11 Jun 2020

கருவக்காட்டுக்குள்ள சோடி ஒண்ணு!

செய்யு - 475

            பெரியவருக்கும் சின்னவருக்கும் வெள்ளாமையில ஒரு போட்டி இருந்தாலும் அதெ பெரியவரு குடும்பத்துல பெரியவரு பெரிசுபடுத்துனதில்ல. சின்னவரு குடும்பத்துல அதெ பூர்ணி அத்தாச்சி பெரிசுபடுத்துனது இல்ல. அதெ பெரிசுபடுத்திக்கிட்டது பெரியவரு குடும்பத்துல குமாரு அத்தானும், சின்னவரு குடும்பத்துல சின்னவரும்தாம். இவுங்களோட இந்தக் கொணம் அவுங்களுக்குன்னு வேல பாத்த ஆளுங்களுக்கும் தொத்திக்கிட்டதுதாம் பரிதாபம். வேலங்குடி வெவசாய ஆளுங்க பெரியவரு ஆளுங்க, சின்னவரு ஆளுங்கன்னு ரண்டா பிரியுற அளவுக்கு ரெண்டு பேத்துக்கும் ஆளுங்க இருந்தாங்க. வேலை வெட்டின்னு வர்றப்போ ரண்டு பக்கமும் போயி ரண்டு பக்க ஆளுங்க வேலை பாத்துக்கிட்டாலும், பேச்சுன்னு வந்துப்புட்டா பெரியவரோட ஆளுங்க பெரியவர்ரோட பக்கத்தெ வுட்டுக் கொடுக்க மாட்டாங்க, சின்னவரு பக்கத்து ஆளுங்க சின்னவரோட பக்கத்தெ வுட்டுக் கொடுக்க மாட்டாங்க.
            அதெ வெச்சிக்கிட்டு ரண்டு பக்கத்து ஆளுங்களும் தேவையில்லாத வறட்டுச் சண்டைய வெட்டிப் பேச்சால உண்டு பண்ணிப்புடுவாங்க. கடெசியில இத்து ஆளுங்க சண்டையா ஆரம்பிச்சி பெரியவருக்கும் சின்னவருக்கும் சண்டெங்ற மாதிரிக்கி ஊருக்குள்ள பேச்சு ஆவும். இந்த மாதிரிச் சண்டையெ அப்பைக்கப்போ குமாரு அத்தானும் என்னவோ பொழுது போகாம வேடிக்கையா வெளையாட்டா பண்ணி வுட்டுப்புட்டு ஒண்ணும் தெரியாதது போல இருந்துக்கும். ஒரு வழியா பெரியவருதாம் அதெ ஒண்ணும் இல்லங்ற மாதிரிக்கிப் பேசிச் சமாதானம் பண்ணி வுடுவாரு. இந்தக் கொணப்பாட்டால சின்னவருக்குக் குமாரு அத்தான கண்டா ஆகுறதில்ல. குமாரு அத்தானுக்கும் சின்னவர்ர கண்டா பிடிக்கிறதில்லன்னாலும் சித்தப்பாங்ற மருவாதி, சித்தப்பா குடும்பங்ற எண்ணம் மட்டும் மனசுல உண்டு.
            பெரியவரு வூட்டுல வயக்காட்டுக்குக் காலங்காத்தால பெரியவரு போனா, சாயுங்கால நேரமா குமாரு அத்தாம் போறதுங்ற ஒரு வழக்கத்தெ உண்டு பண்ணிக்கிட்டாங்க. வேலையிருக்குற காலத்துல ரண்டு பேத்தோட செயா அத்தையும் வயக்காட்டுலயே கெடக்கறங்றது வேற கதெ.வயக்காட்டுல வேலை இல்லன்னாலும் வயக்காட்டெ ஒரு நாளுக்கு ரண்டு தவா பாத்துப்புட்டு வந்துப்புடணுங்றது கெராமத்தானுங்களுக்கே உள்ள வழக்கம். பெரியவரு வூட்டுல இப்பிடின்னா சின்னவரு வூட்டுல ரெண்டு வேளையும் போயி பாக்குறது பூர்ணி அத்தாச்சித்தாம். எல்லாம் போட்டிக்கு போட்டிங்ற மாதிரித்தாம். அதுவும் கோடையிலயும் வெதைக்காம கெடக்குற சும்மா கெடக்குற வயல ஒரு நாளைக்கி ரண்டு தவா பாக்கணுங்ற அவசியம் என்னத்தெ வந்துக் கெடக்கு? அப்பிடி முடியாதுங்றதுக்காக மாடுகள அடிச்சி வுட்டுப்புட்டு அதெ ஓட்டிட்டு வர்ற சாக்குல ரண்டு தவா போயிட்டு வந்துப்புடுவாங்க. அப்பிடி ஓட்டி வுட்டுப்புட்டா மாடுகளுக்கு புல்லு அறுக்கு வேல ஒண்ணு மிச்சமாவதுல்ல. சின்னவரு இருக்குற நாள்ல அவரு ஒரு எட்டுப் போயிட்டு வருவாரு. அவருக்கு இருந்த வேல சோலிகள்ல, குடும்ப சொலிகள்ல பெரும்பாலான நாள்கள்ல வயக்காட்டுப் பக்கம் போயிட்டு வந்தது பூர்ணி அத்தாச்சித்தாம்.
