18 Jun 2020

செத்தாலும் வாராதே!

செய்யு - 482

            மவனெ பிடிச்சித் தள்ளுனதுல மனசளவுல ரொம்ப வெறுத்துப் போனாரு பெரியவரு. "நாம்ம பெத்த மவனெ இப்பிடிக் கொல்லப் பாக்குறானே! அவனும் அப்பம் மொறைத்தானே வரும். சித்தப்பங்கார்ரேம். எந்த ஊருலயாவது இப்பிடி மவ்வேம் மொறையில உள்ளவனெ வூட்ட வுட்டு வெளியில தள்ளி வுடுவானா? வுழுந்தது எகுடு தகுடா வுழுந்து பொரடியில, பொடணியில பட்டா உசுரு என்னத்துக்கு ஆவுறது? பொண்ணு போனா பிடிச்சாந்து கொண்டாந்துப் புடலாம். உசுரு போனா யாரு பிடிச்சிக் கொண்டாறது?"ன்னு பெரியவருக்குக் கண்ணுல்லாம் கலங்கிப் போச்சு. கொரலு தழுதழுக்க அவரு மவனெ எழுப்பி நிக்க வெச்சுட்டுப் பேசுனாரு.
            "எவ்வேம் வூட்டுப் பொண்ணாவது எப்பிடியாவது போவட்டும். நமக்கென்னடா? இவ்வேம் வூட்டுப் பொண்ணுக்கு மெனக்கெட்டு நடுரோட்டுல வுழுந்து கெடக்கணும்னு நமக்கென்ன தலயெழுத்தாடா? அவ்வேம் பொண்ண வெச்சிருந்தா கலியாணச் செலவு ஆவும்னு, இவனெ பொண்ண வெரட்டி வுட்டுருப்பாம் போலருக்கு. அத்தாம் நாம்ம என்னத்தெ பேசுனாலும் பிடி கொடுக்க மாட்டேங்றாம்!"ன்னாரு பெரியவரு.
            சின்னவரு இப்போ திண்ணையத்தாண்டி வாசப்படியக் கடந்து ரோட்டுக்கு வந்தாரு. பெரியவரு திட்டுனதெல்லாம் அவரு காதலு விழ கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு அவருக்கு. "ஒரு மனுஷன் வர மாட்டேம்ன்னு சொன்னா வுட வேண்டித்தானே. அவனெ வம்படியா இழுத்தா ன்னா அர்த்தம்? நீயும் ஒம் மவனும்தாம்டா எம் பொண்ணு ஓடுகாலியானதுக்குக் காரணம். ந்நல்லா இருந்த பொண்ண வயக்காட்டுப் பயலோட தொடர்பு தொடர்புன்னு சொல்லியே தொடர்பு பண்ண வெச்சுப்புட்டீயோளேடா. என்னத்தடா எம் பொண்ணுக்குப் பண்ணீயோ? இப்பிடிப் புத்தித் திரிஞ்சிப் போயி நிக்குதோ எம் பொண்ணு. எவ்வேம்கிட்டெ மந்திரத்தெ வெச்சீங்க? எவ்வேம்கிட்டெ போயி தகடு வெச்சீயோ?ஏத்தோ பண்ணிப்புட்டீங்கடா எம் பொண்ணுக்கு!"ன்னாரு சின்னவரு.
