செய்யு - 442
கருப்பு நெறத்துல ஒரு மாடு, செவப்பு நெறத்துல
ஒரு மாடு, வெள்ளை நெறத்துல ஒரு மாடுன்னு மாடுக நிக்குற கொட்டகை. அதெ நெறத்துல கன்னுக்குட்டிக
போட்ட கொட்டகை, போடுற கொட்டகை. அந்தக் கொட்டகையில அத்தனெ நெறத்துலயும் மாடுகளப்
பாத்தவரு பெரியவரு. அத்தனெ நெறத்துலயும் கன்னுக்குட்டிகப் போட்டதையும் பாத்தவரு. மாடுக
கன்னு போட்டப்போ தன்னோட கையால கன்னுக்குட்டிகள உருவியும் போட்டவரு. அவருக்கு ஒரு
ராசி இருந்துச்சுன்னு சொல்றதா? அவரு வர்ற நேரமா பாத்து மாடுக கன்னு போடுதுன்னு சொல்றதா?ன்னு
தெரியல. வெள்ளை மாடு கன்னு போட இன்னும் ரெண்டு நாளு ஆவும்னுத்தாம் சுப்பு வாத்தியாரு
நெனைச்சி மனசுக்குள்ள ஒரு கணக்கெ போட்டு வெச்சிருந்தாரு. இப்போ இந்த வெள்ளை மாடு
அதாங் வேலங்குடியாரு வந்துட்டார்ன்னு கன்னு போட நிக்குதா? கன்னுப் போடப் போறதா இருக்குற
அன்னிக்கு வேலங்குடியாரு வரணும்னு இருக்குதான்னு புரியல.
சுப்பு வாத்தியாரு மின்சார வெளக்கைப் போட்டு
கொல்லைப் பக்கத்துல வெளியில வந்தாரு. மாட்டுக் கொட்டகை வூட்டுக்கு தென்மேற்கா இருந்துச்சு.
காத்து ச்சும்மா குளுகுளுன்னு அடிச்சிச்சு. ராத்திரி முழுக்க தூங்காம அந்த குளுகுளு
காத்த ரசிச்சிக்கிட்டெ இருக்கலாம் போல அப்பிடி ஒரு காத்து. ஏசி தோத்துப் போயிடும்,
ஊட்டிக் கொடைக்கானல், இமயமலைன்னு அத்தனையும் தோத்துப் போயிடும். காத்துல அசையுற
வேப்பமரத்து இலைகளோட சிலுசிலுப்பு இசைக்கச்சேரி படிக்குறாப்புல அந்தச் சத்தம் ரொம்ப
எதமா வேற இருக்கு. மாட்டுக் கொட்டகையில கவட்டை அடிச்சி கட்ட மாட்டாரு சுப்பு வாத்தியாரு.
சமயத்துல மாடுக அதுல சிக்கிக்கும்னு தூர தூரமா மொளைக்குச்சிக மட்டுந்தாம் இருக்கும்.
அந்த மொளைக்குச்சிகளும் தரையிலேந்து அரையடி தூரத்துக்கு இருந்தா அதிசயம். அதுல கூட
சுத்தி வர்ற மாட்டோ கயிறு சுத்திக்க் கூடாதுன்னு மாட்டுக் கொட்டகையப் பாக்க வூட்டை
வுட அகலமா ந்நல்லா வெசாலமா இருக்கும். மாட்டுக் கொட்டகை ரயிலு போட்டிப் போல ரொம்ப
நீளமா வேற இருக்கும்.
கன்னுப் போடுற நெலையில இருந்ததால அந்த
வெள்ளை நெறத்து அம்மு மாடு மின்னாடியே கட்டியிருந்துச்சு. மித்த மூணு மாடுகளும் ஒரு
வளர்ந்த கன்னுகுட்டியும் உள்ளார அதுக்கு அடுத்தாப்புல பின்னாடி பின்னாடி கட்டியிருந்துச்சு.
