செய்யு - 440
வேலங்குடி பெரியவரு என்னைக்கு திட்டைக்கு
வருவாரு போவாருங்றது யாரும் அறிய முடியாத ரகசியம். அவராலயே சமயத்துல அறிய முடியாத
ரகசியம்தாம் அது. மித்த உறவுக்காரவுங்க போல அவரு வர்றதுக்குப் போறதுக்கு ஒரு காரணமெல்லாம்
இருக்காது. எங்காச்சிம் கெளம்பிப் போவோம்ன்னு போறவரு ஏதோ ஒரு ஞாபவத்துல இங்க வந்து
நிப்பாரு. பொதுவா எங்கேயாவது கெளம்பி ராவுல அவரு வூடு திரும்பலன்னா திட்டைக்கு வந்திருக்கார்ன்னு
அங்க வேலங்குடியில செயா அத்தைப் புரிஞ்சிக்கிடணும். போறப்ப சொல்லிட்டுப் போற பழக்கம்
பெரும்பாலும் அவருகிட்டெ இருக்காது. எப்பவாச்சிம் நெனைச்சிக்கிட்டா சொன்னாத்தாம்.
அப்பிடி ஓரிடத்துக்குப் போறதாச் சொல்லிப்புட்டு வேற எடத்துக்குப் போன சம்பவங்க ஜாஸ்தி.
எதுக்காகப் போறோம், என்ன காரியத்துக்காகப் போறோங்றதெ அம்மாம் சுலுவா யாருகிட்டயும்
சொல்லிட மாட்டாரு. காரியம் முடியறப்பத்தாம் அவரு ஏம் அலைஞ்சிட்டுக் கெடந்தார்ங்ற சங்கதி
தெரிய வரும். சமயத்துல திருவாரூரு கெளம்பி திட்டைக்கு வந்து நிப்பாரு. திட்டைக்குக்
கெளம்பிப் போவோம்ன்னு மனசுக்குள்ள திட்டம் பண்ணி திருவாரூரு போயி நிப்பாரு. அந்த
நேரத்துக்கு மனசுக்குள்ள என்ன தோணுதோ அப்பிடி அவரோட பயணத்திட்டம் மாறிப் போயிடும்.
"ஒரு வேலன்னா அத்து ஞாபவத்துல இருக்குறப்பவே
செஞ்சி முடிச்சிடணும். இல்லன்னா பெறவு மறந்துப் போயிடும்!"ன்னு அடிக்கடி சொல்லுவாரு
பெரியவரு. சொல்றது மட்டுமில்லே அப்பிடி ஞாபவத்துக்கு வர வர வேலையச் செய்யுற ஆளு அவரு.
செரித்தாம் இன்னிக்கு வேலை ஒழிஞ்சிருக்கே திட்டையில போயி ஒரு எட்டு சுப்பு வாத்தியாரைப்
பாத்துட்டு வந்துப்புடுவோம்ன்னு கெளம்பி போற வழியில அவருக்கு, திருவாரூரு போயிட்டு
வந்தா மளிகை சாமானுங்கள வாங்கியாந்துப் போட்டுடலாம்ன்னு ஒரு நெனைப்பு வந்துட்டா போதும்,
திட்டைக்குப் போறதா நடையப் போட்டுட்டு இருந்த காலுங்க அப்பிடியே திருவாரூர்ர நோக்கித்
தெசை மாறிடும். அப்பிடியில்லாம செரித்தாம் திருவாரூரு போயி சென்னைப் பட்டணத்துல இருக்குற
மவ்வேங்கிட்டெ போன் பேசிடுவோம்ன்னு நெனைச்சிக் கெளம்பிப் போயி, போற வழியிலயே, மவ்வேங்கிட்டெ
பேசுறதுக்கு மின்னாடி திட்டையில மச்சாங்காரங்கிட்டெ இதெ பத்திக் கலந்துக்கிட்டா தெவலாம்னு
நெனைச்சார்ன்னா திருவாரூருக்குப் போன காலுங்க ரெண்டும் திட்டைப் பக்கமா திரும்பிப்
போயிக்கிட்டே இருக்கும்.
