செய்யு - 441
வேலங்குடி பெரியவரும் சுப்பு வாத்தியாரும்
பேசுறாங்க பேசுறாங்க அப்பிடிப் பேசுறாங்க. அவுங்க பேசுறதையெல்லாம் ஒரு அத்தியாயத்துல
எழுதிப்புட முடியாது. அத்தியாயம் அத்தியாமா எழுதுனாத்தாம் முடியும். அப்பிடிப் பேசுற
ஆளுங்க அவுங்க. சரியான பேச்சு மிருகங்க. ஒண்ணு மாத்தி ஒண்ண பேசிக்கிட்டெ இருப்பாங்க.
மனுஷனுக்கு வாயி இருந்தா இப்பிடியா பேசுவாங்கன்னு விகடு அத்த சில சமயங்கள கேட்டுட்டு
வெறுத்துப் போயிருக்காம்.
ராத்திரிச் சாப்பாட்டைச் சமைச்சித் தட்டுல
போடுறதுக்கு மின்னாடியிலேந்து பேச ஆரம்பிச்சவங்க, தட்டுல சோத்தைப் போட்டுக் கொழம்பை
ஊத்தி, தொட்டுக்கிறதுக்கு பயித்தம் தொவையல அரைச்சி வெச்சதைச் சாப்புடுறப்பவும் பேசுறாங்க.
தட்டுல இருக்குற சோறு ஒவ்வொண்ணா உள்ள போவுது. அப்பிடிப் போனா எப்போ சாப்பாட்டா
போட்டு முடிக்கிறது? சாமாஞ் செட்டுகள கழுவிக் கவுக்கறது? வூட்டுல இருக்குறவங்களுக்கு
அத்து ஒரு செரமம்தாம். ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அவுங்க பேசுறதைக் கேட்டுக்கிட்டே தட்டுல
சோறோ, கொழம்போ கொறையுறப்ப அதெ போட்டுக்கிட்டெ உக்காந்துக்கிடணும். வெங்குவுக்குத்தாம்
அந்தச் செரமம். ஏன்னா அவுங்க பேசப் பேச கண்ணுல தூக்கம் வந்து அசத்தும் பாருங்க, அப்பிடியே
தாலாட்டு பாடுற மாதிரிக்கி, ஆன்னா அவுங்க ரண்டு பேரும் மட்டும் எப்பிடி கண்ணு சொக்காம
பேசுறாங்கன்னு ஆச்சரியமா இருக்கும்.
சுருக்கமா சொல்லணும்ன்னா தட்டுல வெச்ச
சோத்த அவுங்க சாப்புட்டு முடிக்க ரண்டு மணி நேரமாவது ஆவும், அப்பிடி பேசிட்டே சாப்புடுவாங்க.
தட்டெ அலம்பிக் கவுத்தாச்சு, பெறவாவது பேச்சு முடியாமான்னு கேட்டா, கையி அலம்பாம வெச்சுக்கிட்டு
அத்து ஒரு அரைமணி நேரம் பேச்சு ஆவும். கைய அலம்பிப்புட்டா பேச்சு எப்போ முடியுதோ
அப்பத்தாம் ஒறக்கம். விடிய விடிய கதை நடக்கும், கேக்கும். பேச்சு ஆரம்பிச்சிட்டா ராத்திரிப்
பகலு மாதிரித்தாம் அவுங்களுக்கு.
"என்னவோம்பீ! நல்ல வெதமா குடித்தனம்
பண்ணா செரித்தாம். அதாச்சி சந்தோஷமா குடும்பம் ஓடுனா செரித்தாம். நம்ம காலம் ஓடிடுச்சு.
இன்னும் சொச்ச காலம். எல்லாத்தையும் எப்படியோ கரை சேத்தாச்சி. கடைசிப் பயெலுக்கு
ஒரு கதையக் காட்டி வுட்டுப்புட்டா சோலி முடிஞ்சிடும். நிம்மதியா கண்ண மூடிடுவேம்.
என்னவோ நமக்குச் சொல்லிக் கொடுத்தவங்க இன்னயின்னபடி இருன்னுச் சொல்லிக் கொடுத்தாங்க.