            "இப்பிடிப் பேசிப் பேசியேத்தாம் வீணா போறே சித்தப்பா நீயி? இப்பவும் சொல்றேம் ஒன்னாலத்தாம் காரியம் கெடப் போவுது. சரி பண்ணக் கூடிய பெரச்சனைய சரியே பண்ண முடியாத ஒண்ணா மாத்தப் போறே. இதுக்குப் பெறவு ஒனக்கு நம்ம சாதி சனத்துல, ஒறவுகள்ல மருவாதியே இல்லாம போவப் போறே. வயசல மூத்த நீயி. நம்மள அடிச்சதெப் பத்திக் கவலப்படலெ. இப்பவாச்சும் வா. வேணும்னாலும் ஒம் கால்ல பிடிச்சிக் கெஞ்சுறேம். வந்து வார்த்தெ சொல்லிப்புடு. மித்ததெ நாம்ம பாத்துக்கிடுறேம். ச்சும்மா வெச்சிச் செய்வேம் பாத்துக்கோ!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "திமிரு அடங்குதாடா எடுபட்ட பயலே ஒனக்கு? நீயிச் செஞ்சி ஒறவுல நமக்கு மருவாதி நிக்கனுமா? சாதிக்கார பயலுகளுக்குக் கிட்டாம் ஆச்சாரின்னா யாருன்னு தெரியும்டா? நெருப்புடா கிட்டாம் ஆச்சாரி. நெருப்போட சுத்தம்டா. எந்தக் கறையும் கிட்டாம் ஆச்சாரின்னா எரிஞ்சிச் சாம்பலா போவும்டா. ஆச்சாரத்துல ஆச்சாரமா இருக்குறவனெ தாண்டுனவம்டா இந்தக் கிட்டாம் ஆச்சாரி. நமக்குப் புத்திச் சொல்லி நீயி பெரிய ஆளுன்னுக் காட்டுதீயா?"ன்னாரு சின்னவரு.
            "சின்னப் பயலா இருந்தாலும் சரியாச் சொல்லுற இவ்வேம் புத்தி, ஏழு கழுதெ வயசு ஆயிக் கெடக்கற அவ்வேம் புத்தி எஞ்ஞ? எம் புள்ளய அடிச்சதெ கூட பெரிசா இப்போ நெனைக்கல அவ்வேம் பேசுறப் பேச்சப் பாத்து. வந்து நின்னு ஒத்த வார்த்தெயச் சொல்லிட்டுப் போயிடேம்டாம்பீ!"ன்னாரு பெரியவரு இப்போ கொரலு தளும்பிப் போயி.
            "இந்தாரு சித்தப்பா! சண்டெ ஒமக்கும் நமக்கும் யில்ல. அதெ புரிஞ்சுக்கோ மொதல்ல. இதெ முடிச்சிட்டு வேணும்ன்னா வா சண்டெய வெச்சிக்கிடலாம். இப்போ வாணாம். ஒங் குடும்பம் மானம், எங் குடும்ப மானம் எல்லாம் கெட்டுப் போறதுக்கு மின்னாடி வந்து புத்தியா நின்னு ஒரு வார்த்தெ சொல்லிப்புடு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "எந்த மந்திரவாதியப் பாத்துடா தகடு வெச்சே? மருவாதியாச் சொல்லிப்புடு. எம் வூட்டுல எந்த எடத்துல இருக்கு தகடு? அதெ மொதல்லா சொல்லு. அதெ எடுத்துப்புட்டு, எந்த மந்திரவாதிக்கிட்டெ மந்திரிச்சி வுட்டீயோ அவ்வேம்கிட்டெ அழைச்சிட்டுப் போ. அவ்வேம் மந்திரத்தெ திரும்ப வாங்கட்டும். அப்பத்தாம் பொண்ணு நமக்குக் கட்டுபடுவா. பஞ்சாயத்துல நமக்கு மருவாதி இருக்கும். கார்ர கொண்டு வா! வர்றேம்!"ன்னாரு சின்னவரு புதுத் தெசையில.
            குமாரு அத்தானுக்குக் கோவம் தாங்கல. "செரியான முட்டாக் கூதியா இருப்பீயா கெழட்டுப் பயலே! வெள்ளம் தலைக்கு மேல போவுதுன்னு நின்னுகிட்டு இருக்கேம். இப்பத்தாம் வெள்ளம் எங் கவுட்டிக் கீழே போறதெ காட்டுன்னு நிக்குறே?"ன்னுச்சு குமாரு அத்தான் காட்டுக் கத்தலா.
            "எவ்வேம்டா கெழட்டுக் கூதி? வாடா! யாரு கெழட்டுக் கூதின்னு பாத்துப்புடவேம். ஒத்தைக்கு ஒத்தெ வாடா!"ன்னு சின்னவரும் காட்டுக் கத்தலா கட்டிக்கிட்டு, வேட்டிய தார்பாய்ச்சலா கட்டி சண்டெக்கி தயாரு ஆயிட்டாரு. அப்பிடியே அந்த நெலையில கையி ரண்டையும் தொடையில தட்டிக்கிட்டு ஒரு எம்பு எம்பி எகிறிக் குதிச்சாரு.
