19 Jun 2020

அங்கப் போயிட்டு இங்க வராதே!

செய்யு - 483

            வேலங்குடி நாட்டாமெக்காரருக்கு மனசுக்குள்ள சொல்ல முடியாத எரிச்சல். வெளிக்காட்டிக்க முடியாத கோவம். "ரண்டு பயல்களும் சுத்த மடப்பய தாதியள இருப்பானுவோளா? இவுனுக குடும்பப் பெரச்சனெ நாளைக்கி ஊரு பெரச்சனையா ஆயிடும் போலருக்கு! எதாச்சிம் ஒரு முடிவெ கட்டியாவணும்!"ன்னு நெனைச்சிக்கிட்டாரு நாட்டமெக்காரரு.
            அவர்ரச் சுத்தி நின்ன ஊருக்கார பெரிசுக, "அவனுக புத்திசாலித் தனமாத்தாம் பண்ணுறானுவோ! இப்பிடி ரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு நின்னா நாமளா பாத்து எதாச்சிம் ஒரு தோத பண்ணி வுட்டுப்புடுவேம்ன்னு நெனைக்குறானுவோ போல. வூடு பத்திக்கிட்டு எரியுறப்போ தாகத்துக்கு தண்ணியத் தர்றாம ஏம் இப்பிடி நெருப்புல கொண்டு போயி ஊத்துறீயேன்னு கேட்ட கதையால்ல இருக்கு!"ன்னாங்க அவுங்க.
            "யிப்பெ என்ன கருமத்தெ பண்ணித் தொலைக்குறதுன்னு தெரியலீயே?"ன்னாரு நாட்டாமெக்காரரு.
            "இந்தப் பயலுகளப் பாத்தோம்ன்னா நாளைக்கி நாமளும் செரித்தாம், கெராமமும் செரித்தாம் நாறிப் போயி நிக்க வேண்டியதுதாங். கெராம கட்டுமானம்ன்னு ஒண்ணு இருக்குல்லா. அத்துப் போனதுக்குப் பெறவு இஞ்ஞ இருக்குறதும் ஒண்ணுத்தாம், நாக்கப் பிடிங்கிட்டுச் சாவுறதும் ஒண்ணுத்தாம்!"ன்னுச்சுப் பெரிசுங்க.
            "இத்தெ இப்பிடியே வுட்டுப்புடக் கூடாது. நாளைக்கி அவனவனும் அவ்வனவன் இஷ்டத்துக்குத் தலையெடுக்க ஆரம்பிச்சிட்டா எந்தச் சாதிக்காரப் பயலுவோ எந்தத் தெருவுல இருக்குறானுவோன்னே தெரியாமப் போயிடும்? யாரு எந்தச் சாதின்னு எல்லாத்துக்கும் கொழப்பமாவும் போயிடும், மறந்து போனாலும் போயிடும்! டவுனுக்கார பயலுகளுக்கு வேணும்ன்னா சாதி முக்கியமில்லாம இருக்கலாம். கெராமத்தானுக்குச் சாதித்தாங் முக்கியம். முக்கியமானவங்க வந்து கருத்தெ சொல்லுங்க. அதுப்படிப் பண்ணிப்புடலாம்!"ன்னு சொன்னாரு நாட்டாமெக்காரரு.
            "இந்தாருப்பா நாட்டாமெ! பொண்ண யாரு வூட்டுல வெச்சியும் பாதுகாப்புல்லாம் கொடுக்க முடியாது. ஓடுகாலிப் பொண்ணு. அப்பன் ஆயி இருக்குறப்பவே ஓடுன பொண்ணு கேக்கவா வேணும்? அதெ இனுமே திருத்த முடியா. ஏழு கடலு, ஏழு மலெ தாண்டி வெச்சாலும் அத்து ஓடுறது ஓடுறதுதாங். என்னத்தாங் குளிப்பாட்டி வெச்சாலும் நாயீ போற எடத்துக்குப் போயித்தாம் தீரும்! என்னத்தாங் தேவிடியாள பொத்தி பொத்தி வெச்சாலும் அவ்வே சேலய அவுத்துப் போட்டுட்டு போற எடுத்துக்குதாங் போவா!"ன்னாரு ஒரு ஊருகார பெரிசு.
