1 Jun 2020

யாருகிட்ட யாரு வேலை பாக்குறது?

செய்யு - 466

            ஒரு வாரம் கழிச்சு சுப்பு வாத்தியாரே மெனக்கெட்டு வேலங்குடிக்குப் போனாரு. பெரியவரையும் கூடவே அழைச்சுக்கிட்டுக் கொண்டு போயி கார்த்தேசு அத்தானை டாக்கடருகிட்டெ காட்டுனாரு. மறுபடியும் மருந்து மாத்திரைககள எழுதிக் கொடுத்தாரு ஸ்ரீதரன் டாக்கடரு. கார்த்தேசு அத்தானோட ஒடம்புத்தாம் வத்திப் போயிருந்துச்சே தவுர, இப்போ சுயமா நடக்குற அளவுக்கு ஒடம்பு ஓரளவுக்குத் தேறியிருந்துச்சு.  மருந்து மாத்திரைகளோட கொணம் நல்லாவே தெரிய ஆரம்பிச்சுது. பாஞ்சு நாள்ல டைபாய்டு போன எடம் தெரியல. அத்தோட ஒடம்பும் போன எடம் தெரியாம போயிடுச்சு. ஒரே மாசத்துல பெரியவருதாம் அந்த ஒடம்ப சரி பண்ணிக் கொண்டாந்தாரு. சரிபண்ணிட்டார்ன்னா, அதுக்கு அவரோட மெனக்கெடு இருக்குதே அதெ சொல்லாம வுட முடியாது.
            ஒரு நாளைக்கு எதாச்சிம் ரண்டு பண்டத்தெ புதுசு புதுசா செஞ்சிக் கொடுப்பாரு பெரியவரு. காலையில கேவுரு கஞ்சின்னா, சாயுங்காலமா அரிசி மாவு புட்டு பண்ணிக் கொடுப்பாரு. அடுத்த நாளு தேன்ல கலந்த தெனை மாவ காலையில கொடுத்தார்ன்னா சாயுங்காலமா பயிறு புட்டுச் செஞ்சிக் கொடுப்பாரு. கேவுரு, கம்பு, தெனை மூணையும் வறுத்துப்புட்டு அரைச்சி அதுல நாட்டுச் சர்க்கரையக் கலந்து ஏலக்காயெல்லாம் போட்டு கொழுக்கட்டை பண்ணிக் கொடுப்பாரு. காக்கா புள்ளே வூட்டுல மாதுளங்காய் காய்ச்சித் தொங்குனுச்சு. தெனமும் ஒண்ணோ ரண்டோ போயிப் பறிச்சிட்டு வந்து மாதுளம் பழம் சாப்புடக் கொடுத்துடுவாரு. பழத்தோட முத்துகளச் சுத்தி இருக்குற வெள்ளைத் தோல கிட்டக்க நின்னு சாப்புட வைப்பாரு. "அதாம்டாம்பீ பழத்தோட தொப்புளு கொடி, தொவர்ப்பா இருக்குதுன்னு வுட்டுப்புடாதடா. அதுலத்தாம்டா பழத்தெ விட வெசயம் இருக்கு!" ன்னு கிட்டெ நின்னு சொல்லி சொல்லித் திங்க வைப்பாரு.
            பெரியவரு டவுனுப் பக்கம் போனார்ன்னா ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, ஆப்பிள்ன்னு வாங்காம வர மாட்டாரு. அத்தோட எள்ளும், மணிலா கொட்டையும் வாங்கியாருவாரு. எள்ளுல எள்ளுருண்டையும், மணிலா கொட்டையில கடலை உருண்டையும் பண்ணி, அத்தோட கெட்டி உருண்டையையும் உருட்டி அதெ ஒவ்வொண்ணுக்கும் ஒரு டப்பான்னு மூணு டப்பாவுல கொடுத்து கார்த்தேசு அத்தாங்கிட்டெ நெனைச்சப்பல்லாம் எடுத்துச் சாப்புடடான்னாரு. வாங்கியாந்திருந்த அத்தோட பழங்கள்ல அப்பைக்கப்போ ஜூஸூ போட்டுக் கொடுத்துட்டு இருப்பாரு.
