12 Jun 2020

பொல்லாங்கு கூடாதுடா மவனே!

செய்யு - 476

            சின்னவரு வூட்டு மாட்டை குமாரு அத்தானே போயி கட்டிட்டு தண்ணிக் காட்டிட்டு வைக்கோல அள்ளிப் போட்டுட்டு வந்துச்சு. அதுக்குப் பெறவுதாம் தன்னோடு வூட்டுக்கு வந்து செவலையைக் கட்டுனுச்சு.
            "ன்னடா மாட்டெ ஒண்ணுத்தெ காணும்னு நெனைச்சிட்டு இருந்தேம்! செவலதானே! ரொம்ப விஷமம் பண்ணுதுடா கொமாரு! மூக்கெ குத்தி ரண்டு நாலு கட்டிப் போட்டாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னு பயித்தம் பருப்ப ஒரு பலவைய வெச்சி உருட்டி வுட்டுக்கிட்டு கல்லு பாத்துட்ட இருந்த பெரியவரு கொரலக் கொடுத்தாரு. குமாரு அத்தான் கையி கால எல்லாம் அலம்பி துண்டால ஒரு தொவட்டு தொவட்டிக்கிட்டு உள்ளார வந்துச்சு.
            "யப்பா! முள்ளாங்கி இருந்தா கொடேம்!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "கால்ல முள்ளு ஏறுற அளவுக்கு வுட்டுப்புடுச்சோ செவலே!"ன்னு சொல்லிக்கிட்டெ முள்வாங்கிய எடுத்துக் கொடுத்தாரு பெரியவரு.
            "மாடுல்லாம் செரியத்தாம் இருக்கு. மனுஷங்க சரியில்லப்பா! கால்ல ஏறுன முள்ளு நாளைக்கு நெஞ்சுல ஏறிடுமோன்னு யோஜனையா இருக்கு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "வாரப்பவே கவனிச்சேம்! மொகம் கொஞ்சம் வாட்டம். ஒடம்பும் கொஞ்சம் வாட்டம். மாடுக ரொம்ப ‍அலைய வுட்டுச்சோ?"ன்னாரு பெரியவரு.
            "யப்பா! ஒரு முக்கியமான விசயங்!"ன்னுச்சு குமாரு அத்தான் வூட்டுக்குள்ளார பாத்துக்கிட்டெ. எல்லாரும் சமையல் கட்டுலயும் நடுக்கூடத்துலயும் உக்காந்திருந்துங்க மித்த சனங்க எல்லாம். திண்ணையில உக்காந்திருந்த பெரியவரோட கிட்ட வந்து உக்காந்துக்கிடுச்சு குமாரு அத்தான். "ராத்திரி நேரத்துல கண்ணு செரியா புரியாதுடா! இப்போ முள்ளெ எடுக்க நம்மால முடியா. காலையில பாத்துக்கிடலாம் வுடு. இப்போ எஞ்ஞ நடையைக் கட்டிட்டு அலையப் போறே. பேயாம படு!"ன்னாரு பெரியவரு கிட்டெ வந்து குமாரு அத்தானப் பாத்து.
            "அதெ வுட முக்கியமான விசயங் ஒண்ணு!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ன்னா மறுக்கா எதாச்சிம் ஒஞ் சித்தப்பங்காரனோ ஆளுங்கள வெச்சி வம்பு வெச்சிட்டு வந்துப்புட்டீயா?"ன்னாரு பெரியவரு.
            "யப்பா! அதல்லாம் ச்சும்மா வெளயாட்டுதானப்பா! சித்தப்பாத்தாம் வெனையா எடுத்துக்கிடும். அதுக்காக ஒரு பெரச்சனையாவுதுன்னா சித்தப்பாவ, நம்ம ஒறவே, நம்ம சாதிய வுட்டுக் கொடுத்துட முடியுமா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "எதெ சொல்றதா இருந்தாலும் வெளங்குறாப்புல சொல்லித் தொலைடா! ஒம் பேச்சால நமக்கு ஆவுற காரியமும் ஆவாம போயிட்டுக் கெடக்குது. இந்த பயித்தெ கல்லு பாத்து முடிச்சிடலாம்னு பாத்தா இவ்வேம் வேற எங்கயோ ஆரம்பிச்சி எங்கயோ போறாம்?"ன்னாரு பெரியவரு.
