்குக் காவந்துப் பண்ணி வுட்டேம். அந்த ஆண்டவேம் புண்ணியத்துல ஒரு கதை நீயி கட்டி வுட்டே. இதெல்லாம் நாம்ம பண்ணதா நெனைச்சிக்கிட வாணாம். அப்பிடி நெனைச்சிக்கிட்டாத்தாம் மனசுல சங்கடம் வந்துச் சேரும். பழனியாண்டவனோட தொணை இருந்ததால, சியாமளா தேவியோட அனுக்கிரகம் இருந்ததால அவுங்களால நடந்ததுன்னு நெனைச்சுக்கோ. மனசுக்குள்ள எந்தக் கொறையும் உண்டாவாது. எப்பிடியோ நம்மகிட்டெ வந்தவனுவோ நல்ல கதியா இருக்குறானுவோயில்ல. நம்மள வுட ஒரு படி மேலத்தானே இருக்கானுவோ. அத்துப் போதும் போ! இதெயல்லாம் மாமாகிட்டே சொல்லிட்டு இருக்காதே. அத்து கேட்டா மனசு சங்கடப்படும். அத்து ரண்டு குடும்பமும் ந்நல்லா இருக்கணும்னுத்தாம் நெனைக்குது. இவனுவோ இப்பிடிப் பண்ணுறதுக்குப் பாவம் அத்துதாம் என்னத்தெ பண்ணும்? பண்றதையெல்லாம் பண்ணிப்புட்டு ஒரு கஷ்ட நஷ்டம்ன்னா அத்தோட கால்ல வுழுந்துக் கெடப்பானுவோ! அத்துச் செரி! இனுமே நம்மகிட்டெ சொன்னா ன்னா? சொல்லாட்டியும் ன்னா? ந்நல்லா இருந்துட்டுப் போறானுவோ போ! அப்பன் புத்தி அப்பிடியே புள்ளைக்கு யில்லாம்ம போவுமா?"ன்னாரு பெரியவரு.

            பெரியவரு அன்னிக்கு அப்போ போன்ல சொன்னது ஓரளவுக்குச் சரித்தாம். அப்பன் புத்தி அப்பிடியே கார்த்தேசு அத்தானுக்குன்னு சொல்றதெ வுட இப்பிடி நடந்தது எல்லாம் அப்பன் புத்தியாலத்தாம்ன்னு சொல்றது ரொம்ப சரியா இருக்கும். இதுக்கான திட்டம் அத்தனையையும் தீட்டிக் கொடுத்தது சின்னவருதாம். அவருதாங் கணக்குப் போட்டுச் சொன்னாரு, "ஒண்ணு கையில காசி இருக்கு. காசில்லன்னா சொல்லு நெலத்தெ வித்தாவது தர்றேம். இல்ல கடன்பட்டாவது தர்றேம். ஆக பண பலம் இருக்கு. இத்து ஒண்ணாச்சா! ரெண்டு ஆளுக நம்மகிட்டெ இருக்கு. நாம்ம ஒண்ணு, அத்தான் ரண்டு, தம்பி மூணு, நீயு நாலு. நாலு பேத்தும் சேர்ந்தா நாப்பது ஆள தெரட்டலாம். ஆக ஆளு பலம் இருக்கு. இத்து ரண்டாச்சா! மூணு வேல நுணுக்கம், மொறைப்பாடு. அத்தெ நம்ம வேலைய ஒருத்தம் வந்துப் பாத்தாம்ன்னா அவ்வேம் நூத்து பேத்துகிட்டெ சொல்லுவாம். நம்மள வெச்சித்தாம் வேலயப் பாக்கணும்னு துடியா துடிப்பாம். ஆக வேலைப்பாடு இருக்கு. இத்து மூணாச்சா! நாலு என்னான்னா நாலு பேத்தோட பழக்க வழக்கம். அரும்பாக்கம், வடபழனி, எம்.எம்.டி.ஏ. காலனி, தி நகரு, கோயம்பேடு, சூளைமேட்டு, கோடம்பாக்கம், ‍அசோக் நகர்ன்னு என்னென்னவோ எடத்துலேந்துலாம் நமக்குப் பழக்க வழக்கம் வந்துப் போச்சு. ஒரு ஏரியாவுல வேல கெடைக்காம போனாலும் இன்னோரு ஏரியாவுல பிடிச்சிடலாம். ஆக தொடர்புக நாலு எடத்துலயும் உண்டாயிடுச்சு.  இத்து நாலாச்சா! அஞ்சு சீப் ரேட்டு வேல. அவ்வேம் சந்தானம் பயெ பாத்துக் கொடுக்கறதெ வுட கம்மியான ரேட்டுக்கு நாம்ம பாத்துக் கொடுக்கலாம். அவ்வேம் நம்மள வெச்சு வேலயப் பாத்து நமக்கு மேல ஒரு கமிஷம் அடிக்கிறான்னா அந்தக் கமிஷனெ கழிச்சிட்டு ரேட்டப் போட்டாலே போச்சு, ஒரு பயெ அவ்வேம்கிட்டெ போவ மாட்டாம். நம்மகிட்டெத்தாம் வந்து நிப்பாம். ஆக கம்மி ரேட்டுன்னா கம்மி ரேட்டு அத்து நம்மகிட்டத்தாம். இத்து அஞ்சாச்சா! மொதலீடு, வேலப்பாடு, பழக்க வழக்கம், நாலு தெரிஞ்ச எடம், கொறைஞ்ச கூலின்னு பாத்தா நாம்ம ஆபீஸப் போட்டா நம்மகிட்டத்தாம் அவனவனும் வந்து நிப்பாம்!"ன்னாரு சின்னவரு.
