20 Jun 2020

எந்திர தந்திர மந்திராஸ்!

செய்யு - 484

            தம் மகெ ஓடிப் போனதுக்குக் காரணம் பெரியவரு குடும்பங்றதுல சின்னவரு அசைக்க முடியாத நம்பிக்கையில இருந்தாரு. பெரியவரு வூட்டுல செஞ்ச பில்லி சூன்யமோ, தகடு வெச்ச வேலையோத்தாம் தன்னோட மவளெ ஓட வெச்சதா ஊரு ஒலகத்துல சொந்த பந்தத்துலன்னு ஒரு எடம் பாக்கி வுடாம அவரு பேசித் திரிஞ்சாரு. சின்னவரு பண்ண இந்தக் காரியத்துக்குப் பெரியவரு பாக்குறவங்கிட்டல்லாம் பதிலெச் சொல்ல வேண்டியதா இருந்துச்சு.
            "நமக்கென்ன மந்திரம் தெரியுமா? தந்திரம் தெரியுமா? பில்லி சூன்யம் வைக்குறவங் குடும்பமே சூன்யமல்லா போயிடும்! நாம்ம அப்பிடில்லாம் செய்யுற ஆளா? தகடு வெச்சவங் குடும்பம்ல்லாம் எந்தக் காலத்துல ந்நல்லா இருந்திருக்கு? எங் குடும்பத்துக்கு ஏம் அந்த வேண்டாத வேல? ஏவலும் வைக்கப்படாது. வெச்சா அத்து பண்ண வேண்டியதெ பண்ணிப்புட்டு பண்ணவங் குடும்பத்தெதானே சுத்தும்! கோயிலு கொளத்துக்குப் பக்தியா போற ஆளாச்சே தவுர நாம்ம என்னிக்கு துஷ்ட தெய்வங்ககிட்டெ போயிருக்கேம்? தெய்வத்துக்கிட்டெ போயி நீயித்தாம் கதின்னு கால்ல விழுவுறவேம் ஏம் பேயி, பிசாசுகிட்டெ போயி நிக்கப் போறாம்? மாந்திரீகம் தாந்திரீகம்ல்லாம் நமக்குப் பழக்கமெ கெடையாது. நாளைக்கி எங் குடும்பம் ந்நல்லா இருக்கணுமா ன்னா?"ன்னு அதுக்குப் பாக்குறவங்கிட்டெயெல்லாம் பதிலச் சொன்னாரு பெரியவரு.
            பெரியவரு சொல்றதெ கேட்டு வெச்சி கெராமத்துல சில ஆளுங்க சின்னவர்ர சமாதானம் பண்ணப் பாத்தாங்க. சமாதானத்துக்கு அடங்குற ஆளா சின்னவரு? பொண்ணு ஓடிப் போனதுல அவரோட சித்தம் கலங்கிச்சோ என்னவோ தெரியல மந்திரம் தந்திரம்ன்னு எறங்க ஆரம்பிச்சிட்டாரு. வேலைக்குப் போற ஊர்கள்ல காளி கோயிலு இருக்குறதா கேள்விப்பட்டுட்டா போதும் மொத வேலையா அங்கப் போயி அங்க இருக்குற கொளத்துல விழுந்து குளிச்சிப்புட்டு, ஈரத்துணியோட வுழுந்துக் கும்புட்டுப்புட்டு அரைக்கிலோ மொளகாயை வாங்கி எரிச்சி வுட்டுப்புட்டுத்தாம் மறுவேல பாக்க ஆரம்பிச்சாரு. எவனாவது குடுகுடுப்பைக்காரன் கண்ணுல பட்டுட்டா போதும் அவனுக்கு பழம் வேட்டி சேலையெல்லாம் எடுத்துக் கொடுத்து குறி கேப்பாரு. அவ்வேம் சொல்றபடி எலுமிச்சம் பழத்த மந்திரிச்சி தலையச் சுத்தி பெரியவரு வூட்டப் பாக்க எறியுறதோ, நாலு கோழியப் பிடிச்சிட்டுப் போயி ஊருக்கு நாலு ‍தெசையிலயும் காவு கொடுத்துட்டு வர்றதோ சொன்னதெ சொன்னபடிக்குச் செய்ய ஆரம்பிச்சாரு. இதால வூட்டுல இருந்த பழந்துணியோட புதுத்துணியும் குடுகுடுப்பைக்காரனுக்கு சொந்தமாவ ஆரம்பிச்சிது.
