13 Jun 2020

அந்தக் குளத்தில் கல் எறிந்தவன்!

செய்யு - 477

            பெரியவரு வந்து கூப்புட்டதுமே சின்னவரு ஏன் ஏதுன்னு கேக்கல. "யம்பீ! கொஞ்சம் மேக்கால கொளத்தாங்கரெ பக்கம் வா! பேச வேண்டிருக்கு. நாம்ம முன்னால போறேம். பின்னால சித்தெ நேரம் கழிச்சாப்புல வா!"ன்னு பெரியவரு சொன்னதும், அரையில கட்டியிருந்த வேட்டியோட, சட்டையில்லாத மேலுக்கு ஒரு துண்டெ எடுத்துப் போட்டுக்கிட்டு சின்னவரு கெளம்புனாரு.
            கொளத்தாங்கரைப் படிகட்டுல பெரியவரு உக்காந்ததெ பாத்ததும் குமாரு அத்தான் கோயில் பக்கத்துலேந்து வந்து படிக்கட்டுக்கு அடியில கீழ்ப்படிக்கட்டா பாத்துப் போயி உக்காந்துச்சு. காத்து சிலுசிலுன்னு வீசுறது அந்தக் கோடைக்காலத்துக்கு இதமா இருக்கு. இந்தச் சிலுசிலு காத்து எப்பவும் இதெ மாதிரிக்கி இருக்கணும். மாறக் கூடாது. பேசி முடிஞ்ச பெறவும் இதெ இதம் இருக்கணும். அதுக்கு நீந்தாம் தாயீ மாரிம்மா தொணையிருக்கணும்ன்னு மனசுக்குள்ள ஏதோதோ எண்ணத்தெ ஓட வுட்டுக்கிறாரு பெரியவரு. இதே கொளத்தாங்கரையில தம்பிக்காரனோட முன்னாடிக் காலத்துல பேசுன ஒவ்வொரு பேச்சும் பெரியவருக்கு ஞாபவத்துக்கு வருது. ஒரு தலைமொறை முடியல, இன்னொரு தலைமுறைக்குப் பேசணும்ன்னு இந்தக் கொளத்தாங்கரெ நெனைக்குதுன்னு நெனைச்சிக்கிட்டாரு பெரியவரு.
            பெரியவரு நெனைப்பு பல வெதமா போயிட்டு இருக்குப்பவே சின்னவரு வர்றாரு. அதெ பாத்துப்புட்டு எதுத்தாப்புல படிகட்டெ காட்டி, "சித்தெ உக்காரு!"ங்றாரு பெரியவரு. எப்பிடி ஆரம்பிக்கிறதுங்றதுக்கான ஒத்திகையெ மனசுக்குள்ள ஒரு தவா ஓட்டிப் பாத்துக்கிட்டு, "நம்ம பூர்ணிப் பொண்ணுக்கு மாப்புள எதாச்சிம் பாத்துட்டு இருக்கீயாடாம்பீ!"ங்றாரு பெரியவரு.
            "ம்! பாக்கணும்! சாதகத்தெ மஞ்சப் பையில நல்ல நாளு பாத்து எடுத்து வெச்சி நாளாச்சி. நேரந்தாம் தோதுபடல. நாம்ம நம்ம ரண்டு பொண்ணுக்குப் பாத்ததுல ரண்டுல ஒண்ணு பரவால்ல. இன்னொண்ணு சுத்தப்படல. ஆனது ஆயிப் போச்சு. இனுமே வருத்தப்பட்டு ஆவப் போறது ஒண்ணுமில்ல. இந்தப் பொண்ணுக்காவது நல்ல வெதமா பாக்கணும். ஏம்ண்ணே நீந்தாம் நல்ல எடமா இருந்தா பாத்துச் சொல்லேம்!"ன்னாரு சின்னவரு.
            "சீக்கிரமா பூர்ணிப் பொண்ணுக் கலியாணத்தெ முடிச்சிப்புட்டா தேவலாம்! நாமளும் எறங்கி ஆளுக்கொரு பக்கம் தேடுனாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னாரு பெரியவரு.
            "இதாங் வெசயமா? நல்ல வெசயத்த வூட்டுல வெச்சிப் பேசுறதெ வுட்டுப்புட்டு எதுக்குக் கொளத்தாங்கரையில வெச்சிப் பேசிகிட்டு? கோயிலுப் பக்கம்ன்னா போவோமா?"ன்னாரு சின்னவரு.
