24 Jun 2020

வெறென்ன சொல்ல?

செய்யு - 487

            மனுஷனுக்குச் மனசுல சந்தேகம்ன்னு ஒண்ணு வந்துப்புடக் கூடாது. வந்துப்புட்டா மனசுல இருக்குற சந்தேகம் விசத்தப் போல பரவி கொஞ்சம் கொஞ்சமா மனுஷனக் கொன்னுப்புடும். விசத்துக்கும் சந்தேகத்துக்கும் கொல்லுறதுல வித்தியாசம் கெடையாது. கொல்லுற மொறையிலத்தாம் வித்தியாசம். விசம் இருக்கே அத்து குடிச்ச ஒடனயே ஆளெ கொன்னுப்புடும். சந்தேகம் அப்பிடிப் பண்ணாது, அத்து கொஞ்சம் கொஞ்சமாத்தாம் அனுபவிச்சி ரசிச்சு ரசிச்ச மனுஷனக் கொல்லோ கொல்லுன்னு கொல்லும். அதுவும் தாம் இப்பிடிக் கொல்லுறதெ மனுஷன் அறியாதபடிக்கு நின்னு கொல்லும். மனசுல சந்தேகம்ன்னு வந்துப்புட்டா ஒண்ணு சந்தேகத்தக் கொன்னுபுடணும். இல்லன்னா சந்தேகம் அந்த மனுஷனக் கொன்னுப்புடும்.
            சந்தானம் அத்தானுக்கு தன்னோட காலு கொணம் கண்ட பிற்பாடும் சந்தேகத்தோட மனசுல கொஞ்சம் பயமும் வந்துடுச்சு. இவ்வளவு சங்கதி நடந்த பிற்பாடும் திருவேற்காட்டுல கார்த்தேசு அத்தான் வூடு கட்டியிருக்கிற எடத்துக்குப் பக்கத்தலயா போயி வூடு கட்டணும்ங்ற எண்ணம் வந்துப்புடுச்சு. இப்போ சுப்பு வாத்தியாரும், சந்தானம் அத்தானும் ரொம்ப நெருங்கிப் போனதுல, திட்டை்ககு ஒரு மொற வந்தப்போ, இதெ பத்திச் சுப்பு வாத்தியார்கிட்டெ கலந்துக்கிடுச்சு சந்தானம் அத்தான். அதுக்குச் சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "எந்த மனுஷனும் எந்த மனுஷனையும் மந்திர தந்திரம் பண்ணியோ, பில்லி சூன்யம் வெச்சியோ அழிச்சிட முடியாது. அப்பிடி அழிக்க முடியும்ன்னா இன்னிக்கு அரசியல்வாதியா இருக்குற அத்தனெ பேரும் செரித்தாம், தொழில் போட்டியில இருக்குற யேவாரியும் செரித்தாம் அந்த வேலையத்தாம் மொதல்ல செய்வாம். மனுஷன மந்திரத்தால அழிக்க முடியுங்றதுல்லாம் நடக்குற காரியமில்ல! அவனவேம் மனசு அவனவன அழிச்சாத்தாம் உண்டு! நல்லதும் கெட்டதும் நாளோ நட்சத்திரமோ பண்ணுறதில்ல. மனுஷனுக்கு மனுஷனே பண்ணிக்கிடறதுதாம்!"ன்னாரு.
            "ஏம் மாமா! நாம்ம காலுக்கு ரணம் பட்டுக் கெடந்த வேதனைய நேர்ல பாத்த நீயி! பாத்த பெறவுமா இப்பிடிச் சொல்றே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அதாங் சரியான டாக்கடர்ரப் பாத்ததும் கொணமாயிடுச்சே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "கொணமாயிடுச்சுத்தாம்! மறுக்கா இதெ போல புள்ளை குட்டிகளுக்கோ, பொண்டாட்டிக்கோ இப்பிடி ஒண்ணு ஆச்சுன்னா நம்மால அதெ தாங்க முடியா. ஏத்தோ நமக்கு வந்தவாசி தாங்கிக்கிட்டேம். பெறவு நாம்ம மனுஷனாவே இருக்க மாட்டேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            சுப்பு வாத்தியாரு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தாரு. பங்காளியா பக்கத்துல இருந்து பகையாளியா ஆவுறதுக்கு, எட்ட இருந்து ஒருத்தருக்கொருத்தரு பாக்காம, பேசிக்காம இருந்தாலும் பரவாயில்லன்னு அவருக்கு தோணுனுச்சு. அவரு ஒரு யோசனையைச் சொன்னாரு, "இப்போ வாங்கிப் போட்டுருக்குற எடத்துல வூட்டையா கட்டிப்புட்டே? ஒமக்கும் திருவேற்காட்டுலேந்து வேலை நடக்குற எடத்துக்குல்லாம் போயிட்டு வாரது அலைச்சல்ன்னு சொல்றே! பேயாம அதெ வித்துப் போட்டு, ஒமக்கு வேலைக்கு போயி வார்றாப்புல அதுக்கு வசதியான ஏரியாவப் பாத்து ஒரு எடத்தெ வாங்கிப் போட்டு அங்ஙன வூட்டெ கட்டிட்டுப் போ!"ன்னாரு.