மொதல்ல திட்டம் பண்ண போக்குல அவரோட
காலு போயி, பெறவு மனம் போன போக்குல அவரு காலு போவும். அவரு பெரும்பாலும் நடந்துதானே
போவாரு. பஸ்ல போனா எறங்கி ஏறி மாறணும். நடந்துப் போறவர்தானே. நெனைச்சா நெனைச்ச தெசைக்கு
கால திருப்பி வுட்டுப்புடலாம். எவ்வளவு நடக்குறதுன்னாலும அலுத்துக்காத ஆளுக்குப் பாதித்
தூரம் போயி வேணாம்ன்னு மாத்திக்கிட்டுத் திரும்புறதெல்லாம் சர்வ சாதாரணமா மனசுக்குள்ள
படும்.
அப்பிடித்தாம் அவரு திடீர் திடீர்ன்னு
திட்டையில வந்து நிப்பாரு. அப்பிடி வந்து நிக்குறப்ப,
"இத்து எட்டாம் நம்பரு பஸ் வர்ற நேரம் கூட இல்லியே யண்ணேம்! இப்ப வந்திருக்கீயேளே?"ன்னு
வெங்கு கேட்டாக்கா, "அப்பிடியே கெளம்புனேன்னா, யம்பீ ஞாபவம் வந்துடுச்சு. குறுக்கால
அப்பிடியே வயல்ல வுழுந்து ஆத்தூரு வழியா நடந்து வந்துட்டேம்!"பாரு. பெரியவருக்கு
நடைங்றது ஒரு பெரிய விசயமே கெடையாது. இப்ப நெனைச்சிப் பாத்தாலும் வெள்ளை வேட்டியும்,
வெளிர் நீல சட்டையும், கையில கடியாரமும், கக்கத்துல தெனசரி தாளும், அப்பிடியே கையில
துணிப் பையும் அச்சு அசலா மனசுல வந்துப் போவும். அந்தத் துணிப் பையில பிரிட்டானியா
கிளாக்ஸோ பிஸ்கொத்துப் பாக்கெட்டு ஒண்ணு கெடக்கும். அதாங் அவரு வாங்கி வர்ற பலவாரம்.
சமயத்துல அல்வாவோ, ஜாங்கிரியோ போட்டுருந்தார்ன்னா ஒரு பொட்டலம் கட்டி அதுவும் துணிப்
பையில இருக்கும்.
தனம் அத்தாச்சிய அழைச்சிட்டு வந்ததுக்குப்
பெறவு ரொம்ப நாளுக்கு வர்றாம இருந்த பெரியவரு திடீர்ன்னு ஒரு நாளு வந்தாரு. அந்த நாளு
கூட நல்லா ஞாபவம் இருக்கு. வயல்ல உளுந்து பயிறு எடுத்துக்கிட்டு இருந்த நாளு அது. பொழுது
போவுற வரைக்கும் வயல்லயே கெடந்து உளுந்து பயிற எடுக்குறது. காலங்காத்தாலயே சூரியன்
கெளம்புறதுக்கு மின்னாடி போயி எடுக்க ஆரம்பிச்சா பத்து பதினோரு மணி வரைக்கும் சூரியன்
உச்சியில வந்து கொளுத்துற வரைக்கும் எடுக்குறது. பெறவு சூரியன் கொஞ்சம் சாய்வா தணிஞ்சி
மேக்கால போற மூணு அல்லது நாலு மணி வாக்குல வயல்ல திரும்ப எறங்குனா பொழுது மசங்குற
வரைக்கும் எடுக்குறது. அப்பிடித்தாம் உளுத்தஞ் செத்தையையோ, பயித்தஞ் செத்தையையோ எதெ
வயல்ல போட்டுருக்கிறதோ அதெ எடுக்குறது. பெரும்பாலும் ஆளுகள வுடாம அவங்கவங்க வயல்கள
அவுங்கவங்கள எடுத்துக்கிடுறது. அப்பிடி எடுத்து தென்னை மட்டையப் போட்டு அடிச்சா பைசா
கூலிச் செலவில்லாம அம்புட்டையும் காசாக்கிப் புடலாம். இங்க விவசாயத்துல உளுந்துலயும்
பயிறுலயும் வெளையுறது அம்புட்டும் மிச்சம். நெல்லு வெவசயாம் ஏமாத்துனாலும் உளுந்து
பயிறு ஏமாத்தாது. நெல்லு வெவசயாம் கவுத்து வுட்டாலும் உளுந்து பயிறு நிமுத்தி விட்டுப்புடும்.