            வாரத்துக்கு ரெண்டு மூணு நாளு கறி போடுறப்போ ராயநல்லூர்ல பாய்க் கடையில சொல்லி வெச்சி ஆட்டுக்கால்கள வாங்கியாந்து ஆட்டுக்காலு சூப்பு வெச்சிக் கொடுத்துருவாரு. உளுத்தம் வடை செய்யுறதுல அவர்ரப் போல ஆளெ ஜில்லாவுல பாக்க முடியாது. என்னா பெரிய உளுத்தம் வடெ? உளுத்தம் மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மொளகா, மொளக கலந்து பண்ணிப் போட்டு பண்ணுறதுதான்னு கேட்டாக்கா, அவரு செஞ்சதெ தின்னுப் பாத்தாத்தாம் அந்த வடையோட ருசி அதுக்கு எப்பிடி வருதுன்னு தெரிஞ்சிக்க முடியும். உளுத்தம் வடையில உப்பை அவ்ளோ திட்டமா போட்டிருப்பாரு. ஒரு வடைக்கு எத்தனெ வெங்காயத் துண்டு, பச்செ மொளகாத் துண்டு இருக்கணுங்றதெ கணக்குப் பண்ணிச் சேத்தது போல சேத்திருப்பாரு. வடையத் தட்டி அவரு எண்ணெய்ல வுடுற அழகே கப்பல்ல பண்ணி கடல்ல லாவகமா வுடுறாப்புல இருக்கும். வடைய வாயில வைக்கிறப்பவே வாயில கரையுறாப்புல அப்பிடி மாவ அரைக்கிறதுல்லாம் அவருக்குத்தாம் சாத்தியம். உளுத்தம் வடை சுடுறப்போ பக்கத்துல கூப்ட்டு வெச்சு சுடச் சுடத்தாம் தருவாரு. தந்துக்கிட்டெ, "உளுத்தம் வடைன்னா அதெ இளஞ்சூட்டுல திங்கோணும், கொமரிப் பொண்ண அழைச்சிக்கிட்டு குத்தாலத்துலத்தாம் போயித் தங்கோணும்!"பாரு.
            இப்பிடி ஒவ்வொரு வெசயத்தையும் பொறுமையா மெனக்கெட்டு செய்யுறதுல பெரியவர்ர வுட்டா வேற ஆளெ பாக்க முடியாது. இந்த மாதிரி வேலைகள்ல அலுப்போ சலிப்போ அவருக்கு உண்டாவது. ரொம்ப உற்சாகமா மெனக்கெட்டுச் செய்வாரு. பெரசவம் ஆன ஒரு பொண்ணு இருக்குற வூட்டுல பெரியவரு இருந்தா போதும். அவரு ஒரு ஆளு இருந்துகிட்டு கொழந்தெ பெத்துப் போட்ட பொண்ணு சாப்புட வேண்டிய அத்தனெ மருந்து, லேகியம் எல்லாத்தையும் தயாரு பண்ணிக் கொடுத்துப்புடுவாரு. பொறந்த கொழந்தைக்கு வைக்குற கருப்பு மையி வரைக்கும் தயாரு பண்ணிப்புடுவாரு.
            பெரியவரோட சிறப்பே ஒரு பண்டம் பலகாரத்தைச் செஞ்சு கொடுக்குறப்போ வெறுமனே கொடுத்துப்புட்டு வந்துப்புட மாட்டாரு. அதுக்கு ஒரு பேச்சு, கதென்னு எதையாச்சிம் வெச்சிருப்பாரு. அதெ சொல்லித்தாம் கொடுப்பாரு. அதெ கேக்குறப்பவே அவரு செஞ்சதையெல்லாம் ஒடனே அப்பிடியே காலி பண்ணிடணும்னு தோணும். அப்பிடியில்லாம் பண்ணித்தாம் கார்த்தேசு அத்தானோட ஒடம்ப பழைய நெலமைக்குக் கொண்டாந்தாரு. அத்தோட கார்த்தேசு அத்தானோட வாழ்க்கையையும்தாம்.