            இப்போ பெரியவருக்கு விசயத்தெ மேக்கொண்டு சொல்லலாமா வாணாமங்ற தயக்கத்துல, "கோயிலுக்கு வாணாம்!"ன்னாரு பாருங்க பெரியவரு. அதெ வெச்சித்தாம் வேறெதோ வெவகாரங்றத வெளங்கிக்கிட்டு சின்னவரு கேக்குறாரு, "பேச வந்த வெசயம் இன்னும் வந்தாப்புல தெரியலையே?"ங்றாரு.
            "அத்து ஒண்ணுமில்லே. வயசுக்கு வந்தப் பொண்ணு. வயக்காடு, ராயநல்லூரு சொசைட்டி அங்கன இங்கனன்னு அலையுதுல்ல. எத்தனெ நாளு அப்பிடி அலைய வுட முடியும்? ஊர்ல ஒரு பேச்சு வந்துப்புடக் கூடாது பாரு! அதுக்குத்தாம். அததெ காலா காலத்துல முடிச்சிப்புட்டா நல்லது பாரு!"ன்னாரு பெரியவரு.
            "ஏம் ண்ணே அங்க மட்டும் என்னவாம்? வயசுக்கு வந்த பொண்ணு ஒண்ணு இல்லாமலா இருக்கு?"ன்னாரு சின்னவரு.
            "இருக்குடாம்பீ! அதுக்கும் கதையெ கட்டி முடிக்கணும்தாம்! ஒண்ணா முடிச்சிப்புட்டா கூட தேவலாந்தாம்! பாக்கலாம்! பாக்கணும்!"ன்னாரு பெரியவரு.
            "செரி அப்போ நாம்ம கெளம்புறேம்! எந்தச் சங்கதிய எஞ்ஞ வெச்சுப் பேசணுங்ற வெவஸ்தெ கூட தெரிய மாட்டேங்குதுண்ணே ஒமக்கு? வயசாயிடுச்சுன்னா புத்திக் கொஞ்சம் மங்கித்தாம் போவும் போலருக்கு!"ன்னு சின்னவரு எழுந்திரிக்கப் பாத்தாரு பாருங்க, குமாரு அத்தானுக்கு முனுக்குன்னு மூக்கு மேல கோவம் வந்தாப்புல சொன்னுச்ச, "சித்தப்பா! பூர்ணியோட போக்குச் சரியில்லெ. அதெ சொல்லத்தாம் யப்பா கூப்புட்டு வுட்டது. அதெத்தாம் நேரடியா சொல்லாம சுத்தி வளைச்சிட்டு இருக்கு!"ன்னு.
            "இஞ்ஞ எம்மட வூட்டுப் பொண்ணோட போக்குச் சரியில்லன்னா, அஞ்ஞ ஒம்மட வூட்டுப் பொண்ணோட போக்கு சரியா இருக்குதாக்கும்? ன்னடா பேச்சு இத்து? ஒத்தப் பொண்ணு நின்னு ஒஞ்ஞ அத்தனெ பேத்துக்கும் மல்லு கட்டிக்கிட்டு வெவசாயத்தெ பாக்குறதெ பிடிக்கலன்னா இப்பிடித்தாம் கதை அளக்குறதா?"ன்னாரு சின்னவரும் வேகம் வந்தவரு போல.
            "யய்யோ சித்தப்பா! வெவரம் புரியாம பேயாதீயே! நாம்ம கண்ணால பாத்தேம்! ராக்காயி மவ்வேன் சொடலையோட பூர்ணி கருவக்காட்டுக்குள்ள இன்னிக்கு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "கதையச் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும்! பொய்யிச் சொல்லுறதுக்கு பொருத்தம் வேணும்பாவோ! வய ஆளு எப்பிடிடா நம்மமட பொண்ணு மேல கைய வைப்பாம். அவ்வேம் செலம்பன் செத்த நாள்லேர்ந்து அவனோட மவ்வேன் சொடலைதானடா நமக்குப் பண்ணையம் பாக்குறாம். அவனெப் போல ஒரு ஒறுப்பான ஆளு வேலங்குடியில கெடையாது. அவனெப் பிரிச்சிக் கொண்டுட்டுப் போயிடணும். இல்லன்னா பொண்ணுக்குக் கல்யாணத்தெ பண்ணி வெச்சி கெளப்பி வுட்டுப்புடணும். ரண்டையும் ரண்டு நேரத்துல செய்யாம ஒரே நேரத்துல செஞ்சிப்புட்டா நீஞ்ஞ நெனைச்ச திட்டம் ஆயிடும்லா? ஒரு கல்லுல ரண்டு மாங்கா அடிக்கணுங்ற நெனைப்புல்லா?"ன்னாரு சின்னவரு.

