14 Jun 2020

பொண்ண இழுத்துட்டு ஓடுறதுதாம் வேலையா?

செய்யு - 478

            கொளத்தங்கரையில பேசுன பேச்செ வெச்சிக்கிட்டு சின்னவரு பூர்ணி அத்தாச்சிக்கிட்டெ எதுவும் கேக்கல. அவரால பூர்ணி அத்தாச்சி அப்பிடில்லாம் பண்ணுங்றதெ நம்ப முடியல. பொண்ணு மேல அவ்ளோ நம்பிக்கெ அவருக்கு. வூட்டுலயும் யாருகிட்டெயும் அதெ பத்தி வாயத் தொறக்கல. அதால பூர்ணி அத்தாச்சியப் பத்தி வூட்டுல யாருக்கும் எதுவும் தெரியல, அது மேல யாருக்கும் எந்தச் சந்தேகமும் வாரல. குமாரு அத்தான் தங் குடும்பத்து மேல உள்ள பொறாமெ பொச்சரிப்பாலத்தாம் பூர்ணி அத்தாச்சியப் பத்தி தப்புத் தப்பா சொல்றதாவே நெனைச்சிக்கிட்டாரு சின்னவரு. அப்பிடி அவரு நெனைச்சது தப்புங்றது, பூர்ணி அத்தாச்சி வூட்டெ வுட்டு ஓடுற வரைக்கும் சின்னவருக்குப் பிடிபடவே யில்ல.
            ரெண்டு மாசம் கழிச்சி அந்தச் சம்பவந்தாம் நடந்துச்சு. காலையில எழும்பிப் பார்த்தா வூட்டுல எந்த வேலையும் ஆவல. பூர்ணி அத்தாச்சியே எல்லா வேலையும் செஞ்சிப் பழக்கமாயி, வூட்டுல எந்த வேலையும் ஆவலன்னா, வூட்டுல இருந்த சனமெல்லாம் பூர்ணி அத்தாச்சியத் தேடுது.
            சின்னவருகிட்டெ சொன்னா, "வயக்காட்டுப் பக்கம் எதாச்சிம் சோலியா போயிருக்கும்!"ங்றாரு.
            "அப்பிடில்லாம் சொல்லாம கொள்ளாம போவாதுங்க!"ங்குது ரசா அத்தெ.
            செரித்தாம்ன்னு வயக்காட்டுல ஒரு பார்வையப் பாத்தா அங்ஙனயும் ஆளெ காணும். ஏழு, ஏழரைக்கெல்லாம் வேலைக்குக் கெளம்ப வேண்டிய ஆளு பித்து பிடிச்சாப்புல எட்டு மணி வரைக்கும் உக்காந்தது உக்காந்தபடியே உக்காந்துட்டாரு சின்னவரு. அவரு ஒரு ஆளு, வூட்டுல எது நடக்குதோ இல்லியோ அவரு நெனைக்கிறபடியான வேலைக நியம நிட்டைப்படி நடந்தாவணும். இப்போ அவரு வேல சரியா நடக்காம கோவத்துல உக்காந்திருக்காரா? பூர்ணி அத்தாச்சிய எங்கன்னு தெரியாம கொழம்பிப் ‍போயி உக்காந்துருக்காறா?ன்னு அது வேற கொழப்பமா இருக்கு. ரசா அத்தெ வேலங்குடியில ஒரு வூடு பாக்கியில்லாம எல்லா வூட்டுக்கும் போறாப்புல போயி பேருக்கு ஒரு பேச்ச வெச்சிக்கிட்டு பூர்ணி அத்தாச்சி அங்ஙன எங்காச்சியும் போயிருக்கான்னும் பாத்துட்டு வந்துப்புடுச்சு. வூட்டுல ஒரு வேலையும் ஆவல. ஒரு டீத்தண்ணியக் கூட போட்டுக் குடிக்கல.