            பெரியவரு என்ன சொன்னாரோ அதுப்படி செஞ்சு வுட்டாரு. சென்னைப் பட்டணத்துலேந்து சந்தானத்த வரச் சொல்லி கார்த்தேசு அத்தானை சென்னைப் பட்டணத்துக்கு அழைச்சுட்டுப் போவ வெச்சாரு. அன்னிக்கு சுப்பு வாத்தியாரும் போயிருந்தாரு. சின்னவருக்கு இதெ பாக்குறப்போ வாயெல்லாம் பல்லுதாம் தெரிஞ்சுச்சு. "அவ்வேம் மவனுக்கு பெரியப்பனும், மாமங்காரனும் பாத்து வுட்டு என்ன செஞ்சாலும் சரித்தாம்! இனுமே நாம்ம இதுல தலையிட மாட்டேம்! அவனெ ஒஞ்ஞ ரண்டு பேத்துக்கும் தத்தம் பண்ணிக் கொடுத்தாப்புலத்தாம். இனுமே அவ்வேம் ஒஞ்ஞ புள்ளே மாதிரிக்கி! நாம்ம அவனுக்குப் பண்ணறதுக்கு என்ன இருக்கு? அவனுக்கு மறுஜென்மம் கொடுத்ததெ நீஞ்ஞத்தானே. இனுமே கார்த்தேசு பெரிப்பாவுக்கும் மாமாவுக்கும் கட்டுப்புட்டு சென்னைப் பட்டணத்துல சந்தானம் ன்னா சொல்லுதோ அதுப்படி நடந்துக்க வேண்டித்தாம்!"ன்னாரு. இதெ கேட்டப்ப சுப்பு வாத்தியாரு, பெரியவரு, சந்தானம்ன்னு எல்லாத்துக்கும் ரொம்ப சந்தோஷம். அதுக்குத் தகுந்தாப்புல பெரியவரும், "கார்த்தேசுவெ தன்ன வுட ஒரு படி மேல கொண்டு போயி வைக்க வேண்டியது சந்தானத்தோட வேல! அப்பிடிப் பண்ண வேண்டியது ஒரு அண்ணங்காரனா அவனோட கடமெ!"ன்னாரு.

            இப்போ கார்த்தேசு அத்தானைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பி வுட எல்லாருமா கெளம்பி திருவாரூருக்குப் போயி ரயிலேத்தி வுட்டாங்க. பெரியவரு என்ன சொன்னாரோ அதெ காப்பாத்துறாப்புல சென்னைப் பட்டணத்துல சந்தானம் அத்தான் நடந்துக்கிடுச்சு. சென்னைப் பட்டணத்துக்குப் போன கார்த்தேசு அத்தான் மலரு அத்தாச்சி வூட்டுலத்தாம் இருந்துச்சு. கார்த்தேசு அத்தான் ஐ.டி.ஐ.யில எலக்ட்ரீஷன்னா படிச்சிருந்துச்சு. அதெ தங் கூட வேலைக்கு வெச்சிக்கிறதா, இல்ல கம்பெனி எதுலயாச்சுயும் வேலையில சேத்து வுடுறதான்னு சந்தானம் அத்தானுக்கு ஒரு யோசனெ. மலரு அத்தாச்சியோட புருஷங்காரனான பாலு அத்தானும் அதே போல ஐ.டி.ஐ.யில எலக்ட்ரீசியனா படிச்சி கார்ப்பரேஷன்ல வேல பாக்குறவருங்றதால அவரு கூட கார்த்தேசு அத்தான கோத்து வுட்டுச்சு. பாலு அத்தானும் கார்த்தேசு அத்தான படிச்ச படிப்புக்கு ஏத்தப்படியே வேலை பாக்கட்டும்ன்னு அரும்பாக்கத்துல எலக்ட்ரிகல் வேலைய எல்லாம் கான்ட்ராக்ட் எடுத்து செய்யுற ஒரு கம்பெனியில வேலைக்குச் சேத்து வுட்டாரு. தங் கூடவும் வெளி வேலைக்குப் போறப்போ அழைச்சிப்பாரு பாலு அத்தான். அப்பிடி அழைச்சிட்டுப் போயி பாக்குற வேலைக்கு உண்டான காசியக் கொடுத்து பத்திரமா சேத்து வெச்சுக்கோன்னு ஒடனுக்கொடனே கை மேல கொடுத்துடுவாரு.
