செய்யு - 481
நாட்டாமெகாரரு பெரியவருகிட்டெ வந்து காதோட
கிசுகிசுத்தாரு. "கட்டுமானம் ஊருக்குள்ள இருக்கிறப்பே பேசி முடிச்சிப்புடறதாங்
நல்லது. போலீஸ் ஸ்டேசன்னு போனா தாலியக் கட்டி வெச்சி அனுப்பிச்சிப்புடுவாம். கலக்டரூ
ஆபீஸ்லாம் நம்மாள சமாளிக்க முடியா. சாதிப்பேர்ர சொல்லிக் கூப்புட்டாம்ன்னு அவனுவோ
ஒத்தப் பிராது பண்ணா போதுங். அதுல மீண்டு வெளியில வாரது சாமானியங் கெடையாது. கோர்ட்டு
கேஸ்ஸ்ன்னு அலைஞ்சி பொழுது போக்கத்துப் போயிடும். இப்போ அவ்வனுவோ என்னத்தெ சொல்றானுங்கோ?
அவரு சின்ன மெராசு வாரணும் அவ்ளோதானே. போயி அழைச்சிட்டு வார்றப்பவே இஞ்ஞ என்னத்தெ
சொல்லணுங்றதெ சொல்லி வெச்சிக் கொண்டாங்க. நாம்ம பொண்ண இந்தப் பக்கம் வார வெச்சி
நம்மட சம்சாரம் இன்னும் கொஞ்சம் சனத்தெ கொண்டாந்து வெச்சி என்னத்தெ சொல்லணுங்றதெ
கிளிப்புள்ளையாட்டம் சொல்ல வெச்சி மெரட்டிப்புடுறேம்! அத்து நம்ம வேல. சின்ன மெராச
கொண்டாறது ஒஞ்ஞ வேல!"ன்னாரு நாட்டாமெகாரரு.
அதெ கேட்டுக்கிட்டு, பெரியவரு தலைய ஆட்டிக்கிட்டு,
"மேக்கொண்டு பேச வேண்டியதெ இப்பவே சுகர்ரா பேசிப்புடுங்க. பெறவு அவனுவோ தலைக
அந்தாண்ட இந்தாண்ட ஆடப்படாது. வெச்சு நசுக்குங்க பாப்பேம்!"ன்னாரு குசுகுசுன்னு
நாட்டாமெகாரரு காதுக்குள்ள.
நாட்டாமெ இப்போ சத்தமா பேசுனாரு,
"இந்தாருங்க எல்லாம் ந்நல்லா கேட்டுக்கிடணும். தீர்ப்பு ஒரு வழியா ஆயிடுச்சு.
ஆன தீர்ப்பு ஆனதுதாங். அதுல மாத்தமில்லங்றதெ ஒத்துக்கிடுறீங்க. ஒஞ்ஞ பக்கம் ரண்டு வெசயத்த
மின்னாடி வைக்குறீங்க. ஒண்ணு பொண்ணு வூட்டுச் சார்பா ஒருத்தரு வாரணும். ரண்டு பொண்ணு
வாக்கெ கேக்கணும். அதுல ஒத்து வந்தா இதுதாங் தீர்ப்புங்றதுல மாத்தமில்லன்னு ஒத்துக்கிடுறீங்க.
சுகர்ரா இப்போ பேசுனதுல நிக்கணும். பின்னாடி யாரும் பெரளக் கூடாது. வயக்காட்டு தெருவுலேந்து
இப்போ, கற்பூரத்தெ கொளுத்தி வைக்கிறேம், அதுக்குப் பின்னாடி யாரும் பெரளக் கூடாதுன்னு
அஞ்சு பேராச்சும் மாரியாயி மின்னாடி சத்தியம் வைக்கணும் ஆம்மா!"ன்னாரு நாட்டாமெ.
"அதாங் சாமி! தெருவே கட்டுப்படுறேங்.
வயக்காட்டுத் தெருவுக்கு ஒத்த நாக்குங், ஒத்த வாக்குங். கற்பூரம்லாம் வேண்டியதில்லீங்.
வேணும்னாலும் அஞ்சு பேரு ன்னா தெருவே மண்ணு மேல சத்தியம் வைக்கிறோமுங்!"கன்னு
வயக்காட்டு சார்பா ஒருத்தரு பேச, எல்லா வயக்காட்டு சனமும் மண்ணுல அடிச்சி சத்தியம்
வெச்சதுங்க.