             சின்னவரால தன்னோட மகெ வூட்ட வுட்டு ஓடியிருக்குங்றதெ யோசிக்கவே முடியல. என்ன நடந்திருக்கும்? வூட்டுலயும் பொண்ணு காங்காம போறதுக்குக் காரணமென்னன்னு யாராலயும் யூகிக்க முடியல. கொட்டில்ல கட்டுன மாடு கட்டுனபடியே கெடக்குதுங்க. ஊருல இருக்குற மாடுங்க எல்லாம் ரோட்டால ம்மேன்னு சத்தம் போட்டுகிட்டு மேயப் போறதெப் பாத்துக்கிட்டு அதுங்க சத்தம் போடுதுங்க. சின்னவரு வூட்டுக் கொட்டில்ல மாடுகளோட சத்தம் சம்பந்தமில்லாம வாரத வெச்சி குமாரு அத்தானுக்குச் சந்தேகம் ஆயிப் போயி வெசாரிக்க ஆரம்பிச்சா, பூர்ணிய வூட்டுல காங்கலங்ற சங்கதி தெரிய வருது.
            வூட்டோட இருக்குற பொண்ணுன்னா அத்து வூட்டுல இருக்கா? இல்லியாங்ற சந்தேகம் வூட்டுல இருக்குறவங்கள வுட்டு வெளியில போவாது. பூர்ணி வயக்காடு, ராயநல்லூரு கடைத்தெருன்னு ரவுண்டு கட்டிச் சுத்துற ஆளு. காலங்காத்தால வயக்காட்டுக்குப் போற சனங்களுக்குத் தெரியும் இத்தனெ மணிக்கு அத்து வயக்காட்டுல நிக்கும், இத்தனெ மணிக்கு அத்து வூட்டுல இருக்குங்றது. அத்தோட மாட்டெ வேற அவுத்து வுடல. சந்தேகப்படுறதுக்கு இத்துப் பத்தாதா? பூர்ணி அத்தாச்சி தெறமையோட பண்ணிட்டு இருக்குற வெள்ளாமயப் பாத்து பொறமெ பட்டுக்கிட்டுக் கெடக்குறவனும் ஊர்ல இருக்கானுவோ இல்லியா? அவனுவோ கண்ணும் வயக்காட்டுப் பக்கம் தேடுது. "ன்னடா இந்நேரத்துக்கு அந்தப் பொண்ணு வந்துட்டுத் திரும்பும்? ஆளெ காங்கலையே?"ன்னு. ஊர்ல இப்பிடி அப்பிடின்னு பேச்சாயி பூர்ணிய காணலங்றது உறுதியாயிடுச்சு.
            அவனவனும் பூர்ணி அத்தாச்சியக் காங்கலங்றதெ வெச்சி கண்ணு, காது, மூக்கு வெச்சி எதார்த்தமா பேசுறாப்புல பேசுறது உண்மையாவே நடந்துட்டுங்றது புரியாம பேச ஆரம்ச்சானுவோ. கெராமத்துல அப்பிடித்தாம் ஒரு பொண்ணு காங்கலன்னா பேச்சு ஆவும். அதாச்சி அந்தப் பொண்ணு ஓடிப் போயிட்டதாத்தாம் கண்ணு காது மூக்கு வெச்சி பேச ஆரம்பிப்பாவோ. எதார்த்தமா ஒரு பொண்ணு பீக்காட்டுப் பக்கம் போயி தாமசமா திரும்புனாலும் அந்தப் பேர்ர கட்டிப்புடுவானுவோ. கெராமத்துல உள்ள பொம்பளெ புள்ளைக கொஞ்சம் வெளிக்கிப் போயிட்டு வாரதுன்னாலும் சூதானமாத்தாம் இருக்கணும். பீக்காட்டுக்கு வெளிக்கிக்குப் போயிட்டு வார்ற பொண்ணுக்கே அந்தக் கதின்னா விடிஞ்சா காங்கால பொண்ணுங்றதுக்கு கெராமத்துலு சொல்லவா வேணும்?
