22 Jun 2020

பொத்துகிட்டு ஊத்துற காலு!

செய்யு - 485

            பட்டணத்துல ஒரு காலி மனைய வாங்கிப் போட்டா மாசத்துக்கு ஒரு தவாவது போயி பாத்துட்டு வந்துடணும். அப்படி இல்லன்னா காலி மனை காலி மனையா இருக்காது. அந்த மனையை யாரும் வந்து பாக்காததப் பாத்துட்டு காலி மனையில எவனாச்சி ஒருத்தன் ஒரு குச்சிலைப் போட்டு கட்டிக்கிட்டு தன்னோட மனைன்னு சொல்லிப்புடுவாம். அந்த விசயத்துல சென்னைப் பட்டணங்றது வெனைக்கார பயல ஊரு. காசைப் போட்டு வாங்கிப் போட்ட மனைய கண்ணுல வெளக்கெண்ணெயை ஊத்திக்கிட்டுப் பாத்துக்கிட்டு இருக்கணும். அப்பிடி பாத்துகிட்டே இருந்ததாம் மனை வாங்கிப் போட்டவனுக்குச் சொந்தமா இருக்கும். அதால பட்டணத்துல மனை வாங்கிப் போட்டா, அது காலி மனையாவே இருக்கா, எவனாச்சும் குச்சில கட்டி யாரோட மனையா ஆயிடுச்சுன்னா நேரம் கிடைக்கறப்போ எல்லாம் அது மேல ஒரு கண்ண வெச்சுக்கிட்டு, அதெ போயிப் பாக்குறது ஒரு வழக்கம். அப்பிடி திருவேற்காட்டுல கார்த்தேசு அத்தான் வூட்டுக்குப் பக்கத்துல வாங்கிப் போட்டிருக்குற ப்ளாட்டுகள அந்தப் பக்கமா போறப்ப சந்தானம் அத்தான் ஒரு பார்வெ பாத்துட்டு வரும்.
            சந்தானம் அத்தான் போன நேரம் அந்த ப்ளாட்டுல கெடந்த குங்குமம் அப்பியிருந்த எலுமிச்சம் பழத்தெ ஒண்ண, என்ன ஏதுன்னு தெரியாம, கீழே கெடந்த அதெ கவனிக்காம எடது கால்ல மிதிக்குறாப்புல ஆயிடுச்சிடுச்சு. காலி மனைன்னாலும் நாளைக்கு வூடு கட்டிக் குடி போற மனைங்றதால மனைக்குள்ள காலடி எடுத்து வைக்குறப்போ செருப்புக் காலோட அடியெடுத்து வைக்கக் கூடாதுங்றது ஒரு பழக்கம். அந்தப் பழக்கத்தால மனைக்குள்ள காலடி எடுத்து வைக்குறதுக்கு மின்னாடி கால்ல போட்டிருந்து பூட்டையெல்லாம் கழட்டி வெச்சிட்டு, சுத்திலும் போயி ஒரு பார்வெ பாத்ததுல கால்ல மிதிபட்டுடுச்சு அந்தப் பழம். பட்டணத்துல பக்கத்துல ஒரு மனை காலியா இருந்தா போதும், சுத்தி இருக்குற வூடுகள்லேந்து அந்த மனையப் பாக்க கண்டதையும், கழியதையும் தூக்கி எறியு ஆரம்ப்பிச்சிடுவாங்க. அப்படி எறிஞ்ச எலுமிச்சம் பழத்தத்தாம் ஒண்ணு மிதிச்சிப்புட்டதா மொதல்ல நெனைச்சது சந்தானம் அத்தான். நாளாவ நாளாவ அந்தப் பழத்த மிதிச்ச அதோட எடது கால்லேந்து அங்கங்க பொத்துக்கிட்டுச் சீழா வடிய ஆரம்பிச்சிடுச்சு. கால எடுத்து அந்தாண்ட இந்தாண்ட வைக்க முடியல. வலி உசுரு போகுது.