நாட்டாமெ பெரியவருகிட்டெ வந்து,
"பஞ்சாயத்தால இம்மாந்தாங் முடியும். இதுக்கு மேல காரியத்தெ சாதவமா பண்ணிக்கிடுறது
ஒஞ்ஞ சூதானம். நாம்ம இப்பவே ஆள அனுப்பி நம்மட சம்சாரத்தையும் இன்னும் ரண்டு பொண்டுகளையும்
வர வைக்கிறேம். நீஞ்ஞ கொமார்ர அழைச்சிட்டுச் சின்னவர்ர சொன்னபடிக்குக் கெளப்பிட்டு
வர்ற வேலயப் பாருங்க!"ன்னாரு நாட்டாமெ.
சரிதாம்ன்னு பெரியவரு துண்டெ ஒதறி தோள்ல
போட்டுக்கிட்டாரு. அப்பிடி போட்டுக்கிட்டு இருக்குறப்பவே ஊருப் பெரிசுகள்ல ஒண்ணு
எழுந்து வந்து நாட்டாமக்காரரு காதுல கேக்குறாப்புல குசுகுசுன்னு, "அவ்வேம் வேற
ஸ்டேசன், கோர்ட்டுன்னு என்னன்னவோ சொல்றாம். பாத்து மொறை பண்ணுங்க. நாளைக்கி நாமல்லாம்
போயி நிக்குறாப்புல ஆயிடப் போவுது. ஏஞ் சொல்றேம்ன்னா சட்டம் இன்னியத் தேதிக்கு அவ்வேம்
பக்கந்தாம் நிக்குது. நம்மடப் பக்கம் கெடையாது. கூண்டோட வெச்சி ஆம்பளைகள எல்லாத்தையும்
உள்ளாரத் தள்ளிப்புட்டாம்ன்னா வெச்சுக்கா நாளைக்கி வூட்டுல இருக்கற நம்மட பொண்டு புள்ளைக
நம்ம சாதிக்கில்லே. அவ்வேம் சாதியப் பிடிச்சிக்கிட்டு தொங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதாங்"ன்னாரு.
அப்பிடிச் சொல்லிப்புட்டு அந்தப் பெரிசு,
பெரியவர்ர ஒரு பார்வெ பாத்து, "ந்நல்லா பொண்ண பெத்து வெச்சிருக்கீயே? இழுத்துட்டு
ஓடுறதுக்கு வயக்காட்டுப் பயத்தான கெடைச்சிது? வேற பயலுவோ ஒருத்தனும் கெடைக்கலீயாக்கும்?
எதாச்சிம் ஒரு குடியானப் பயலுவோன்னா, செரித்தாம் ஆச்சுன்னு கூட பேசி வுட்டுக் கட்டி
வுட்டுப்புடலாம். எல்லாம் வ்வே கேஸ்ஸால்லா இருக்கு. நாளைக்கு கல்யாணங் காட்சி கலப்புன்னு
ஆச்சுன்னா எந்தச் சாதியில இருக்குறதா நெனைப்புங்றேம்? ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தாம்
கேக்குறேம்! அந்த அளவுக்கு வுட்டுப்புடாம சட்டுபுட்டுன்னு ஆவ வேண்டியதெ பாத்து இத்தெ
முடிக்குற வேலயப் பாக்கணும். ஒஞ்ஞ குடும்பத்து பொண்ணு பண்ணுன வேலையால நாளைக்கி அவனவனும்
குடியானத்தெருக்குள்ள வந்து பொண்ணு கிண்ணுன்னு கேட்டுட்டு நிக்கப் போறாம்?"ன்னாரு
அந்த ஊருக்காரப் பெரிசு. அதெ கேக்க கேக்க பெரியவருக்குக் கோவம்ன்னா கோவம் தாங்க முடியல.
அந்தப் பெரிச ஒரு மொறைப்பு மொறைச்சாரு, இதுக்கான பதிலெ பின்னாடி எப்படி வெச்சு சொல்றோங்ற
மாதிரிக்கி. "நம்மள மொறைக்கிறதெ வுட்டுப்புட்டு ஆவ வேண்டிய காரியத்தெ பாக்கணும்ங்காணும்!"ன்னு
சொல்லிட்டுப் பொத்திட்டுப் போயி உக்காந்தாரு அந்த ஊருக்கார பெரிசு.
பெரியவரு குமாரு அத்தான் பக்கமா வந்தாரு.