            "கொமாரு! எழுந்திரிச்சி வூட்டுக்குள்ள வா! பைத்தியம் ஆயிட்டாம்டா அவ்வேம்! இனுமே புத்தியில ஏறாது. பொண்ணு ஓடிப் போனதுல சித்தம் கலங்கிப் போயிடுச்சு! எவ்வேம் வூட்டுப் பொண்ணு எந்தக் கதிக்குப் போனா நமக்கென்ன? ஒரு நல்லது பண்ணப் போயித்தானே இந்தக் கதிக்கு நிக்குறே? வா! வூட்டுப்பக்கம் வா! பஞ்சாயத்து என்ன கதிக்காவது போவட்டும்!"ன்னாரு பெரியவரு.

            "யாருக்குடா சித்தம் கலங்கிப் போச்சு போட்டப் பயலுகளா? தெகிரியும் இருந்தா அப்பம் மவ்வேம் ரண்டு பேருமாவே வாங்கடா? உளியெடுத்துக் கட்டெ அடிச்சா நம்மட கையா? வேல தெரியாமா அரையும் கொறையுமா மம்புட்டிப் பிடிச்ச ஒங் கையான்னு இன்னிக்குப் பாத்துப்புடுவேம். ரண்டு பயலுகளும் ஒத்த ஆம்பிளைக்குப் பொறந்திருந்தா வாங்கடா வாங்கடா!"ன்னாரு சின்னவரு தெரு தெறிக்குற சத்தத்தோட.
            "போடா போக்கத்தப் பயலே! நீயி பெறவு எந்த ஆம்பளைக்குப் பொறந்தே? நமக்குப் பொறந்த அத்தே தகப்பனுக்குத்தானே பொறந்தே? பேச்சப் பாரு! நாடுமாறி மாதிரிக்கி! நெசமாவே புத்திப் பெசண்டுகிடுச்சு!"ன்னாரு பெரியவரு.
            "போடா தேவிடியாப் பயலே! பொசுங்கலா பெத்து வெச்சிருக்கீயே இவனெ! இவ்வெம் ஒமக்குப் பொறந்தவனா? அதெ சொல்லுடா கெழட்டு மூதி மொதல்ல?"ன்னு சின்னவரு சொன்னதும், குமாரு அத்தானுக்குக் கோவம் தாங்கல.
            "வந்தேன்னா வெச்சுக்கோ! சித்தப்பனுல்லாம் பாக்க மாட்டேம். சவட்டி எடுத்துப்புடுவேம். அசிங்கப்பட்டுப் போயிடுவே!"ன்னு மின்னயத் தாண்டிக் காட்டுக் கத்தலா கத்துச்சு குமாரு அத்தான்.
            "ஒன்னய அம்மணக் குண்டியா நிக்க வெச்சி ஒன்னய யாருக்குப் பொறந்தேன்னு காட்டுறேம்னு இல்லியா பாரு!"ன்னு சின்னவரும் காட்டுக் கத்தலா கத்துனாரு. சத்தம் ஒண்ணுக்கு மின்னடியா காட்டுக் கத்தலா போனதுல ஊர்ரச் சுத்தி தெச தெறிக்க கேக்க ஆரம்பிச்சது. மாரியம்மன் கோயில்ல பஞ்சாயத்துக்கு நின்ன ஆளுக வரைக்கும் சத்தம் கேக்கப் போவ, என்ன ஏதுன்னு அங்கேயிருந்து ஆளுங்க கெளம்பி சின்னவரு வூட்டுப் பக்கமா வர ஆரம்பிச்சா, பெரியவரு குமாரு அத்தான பிடிச்சி இழுத்துக்கிட்டு வூட்டு வாசப்படி பக்கமா போறாரு. "இனுமே அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் சம்பந்தம் யில்ல. பன்னியக் கண்டா, குளிச்சிட்டு சுத்த பத்தம இருக்குற நாமத்தாம் வெலகி போவணும். அதுகிட்டெ போயி நாம்ம மல்லுக்கு நிக்க முடியா!"ன்னு குமாரு அத்தான் தோள்ல கெடந்த துண்டெ இழுத்துப் புடிச்சிக்கிட்டுப் போறாரு.
