16 Jun 2020

கட்டி வெச்சி தோல உரிப்போம்!

செய்யு - 480

            மாரியம்மன் கோயில்ல பஞ்சாயத்துக்கு ஊரு சனமே திரண்டிருக்கு. பெரியவரும் சின்னவரும் வரப் போறதெ எல்லாமும் எதிர்பாத்துட்டு கசமுசான்னு பேசிட்டு இருக்குதுங்க. அந்த நேரமா பாத்து பெரியவரு மட்டுந்தாம் வர்றாரு. சின்னவரு பின்னால வர்றார்றான்னு பாத்தா ஆளெ காங்கல.
            நாட்டாமக்காரரு கேக்குறாரு, "சின்னவர்ர காங்கலயே. வாரச்சே அழைச்சிட்டு வந்திருக்கலாமுல்ல. எத்தனெ தவா ஆளெ அனுப்பிச்சி வுடுறது? சனமெல்லாம் ரொம்ப நேரமா உக்காந்து கெடக்குதுங்க!"ன்னு.
            பெரியவரு நாட்டாமக்காரரு பக்கத்துல வந்து காதோட காதா, "அவ்வேம் வர்றமாட்டாம் யம்பீ! கூப்ட்டுப் பாத்தாச்சு! வர்ற மாட்டேம்னு அலும்பு பண்ணுறாம்!"ன்னாரு.
            "பஞ்சாயத்து முடிவுன்னாலும் முடிவெடுக்குறதுக்கு மின்னாடி அப்பங்கார்ரருங்ற மொறையில செல விசயங்கள கலந்துக்கிட்டு ஆவணும்ல. ஒறவெ வெச்சிக்கிறதா? வாணாமா?ங்றதெ குடும்பஸ்தங்கிற மொறையில அவரு வாயால ஒரு வார்த்தையெ கேட்டுப்புட்டா நாளிய தேதிக்கு ஒரு வில்லங்கம் இல்லாம போயிடும் பாருங்க. வெவரம் அறிஞ்சவங்க நீஞ்ஞ. இப்பிடிப் பேசுறது ஏத்தாப்புல இல்லீயே!"ன்னாரு நாட்டாமக்காரரு.
            "நாம்ம சொல்ல வேண்டியதெ சொல்லிட்டேம். நம்மால ஆவல!"ன்னாரு பெரியவரு.
            "பேசுறது நம்மப் பக்கந்தாம் பேசி வுடப் போறது. இருந்தாலும் சில சடவுன்னு இருக்குல்லா. அத்தும் பேருக்குத்தாம். ஊரு கட்டுமானத்துக்கு நாமளும் கட்டுப்படறேம்னு ஒரு ஞாயம் வைக்கிறதுக்குத்தாம் அதல்லாம். குடியானவேம் வைக்குறப் பஞ்சாயத்துல குடியானவனுக்கு எதுர்ப்பாவா பஞ்சாயத்து வைக்க முடியும்? இதல்லாம் தெரிஞ்ச சங்கதித்தாம். அதால கூட்டிட்டு வந்துப்புட்டா தேவல!"ன்னாரு நாட்டாமெ.
            "ஒஞ்ஞளப் பத்தி நமக்குத் தெரியாதாம்பீ! யார்ர ஊரு நாட்டாமாயப் போடணும்னு பாத்துல்லா வெச்சிருக்கேம் நாம்ம. அதுப்படியே பாத்துப் பண்ணி வுடுங்க. நாளைக்கு ஒரு குத்தமும் வந்துப்புடக் கூடாது!"ன்னாரு பெரியவரு.
            "அந்தப் பயெ சார்பா வூடும், தெருவும் உக்காந்து கெடக்கு. நாம்ம பொண்ணு பக்கமா வூட்டுலேந்து ஒருத்தரும் இல்லாம பேசுனா சொகப்படுமா? குத்தலால்லா வந்துச் சேரும்! நாளையத் தேதிக்கு நம்ம என்னத்தெ வெச்சுப் பேசுனோம்னு நாலு ஊருக்கார பயெ சூத்தாலச் சிரிப்பாம்!"ன்னாரு நாட்டாமக்காரரு.