            அஞ்சு மாசம் இப்படி மலரு அத்தாச்சி வூட்டுல இப்பிடி இருந்த பெற்பாடுதாம் கார்த்தேசு அத்தான கொண்டு போயி மாரி அத்தான், ராமு அத்தான் இவுங்கல்லாம் இருக்குறு ரூமுக்கு மாறுனுச்சு சந்தானம் அத்தான். அந்த ரூமுக்கு மாறுனதுல கார்த்தேசு அத்தாங்கிட்டெ அடுத்தா ஒரு மாத்தம். அங்க ரூமுக்கு வந்து பேசிட்டு இருக்குறப்பத்தாம் கார்த்தேசு அத்தானுக்கு கம்பெனியில வேலைக்குப் போயிச் சம்பாதிக்கிறதெ வுட இவுங்க கூட வேலைக்குப் போனா அதை விட அதிகமா சம்பாதிக்கலாங்றது விசயம் தெரிய வந்துச்சு. அது தெரிஞ்ச வுடனேயே கார்த்தேசு அத்தானால சும்மா இருக்க முடியல. சந்தானம் அத்தாங்கிட்டெ வந்த கார்த்தேசு அத்தான், "யண்ணே! ஒங் கூடயே ஒரு வேலையப் பாக்குறேமே. ஓரளவுக்கு கார்பெண்டரு வேலையும் தெரியும். அப்பிடியே நம்ம தொழில்ல கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். சம்பளமும் இஞ்ஞத்தாம் கூட கெடைக்குதுன்னு கேள்விப்பட்டேம்!"ன்னுச்சு.
            "நாமளும் நம்ம கூடவே ஒன்னய வெச்சிப்போம்னுத்தாம்டா நெனைச்சேம்டா யம்பீ! நீயி படிச்சப் பயலா வேற இருந்தியா? படிச்ச பயல நம்ம கூட வெச்சிக்கிட்டு கட்டெ அடிக்க வுட்டுப்புட்டதா சித்தப்பா நெனைச்சிப்புடுமோன்னு ஒரு யோசனெ. யப்பா வேற போறப்ப படிச்சி படிச்சி ந்நல்லா வெச்சிப் பாத்துக்கிடணும்னு சொன்னுச்சா. அதாங் அத்தானோட கோத்து விட்டேம்! நாமளும் மின்னாடி எலக்ட்ரீஷன் வேலைல்லாம் எடுத்துப் பாத்ததுதாம். ஆபீஸ் போட்டதிலேந்து வேல தாங்க முடியல. கார்பெண்டிங் வேலயப் பாத்துக் கொடுக்குறதுக்குள்ளயே போதும் போதும்ன்னு ஆவுதா? அதால கார்பென்டிங் வேலையோட நிறுத்திக்கிட்டாச்சு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அப்பால்லாம் ஒண்ணும் நெனைச்சிக்காது யண்ணே! ஒழைச்சுச் சம்பாதிக்கிறதுல எந்த வேலையப் பாத்தா ன்னா? நாம்ம ஒஞ்ஞகிட்டயே வேலையப் பாக்குறேம்ண்ணே!" அப்பிடினுச்சு கார்த்தேசு அத்தான். அப்பிடித்தாம் சந்தானம் அத்தானோட குரூப்ல வேலை செய்ய ஆரம்பிச்சுச்சு கார்த்தேசு அத்தான். சந்தானம் அத்தானும் கார்த்தேசு அத்தானுக்கு படிச்சவனா இருக்காம், அத்தோட சித்தப்பா பையனா இருக்காங்றதால சம்பளத்தெ கூடத்தாம் கொடுத்துச்சு. கார்த்தேசு அத்தான் அதெ நல்லா பிடிச்சிக்கிடுச்சு. கலியாணம் ஆயிருந்தா கொழந்தை, குட்டின்னு குடும்ப ஞாபவம்லாம் இருக்கும். ஒத்த ஆளா ரூமுல தங்கியிருக்குற ஆளுகளுக்கு சம்பாதிக்கணுங்ற குறிக்கோள் மட்டும் இருந்துட்டா ரூமுக்கு வாரணும்னு கூட தோணாது. எந்நேரத்துக்கும் சைட்ல கெடந்து வேலைப் பாத்துக்கிட்டே கெடக்கலாம்னு தோணும். கார்த்தேசு அத்தானுக்கும் அப்பிடித்தாம் தோணுச்சு. காலையிலேந்து சாயுங்காலம் வரைக்கும் வேலை முடிஞ்சாலும், சாயுங்காலத்துலேந்து ராத்திரி ஒம்போது மணி வரைக்கும் ஓவர் டைம் வேலையெல்லாம் பாக்க ஆரம்பிச்சிது. அப்பிடி ஒரு நாளுக்கு டபுள் சம்பளம் வாங்க ஆரம்பிச்சிது.