            வெள்ளாம நடக்குற நாட்கள்ல மாடு கண்ணுக வூட்டுல கட்டிக் கெடக்குமுங்க. புல்லு அறுத்துக் கொண்டாந்து போட்டு ஆவணும். வெள்ளாம நடக்காம உளுந்து பயிறு எடுத்ததுக்குப் பின்னாடி கோடையில மாடுகள வயக்காட்டுக்கு மேய அடிச்சி விட்டுப்புடுவாங்க. அப்போ வயலுங்க சும்மாத்தானே காத்து வாங்கிக்கிட்டு மவராசன் போல ஓய்வு எடுத்துக்கிட்டுக் கெடக்குமுங்க. மாடுகளும் மேயுறதெ மேய்ஞ்சிட்டு போடுற சாணியப் போட்டு, கோமியத்தெ அடிச்சி வுட்டா அத்து வயலுக்கு உரமால்ல போவுது. அத்தோட வூட்டுல சாணியப் பொறுக்கிப் போட்டு கொட்டுற வேலையிலயும் கொஞ்சம் மிச்சமாவுதுல்ல.
            பெரியவரு வூட்டுல மாடுக பட்டாளமே இருக்குறதால, கோடையில காலங்காத்தால அடிச்சி வுட்டா பத்து பதினோரு மணி வாக்குல போயி பெரியவரு ஓட்டிப்புட்டு வந்துப்புடுவாரு. அதுக்கு மேல போனா வெயிலு கடுமையா இருக்கும். மாடுக பாட்டுக்கு கடுமையான வெயில்லயும் மேஞ்சிக்கிட்டு நிக்கும். அப்பிடிக் கடுமையான வெயில்ல மேஞ்சிக்கிட்டு நின்னா மாடுக தெரங்கிப் போயிடும். கறவை மாடுன்னா வெயில்ல நின்னாக்கா கறக்குற பால்ல லிட்டருக்கு எரநூத்து பாலாவது கொறைஞ்சிப் போயிடும். அதால மாடுகள பதினோரு மணிக்கு மேல வயல்ல வுடாம ஓட்டியாந்திடுறது. ஓட்டி வுட்ட மாடுகள கட்டி தண்ணிக் காட்டி படுக்கப் போட்டா, நாலு மணி வாக்குல திரும்ப வயக்காட்டுக்கு அடிச்சி வுடுவாங்க. அப்பிடி அடிச்சி வுடுற மாடுகளெ பொழுது மசங்குற நேரத்துக்கி மின்னாடி போயி ஓட்டிப்புட்டு வந்துப்புடுறது. சாயுங்காலம் மாடுகள ஓட்டிட்டு வர்ற வேல குமாரு அத்தானோடது.