            "நாமளும் அதெத்தாம் மாமா நெனைச்சிட்டு இருந்தேம்! தெரியாத்தனமா அந்தப் பாவிப்பய மவனுக்கு அஞ்ஞ எடத்தெ வாங்கிக் கொடுத்து, ஒடம்பொறந்த பொறப்புகளுக்கு நாமளே கெடுதல பண்ணிப்புட்டதா நெனைக்க வேண்டிக் கெடக்கு. நல்லது பண்‍றேம்னு நெனைச்சுப் பண்ணுறது நமக்கே கெடுதியா வந்து நிக்குது. கருமத்தெ அதாங் நடந்தது நடந்துப் போச்சு. நாம்ம எதுக்கு அவனுக்குப் பக்கத்துல போயி குடியிருந்துக்கிட்டுன்னு நெனைச்சேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            இந்தப் பேச்சுக்குப் பிற்பாடு சந்தானம் அத்தான் சுப்பு வாத்தியாரு சொன்னபடியே கார்த்தேசு அத்தான் வூட்டுக்குப் பக்கத்துல இருந்த ரண்டு ப்ளாட்டு, இன்னும் திருவேற்காட்டுல அங்கங்க வாங்கிப் போட்டிருந்து நாலு ப்ளாட்டுன்னு மொத்தத்தையும் வித்துக் காசாக்கி அதெ வெச்சி மதுரவாயல்ல ஒரு எடத்த வாங்கிப் போட்டு வூட்டையும் கட்டி முடிச்சிது. பெரியவருக்கு இதுல தாங்க முடியாத சந்தோஷம், எப்பிடியோ தன்னோட புள்ளைகள்ல இன்னும் வூடு கட்டாம கெடந்த சந்தானம் அத்தான் வூட்ட கட்டிட்டுன்னு.
            சந்தானம் அத்தான் வூடு கட்டிக் குடி போனப்போ சின்னவரு வூடு சம்பந்தமா யாருக்கும் பத்திரிகெ எதுவும் கொடுக்கல. இத்தனைக்கும் வேலங்குடியில சின்னவரு வூட்டெ தவுர ஒரு குச்சி வூடு பாக்கியில்லாம எல்லா வூட்டுக்கும் பத்திரிகையக் கொடுத்திருந்துச்சு சந்தானம் அத்தான். இப்பிடியா சின்னவரு வூடு குடும்பத்துலேந்து யாரும் கலந்துக்கிடாத மொத சம்பவம் பெரியவரு குடும்பத்துல நடந்துச்சு. அந்தச் சம்பவத்துக்குப் பெறவு அவுங்கவுங்க குடும்பத்து விஷேசங்கள்ல அவுங்கவுங்க குடும்பத்து சனங்க மட்டுந்தாம் கலந்துக்கிட்டாங்க. பெரியவரு குடும்பத்துலேந்து சின்னவரு குடும்பத்துக்கோ, சின்னவரு குடும்பத்துலேந்து பெரியவரு குடும்பத்துக்கோ யாரும் எதையும் சொல்லுறதில்ல, குடும்பம் மாறி யாரும் எதுலயும் கலந்துக்கிடறதில்ல. இதுல ரெண்டு குடும்பத்து விஷேசத்துலயும் பொதுவா கலந்துக்கிட்ட ஆளுன்னா சுப்பு வாத்தியாரு ஒருத்தருதாம்.
