செய்யு - 486
சந்தானம் அத்தான் வேலங்குடிக்கு வந்ததும்,
வராததுமா, அதெ பிடிச்சி சுப்பு வாத்தியாரு கேட்டாரு, "டாக்கடருகிட்டெ காட்டுனேங்றீயடாம்பீ!
எந்த டாக்கடருகிட்டெ காட்டுனே?"ன்னு.
"வழக்கமா காட்டுற டாக்கடருகிட்டத்தாம்
காட்டுனேம்! சென்னைப் பட்டணத்துல பேர் போன டாக்கடரு! அவருத்தாம் நமக்குக் குடும்ப
டாக்கடரு போல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"எத்தனெ தடவே காட்டிருப்பே?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஒண்ணா ரெண்டா? கணக்கில்ல மாமா! நெறைய
தடவெ காட்டியிருப்பேம்! காட்டுறப்ப கொணங் கண்டாப்புல இருக்கும். பெறவு பழைய குருடி,
கதவெ தெறங்டிங்ற நெலமத்தாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"ஏம்டா அந்த டாக்கடருகிட்டெ அம்மாம்
தடவெ பாத்தும் கொணமாகலன்னு தெரிஞ்ச பெற்பாடும், அந்த டாக்கடரு ஒன்னய ஒரு தோலு டாக்கடருகிட்டெ
காட்டச் சொல்லலியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"புரியாம பேசாதே மாமா! அவரு பேரு
வாங்குன டாக்கடரு மாமா! அவருகிட்டெ காட்டுறதுன்னா டோக்கன்லாம் போட்டு, க்யூவுல நின்னாவணும்.
இதுக்குன்னே நம்மகிட்டெ வேல பாக்குற ஆளு ஒருத்தனெ ஒரு நாளு கூலி போனாலும் போயிட்டுப்
போவுதுன்னு நிக்க வெச்சுல்லாம் போயி காட்டிருக்கேம் மாமா! அவரு போயி இன்னொரு டாக்கடருகிட்டெ
எப்பிடிக் காட்டச் சொல்லுவாரு. அவருக்குத் தெரியாத வைத்தியமெ கெடையாது!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
"செரிடாம்பீ! பேரு வாங்குன டாக்கடராவே
இருக்கட்டும்! கொணப்பாடு இல்லன்னா இன்னொரு டாக்கடர்கிட்டெ மாத்திக் காட்டணுங்ற புத்தி
கூடயா வாரது ஒனக்கு?" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
"இந்தாரு மாமா. இத்து கொணப்பாடு
ஆவக் கூடியதுதாம். ஆன்னா கொணப்பாடு ஆவல. டாக்கடரும் பெரிய படிப்புல்லாம் படிச்ச ஆளுத்தாம்.
விஞ்ஞானம் வளந்தாலும் ஒலகத்துல இன்னும் செல விசயங்கள மாத்த முடியாது மாமா. மனுஷன் காலாலத்தாம்
நடந்தாவணும், தலையால நடக்க முடியாது. வாயாலத்தாம் தண்ணியக் குடிச்சாவணும். சூத்தால
குடிக்க முடியாது. இப்போ புரியுதா? அத்து ஏம்ன்னு தெரியுதா? நம்மள கழிப்புக் கழிச்ச
எலுமிச்சம் பழத்த மிதிக்குறாப்புல வென வெச்சிருக்கு சித்தப்பா. அதாலத்தாம் டாக்கடருங்க
பாத்தும், சாமியார்களப் பாத்தும் கொணப்பாடு ஆவ மாட்டேங்குது! சரியான மொறையில அதெ
கழிப்புக் கழிச்சாத்தாம் கொணமாவும்! ஒலகத்துல எத்தன காலம் ஆனாலும் செரித்தாம், என்னத்ததாம்
விஞ்ஞானம் வளந்தாலும் சரித்தாம் செல விசயங்கள மாத்த முடியா!"ன்னுச்சு சந்தானம்
அத்தான்.
"ஒம்மட பேச்செ பெறவு வெச்சிப்போம்.