            காலையில அடிச்சி வுடுற மாடுகள ஓட்டிட்டு வரது சுலுவுன்னா, சாயுங்காலம் அடிச்சி வுடுற மாடுகள ஓட்டிக் கொண்டாறது கொஞ்சம் செருமம். வெயிலுக்குப் பயந்து காலையில அடிச்சி வுட்ட மாடுக ஓட்டியாரதுக்கு ஒத்துழைக்குமுங்க. சாயுங்காலத்துக்கு மேல எங்க வெயிலு இருக்கும்? அதால பொழுது மசங்க மசங்கத்தாம் மாடுக என்னவோ புல்லையப் பாக்காது போல அம்புட்டு ஆசையா வேக வேகமா மேயுமுங்க. ஓட்டிட்டு வர்ற ஆளுகளுக்கு ஓட்டிட்டு வர்றதுக்கு மனசே வாராது. அத்தோட சாயுங்கால நேரமா அடிச்சி வுடுற மாடுக மேயுறதுக்கு ஆசையே இல்லாதது போல கால் போன போக்குல அது பாட்டுக்குப் போயிக்கிட்டே இருக்குமுங்க. வூட்டுக்குக் கெளப்பிட்டு வர்ற நேரமா பாத்துதாம் மேயவே ஆரம்பிக்குமுங்க. ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு தெசையில அது பாட்டுக்கு போவுமுங்க என்னவோ யாத்திரை கெளம்பிப் போறாப்புல. கெராமத்துல இதெ வெச்சு ஒரு சொலவமே உண்டு, அடிச்சி வுட்டு மாடு போலன்னு. ஏன்னா அடிச்சி வுட்ட மாடு காலு போற போக்கெல்லாம் போவும். காலு அசந்து போவுற எடமா பாத்துதாம் நின்னு மேய ஆரம்பிக்குமுங்க. அப்பிடி நின்னு மேயுற எடம் ஒரு மைலு தூரமா கூட இருக்கும், ரெண்டு மைலு தூரமா கூட நிக்கும். வயக்காடு பொட்டக்காடால்ல கெடக்கும் அப்போ. கண்ணுக்கு எட்டுன தூரம்னே எதுவும் தெரியாது. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் வயக்காட்டோட போட்டக்காடாத்தாம் தெரியும். நல்லா வெளைஞ்ச வயலு, சரியா வெளையாத வயல்ன்னு அப்போ பாக்குறப்போ எல்லா வயலும் ஒரே மாதிரியாத்தாம் கெடக்கும். காத்து சும்மா அடிச்சிக்கிட்டு வீசும், என்னவோ தடுக்குறதுக்கு ஆளில்லாது போலவும், வேலி போடுறதுக்கு மனுஷனுங்க இல்லாதது போலவும்.

            சாயுங்காலமா குமாரு அத்தான் மாடுகள ஓட்டப் போனா மாடுகள ஓட்டிட்டுக் கொண்டு வர ஏழு மணிக்கு மேல ஆவும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தெசையில நிக்குறதெ, ஒவ்வொரு கருவக்குத்துல ஒதுங்கி நிக்குறதெ கண்டுபிச்சி ஓட்டியாரணும். பாஞ்சிலேந்து இருவது மாடு வரைக்கும் ஓட்டிக்கிட்டு வாரதுன்னா அத்து பெரும்பாடாத்தாம் இருக்கும். கிட்டதட்ட எல்லா மாட்டையும் ஒண்ணு தெரட்டி ஒட்டுறப்போ ஒரு மாடு எங்காச்சிம் கங்காணாத எடத்துல மேய்ஞ்சிக்கிட்டு நின்னு செருமத்தெ கொடுக்கும். அதெ அங்கன இங்கனன்னு அலைஞ்சிக் கண்டுபிடிச்சிக் கொண்டாரணும். குமாரு அத்தானுக்கு அத்து பெரும்பாடா இருந்தாலும் ஒவ்வொண்ணும் எங்கன எங்கன நிக்குங்றது அதுக்குத் தெரியும். சின்னவரு வூட்டுக்கு அந்தச் செருமம் யில்ல. ரெண்டு மாடோ, மூணு மாடோ இருந்ததால செருமமில்லாம பூர்ணி அத்தாச்சி அதெ சுலுவா ஓட்டிட்டு வரும். ஆனா மாடு வந்து சேர்ற நேரத்தெ பாத்தா குமாரு அத்தான் ஓட்டிட்டு வந்த பெற்பாடுதாம் பூர்ணி அத்தாச்சி ஓட்டிட்டு வரும். வயக்காடெல்லாம் சுத்திப் பாத்துட்டு பூர்ணி அத்தாச்சி ஓட்டிட்டு வாரதாத்தாம் ரொம்ப நாளா சின்னவரு வூட்டுல அதெ நெனைச்சிட்டு இருந்தாங்க.