            என்னடா இப்பிடி திடீர்ன்னு நல்லா இருந்த காலு பொத்துக்கிட்டு வடியுதுன்னு டாக்கடருகிட்டெ போயி ஊசி போட்டு மருந்து வாங்கிச் சாப்புட்டா வலிதாம் கொஞ்சம் கொறைஞ்ச மாதிரி இருக்குதே தவிர சீழா வடியுறது நின்ன பாடில்ல. நல்லா இருந்த ஒடம்பு இப்பிடியானா எப்பிடியிருக்கும் சொல்லுங்க. ஏற்கனவே சாதாரண சளி, காய்ச்சல்ன்னாலும் அத்து சின்னவரு குடும்பம் பண்ற மந்திர தந்திர வேலைன்னு நம்பிகிட்டு இருக்குற பெரியவரோட குடும்பத்துக்குச் சனத்துக்கு இப்பிடி ஒண்ணு நடந்தா என்ன கதிக்கு ஆளாவும்? தனம் அத்தாச்சிக்கு மருந்து மாத்திரைக்குக் கட்டுபடலன்னதுமே பயம் கண்டுப் போச்சு. இதெ வந்துப் பாத்துப்புட்டு பெரியவரோட சனத்துக்கும் ஆளாளுக்கு பீதி கண்டு போச்சு. எல்லாம் சின்னவரு குடும்பத்தோட வேலத்தான்னு ஆளாளுக்கு அடிச்சிச் சொல்ல ஆரம்பிச்சிட்டுங்க.
            அப்பத்தாம் சந்தானம் அத்தானுக்கு திருவேற்காட்டுல வாங்கிப் போட்ட ப்ளாட்டுக்குப் போனப்போ எலுமிச்சம் பழத்த மிதிச்ச ஞாபவமும் வருது. அதெ சந்தானம் சொன்னதும் அதெ வந்துப் பாத்த சனங்க எல்லாமும் "கழிப்புக் கழிச்ச எலுமிச்சம் பழத்த மிதிச்சிட்டீயேடா! அதாங் இப்பிடி ஆயிடுச்சு!"ன்னு ஒப்பாரிய வைக்க ஆரம்பிச்சிட்டுதுங்க. சந்தானம் அத்தான் கெராமத்துலேந்து வளந்து பட்டணத்துக்கு போன ஆளுங்கறதால அது நம்புறதா, நம்பாமா இருக்குறதாங்ற சந்தேகம். சந்தேகத்துல நம்பவும் முடியாம, நம்பாம இருக்கவும் முடியாம ரெண்டுக்கும் இடையில கெடந்து அல்லாட ஆரம்பிச்சிது.
            மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தேகம் இருந்தாலும், "அப்பிடில்லாம் ஒண்ணுமில்ல!"ன்னு வாயி வார்த்தையா சொன்னுச்சு சந்தானம் அத்தான். "அப்பிடின்னா அந்த மனைய இன்னொரு தவா போயிப் பாத்துப்புட்டா வெவரம் தெரிஞ்சிடும்!"ன்னு சனங்க எல்லாம் சொல்ல, செரின்னு சனங்க கெளம்பி திருவேற்காட்டுல சந்தானம் அத்தானோட ப்ளாட்டுல போயிப் பாத்தா அங்கங்க குங்குமம் அப்புன எலுமிச்சம் பழங்களா கொட்டிக் கெடக்குது. அந்த பழங்க மேல கால வெச்சிப்புடாம சூதானமா அந்தாண்ட இந்தாண்ட நடந்துப் போயி, சில எடங்கள்ல மண்ண கெளறிப் பாத்தா தகடுகளா கெடக்குது. எல்லாம் கார்த்தேசு அத்தானோட வேலையத்தாம் இருக்கும்ன்னு தெரியுது எல்லாத்துக்கும். தெரிஞ்சி என்னத்தெ பண்ணுறது? இதெ கேட்டா, வம்பு வைக்குறதுக்கு இதுதாங் நல்லா சாக்குன்னு வம்பையில்லா வைக்கும். ஏற்கனவே திருவேற்காட்டுல இவுங்களோட சண்டெ பிரசித்தமா போயி, ஒருத்தருக்கொருத்தரு அநாவசியமா சண்டெ வைக்காதீங்கன்னு, ஒருத்தருக்கொருத்தரு அநாவசியமா பேசிட்டு நிக்காதீங்கன்னு குடியிருப்போர் சங்கத்துச் சார்பா சொல்லிப்புட்டாங்க. இப்போ எதாச்சிம் சின்னதா பேச்சு வைச்சாலும் கார்த்தேசு அத்தானுக்கு அத்து ரொம்ப வசதியால்லா போயிடும்ன்னு முள்ள முள்ளால எடுக்குறதுன்னு சனங்க முடிவெ பண்ணிக்கிடுச்சுங்க.