            கார்த்தேசு அத்தானுக்கு அப்பயும் கொஞ்சம் தயக்கம்தாம், எப்படி திடுதிப்புன்னு ஆபீஸப் போடுறதுன்னு? அப்பிடிப் போட்டு உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணான்னு ஆயிட்டா என்னா பண்றதுன்னு? இப்பிடி ஒரு சந்தேகம் கார்த்தேசு அத்தானுக்கு வர்றதுக்குக் காரணம், மாரி அத்தான ஒரு தவா எதேச்சையா பாத்தப்போ அத்து அப்பிடித்தாம் சொன்னிச்சு, "பேயாம அண்ணங்கிட்டேயே வேலயப் பாத்துட்டு இருந்திருக்கலாம். இப்போ ஆபீஸப் போட்டுச் செருமமா இருக்கு. ஆளுகளச் சமாளிக்குறது கஷ்டமால்லா இருக்கு! கண்ணுல வெளக்கெண்ணெய்ய வுட்டுக்கிட்டுப் பாத்துக்கிட வேண்டிதா இருக்கு. கொஞ்சம் அசந்தா தலையில மொளகாய வெச்சி அரைச்சிப்புடுவானுவோ போலருக்கு. அத்துன்னா வேலைக்குப் போனோமா? சம்பளத்தெ வாங்குணோமான்னு போயிடும். இத்து ரொம்ப தலவலித்தாம். எப்போ இத்தெ தொலைச்சிக் கட்டலாம்னு நெனைக்கிறேம்?" அப்பிடினுச்சு.  அந்த நெனைப்பு கார்த்தேசு அத்தானோட மனசுல ஓட ஆரம்பிச்சிடுச்சு.
            அப்போ, சின்னவரு சொன்னாரு, "இனுமே தாசு பயலுக்கு வேலங்குடியில ன்னா வேல? அவனெ கொண்டாந்து சென்னைப் பட்டணத்துல கொண்டாந்துப் போட்டுடுறேம்! நாம்ம எப்போ வாரணும்னு சொன்னாலும் பறந்துட்டு வந்துப்புடுறேம்!"ன்னாரு. அப்போ உடனிருந்த கண்ணாடிதாசு அத்தானும், "மச்சான் இப்பிடி சென்னைப் பட்டணத்துல இருந்தா நமக்கென்ன மணமங்கலத்துல வேல? நாமளும் குடும்பத்தோட சென்னைப் பட்டணம் வந்துப்புடுறேம். நீயி தெகிரியமா ஆரம்பி மச்சாம்! நாம்ம தொணை இருக்கேம். பணம் பத்தலன்னா சொல்லு! யக்கா நகையெ அடவு வெச்சித் தர்றேம்!" அப்பிடினுச்சு. கார்த்தேசு அத்தானுக்கு அப்போ ஆளுகளப் பத்தி பயமில்லன்னு மனசுல ஒரு  துணிவு வந்துடுச்சு.