அப்பிடியே இருந்தாச்சி. இப்போ வர்ற தலைமொறை வரைமொறை இல்லாம இருக்கு. அப்பிடி இருந்தாத்தாம்
சந்தோஷம்ன்னா இருந்துட்டுப் போவட்டும். என்னத்தெ கொறைஞ்சுப் போயிடப் போவுது? நம்ம
வூட்டுச் சனங்கத்தாம் இப்பிடியா ன்னா? ஊரு ஒலகமே அப்பிடித்தாங்ற போது அதுக்கு நாம்ம
ன்னத்த பண்ண முடியும்?"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
பெரியவரு சுத்தி வளைச்சு எதைச் சொல்றாரு,
எதைச் சொல்ல வர்றார்ங்றது சுப்பு வாத்தியாருக்குத் தெரியுது. கிட்டத்தட்ட அவர் தனம்
அத்தாச்சியப் பத்தித்தாம் பேரைச் சொல்லாம, சம்பவத்தைக் குறிப்பிடாம, நடந்ததைப் பத்தி
தனக்கென்னங்ற மாதிரி பேசுறாரு. "என்னத்தாம் பண்றது? யாருக்காக இருக்கோம் சொல்லுங்க.
எல்லாம் அதுக்காகத்தாம். கொஞ்சம் அப்பிடியிப்படி இருக்கத்தாம் செய்யும்ங்க. காலப்போக்குல
எல்லாம் சரியா வந்துப்புடும் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் பெரியவரு சொன்னதுக்குத்
தகுந்தாப்புல பொத்தாம் பொதுவா.
"நீஞ்ஞ சொல்லுதீயே! நமக்கு நம்பிக்கெ
யில்ல. பழக்க வழக்கம் சரியா இருந்தாத்தாம்பீ குடும்பம் குடித்தனம்ல்லாம். நம்மள எடுத்துக்கோங்க.
நமக்கு ன்னா தெரியும்? வேலையே தெரியாது. குடும்பத்தைக் கட்டிக்கிட்டுக் குடித்தனத்தை
ஓட்டலையா? ன்னா இருந்துச்சு நம்மகிட்டெ? பழக்க வழக்கத்தத் தவுர நம்மகிட்டெ என்னத்தெ
இருந்துச்சுச் சொல்லுங்க? எதுவும் கெடையாது. எப்படியெப்படி இருக்கணுங்ற வரைமொறைத்தாம்
தெரிஞ்சுச்சு. எத்தனெ நல்லது கெட்டது, தேவ திங்க, கலியாணம், கருமாதின்னு நாம்ம யில்லாம
நடந்துருக்கா? நாம்ம இல்லாட்டிப் போனாலும் எஞ்ஞ அவ்வேம் வேலங்குடியான கூப்புடுன்னு
ஒரு கொரலு வருதா யில்லையா? நாம்ம அப்பிடி இருந்துப்புட்டு, கட்டுச்செட்டா காலத்தெ
ஓட்டிப்புட்டு, நமக்குப் பிந்தி வர்றதுங்க இப்பிடி இருந்தா என்னத்தெ பண்றது? அதாங்
செல நேரத்துல நெனைச்சா ஆத்திரம் ஆத்திரமா வருதும்பீ! சம்பாத்தியம் பண்ணக் கூட தெரிய
வேண்டியதில்லம்பீ! நல்ல பழக்க வழக்கம் ஒண்ணு போதும்பீ! காலத்தெ ஓட்டிப்புடலாம். ஒடம்பும்
மனசும் அப்பத்தாம்பீ ஒறுப்பா இருக்கும். நாலு பேத்துக்கு மின்னாடி தலைநிமுந்து நிக்கலாம்பீ!
அதெத்தாம் நாம்ம எதிர்பாக்குறோம். அதெத்தாம் படிச்சிப் படிச்சிச் சொல்றேம். நாம்ம
படிச்சிச் சொல்லி புண்ணியம் ன்னா? படிக்குறவங்க அதெ எடுத்துக்கிடணும். எடுத்துக்கிடாதவங்கிட்டெ
போயி எடுத்துக்கோங்க எடுத்துக்கோங்கன்னு கால்ல வுழுந்தா கெஞ்ச முடியும். அதாங்
பண்டத்துக்கு மருவாதி யில்லாம போயிடுது. பண்டத்தெ வெச்சிக்கிட்டு நமக்கும் மருவாதி
யில்லாம போயிடுது!"ன்னாரு பெரியவரு.
சுப்பு வாத்தியாரு ஏன் குறிப்பா பேசணும்னு
யோசிச்சாரோ என்னவோ நேரடியாவே பேச ஆரம்பிச்சாரு. "யத்தாம்! தனம் நல்ல பொண்ணுத்தாம்!
