15 Jun 2020

தாலியறுக்குறாப்புல ஆயிடும்!

செய்யு - 479

            ஓடிப் போன கிட்டான் ஆச்சாரிப் பொண்ண பெரியவரோட மவ்வேன் குமாரு சாமர்த்தியமா பிடிச்சாந்து கொண்டுப்புட்டாம்னு ஊரே தெரண்டு பஞ்சாயத்து வைக்க மாரியம்மன் கோயிலுக்கு வந்துப்புடுச்சு. ஊருப் பெரிசுங்க, நாட்டாமெகாரவுங்க எல்லாமும் கோயிலுக்கு வந்துப்புட்டாங்க. வராத ஆளுன்னுப் பாத்தா சின்னவரு வூட்டுலேந்து ஒருத்தரும் வாரல. பெரியவரும் இந்தச் சங்கதியையெல்லாம் கேள்விப்பட்டுக்கிட்டு வூட்டுலயே இருக்காரு. மேக்கொண்டு என்னத்தெ பண்ணுறதுங்ற யோசனெ அவரோட மனசுக்குள்ள பலமா ஓடுது. பஞ்சாயத்துலேந்து ஆளுங்க வந்து கூப்புடுறாங்க.
            பெரியவருக்கே தம்மோட மவ்வேன் குமாரு அத்தான் மேல கோவம். "இழுத்தது இழுத்தாந்தாம்! இப்பிடிக்கா நம்மகிட்டெ கூட ஒரு வார்த்தெ சொல்லாம, ஊரே சின்னாபின்னப்பட்டு போறாப்புல கோயில்லக் கொண்டு போயி நிறுத்துவாம்? நம்ம வூட்டுப் பொண்ணுன்னா கண்ணுங் கண்ணும், காதுங் காதும் வெச்ச மாதிரிக்கில்லா வூட்டுல கொண்டாந்து வெச்சி ரகசியமா பஞ்சாயத்தெ வெச்சி என்னா ஏதுன்னு வெசாரிச்சி மெரட்டி வுடணும்! அதெ வுட்டுப்புட்டு இன்ன வேலயப் பண்றாம்னே? எள ரத்தம். இந்தப் படிக்கித்தாம் பண்ணும். ஏற்கனவே அந்தக் கிட்டாம் பயெ வேற ஏகக் கடுப்புல இருக்காம்? இதுல இவ்வேம் வேற? ஞாயம் வைக்கிறேம்ன்னு பகைய வெச்சிக்கிறாம், கொள்ளிய அள்ளி தலையில வெச்சிக்கிறாப்புல!"ன்னு ஏகக் கடுப்பு பெரியவருக்கு.
            அத்து ஒரு பக்கம் இருந்தாலும், "செரித்தாம் பய அப்பிடி ஞாயம் வெச்ச ‍நெனைச்சது தப்புன்னாலும், நம்ம வூட்டுப் பொண்ண கெளப்பிக் கொண்டாந்துட்டாம். எவ்வேம் நெனைச்சாலும் இந்தக் காரியத்தெ பண்ண முடியா. அந்த வெதத்துல செரித்தாம். ன்னா ஒரு பஞ்சாயத்துதான. நம்மட ஊருக்குள்ள நடக்குறது. ஆளுங்க நமக்குச் சாதவமானவங்க. அதெ எப்பிடி வெச்சி அமுக்கனுமோ அந்தப் படிக்கு வெச்சி அமுக்கிக் காரியத்தெ சாதிச்சிப்புடலாம். பாத்துக்கிடலாம்! ன்னா ஒண்ணு நம்மகிட்டெ ஒரு வார்த்தெ கலந்துக்கிடணும். அதாம் பண்ணாம வுட்டுப்புட்டாம்!"ன்னு இன்னொரு பக்கம் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கையும் பெரியவருக்கு.
            பெரியவரு நேரா கெளம்பி சின்னவரு வூட்டுக்குப் போனாரு.