            குமாரு அத்தான் வடக்குத் தெருவுல எறங்கி அங்க ராக்காயி மவ்வேன் சொடல எங்கன்னு வெசாரிச்சா சொடலையும் அங்கன காங்கல. குமாரு அத்தானோட சந்தேகம் உறுதிப்பட்டுப் போச்சு. குமாரு அத்தான் வடக்குத் தெருவுலேந்து தன்னோட ஆளுகளெ நைசா தள்ளிட்டு வந்து வெசாரணையப் போட ஆரம்பிச்சிது. உண்மெ என்னாங்றதெ கண்டுபிடிச்சிச் சொன்னா குவார்ட்டர் பிரியாணியோட திருவாரூர்ல கொண்டு போயி வெச்சு செய்ய வேண்டியதெ செஞ்சி, சென்னைப் பட்டணத்துல இருக்குற அண்ணங்கார்ரேம் கம்பெனிக்கு ஆளா எடுத்து தன்னோட சொந்தக் காசியில அனுப்பி வெச்சிச் சேத்து வுடுறதா ஆசைய தன்னோட ஆளுககிட்டெ நைச்சியமா தூவி விட்டுச்சு குமாரு அத்தான். அது அனுப்பிச்சு வெச்ச ஆளுங்க வெசாரிச்சி அப்பிடி இப்பிடின்னு உண்மெ தெரியாத ஆளுங்கப் போல, அதிரடி ஆச்சாரி பொண்ணு காங்கலயாமென்னு பேச்சு வாக்குல பேசுறாப்புல பேசி, உண்மெயக் கொண்டாந்துப்புட்டாங்க, பொண்ணும் பையனும் திருவாரூர்ல சீடியெம் லாட்ஜ்ல இருக்குறதா.

            குமாரு அத்தான் தம் பக்கத்துல உள்ள ஆளுகளெ அழைச்சிக்கிட்டுப் போயி ராக்காயி வூட்டு மின்னாடி வம்பு வைக்க ஆரம்பிச்சிது. ராக்காயி அம்ப‍து வயதெ கடந்த அசாமி. ஒழைச்ச ஒழைப்போ, ஒடம்பு கோளாறோ அந்த வயசுக்கே முதுகு வளைஞ்சிப் போயிக் கெடந்துச்சு. ஒரு மவ்வேன் சொடல, ஒரு பொண்ணு பச்சக்கிளின்னு அதுங்க ரெண்டு இத்து ஒண்ணு மூணு பேத்துதாம் வூட்டுல. இப்போ வூட்டுல சொடல யில்ல. குமாரு அத்தான் அந்த எடத்தெ குறிய வெச்சு ஆரம்பிச்சிச்சு.
            "எஞ்ஞடி ராக்காயி ஒம் மவ்வேம் சொடல?"ன்னுச்சு குமாரு அத்தான். அத்து ஒரு பேச்சு, வயக்காட்டு ஆளுங்கன்னா வயசு எம்புட்டு இருந்தாலும் பேர்ர சொல்லி ஒருமையில பேசுறதும், மருவாதி இல்லாம பேசுறதும். குமாரு அத்தானுக்கு அப்போ அதிகப்படியே இருவத்து நாலுக்கு மேல வயசு இருக்காது.
            "எஞ்ஞனு தெரியலீங் சாமீ! ரண்டு நாளா வூட்டுப் பக்கங் காங்கல!"ன்னுச்சு ராக்காயி.
            "ஓவ்! ரண்டு நாளாவே திட்டம் நடக்குதாக்கும்! இந்தத் தெரு பயலுகளுக்குக் குடியானத் தெரு பொண்ணு கேக்குதாக்கும்?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "பெரிய ஆண்டெ மவ்வேம் பேசுறது புரியலீயே?"ன்னுச்சு ராக்காயி.
            "ஒம்மட வூட்டுலயும் வயசுக்கு வந்தப் பொண்ணு ஒண்ணு இருக்குல்லா. அத்தெ ஒருத்தம் இழுத்துட்டு ஓடுனா ச்சும்மா இருப்பீயா?"ன்னுச்சு குமாரு அத்தான். ராக்காயிக்குக் கொஞ்சம் வெளங்குறாப்புலயம் இருந்துச்சு, வெளங்காம இருக்குறாப்புலயும் இருந்துச்சு.
            "பெரிய மெராசு மவ்வேம் சிரிப்பாணிக்கா பேசுதா? வெனைக்கா பேசுதான்னு புரிய மாட்டேங்கிதே?"ன்னுச்சு ராக்காயி.