            சாமியாரு எவனாச்சும் கண்ணுல பட்டுட்டா போதும். மந்திரிச்ச தகடு வாங்காம அந்தாண்ட இந்தாண்ட நகர மாட்டாரு சின்னவரு. அதெ வாங்கிட்டு வந்து சாமியாரு எப்பிடிப் பொதைக்கச் சொன்னானே அந்தப் படிக்குப் பொதைப்பாரு. இப்பிடி பெரியவரோட வேலி இருக்குற பக்கமா பாத்து, வேலிக்கால்ல கொஞ்சம் தாண்டுனாப்புல பெரியவரோட எடத்துல வராப்புல அத்தனெ தகடுகளப் பொதைச்சு வெச்சாரு. செல சமயங்கள்ல எல்லா சனமும் தூங்குன ராப் பொழுதுல, மெனக்கெட்டு முழிச்சிருந்து, திருடனப் போல, சாமியாரு சொன்னாங்றதுக்காக வேலி தாண்டிப் போயி பெரியவரோட கொல்லையில போயி பொதைச்சிட்டு வர்றதும் உண்டு.
            சின்னவரு பொதைக்குற தகடுகளையெல்லாம் ஒரு யூகம் பண்ணி அங்கங்க கண்டுபிடிச்சி அதெ பொறுக்கியெடுத்து கண்ணு காணாத எடத்துல கொண்டு போயி எறியுறதுதாங் பெரியவரோட வேல. அப்பிடி அவரு எறிஞ்சிட்டு வந்த தகடையும், இரும்பையும் சேர்த்து வெச்சிந்தார்ன்னா வேலங்குடியில ஒரு இரும்பு பேக்கடரியோ, தகரப் பேக்கடரியோ வெச்சிருக்கலாம். வெளங்காதவரு அதெ கொண்டு போயி தூர எறிஞ்சிட்டுக் கெடந்தாரு. சமயத்துல இந்த வெசயத்துல ரண்டு குடும்பத்துக்கும் வாயிச் சண்டையா ஆயிப் போவும். சுத்தி வேடிக்கைப் பாக்குற சனங்கத்தாம் சமாதானம் பண்ணி வூட்டுக்குள்ளார போவ வைக்குமுங்க. சமயத்துல இந்த சண்டை நாட்டாமைக்காரரு வரைக்கும் போறதுண்டு.
            பொண்ணு ஓடிப் போன விசயத்துல அவுங்க நடந்துகிட்டெ மொறைய நெனைப்புல வெச்சுக்கிட்டு நாட்டாமெகாரரு சொல்லுவாரு, "ஒஞ்ஞளுக்கும் கெராமத்துக்கும் ன்னா சம்பந்தம்? கெராமம்ன்னா கெராமத்த மதிக்கணும். மதிக்கிறது கெடையா. பெறவு ன்னத்தா பஞ்சாயத்தப் பண்ணுறது? போயி போலீஸ் டேசன்லயே பஞ்சாயத்த வெச்சுக்குங்க. கெராமத்துல யாரும் கேக்குறாப்புல யில்ல!"ன்னு அலுத்தாப்புல சொல்லிப்புடுவாரு. பெறவு ரண்டு மூணு நாளைக்கு இந்தக் குடும்பம் அந்தக் குடும்பத்தெ பேசுறதாவும், அந்தக் குடும்பம் இந்தக் குடும்பத்தெ பேசுறாதவும் கெடந்து அடங்கிப் போவுமுங்க. இந்த அடக்கமெல்லாம் அடுத்த தகடு ‍வைக்குற வரைக்கும்தாம். அடுத்ததா எதாச்சிம் ஒரு தகடு வெச்சி கண்டுபிடிச்சிட்டா போச்சு மோசம். திரும்பவும் வாயிச் சண்‍டெ ஆரம்பமாயிடும். 
            ஒலக அளவுல அமெரிக்காரனும், ரஷ்யக்காரனும் ஒரு வழியா பனிப்போர கொஞ்சம் நிறுத்திக்கிட்ட சமயமா பாத்து, அதெப்படி ஒலகத்துல பனிப்போரு நிக்கலாமுன்னு ரண்டு குடும்பமும் வேலங்குடியில ஒலக அளவுல அதெ தொடர்ந்துகிட்டு இருந்தாங்க. என்னத்ததாம் இருந்தாலும் பெரியவரோட குடும்பத்தோட வளர்ச்சி அது ஒரு வகையா ஏறுமொகத்துல போனுச்சு. சின்னவரால நெலபுலங்க, மாடு கண்ணுகள பூர்ணி அத்தாச்சி ஓடிப் போன பெறவு சரியா கவனிக்க முடியல. அந்தச் சமயத்துல சுவாதி அத்தாச்சியோட வூட்டுக்காரரு மட்டும் துபாய்லேந்து பணத்தெ அனுப்பாம இருந்திருந்தார்ன்னா சின்னவரோட பொழைப்பு நாறித்தாம் போயிருக்கும். சின்னவரு பண்ண புண்ணியம் அவரு சம்பாத்தியம், ரண்டாவது மாப்புள்ளையோட சம்பாத்தியம்ன்னு பெரியவரோட குடும்பத்துக்குச் சமானாம அவராலயும் போட்டிப் போட முடிஞ்சது.