            "யத்தாம் பாத்தீங்களாத்தாம்! பொண்ணு பண்ண காரியத்தெ?"ன்னு கண்ணு கலங்கி ரசா அத்தை பெரியவரு மின்னாடி வந்து நிக்குது.
            "பெரிப்பா! இப்பிடி ஆவும்னு யாரும் கனவுல கூட நெனைக்கலீயே!"ன்னு சுவாதி அத்தாச்சி அழுதுட்டு வந்து நிக்குது.
            சின்னவரு என்னவோ யாரு வூட்டுலயோ சம்பவம் நடக்குறாப்புல ஒரு வெதமான வேதாந்த மனநெலையில நடுக்கூடத்துல நாற்காலியப் போட்டு உக்காந்திருந்தாரு. பாக்குறதுக்கு அப்பிடியே மோன நெலையில நிஷ்டையில உக்காந்து இருக்குறாப்புலயே இருக்கு ஒடம்போட அமைப்பு.
            பெரியவராவே பேச ஆரம்பிச்சாரு, "யிப்போ என்னத்தெ பண்ணலாம்னு இருக்குதீயே? பஞ்சாயத்துப் பண்ண கூப்புட்டு வுட்டுருக்காவோ!"ன்னாரு.
            சின்னவரு ஒண்ணும் பேயாம உக்காந்திருந்தாரு.
            "ஒண்ணும் கலங்காதடா யம்பீ! வானமா இடிஞ்சி தலை‍ மேல வுழுந்துப்புட்டு? வுழுந்தாலும் அதெ தூக்கி அந்தாண்ட போட்டுட்டு நடந்துதாம் போயாவணும். விழுந்துடுச்சே விழுந்துடுச்சேன்னு நசுங்கியே சாவவா முடியும்? நடந்தது நடந்துப் போச்சு. கலியாணம் ஆயிடுச்சா என்னங்றது தெரியல. ஆயிருந்தாலும் அத்து வுட்டு வூட்டுக்கு அழைச்சாந்து நம்ம சனத்துலயே ஒரு பையனாப் பாத்து கலியாணத்தெ முடிச்சிப்புடுவேம்! அதாங் நல்லது!"ன்னாரு பெரியவரு.

            அதெ கேட்டுக்கிட்டு, "அப்பிடித்தாம் பண்ணணும் பெரிப்பா!"ன்னுச்சு சுவாதி அத்தாச்சி.
            "ஓடுகாலின்னு ஊருக்கே தெரிஞ்சி சந்திச் சிரிச்சிப் போச்சு! ஓடுகாலிய எவ்வேம் கட்டுவாம்?"ன்னுச்சு ரசா அத்தை.
            "அப்பிடின்னா அழைச்சிட்டு வார வாணாம்! அந்தப் படிக்கே வுட்டுப்புடலாம்ங்றீயா?"ன்னாரு பெரியவரு. இந்த எடத்துலத்தாம் சின்னவரு கொதிச்சுப் போயி எழுந்தாரு.
            "ஓம் மவ்வேம் என்ன மசுத்துக்கு ஓடிப் போனதெ கண்டுபிடிச்சி கார்ரெ வெச்சிக் கொண்டாந்து பஞ்சாயத்துல நிறுத்துனாம்? நம்மள அவமானம் பண்ணுறதுக்கா? அவ்வேம் யாரு நம்மட குடும்ப வெசயத்துல தலையிடுறதுக்கு? நம்மட பொண்ணு ஓடிப் போறா? ஓடாமா வூட்டுல கெடக்குறா? அவனுக்கென்ன வந்துடுச்சு? எம் பொண்ணு ஓடிப் போவவே யில்ல. ஒம் மவ்வேம் எம்மட பொண்ணுக்கும் எவனோ ஒருத்தனுக்கும் தொடர்பு இருக்குறதா சொல்லிச் சொல்லியே ஓடிப் போவ வெச்சிட்டாம். நம்மட பொண்ணுக்கு இத்துக்கும் சம்மந்தமெ கெடையாதுங்றேம். கதையெ கட்டி கட்டி ஒம் மவ்வேம் பண்ணுன வேல. எல்லாத்துக்கும் காரணம் ஒம்மட மவ்வேம்தாம். நீயும் ஒம்மட மவனும் திட்டம் போட்டு எங் குடும்பத்தெ அழிக்கி நெனைக்குதீயே!"ன்னாரு சின்னவரு காட்டமா.