            "அப்பன் மவ்வேன் ரண்டு பேரும் இருந்தும் பொட்டப் பய கணக்கா ஓடுறானுவோ பாரு!"ன்னாரு சின்னவரு.
            சத்தம் இப்போ ரண்டு தரப்புலயும் மாரியம்மன் கோயிலுக்கு புனலு ஸ்பீக்கர் வெச்சது போல எட்டுத் திக்குக்கும் கேட்டுக்கிட்டே இருக்குது.
            "ஒடம்புல உசுரு தங்காது! மருவாதியா பேசுறதெ நிப்பாட்டிப்புட்டு வூட்டுக்குள்ள போற வழியப் பாரு!"ன்னுச்சு குமாரு அத்தான் பெருஞ் சத்தத்தோட.
            "நீஞ்ஞத்தானடா பொட்டப் பயலுகளா வூட்ட வுட்டு வெளியில வா வான்னீயே? இப்ப வந்தா நீஞ்ஞ பொட்டப் பயலுகளாட்டம் வூட்டுக்குள்ள ஓடுதீயே?"ன்னாரு சின்னவரு பெருஞ்சத்தத்தோட.
            செயா அத்தெ, வேதவல்லி அத்தாச்சியும் வெளியில வந்து குமாரு அத்தான பிடிச்சி வூட்டுக் கொல்லைப் பக்கமா படல வெலக்கி விட்டு பெரியவரோட உள்ள இழுத்துச்சுங்க.
            "தொலஞ்சிப் போறாம்! வாடா உள்ள கொமாரு!"ன்னு சத்தத்தெ வுட்டாரு பெரியவரு.
            "தொலச்சிக் கட்டிப்புடுவேம்!"ன்னுச்சு குமாரு பிடிய வுடாம.
            "வெக்காலி! என்னத்தெ பண்ணப் போறேம் பாருடா யிப்போ?"ன்னு சின்னவரு வேலிக்கால்ல ஒரு கால்ல பிடுங்கிட்டு குமாரு அத்தான அடிக்க வந்தாரு பாருங்க. செயா அத்தை, சுவாதி அத்தாச்சில்லாம் ஓடியாந்து சின்னவர்ரே தடுத்துப் பிடிக்கப் பாக்குதுங்க. அதுகளப் பிடிச்சி அந்தாண்ட தள்ளி வுடுறாரு சின்னவரு.
            பெரியவரு ஒடனே சுதாரிச்சி குமாரு அத்தான பிடிச்சி வேலிப்படலுக்குள்ளார தள்ளிச் சாத்திப்புட்டு அவரும் பதிலுக்கு வேலிக்கால்ல ஒண்ணப் பிடுங்கிட்டு, "வாடா! பாப்பேம்! எம் மவனெயே அடிக்கப் பாக்குறே? இன்னிக்கு ஒண்ணு நீயி இருக்கணும். யில்ல நாம இருக்கணும். வாடா பாத்துக்கிடலாம்!"ன்னு மல்லுக்கு நின்னாரு.
            பஞ்சாயத்துப் பண்ண எடத்துலேந்து ஓடி வந்த சனங்களுக்கும், நாட்டாமெகாரருக்கும் இப்போ இத்துப் பெரிய பஞ்சாயத்தாப் போச்சு. என்னடா இத்து அங்க ஒரு பஞ்சாயத்து இன்னும் முடியல, அதெ முடிக்கலாம்னு பாத்தா அதெ வுட இங்க பெரிய பஞ்சாயத்த வெச்சிக்கிட்டு அண்ணங்காரனும், தம்பிக்காரனும் நிக்குறானுவோ‍ளேன்னு நெனைச்சிக்கிட்டு, சுத்தி கூடியாந்த எளவெட்ட பயலுகளப் பாத்து நாட்டாமக்காரரு கத்துனாரு, "போயி ரண்டு பேத்துக்கிட்டெ இருக்குற வேலிக்காலையும் பிடுங்கித் தொலையுங்கடா. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப் போயிடத் தொலையுது. ஏக்கனவே இருக்குற தலெவலி தாங்கல! போங்க சனங்களா! போயி ரண்டையும் ரண்டு பக்கமா திருப்பி வூட்டுக்குள்ள போட்டு அடைச்சிப் போடுங்க, அசம்பாவிதம் எதாச்சிம் ஆவுறத்துக்கு மின்னாடி!"ன்னு கத்துனாரு.