            சந்தானம் அத்தானுக்கு வேலைக விரிவாக ஆரம்பிச்ச நேரம் அது. வேலையாளுங்கக் கெடைக்குறது வேற ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கேக்குற காசிய கொடுக்குறதுக்கு சந்தானம் அத்தான் தயாரா இருந்துச்சு. ஆளுங்கள பிடிச்சிக் கொண்டாறதுதாங் செருமமா இருந்துச்சு. கார்த்தேசு அத்தான் நல்லா வேலையப் பாக்குறத பாத்துப்புட்டு சில சைட்டுல பிடிக்கிற வேலைய கார்த்தேசு அத்தானோட பொறுப்புலயே வுட்டுப்புடுச்சு. அப்போ கார்த்தேசு அத்தான் பொறுப்புல ஒரு சைட் வந்தப்பத்தாம் வேலைக்கு ஆளு பத்தாம தடுமாறிப் போனுச்சு கார்த்தேசு அத்தான். அதுக்கு மின்னாடி வரைக்கும் வேலைக்குப் போறது, சம்பளத்தெ வாங்குறதுன்னு இருந்துச்சு கார்த்தேசு அத்தான். சந்தானம் அத்தான் அங்க இங்கன்னு அலைஞ்சு ஆளுகளப் பிடிச்சி வுட்டுப்புடும். ஒரு சைட்டெ ஒப்படைச்சுப்புட்டா அதுக்கான ஆளுகளெ வெச்சி வேலைய முடிச்சிக் கொடுக்க வேண்டியது பொறுப்பேத்துக்கிட்ட ஆளோட வேலெ.
            ஆளுங்கப் பத்தாக்கொறையால கார்த்தேசு அத்தானுக்கு ஒரு யோசனை, அப்பங்காரரையும் வேலைக்கு இங்க கூப்புட்டா என்னான்னு. அதுபடியே அப்பங்காரரு ஊர்லேந்து போன் பண்ண நேரத்துல வேலைக்கு ஆளுங்க பத்தலங்ற சங்கதிய சொன்ன ஒடனே, அவரு வரிஞ்சிக் கட்டிக்கிட்டுக் கெளம்பி வந்துட்டாரு சென்னைப் பட்டணத்துக்கு. சின்னவரு போல வேலயப் பாக்குறதுக்கு இன்னொரு ஆளு பொறந்துத்தாம் வாரணம். அதிரடி ஆசாரின்னு பேரு எடுத்த ஆளாச்சே. அதுவும் வேலையெல்லாம் ப்ளைவுட்டுன்னா சின்னவருக்குச் சொல்லவா வேணும். வேலையில சும்மா பூந்து வெளையாடுனாரு. சின்னவரு ஒத்த ஆளா மூணு ஆளு வேலையச் செஞ்சுக் கொடுத்தாரு.