            "நீஞ்ஞ ஆரம்பிச்சி வுடுங்கம்பீ! அவ்வேம் வர்ற வெக்கப்படுறதாவும், அவ்வேம் சார்பா நாம்ம பேசுறதாவும் சொல்லி ஆரம்பீங்க! எப்பிடிப் பேசுனாலும் சரித்தாம், கடசீயா மொற நம்மப் பக்கம் வர்ற மாதிரிக்கிப் பண்ணி வுட்டுப்புடுங்க. மித்தத்தெ நாம்ம பாத்துக்கிடுறேம்!"ன்னாரு பெரியவரு.
            நாட்டாமக்காரருக்கு அரை மனசுதாம். இருந்தாலும் ஊரு பெருசுகளோட ஒரு கலப்புக் கலந்துகிட்டாரு. ஊருப் பெரிசுகளுக்கும் இதுல உடம்பாடு இல்லத்தாம். இப்போ கூடியிருக்குற கூட்டத்தெ கலைச்சி வுடுறதுக்காவது எதாச்சிம் பேசியாவணும்ல, அதுக்காகப் பேச ஆரம்பிச்சாங்க.
            நாட்டாமெகாரரு தொண்டைய ஒரு செருமு செருமிக்கிட்டு ஆரம்பிச்சாரு. "இன்னிக்கு இத்தனெ சனம் கூடியிருக்காப்புல ஒரு சம்பவம் இதுக்கி மின்னாடி கெராமத்துல நடக்காத ஒண்ணு. கெராமத்துல அடுத்தவேம் பொஞ்சாதியக் கூட இழுத்துக்கிட்டு ஓடியிருக்காம். ஆன்னா அவ்வவேம் சாதிக்குள்ளாரத்தாம், அவ்வவேம் தெருக்குள்ளத்தாம். அதால அவ்வவேம் ஒறவுக்காரவனோள, தெருக்காரனோள கூட்டி வெச்சி அதெ பஞ்சாயத்துப் பண்ணி முடிச்சிருக்கோம். இப்பிடி சாதியத் தாண்டி, தெருவத் தாண்டி நடந்திருக்குற மொத வெவகாரம் இத்துதாம். இதெ ஊரே கூப்ட்டு வெச்சு பஞ்சாயத்து ஆவுறாப்புல சில சம்பவங்க நம்ம கட்டுக்கே தெரியாம செலது நடந்துப் போச்சு. எத்து எப்பிடி இருந்தாலும் ஊரு கட்டுமானம்னு ஒண்ணு இருக்கு. சாதின்னு என்ன மசுத்துக்குப் படைச்சாங்றேம்? அவனவனும் அவனவம் சாதிக்குள்ள கொள்வெனை, கொடுப்பினை வெச்சிக்கிடணும், அவனவம் சாதிக்குள்ள பொண்ணு புள்ளய எடுத்துக்கிடணும்னுத்தாம் வெச்சிருக்காம். அதுக்குத்தாம் ஊரு கட்டுமானம்னு ஒண்ணுத்தெ வெச்சிருக்காம். அதெ பாத்துக்கிட பஞ்சாயத்துன்னு ஒண்ணுத்தெ வெச்சிருக்காம். இப்பிடி சாதிக் கட்டுமனாத்த மீறி, அதால ஊரு கட்டுமனாத்தெ மீறி, அதால பஞ்சாயத்துக் கட்டுமானத்த மீறுனா அத்து தப்புங்றேம்!"ன்னாரு நாட்டாமெகாரரு.
            "செரியத்தாம் பேசுறாருய்யா நாட்டமெ! வெசயத்தெ பட்டுன்னு சொல்லி சுருக்குன்னு முடிச்சிட்டாப்புலயே! அவ்ளோதாங் சமாச்சாரம். சட்டுபுட்டுன்னு தீர்ப்ப எடுத்து வுடுங்க!"ன்னுச்சுங்க கோயிலுக்கு மின்னாடி இருந்த வேப்பமரக் கட்டையில உக்காந்திருந்த ஊரு பெரிசுங்க.