"ஒஞ் சித்தப்பன் வந்து வாக்குச் சொல்லணும்னு எதிர்பார்ப்பு ஆவுது. நாம்ம கெளம்புறப்பவே
தேர்ர இழுத்துப் பாத்துட்டேம். திருவாரூர தேர்ர அசைப்புடலாம். ஒம்மட சித்தப்பங்காரன
அசைக்க முடியல. கெளம்பி நீயும் வா. எதாச்சிம் ஞாயம் வெச்சி அவனெ இஞ்ஞ கொண்டாந்தாவணும்!"ன்னாரு
பெரியவரு.
"வாப்பா! இன்னிக்கு ரண்டுல ஒண்ணுப்
பாத்துப்புடுவேம். பாத்தாத்தாம் இந்தப் பயலுவோ ஒரு அடக்கத்துக்கு வருவானுவோ. இல்லன்னா
வயக்காட்டு பயலுவோ மாமேங் மச்சாங் ஒறவு வெச்சிப்புட்டு வந்துப்புடுவானுவோ. நாம்ம
தோள்ளல துண்டெ போட்டுக்க முடியாம, இடுப்புல கட்டிக்கிட்டுத்தாம் அலஞ்சாவணும். இனுமே
ஊர்லேந்து ஒரு பயல வெச்சுக்கிடாம குடியான பயலுவோ அத்தனெ பேத்தையும் ஒருத்தருக்கொரு
பேசி வெச்சி வயல்ல எறக்குனாத்தாம் செரிபட்டு வருவானுவோ!"ன்னு சொல்லிக்கிட்டெ
பெரியவரோட கெளம்புனுச்சு குமாரு அத்தான்.
"இந்தாருடா கொமாரு! நாம்ம கூப்புட
வேண்டியதெ கூப்ட்டுப் பாத்துட்டேம். இனுமே உள்ளார வந்தா ந்நல்லா இருக்காது. நாம்ம இப்பிடிக்கு
நம்மட வூட்டு வாசப்படிக்கிட்டேயே நின்னுகிடுறேம். நீயி உள்ளார போயி பதனமா வெளியில
கெளப்பிட்டு வா! மிச்சத்தெ நாம்ம பாத்துக்கிடுறேம் என்னத்தெ சொல்லணும், எப்பிடிச்
சொல்லணுங்றதெ?"ன்னாரு பெரியவரு.
சின்னவரு வூட்டு மின்னாடி வந்து நின்னு
குமாரு அத்தான், "சித்தப்பா!"ன்னு கொரல கொடுத்துச்சு. சின்னவரு அதெ காது
கொடுத்துக் கேட்டது மாதிரி காட்டிக்கிடாம வூட்டுக் கூடத்துக்குள்ளயே உக்காந்திருந்தாரு.
ரசா அத்தையும், சுவாதி அத்தாச்சியும் அவருக்கு ரண்டு பக்கமா ஆளுக்கொரு தெசையா உக்காந்திருச்சுங்க
மூசு மூசுன்னு அழுதுகிட்டு. குமாரு அத்தான் தோள்ல போட்டிருந்த துண்டெ எடுத்து ரண்டு
பக்கமும் காத்துல ஒரு விசுறு விசுறுனுச்சு. பெரியவரு தன்னோட வூட்டு வாசப்பக்கத்துக்கிட்டேயே
நின்னுகிட்டாரு. துண்டெ எடுத்து விசுறுன குமாரு அத்தான் அதெ விசுறிகிட்டு, வூட்டுக்குள்ள
நடுக்கூடத்துக்குப் போயி, "சித்தப்பா! எதுக்கும் பயப்படாத. நாம்ம இருக்கேம்.
பயப்படாத ஆம்மா! நம்மப் பக்கந்தாம் எல்லாம் நடக்கப் போவுது. அதுக்கான வேலய அத்தனையும் பாத்தாச்சி. நீயி வந்து மட்டும்
ஒத்த வார்த்தெ! பொண்ணு நம்ம வூட்டுப்பக்கம் வந்தாவணும்னு ஒத்த வார்த்தெ சொல்லு!"ன்னுச்சு.
சின்னவரு குமாரு அத்தான ஏற எறங்கப் பாத்துப்புட்டு,
"யார்ரு இந்தத் தொத்தப் பயெ? வெளியில போடா பொட்டப் பயலே!"ன்னாரு. அந்த
வார்த்தையக் கேட்டதும் குமாரு அத்தானுக்குக் கோவம் வந்துப்புடுச்சு.