            "பாஞ்சு வர்ற வெள்ளத்தெ கரெ போட்டு நிறுத்திப்புடலாம். வீசுற புயல அந்தாண்ட போவ வெச்சிப்புடலாம். சீறி வர்ற நாகத்தெ ச்சீ அந்தாண்ட போன்னு வெரட்டிப்புடலாம். பதுங்கி வர்ற புலியக் கூட தூக்கி அந்தாண்ட வீசிப்புடலாம். பொண்டுக அதா அடங்குனாத்தாம் உண்டு. எவ்வே அடங்கலையோ அவ்வே அவ்சாரித்தாம். அவளெயல்லாம என்னத்தெ பண்ணுறது? வூடு தாண்டுனவள வெச்சில்லாம் ஒண்ணு பண்ண முடியா. வயக்காட்டுப் பயலுவோ அப்பிடி என்னத்தெ போட்டு மயக்குறானுவோளோ? இந்த மேனாமினிக்கிக எதெ அப்பிடிக் கண்டு மயங்கிப் போறாளுவோளோ? அவனவெம் வேட்டிய அவுத்துப் பாத்தாத்தாம் வெசயம் வெளங்கும்! இப்பிடிப் பொட்டச்சிக கெளம்புன்னா ஊரு ஒலகம் என்ன கதிக்கு ஆளாவுறது!"ன்னுச்சு இன்னொரு பெரிசு.
            "அட ச்சேய்! வழியச் சொல்லுங்கன்னா வெயாக்கியானம் வெச்சிக்கிட்டு! நாளைக்கு நாம்ம மட்டுமே முடிவெ பண்ணிப்புட்டதா எவனாச்சிம் டீக்கடையில ரோட்டுல நின்னு பேயக் கூடாது பாத்துக்கோங்க. அப்பிடி எவனாச்சும் பேசுனா செவுட்டுலேயே போட்டுப்புடுவேம்!"ன்னாரு நாட்டாமெகாரரு.
            "நாட்டாமெ எதப் பாத்து செஞ்சாலும் செரித்தாம். கெராம கட்டுமானம் செதையாம இருக்கணும். அவ்வுளவுதாங்!"ன்னுச்சுங்க ஊரு பெரிசுங்க.
            நாட்டாமெக்காரரு வேக வேகமா கிட்டதட்ட மின்னல் வேகத்துல செயல்பட ஆரம்பிச்சாரு. இவ்வளவு சங்கதியும் சின்னவரு வூட்டுலேந்து ராயநல்லூரு திரும்புற எடத்துல ரோடு மூணா பிரியும் பாருங்க ஒண்ணு ராயநல்லூருக்கு, இன்னொண்ணு வயக்காட்டுக்குன்னு. அந்த முச்சந்தியில நடக்குது.
            நாட்டாமக்காரரு சின்னவரு வூட்டுக்குள்ளப் போயி கேட்டதுல, பொண்ண வூட்டப் பக்கம் அண்ட வுட மாட்டேன்னுட்டாரு.

            சொடலயக் கூப்ட்டு வெச்சுக் கேட்டதுல அது பொண்ண வுட மாட்டேம்னுடுச்சு.