            எளவெட்டுப் பயலுக ஓடியாந்து சின்னவர்ரெ ஒரு பக்கமா பிடிச்சி, கையில வேலிக்கால பிடுங்கி அந்தாண்ட எறிஞ்சிப்புட்டு, அவரோட வூட்டுக்குள்ள தள்ளி வாசக்கதவெ சாத்துனாங்க. பெரியவர்ர பிடிச்சி அவரையும் வேலிப்படலுக்குள்ள தள்ளி வேலிப்படலச் சாத்துனாங்க. சாத்துனாலும் ரண்டு பேத்துக்கிட்டேயும் பேச்சு மட்டும் வந்துக்கிட்டே இருக்கு.
            "ஒன்னயும் ஒங் குடும்பத்தயும் கருவறுக்காம வுட மாட்டேம். மந்திர தந்திர எந்திர வேலையா பாக்குறே நீயி? எங் குடும்பத்துக்கேவா தகடு வைக்குறே? ஒங் குடும்பத்தையே மந்திரம் பண்ணி அழிக்கலன்னா பாரு? மண்ணா போவ வைப்பேம். தகடு வெச்சி ஒங் குடும்பத்தெயே தரித்தரமா ஆக்குறேம் பாருடா!"ங்றாரு சின்னவரு.
            "எம்மட வூட்டுப் பக்கம் கால வெச்சே வெட்டிப் போட்டுப்புடுவேம். கொன்னே புடுவேம்டா பாத்துக்கோ. தம்பிக்காரனுல்லாம் பாக்க மாட்டேம். இனுமே ஒமக்கும் நமக்கும் எந்த ஒறவும் இல்ல. நாம்ம செத்தாலும் இந்தப் பக்கம் நீயி வாரக் கூடாது. ஊருக்காரவுக அத்தனெ பேத்தையும் வெச்சிக்கிட்டுச் சொல்றேம். அவ்வேம் நமக்குத் தம்பியுமில்ல. நாம்ம அவனுக்கு அண்ணணுமில்ல. நாம்ம செத்தாலும் அவ்வேம் வாரக் கூடாது. இன்னியோட அந்துச்சு ஒறவு! தலய முழுவேறம்டா இன்னிக்‍கே!"ன்னாரு பெரியவரு.
            "அதெத்தாம் நாமளும் சொல்றேம். நீயி நமக்கு யண்ணணுமுமில்ல. நாம்ம ஒமக்குத் தம்பியுமில்ல. நீந்தாம் மொதல்ல சாவுவே. அதுக்குல்லாம் நாம்ம ஒம்மட வூட்டுப் பக்கம் வார்ற மாட்டேம். கவலப்படாம இன்னிக்கு வேணும்னாலும் சாவுடா கெழட்டுக் கூதி! தலய முழுவித் தொலைக்கிறேம்!"ன்னாரு சின்னவரு.
            "ரண்டு பேரும் பேச்செ நிறுத்துறீயளா? இத்து ன்னா தெருவா? என்னத்தெ நெனைச்சக்கிட்டு பேசிட்டு இருக்கீயே? இத்து ன்னா ஊரா? இஷ்டத்துக்குப் பேசிட்டு! பெரியவங்கள மாதிரிக்கியா பேசுதீயா? போஞ்ஞ ரண்டு பேத்து உள்ளார! இனுமே பேச்சு வந்துச்சுன்னா ரண்டு பேத்து குடும்பத்தையும் வெலக்கி வைக்குறாப்புல, அவ்ராதம் பண்ணுறாப்பால ஆயிடும்!"ன்னு அவுங்கள வுட நாட்டாமெக்காரரு சத்தத்தெ வெச்சாரு. அப்பத்தாம் ரண்டு பக்கமும் சத்தம் வாரது நின்னுச்சு.
            கூடி வந்து நின்ன சனங்களுக்கு இத்தென்ன புதுப் பஞ்சாயத்த இருக்குன்னு தெகைச்சிப் போயி நின்னது நின்னதுதாம். அதுக அதுகப் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிட்டுங்க பெரியவரு, சின்னவருன்னு ரண்டு பேத்து வூட்டுக்கு மின்னாடி நின்னு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...