            பெரியவரோட குடும்ப சனத்துக்கு எல்லாத்துக்கும் பயம் வந்துப் போச்சுது. அந்தப் பயத்துல, நாமளும் புடிப்போம் ஒரு சாமியார்ரன்னு முடிவெ பண்ணிக்கிட்டு, புட்றா சாமியார்ர ஒருத்தன்னன்னு பிடிச்சி வந்தா, அவ்வேம் பாட்டுக்கு ஏகத்துக்கும் பணத்தெ வாங்கிக்கிட்டு இந்த பூசையப் பண்ணணும், அந்தப் பூசையப் பண்ணணும், கழிப்புக் கழிக்குறதுக்கு இம்மாம் காசு ஆவணும், தோஷத்தெ கழிக்கிறதுக்கு இம்மாம் காசு ஆவும் பணத்தெ பசு மாட்டு காம்போடு சேத்து பால கறக்குறவேம் போல கறந்துகிட்டு இருக்காம். ஆன்னா எத்து பண்ணியும் சந்தானம் அத்தானோட காலு சரியாவுறாப்புல தெரியல. அதுக்கும் போயி இந்தச் சனங்க எல்லாம், எல்லாம் பண்ணியும் இப்பிடி இருக்கே சாமியாருன்னா, மந்திர வேல அந்த அளவுக்குப் பெலமா இருக்குறதா சொல்லி, அதுக்குத் தகுந்தாப்புல இன்னும் பெலமா மந்திரத்தையும், பூசையையும் போடணும்னு அவ்வேம் பாட்டுக்குக் காசு பணத்தெ கறக்குறாம்.
            அந்தச் சாமியாரு பாட்டுக்கு கழிப்பக் கழிக்குறேன்னு எலுமிச்சம் பழத்த லோடு லோடா வாங்கி சென்னைப் பட்டணம் முழுக்க ஒரு எடம் பாக்கியில்லாத அளவுக்கு அதெ வெட்டி உள்ளார குங்குமத்தெ அப்பிடி நாலா தெசைக்கும் வீசி எறியுறாம். எந்நேரத்துக்கும் ஓம் ரீம் க்ரீம்ன்னு மந்திரத்தையும் பொகைச்சலையும் போட்ட படி இருக்குறாம். சந்தானம் அத்தான் அரும்பாக்கத்துல வாடகையிக்கு இருந்த வூடே தீப்பிடிச்சாப்புல எந்நேரத்துக்கும் பொகைச்சலா போயி அத்து வேற ஏரியா முழுக்கப் பேச்சாவுது. பெரியவரோட குடும்பத்து சனங்க ஒண்ணு வுடாம எல்லாம் சேர்ந்து ஆன வரைக்கும் சாமியாடிப் பாத்துச்சுங்க. திருவேற்காட்டு மாரியம்மனுக்குக் கஞ்சி ஊத்துறதா, அங்கப் பிரதட்சணம் பண்ணுறதா, மடிப்பிச்சை எடுத்துட்டு வர்றதா, தாலி குண்டு வாங்கிக் கோத்து விடுறதா வேண்டாத வேண்டுதல்கள் கெடையாது.
            சந்தானம் அத்தானுக்குப் பொத்து வடியுற காலோட வேல நடக்குற சைட்டுக்குப் போயி பாத்துட்டு வர்றது உசுரு போற வேதனையா இருக்கு. சைட்டுக்கு அப்பைக்கப்போ போயி பாக்கலன்னா வேல நடக்காது. வேல நடக்கலன்னா ஒத்துக்கிட்டு செஞ்சு முடிக்குற வேலைக்கு நேரா நேரத்துக்கு காசிய வாங்க முடியாது. அப்பிடி காசிய வாங்க முடியலன்னா வாரா வாரம் சனிக்கெழம சம்பள பணத்தெ பட்டுவாடா பண்ண முடியாது. சம்பள பணத்தெ ஒரு நாளு தள்ளி வெச்சாலும் போதும், வேலைக்கு வந்துக்கிட்டு இருக்கற ஆளுங்க வேற ஒரு மொதலாளியப் பாத்துட்டுப் போயிட்டே இருப்பாம். என்ன பண்ணுறதுன்னு ஒண்ணும் புரியாம, கால இந்த மாதிரி வெச்சுக்கிட்டு போறதும் செருமமா இருக்கு சந்தானம் அத்தானுக்கு. கெராமம்ன்னா ஒத்த மாடி வூடு, போனோமா பாத்தோமான்னு வாரலாம். பட்டணத்துல எல்லாம் அடுக்கு மாடி வூடு வேறயா, மேல ஏறி, கீழே எறங்கிப் பாக்குறதுக்குள்ள, அதுவும் அந்தக் கால வெச்சிக்கிட்டு சந்தானம் அத்தானுக்கு உசுரு போயி உசுரு வந்தாப்புல இருக்கு. சலம் ‍கோத்துக்கிட்டு வெளியில வர்ற காலோட வேதனையப் பத்திச் சொல்லவா வேணும்?