            "பயித்துல உளுந்தும், உளுந்துல பயிறும் கலந்தா நல்லாவா இருக்கும்?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "நம்மகிட்டெ விடுகதெ போட்டுட்டு நிக்குதீயா? அதெப்பிடிடா கலப்பு ஆச்சுன்னா ந்நல்லா இருக்கும்?"ன்னாரு பெரியவரு.
            "நம்ம பூர்ணி இருக்குல்லா! அத்தெ ராக்காயி மவ்வேன் சொடல இருக்காம்ல! அத்தோட சேத்து வெச்சி கருவக்காட்டு கடெசீயில வெச்சிப் பாத்தேம்ப்பா!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "எலே! இன்னும் கிட்ட வாடா! எந்த மாதிரிச் சங்கதிய வூட்டுல பொண்டுக இருக்குற நேரமா பாத்துச் சொல்றே? எலேய் ந்நல்லா பாத்தீயா? நெசமாத்தாம் சொல்லுதீயா? அத்து ஆம்பளெ மாதிரிக்கி ஆளுகள வெச்சி வேலைய வாங்குற ஆளு! வயல்ல எதாச்சிம் வேலைன்னு நின்னு பேசிட்டு சொல்லிட்டு இருந்திருக்க, நீயி பாட்டுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு கெளப்பி வுட்டுப்புடாதே! ஏக்கனவே ஒம் மேல ஒஞ் சித்தப்பங்கார்ரேம் கோவமா இருக்காம்!"ன்னாரு பெரியவரு கொரல தாழ்த்தி படபடப்பு அடங்காம. அவரு உருட்டிக்கிட்டு இருந்த பலவையையும் பயிறையும் தூக்கி அந்தாண்ட வெச்சிப்புட்டாரு.
            "ரண்டு கண்ணால பாத்தாச்சு. நாம்ம பாத்தா அவுக ரண்டு பேரும் எதுக்கு ஓடணும்? ஒஞ்ஞ கருத்துப்படியே வய வேலைகள சொல்றதா வெச்சிக்கிட்டாலும் இப்போ ன்னா வய வேல கெடக்கு? அத்து ஒண்ணா? ரண்டாவது ன்னான்ன்னா கருவக் காட்டுல உள்ளார போயி வய வேலயப் பத்திப் பேசுறதுக்கு என்னத்தெ வேண்டிக் கெடக்கு?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ஒஞ் சேதி உண்மெ இல்லன்னா வெச்சுக்கோ நாமளே தூக்கிப் போட்டு மிதிச்சிப்புடுவேம்!"ன்னாரு பெரியவரு.

            "செயமளா தேவி சாமி சத்தியமா சொல்றேம்ப்பா! நாம்ம ரண்டு பேத்தையும் பாத்ததப் பாத்து ரண்டும் ஓடுனுச்சுங்க. அத்து ஒண்ணு வெச்சு முடிவெ பண்ணக் கூடாதுன்னு, சித்தப்பா வூட்டுக்கு வந்துப் பாத்தா மாட்டெ காணும், பொண்ணு மட்டும் வந்து நின்னுச்சு. வந்து நின்னதுல மூச்சுல எரைப்பு, பேச்சுல கொஞ்சம் தடுமாற்றம், கேள்விக்குச் சமாளிப்புன்னு எல்லாம் உண்மெப்பா! சித்தப்பா வூட்டு மாட்டெ ஒருநாளும் யில்லாத திருநாளா இன்னிக்கு நாம்மத்தாம் கொண்டாந்து கட்டுனேம்! நாம்ம சொல்றது பொய்யாவே இருந்தாலும் சந்தேகம் வந்துப்புட்டா வெசாரிச்சிப்புடுறது நல்லதுப்பா! இல்லன்னா சித்தப்பாகிட்டெ இதெப் பத்தி சொல்லிப்புடுறது நல்லதுப்பா! நாளைக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்து வயக்காட்டுப் பயலுவோ நமக்குச் சமமா மாமம் மச்சாம் ஒறவு மொறை கூப்புட்டுக்கிட்டு நின்னா நல்லாருக்காதுப்பா!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ஒன்னய நம்பலாம்ன்னா மேக்கொண்டு காரியத்துல எறங்கலாம்!"ன்னாரு பெரியவரு.
            "யப்பா! நீயி பெத்த புள்ளய நீயே நம்ம மாட்டீயா? அடிச்சிச் சொல்றேம்ப்பா! எந் தல மேல அடிச்சிச் சொல்றேம்! நாம்ம பாத்தது உண்மப்பா!"ன்னுச்சு குமாரு அத்தான் கொஞ்சம் வேகப்பட்டாப்புல.