            "தீர்ப்பு ன்னய்யா தீர்ப்பு? செலம்பன் மவ்வேன் பண்ணுணது தப்புங்றேம். பண்ண தப்புக்கு பஞ்சாயத்தாரு மின்னாடி கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்டுக்கோணும். அத்தோட பஞ்சாயத்துக்கு அவ்ராதம் பத்துனாயிரத்து ரூவாவ எடுத்து வெச்சிப்புடணும். அஞ்சு வருஷ காலத்துக்கு அவ்வேம் குடும்பத்தோட கெராமத்துலு யாரும் குசலம் வெச்சிக்கக் கூடாது. அவனெயும் செரி, அவ்வேம் குடும்பத்தயும் செரி ஒதுக்கி வெச்சாவணும்! பொண்ணுக்கும் பயலுக்கும் இனுமே எந்தச் சம்பந்தமும் கெடையா. இதுல யாருக்காச்சிம் ஆட்சேபனன்னா முங்கூட்டியே சொல்லிப்புடணும். இதெ வாசகமா எழுதி கையெழுத்து ஆன பெற்பாடு அதெ மாத்தணும், இதெ மாத்தணும்னு நம்ம வூட்டுக்கு மின்னாடி யாரும் கரைச்சலு பண்ணக் கூடாது பாத்துக்கோ!"ன்னாரு நாட்டாமக்காரரு.
            எல்லா சனமும் பெரியவரையும், ராக்காயியையும் பாத்துச்சுங்க.
            பெரியவரு, "நாம்ம பஞ்சாயத்துத் தீர்ப்புக்குக் கட்டுப்படுறேம்!"ன்னாரு.
            ராக்காயியும், "நாமளும் குடும்பத்தோட கட்டுபடுறோங் சாமி!"ன்னுச்சு. அப்பத்தாம், "நாம்ம ஏத்துக்கிட மாட்டேம்!"ன்னாம் ராக்காயி மவ்வேன் சொடல.
            "அத்து ன்னடா தப்பு செஞ்சவேம் கட்டுப்பட மாட்டேம்ன்னா? உப்பெ தின்னவங் தண்ணியக் குடிச்சாவணும். தப்பெ பண்ணவேம் தண்டனெய அனுபவிச்சாவணும்! பண்ற தப்ப எல்லாத்தியும் பண்ணிப்புட்டு இப்போ தண்டனெய அனுபவிக்க மாட்டேம்ன்னாடா ன்னாடா? நொங்கத் தின்னவேம், நோண்டித் தின்னவனெ வுட்டுப்புட்டு நொம்பலம் நமக்கெதுக்குன்னு ஒதுங்கிப் போனவனெ கூப்புட்டு தண்டனெய வெச்சிக்கிடச் சொல்லுதீயா?"ன்னாரு நாட்டமெ.

            "பொண்ணு மேஜருங். நமக்கும் கலியாண வயசு ஆயிடுச்சுங். இந்த நாட்டுல கலியாண வயசு ஆனவங்க ஆம்பளெ, பொம்பளெ விருப்பப்பட்டா கலியாணம் பண்ணிக்கிடலாம்னு சட்டமெ இருக்குங். இதெல்லாம் நாமளா சொல்லல. பாடபுத்தகத்துல உள்ள சங்கதிங். சட்டத்தெ மீறி நாம்ம ஒண்ணுத்தையும் பண்ணலேங்!"ன்னுச்சு சொடல.
            "கலியாணங்றது ஆயிரம் காலத்துப் பயிருடா! ஒம்மட மசுருன்னு நெனைச்சுக்கிட்டீயாடா நீயி? பெத்தவங்க பாலூட்டி, சோறூட்டி வளத்து வைப்பாங்க. நீயி நோகாம வந்து நோம்பு கும்புட்டுப்புட்டுப் போவீயோ? அஞ்ஞ வூட்டுல பொண்ண பெத்தவம் ஒண்ணுஞ் சொல்ல முடியாம அவிஞ்சிப் போயிக் கெடக்காம். நீயி சட்டம் பேசுதீயோ? பஞ்சாயத்துத் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் செல்லும் பாத்துக்கோ!"ன்னாரு நாட்டாமெ.
            "செரிங்! ஒஞ்ஞ பேச்சுக்கே வர்றேம். ஓடிப் போன பயலுக்கு அவ்ராதம், கால்ல வுழுவுறது, ஊர வுட்டு ஒதுக்கி வைக்கிறதுன்னா, ஓடிப் போன பொண்ணுக்குப் பொண்ணோட குடும்பத்துக்கு ஒண்ணுங் கெடையாதாங்?"ன்னுச்சு சொடல.