            "வெனையாத்தாம் பேசுறேம். ஒம் பொண்ண ஒருத்தேம் இழுத்துட்டு ஓடுனா ச்சும்மா இருப்பே?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "இழுத்துட்டு ஓடுறப்பெ ஓடுதுல்லா என்ற மவ்வே காலு அத்தெ வெட்டிப்புடுவேம் சாமீ! பொண்ணு சரியா இருந்தா எவ்வேம் இழுத்துட்டு ஓடப் போறாம்?"ன்னுச்சு ராக்காயி.
            "மருவாதியாப் பேசுறேம் பாரு! ரண்டு இழுப்பு இழுத்தேம்ன்னா வெச்சுக்கோ..."ன்னுச்சுப் பாருங்க குமாரு அத்தான், ராக்காயிக்குக் கோவம் வந்துப்புடுச்சு, "இழுத்துட்டு ஓடுனா இஞ்ஞ வந்து பேசுதீயளே! யாரு யார்ர இழுத்துட்டு ஓடுனான்னு தெளுவா சொன்னாத்தாம்னே நமக்குப் புரியும்?"ன்னுச்சு ராக்காயி கொஞ்சம் காட்டமா.
            "நம்மட வாயில வர்ற வெச்சுப் பாக்கணுங்ற நெனைப்பே பாரேம்! நீயி பெத்து வெச்சிருக்கீயே அருமெ மவராசன் சொடல. அவ்வந்தாம் எஞ்ஞக் குடும்பத்து பூர்ணிப் பொண்ண இழுத்துட்டு ஓடிட்டாம் வெக்காலி!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "எம்மட மவ்வேந்தாம் இழுத்துட்டு ஓடிட்டாங்ன்னு தெரியுமா? ஊருல ஒரு பயெ இல்லங்றதுக்காக அவ்வேம் மேல பழியத் தூக்கிப் போடுறதா? இழுத்துட்டு ஓடிட்டாம் ஓடிட்டாம்ன்னா பொண்ணு தொணை வர்றாம எப்பிடி இழுத்துட்டு ஓடுவாம்? ஒஞ்ஞ பொண்ண வளக்கத் தெரியாமா வளத்து, அத்து ஓடிட்டா அதெ கேக்குறதுக்கு நம்மத் தெருவும், நம்மட வூடும்தானா கேக்குதா ஒஞ்ஞளுக்? எந்த ஊரு ஞாயங் சாமி இத்? எந்தக் குடும்பத்துப் பொண்ணு ஓடுனுச்சோ அந்த வூட்டு ஆளு வந்து கேக்காம நீஞ்ஞ வந்த கேக்குறதில்ல தெர்யல வெசயத்துல இருக்குற பொய்யி?"ன்னுச்சு ராக்காயி.
            "அப்போ ஒம் மவனுக்கும் இந்தச் சங்கதிக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்றே? அப்பிடித்தாம்லா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "கண்ணால காங்காம, சாட்சின்னு ஒண்ணும் யில்லாம திடீர்ன்னு எம்மட வூட்டு மின்னாடி வந்து வாயிக்கு வந்தப் படிக்கிப் பேசுனா எப்பிடிச் சம்மதம் இருக்குன்னு நம்புறது? சம்பந்தம் இருக்குன்னு நம்ம மாரியாயி கோயில்ல வெச்சு நிரூபணம் பண்ணுங்கோ சாம்யோவ்! எங் குடும்பத்தோட மட்டுமில்லீங், ஒட்டு மொத்த தெரு சனத்தோட கால்ல வுழுந்து நீஞ்ஞ என்னத்தெ சொல்லுதீயளோ அதெ கேக்குறேம். ஒஞ்ஞகிட்டெ பொழப்பப் பாத்து பொழைக்குற சனத்துக்கு ஏம் அந்த நெனைப்பு வார்றப் போவுது? ஆன்னா ஒஞ்ஞளுக்கெல்லாங் ஏம் இப்பிடி ஒரு நெனைப்பு வார்றதுன்னு அந்த மாரியாயித்தாம் கேக்கோணும்?"ன்னுச்சு ராக்காயி.