நம்ம கூட கெளம்பு!"ன்னு சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தானையும், பெரியவரையும்
அழைச்சிக்கிட்டுப் போயி கமலாலயக் கரையில இருந்த ஸ்ரீதரன் டாக்கடர்கிட்டெ அழைச்சிட்டுப்
போனரு. ஏற்கனவே சின்னவரோட மவ்வேம் கார்த்தேசு அத்தானக் கொண்டு போயிக் காட்டுன டாக்கடருங்றதால
அவரெ பத்தி நல்லாவே தெரிஞ்சிருந்துச்சு பெரியவருக்கு. அவர்ரப் போயிப் பாத்ததுமே பெரியவருக்கு
ஒரு நம்பிக்கெ வந்துப்புடுச்சு. எப்படியும் மவ்வேன் கொணமாயிடுவான்னு. ஆன்னா அவரு சந்தானம்
அத்தான ஒரு பார்வே பாத்துப்புட்டு, "நாமாளும் இதெ கொணம் பண்ணலாம். ஒரு மாசத்துக்கு
மேல ஆவும். ஏம் அவ்ளோ காலத்துக்கு காலப் போட்டுக்கிட்டு ரணம் பண்ணிட்டு? தெற்குவீதியில
கம்பீரபாண்டியன்னு ஒரு தோலு டாக்கடரு. நமக்குத் தெரிஞ்ச ஆளுத்தாம். சீட்டெழுதித் தர்றேம்.
ஒரே வாரந்தாம். ஆளு பாத்தால போதும். கொணப்பாடு ஆயிடும்."ன்னு சொல்லிக் கெளப்பி
விட்டாரு.
பெரியவருக்கு ஒரே ஆச்சரியம். நாம்ம பெரிய
டாக்கடருன்னு நெனைச்சிட்டு இருக்குறே டாக்கடரே இதுல சீட்டெழுதிக் கொடுக்குறாம்ன்னா
வெசயம் ஏதோ இருக்குன்னு சட்டுன்னு வெளங்கிட்டாரு. வெளங்கிட்டதும் சுப்பு வாத்தியார்ரப்
பாத்து, "இதுக்குத்தாம்பீ! ஒன்னயும் ஒரு வார்த்தெ கலந்துக்கிட்டு அழைச்சாரது.
செருமம்ன்னு நெனைச்சுப்புடாதேம்பீ!"ன்னாரு பெரியவரு.
"இதுல என்னத்தாம் செருமம்? ஒரு ஆத்திர
அவசரத்துக்கு ஒதவாத ஒறவு ன்னா ஒறவு?"ன்னாரு பெரியவரு.
"மாமாத்தாம் சின்ன புள்ளையிலயும்
நம்மளத் தூக்கிச் சொமந்தது. இப்போ வயசுல்லாம் ஆயி வெவரம் தெரிஞ்ச பெற்பாடும் அதுக்கு
நம்மள தூக்கிச் சொமக்குறாப்புல ஆவுது!"ன்னு ஒரு வெத்துச் சிரிப்ப சிரிச்சது சந்தானம்
அத்தான்.
மூணு பேருமா, ஸ்ரீதரன் டாக்கடருசொன்ன
வெலாசத்துக்குப் போயி நின்னா, "இத்தென்ன மாமா! நம்மள பால்வினை நோயி டாக்கடருன்னு
போட்டிருக்கிற டாக்கடருகிட்டெ கொண்டாந்து நிப்பாட்டிப்புட்டே? எவனாச்சிம் நம்மளப்
பாத்தா நம்ம நெல என்னாவுறது? மொதல்ல கெளம்புவேம். நம்மட காலு என்ன கதிக்கு இருந்தாலும்
பரவாயில்ல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
"இந்த டாக்கடருங்க அப்பிடித்தாம்
தோலு நோய், பால்வினை நோயி ரண்டையும் பாப்பாங்க. ஒனக்கென்ன தோலு நோய்க்குத்தாம்
பாக்க வந்திருக்கேம். பால்வினை நோயிக்கு இல்லடாம்பீ! பேசாம இரு சித்தெ! காலு கொணப்பாடு
ஆயி மந்திரமும் யில்ல, தந்திரமும் யில்லங்றதெ ஒமக்கு நிரூபணம் பண்ணியாவணும்! பங்காளிப்
பயலுவோ ஒண்ணா இருப்பீங்கன்னு பாத்தா, அப்பங்காரனெ மாதிரிக்கி அடிச்சிட்டு நின்னா ன்னடா
பண்ணுறது?"ன்னு சமாதானம் பண்ணி அழைச்சிட்டுப் போயி சந்தானம் அத்தான காட்டுனா,
கம்பீரபாண்டியரு டாக்கடரு, "ஒண்ணும் கவலப்படுறதுக்கில்லே. எழுதித் தர்ற மருந்து
மாத்திரைகள ஒரு வாரத்துக்குச் சாப்புட்டுட்டு வாங்க. கொணப்பாடு ஆயிடும்!"ன்னாரு.
அம்புட்டுச் சுலுவா பாத்ததும் முடிஞ்சது வைத்தியம் ஸ்ரீதரன் டாக்கடரு சொன்னாப்புல.