            "சித்தப்பா! அத்து வேற, இத்து வேற! வெள்ளாமையில வெளைச்சல்ல நீயி நாலு மூட்டெ கூட எடு, நாம்ம கொறைச்சி எடுக்குறேம். அத்து வேற பெரச்சனெ. யாரு எங்க சித்தப்பங்கிட்டெத்தாம் தோத்தேம்ன்னு அதெ பெருமெயா எடுத்துக்கிடறேம். கீழ்ச்சாதிக்கார பயெ நம்மச் சாதிப் பொண்ணு மேல கைய்ய வைக்க வுட மாட்டேம். அவ்வேம் ரத்தம் ன்னா? நம்ம ரத்தம் ன்னா? ரண்டும் ஒண்ணா கலக்குறதா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ச்சும்மா கெடடா! நமக்கு நம்மட பொண்ணப் பத்தியும் தெரியும். அவ்வேம் செலம்பம் மவ்வேம் சொடலையப் பத்தியும் தெரியும், செலம்பனுக்குக் கழுத்தெ நீட்டுன ராக்கியாயிப் பத்தியும் தெரியும். உண்மெ, ஒழைப்பு, விசுவாசம்டா! அத்து ஒம்மட வவுத்துல புளியக் கரைக்குதோ? பொத்திட்டுப் போடா!"ன்னாரு சின்னவரு.
            பெரியவருக்கு என்னத்தெ பேசுறதுன்னு புரியாமா அப்பிடியே செலயப் போல உக்காந்துட்டாரு. ரண்டு பேத்துக்கும் சண்டெயா ஆயிட்டா செருமமா போயிடுமேங்ற கவலெயில அவரு பேசுனாரு, "வெவகாரம் இதாங்றதாலத்தாம் வூட்டுல வெச்சிப் பேச வாணாம்ன்னு இஞ்ஞ கொண்டாந்தேம். இஞ்ஞ சத்தம் கூடிப் போயி தெருவுலேந்து நாலு பேத்து வந்துப்புடப் போறாம்? பெறவு ன்னா ஏதுன்னு வெசயம் பெரிசாயி ஊருக்குள்ள தெரிஞ்சி சங்கட்டமா போயிடும்! குமாரு கண்ணால பாத்த காட்சிதாங்ன்னு சத்தியம் பண்ணுறாம்!"ன்னாரு.
            "இந்தாருண்ணே! ஒம்மட மவ்வேன் மேல உள்ள நம்பிக்கையில நீயி கூப்புட்டுப் பேசுறே! தப்புல்ல. ஒம்மட அக்கறைக்கு ஆயிரந்த தடவெ கால்ல வுழுவுறேம். அத்து வேற. ஆன்னா நீயி ஒம்மட புள்ளீயோ மெல வெச்சிருக்கற நம்பிக்கையைப் போலத்தான நாம்ம நம்மட புள்ளீயோ மேல நம்பிக்கெ வெச்சிருப்பேம். ஓம் வூட்டப் போண்ணு அப்பிடிப் போவுதுன்னு சொன்னா ஒத்துப்பீயா? மாட்டேதானே! அப்பிடித்தானே நம்மட வூட்டுப் பொண்ணும் போவாது. அதெல்லாம் அடிச்சிச் சொல்லுவேம்! அத்து ன்னா ஒம்மட வூட்டுப் பொண்ணு ஒரு மாதிரி, நம்மட வூட்டுப் பொண்ணு வேற மாரின்னா? எல்லாம் ஒண்ணுத்தாம். எப்பிடிப் பழகணும்? எந்த அளவுக்கு வெச்சிக்கிடணும்னு அதுகளுக்குத் தெரியும். அதுவும் பூர்ணிப் பொண்ணு அறிவுக் கொழுந்து. அதுக்குத் தெரியாத வெசயம் எதுவுமில்ல. ஒண்ணுக்கு ரண்டா பொண்ணா கட்டிக் கொடுத்திருக்கேம். அதால பொண்ணு புள்ளீயோளப் பத்தி நமக்குத் தெரியும். அந்த மாதிரிக்கில்லாம் போறாப்புல நாம்ம புள்ளீயோள வளக்கல. இந்த மாதிரிக்கி பொச்சரிப்ப கெளப்பி வுட்டு அசிங்கப்படுத்துற வேலைய இன்னொட நிறுத்திக்கிடணும்!"ன்னாரு சின்னவரு.