            "ஒஞ்ஞ தெரு பயலுகள வெச்சித்தாம் கண்டுபிச்சிருக்கேம். தெருவுக்கே தெரிஞ்சிக்கிற சங்கதி ஒமக்குத் தெரியாதாக்கும்? ன்னா நக்கலா பண்ணுறேடி?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "இந்தாருங் சாமி! நாம்ம வூட்ட வுட்டு வெளியில கெளம்பாத ஆளு. வூட்டுல ஒரு வயசுப் பொண்ணு வேற இருக்கு. தெருவுல சொல்றாம்ன்னா எவ்வேம் சொல்றாம்? அவனெ மின்னாடி வந்து நிக்கி வெச்சி பேசச் சொல்லணும்!"ன்னுச்சு ராக்காயி.
            குமாரு அத்தான் அழைச்சாந்த ஆளுங்க மின்னாடி வந்து நின்னு பேசுனாங்க. "இந்தா கூனிச் செறுக்கி! ஏம் ஒம்மட மவனும், அந்தப் பொண்ணும் கருவக்காட்டுல ஒதுங்குனது, சுத்துனது ஒமக்கு தெரியதா? தெருவேத்தாம் சிரிச்சிட்டுக் கெடந்துச்சே? ஒம்மட மவ்வேம் குடியானத் தெரு சின்ன மெராசு வூட்டுப் பொண்ண திருவாரூர்ல லாட்ஜ்ல கொண்டு போயி வெச்சிருக்காங் தெர்யமிலே. அவனோட கூடவே சுத்துவாம்ல எடுபட்ட பயெ தொப்புளாம். அவ்வேங்கிட்டெ ரகசியமா யின்னயின்ன மாதிரிக்கின்னு சொல்லிருக்காம். அவனெ இழுத்தாந்து சொல்ல வைக்கவா?"
            "தெருவுல எங் குடும்பத்து மேல பொறாம யில்லாதப் பயெ எவ்வேம்? எங் மவ்வேம் மேல பொச்சரிப்பு யில்லாதவேம் எவ்வேம்? சம்பவம் உண்மென்னா பொண்ணு புள்ளயா கொண்டாந்து நிறுத்திட்டுப் பேசணுங் தங்கங்களா? கேப்பையில தேனு வடியுதுன்னா கேக்குறவள கேனச்சின்னு நெனைச்சிக்கிட்டீயளோ?"ன்னுச்சு ராக்காயி.
            "ஏம் புடிக்க முடியாதுங்ற தெகிரியத்துல பேசுதீயா?"ன்னாங்க ஆளுங்க.
            "அப்பிடிப் பிடிச்சிக் கொண்டாந்து மாரியாயிக் கோயில்ல கொண்டாந்து நிறுத்திப்புட்டா நாக்கெ பிடுங்கிக்கிட்டு சாவுதீயா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "அப்பிடி வார்றப்பவே ஒரு கயித்தெ கொண்டாந்து நம்மள மின்னாடி நிக்குற வேப்ப மரத்துல தொங்க வுடுங்! யாரு என்னத்தெ கேக்கப் போறா? ‍அதெ வுட்டுப்புட்டு ஒஞ்ஞ வூட்டப் பொண்ணக் காணும்ன்னா அதெ எஞ்ஞ வூட்டுப் பயத்தாம் இழுத்துக்கிட்டு ஒடியிருப்பாம்ன்னா அதுக்கு நாம்ம என்னத்தெ சொல்றது? குடியானத் தெரு பொண்ண இழுத்துக்கிட்டு ஓடுறதுதாங் எஞ்ஞ ‍தெரு பயலுலோளுக்கு வேலயா? வேற வேல இல்லியா ன்னா? ஒஞ்ஞ வூட்டுப் பொண்ணுங்க அடங்காம வூட்ட வுட்டு ஓடுதுன்னா அதுக்கு வம்பு வைக்க எஞ்ஞத் தெரு பையந்தாங் கெடைச்சாம்மா? அத்துச் செரி ஒஞ்ஞ குடும்பத்தெ இழுத்தாந்து நாஞ்ஞ என்னத்தெ பண்ண? எஞ்ஞள மாதிரிக்கி எறங்கி வேல பாக்குமா நாலு காசிய சம்பாதிக்க? வய வரப்புல உக்காந்து நாட்டாமெ பண்ணிப் பொழைக்கிறதுக்கு எஞ்ஞகிட்டெ வேலிக் கணக்குலயா நெலம் இருக்கு? அதெ கொண்டாந்து வெச்சி வாசலப் பெருக்கிப் போட்டு சாணியள்ளித் தெளிச்சி எல்லா வேலயையும் நாமளே பாத்துக்கிட்டு மருமவளுக்குச் சேவகம் பண்ணிட்டுக் கெடக்கணும்னு எஞ்ஞளுக்கு ன்னா தலயெழுத்தா ஆகியிருக்கு? இழுத்துட்டுப் போயிட்டாம்ன்னா இழுத்துட்டு போனவனெ கேக்கணும்! ஓடிப் போன ஓடுகாலியப் பெத்துட்டேம்ன்னு வூடடங்கி உக்காரணும். இப்பிடியா மான மருவாதிக் கெட்டுப் போயி தெருவுல எறங்கி கேக்கணும்?"ன்னுச்சு ராக்காயி.