நீஞ்ஞ நெனைக்கிற மாதிரில்லாம் யில்ல. இஞ்ஞ வந்து இருந்துச்சுல்லா, எல்லா வேலையும் அதாங்
பாத்துச்சு. அத்துக் கோழிக்கொழம்பு வெச்சு நீஞ்ஞ சாப்புட்டு இருக்கணுமே! நீஞ்ஞத்தாம்
மூஞ்சத் திருப்பிக்கிட்டு இருந்துப்புட்டீங்க. யில்லன்னா ஒரு நாளு அஞ்ஞ வேலங்குடி வந்து
நம்ம வண்டியில உக்கார வெச்சே அழைச்சிட்டு வந்திருப்பேம்!"ன்னாரு பெரியவரோட மனசத்
தணிக்குற மாதிரி.
"ன்னவோ நீஞ்ஞத்தாம் சொல்லுதீங்க
யம்பீ! சாதகம்லாம் பாத்து கட்டி வெச்சதுதாங். நல்ல வெதமாத்தாம் இருக்கும். செல கொணங்
குறிகள மாத்திக்கிடணும்பீ! என்னத்தாம் சாதகம் சரியா இருந்தாலும் கொணங் குறி சரில்லன்னா
சாதகம்தாம் ன்னத்தா பண்ணுங்றீங்க? நமக்கு நல்ல காலம் வருதுன்னு சாதகம் சொல்லுதுன்னா,
அதே நாம்ம பிடிச்சிக்கிட்டாத்தானே. பிடிக்க மாட்டேம்ன்னு பிடிவாதமா நின்னா என்னத்தெ
சொல்றது சொல்லுங்க? அப்பிடித்தாம் நிக்குதுங்க இந்தக் காலத்து புள்ளீயோ! ந்நல்ல
கொணங் குறிக இருந்தாத்தாம்பீ நல்லதெ, நல்ல காலத்தெ பிடிச்சிக்கணுங்ற எண்ணம் உண்டாவும்.
அதுக்காத்தாம்பீ நல்ல கொணங் குறிகள குடித்தனத்துல உண்டு பண்ணணுங்றது. தர்மராசா தெருவுல
தங்கக்காச வீசுறாம்ன்னா அதெ குனிஞ்சிப் பொறுக்கிக்கிடணும். பொறுக்க மாட்டேன்னு வீராப்பா
நின்னா யாருக்கு நட்டம் சொல்லுங்கம்பீ?"ன்னாரு பெரியவரு.
"அதெல்லாம் பிடிச்சிக்கும்த்தாம்!
எல்லாம் நம்ப புள்ளீயோ! நம்மள மீறிப் போவாதுங்க யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அந்த ஒரு நம்பிக்கெத்தாம் யம்பீ!
அதுலத்தாம் நம்மட உசுரு இன்னும் நிக்காம ஓடிட்டு இருக்குது. நீஞ்ஞ அழைச்சிட்டுப் போனப்பவே
மனசுக்குள்ள ஒரு நம்பிக்கெத்தாம். இஞ்ஞ கொண்டாந்து வெச்சிச் சரிபண்ணிப்புடுவீங்கன்னு.
அதாங் கெடக்கட்டும் ஆறெழு மாசத்துக்குன்னு விட்டுப்புட்டேம். மித்தபடி மருமவளெ கையிகழுவிப்புடணும்னுல்லாம்
நெனைப்பு கெடையாது யம்பீ! கொஞ்சம் காலம் கடக்கட்டும்னு பாத்தேம். அதுக்குள்ள மவ்வே
கலா வந்துப் பொலம்புனாளா? மனசு கேக்கல. எல்லாத்துக்கும் அவசரம். அவசர அவசரமா எதாச்சிம்
பண்ணித் தொலைச்சாத்தாம் சரிபெட்டு வரும்ங்க போல அதுகளுக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து
அதுங்குதுங்க, இதுங்குதுங்க. அதாங் பாத்தேம். சந்தானம் பயலுக்குப் போனப் போட்டு அழைச்சிட்டுப்
போயித் தொலைடான்னுட்டேம். அழைச்சிட்டுப் போயிட்டான்னா பெறவு நாம்ம வந்துப் பேசிக்கிடலாம்னு
முடிவெ பண்ணிக்கிட்டேம் யம்பீ!"ன்னாரு பெரியவரு.