            அந்த நேரத்துல பெரியவரு கூட சுப்பு வாத்தியாருகிட்டெ சொல்லிப் பாத்தாரு, "அவ்வேம் குடும்ப சகவாசத்தெ வுட்டுப்புடு. அவ்வேம் மனுஷனே இல்லங்றப்போ ஒறவே கெடையாது. அவ்வேம் ஒறவே ஒமக்குத் தேவையில்ல. நம்ம குடும்பத்துப் புள்ளீயோ எல்லாம் ஒங் காலடியில கெடக்கும்!"ன்னு. அதுக்குச் சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "சின்னத்தாம் ஒறவுக்காகவா போயிட்டு இருக்கேம்? சின்னக்காவுக்காகப் போயிட்டு இருக்கேம். நாமளும் போவலன்னா அதுக்கு பொறந்த வூட்டுச் சொந்தம்ன்னு யாரு இருக்கா?"ன்னாரு. அதுக்குப் பெறவு பெரியவரு இத்துச் சம்பந்தாம சுப்பு வாத்தியார்கிட்டெ எதையும் கேட்டதில்லே. ஆன்னா சின்னவருக்கு எப்பவும் ஒரு மனக்கொறை உண்டு, தன்னோட மச்சாங்கார்ரேம் தன்னோட பேச்சக் கேக்காம, பெரிய மச்சாங்கார்ரேம், அவரோட புள்ளைகப் பேச்சையே அதிகமா கேக்குறதா. அதெ பத்தி எவ்ளவோ சொல்லிப் பாத்தாரு சின்னவரு. சுப்பு வாத்தியாரு கேக்குறாப்புல இல்ல, ரண்டு குடும்பமும் தனக்கு வேணும்னு பிடிவாதமா நின்னுட்டாரு.

            வேலங்குடி பெரியவரு, சின்னவருன்னு ரண்டு குடும்பமும் பகையாளிக் குடும்பமா பிரிஞ்ச பெறவு ஒறவுகளையும் அப்பிடியே அவுங்கவங்க பக்கமா பிரிக்குற வேலைய ஆரம்பிச்சாங்க. ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனுக்குப் பகையா போனா, அவ்வேம் மட்டும் பகையா போவக் கூடாது, அவனெ சுத்தி நிக்குற அத்தனெ பேத்துக்கும் பகையா போயாவணும்ன்னு ஒரு நெனைப்பு மனசுக்குள்ள இருக்கும். அப்பிடி போவலன்னா பகையாக்கிப் பண்ணி வுடற வேலைய மின்னாடி நின்னு பண்ணி வுட ஆரம்பிச்சிடுவாம் மனுஷப் பயெ. அதுல ரண்டு பக்கமும் ஒதுங்காம நின்ன சுப்பு வாத்தியாரு அவுங்க கண்ணுக்கு உறுத்தலாவே இருந்திருக்கும் போலருக்கு.
            சின்னவருக்கு தன்னோட கடெசீ மவனெ சுப்பு வாத்தியாரு பொண்ணு செய்யுவுக்குக் கட்டி வெச்சி தம் பக்கம் இழுக்கணும்னு ஒரு ஆசெ. கலியாணம் கட்டி சம்பந்தின்னு ஆன பெற்பாடு தன்னோட பேச்சத்தானே கேட்டாவணும்ன்னு ஒரு நெனைப்பு அவருக்கு. சுப்பு வாத்தியாரு அவரோட பொண்ணு செய்யுவெ சின்னவரோட கடெசீ மவனுக்குக் கட்டிக் கொடுத்துப்புட கூடாதுன்னு சந்தானம் அத்தானுக்கும் ஒரு நெனைப்பு. பாக்குறப்பல்லாம், "மாமா! சேதியக் கேள்விப்பட்டேம்! எவனுக்கு வேணும்னாலும் பொண்ணக் கட்டிக்கொடு! அந்தப் பயக் குடும்பத்துக்கு மட்டும் வாணாம். சொந்த அண்ணங்கார்ரேம் குடும்பத்துக்கே சூன்யம் வைக்க நெனைச்சப் பயெ. நெனைச்சதோட யில்லாம அண்ணங்கார்ரேம் செத்ததுக்கே வாராத பயெ! சாவுக்கு வாராத பயலா நாளைக்கு கஷ்டம் நஷ்டம்ன்னா மின்னாடி நிக்கப் போறாம் பரதேசிப் பயெ!"ன்னு அடிக்கடிச் சொல்லும்.
            இதாங் நடந்த கதெ.
*****
            சின்னவரோட மூத்த மவ்வேன் கார்த்தேசு அத்தானோட பொண்டாட்டி நீலதாட்சி அத்தாச்சிகிட்டெ விகடு பேசிட்டு இருந்த எடத்த மறந்துருக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேம். நீலதாட்சி அத்தாச்சி இந்த நெலையிலத்தாம் சுப்பு வாத்தியார்கிட்டெ பேசிட்டு விகடுகிட்டயும் பேசுனுச்சு. அந்த எடத்த அப்பிடியே நிப்பாட்டிப்புட்டுத்தாம் நாம்ம இம்மாம் கதையும் பாக்க வேண்டியதா போயிடுச்சு.