இவுங்க வெளக்கைப் போட்டு வந்து பாத்ததுமே "ம்மா!"ன்னு கத்துனுச்சு வெள்ளை
மாடு அம்மு. மித்த மாடுக ஒவ்வொண்ணும் வவுத்தால ஒரு மாதிரியா நாங்களும் இருக்கோங்ற
மாதிரி செருமுனுச்சுங்க என்னவோ அட்டென்டென்ஸப் போடுறாப்புல.
"பாத்தீயளா யம்பீ! இந்த மாடுக என்னமா
நம்மகிட்டெ பேச நெனைக்குதுங்க பாருங்க. இதெ வுட்டுப்புட்டு என்னத்தெ வூட்டுக்குள்ளார
படுக்குறது? அதாங் பல நேரத்துல நாம்ம கயித்துக் கட்டில எடுத்து வெளியில போட்டுட்டு
கொட்டாய்க்குப் பக்கத்துலயே படுத்துப்புடுறது. இதாங்கம்பீ புள்ளீயோ! இந்தாண்ட போன்னா
போவும், அந்தாண்ட போவாதன்னா போவாது. எப்பிடித்தாம் மனுஷப் பயலோட பேச்சப் புரிஞ்சிக்குமோன்னு
தெரியல. வயக்காட்டுல மேஞ்சிட்டு இருக்கும். நாம்ம பத்து வயல்களுக்கு பின்னாடி வர்றப்பவே
எப்பிடித்தாம் மோப்பம் பிடிக்குமோ, அண்ணாந்துப் பாத்து அடி வவுத்தால யம்மான்னு சத்தம்
கொடுக்கும் பாருங்க நமக்குக் கண்ணுல தண்ணித் தண்ணியா ஊத்த ஆரம்பிச்சிப்புடும் யம்பீ!
இப்போ நாம்ம யில்லாம அரை மணி நேரத்துக்கு ஒரு மொறை அங்க யம்மா யம்மான்னு போட்டு
ஒஞ்ஞ யக்காவ தூங்க வுடாம பண்ணிப்புடும் இந்த ராத்திரிக்கி. ஒஞ்ஞ யக்கா அஞ்ஞ நம்மள திட்டிக்கிட்டுத்தாம்
படுத்திருக்கும். ஒரு பய நமக்குக் கடெசீக் காலத்துல தொணையில்லன்னாலும் இந்த மாடுக
நமக்கு அத்தனையும் பாத்துப்புடுமுங்க யம்பீ! மாடுன்னா ன்னான்னு சொல்லுங்க பாப்பேம்
யம்பீ!"ன்னாரு பெரியவரு.
சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ,
"சொல்லுங்க யத்தாம்!"ன்னாரு.
"வாத்தியாருக்கே நாம்ம சொல்லிக்
கொடுத்தா ந்நல்லாவா இருக்கும்?"ன்னு சொல்லிட்டுச் சிரிச்சாரு பெரியவரு.
"மாடுன்னா மாதான்னு அர்த்தம் யம்பீ!
ரண்டுக்கும் மொத எழுத்து மாங்றதெ பாருங்களேம். மாடு யம்மா யம்மான்னுத்தாம் கூப்புடும்.
வேற வார்த்தெ அதுக்கு தெரியாது. அந்த ஒத்த வார்த்தைய வெச்சிக்கிட்டே அத்து ஓராயிரம்
வார்த்தைகளப் பேசிப்புடும். புரியறவங்களுக்கு அத்துப் புரியும். பொறந்தப்ப யம்மாகிட்டெ
பால குடிச்சிருப்பீங்க. பெறவு மாட்டுக்கிட்டத்தாம் குடிச்சிருப்பீங்க. அர்த்தம் இப்போ
ஒண்ணாச்சா. ரெண்டாவது கேட்டீங்கன்னா மாடுன்னா லட்சுமின்னு அர்த்தம் யம்பீ! அந்த லட்சுமியோட
சொரூபம் யம்பீ மாடுக. ன்னா சொல்ல வர்றேம்ன்னு புரியுதா? அதாங் சொத்துன்னு அர்த்தம்
யம்பீ மாடுன்னா! அதாச்சி செல்வம்ன்னு அர்த்தம் யம்பீ! மாடு காமதேனும்பீ! ஒரு மாடு இருந்தா
ஒஞ் செல்வம் பெருகிடும்பீ! நாம்மல்லாம் மாட்டெ வெச்சி மனுஷனானவேம்பீ! கெராமத்துல ச்சும்மாவா
சொல்லுவாங்க, படிச்சிப் பாழா போறதெ வுட ஆடு வளத்து ஆளவலாம், மாடு வளத்து மனுஷனாவலாம்ன்னு.