"நீஞ்ஞ நெனைக்குற மாரில்லாம் நாம்ம
ஒண்ணும் இஞ்ஞ கொண்டாந்து வெச்சில்லாம் சரி பண்ணல யத்தாம்! அதெ அதோட போக்குல வுட்டாச்சி.
அதுவாவே சரியாயிடுச்சு யத்தாம். பொம்பளப் புள்ளீயோள அதுகப் போக்குல வுட்டா அதுவா
சரி பண்ணிக்கிடும்ங்க யத்தாம். அதெப் போயி நாம்ம சரிபண்ண முடியாது. சரி பண்ண நெனைச்சா
அதுகளுக்குக் கோவந்தாம் வரும். ஒண்ணுகெடக்க ஒண்ணு பண்ணுமுங்க. நமக்குக் கோவம் வரும்.
அதுகப் போக்குலயே வுட்டுப் புடிச்சா நாம்ம நெனைக்குறதெ வுட ரண்டு பங்குக்கு எல்லாத்தையும்
சரி பண்ணிவுடும்ங்க. கடெசிக் காலத்துல ஒஞ்ஞள தனம் அதுத்தாம் நல்ல வெதமா வெச்சிப் பாத்துக்கிடப்
போவுதுப் பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெ மட்டும் சொல்லாதீங்க யம்பீ!
அவ்வேம் பயகிட்டெ சொல்லிப்புட்டேம், இனுமே ஒம்மட பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு இஞ்ஞ
தலைவெச்சுப் படுக்காதேன்னு. நாமளும் அஞ்ஞ தலைவெச்சுப் படுக்குறாப்புல யில்ல. சொல்
பேச்சக் கேட்டாக்கத்தாம்பீ பொண்ணு புள்ளீயோல்லாம். ன்னா நாம்ம சொல்றது?"ன்னாரு
பெரியவரு.
"பின்னாடி நடக்கப் போறதையெல்லாம்
மின்னாடி யாரும் சொல்ல முடியாது யத்தாம்! யாரு கூட சண்டெ போடுறோமோ அவுங்கக் கூடத்தாம்
பின்னொரு காலத்துல ஒட்டி ஒறவாடுறாப்புல வருது. யாரு கூட நெருக்கங் காட்டுறோமோ அவுங்கக்
கூடத்தாம் பின்னொரு காலத்துல வெட்டி வுட்டாப்புல இருக்குறாப்புல ஆயிடுது. நாம்ம நெனைக்குற
மாரில்லாம் நடக்குறதில்ல யத்தாம். காலம் எப்பிடி மாறும்ன்னெல்லாம் கணக்குல இருக்குற
மாதிரி சூத்திரம் கெடையாது யத்தாம். ஒஞ்ஞக் கதையையெ எடுத்துக்குங்க. சின்னத்தான்ன வேலங்குடியில
கொண்டாந்து வெச்சப்ப என்ன நெனைச்சு இருந்திருப்பீங்க? இப்போ ன்னா நடந்துகிட்டு இருக்கு?
வேலிச் சண்டையில அண்ணனும் தம்பியும் விரோதியாவீங்கன்னு நெனைச்சுப் பாத்திருப்பீங்களா?
அஞ்ஞ விருத்தியூரு கதையையே எடுத்துக்கோங்க. சின்னத்தானுக்கு ரசா யக்காவே கட்டிக் கொடுக்க
முடியாதுன்னு யம்மா அப்போ ஒத்தக் கால்ல நின்னுச்சு. கடெசியில என்னாச்சு? எல்லாம் அப்பிடித்தாம்.
நாம்ம நெனைக்கிற மாரில்லாம் வருங்காலம் போவும்ன்னு நெனைக்குறதுக்கில்ல யத்தாம். இத்து
ஏத்தோ இப்போ ஒரு மனசு. பின்னாடி நடக்குறதுக்கு ஏத்தாப்புல பின்னாடி ஒரு மனசு உண்டாவும்
பாருங்க. அத்து அப்பிடியே இப்போ இருக்குற மனசுக்கு நேர்மாறாத்தாம் இருக்கும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அப்பிடி மட்டும் சொல்லாதீங்க யம்பீ!