            "அதுக்கில்லடாம்பீ! இதெப் போயி பொண்ணுகிட்டெ வெசாரிக்க முடியாது. ஒரு வேள பொய்யின்னு வெச்சுக்கோ செல பொண்ணுங்க இப்பிடி பழியாயிடுச்சேன்னு நடுஞ்சாமமப் பாத்து கயித்துல தொங்குனாலும் தொங்கிடுவாளுவோ. உண்மென்னே வெச்சுக்கோயேம் அவளுங்க சமாளிக்குற சமாளிப்பெ நம்மால ஒடைச்சிட முடியாது. இப்பிடி செல வழக்குல்லாம் இதுல இருக்கு. நல்லதுக்குன்னு வெசயத்த சொல்லப் போற நாம்ம பழியோடயும் வார முடியாது, கெட்ட பேரோட வாரணும்னு அவசியமில்ல பாரு!"ன்னாரு பெரியவரு.
            "அப்போ சித்தப்பா குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவால்ல! கீழ்ச்சாதிக்கார பயெ நம்ம வூட்டுப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடுனாலும் பரவால்லன்னு நெனைக்குதீயா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "எதுக்கு இப்போ கோவங்றேம்? மொதல்ல வெசயத்தெ வெளங்க்கிக்கிடணும். பெறவுத்தாம் காரியத்துல எப்பிடி எறங்கணும்? என்னென்ன சொல்ல போட்டு அத்தெ புரிய வைக்கணுங்றதெ புரிஞ்சிக்கிடணும்ன்னு சொல்றேம்டா. அதெ வுட்டுப்புட்டு யிப்பிடி காலத்துக்கும் மோடி முட்டியாவே இருப்பேன்னா ஒன்னால இருக்குற சொத்து பத்த நெல புலத்தெ காவந்து பண்ண முடியாது பாத்துக்கோ!"ன்னாரு பெரியவரு.
            "யிப்போ ன்னா பண்ணணும்னு சொல்றே?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ஒஞ் சித்தப்பம் வாரட்டும். ராச் சாப்பாட்ட முடிச்சி பெற்பாடு பேசுவேம். இத்தெ இஞ்ஞ வூட்டுல வெச்சியும் பேச முடியாது. அஞ்ஞ வூட்டுல வெச்சியும் பேச முடியாது. மேக்கால கொளத்தாங்கரெ பக்கந்தாம் போயாவணும். அவ்வேம் படுக்கப் போற நேரமா பாத்து அஞ்ஞப் போயி நாம்ம அவ்வேங்கிட்டெ பேசணும்னு சொல்லி கொளத்தாங்கரெ பக்கமா கொண்டு வா! ரொம்ப பதனமா பேசோணும். எலே இருந்தாலும் கடெசீயா இன்னொது தவா கேட்டுக்கிடுறேம்! பாத்தது, சொல்றது வெசயம் சாமி சத்தியமா உண்மத்தானே? யில்லன்னா மவ்வேன்னு கூட பாக்க மாட்டேம். வெட்டிப் போட்டுப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு பெரியவரு.
            "எம் உசுர்ர வேணாலும் எடுத்துப்புடு! அப்பயும் உண்மெ இத்துதாங். இதுல மாத்தமில்ல!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "ஏம் திரும்ப திரும்ப கேக்குறேம்ன்னா, நாம்ம என்னவோ அவ்வேம் ஒஞ் சித்தப்பங்காரங்கிட்டெ ஓரண்டெ இழுக்குறதா அவ்வேம் நெனைச்சிக்கிட்டு இருக்காம். நாளைக்கு பொச்சரிப்பா சொன்னதா பேச்சு வந்துடக் கூடாது பாரு. பொல்லாங்கு சொல்றது குடும்பதஸ்னுக்கு ஒத்து வாராது. அதாங் மேல மேல கேட்குறது!"ன்னாரு பெரியவரு.
            "பொய்யின்னு சொல்லிருந்தா எந் நாக்கு அழுவிடும். போதுமாப்பா!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "செரிடாம்பீ! வெசயத்தெ வெளிக் காட்டிக்காம ராச்சாப்பாட்ட முடிச்சிக்கிடலாம். இதெ இதுக்கு மேல இஞ்ஞ பேசிக்கிட வாணாம். கொளத்தாங்கரையில வெச்சிப் பாத்துக்கிடலாம்!"ன்னாரு பெரியவரு.