            ஒரு நாளு நடந்த சம்பவத்துக்குப் பெறவுதாம் பூர்ணி அத்தாச்சி ஏம் குமாரு அத்தானெ வுட தாமசமா மாட்டெ ஓட்டிட்டு வாரதுங்றதுக்கான காரணம் வெளங்குனுச்சு. அன்னிக்குன்னு பாத்து எல்லா மாடுகளையும் தெரட்டுன பெற்பாடும் ஒரு செவலை மட்டும் காங்கல குமாரு அத்தானுக்கு. கருவக்காட்டுக்கு கடெசி மட்டும் போயி கருவக்காயெ பொறுக்கிட்டு நிக்குறது அதுக்கு வேலங்றது குமாரு அத்தானுக்கு நல்லாவே தெரியும். செரி அதெ பாத்துப்போம்ன்னு இருந்த மாடுகள வயக்காட்டெ தாண்டி ஊரோட தெரு வரைக்கும் அடிச்சித் தொரத்தி விட்டுச்சு குமாரு அத்தான். மாடுக ஊரு தெரு வரைக்கும் கெளப்பிக் கொண்டு வாரதுதாங் செருமம். ஊரு தெருவப் பாத்துப்புட்டா அது பாட்டுக்குக் கெளம்பி வூட்டப் பாக்க வந்துப்புடுமுங்க. குமாரு அத்தானோட நெனைப்பு ன்னான்னா கருவக்காட்டுக்குள்ள போன செவலைக்காக இந்த மாடுகள நிப்பாட்டுன்னா, கருவக்காட்டுக்குள்ள  போயிட்டு வாரதுக்குள்ள இதுகள்ல ஒண்ணு ரண்டு வயக்காட்டுக்கு இந்தப் பக்கமா அது போக்குக்கு போயிடுமுன்னு. அதால ஒத்த மாட்டுக்காக மித்த மாடுகள செதற வுட வாணாம்ன்னு நெனைச்சி மித்ததெ எல்லாத்தையும் ஊரு தெரு வரைக்கும் அடிச்சி வுட்டுப்புட்டு கருவக்காட்டு பக்கமா வந்து உள்ளார நொழைய ஆரம்பிச்சிது.
            ஒரு வகையில அது கருவக்காடுன்னாலும் ஊருக்கே ஒதுங்றதுக்குப் பீக்காடும் அதுதாங். சரியா வயக்காட்டுக்கும், ஊரு தெருவுக்கு நடுவுல இப்பிடி ஒரு கருவக்காடு பெரும்பாலும் ஒவ்வொரு கெராமத்துக்கும் ஒண்ணு அமைஞ்சிடும். அந்தக் கருவக்காடு பீக்காடா மட்டும் இருக்குறதில்ல, வூட்டுல எதாச்சிம் பெராணிங்க செத்தாலும் கொண்டாந்து எறிஞ்சிட்டுப் போற எடமாவும் இருக்கும், பொதைக்குற எடமாவும் இருக்கும். அத்தோட கண்ட கண்ட குப்பைகளெ கொட்டுற எடமாவும் இருக்கும். பெரும்பாலும் அதால ஆளுங்க அதிகமா நொழையாத எடம்ன்னா அத்து ஊரோட கருவக்காடுதாம். நடுக்காட்டத் தாண்டி உள்ளார போனாக்கா சாராய ஊறல்லேர்ந்து, பாக்கெட்டுச் சாராயத்தோட பாலீதீன் உறைக வரைக்கும் நெறையப் பாக்கலாம். மொத்தத்துல ஊருக்கு ஒரு அத்துவானக் காடு அது.
            குமாரு அத்தான் "ட்ரீய்யோ, ட்ரீய்யோ ஏய் செவலே வந்தேம்ன்னா பாரு!"ன்னு கொரலு கொடுத்துட்டுப் போவுது. அதோட கொரலுக்குப் பதிலு கொரலா செவலையோட கொரலும் ம்ம்மேய்ன்னு கேக்குது. அத்தோட சரசரங்ற சத்தத்தோட ரெண்டு ஆளுங்க ஓடுறதும் தெரியுது. ஓடுற ஆளுல ஒண்ணு ஆம்பளெ, இன்னொண்ணு பொம்பளங்றதும் தெரியுது. கொஞ்சம் பொழுது மசங்குனாப்புல இருக்குது. மொகம் தெரியல. மொகம் தெரியாட்டியும் ஆளோட நடை, உடை, பாவனையில அத்து யாருங்றது தெரியாமல போயிடும்? குமாரு அத்தான் நின்னுடுச்சு. மாட்டு நெனைப்புல இருந்த அது இதெ மொதல்ல கவனிக்கல. ஓடுற சத்தத்த வெச்சித்தாம் கவனிக்குது. இப்போ மாட்டெ பிடிக்கிறதுங்றதெ வுட்டுப்புட்டு அந்த ஆளுக குறுக்கால கண்ணுக்குப் படாம ஓடுற தெசையில இதுவும் ஓடுனுச்சு. குமாரு அத்தான் பின்னாடி தொரத்திட்டு ஓடுறதப் பாத்துட்டு அந்த உருவமுங்க சிட்டா பறந்து  கருவக்காட்டுக்கு வெளியில வந்து, ரெண்டு உருவமும் ரண்டு பக்கமா செதறி ஓடுதுங்க. குமாரு அத்தானுக்கு கிட்டத்தட்ட தெளிவுப்பட்டுப் போச்சு அந்த ரண்டு உருவங்களும் யாருன்னு.