"யாரு நாமளா பொட்டப் பயெ? பொண்ண
பெத்து வயக்காட்டுப் பயலுவோளோட ஓட வுட்டுருக்கீயே நீந்தாம் பொட்டெ! நாம்ம அன்னிக்குப்
படிச்சிப் படிச்சிச் சொன்னதுக்குப் பெறவும் கண்டுக்கிடாம இருந்த பாரு நீந்தாம் தொத்தப்
பயெ! ஒன்னால இன்னிக்கு நம்மச் சாதிக்கே எம்மாம் அசிங்கம் தெரியுமா? அஞ்ஞ பஞ்சாயத்துல
நின்னுகிட்டு ஒவ்வொருத்தனும் என்ன பேச்ச பேசுறாம் தெரியுமா? கோவம் வர்றாப்புல பேசுறே
நீயி! இருந்தாலும் நமக்குக் கோவம் வரல. அதால தப்பிச்சே! இப்போ கெளம்பி ஒழுங்கு மருவாதியா
பஞ்சாயத்துல வந்து நின்னு நாம்ம சொல்லிக் கொடுக்குறதெ கிளிப்புள்ளே மாதிரிக்கிச்
சொல்றே!"ன்னுச்சு குமாரு அத்தான்.
"போடா பொறம்போக்கு! போக்கத்தப்
பயலே! ஒம்மட வயசு ன்னடா? நம்மட வயசு ன்னடா? நாம்ம எத்தனெ ராப்பகல்ன்னு வேல பாத்திருக்கேம்
தெரியுமா? அந்த வருஷக் கணக்குல பாதி வயசு கூட கெடையாதுடா நீயி? நீயில்லாம் பேசுதீயா?
ஒழுங்கு மருவாதி கெடுறதுக்கு மின்னாடி வூட்ட வுட்டு வெளியில போயிடு!"ன்னாரு சின்னவரு.
"ச்சேய்! எதுக்கெடுத்தாலும் வூட்ட
வுட்டு வெளியில போ வெளியில போன்னா? ஒம்மட வூட்டுக்குள்ள ஆசப்பட்டா வந்து நின்னுகிட்டு
இருக்கேம்? ஒறவுங்றதுக்காக, சாதிக்காக வந்து நிக்குறேம்! இப்போ நீயி மட்டும் வரலேன்னா
வெச்சுக்கோ, சித்தப்பன்னும் பாக்க மாட்டேம். ஒதைச்சுக் கூப்ட்டு போவேம்!"ன்னுச்சப்
பாருங்க குமாரு அத்தான், சின்னவருக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்துப்புடுச்சு. ரசா
அத்தைக்கும், சுவாதி அத்தாச்சிக்கும் கூட இப்போ குமாரு அத்தான் மேல கோவந்தாம். ஒண்ணும்
சொல்ல முடியாம பொங்கிக்கிட்டு உக்காந்திருந்துச்சுங்க.
"அட ஒப்பந் தன்னானே! நாம்மப் பாக்கப்
பொறந்து குஞ்சிய கையிலப் பிடிச்சிக்கிட்டு நின்ன பயெ! நம்மாள அடிப்பானாம்ல. ஒடம்புல
ஒத்த எலும்புக்குத் தெம்பு இருக்காடா ஒனக்கு? ஓங்கியடிச்சா ஏங்கி அழுவ தெம்பு இருக்காடா
ஒனக்கு? வயசாச்சுன்னாலும் நமக்குத் தேக்குடா ஒடம்பு. தேக்குத் தெரியும்ல. அந்தத் தேக்குடா
ஒடம்பு. போடா வெளியில! போறீயா இல்லியாடா வெளியில!"ன்னு குமாரு அத்தானப் பிடிச்சி
எழும்பி தள்ள ஆரம்பிச்சிட்டாரு சின்னவரு.
ரசா அத்தையும், சுவாதி அத்தாச்சியும் எழுந்து
சின்னவர்ர பிடிச்சிக்கிட்டு, "அவ்வேம் சின்னப்பயதான தெரியாமப் பேசிப்புட்டாம்!
அதுக்காக வூட்ட வுட்டு வெளியில தள்ளாதீயே?"ன்னு பிடிச்சிக்கிட்டுங்க. சின்னவருக்கு
அப்பிடி ரண்டு பேரு பிடிச்சதும் வெறி கொண்டாப்புல ஆயிடுச்சு. யாராச்சிம் சண்டையில
பிடிச்சிக்கிட்டா தன்னெ ஒரு பலசாலியா நெனைச்சுக்கிற நெனைப்பு வந்து, பிடிச்சிக்கிட்டவங்கள
திமிறித் தள்ளுற கொணம் உண்டாயிடும். ரண்டு பொம்பளைகளையும் பிடிச்சித் தள்ளி வுட்டுப்புட்டு,
குமாரு அத்தானே நெஞ்சுல கைய வெச்சி தள்ளிக்கிட்டு கூடத்தெ தாண்டி திண்ணை வரைக்கும்
வந்தாரு சின்னவரு.