என்ன நெனைப்புல சொன்னாங்களோ நாம்ம மாடு வளத்து மனுஷனா ஆன ஆளுத்தாம்! ஒரு மாடு வூட்டுல
இருந்தா போதும்பீ! வூட்டுல உள்ள மனுஷாளுக்கு நோயி நொடி யண்டாது யம்பீ! நமக்கு வர்ற
அத்தனெ நோய்களெயும் அத்து வாங்கிக்கிடும்பீ! அதுகளுக்கு அப்பிடி ஒரு சக்தி யம்பீ!
மாடு இருக்குற வூட்டுல மனுஷன் அம்மாம் சீக்கிரம் சாவ மாட்டாம்பீ! அப்பிடி மனுஷன் சாவுறாப்புல
இருந்தா அதெ வாங்கிகிட்டு மாடு செத்துப் பூடும்பீ! அதாங் மனுஷன் செத்ததெ வுட மாடு செத்தா
அதிகம் செஞ்சி வூட்டுக் கொல்லையில பொதைச்சி எலுமிச்சம் கன்ன நடுறது. அர்த்தம் இப்போ
ரெண்டாச்சா. மாடுன்னா யோகம்பீ! அடிச்சிச் சொல்லுவேம். யோகக்கார்ரேங்கிட்டேத்தாம்
மாடு தங்கும். எல்லா பயலும் மாட்டெ வளத்துப்புட முடியும்னு நெனைச்சீங்களா? ம்ஹூம்!
முடியாதும்பீ! யோகக்காரங்கிட்டெத்தாம் மாடு தங்கும்றதுக்கு பெரிய உதாரணமே யிருக்கு.
சொல்லுங்க பாப்பேம்!"ன்னாரு பெரியவரு.
மறுபடியும் சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ,
"சொல்லுங்க யத்தாம்!"ன்னாரு.
"ன்னா வாத்தியாரும்பீ நீஞ்ஞ! எல்லாத்தையும்
நாமளே சொல்லிட்டு இருக்க வேண்டியதா இருக்கு? நாம்ம நம்ம கதையெ சொல்லலாம்னு நெனைச்சி
வந்தா இஞ்ஞ இப்பிடி பாடம் எடுக்குறாப்புலல்ல ஆவுது. செரி அதெ வுடுங்க. இத்து தெரிஞ்சிக்க
வேண்டிய விசயம். அதால சொல்றேம் பாருங்க. பெரிய யோகக்கார்ரேம் யாரு தெரியுமா? ரண்டு
பேரு யம்பீ! ஒருத்தரு சிவபுள்ளே. இன்னொருத்தரு பெருமாளு புள்ளே. சிவபுள்ளைய எடுத்துக்கிட்டிங்கன்னா
எது மேல உக்காந்திருப்பாரு. மாட்டு மேல யம்பீ! சிவப்புள்ளே கோயிலுக்கு மின்னாடி பாருங்க
நந்தி. மாடுதாங் இருக்கும். அந்தச் சிவப்புள்ளேக்கு யோகம் எப்பிடி வர்ருதுங்றீங்க.
மாட்டு மேல உக்காந்து இருக்குறதால. மாடு கோயிலு மின்னாடி இருக்குறதால. ரண்டாவது பெருமாளு
புள்ளே இருக்காரு பாருங்க, அவரு இப்பிடி சிவப்புள்ளே மாட்டை வெச்சி யோகத்தெ நெறைய
பிடிச்சிப்புட்டாருங்றதுக்காவே அவ்தாரம் எடுக்கறாரு பாருங்க கிருஷ்ணப் புள்ளயா. எதுக்குங்றீங்க.
