1 Jun 2020

31.1

Zero to Infinity - சுழியத்திலிருந்து முடிவிலி வரை

            நாவலின் பெயர் மறைந்து விடுவது அபாயகரமானது. குறைந்தபட்சம் நாவலைப் படித்து முடிக்கும் வரைக்குமாவது ஞாபகத்திலிருந்து விலகிப் போவது துரதிர்ஷ்டம். அதற்காகவாவது தலைப்புக்குக் கீழ் அதை எழுதிக் கொள்வது நல்லது. பெரும்பாலான நாவல்கள் இந்த உத்தியைச் செய்கின்றன. நாவலை நீங்கள் பிரித்தால் ஒரு பக்கத்தில் நாவலின் பெயரும், எதிர்பக்கத்தில் நாவலாசிரியரின் பெயரும் அச்சடிக்கப்படுகின்றன. நாவலின் எந்த ஒரு எடத்தைப் பிரித்தாலும் நீங்கள் இதைப் பார்க்கலாம் ஒன்று அந்தப் பக்கத்தில் மேல் நாவலின் பெயர் இருக்கும் அல்லது நாவலாசிரியரின் பெயர் இருக்கும்.
            நேற்று நான் நாவலின் பெயரை நினைவூட்டி எனக்கு எழுதச் சொன்னேன். ஒருத்தர் கூட அந்தப் பணியைச் செய்யவில்லை. உங்களுக்கு வேறு பணிகள் இருந்திருக்கலாம். இந்த நாவலைப் படிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். அதற்காக எழுதாமல் இருக்க முடியாது. உண்மையில் இந்த நாவல் படிப்பதற்காக எழுதப்படும் நாவலே கிடையாது. இது உங்களைச் சில்லுசில்லாக உடைத்துப் போடுவதற்காக எழுதப்படும் நாவல். இதுவரை நாவல் என்ற அபத்தங்களில் நீங்கள் கடந்து வந்துள்ள அத்தனை கழிசடைகளையும் கழித்துப் போடும் நாவல்.
            நீங்கள் ஆழமாக கவனிக்க வேண்டாம். இன்றைய தலைப்பின் கீழ் நாவலின் பெயரை எழுதி விட்டேன். இது உங்களுக்காகவும் இருக்கலாம். பெயர் மறந்தால் அடிக்கடி நாவலாசிரியர் பார்த்துக் கொள்வதற்காகவும் இருக்கலாம். இப்போது உங்களுக்கு இந்த நாவலை எழுதுவது நானா? நாவலாசிரியரா? என்ற கேள்வி எழுந்தால் இப்போதைக்கு அந்தப் பதிலை என்னால் தர இயலாது. நான் யார்? நாவலாசிரியர் யார்? அதற்குப் பதில் சொல்வதற்கு முன் இருவரும் ஒன்றாகும் புள்ளி என்ற ஒன்று இருக்கிறதா என்ன? அப்பிடி இருக்கிறது என்றால் இந்த நாவலை எழுதுபவர் ஏன் நீங்களாகவும் இருக்கக் கூடாது?
            நிற்க, நாம் அகல் கலை இலக்கியக் கூடலின் ஏழாவது கூடலில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்தாக வேண்டும். எந்த நாள் என்று ஞாபகம் இல்லை என்றாலும் ஜூன் மாதம் 2012 இல் நடந்தது ஞாபகம் இருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. கடந்தக் காலத்தை கதை அளப்பதுதான் எல்லாம். அதிலிருந்து நிகழ்காலத்திற்கு ஒரு செய்தி இருக்கிறது. அந்தச் செய்தியை நிகழ்காலம் எந்தக் காலத்திலும் கண்டு கொண்டதாக வரலாறு இல்லை. வருங்காலத்திற்குமான செய்திகளும் அதனிடம் உண்டு என்றாலும் நிகழ்காலத்திலேயே எடுபடாத செய்திகள் வருங்காலத்தில் எப்படி எடுபடும் என்பது குறித்து என்னால் கூற முடியாது. ஏனென்றால் வருங்காலம் விநோதங்கள் நிறைந்தது. அதற்கு ஒரு பைத்தியக்காரரின் மனநிலை எப்போதும் உண்டு. உதாராணத்திற்கு ஒன்று, கிழிந்த முழுக்கால் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்த நாட்களில் நான் நினைத்ததே இல்லை, வருங்காலத்தில் அது ஒரு பேஷன் ஆகும் ஒன்று.
            நீங்கள் குமரிக் கண்டத்தை நம்புகிறீர்களா? தமிழ் இலக்கியங்களின் நம்பிக்கை அது. ஒரு புராதானம் தேவைப்படும் போதும், தொன்மம் தேவைப்படும் போதும் நான் குமரிக் கண்டத்தில் பிரயாணிக்கிறேன். கால எந்திரத்திலா என்று கேட்காதீர்கள்! செய்ய முடியாத ஒவ்வொன்றிற்கும் மனிதனுக்கு ஒரு இயந்திரம் தேவைப்படுகிறது. மனிதரால் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியுமா? ஓர் எந்திர வாகனம் அந்தக் கனவைத் தணித்து வைக்கிறது. வயதை நீட்டிக்க முடியாது, காலத்திற்கு முன்பின் செல்ல முடியாத மனிதனுக்குக் கால எந்திரம் தேவைப்படுகிறது. அந்த எந்திரம் எப்பிடி இருக்கும்? அதற்கு சக்கரம் உண்டா? இறக்கைகள் உண்டா? ராக்கெட் மாதிரி இருக்குமா? எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகளிடம் அது குறித்த வரைபடம் இருக்கலாம். அவ்வளவு தூரம் போக முடியாதவர்கள், பாஸ்போர்ட் முடக்கப்பட்டவர்கள், விசா மறுக்கப்பட்டவர்கள், அனுமதி இல்லாதவர்கள் திரைப்படங்களைப் பார்த்தால் கால எந்திரத்தின் நீள்வெட்டுத் தோற்றம், குறுக்கு வெட்டுத் தோற்றம் எல்லாவற்றையும் பிடித்து விடலாம். பிடித்து... ஹிட்லர் கொன்ற உயிர்களை மீட்டுக் கொண்டு வந்து விட முடியுமா? ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் மோசமாக செத்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட முடியுமா? டில்லியில் வன்கொடுமையால் இறந்த நிர்பயாவை உயிர்த்தெழ செய்து விட முடியுமா?
            உங்களுக்குப் புரிந்திருக்கும். போக முடியாத இடத்திற்குப் போக கற்பனைதான் கால எந்திரம். செய்ய முடியாத காரியத்திற்குக் கற்பனைதான் மந்திர சக்தி. அபூர்வமாக கற்பனை சில நேரங்களில் உண்மையாகிப் போகிறது. மனிதன் பறக்க முடியுமா என்ற கற்பனை கற்பனையாக நின்று விடாமல் பறக்க ஆரம்பித்ததைப் போலத்தான். நிச்சயமாக ஒரு மனிதரால் பறவையைப் போல பறக்க முடியாது என்பது வேறு.
            குமரி மலையின் மீது ஏறி நிற்கும் போது, அதன் உயர்ந்த சிகரத்தைத் தொடும் போது ஹிலாரியோ, டென்சிங்கோ என் மீது கோபப்படக் கூடாது. எனக்கொன்றும் குமரி மலையின் உயர்ந்த சிகரத்தை அடைந்தவன் இந்த நாவலாசிரியர் என்ற பெயர் வேண்டாம். எந்த மலையேற்றப் பயிற்சியும், பிரயத்தனமும் இல்லாமல் அந்த இடத்திற்குப் போக முடிந்ததற்கு நான் கற்பனைக்கு மட்டும் நன்றி கூற முடியாது, மரபுக்கும் நன்றி கூற வேண்டியிருக்கிறது. இந்த மொழியில் ஆழ்ந்திருக்கும் போது அப்படி நீங்கள் போய்த்தான் ஆக வேண்டும். இந்த ஆதி மண் ஒன்று கடலுக்குள் புதைந்து இருக்கிறது, அல்லது மண்ணுக்குள் புதைந்து இருக்கிறது.
            கிரானைட்டை வெட்டி எடுத்த அளவுக்கோ, தாது மணலைத் தோண்டித் தள்ளிய அளவுக்கோ, ஆற்று மணலை அள்ளியெடுத்த அளவுக்கோ அகழ்வாய்வுகள் அதிகம் செய்ய முடியாமல் போனதற்கு அடிப்படையில் சில காரணங்கள் இருக்கிறது. மேற்சொன்னவைகளைத் தோண்டினால் பணம் உருவாகும். அகழ்வாய்வு என்றால் பணம் செலவாகும்.
            இந்த குமரி மலை இமய மலையைப் போல இருக்கிறது. நான் இமய மலையில் ஏறியதில்லை. குமரி மலைதான் இமய மலையாக ஆகியிருக்க வேண்டும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இமய மலையில் ஏற முடியாததற்கும், குமரி மலையில் ஏற முடிவதற்கும் கூட காரணங்கள் இருக்கின்றன. வடக்கு நெருங்க விடாது. தெற்கில் நீங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கலாம். இலங்கையின் கடற்பரப்பு நெருங்கும் வரை செல்லலாம். அதற்கு மேல் பறந்து சென்று விட வேண்டும். பன்னெடுங் காலத்திற்கு முன்பே அனுமார் என்பவரே அப்பிடிப் பறந்துதான் போயிருப்பதாகச் சில குறிப்புகளைப் பார்க்கும் போது, துப்பாக்கிச் சூடுகள் என்பது அப்போதே ஏற்பட்டிருக்க வேண்டும்.
            அந்த மலையிலிருந்து பார்க்கும் போது ஆறு தெரிகிறது. பஃறுளி ஆறு. அந்த ஆறு கூவம் போல துர்நாற்றமோ, காவிரிப் போன்று வறண்டோ அல்லாமல் இருக்கிறது. இதனால் அறியப்படும் இரண்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
            1. சென்னைச் செந்தமிழ் பேசிய மக்கள் பஃறுளி ஆற்றங்கரையில் வசித்திருக்கவில்லை.
            2. திராவிட மொழிகளில் 'க'வில் தொடங்கும் மொழி பேசுவோரும் அப்போது உண்டாகியிருக்கவில்லை. தமிழ் எனும் மொழி தோன்றிய பின்பே 'க'வில் தொடங்கும் அந்த மொழி தோன்றியிருக்க வேண்டும்.
            தமிழ் ஏன் இப்படி பல மொழிப் பேசும் மனிதர்களை உருவாக்கியது என்பது உங்களது கேள்வியாக இருந்தால் நான் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் வருத்தப்படக் கூடாது. இந்த மொழியைப் பேசுபவர்களால் ஒற்றுமையாக இருப்பது என்பது முடியாது. பிரிந்துப் போவதிலும், திரிந்துப் போவதிலும் அலாதிப் பிரியம் உள்ளவர்கள் இந்த மொழியைப் பேசும் மனிதர்கள்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...