டாக்கடரு எழுதித் தந்த மருந்து மாத்திரைகள
வாங்கியாயிடுச்சு. "என்னாம்பீ! இந்த டாக்கடரும் ஊசில்லாம் போடாம மாத்திரை மருந்துகளா
எழுதித் தர்றாரே? நீயி அழைச்சாந்து காட்டுற டாக்கடருமாருக எல்லாம் ஒருத்தரும் ஊசி போடுறாப்புல
இல்லீயே? இந்த மாதிரி டாக்கடருமார்களா பாத்துததாம் சின்ன புள்ளைகள அழைச்சாந்து காட்டணும்.
அதுங்கத்தாம் ஊசின்னா அன்னா பயம் பயப்படுதுங்க!"ன்னாரு பெரியவரு. அதெ சொல்லிப்புட்டு
ஒடனே சந்தானம் அத்தான்கிட்டெ, "கார்ர புடிடா! தொரக்குடிக்கும் உஞ்சினிக்கும்
போயிட்டுத்தாம் வூடு திரும்பணும்! ஒரே வேலையா இன்னிய பொழுதுக்குள்ள எல்லாத்தையும்
முடிச்சாவணும்! யம்பீ இருக்குறப்பவே காரியத்தெ முடிச்சிப்புடணும். யம்பீய இன்னொரு
நாளைக்கி அலைய வுடக் கூடாது!"ன்னாட்டாரு.
சுப்பு வாத்தியாரால ஒண்ணும் சொல்ல முடியல.
அவரு இந்தச் சோலிய முடிச்சி வுட்டுப்புட்டு வூட்டுக்குக் கெளம்பலாம்னு பாத்தாரு. வேற
வழயில்லாம தொரக்குடிக்கும், உஞ்ஞினிக்கும் போறாப்புல ஆயிடுச்சு. ரண்டு ஊரும் திருவாரூர்லேந்து
ஒண்ணு தெற்கால இருந்தா, இன்னொண்ணு வடக்கால இருக்கு. ரண்டு ஊரும் ரண்டு திக்குல, ரண்டு
துருவத்துல இருக்கு. ரண்டு ஊரு கோயிலுக்கும் போயி அங்க இருக்குற பூசாரிக்கிட்டெ இன்ன
வெவரம்ன்னு சொல்லி மந்திரிச்சி கயிறு, தாயத்து எல்லாத்தையும் வாங்கிக் கட்டிக்கிட்டு
வேலங்குடி வந்து சேர ராத்திரி பத்து மணிக்கு மேல ஆயிடுச்சு. அதுக்கு மேல எங்க திட்டைக்குக்
கெளம்பி வாரதுன்னு சுப்பு வாத்தியாரு மறுநாளு காலையிலத்தாம் கெளம்பி திட்டைக்கு வந்தாரு.
அந்த ராத்திரி முழுக்க சின்னவர்ரப் பத்தியும், சின்னவரோட மவ்வேன் கார்த்தேசு அத்தானைப்
பத்தியும்தாம் பேச்சு.
"இவ்வேம் சந்தானந்தாம் அந்தக் குடும்பத்தெ
தூக்கி நிறுத்தனாம். கொமாரும் தூக்கி நிறுத்தப் பாத்தாம். அந்த விசுவாசம் கொஞ்சம்
கூட யில்லாம இப்பிடில்லாம் பண்ணுறாம் பார்ரேம்!"ன்னு கண்ணுல தண்ணி வராத கொறையா
சொல்லிச் சங்கடப்பட்டுக்கிட்டாரு பெரியவரு. சுப்பு வாத்தியாரு அப்பிடில்லாம் இல்லன்னு
ரண்டு குடும்பத்தையும் சேத்து வைக்குறாப்புல பேசிட்டே கெடந்தாரு. அவரு காலங்காத்தால
திட்டைக்குக் கெளம்புறதுக்கு மின்னாடி சின்னவரு வூட்டுக்கும் ஒரு எட்டு வெச்சிட்டுத்தாம்
போனாரு. அதுல கொஞ்சம் மனவருத்தம் பெரியவருக்கு. அதுக்கு என்னத்தெ பண்ண முடியும்ன்னு
சுப்பு வாத்தியாரு அதெ கண்டுக்கிடல. அதே நேரத்துல சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தானுக்கு
இந்த மாதிரிக்கி ஒடம்பு முடியலன்னு சொன்னதும் சின்னவரோட மொகத்துல உண்டான சந்தோஷத்தெ
இன்ன மாதிரின்னு வெளங்கிக்க முடியல.