            "எந்த நேரத்துல என்ன பேச்செ பேசிக்கிட்டு? ஊருக்காரனுவோ பஞ்சாயத்துல நிக்குறானுவோ! போயாவணும். நாட்டாமெ உட்பட நம்மள வுட்டுக்கொடுத்து பேசுற ஆளுக கெடையாது. நாம்மப் போயி அஞ்ஞ வைக்குறதுதாங் ஞாயம். நமக்குன்னு நாலு பேத்து எந்நேரத்துக்கும் நிக்குறவேம் இருக்காம். ஆத்திரப்பட்டு அறிவெ வுட்டுப்புட்டுப் பேசக் கூடாது. இப்பிடில்லாம் செல சம்பவங்க நடக்குறது உண்டுத்தாம். அதெ சரி பண்ணிக்கிறதுக்கான வழிமொறைக இல்லாம இல்ல. பொண்ணப் பெத்த தகப்பங்ற மொறையில நீயி வந்தாவணும். ஊரு, ஊரு மொற, ஊரு பஞ்சாயத்தெ நாம்ம மதிச்சித்தாம் ஆவணும்!"ன்னாரு பெரியவரு.
            "இந்தாரு நீயும் ஒம்மட மவனும் திட்டம் போட்டு நம்மள பஞ்சாயத்துல வெச்சி அசிங்கம் பண்ண நெனைக்குதீயே! கலெக்டர் வரைக்கும் போவேம். கட்டப் பஞ்சாயத்து வைக்குதீயேன்னு. எல்லா பயலும் உள்ளாரப் போயி கம்பி எண்ண வேண்டியதுதாங் பாத்துக்கோ!"ன்னாரு சின்னவரு.
            "ன்னாட நீயி மூளெ கெட்டுப் போன பய மாரிக்கிப் பேசுதே? அங்ஙன நிக்குறது நம்ம வூட்டுப் பொண்ணு! அசிங்கம் ஆயிட்டு இருக்குறது நம்மட குடும்பம் வெசயம்ன்னா கூறு கெட்டுப் போயி பேசுதீயேடா? பொண்ணு ஓடிப் போனதுல பைத்தியமாயிட்டீயாடா வெவரங் கெட்ட பயலே?"ன்னாரு பெரியவரு.
            "ஆம்மா நம்மா வெவரங் கெட்ட பயெ! கூறு கெட்ட பயெ! மூளெ கெட்ட பயெ! நீயும் ஒம்மட மவனும் வெவரம், மூளெ உள்ள ஆளுங்க! ஏம் பொண்ணு ஓடிப் போச்சுல்லா! நாம்ம ஒம்மட வூட்டுக்கு வந்துச் சொன்னமா? எதாச்சியும் பண்ணி வுடுன்னு ஒங் கால்ல வுழுந்து கேட்டமா? நீயி எதுக்குச் சம்மந்தம் இல்லாம எங் குடும்ப வெசயத்துல தலையிடுறெ? ஓடிப் போனது ஓடிப் போனதா இருக்கட்டும்ன்னு தலைய முழுவிட்டு நாம்ம இருந்திருப்பேம். இப்பிடி பஞ்சாயத்துன்னு வெச்சி அசிங்கம் பண்ண பாக்குதீயா? எம் பொண்ணு செத்துப் போயிட்டதா நெனைச்சி இருந்திருப்பேம். அதெயே ஊரு முழுக்க கதையா கட்டி வுட்டுருப்பேம்! இப்போ எல்லாம் போச்சுல்லா? ஒன்னாலயும் ஒம்மட மவனாலயும் போச்சுல்லா?"ன்னாரு சின்னவரு.