            ஆறு மாச காலம் வரைக்கும் சந்தானம் அத்தானோட கால்ல எந்த வெதமான முன்னேத்தமும் இல்ல. நரக வேதனைய அனுபவிக்குறாப்புல இருக்கு. முழங்காலு கீழே வரைக்கும் பொத்து வடியாத எடமே இல்லேங்ற அளவுக்கு அங்கங்க பொத்து வடியுது. அப்பிடிப் பொத்து வடியுற காலோட அலைஞ்சிட்டுக் கெடந்துச்சு. யேவாரத்துல அது ஒரு சிக்கல். கொஞ்சம் வுட்டுப்புட்டா அந்த எடத்தெ எவனாச்சிம் புடிச்சிப்புடுவாம். பெறவு அந்த எடத்தெ பிடிக்குறது சாமானியம் இல்ல. அதால ஒரு தேவை, விஷேசம்னு ஊருக்கு வந்தாலும் ஒரு பகல் இருந்தா பெரிய விசயம். வந்த ஒடனேயே கால்ல சக்கரத்தெ கட்டிட்டு பறந்துடும் திருவேற்காட்டுச் சனங்க.
            வலி அதிகமாவுறப்பல்லாம் சந்தானம் அத்தான் டாக்கடருகிட்டெ போறது, மருந்து மாத்திர சாப்புடுறதுன்னு இருந்துச்சு. கொணம் கண்ட பாடில்ல. சாமியாரு பண்ணுன பூசையாலயும் சரியாவுறாப்புல தெரியல. மெல்ல மெல்ல சந்தானம் அத்தானோட மனசுல ஒரு மாற்றம் உண்டாவ ஆரம்பிச்சிது. சித்தப்பங்காரனான சின்னவரு பண்ண வேலையிலத்தாம் காலு இப்பிடி ஆயிடுச்சுன்னு நெனைப்பு வர ஆரம்பிச்சிது. அந்த நெனைப்பு வந்த ஒடனே அத்து வைத்தியம் பாக்குறதெ நிப்பாட்டிப்புட்டு. வருஷா வருஷம் சபரிமலைக்குப் போற ஆளில்லையா. கெளம்பி அதுக்குத் தெரிஞ்ச சபரி மலெ சாமிங்ககிட்டெ வெசாரிச்சிக்ககிட்டு, மலையாள மாந்திரிகன் ஒருத்தனைப் போயிப் பாத்துச்சு.
            அவனெப் போயிப் பாத்தா ஒங் குடும்பத்துக்கு பரம்பர பரம்பரையா பக்கத்துல இருக்கிறவேம் பண்ணுன வேலத்தாம் இத்து, இந்த வேலையப் பண்ணுனவேம் இனுமே ஒங் குடும்பத்தோட எந்தத் தொடர்பும் வெச்சிக்கிட மாட்டாம், ஒங் குடும்பத்துல ஒரு சாவே வுழுந்தாலும் அதெ வந்துப் பாக்க மாட்டாம், அப்பிடிப் பாத்தாம்ன்னா அவ்வேம் சாவு அன்னிக்கே உறுதியா நடந்துப்புடும், தகடுன்னா தகடு பெருந்தகடா வெச்சிருக்காம், மலையாள பகவதிகிட்டெ கேட்டு அந்தத் தகட எடுத்தாத்தாம் ஆச்சு, இல்லன்னா காலயே எடுக்குறாப்புல ஆச்சு, தகட எடுக்கணும்ன்னா பத்தாயிரத்து ரூவா ஆவும்ன்னு பயமுறுத்தி பணத்தெ கறக்குறதுல நிக்காம். பாஞ்சு வருஷ காலத்துக்கு மின்னாடி பத்தாயிரத்து ரூவாங்றது லட்ச ரூவாயிக்குச் சமானம். இவ்வேம் என்னடா இம்புட்டுக் காசியக் கேக்குறான்னு அவ்வேம் கூட ஒரு பேரத்தப் பேசி ஆறாயிரத்து ரூவாயக் கொடுத்து, தகடெ எடுத்து கால்ல எப்படியாச்சிம் கொணப்படுத்துடான்னு அவ்வேம் கால்ல வுழுவாத கொறையா சந்தானம் அத்தான் கெஞ்சிட்டு வந்துச்சு. 