சந்தானம் அத்தானுக்கு மருந்து மாத்திரையைப்
போட ஆரம்பிச்ச ரெண்டாவது நாள்லேர்ந்து கொணம் காண ஆரம்பிச்சிது. கால்ல வடிஞ்ச சீழ்
நிக்க ஆரம்பிச்சி வலி இல்லாம போவ ஆரம்பிச்சிது. கொஞ்சம் கொணம் கண்ட உடனே திட்டைக்கு
வந்து மாமாங்காரனெ பாத்து சந்தானம் அத்தான் சொல்லிட்டுப் போச்சு, "நாம்ம மலையாள
மந்திரவாதியப் பாக்காம வுட்டுருந்தாலும் செரித்தாம், யப்பா கூடவே வந்து தொரக்குடிக்கும்,
உஞ்சினிக்கும் வேண்டிக்கிட்டு கயிறும், தாயத்தும் வாங்கித் தரலன்னா கொணம் கண்டிருக்காது!"ன்னு.
சுப்பு வாத்தியாரு அதுக்கு ஒடனே கேட்டாரு,
"ஏம்டா அப்போ டாக்கடரு கொடுத்த மருந்துக்கு ன்னாடா சொல்றேம்பீ?"ன்னு.
"அத்து காக்கா உக்கார பணம் பழம் வுழுந்த
கதெதாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
இவ்வேம் என்னடா கெராமத்து வழக்கத்துக்கான
வெளக்கத்தையே தெசை மாத்திச் சொல்றாம்ன்னு நெனைச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரு மேக்கொண்டு
அதெ பத்தி ஒண்ணும் சொல்லாம, "எப்பிடியோ கொணமாயி நல்ல வெதமா இருந்தா சரித்தாம்!
சாமியக் கும்புடுறது கூட செரித்தாம். மாந்திரீகம் மண்ணாங்கட்டின்னு மட்டும் போயி நிக்காதே!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ஒனக்கு மாந்திரீகம் மந்திர தந்திரம்லாம்
புரியாது மாமா! அனுபவிச்சத்தாம் தெரியும்! ஒனக்கு ஒரு காலத்துல நாமளே அதெ எப்பிடி நிரூபிக்கிறேம்
பாரு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான். சொல்லிப்புட்டு ஒரு வாரம் தங்குறாப்புல
வந்த சந்தானம் அத்தான், மூணாவது நாளே சென்னையில வேலையெல்லாம் கெடக்குதுன்னு கெளம்பிப்
போயிடுச்சு. பெறவு ஒரு பத்து நாளு கழிச்சி ஒரு ஞாயித்துக் கெழமையா வந்து கம்பீரபாண்டியரு
டாக்கடர்ர பாத்து மருந்து மாத்திரைகள எழுதி வாங்கிட்டுப் போனதுதாம். அதுக்குப் பெற்பாடு
காலுக்குன்னு எந்த வைத்தியமும் பண்ண தேவையில்லாத அளவுக்குக் கொணம் கண்டுப் போயிடுச்சு.
இந்தச் சம்பவத்துக்குப் பெறவு வேலங்குடி பெரியவரு குடும்பத்துக்கும், சின்னவரு குடும்பத்துக்கும்
வேலங்குடியிலேர்ந்து சென்னைப் பட்டணம் வரைக்கும் எந்த வெதமான பேச்சு வார்த்தையும்,
ஒறவும் இல்லாம அந்துப் போச்சுது. ரண்டு குடும்பமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரியோ,
அமெரிக்கா ரஷ்யா மாதிரியோ நடந்துக்கிட ஆரம்பிச்சாங்க. அதே நேரத்துல சந்தானம் அத்தான்
எந்தக் காரியத்தெ செய்யுறதா இருந்தாலும் சுப்பு வாத்தியார்ர கலந்துக்கிடாம செய்யாது.
அக்கா மவ்வேன் இப்பிடி இருக்குறதால ஒரு மரியாதைக்காக சுப்பு வாத்தியாரும் சந்தானம்
அத்தான கலந்துக்கிடாம எந்தக் காரியத்தையும் செய்யுறதில்லன்னு இவுங்க ரண்டு பேத்துக்கும்
இடையில நெருக்கமோ நெருக்கம்னு ஆயிப் போயிடுச்சு.
ஒவ்வொரு தடவெயும் சந்தானம் அத்தான் சுப்பு
வாத்தியார்ரப் பாக்க திட்டைக்கு வந்தா, "சின்னவரு பண்ண மந்திர தந்திரத்தெ நிரூபிக்க
வுட மாட்டேம்?"ன்னு கற்பூரத்த அணைச்சு சத்தியம் பண்ணாத கொறையா சொல்லிட்டுப்
போவும்.