"சித்தப்பா வாணாம் சித்தப்பா! நல்லாயில்ல!
நாம்ம ஒரு பேச்சுக்குச் சொன்னதெ வெச்சிக்கிட்டு வெளையா பண்ணாதே சித்தப்பா! வயசுல மூத்த
நீயி! ஒம் மேல கைய வைக்கக் வடாதுன்னு பொறுமையா இருக்கேம். யப்பா வெளியிலத்தாம் நிக்குது.
இதெ பாத்துச்சுன்னா சரிபட்டு வாராது!"ன்னுச்சு குமாரு அத்தான்.
"பாக்கட்டும்டா! மதியாதவங்க வாசல்ல
மிதிக்காதேங்றதுதான வாக்கு. அந்த வாக்குப்படி இருக்கணுமா இல்லியா? என்னிக்கு நாம்ம
ஒம்மட வூட்டு வாசப்படியே மிதிச்சேம்? பெறவு ஏம்டா நீஞ்ஞ மட்டும் வெக்கம்கெட்டு நம்மட
வூட்டு வாசப்படியே மிதிக்குதீயே மானங்கெட்ட பயலுவோளா? ஒருத்தனுக்குத்தாம் பொறந்தீங்களா?
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருத்தெம் போறந்தீங்களா?"ன்னு பிடிச்சி திண்ணையிலேந்து
வேகமா பிடிச்சி குமாரு அத்தான சின்னவரு தள்ளுனாரு பாருங்க, குமாரு அத்தான் நெல கொள்ள
முடியாம, நெதானிக்க முடியாம வாசப்படி புரியாம, படி தடுமாறிப் போயி மல்லாக்க வந்து
வாசப்படிக்கு வெளியில ரோட்டுப் பக்கத்துல வுழுந்துச்சு பாருங்க, அதெ பாத்தாரு பாருங்க
பெரியவரு. அவருக்கு ரத்தம் அப்பிடியே கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு.
"எலேய் கொமாரு!"ன்னு பதறியடிச்சு
சத்தத்தெ வெச்சுக்கிட்டு பெரியவரு ஓடியாந்து மவனெப் பிடிச்சித் தூக்குனாரு. அவரு பெத்தப்
புள்ளீயோள்லயே அவரு தூக்கி வளத்த ஒரே புள்ளங்றது குமாரு அத்தாம்தாம். இந்தச் சத்தத்தெ
கேட்டு வூட்டுக்குள்ளார இருந்த செயா அத்தையும், பெரியவரோட கடைக்குட்டி பொண்ணு வேதவல்லி
அத்தாச்சியும் வாசப்படிப் பக்கமா தெருவுக்கு ஓடியாந்துச்சுங்க.
"எம் புள்ளயக் கொல்லப் பாக்குறானே
படுபாவிப் பயெ! நாம்ம அன்னிக்கு நின்னு அவ்வேம் வூட்டுப் புள்ளயக் காப்பாத்தி வுட்டதுக்கு
நமக்குக் கெடைக்குற தண்டனையா இத்து? இன்னிக்கு அவ்வேம் வூட்டுப் பொண்ண கரைசேக்கணும்னு
நிக்குற எம் மவ்வேனுக்குக் கெடைக்குற தண்டனையா இத்து? நல்லது பண்றதுக்கு தண்டனையாடா
இத்து? எலே கிட்டாம்! ஒம்மட நெஞ்சு அவிஞ்சாடாப் போச்சுது? என்ன பாவத்தெ செஞ்சேம்டா
நாம்ம? எந் தாயி வவுத்துல வந்து நீயும் பொறந்தே! பொறந்ததுதாம் பொறந்தெ எக்கேடு கெட்டோ
எஞ்ஞயாவது போயித் தொலைய வேண்டித்தானடா? ஏம்டா இஞ்ஞ வந்து எம் பக்கத்துல பாம்பு புத்து
வைக்குறாப்புல குடிய வெச்சி எம்மட வமிசத்தெ அழிக்க நெனைக்குறே?"ன்னு சத்தத்தப்
போட ஆரம்பிச்சாரு.
*****
No comments:
Post a Comment