            இப்பிடி கார்த்தேசு அத்தான் சொல்றப்பல்லாம் வேலங்குடி சின்னவரு சென்னைப் பட்டணத்துக்கு வந்து வேலையச் செஞ்சு கொடுத்துட்டுப் போனாரு.  அப்படி அவரு வந்துட்டுப் போறப்போ அவரோட வேல பாக்குற ஆச்சாரிகளையும் கூப்புட்டு வந்து கார்த்தேசு அத்தானுக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்தாரு. அப்பிடி அவரு ஒரு மொறை வந்தப்போ கூடவே அவரோட பொண்ணு தேவி அத்தாச்சிய கட்டிக் கொடுத்திருந்தாருல்ல கண்ணாடிதாசு அத்தானையும், மருமவனுக்கு ஒரு வேலை கெடைச்சாப்புல இருக்கட்டும்னு கூப்புட்டுப் போனாரு. இன்னொரு மொறை வேலைக்கு போனப்போ இன்னொரு ஆளு கெடைச்சாப்புல இருக்கட்டும்னு தாசு அத்தானையும் கூப்புட்டுகிட்டுப் போனாரு. இப்போ எந்த வேலைன்னாலும் கார்த்தேசு அத்தானுக்குச் செருமம் இல்லாமப் போச்சு. ஊருக்குப் போன போட்டுச் சொன்னா சின்னவரு, கண்ணாடிதாசு அத்தான், தாசு அத்தான்னு மூணு பேருமே கெளம்பி வர்ற தயாரா இருந்தாங்க. இப்போ எம்மாம் பெரிய வேலையா இருந்தாலும் கார்த்தேசு அத்தானால சமாளிக்க முடிஞ்சிது. மூணு பேரா போயிட்டு இருந்த நெலமெ மாறி வேலைக்கு ஏத்தாப்புல அவுங்க மூணு பேரும் எத்தனெ ஆளுக வேணுமோ அத்தனெ ஆளுகளெ ஊருலேந்து தெரட்டிப் போறாப்புல நெலமெ உண்டானுச்சு.
            கார்த்தேசு அத்தானோட வருமானம் அதிகம் ஆவ ஆவ, ஊர்லேந்து இப்பிடி கூப்புட்ட ஆளுங்கப் போக, சென்னைப் பட்டணத்துலயும் அது தனியாவே ஒரு ரூம் எடுத்து தங்கிக்கிட்டு தன்னோட தோதுக்கு ஆளுகளெ சேக்க ஆரம்பிச்சிது. அதையெல்லாம் பாக்க பாக்க சின்னவருக்கு மனசுல ஒரு பக்கம் நெறைவுன்னாலும், இன்னொரு பக்கம் மனசுல அவருக்கு ஒரு கொறையும் இருந்துச்சு. அதெ கேட்டீங்கன்னா அப்பிடியே அசந்துப் போயி அதிர்ச்சியாயிடுவீங்க. அந்தக் கொறைய இப்போல்லாம் அவரு ஒவ்வொரு தவாவும் சென்னைப் பட்டணம் போறப்பல்லாம் கார்த்தேசு அத்தாங்கிட்டெ சொல்லிட்டே இருந்தாரு, "இந்தாருடாம்பீ! நீயி படிச்சவேம். அவ்வேம் சந்தானம் படிக்காதப் பயெ. படிச்ச நீயி படிக்காத அவ்வேம்கிட்டெ வேலை பாக்குறே! மொறைப்படி பாத்தா படிச்சா ஒங்கிட்டெத்தாம் படிக்காத அவ்வேம் வேல பாக்கணும். செரி வேல பாத்தது பாத்தாச்சு! எத்தனெ நாளு அவ்வேங்கிட்டெ வேலையப் பாத்துக்கிட்டு. கதெ என்னான்னா நம்மகிட்டெ வேல பாத்த ஆளு ஒஞ்ஞ பெரியப்பன், அதாங் சந்தானத்தோட அப்பங்காரரு. நீயி என்னான்னா அவ்வேங்கிட்டெ எத்தனெ நாளு இன்னும் வேல பாப்பீயோ? காலம் எப்பிடில்லாம் மாறுது பாரு. வேல தெரியாதவனுக்கு பொறந்த புள்ளே வேல கொடுக்குற அளவுக்கு இருக்குது. வேல தெரிஞ்ச நமக்குப் பொறந்த புள்ளே அவ்வேங்கிட்டெ வேலையப் பாத்துட்டு நிக்குறே?"ன்னு தூபத்தைப் போட ஆரம்பிச்சாரு வேலங்குடி சின்னவரு.
*****


No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...