            நேரா குமாரு அத்தான் சின்னவரு வூட்டுக்கு வந்துச்சு. பூர்ணி அத்தாச்சி சமையல்கட்டுல நின்னுகிட்டு இருந்துச்சு. ஒரு நாளும் இல்லாத திருநாளா குமாரு அத்தான் வூட்டுக்குள்ளார வாரதெ தெகைப்பா பாத்துக்கிட்டு நின்னுச்சுங்க ரசா அத்தையும், சுவாதி அத்தாச்சியும். அதெ பாத்துப்புட்டு வேக வேகமா ஓடி கொட்டகையில மாடுகளப் பாத்துச்சு. மாடுகளக் காணும். நேரா வூட்டுக்குள்ள பூரணி அத்தாச்சிக்கிட்டெ வந்துச்சு குமாரு அத்தான்.
            "கொட்டாய்ல மாடுங்க எஞ்ஞ காணும்?"ன்னுச்சு குமாரு அத்தான்.
            "பொழுது மசங்கிட்டுன்னு இருட்டா போயிடுச்சுன்னு வந்துட்டேம். அவுத்து வுட்ட மாடுக எந்தத் தெசையில நிக்கின்னு தெரியல. அதாங் வூட்டுக்கு வந்தாவது யம்மாவையாவது அழைச்சிட்டுப் போவேம்ன்னு நெனைச்சேம். அதுக்குள்ள யண்ணே நீஞ்ஞளே வந்துப்புட்டீங்க! நம்மட வூட்டு மாடுகள ஓட்டியாரணும்!"ன்னுச்சு பூர்ணி அத்தாச்சி.
            "கதெ ந்நல்லாத்தாம் இருக்கு! ஊர்ல ஒரு காளெ மாடும், பசு மாடும் தறிகெட்டு அலையுதுங்க!"ன்னு சொல்லிச்சு குமாரு அத்தான். வேற ஒண்ணுத்தையும் சொல்லல. வூட்டை வுட்டு வெளியில வந்துச்சு குமாரு அத்தான். ரசா அத்தை ஓடியாந்து, "என்னடாம்பீ வராத நீயி வந்திருக்கே? ஒரு வாயி டீத்தண்ணியக் குடிச்சிட்டுப் போ!"ன்னுச்சு.
            "ராத்திரி சித்தப்பா வந்ததும் வார்ற வேண்டிய வெல இருக்கு. அப்போ வாரப்ப குடிச்சிக்கிறேம். மாடு வேற வூடு வந்து சேரல்லயில்ல. அதெ கொண்டார்றேம். இஞ்ஞ நின்னா, அஞ்ஞ மாடுக போன தெச தெரியாம போயிடும்!"ன்னு கெளம்பிக் கெழக்கால ‍தெருவ வுட்டு வயக்காட்டுப் பக்கமா கருவக்காட்டுப் பக்கமா போனுச்சு. போனா சின்னவரு வூட்டு மாட்டெ அடிச்சி ஊரு ‍தெரு பக்கமா ஒரு உருவம் தொரத்தி வுடுறது தெரியுது. அதெ பாத்துட்டு, "ஏய் டேய் நில்லுடா!"ன்னு சத்தத்தெ போட்டுட்டு ஓடுனுச்சு குமாரு அத்தான். அந்தச் சத்தத்தெ கேட்டதும் தொரத்தி வுட்ட உருவம் மின்னல போல மறைஞ்சிப் போன எடம் தெரியாம போயிடுச்சு. கொஞ்ச தூரம் ஓடிப் பாத்துச்சு குமாரு அத்தான். அதுக்கு மேல அந்த இருட்டு என்னவோ ஓடுற உருவத்துக்கு ஒத்தாசையா இருக்குறாப்புல இதுக்கு மேல அந்த உருவத்தெ காட்ட மாட்டேன்னு தெடமா நின்னுடுச்சு. இருட்டுன்னா இருட்டு சட்டுன்னு பாஞ்சி வந்துப்புட்ட செமத்தியான இருட்டு. "ஏய் செவலெ ட்டிரிய்யோய்! வந்தேன்னா வெச்சுக்கோ..."ன்னுச்சு குமாரு அத்தான். அந்தச் சத்தத்துக்கு எங்கிருந்துச்சோ தெரியல, "ம்மேய்"ன்னு ஓடியாந்துச்சு செவல.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...