            இப்போ ஒங்களுக்கு ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும் வேலங்குடி குடும்பங்களுக்கும், சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கும் உண்டாவுற ஒறவு, வெலகல் எல்லாம். அதெ பத்திச் சுருக்கமா சொல்லணும்ன்னா, சுப்பு வாத்தியாரு நெருங்குன சொந்தத்துல பொண்ண கொடுத்து பொறக்குற புள்ளெ கொறைபாடா பொறந்துடக் கூடாதுன்னு யோசிச்சாரு. வேலங்குடி சின்னவரு குடும்ப வழக்குகள்ல ஒவ்வொரு மொறையும் நடந்துக்கிட்டதையும் கணக்குல எடுத்துக்கிட்டாரு. சின்னவரோட மவ்வே பூர்ணி அத்தாச்சி ஓடிப் போனது அவருக்குப் பிடிக்கல. அத்தோட மந்திர தந்திரம், பில்லி சூன்யம்ன்னு சின்னவரோட போக்கும் உறுத்தலா இருந்துச்சு. தாசு அத்தானுக்கும் செய்யுவுக்குமான வயசு வித்தியாசமும் ரொம்ப இருந்துச்சு. சமீப காலமா அவரு எடுக்குற முடிவுகள்ல சந்தானம் அத்தானோட பேச்சோட செல்வாக்கும் அதிகமா இருந்துச்சு. இத்து எல்லாத்தையும் விட சின்னவரோட ஆரம்ப கால வரலாற்றுல ஒரு பொண்ணைத் தூக்குல தொங்க வுட்ட கதெய அப்பிடி இப்பிடின்னு எப்பிடியோ பெரியவரு வாயிலா தெரிஞ்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. பெரியவரு யாருகிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு நெனைச்சிருந்த கதெதாம். அவரையும் அறியாம சின்னவரால மனசுல உண்டான வெறுப்பால சுப்பு வாத்தியாரு காதுக்கு அந்தக் கதெ பெரியவரு வாயாலே வந்திருந்துச்சு. எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சி கணக்குப் போட்டு சுப்பு வாத்தியாரு முடிவா மவளக் கொடுக்க முடியாதுன்னு முடிவா நின்னுப்புட்டாரு. இது எல்லாத்தையும் அறிஞ்சும், சுப்பு வாத்தியாருகிட்டெ ஒரு மணி நேரத்துக்கு மேல பேசி, அவரு மவளக் கொடுக்க முடியாதுன்னு அடிச்சிச் சொன்ன பிற்பாடும் நீலதாட்சி அத்தாச்சி விகடுகிட்டெ பேசிட்டே இருந்துச்சு.
             கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல நீலதாட்சி அத்தாச்சி இதெ விசயத்த சுத்தி சுத்த பல வெதமா தாசு அத்தானுக்கு செய்யுவ கட்டி வெச்சிடுறதெப் பத்தி விகடுகிட்டெ பேசிட்டே இருந்துச்சு. எப்படியும் செய்யுவ தாசு அத்தானுக்குக் கட்டி வெச்சிப்புடணும்னு ஒத்தக் கால்ல பிடிவாதமா நின்னு அத்து பேசுது. விகடு எதுக்கும் பிடி கொடுக்காம பேச வேண்டியி நெலையில பேசுறாப்புல ஆயிடுச்சு.
            கட்டக் கடெசீயா, நீலதாட்சி அத்தாச்சு சொன்னுச்சு, "எவ்ளோ நேரந்தாம்டாம்பீ பேசுறது? இந்தாருடாம்பீ! ஒறவு வுட்டுப் போவக் கூடாதுன்னுத்தாம் கேக்குறேம். பொண்ண கொடுத்தா ராணி மாதிரி வெச்சிப்பேம். அதுக்கு நாம்ம கியாரண்டி. தாசும் ரொம்ப நாளா ஒந் தங்காச்சியே நெனைச்சியே இருந்துட்டாம். ஒந் தங்காச்சிய கட்டிக்கிடணும்னு ரொம்ப பிரியமா இருக்குறாம். பிரியமா இருக்குறவேம் மனசெ நொறுக்கிட முடியாது. நீயி அப்பாகிட்டே பேசுனா காரியம் ஆயிடும்!"ன்னு அதெ பழைய பல்லவிய மறுபடியும் போட்டுச்சு.