அப்பத்தாம் மாட்டெ மேச்சி சிவப்புள்ளய வுட அதிய யோகத்தெ பிடிச்சிப்புடலாமுன்னு. ரெண்டு
புள்ளேயும் சாமின்னாலும் சாமிக்குள்ளயே போட்டிம்பீ! யாரு அதிய யோகத்தெ பிடிக்கிறதுன்னு.
சிவப்புள்ளேய பாத்து நீயி ஒத்த மாடு மேலத்தான உக்காந்திருக்கே. நாம்ம மாடு மாடா மேய்ச்சி
ஒன்னய வுட யோகக்காரனா ஆவுறேனா இல்லியா பாருன்னு. அந்த மாடு மேய்ச்ச யோகம்பீ கிருஷ்ணப்
புள்ளே கீதெ படிக்கிறதுக்குக் காரணங்றேம். இப்பிடி வெசயம் இருக்கும்பீ மாடுகளப் பத்தி.
நெறையப் பேரு வெசயம் தெரியாம இருக்காம். நாமளும் அப்பிடி இருந்துப்புடப் படாது பாருங்க.
அதுக்காகச் சொல்றேம்!"ன்னாரு பெரியவரு.
"பேசுறப்ப ஊடால பூரக் கூடாதுன்ன சொல்லல
யத்தாம்! நாம்ம ஆட்டுப்பாலுல்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெ கெடக்கட்டும் யம்பீ! அத்து மாமியா
ன்னா பண்ணும்? ஆட்ட வெச்செ குடும்பத்தெ பாத்த ஆளு. இருந்தாலும் யம்பீ மாடு அளவுக்கு
ஆடு வர்றாது. ஆட்டெ வளத்து ன்னா பண்ணுவீங்க சொல்லுங்க. கறிக்கடைக்குத்தாம் வுடுவீங்க.
ஒரு வெதத்துல பாவம்தாம்பீ அத்து. மாட்டெ அப்பிடி விடுறதுல்ல பாருங்கம்பீ! செரித்தாம்
போங்க! அப்போ ஆடுன்னாலும் இப்போ நீஞ்ஞ மாடுதான்னேம்பீ! யோகம் வர்றப்போ அத்தெல்லாம்
தானா வந்துப்புடும்பீ! இப்போ ஏம் நீஞ்ஞ ஆட்டெ வளக்கல சொல்லுங்க?"ன்னாரு பெரியவரு.
"அடெ போங்கத்தாம்! பேச்சுல பிடிச்சா
ஒஞ்ஞள அடிச்சிக்கிட முடியாது. மாட்டுப் புராணமால்லா பாடுதீயே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"எங்கயோ பேச்சு ஆரம்பிச்சி எங்கயோ
வந்து நிக்குதும்பீ! வந்தது மாட்டெப் பாக்க. பண்ணது பேசுனது. கொஞ்சம் மாட்டெ பாப்பேம்!"ன்னு
சொல்லிக்கிட்டே. இந்தாரு யம்மாடியோளா! புள்ளீயோளா! மொகத்தக் கொஞ்சம் காட்டுங்க
பாப்பேம்!"ன்னாரு பெரியவரு மாடுகளப் பாத்து. அவரு வார்த்தெ புரிஞ்சாப்புல ஒவ்வொண்ணும்
தலைய நீட்டிப் பாத்தது பாருங்க அதுதாங் ஒலக அதிசயங்றது. என்னவோ இந்த வூட்டு மாட்டுக்கெல்லாம்
பெரசவம் பாக்குற டாக்கடரு போல வந்து ஒவ்வொரு தவாவும் பெரசம் பாத்த ஆளாச்சே. மனுஷனுக்குக்
கூட நெனைப்பு அந்துப் போவும், மாட்டுக்கா அந்துப் போவும். அவரோட கொரலு அதுகளோட
நடுமண்டையில நின்னுகிட்டு இருக்கும் போலருக்கு.
அப்பிடிப் பாத்து, வெள்ளை மாடு அம்மு நிக்குற
நெலையை வெச்சிக் கண்டுபிடிச்சிட்டாரு பெரியவரு. "யம்பீ! மாடு இன்னிக்கு கன்னு
போட்டுடும் போலருக்கு. அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குத் தாண்டாது. மாடு நெல கொள்ளாம
நிக்குது. படுக்க மாட்டேங்குது கவனிச்சியா?"ன்னாரு பெரியவரு.