            "எலே பெரியவங்க இருக்குற சபெ. சபெ அறிஞ்சிப் பேசணும் பாத்துக்கோ. ஊரு கட்டுமானம்னு ஒண்ணு இருக்கு. ஒம்மட இஷ்டத்துக்குப் பேசுனா நாக்கெ இழுத்து வெச்சி அறுக்குறாப்புல ஆயிடும். பொண்ணோட குடும்பத்துக்கு எப்டிடா ஞாயம் வைக்க முடியும்? பாதிக்கப்பட்டவங்க அவுங்க. ஒண்ணுஞ் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம அவிஞ்சுப் போயி உக்காந்திருக்காங்க. நம்ம கட்டுமனாத்துக்கு யோஜிச்சுதாம் இம்மாம் நேரம் ஒன்னய வுட்டு வெச்சிட்டு இருக்காங்க. இல்லன்னா வெச்சுக்கோ ஒன்னய அடிச்சி தொவம்சம் பண்ண எம்புட்டு நேரமாவும்? ஒழுங்கு மருவாதியா பண்ண தீர்ப்ப மதிச்சி பொண்ண வுட்டுப்புட்டு ஒதுங்கிப் போயிடு. இல்லன்னா நடக்குறதெ வேற?"ன்னாரு நாட்டாமெ.
            "அதான்னே! வயக்காட்டுப் பயலுவோ இப்பிடி பேச ஆரம்பிச்சா ஊரு என்னத்துக்கு ஆவுறது? இந்தப் பயலுவோ இப்பிடிப் பேச கெளம்பிட்டதாலத்தாம் வருஷா வருஷம் ஒண்ணு மழெ பெய்யுறதில்ல, பேஞ்சாலும் ஊரே வெள்ளக்காடா போவுது!"ன்னுச்சுங்க உக்காந்திருந்த பெரிசுங்க.
            "பொண்ண கூப்ட்டு வெச்சுக் கேளுங். பொண்ணுக்கு நம்மள பிடிக்கலன்னா இந்த நேரத்துக்கே ஒஞ்ஞ தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு பஞ்சாயத்து மின்னாடி ன்னா ஒவ்வொருத்தரு கால்லயும், ஏம் சின்னபுள்ள கால்லயும் வுழுந்துட்டு பத்துனாயிரம் ன்னா? இருபத்துனாயிரம் கட்டிட்டுப் போறேங். அஞ்சு வருஷம் ன்னா இருவது வருஷம் ஊர்ரே வுட்டு ஒதுக்கி வையுங். சந்தோஷமா ஏத்துக்கிறேங்!"ன்னுச்சு சொடல.
            "சொடல சொல்றதுங் சரித்தாங். பொண்ண கேட்டுப்புட்டு முடிவெ பண்ணுங்! அந்தத் தீர்ப்புக்கு தெரு சனமே கட்டுப்புடுறோங்!"ன்னாங்க இப்போ வயக்காட்டு ஆளுங்க ஒண்ணு தெரண்டு. இதுக்குப் பெறவு வயக்காட்டு சனங்க மத்தியில சலசலப்பு எழுந்துடுச்சு. நாட்டாமெயோட நெலமெ கொஞ்சம் இப்போ சிக்கலாயிப் போயிடுச்சு.
            "வெவரம் தெரியாத பொண்ணுகிட்டே என்னத்தெடா கேக்குறது? கலியாணங் கருமாதியில்லாம் பத்தி அதுக்கென்னங்கடா தெரியும்? அதல்லாம் பெரியவங்களா பாத்து பண்ணி வைக்கிறதுல்லா!"ன்னாரு நாட்டாமெ.
            "அப்போ செரிதாங். பொண்ணோட அப்பங்காரரே வந்து எதா இருந்தாலும் சொல்ல சொல்லுங். பெறவு பொண்ணயும் கேளுங்!"ன்னாங்க வயக்காட்டுச் சனங்க எல்லாம் ஒண்ணு சேந்துக்கிட்டு.