நம்ம கட்டெ கடெசீ வரைக்கும் வேலங்குடியிலத்தாம். அஞ்ஞ அந்த நாத்தம் புடிச்சி ஊர்ல பட்டணத்துல
போயில்லாம் கெடப்பேன்னு நெனைச்சீங்களா? அதுவும் தனத்து வூட்டுலல்லாம் நமக்கு வேலையே
கெடையாது. நமக்குக் கெராமம்தாம்பீ! இத்தெப் போல வருமா? என்னவோ கொஞ்ச நாளா நெனைப்புச்
சரியில்லம்பீ! காலம் முடியப் போறதா ஒரு நெனைப்பு. பெருங்குடும்பமா இருக்கா?அதாங் யாருகிட்டேயாவது
இதெச் சொல்லி இத்து இன்னின்ன மாதிரின்னு ஒப்படைச்சிட்டா தேவலாம்னு தோணுது. அவ்வேம்
பெரியவ்வேம் மேல நம்பிக்கெத்தாம். இல்லேன்னு சொல்லல. இருந்தாலும் இந்தப் பொண்ணு பண்ணதிலேந்து
அவனெக் கொஞ்சம் மனசுக்குப் பிடிக்காம போவுதுன்னு, ஏன்னு தெரியல! அதாங் யம்பீ! நமக்கு
மச்சாங்கார்ரேம் ஒன்னய வுட்டா யாரு தயவு இருக்கு? சொல்லுப் பாப்பேம்! மலையேறணும்னாலும்
மச்சாங்கார்ரேம் தயவு வேணும்ன்னு அந்தக் காலத்துல ச்சும்மாவா சொன்னாங்க. நீஞ்ஞ சொல்றபடிக்கு
அத்து நம்ம பெரிய மச்சாம்ன்னு நெனைச்சு அஞ்ஞ விசுவாசம இருந்ததுக்கு எந் தங்காச்சி வெச்சா
ந்நல்ல ஆப்பா நெலபுல வெவகாரத்துல. அதுக்குப் பெறவு நீஞ்ஞ சின்ன மச்சாம்தாம் நமக்கு
எல்லாமுன்னு ஆயிப்புடுச்சு. அஞ்ஞ வேலங்குடியில யம்பீன்னு பக்கத்துல ஒரு யமனெ நாமளே
கொண்டாந்து வெச்சதுதாங் மிச்சம். அதாங் யம்பீ! மனசுல தோணிக்கிட்டெ கெடந்துச்சு. அதாங்
கெளம்பி வந்துப்புட்டேம். ஒருவேள நாம்ம தவறிட்டாலும் நீஞ்ஞத்தாம் யம்பீ நின்ன பயலுகளுக்கு
ஆவ வேண்டியதெ பண்ணிப்புடணும். எல்லா பயலுகளும் ஒஞ்ஞப் பயலுவோத்தாம். ஒஞ்ஞள மீறிப்
போயிட மாட்டோனுவோ. இருந்தாலும் உசுரு இருக்குறப்பவே ஒரு வார்த்தெ சொல்லிப்புட்டா
போற நேரத்துல நிம்மதியா போயிடும் பாருங்க!"ன்னாரு பெரியவரு. ஒடனே சுப்பு வாத்தியாரு
பெரியவரோட வாயைப் பிடிச்சி அடைச்சாரு.
"அப்பிடில்லாம் பேயாதீங்கததாம்! நீஞ்ஞ
நூறு வயசுக்கு நல்லா இருப்பீங்க. நம்மட பயலுக்கு, பொண்ணுக்கு மொதக்கொண்டு நீஞ்ஞத்தாம்
சாதகத்தெத் தூக்கிக்கிட்டு அலைஞ்சு பொண்ணு மாப்புள்ளயப் பாப்பீங்கங்கத்தாம்! அதுகளுக்குப்
பொறக்குற கொடுக்குகள மடியிலப் போட்டுக் கொஞ்சாம ஒஞ்ஞ ஆவி பிரியாது யத்தாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"ல்லம்பீ! சமயத்துல மனசு வெறுத்துப்
போவுது. அதாங் இப்பிடில்லாம் நெனைப்பு வருது!"ன்னாரு வேலங்குடி பெரியவரு.
"இன்னிக்கு அடிச்சிச் சொல்றேம் யத்தாம்!