காலச்சக்கரம் சொழல ஆரம்பிச்சப்போ, சந்தானம்
அத்தான் சொன்னபடி அதுக்கு நிரூபணத்தெ தர்ற மாதிரிக்கி பெரியவரு சாவு நடந்தப்போ சின்னவரு
வர முடியாதுன்னு அடம் பண்ணிட்டு இருந்தாருல்லா. மறுநாளு பெரியவருக்குப் பால் தெளியல்லப்போ
சந்தானம் அத்தான் சுப்பு வாத்தியார்கிட்டெ சொன்னுச்சு, "அன்னிக்கு நாம்ம சொன்னது
ஞாபவம் இருக்கா மாமா!"ன்னு.
"ன்னத்தெ சொல்ல வாறேன்னு புரியலடாம்பீ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதாங் மாமா! நம்ம காலு சீழு வடிஞ்சி
கஷ்டப்பட்டுக் கொணமானப்போ சொன்னேம்ல. இத்தெல்லாம் சித்தப்பாவோட மந்திர தந்திர வேலன்னு.
அத்து அத்தோட வேலயில்லன்னா யப்பாவோட சாவுக்கு வர்றதில்ல ன்னா இருக்கு? கண்டிஷனா அத்து
அத்தோட வேலத்தாம் மாமா! மலையாள மாந்திரீகன் சொன்னாம் மாமா! இப்பிடி வேல பண்ணுறவனுவோ
எந்த வூட்டுக்கு அந்த வேலையப் பண்ணுனாலும் அந்த வூட்டுக்குச் சாவு காரியத்துக்கு வார
மாட்டான்னு. அப்பிடி வந்தா அவ்வேம் ரத்தம் கக்கிச் சாவான்னு சொன்னாம் மாமா. பாத்தீயா
மாந்திரீகன் சொன்னது உண்மையா போச்சு! அத்து நம்மக் குடும்பத்துக்கு எதுர்ப்பா மந்திர
தந்திரத்துல எந்த வேலையையும் செய்யலன்னா ஏம் வாராம இருக்கணும்? பண்ண அத்தனெ வேலையும்
அத்தோட வேலத்தாம். வந்தா செத்துப் போயிடுங்றது அதுக்குத் தெரியும். அதாங் வரலே!"ன்னுச்சு
சந்தானம் அத்தான்.
இந்த வெளக்கத்துக்கு என்ன பதிலே சொல்றதுன்னு
சுப்பு வாத்தியாருக்குத் தெரியல. அவரு மட்டுமா? கெராம சனமே, ஒறவுக்கார சனமே போயி நின்னுத்தாம்
சின்னவருகிட்டெ சாவு காரியத்துக்கு வந்து தலையக் காட்டிட்டுப் போயிடுங்கன்னு சொல்லிப்
பாத்துச்சு. அவரு வாரல. அதுக்குப் பின்னால இப்பிடி ஒரு வெளக்கமாவும், அத்து இம்மாம்
பெரிய பெரச்சனையில பெளவுல கொண்டு போயி வுடும்ன்னு யாரு கண்டா?
இப்பிடியா வேலங்குடி பெரியவரு, சின்னவரு
குடும்பத்துல மொத தலைமுறையில சின்னதா தொடங்குன விரிசல், ரண்டாம் தலைமுறையில பாறாங்கல்லு
விரிசல் கண்டு ரண்டா பொளந்தாப்புல ஆயிடுச்சு. ஒடைஞ்சு பொளந்த பிற்பாடு ஒண்ணு ரண்டுதானே
எப்பவும். ஒடைஞ்ச ரண்டும் ரண்டு திக்குல கெடந்தாலும் பரவாயில்ல. ஒண்ணுக்குள்ள ஒண்ணு
மோதிக்க ஆரம்பிச்சதுங்க. அதெ தொடர்ந்து சின்னவரு குடும்பத்துல விசயத்துல நைச்சியமா
சில வேலைகள பெரியவரு குடும்பத்து சனங்க பண்ணுறதும், பெரியவர குடும்பத்து விசயத்துல
சின்னவரு குடும்பத்துச் சனங்க அதெ போல நைச்சியமா சில காரியங்கள பண்ணி வுடுறதுன்னு
தலைமொறை தலைமொறைய நடக்குற சம்பவங்களா அது ஒரு தொடர்கதையா ஆவ ஆரம்பிச்சுது.
*****
No comments:
Post a Comment