            பூர்ணி அத்தாச்சிய தனியாவும், கூட்டத்துக்கு மின்னாடியும்ன்னு ரண்டு வகையில வெச்சுக் கேட்டதுல, சொடலய வுட்டு வார மாட்டேம்னுடுச்சு. அத்தோட கெராமத்துல ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணி வுட்டா ரண்டு பேத்து சாவுக்கும் கெராமத்துல உள்ளவங்கத்தாம் காரணம்னு ரீஸ்தரு தபாலு எழுதி போலீஸூ, கலெக்கடரு, முதலமைச்சருன்னு எல்லாத்துக்கு எழுதிப் போட்டுட்டு பால்டாய்ல வாங்கிக் குடிச்சிட்டுச் செத்துப் போவேம்ன்னு ஒரு மெரட்டல்ல வேற மெரட்டுனுச்சு பூர்ணி அத்தாச்சி. அதெ கேட்டு சொடலயும் வாழ்ந்தா ஒண்ணா வாழ்றதாவும், செத்தா அந்த மாதிரிக்கி ஒண்ணா சாவுறதாவும் சொல்லப் போவ, ராக்காயியும், பச்சக்கிளியும் சேந்துக்கிட்டு அந்தப் படியே காயிதம் எழுதி வெச்சிட்டு குடும்பத்தோட எல்லாமும் சாவுவோம்ன்னு சொல்லப் போவ நெலமெ கொஞ்சம் பகீர்ன்னு சிக்கலா போயிடுச்சு நாட்டாமெகாரருக்கு.
            சாவுறவேம் சொல்லிட்டுச் சாவ மாட்டாம், சொல்லிட்டுச் சாவப் போறவேம் சாவ மாட்டாங்றது ஒரு கெராமத்துக் கணக்குன்னாலும், கணக்கு நேர்மாறா போயிடுச்சுன்னா அதுக்கு ஒட்டுமொத்த கெராமத்துக்கும் சேத்து நாட்டாமையில்லா பதிலெச் சொல்லியாவணும். அதால இந்த வெசயத்தெ ரொம்ப நேக்கத்தாம் கையாளணும்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு. பாம்பையும் அடிச்சாவணும், அடிக்கிற அடியில பாம்பும் செத்துப்புடக் கூடாது, அதே நேரத்துல அடிபட்ட பாம்பு இந்த எடத்துக்குத் திரும்ப தலைவெச்சு படுக்கக் கூடாது - அதுக்கு என்ன வழியின்னு யோசிச்சாரு நாட்டாமெக்காரரு.
            நாட்டாமெகாரரும், பஞ்சாயத்துப் பெரிசுகளும் பாத்தாங்க. நாட்டாமெக்காரரு நாலு பெரிசுகள தனியா கூப்ட்டு வெச்சி கொஞ்சம் பேசுனாரு. பேசி முடிச்சிப்புட்டு, சொடலயக் கூப்புட்டு வுட்டு, "இப்பிடி ஒரு சம்பவம் ஊருக்குள்ள நடந்ததா வெளிக்கித் தெரியக் கூடாது. நீயி பொண்ணு அழைச்சிட்டுப் போயி எஞ்ஞ வெச்சுப்பீயோ, எப்பிடி வெச்சுப்பீயோ, குடும்பம் பண்ணுவீயோ, பண்ண மாட்டீயோ? ஊருப்பக்கம் தல வெச்சிப் படுக்கக் கூடாது. ஒங் குடும்பம் பெத்தவ தங்காச்சியோட ஊர காலிப்பண்ணிட்டு ஓடிடு. மீறி ஊருக்குள்ள இருந்தேன்னா கண்ட துண்டமா வெட்டிப் போட்டு, வூட்டெ நெருப்ப வெச்சிக் கொளுத்திப் புடுவேம்! ஊரே ஒண்ணு கூடி இதெ செஞ்சுப்புட்டு சாட்சியில்லாம பண்ணிப் புடுவேம் பாத்துக்கோ. வாழ்றதா இருந்தா கண்ணு காங்காத தெசையில எங்காச்சிம் போயித் தொல. சாவுறதா இருந்தா நீஞ்ஞளா ன்னா சாவுறது? கெராமத்துலயே அதுக்கான ஏற்பாட்ட பண்ணிப்புடுவேம்!"ன்னாரு.