கடெசீக் காலத்துல ஒஞ்ஞள தனம்தாம் பாத்துக்கிடப் போவுது. அத்து மேல உள்ள கோவந்தாம்
யத்தாம் ஒஞ்ஞள இப்பிடிப் பேசச் சொல்லுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"வாஸ்தவம்தாம்பீ! செரி கொட்டாயை
ஒரு பார்வே பாத்துப்புட்டு வந்துப்புடுவோமே! மாட்ட பாக்காமலே மனுஷப் பய பேச்ச பேசுறாப்புல
ஆயிடுச்சுப் பாருங்க! அதுகளப் பாத்தா, அதுககிட்டெ பேசுனாலாவது ஒரு புண்ணியங் கெடைக்கும்
போங்க. இந்த மனுஷப் பயலப் பத்தி பேசி என்ன புண்ணியங்றீங்க?"ன்னாரு பெரியவரு.
இவுங்கப் பேச்சைக் கேட்டு கண்ண தொறக்க
முடியாம தூங்குனவங்கத்தாம் வூட்டுல இருந்த மித்தவங்க எல்லாம். கண்ணசந்துப் போயிக்
கெடந்ததுங்க. அத்தோட வயல்ல கெடந்த அசதி வேற சேந்துக்கிட்டதில்ல, அந்த நேரத்துல ரெண்டு
பேத்தோட நாலு கண்ணுக மட்டுந்தாம் முழிச்சிக்கிட்டு இருந்ததுங்க. இந்த ரெண்டு பேத்துக்கு
மட்டும் வயல்ல கெடந்தாலும், வெயில்ல கெடந்தாலும் பேச்சுன்னு ஆரம்பிச்சிட்டா அசதியா
வாராதா? கண்ணசந்துப் போவாதா?ன்னா அத்து மட்டும் தெரியல.
இவ்வளவு பேச்சும் சாப்பாட்டுக்கு மின்னாடி,
பின்னாடி வூட்டுக்குள்ள பேசுனது. அதுக்குப் பெறவு மாட்டுக் கொட்டாய்க்குப் போயி அங்க
பேசுறாப்புல ஆயிடுச்சு. கொட்டகையில நின்னுகிட்டு இருந்த வெள்ளை மாடு அம்மு ரெண்டு
நாள்லயோ, மூணு நாள்லயோ கண்ணு போடுறாப்புல நின்னுச்சு. மாடு வெச்சிருக்கிறவங்க நிம்மதியா
தூங்க முடியாது. நிம்மதியா வெளியில எங்கயும் போயி ராத்தங்க முடியாது. அதெ நெனைப்பாவே
இருக்கும். தூங்கிட்டு இருக்கிறப்பவே நாலு தடவெ தூக்கம் கெட்டு கொட்டாயை வந்துப் பாத்துட்டுப்
போனாத்தாம் நிம்மதியா இருக்கும். அதுவும் கண்ணு போடுறாப்புல நிக்குற மாடுன்னா ஒரு
மணி நேரத்துக்க ஒரு தடவெ தூக்கம் கெட்டுடும். மாடு வெச்சிருக்கிறவனெ பாத்து மாடு மனுஷனுக்கு
அடிமையா இருக்கிறதா நீங்க நெனைச்சிக்கிட்டு இருந்தா அது தப்பு. மனுஷந்தாம் அந்த மாட்டுக்கு
அடிமை போல இருப்பாம். அம்புட்டுச் சேவகம் மனுஷன் மாட்டுக்குப் பண்ணாத்தாம் மாடு மாடா
இருக்கும். யில்லன்னா கருவாடா போயிடும். மாட்டா நல்ல வளத்தாத்தாம் குடும்பம், குட்டி,
குலம் நல்லா இருக்கும்ன்னு அதுலயும் ஒரு நம்பிக்கெ இருக்கு. வாயில்லா அந்தப் பிராணிய
நல்ல வெதமா பாத்துக்கிட்டாத்தாம் சனங்க வாயி நெறைஞ்சு அந்தக் குடித்தனத்தெ நல்ல வெதமா
பேசுவாங்கன்னு அந்த நம்பிக்கைக்குள்ளயும் இன்னொரு நம்பிக்கெ இருக்கு. மொத்தத்துல
இங்கல்லாம் மாடும் மனுஷனும் ரெண்டல்ல ஒண்ணுத்தாம். மனுஷனுக்கு இருக்குற அத்தனை பணிவெடையும்
மாட்டுக்கும் இருக்கும். மாடுக பாயும், தலவாணியும் போட்டுத் தூங்காத ஒண்ணுத்தாம் கொறைச்சலு.
*****
No comments:
Post a Comment