            "பொண்ண பெத்த தகப்பேம் இஞ்ஞ வர்ற வெக்கப்பட்டுக்கிட்டு நிக்காம். பொண்ணு வூட்டுச் சார்பா பொண்ணோட பெரிப்பா நாம்ம இருக்கேம். நாம்ம இப்போ சொல்றேம். பொண்ணுக்கும் செரித்தாம், பொண்ணோட அப்பங்ற மொறையில நமக்குத்தாம் செரித்தாம் இதுல இஷ்டமில்ல!"ன்னாரு பெரியவரு.
            "அதாங் சொல்லிட்டார்ல எங்கப்பாரு! பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டுத்தாம் நாம்ம இந்நேரம் வரைக்கும் பேயாம இருந்தேம். இனுமே பேசுனாத்தாம் செரிபட்டு வாரும் போலருக்கு. இப்பிடி ஒவ்வொரு பயலும் வூடு பூந்து பொண்ண தூக்குனா பெறவு பொண்ண பெத்தவம்லாம் எப்பிடிடா ஊர்ல நிம்மதியா ஒறங்குறது?"ன்னுச்சு இப்போ குமாரு அத்தான்.
            "வெக்கம் அத்து இத்துன்னல்லாம் பேசிட்டு மழுப்பப்படாது. ஏம் நாஞ்ஞ இப்போ குடும்பத்தோட வந்து நிக்கலீயாங்? எஞ்ஞளுக்கில்லாம் வெக்கம், மானம், ரோஷம் இல்லியாங்? நாஞ்ஞல்லாங் சோத்துல உப்பப் போட்டுத் திங்கலீயாங். பஞ்சாயத்துன்னு வந்துப்புட்டா எல்லாமும் வந்துதாம் ஆவணுங். பஞ்சாயத்துக்குப் பொண்ணு வூட்டுச் சனம் அத்தனையும் வாரணும்னு சொல்லல. ஒருத்தராச்சிம் வாரணுமா இல்லியா?"ன்னுச்சு சொடல.
            "அதாங் நாம்ம இருக்கேம்னு சொல்லிட்டு இருக்கேம்னு சொல்றேம்ல!"ன்னாரு பெரியவரு கோவம.
            "பெரிய மெராசு! நீஞ்ஞ பேச வாணாம். ஒஞ்ஞளுக்கும் சின்ன மெராசுக்கும் உள்ள பங்கம் ஊரு அறிஞ்சது. நீஞ்ஞ சின்ன மெராசுக்கு ஞாயம் செய்யுதீங்கன்னு நாம்ம எப்பிடி நம்ப முடியும்? நாம்ம ஒண்ணுஞ் சொல்லல. சின்ன மெராசு வந்து ஒத்த வார்த்தெ சொல்லச் சொல்லுங். பெறவு பொண்ண வெசாரிங். பெறவு நம்மள வெசாரிங். அதாங் மொறைன்னு சொல்றேங். நாம்ம பஞ்சாயத்துக்குக் கட்டுபடலன்னு சொல்ல வாரல!"ன்னுச்சு சொடல.
            "ன்னடா நெனைச்சுக்கிட்டு இருக்கீயே? நாம்ம வெள்ளாம பண்ணாம ஒரு வருஷத்துக்கு வயக்காட்ட அப்பிடியே போட்டா தெரியும் நெலமெ. நாஞ்ஞ வெள்ளாம பண்ணுறது நாஞ்ஞ வூட்டுக்கு நெல்லு மூட்டைய கொண்டாரதுக்குன்னா நெனைச்சுப்புட்டீங்க? ஒஞ்ஞளுக்கு வேலக் கொடுக்கணும், கஞ்சித் தண்ணி ஊத்தணும்னுத்தாம். இந்த நேரத்துக்கு பஞ்சாயத்துல நாம்ம கட்டுமானம் பண்ண முடியும், ஊர்ல ஒருத்தரும் வெள்ளாம பண்ணாமப் போடுங்க, பெறவு தெரியட்டும் நம்மளோட நாத்தம்ன்னு. குண்டி காய்ஞ்சா சண்டிக் குதிரெயும் வழிக்கும் வந்துப்புடும்!"ன்னாரு பெரியவரு.