            "செரி!"ன்னு சொல்லிட்டு துண்டெ ஒதறி தோள்ளல போட்டுக்கிட்டு கொட்டாயிப் பக்கமா போனுச்சு குமாரு அத்தான். கயித்துக் கட்டில எடுத்துப் போட்டுக்கிட்டு வானத்தெ பாக்க ஆரம்பிச்சிது, அப்பிடியே பக்கத்துல சின்னவரு வூட்டுல அவரு எப்போ வர்றாங்றதுலயும் ஒரு கண்ணெ வெச்சிக்கிட்டு.
            எட்டு மணி வாக்குல சின்னவரு சைக்கிள்ல வந்து எறங்குறாரு. எறங்கி சட்டையெ கழட்டிப் போட்டுட்டு கை, காலு அலம்பி முடிச்சி சாப்புட உக்கார்றது, சாப்புட்டு முடிச்சி எழும்புறதுன்னு எல்லாத்தையும் குத்து மதிப்பா கணிச்சிக்கிட்டு மனக்கணக்கா போட்டுட்டு இருக்கு குமாரு அத்தான். சின்னவரு சாப்புட்டு முடிச்சி உக்காந்திருப்பாங்ற நெலையில குமாரு அத்தான் பெரியவருகிட்டெ வந்துச்சு.
            "யப்பா! சித்தப்பாவ கூப்புட்டு வுடவா?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "நாம்ம சாப்பாட்ட முடிச்சிப்புடுவுமோ?"ன்னாரு பெரியவரு.
            "அதுக்குள்ள என்னத்தெ சாப்புட? இப்போ இருக்குற நெலைக்குச் சாப்பாடு எறங்காது. பேசி முடிச்சிட்டெ சாப்புடலாம்!"ன்னுச்சு குமாரு அத்தான். "பேச்சு எந்தத் திக்குல வாணாலும் போவலாம். எகிடுதிகிடான திக்குல போச்சுன்னா அதுக்குப் பெறவு மனசு சரில்லாம போயி சாப்பாடு எறங்காது பாத்துக்கோ!"ன்னாரு பெரியவரு. "பேசிட்டெ சாப்புட்டுக்கலாம்!"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "செரி! அப்பிடின்னா ஒண்ணு பண்ணு! நாம்ம மொதல்ல கொளத்தாங்கரைக்கு போயிக்கிறேம். நாம்ம அஞ்ஞ போன நேரத்தெ கணக்குப் பண்ணிக்கிட்டு சித்தப்பனெ போயி ஒரு முக்கியமான வெசயம் பேசணும்ன்னு நாம்ம கொளத்தங்கரையில காத்திருக்கிறதா சொல்லு. சித்தப்பன கெளப்பி வுட்டுப்புட்டு அப்பிடியே கூடவே வந்துத் தொலைச்சிப்புடாதே. அவ்வேம் இங்ஙன வந்து சேந்த பிற்பாடு கொஞ்ச நேரம் கழிச்சிக் கெளம்பி வா!"ன்னாரு பெரியவரு.
            "செரிப்பா!"ன்னு கெளம்புனுச்சு குமாரு அத்தான்.
            ஒடனே பெரியவரு என்னத்தெ நெனைச்சாரோ, "வேண்டாம்ல்லா! நீயிப் போயிக் கூப்புட வாணாம். ன்னடா இத்து சின்ன பயல வுட்டு கூப்புட்டு வுட்டுருக்காம்ன்னு நெனைப்பாம். சமயத்துல வார்ற மாட்டாம். நீயி மொதல போயி கொளத்தாங்கரையில நில்லு. நாம்ம வாரச் சொல்லிட்டு பின்னாலயே வர்றேம். அவ்வேம் வர்ற நேரம் கண்ணுல பட்டுட்டு நிக்காதே. ஒதுங்குனாப்புல கோயிலு பக்கமா நில்லு. நாம்ம வந்த பெற்பாடு வந்துச் சேந்துக்கோ!"ன்னாரு பெரியவரு.
            "அப்பிடிக்கி ஆவட்டும்!"ன்னுச்சு குமாரு அத்தான். சொல்லிட்டு மொத ஆளா கொளத்தாங்கரைக்குக் கெளம்புனுச்சு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...