            பொண்ணு தங் கூட இருந்தா எங்க வாணாம்னாலும் எங்காச்சிம் போயி கண்ணு காங்காத எடத்துல போயி வாழ்ந்துக்கிறதா சொன்னுச்சு சொடல. அந்த நிமிஷமே நாட்டாமெகாரரு, "இனுமே வேலங்குடியானுவோ எவ்வேம் கண்ணுலயும் படக் கூடாது. பட்டா பாத்த எடத்துலயே எவ்வேம் பாத்தாலும் செரித்தாம் வெட்டி பொலி போட்டுப்புடுவானுவோ பாத்துக்கோ!"ன்னாரு கொரல செருமிக்கிட்டு.
            அதுக்குப் பெறவு சொடல பூர்ணி அத்தாச்சியோட குடும்பத்தெ காலி பண்ணிக்கிட்டுப் போனுச்சு. அத்து எங்க போனுச்சு? எங்க குடித்தனம் நடத்திட்டு இருக்குன்னு அதுக்குப் பெறவு யாருக்கும் தெரியல. ரொம்ப மாசங்களுக்குப் பெறவு சொடலயும் பூர்ணி அத்தாச்சியும் திருவாரூர்ல இருக்குறதா ஒரு பேச்சு. பூர்ணி அத்தாச்சி சொடலயோட சந்தோஷமா இருக்குறதாவும் சொல்லிக்கிறாங்க. எல்லாம் சொல் கேள்வித்தாம். கிராம கட்டுமானம்னு ஒண்ணு ஆயிப் போனதால வேலங்குடி வயக்காட்டு ஆளுங்களும் அதுக்குப் பெறவு சொடலயோட தொடர்பு எதையும் வெச்சிக்கிடல. சின்னவரும் தனக்குப் பூர்ணின்னு ஒரு பொண்ணு இருந்ததெ அன்னிக்கே தலைய முழுவிட்டுச் சுத்தமா மறந்துட்டாரு.
            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு ஏற்கனவே நீரும் நெருப்புமா இருந்து பின்னாடி சேர்ந்திருந்த சின்னவரு குடும்பமும், பெரியவரு குடும்பமும் பொங்கிப் பிரவாகமாகுற பெருங்கடலாவும், வெடிச்சி செதறுற எரிமலையாவும் ஆயிட்டாங்க. ஊருக்கார சனத்துலேந்து, ஒறவுக்கார சனம் வரைக்கும் இதால உண்டான செருமம் சொல்லி மாளாது. யாராச்சும் சின்னவரு வூட்டுக்குப் போயிட்டு பெரியவரு வூட்டுக்கு வந்தா, "அவ்வேம் வூட்டுக்குப் போயிட்டு இஞ்ஞ ஏம்டா காலடி எடுத்து வைக்குறே?"ம்பாரு பெரியவரு. ஒருவேள பெரியவரு வூட்டுக்குப் போயிட்டு சின்னவரு வூட்டுக்கு வந்தா பெரியவரு கேட்ட அதெ கேள்விய சின்னவரு கேப்பாரு. ஒரு ஊரு விஷேசம்ன்னா பெரியவரு வந்து நின்னா சின்னவரு வார மாட்டாரு. சின்னவர்ர கண்ணால கண்டுப்புட்டா அந்த தெசையிலயே பெரியவரு தலைய வெச்சிப் படுக்க மாட்டாரு. எதேச்சையா ரண்டு பேரும் ரோட்டுல கண்ணுல பட்டுட்டா போதும், சின்னவரு ரோட்டோட எடது பக்கமா காறித் துப்பிக்கிட்டே போனார்ன்னா, பெரியவரு ரோட்டோட வலது பக்கமா காறி காறித் துப்பிக்கிட்டே போவாரு. இப்பிடி ஒருத்தரையொருத்தரு ரோட்டுல பாத்தா ரோட்டோரத்தை நாஸ்திப் பண்ணுற வேலையப் பண்ண ஆரம்பிச்சாங்க.