            "சித்தப்பா! வெசயம் புரியாம பேசாதே! வயசுப் பொண்ணையும், பொதைகுழி மண்ணையும் நம்பக் கூடாதும்பாவோ! ஒன்னயப் போயி பொண்ண வெசாரின்னுல்லாம் சொல்லல. நெலவரம் இந்த மாதிரிக்கி இருக்கு. அதுக்கு மின்னாடி நாம்ம மிந்திக்கணும்னு சொல்றேம். நாம்ம ஒண்ணும் சரி தப்புன்னுல்லாம் சொல்லல. நாளைக்கி ஒரு அசிங்கம்ன்னா அத்து சித்தப்பா ஒங் குடும்பத்துக்கு மட்டுமில்லே. நம்ம குடும்பத்துக்குத்தாம்!"ன்னுது குமாரு அத்தான்.
            "அதான்னே பாத்தேம்! எஞ்ஞ சுத்தி எஞ்ஞ வருவேன்னு? அத்து எங் குடும்பத்துப் பெரச்சனைடா! அத்தெ நெனைச்சி நீயேம் கலங்குறே? எந்தப் பெரச்சனெ வந்தாலும் சமாளிக்க இந்த கிட்டாம் ஆச்சாரியால முடியும்! ஒம்மட வூட்டுல வந்து காலடி வெச்சிட்டு நிப்பேன்னு நெனைக்காதே!"ன்னாரு சின்னவரு.
            "நீயி இந்த மாதிரிக்கிப் பேசுறதுக்கு ஒரு நாளு ஒம்மட மானம் காத்துல பறக்கல! அப்ப நெனைச்சிப் பாப்பே அண்ணங்கார்ரேம் மவ்வேன் சொன்னது எம்புட்டு உண்மென்னு?"ன்னுச்சு குமாரு அத்தான் கோவமா.
            "போடா தொத்தப் பயலே! ஒம்மட ஒடம்பு ஒரு ஒடம்பு! அந்த ஒடம்புல கண்ணு ஒரு கண்ணு. அந்தக் கண்ணால பாத்தானாம்? ஏம்டா ஒங் கண்ணால பாத்தா இஞ்ஞயிருந்து அஞ்சடி தூரத்துக்கு இருக்குறது தெளிவா தெரியுமாடா? ஒண்ணரைக் கண்ணு மாதிரிக்கி முழிய வெச்சிட்டுப் பேசுறாம் பாரு பேச்ச?"ன்ன சின்னவரு சொன்னதும், பெரியவருக்குச் சுருக்குன்னு போயிடுச்சு.
            "யம்பீ! பேச்சு வெவகாரமா போவுது. சொல்ல வேண்டிய கடமெ. சொல்லிட்டேம். எடுத்துக்கிடறதும் எடுத்துக்கிடாம போறதும் ஒம்மட விருப்பம். நாம்ம மல்லுகட்டிட்டு நிக்க முடியாது. இத்தனெ நாளு மான மருவாதியோட அண்ணம் தம்பின்னு இருந்தாச்சு. சொச்ச காலத்துக்கும் அப்பிடியே இருந்துப்புட்டு ஓட்டிப்புடணும்னு நெனைக்கிறேம்!"ன்னாரு பெரியவரு.
            "அத்து எங் கையில இல்ல. பெத்து வெச்சிருக்கீயே தேவாங்கு மாதிரிக்கி ஒண்ணு இந்தோ பக்கத்துல நிக்குதுல. அதோட கையில இருக்கு. இனுமே ஒண்ணு கெடக்க ஒண்ண ஒம் மவ்வேம் சொன்னாம்,மண்ணாங்கட்டிச் சொன்னாம்ன்னு எம்மட வூட்டுல வந்து கூப்புட்டே நடக்குறதே வேற?"ன்னாரு சின்னவரு.