            "இப்போ ன்னா ஆச்சுப் போயிடுச்சுன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறே? அதாங் கொமாரு பயெ பொண்ணையும் அந்த நாதாறிப் பயலையும் எப்பிடிப் பிடிக்கணுமோ அப்பிடிப் பிடிச்சிக் கொண்டாந்துப்புட்டாம்ல! பெறவென்னடா பித்துக்குளிப் பயலப் போல பேசுதீயே?"ன்னாரு பெரியவரு.
            "அதெப்பிடா! அண்ணேம்ன்னு பாக்குறேம்? ஓடிப் போன எடம் ஒம் மவ்வேனுக்கு எப்பிடித் தெரியும்? அப்ப அதுக்கும் அவ்வேம் கொடை பிடிச்சிட்டு நின்னுருக்காம் கட்டிலு வரைக்கும்! அப்பிடித்தானே! அப்போ ஓடிப் போவவும் வுட்டுப்புட்டு, பிடிக்கிறாப்புல பிடிச்சாந்து வந்து நல்ல பேர்ர தட்டிக்கப் பாக்குறாம்ன்னா ஒம்மட மவ்வேம்? நீயிப் பெத்த மவராசம்! செர்ரி ஒங் கணக்குக்கே வர்றேம்! எப்பிடியோ நல்லதோ கெட்டதோ கொண்டாந்தது கொண்டாந்தாம்! எப்பிடிக் கொண்டாந்திருக்கணும்? ஊருக்குத் தெரியாமா வூட்டுல கொண்டாந்து வுட்டுப்புட்டு அந்தப் பயலெ அடிச்சிச் சவட்டிருக்கணும்! அதெ வுட்டுப்புட்டு இப்போ ஊருக்கே தெரியுறாப்புல ஞாயம் வைக்குறாம்ன்னே இனுமே ஊரு சிரிக்கா? சந்திச் சிரிக்கா? நாளைக்கி அந்த நாற முண்டெயக் கொண்டாந்து நாம்ம எப்பிடி கலியாணத்தெ கட்டி வைக்கிறது? இத்துல்லாம் பண்ற வேலன்னு பண்ணுறாம்ல?"ன்னாரு சின்னவரு.
            "இந்தாருடா கலியாணத்தெ பண்ணி வைக்கிறது நம்மட பொறுப்பு. சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயி வெச்சேம்ன்னா வெச்சுக்கோ பொண்ணுக்கு இருக்குற அழக்கும், தெறமெக்கும் கட்டிக்கிட ஆயிரம் பேரு வந்து நிப்பாம். அதெ பத்தி வெசனப்படாதெ. அத்து நம்மட பொறுப்பு. நாம்ம இருக்கேம். சந்தானம் இருக்காம். இந்த வேலயெ அவ்வேனும் நாமளும் பாத்துப்பேம்!"ன்னாரு பெரியவரு.
            "ம்! பண்ணுவே பண்ணுவே! இத்தெ மாதிரி ஒரு ஓடுகாலிக்கி எப்பிடிப் பண்ணி வைப்பேன்னு தெரியாதா? ந்நல்லா இருக்குற பொண்ணுகளுக்கே மாப்புளத் தேடி கட்டி வைக்குறதுக்குள்ள நாக்கு தள்ளுது! ஒரு பயெ ந்நல்லா பய இருக்கான்னா நாட்டுல? இத்துல அந்தச் சிறுக்கிக்கு நீயி நல்ல மாப்புள்ளயா பாத்துக் கட்டி வைப்பே? இப்பவோ சந்திச் சிரிச்சாச்சு. பெறவு கலியாணம்னு ஒரு தாயோளிப் பயலெ பண்ணி வெச்சு, அடுத்த ஒண்ணு பண்ணி அடுத்ததா சந்திச் சிரிக்கிறதா?"ன்னாரு சின்னவரு.