            சுப்பு வாத்தியாரு நெலமையும் இதுல சங்கடமாப் போச்சுது. வேலங்குடி போனா ரண்டு அக்காக்காரிக வூட்டுக்கும் போயித்தான ஆவணும். ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து வூடுங்க. ஒரு வேலித்தாம் இடையில. ஒரு வூட்டுக்குப் போயிட்டு, இன்னொரு வூட்டுக்கு எப்பிடிப் போவாம இருக்குறது? ரண்டுமே ஒடம்பொறந்த அக்காக்காரிங்க வேற. ஒரு தாயி மாருல பாலக் குடிச்சி வளந்த பொறப்புங்க. நெலமெ இப்பிடி இருக்கறப்ப, அங்கப் போயிட்டு இங்க வந்தாலும் செரித்தாம், இங்கப் போயிட்டு அங்க வந்தாலும் செரித்தாம் ரண்டு பேரும் மொறைச்சுப் பாக்க ஆரம்பிச்சாங்க. ஒனக்கு அவ்வேம் ஒறவு வேணுமா? நம்மட ஒறவு வேணுமா?ன்னு மாறி மாறி கேக்க ஆரம்பிச்சதுல சுப்பு வாத்தியாரு பாத்தாரு, வேலங்குடிப் போறதையே நிப்பாட்டிக்கிட்டாரு. ஒரு தீவாளி, பொங்கல்ன்னாலும் அக்காகாரிகளுக்குக் கொண்டு போயிட்டு இருந்த சீரெ மணியார்டர் பண்ணுற நெலமைக்கு வந்துப்புட்டாரு.
            "ஒரு பொண்ணு வூட்டெ வுட்டு ஓடிப் போயி இப்பிடியா எந் தம்பிய வூட்டுப்பக்கம் வர்ற முடியா அடிப்பா!"ன்னு அழுதுகிட்டெ அந்த மணியார்டர வாங்கும் ரசா அத்தை.
            "இப்பிடியே ஒரு பொண்ணு குடும்பத்தெ ரண்டாக்கி, ஊரே ரண்டாக்கி, ஒறவுகள ரண்டாக்கி எந் தம்பிய வர்ற முடியாம பண்ணுவா நாற முண்டெ!"ன்னு செயா அத்தெ ஒரு அழுகாச்சிய வெச்சிக்கிட்டு மணியார்டர வாங்கிக்கும்.
            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு ஒரு வருஷ காலம் வரைக்கும் பெரியவரு சுப்பு வாத்தியாரு வூட்டுப் பக்கம் எட்டிப் பாக்கல. சுப்பு வாத்தியாரும் வேலங்குடிப் பக்கம் போனா ஒருத்தரு வூட்டுக்குப் போயி இன்னொருத்தரு வூட்டுக்குப் போவாம இருக்க முடியாதுங்றதால போவல. பெரியவரால சுப்பு வாத்தியார்கிட்டெ ஒரு வார்த்தெ பேசாம ஒரு வருஷம் காத்திருக்க முடியல. ஒரு நாளு அவராவே கெளம்பி வேலங்குடியிலேந்து வயக்காட்டுக் குறுக்கால திட்டைக்குக் கெளம்பி வந்துப்புட்டாரு, சகஜமாயிட்டாரு. சின்னவரு வர்றத்தாம் சுப்பு வாத்தியாரோட மவ்வே செய்யு வயசுக்கு வர்ற காலம் வரைக்கும் தேவைப்பட்டுச்சு. அப்பத்தாம் வந்தாரு. வந்து என்னத்தெ பேசுனாருங்ற அந்தக் கதெ நீங்க அறிஞ்ச கதைதானே. பொண்ணு வயசுக்கு வந்ததெ கேள்விப்பட்டதும், "பொண்ணு கொடு மச்சானே!"ன்னு சுப்பு வாத்தியாரு வூட்டுல வந்து நின்னதெல்லாம்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...