            "சித்தப்பான்னு பாக்கறேம்! மருவாதிக் கெட்டுடும்! யப்பாகிட்டெ மருவாதியாப் பேசு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ன்னடா அப்பனும், மவனும் கூப்புட்டு வந்து அசிங்கம் பண்ணுதீயளா? அறைஞ்சேம்ன்னா பாரு! கன்னம் பழுத்து கவுட்டியில வுழுந்துப்புடும் பாத்துக்கோ! வுடுத்தாம் மாதிரி இருந்துக்கிட்டு பேச்சப் பாரு!"ன்னாரு சின்னவரு.
            "யப்பா! சித்தப்பாவ ஒழுங்க பேசச் சொல்லு! நமக்கும் கையிருக்கு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "அடெ எடுபட்ட பயலே! நாம்ம அடிக்குற கொட்டாப்புளி உசரங் கூட கெடையாது. பேசுறாம் பாரு பேச்சு? ஆணிய அடிச்சி இறுக்குறாப்புல கைய மடக்கி வவுத்துலு ஒரு இறுக்கு இறுக்கணும்னா வெச்சுக்கோ அத்தனெ சாணியும் வெளியில வந்துப்புடும்!"ன்னு சொல்லிட்டே சின்னவரு குமாரு அத்தான் போட்டிருந்த சட்டெ காலர பிடிச்சி தள்ள ஆரம்பிச்சிட்டாரு. பதிலுக்கு குமாரு அத்தானும் சின்னவரு தோள்ல போட்டிருந்த துண்ட இறுக்கி இழுக்க ஆரம்பிச்சிடுச்சு. பெரியவரு எடையில பூந்து, "வுடுங்கடா அசிங்கம் பிடிச்சப் பயலுவோளா! ஒண்ணும் யில்ல போ. ஒம்மட பொண்ணு ந்நல்ல பொண்ணுத்தாம். இந்த எழவெடுத்தவம்தாம் ஏத்தோ மனசு கேக்காம சொல்லிட்டுத் திரியுறாம். போ! இப்பிடி ஒரு சம்பவமெ நடக்கல. கெளம்பு! இனுமே ஒம்மட வூட்டு வெவகாரத்துல நாம்ம தலையிட மாட்டேம்! தப்புத்தாம் சாமீ! மன்னிச்சுக்கோ! ஊருல தெரிஞ்சி அசிங்கப்பட வாணாம். வந்தச் சொவடு தெரியாம கெளம்பு!"ன்னாரு பல்ல கடிச்சிக்கிட்டு ரண்டு பேத்தையும் பிரிச்சி வுட்டுப்புட்டுக் கையெடுத்துக் கும்புட்டு.
            சின்னவரு, "ம்ஹூம்! இத்தெல்லாம் ஒரு பொழப்பு? ஆம்பளென்னா நேர்ல எதுப்புப் போட்டு வெள்ளாமயில  ஒரு மூட்டெ கூட எடுத்துக் காட்டணும்!"ன்னு சொல்லிப்புட்டு காறித் துப்புனாரு. குமாரு அத்தான் பாய பாத்துச்சு. பெரியவரு கையக் கொடுத்து, "போடா அந்தாண்டா!"ன்னு தடுத்து நிப்பாட்டுனாரு.
            சின்னவரு வேக வேகமா ராத்திர வானத்துல தோன்றி மறையுற மின்னலு மாதிரி நடந்து மறைஞ்சாரு.
            "இனுமே இந்த வெசயத்தப் பத்தி பேச்சேடுத்தெ..."ன்னாரு பெரியவரு.
            "முடியாதுப்பா! நம்ம சாதிக்காரப் பொண்ண கீழ்ச்சாதிக்கார பயெ கட்டிக்கிட வுட மாட்டேம்! கூறு கெட்ட கம்முனாட்டி அதெ புரிஞ்சிக்காம பேசிட்டுப் போறாம்!"ன்னு குமாரு அத்தான் சின்னவரு போன தெசையப் பாத்து கீழே கெடந்த கல்லு ஒண்ணுத்தெ எடுத்து வீசப் பாத்துச்சு. பெரியவரு அதெ தடுத்ததும் அந்தக் கல்ல கொளத்துப் பக்கமா வீசுனுச்சு. கொளத்துல போயி தொப்புங்ற சத்தத்தோட அந்தக் கல்லு முழுக ஆரம்பிச்சிது. கொளத்துலேந்து அலை அலையா கெளம்புனது கரையில வந்து மோத ஆரம்பிச்சது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...