            அந்த நேரத்துல எம்.எம்.டி.ஏ. காலனி வளர்ந்து வந்த ஒரு எடமா இருந்துச்சு. கோயம்பேட்டுல பஸ் ஸ்டாண்டு வந்தப் பெறவுதாம் அதோட வளர்ச்சி அபாரமா ஆனுச்சு. அதுக்கு மின்னாடி அங்க எடம் கெடைக்குறதும், ஆபீஸூ போடுறதும் கொஞ்சம் மலிவான வெசயமாத்தாம் இருந்துச்சு. ஆபீஸூக்கான வாடகையும் கம்மியாத்தாம் இருந்துச்சு. எடத்துக்கும் ரொம்ப கிராக்கி இல்லே. கம்மியான வாடகையிலயே கிராக்கி இல்லாம ஆபீஸூப் போட இத்து வெசாரிக்க ஆரம்பிச்ச ஒடனே எடம் கெடைச்சதுல கார்த்தேசு அத்தானுக்கு ரொம்ப சந்தோஷம். இந்தச் சங்கதிய மொதல்ல சந்தானம் அத்தான், பாலு அத்தான், ராமு அத்தான், மாரி அத்தான்னு எல்லாத்துக்கிட்டெயும் சொல்லித்தாம் பண்ணணும்னு நெனைச்சுது கார்த்தேசு அத்தான். சின்னவரு அங்கத்தாம் அந்த எடத்துல அதுக்கு ஒத்துக்கல.
            சின்னவரு சொன்னாரு, "ஒருத்தன் கண்ணு போல இன்னொருத்தன் கண்ணு இருக்காதுடாம்பீ! அதுலயும் பங்காளிப் பயலுவோ கண்ணு இருக்கே, அத்து காவாளிப் பய கண்ணு. மொதல்ல நமக்குத் தெரிஞ்ச வகையில ஆபீஸ்ஸப் போட்டுப்புட்டு யாருக்கும் ஒண்ணும் தெரியாத மாதிரிக்கி வேலையப் பாத்துட்டே, வெளி வேலைகளயும் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சிப்போம். கொஞ்ச நாளு போயி எல்லாம் அதுவா நடந்தாப்புல ஒரு கதையெ கட்டிப்புடலாம். நாம்மப் போயி வேல பாத்த சனங்க எல்லாம் ஆளாளுக்கு ஆபீஸப் போடுன்னு நச்சரிச்சதால போடுறாப்புல ஆயிடுச்சுன்னு சமாளிச்சிக்கிடணும். முங்கூட்டியே வெசயத்தெ அவனுககிட்டெ சொன்னா அவ்ளோதாங் காரியம் கெட்டுச்சு. நம்மகிட்டெ வேல பாக்குறப் பயெ இப்பிடி வெளியில போனான்னா, நம்ம வேல என்னாவுறதுங்ற நெனைப்புல நமக்குத் தெரியாமலயே தலையில கல்லத் தூக்கிப் போட்டுப்புடுவாம். அத்தோட நைசா அவ்வேம் வேலையிலேந்து நம்மள கழட்டி வுட்டு, நம்மள பத்தி நாம்மோட பழக்க வழக்கத்துக்கிட்ட எல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வெலக்கி வுட்டு, வேட்ட வெச்சு, நம்மள நடுத்தெருவுல நிப்பாட்டிப்புட்டு அவ்வேம் பாட்டுக்குப் போயிடுவாம். கேட்டாக்கா நமக்கு எதிரா ஆபீஸப் போடப் பாத்தாம். இப்போ நடுத்தெருவுல நிக்குறாம்பாம்!"
            அதெ கேட்டதும் கார்த்தேசு அத்தானுக்கு அப்பிடியும் நடக்குமோன்னு மனசுக்குள்ள ஒரு பயம் வந்துப்புடுச்சு. பெரியவங்க அனுபவப்பட்டவங்க சொன்னா சரியாத்தாம் இருக்கும்னு நெனைச்சுச்சு. அத்தோட ஆபீஸப் போட்டு கொஞ்ச நாளைக்கி பெரிப்பா மவ்வேனுங்களுக்குத் தெரியாம இருக்குறதால ஒண்ணும் கெட்டுப் போயிடப் போறதில்லன்னும் நெனைச்சுச்சு. இப்பிடித்தாம் கார்த்தேசு அத்தானோட 'அல்ட்ரா ஸ்மார்ட் இன்டீரியர் டெகரேட்டர்ஸ்' எம்.எம்.டி.ஏ. காலனியில சந்தானம் அத்தான் உட்பட யாருக்கும் தெரியாம உதமாயி, பெறவு எல்லாத்துக்கும் தெரிய வந்துச்சு. 
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...