            நெலபுல விசயத்துல வெள்ளாமைக்கு வயல்ல ப்ளாட்டு பிடிக்கிறத வுட்டுப்புட்டாரு சின்னவரு. நெலபுலங்களையும் வித்துப்புட்டு ஏழெட்டு மா அளவுக்குச் சுருக்கிக் கொண்டாந்துப்புட்டாரு. வித்த நெலங்களையும் பெரியவருகிட்டெ விக்கக் கூடாதுன்னு நெலையா நின்னு, ஊரு ஒலகத்துல யாரெல்லாம் பெரியவருக்கு எதுப்பா இருக்காங்றதெ கண்டுபிடிச்சி கொடுக்குற காசி கம்மியா இருந்தாலும் பரவால்லன்னு வஞ்சனையா வித்து வெச்சாரு. பூர்ணி அத்தாச்சி சொடலய இழுத்துட்டு ஓடுனதுல வயக்காட்டு ஆளுங்கள வெச்சி வேல பாக்குறதுல விருப்பம் இல்லாம போயிட்டு சின்னவருக்கு. வெச்சிருந்த நெலபுலத்துலயும் பேருக்கு வெவசாயத்தப் பண்ணுறது, முடியாட்டிப் போனா தரிசு போடுறதுன்னு சின்னவரோட முழுக்கவனமும் பெரியவரு குடும்பத்துக்கு மந்திரம் பண்ணுறதுலயோ போனுச்சு.
            இப்பிடி நெலத்த தரிசா போட்டுருக்கானே தரித்திரம் புடிச்ச சம்சாரின்னு சின்னவர்ர ஊருல நாலு பேத்து அழிச்சாட்டியமா பேசிட்டுப் போனா, அவனெ பிடிச்சி வெச்சு, "தெகிரியம் இருந்தா நம்மளோட போட்டிப் போட்டுக்கிட்டு நீயும் ஒந் நெலத்தத் தரிசு போடுடா பாப்பேம்! எம்மட வயலு நாம்ம தரிசா போடுறேம், வெள்ளாம பண்ணுறேம், ஒஞ்ஞளுக்கு ன்னடா வந்துச்சு?"ன்னு எதிர்கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு. இவரு அப்பிடிப் பண்ண அலப்பறையில சின்னவர்ர கண்டா ஊருல எவனும் வாயைத் தொறக்குறதில்ல. அவரு நாலு பர்லாங் தூரமா போனதெ உறுதிப் பண்ணிக்கிட்டுத்தாம் எகத்தாளமா பேசிச் சிரிக்கிறது.
            சின்னவரு அத்தோட வுடல. இருந்த மாடு, கண்ணுகளையும் வித்துப்புட்டு பால்காரர்கிட்டெ பால்ல வாங்க ஆரம்பிச்சாரு. அதுலயும் ஒரு கண்டிஷனா பெரியவரு வூட்டுக்கு பாலு எடுக்காத பால்காரனா பாத்து வூட்டுல பால ஊத்திட்டுப் போறாப்புல செஞ்சிக்கிட்டாரு. சின்னவரு இப்பிடியெல்லாம் பண்றதெப் பத்தி பெரியவருகிட்டெ கேட்டா, அவரு சொல்வாரு, "வஞ்சகம், மாந்திரிகம் பண்ணுனா மொதல்ல கேக்கும்தாம். அத்து சொன்னபடிக்கிக் கேட்டுப்புட்டு எவ்வேம் பண்ணான்னோ அவ்வேம் குடும்பத்தத்தாம் சுத்தும். பாக்கத்தான போறீங்க அதையும்?"ன்னு.