"எனக்கென்னமோ ரண்டு நாளு ஆவும்னு
பட்டுச்சே யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ன்னா வாத்தியாரு நீயி! இன்னிக்கு
ராவுல ஒரு மணி நேரந்தாம். கன்னு போடுதா இல்லியான்னு பாரு! மாடு நிக்குற நெலயிலயே தெரிய
வாணாமா கன்னு போடுமா போடாதான்னு? உள்ள போவ வாணாம்பீ! சாக்கோ படுதாவோ கெடந்தா எடுத்துப்
போடு. இப்பிடியே உக்காந்துப்புடுவோம். காத்து நல்லா சலசலன்னு அடிக்குது. வேப்ப மரத்துக்
காத்துல்லா. மாட்ட பிடிச்சி இப்பிடி வேப்பமரத்தடியில கட்டு"ன்னாரு பெரியவரு.
"அத்தெ அதாங் வூட்டுல எழுப்பி வுடட்டா?"ன்னாரு
சுப்பு வாத்தயிரு.
"ஒண்ணும் வாணாம்பீ! அதாங் நாம்ம இருக்கோம்ல.
பாத்துக்கிடலாம். வயல்ல கெடந்துட்டு வந்து அசந்துக் கெடக்குதுங்க. நாளைக்கு வயல்லயும்
வேல கெடக்கு. இஞ்ஞயும் வேல கெடக்கும். செருமம்தாம். நீயி வேற பள்ளியோடம் போவணும்.
நாம்ம வேணும்ன்னா இருந்துட்டு சாயுங்காலமா கெளம்புறேம்!"ன்னாரு பெரியவரு.
"அஞ்ஞ வூட்டுல யக்கா தேடுமே யத்தாம்!
நீஞ்ஞ வேற வூட்டுல சொல்லாம கொள்ளாம கெளம்பி வர்ற ஆளு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யக்காகிட்டெ பேசிட்டுத்தாம் இருந்தேம்.
யம்பீயப் போயிப் பாக்கணும். பேச வேண்டியது நெறையக் கெடக்குன்னு. பேசுறப்பவே வேடிக்கையா
சொன்னேம் பத்து நாளு கெடந்து பேசுனாலும் பேசுறதுக்கு விசயம் இருக்குன்னு. என்ன நெனைப்புல
சொன்னேன்னோ அப்பிடியே ஆயிடும் போலருக்கு. காலங்காத்தால போவாம இருந்தாலும் புரிஞ்சிக்கிடும்
யக்கா பேச்சு முடியலன்னு. பாத்துக்கிடலாம் வுடு!"ன்னாரு பெரியவரு.
சுப்பு வாத்தியாரு மாட்டைப் பிடிச்சி வெளியில
வேப்பமரத்தடியில கட்டுனாரு. மாடு நெலை கெள்ளாம வேப்ப மரத்தெ சுத்திச் சுத்தி வர ஆரம்பிச்சிது.
"பின்னாடி பாருங்கம்பீ!"ன்னாரு
பெரியவரு.
கொழகொழன்னு திரவம் வழிய ஆரம்பிச்சிது
அம்மு மாட்டுக்குப் பின்னாடி.
"கன்னு கிடேரிக் கன்னுதாம்பீ!"ன்னாரு
பெரியவரு.
"எப்பிடித்தாம்?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"மாடு நிக்குற நெலைய வெச்சித் தெரியாதா
அதெல்லாம். போடட்டும் பெறவு சொல்லுவீயே!"ன்னாரு பெரியவரு.
சுப்பு வாத்தியாருக்குப் பெரியவர்ரப் பாக்க
ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு. பேசாம அக்காவைப் பிடிச்சி அவருக்குக் கட்டி வெச்சதுக்கு
ஒரு மாட்டைப் பிடிச்சிக் கட்டி வெச்சிருக்கலாம்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாரு.
*****
No comments:
Post a Comment