            "பெரிய பண்ணாடி ஒஞ்ஞள நம்பித்தாம் நாஞ்ஞ இருக்கோங். ஒஞ்ஞள பகைச்சிக்கிட்டு எஞ்ஞ வூடுகள்ல நாஞ்ஞ பொங்கித் தின்ன முடியா. அதுக்காக தெருவே சேந்து கால்ல வுழுவோறோங். நாஞ்ஞ பண்ணது தப்பாவே இருந்துட்டுப் போகட்டுங். ரண்டு வெசாரணயக் கேக்குறோங். ஒண்ணு சின்ன பண்ணாடி வந்து ஒரு வார்த்தெ வைக்கட்டுங். பொண்ணு இன்னொரு வார்த்தெ வைக்கட்டுங். அத்துல தப்புன்னா தெருவே தண்டனெய ஏத்துக்கிடுறோங்!"ன்னாங்க வயக்காட்டு ஆளுங்க எல்லாமும்.
            "அதல்லாம் முடியா. பொண்ணு வூட்டுச் சார்பா பெரிய மெராசு சொன்னதுதாங். பொண்ணுக்கு வெவரம் தெரியாத வயசு. பொண்ண நிப்பாட்டில்லாம் பஞ்சாயத்து எதையும் கேக்க முடியா. பொண் புத்தி பின் புத்திங்றதுதாங் வழக்கு. இன்னிக்கு ஒண்ணுத்தெ சொல்லும், நாளைக்கி ஒண்ணுத்தெ சொல்லும். அதுக்குல்லாம் முந்தானையப் பிடிச்சிக்கிட்டு பஞ்சாயத்துக் கட்டுமானம் ஆடிட்டு இருக்க முடியா!"ன்னாரு நாட்டாமெகாரரு.
            "அப்பிடின்னா நாமளும் பஞ்சாயத்துக்குல்லாம் கட்டுப்பட முடியா!"ன்னுச்சு சொடல.
            "கட்டுப்புட முடியலன்னா வேப்பமரத்துல கட்டி வெச்சி தொல உரிக்குறாப்புல ஆயிடும்! என்னய்யா எதிரு பேச்சு பேசிட்டு இருக்காங். பாத்துட்டு உக்காந்திருக்கீயே?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ச்சும்மா நிறுத்தும்பீ! அதல்லாம் அந்தக் காலம். இப்பிடி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா என்னப் பண்ணுறதுன்னு யோஜனெ பண்ணித்தாம் கலக்டருக்கு ஒரு மனு, போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு மனு, முதலமைச்சருக்கு ஒரு மனுன்கு எழுதி ரீஸ்தரு தபாலு பண்ணிருக்கேங். இன்னிக்கு இல்லன்னாலும் நாளைக்கி அத்துப் போயிச் சேந்துப்புடுங். போயிச் சேந்துச்சுன்னா போலீஸ் ஸ்டேசன் இல்லன்னா கலக்டரு ஆபீஸ்ல வெச்சிதாங் பஞ்சாயத்து. அஞ்ஞல்லாம் ஒஞ்ஞ பஞ்சாயத்து செல்லாது. சட்டம் சொல்றதுதாங் பஞ்சாயத்து. நமக்கும் தாலியக் கட்டி குடித்தனம் பண்றதுங் சொலபமாப் போயிடுங். கட்டப் பஞ்சாயத்துன்னு வெச்சு அஞ்ஞ நிருபீச்சேங் போதுங். அத்தனெ பேத்தும் கூண்டோட போயி உக்காந்து கம்பி எண்ண வேண்டியதுதாங்!"ன்னுச்சு சொடல.
            நாட்டாமெகாரரு உட்பட பஞ்சாயத்து பெரிசுங்க எல்லாத்துக்கும் சர்வநாடியும் ஒடுங்னாப்புல ஆயிடுச்சு இப்போ. எல்லாரும் ஒருத்தொருத்தரு மொகத்த முழி பிதுங்கிப் போறாப்புல பாத்துக்கிட்டாங்க. தாலியக் கட்டாட்டாலும் வெவரமா செல காரியங்கள பண்ணிப்புட்டுத்தாம் தெனாவெட்டா நிக்குறாம் சொடலன்னு மனசுக்குள்ள ஒவ்வொருத்தரும் நெனைச்சிக்கிட்டாங்க. இதுல ஆழந் தெரியாம கால வுட்டப்புட்டு ஒருத்தருக்கொருத்தரு மாட்டிக்கிட கூடாதுங்ற யோசனெ ஒவ்வொருத்தருக்கும் வந்துப் போக ஆரம்பிச்சிது.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...