            இப்பிடி இந்தப் பனிபோரு வேலங்குடியில மட்டும் ரண்டு குடும்பத்துக்கு இடையில நடக்கல. கெராமத்துல ஒரு சொலவம் சொல்லுவாங்களே, தென்னை மரத்துல தேளு கொட்டுன்னா, பனைமரத்துல நெறி கட்டும்ன்னு வேடிக்கையா. அந்த வேடிக்கைய எல்லாம் தாண்டுன வேடிக்கேக் கதெயா சென்னைப் பட்டணத்துல பெரியவரோட வாரிசுகளும், சின்னவரோட வாரிசுகளும் அடிச்சிக்கிக்க ஆரம்பிச்சுதுங்க.
            கார்த்தேசு அத்தானுக்கு தங்காச்சி ஓடிப் போனதுக்கு முழுக் காரணமும் பெரியவரும், குமாரு அத்தானுங்ற மாதிரி ஒரு எண்ணத்தெ சின்னவரு பதிச்சி வுட்டுப்புட்டாரு. அந்த நேரமா பாத்து கார்த்தேசு அத்தானுக்கு தொழிலும் எதிர்பாத்த அளவுக்கு முன்னேத்தமா போவல. ஏதோ வேல நடந்துச்சே தவுர, போற எடமெல்லாம் கான்ட்ராக்ட் தட்டிட்டே போனுச்சு. அதுக்கும் காரணம் பெரியவங்க குடும்பம் பண்ணுற மந்திரம் தந்திரம்ன்னு சொல்ல ஆரம்பிச்சாரு சின்னவரு. அதோட விளைவா என்னவோ, கார்த்தேசு அத்தான் ராத்திரி ஆனாக்கா சரக்கெ போட்டுக்கிட்டு திருவேற்காட்டுல இருந்த பெரியவரோட வாரிசுங்க வூட்டுக்கு மின்னாடி சத்தத்தெ போட ஆரம்பிச்சிது.
            குடியிருப்போர் சங்கத்து ஆளுகளெ கொண்டாந்து வெச்சித்தாம் கார்த்தேசு அத்தானெ உருட்டி மெரட்டி வூட்டுக்குக் கொண்டு போயி வுடுறாப்புல ஆயிடுச்சு. சில சமயங்கள்ல கைகலப்பு ஆயி சமாதானம் பண்ண முடியாத நெலைக்கும் சம்பவங்க போவ ஆரம்பிச்சி பின்னாடி, கார்த்தேசு அத்தான் அப்பங்காரரு வழியில போவ ஆரம்பிச்சது. அதாச்சி அதுவும் மந்திர தந்திரத்துல எறங்க ஆரம்பிச்சிது. நடுராத்திரி நேரமா பாத்து எல்லாரும் ஒறங்குன பிற்பாடு விபூதிய தூவிட்டு வாரது, மஞ்சப் பொடிய தூவி வுட்டுப்புட்டு வாரது, எலுமிச்சம் பழத்த வெட்டி அதுக்குள்ள குங்குமத்தெ வெச்சி மலரு அத்தாச்சி வூடு, ராமு அத்தாம் வூடு, மாரி அத்தாம் வூடுன்னு வூட்டெச் சுத்தி எறிஞ்சிட்டு வாரதுன்னு ஆரம்பிச்சிது.
            கட்டக் கடெசீயா தகடு வைக்கற வேலையிலயும் எறங்குனுச்சு கார்த்தேசு அத்தான். கார்த்தேசு அத்தான் குடியிருக்கு மனைக்குப் பக்கத்துல சந்தானம் அத்தானோட ரண்டு ப்ளாட்டுங்க இருந்துச்சு காலி மனையா. அதுல பூரா தகடுகளா வாங்கி நாலு மூலை, கண்ணுல படற எடம்ன்னு எல்லா எடத்துலயும் பதிச்சி வெச்சிருந்துச்சு கார்த்தேசு அத்தான். அப்பங்காரன் பண்ணுற காரியத்தெ பெத்த புள்ளைங்க பண்ணாம இருக்குறது அபூர்வம்தான். இதெ பத்தி அப்பன் புத்தி அப்பிடியே புள்ளைக்கும் இருக்குதுன்னு கெராமத்துலயும் சொல்லுவாங்க.