            "குடும்பத்துல எந்த முடிவுன்னாலும் அப்பாவோட முடிவுதாங் அத்தாச்சி. அதெ மாத்தி எடுக்கணும்ன்னா ஒண்ணு பொண்ணுக்கு கட்டிக்கிடணும்னு ஆசெ இருக்கணும். அப்பிடி இருந்தா யப்பாவே ஒண்ணும் சொல்லாம கட்டி வெச்சிடும். அப்பிடி இருக்குறதா நமக்குத் தெரியல. அத்தோட அவுங்க மனசுல ன்னா இருக்குதுன்னும் நமக்குத் தெரியல. பெத்தவங்களுக்கு பொண்ண எப்பிடி கட்டிக் கொடுக்கணும்ன்னு ஒரு கனா இருக்கும். அதுல நாம்ம போயி குறுக்கால நிக்குறதுல்ல விருப்பம் இல்ல!"ன்னு விகடுவும் போட்ட தாளத்தையே அதுக்குத் தகுந்தாப்புல திருப்பிப் போட்டாம் விகடு.
            "ஒரு அண்ணங்கார்ரேம் மாதிரியா பேசுதீயேடா நீயி? ஒந் தங்காச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கெ அமையணும்ன்னா தாசுக்குக் கட்டிக் கொடுக்குறதெப் பத்தி யப்பாகிட்டெ பேசு. இல்லாட்டி வுட்டுப்புடு. மறுக்கா மறுக்கா போட்டு ஒன்னய இனுமே தொந்தரவு பண்ண மாட்டேம்!"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி.
            அதுக்கு விகடு எந்தப் பதிலையும் சொல்லல. அவ்வேம் பாட்டுக்கு பேசாம செல்போன காதுல வெச்சிட்டு இருந்தாம். "ன்னா பேசுதீயடா யம்பீ?"ன்னுச்சு நீலதாட்சி அத்தாச்சி. இவ்வேம் அதுக்கு மேல ஒண்ணும் சொல்லாததைப் பாத்துட்டு அத்து செல்போன வெச்சிடுச்சு.
            நாம்ம ஒண்ணும் பதிலெச் சொல்லாததப் பாத்துட்டு இனுமே நீலதாட்சி அத்தாச்சி பேசாதுன்னு நெனைச்சாம் விகடு. ஆன்னா நீலதாட்சி அத்தாச்சி தெனமும் செல்போன அடிச்சிட்டெ இருந்துச்சு. விகடுவும் இதெப் பத்தி அப்பங்காரர்ட்டேயும், அம்மாக்காரிட்டேயும் கேட்டாம். அவுங்க தெளிவா இவ்வேங்கிட்டெ சொன்னாங்க, "அந்தப் பொண்ணு தெனமும் எஞ்ஞளுக்கும்தாம் செல்போன அடிச்சிட்டுக் கெடக்குது. முடியாதுன்னு எத்தனெ தவாத்தாம் சொல்றதுன்னு நமக்கும் தெரியல!"ன்னு சொன்னதுமே விகடுவும் புரிஞ்சிக்கிட்டாம், இத்து ஆவாத கதைக்கு ஆத்தெ கட்டி எறைக்குற கதைன்னு.
            ஒவ்வொரு நாளும் விகடுவும் ரொம்ப பக்குவமா இந்த விசயத்தை நீலதாட்சி அத்தாச்சி போன் பண்றப்பல்லாம் சொல்லிப் பாத்தாம். நீலதாட்சி அதெ கேக்குறாப்புல இல்ல. அத்துப் பிடிச்சா புடியிலயே நின்னுச்சு. "யப்பாகிட்டெ மனசுல பதியிறாப்புல ந்நல்லா பேசுனீயாடாம்பீ?"ன்னு கேக்க ஆரம்பிச்சுச்சு. நாலைஞ்சு தடவே இந்தக் கதிக்கே பாத்தாம் விகடு, அதுக்குப் பெறவு நீலதாட்சி அத்தாச்சிக்கிட்டேயிருந்து போன் வந்தா எடுக்குறதா விட்டுப்புட்டாம். ஆன்னா நீலதாட்சி அத்தாச்சிக்கு ராத்திரி எட்டு மணி ஆனா போதும் விகடுவோட நம்பருக்கு நாலைஞ்சு மொறை அடிச்சிப் பாக்கும். ஒரு வார காலத்துக்கு அப்பிடியே அடிச்சிட்டுக் கெடந்துச்சு. 
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...