            ஆறெழு மாசமா சந்தானம் அத்தான் இப்பிடிச் சீழு வடியுற காலோட கஷ்டப்படுற சேதி வேலங்குடியில பெரியவருக்குத் தெரிஞ்சதும், ஒரு வார காலம் தங்குறாப்புல அவரு சந்தானம் அத்தான கெளம்பி வேலங்குடிக்கு வரச் சொல்லிட்டாரு. அங்க சந்தானம் அத்தான வாரச் சொல்லிட்டு, இங்க திட்டைக்கு வந்து சுப்பு வாத்தியார்ர கெளப்பிக்கிட்டு தொரக்குடிக்கு வேண்டிக்கிடறதா? உஞ்சினி அய்யனாருக்கு வேண்டிக்கிடறதா?ன்னு யோசனெ கலந்துக்கிட்டாரு. சுப்பு வாத்தியாரு ஒரே அடியா அடிச்சாரு. "தெய்வத்தெ கும்புடுறதுக்கு மின்னாடி இதுக்கு சரியான வைத்தியம் பண்ணியாவணும். பெறவு வேணும்ன்னா எந்த தெய்வத்தெ வேணம்னாலும் கும்புடுங்க!"ன்னு.
            அதுக்குப் பெரியவரு கேட்டாரு, "சென்னைப் பட்டணத்துல இல்லாத டாக்கடருமாருகளா? அஞ்ஞயே காட்டியாச்சு. கொணப்பாடு ஆன கதியா இல்ல. நமக்கும் கிட்டாம் மேலத்தாம் சந்தேவமா இருக்கு. இந்த வேலயப் பண்ணுற பயத்தாம் அவ்வேம். நமக்குக் குடும்பத்துக்கு இப்போ ஆணிவேரே சந்தானம்தான்னே. மொத்தக் குடும்பத்தையும் ஆளாக்கி வுட்டுச் சொமக்கிறவேம் இல்லையா! அதால இதெ சாமானியா எடுத்துக்கிட முடியாதும்பீ! நாலெழுத்து படிச்சேங்ற நெனைப்புல நீஞ்ஞ வெவரம் புரியாம பேசுவீயே! அத்தோட அந்தப் பயெ இஞ்ஞ நாவங்குடி பக்கத்துல காடுவெட்டிகிட்டெ ஒரு சாமியாரு பயலுகிட்டெ வந்துட்டுப் போறதா கேள்வி. மந்திரம் பண்ணவம்கிட்டயே நாமளும் போவக் கூடாது, பலிக்காது!"ன்னு.
            "இந்தப் பேச்சையெல்லாம் சந்தானம் வாரட்டும். அவனெயும் கலந்துக்கிட்டு வெச்சிப்போம்! ஒண்ணும் சாமிட்டெ போறதுன்னா சாமியோட நிப்பாட்டிக்கிடணும். ஏன்னா சாமித்தாம் பெரிசு. சாமிக்குக் கட்டுப்புட்டுச் சாமிக்குக் கீழத்தாம் மந்திரவாதில்லாம். மந்திரவாதிககிட்டெ போறதெல்லாம் நல்லதில்ல! சாமிக்கிட்டெ போற, அதுவும் டாக்கடருகிட்டெ காட்டுன பிற்பாடுதாம். மனசு தெம்புக்குச் சாமிககிட்டெ போறதோட நிப்பாட்டிக்கிடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுவும் சரிதாம்!"ன்னு பெரியவரு சொன்னதோட, ரண்டு பேரும் சந்தானம் அத்தான் வரவெ எதிர்பாத்துட்டு இருந்தாங்க.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...