            பொதுவா ஒரு குடும்பத்துக்கு எதிரா யாரு மந்திரம் தந்திரம் செய்யாட்டியும் குடும்பத்துல யாருக்காச்சிம் ஒடம்புக்கு முடியாம போறதும், அத்து சரியா ஆவுறதும் சகஜந்தாம். வறுமெ படாத குடும்பமும், நோய் வாயிப் படாத குடும்பமும் ஒலகத்துல எங்ஙன இருக்கு? வறுமெயக் கூட பல்ல கடிச்சிக்கிட்டு பட்டினியா கெடந்து சமாளிச்சுப்புடலாம். நோயி வாயிப் படுறப்போ அதெ சமாளிக்குறது பெரும்பாடுதாம்? குடும்பத்துல ஒருத்தருக்கு ஒடம்பு முடியாம போனாலும் ஒட்டுமொதத குடும்பமும் நெலகொழைஞ்சில்லா போயிடும். பெரியவங்க கால்ல வுழுந்து ஆசி வாங்குறப்போ கூட மொதல்ல நோய் நொடி யில்லாம நல்லா இருன்னுத்தாம் வாழ்த்துவாங்க. பெறவுத்தாம் பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழுங்றதுல்லாம். அந்தப் பதினாறுல்ல இத்துவும் ஒண்ணா இருந்தாலும் மொத ஆசிங்றது நோயி நொடி இல்லாம இருக்குறதுக்குத்தாம். கெராமத்துப் பழமொழியும் அதுதாம் நோயற்ற வாழ்வே கொறைவற்ற செல்வம்ன்னு.
            நல்ல நாள்ல குடும்பத்துல ஒருத்தருக்கு ஒடம்பு முடியாம போயிட்டாவே, வூட்டுப் பொண்டுக எவ்வேம் கண்ணு பட்டுச்சோ? எந்தப் பயெ மனசு கருவுனுச்சோ?ன்னுத்தாம் கண்ணு ரண்டையும் கசக்கிக்கிட்டு பேச்சயே ஆரம்பிக்கும்ங்க. இப்போ சின்னவரும், சின்னவரு குடும்பமும் மந்திரம் தந்திரமும் எறங்குனதால பெரியவரு குடும்பத்துல வேலங்குடியிலயோ, சென்னைப் பட்டணத்துலயோ யாருக்காச்சிம் ஒடம்பு முடியாமப் போயிட்டா, அத்து சாதாரண சளிப் பிடிச்சாலும் சரித்தாம், அத்து சின்னவரோட மந்திரம்ன்னும், அவரு தகடு வைக்குற வேலையும்னு நம்ப ஆரம்பிச்சிட்டுங்க பெரியவரு குடும்பத்துச் சனங்க. அதால ஒடம்புக்கு முடியலன்னா மொத வேலையா ஆஸ்பத்திரிக்கிப் போவாம திருவேற்காடு மாரியம்மன் கோயில்ல போயி துன்னூரு போடுற வேலைய மொதல்ல பாத்துட்டுத்தாம் பெறவு ஆஸ்பத்திரிக்குப் போவ ஆரம்பிச்சதுங்க. நாளாவ நாளாவ இப்பிடிப் போயிட்டு இருந்தா மனசுக்குள்ள பயந்தானே அதிகமாவும். அப்பிடித்தாம் ஆனுச்சு. பெரியவரு குடும்பத்துலேந்தும் சனங்க இப்போ மந்திரக் காப்பு, தந்திரக் காப்பு, தகடு எடுக்கறதுன்னு பெரியவரு குடும்பத்து சனங்க எறங்க ஆரம்பிச்சிதுங்க.
            பெரியவரு குடும்பத்துச் சனங்க யார்ர பாத்தாலும் கையில காப்புக் கயிறு, கழுத்துல தாயத்து, இடுப்புல மந்திரிச்சிக் கயிறுன்னு அததுவும் கட்டிக்கிட ஆரம்பிச்சிதுங்க. கையில காப்புக் கயிறும், கழுத்துல தாயத்தும் பெரியவரு குடும்ப சனங்களோட அடையாளமே ஆகிப் போறாப்புல ஒவ்வொண்ணும் கையில ரண்டு மூணுன்னு கயித்தோடயும், தாயத்தோடயும் அலைய ஆரம்பிச்சிதுங்க. யாருக்காச்சிம் ஒடம்பு முடியாம போயிட்டா டாக்கடர்ரப் போயி பாக்கறதெ வுட மந்திரம் பண்ணுற சாமியார்ரப் போயி மொதல்ல பாக்க ஆரம்பிச்சா எப்பிடி இருக்கும்? இந்த ரெண்டு குடும்பத்தாலயும் வேலங்குடியிலயும், சென்னைப் பட்டணத்துலயும் சாமியாருங்க காட்டுல பெரு மழையாப் போனதுதாம் மிச்சம். சென்னைப் பட்டணத்துல அப்போ பேஞ்ச பெருமழைக்கு இதுவும் ஒரு காரணமா இருந்திருக்கலாம்!
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...