            "எலே நாம்ம இப்போ பஞ்சாயத்துலப் போயி என்னத்தெ சொல்றது? என்னத்தெ பண்ணி வுடுங்கன்னு கேக்குறது? வெசயத்துக்கு வாடா!"ன்னாரு பெரியவரு.
            "போ! ஒம்மட பொண்ணு வூட்ட வுட்டு ஓடிப் போயிருந்தா நீயி என்னத்தெ பண்ணுவீயோ அதெ பண்ணு! நாம்மத்தாம் இனுமே நமக்கும் அந்தப் பொண்ணுக்கும் சம்பந்தம் இல்லேங்றேம்! பெறவு நீயென்ன சம்பந்தத்த உண்டு பண்ணிட்டு நம்மள அசிங்கம் பண்ணிட்டு இருக்கே? ன்னா நம்மள பழி தீத்துப்புடலாம்னு நெனைக்குதீயா? நம்மள இதெ வெச்சி அழிச்சிப்புடலாம்னு நெனைக்குதியா? ஒங் குடும்பத்தையெ கருவறுத்துப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு சின்னவரு.
            "அட வெளங்கா மண்டையா? யாருகிட்டடா எதிரிப் போட்டுக்கிட்டு நிக்குறே? ஒமக்கு எதிரி நாம்ம இல்லடா! அத்து வூட்டு வுட்டு ஓடுனுச்சுப் பாரு ஒம்மட பொண்ணுடா! அத்து மட்டுங் கெடையாது! என்னத்தெ யோஜனெ பண்ணுறதுன்னு தெரியாம தாறுமாறா யோசனையப் பண்ணிட்டுக் கெடக்கு பாரு ஒன்னோட மனசு! அதாம்டா ஒன்னோட மொத எதிரி!"ன்னாரு பெரியவரு.
            "போ! பஞ்சாயத்துல போயிச் சொல்லு! ஓடிப் போயி நிக்குறா இல்லியா அவளுக்கும் கிட்டாம் ஆச்சாரிக்கும் சம்பந்தம் கெடையாதுன்னு சொல்லு. சம்பந்தம் இல்லாத ஆளெ ஏம்டா பஞ்சாயத்துக்கு கூப்புடுதீயேன்னு கேளு? இந்தக் கெராமத்துலு நாம்ம மான மருவாதியோட வாழ்ந்துட்டு இருக்கேங்றதெ சொல்லு. எப்போ நம்மப் பேச்ச கேக்காம ஓடிப் போனாளே இனுமே எல்லாத்துக்கும் அவ்வே முடிவுதான்னு சொல்லு! அத்தெ ஏம் நம்மள வெச்சிக் கேக்க நெனைக்குதீயேன்னு போயிக் கேளு! பஞ்சாயத்துக்கு வா, போன்னு ஊருல ஒரு பயெ நம்மட வூட்டு வாசல்ல மிதிக்கக் கூடாது! அண்ணங்ற மருவாதி கெடுறதுக்குள்ள நீயும் வூட்ட வுட்டு வெளியில போடா அந்தாண்ட!"ன்னாரு சின்னவரு.
            பெரியவருக்கு அதெ கேட்டதும் ஒரு மாதிரியாப் போச்சுது. மொகத்தத் தொங்கப் போட்டுக்கிட்டு வூட்டை வுட்டு வெளியில வந்தாரு. ரசா அத்தைக்கும், சுவாதி அத்தாச்சிக்கும் ஒண்ணும் சொல்ல முடியல.
            ரசா அத்தை பேச வாயெடுத்துச்சுப் பாருங்க, "எதாச்சிம் பேசுனே பொண்டாட்டின்னு பாக்க மாட்டேம்! கொன்னுப் போட்டுட்டு மறுவேல பாப்பேம்! யில்லே நாம்ம தூக்குலத் தொங்கி தாலியறுத்துப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு சின்னவரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...