            "ரொம்பப் பேச்சு வெச்சுப் போயிட்டுங்கடி ஒஞ்ஞளுக்கு. சாட்சியோட கொண்டாந்து வெச்சு மொக்கு மொக்குன்னு மொக்கி கோயில்ல ஞாயம் வைக்கிறேம். அப்பல்லா இருக்கு? சாட்சி வேணுமால்ல சாட்சி? வாஞ்ஞடா அதெயும் கொண்டாந்து வெச்சிப் பாப்பேம்? ஒருத்தி இன்னிக்கு ஒஞ்ஞ தெருவுல மெளத்தாயிடுச்சுடா! கட்டுங்கடா பாடையெ! அதாம் நடக்கப் போவுது!"ன்னுச்சு கெளம்புனுச்சு கட்டுன கைலிய மொழக்காலுக்கு மேல தூக்கிக் கட்டிக்கிட்டு குமாரு அத்தான்.
            குமாரு அத்தான் இருக்குற ஒடம்புக்கு அப்பிடி ஒரு முறுக்கு எங்கேயிருந்து வந்துச்சோ தெரியல. தன்னய வீராதி வீரனெப் போல நெனைச்சுக்கிட்டு கூட வந்த ஆளுங்க நாலு பேத்த கூட்டிக்கிட்டு, ராயநல்லூரு பஸ் ஸ்டாண்டுக்குப் போயி பஸ்ஸப் பிடிச்சி திருவாரூருல எறங்குனுச்சு. குமாரு அத்தானுக்கே திருவாரூர்ல எறங்குறப்போ ஒரு சந்தேகந்தாம். ஒருவேள லாட்ஜ்ல இல்லன்னாலும் வெசாரிச்சி மாயரமோ, வேளாங்கண்ணியோ எங்கன இருந்தாலும் ஒரு அம்பாசிட்டரு கார்ர வெச்சாவது தேடிக் கண்டுபிச்சிட்டுத்தாம் மறுவேலன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டு. இதெ வுட்டுப்புட்டுத் தேடக் கூடாதுன்னு எறங்குன ஒடனே திருவாரூர்ல அண்ணங்கார்ரேன் சந்தானம் அத்தானுக்குத் தெரிஞ்ச அம்பாசிடரு காரு வெச்சிருக்கிற டிரைவர்ர பிடிச்சி அதுல ஏறிகிட்டாங்க ஆளுங்க எல்லாம். ஆளுங்க சொன்ன துப்பும் தப்பா போவல. இவுங்க வர்றதுக்குள்ள சோடிங்க ரண்டு பேரும் லாட்ஜ வுட்டு வேற எங்ஙனயும் தப்பிக் கெளம்பவும் இல்ல. எல்லாம் சாதகமாவே நடந்துச்சு. நாகை ரோட்டுல இருந்த சீடியெம் லாட்ஜ்ல வெச்சு கோழி அமுக்குறாப்புல பூர்ணி அத்தாச்சி, சொடலை ரெண்டு பேத்தையும் அமுக்கி வேலங்குடி மாரியம்மன் கோயில்ல கொண்டாந்து நிப்பாட்டிப்புடுச்சு குமாரு அத்தான்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...