அதால குடும்பம் குடும்பமா சேர்ந்துகிட்டு வூட்டைப் பூட்டிக்கிட்டு அப்பிடித்தாம் சனங்க
வயல்ல செத்தைய எடுக்குமுங்க அந்த நாட்கள்ள.
சுப்பு வாத்தியாரு காலங் காத்தாலயே கெளம்பி
பள்ளியோடம் கெளம்புற நேரம் வரைக்கும் வயல்ல கெடந்தார்ன்னா, பள்ளியோடம் போயித் திரும்ப
பள்ளியோடம் வுட்டு வந்து வயல்ல கெடந்து பயித்தஞ் செத்தைய எடுத்துப்புட்டுத்தாம் வூடு
திரும்புறது. பள்ளியோடம் பாட்டுக்குப் பள்ளியோடம், வேலை பாட்டுக்க வேலைன்னு அந்த
நாளுங்க ரொம்ப பரபரப்பாத்தாம் ஒடும். எதுக்காகவும் எதையும் நிறுத்திக்கிடறது இல்ல.
அதுக்கு ஏத்த மாதிரிக்கி ராத்திரி மூணு மணி வாக்குலயே எழுந்திரிச்சிச் சோத்த வடிச்சி
காலைக்கும் மத்தியானத்துக்குமா புளியஞ் சாதத்தையும், தயிரு சாதத்தையும் கட்டுச் சோறா
கெளறிக்கிறது. நாரத்தம் பழம் கெடந்துச்சான்னா அதெ எடுத்து ஒரு பையில போட்டுக்கிடறது,
யில்லன்னா ஒரு வாளியில புழிஞ்சி வுட்டுப் பானமாக தயாரு பண்ணிக்கிடுறது. பொழுது மசங்கி
வூடு திரும்புறப்பத்தாம் ராத்திரிச் சாப்பாட்ட தயாரு பண்ணிச் சாப்புட்டுக்கிடறது.
செல நாட்கள்ல ராத்திரிச் சாப்பாட்ட அதிகமா
வடிச்சி மறுநாளு காலைக்கும் மத்தியானத்துக்குமா சேந்தாப்புல சுலுவாவும் வேலைய முடிச்சிக்கிடறது
உண்டு. அத்து மாதிரின்னா ராத்திரிச் சாப்புட்டுப்புட்டு தண்ணிய ஊத்துனா மறுநாளு காலைக்கும்
மத்தியானத்துக்கும் அந்த பழையச் சோறுதாம். தயிர்ர ந்நல்லா கெட்டித் தயிரா ஊத்தி தயாரு
பண்ணிக்கிட்டு வெஞ்சனமா பச்ச மொளகாயையும், உரிச்ச வெங்காயத்தையும் வெச்சிக்கிடறது.
ரெண்டு மூணு நாளு கட்டுச் சோறுன்னு ஓடுனா மித்த நாட்கள் அப்பிடித்தாம் போவும். ஏன்னா
வயல்லயும் வெயில்லயும் கெடந்துகிட்டு, காலங்காத்தால ராத்திரியிலயே மூணு மணிக்கெல்லாம்
எழுந்து சமைக்க ஒடம்பு ஒத்துக்காது. ஒடம்பு அப்பிடியே அசதியில அடிச்சுப் போட்டாப்புல
ஆயிடும். பெறவு வேலை முடியற வரைக்கும் ராத்திரி மட்டுந்தாம் சுடுசோறாவும், மித்த ரெண்டு
வேளையும் பழையச் சோறாவும்தாம் ஓடும். அப்பிடித்தாம் ஒவ்வொரு நாளும் உளுந்து பயிறு
செத்தை எடுத்து அடிச்சி முடியுற நாளு வரைக்கும் ஓடும்.
திட்டையில வூட்டுப்பக்கம் வந்துப் பாத்த
பெரியவரு வூடு பூட்டியிருக்கிறதெ பாத்துப்புட்டு வெவரத்த விசாரிச்சுக்கிட்டுத் திட்டையில
இருக்குற வயக்காட்டுப் பக்கமே வந்துப்புட்டாரு. அவருக்கும் உளுந்து பயிறு எடுக்க வேண்டிய
நேரந்தாம். அதெ எடுக்க ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடி மச்சாங்காரனெ பாத்துப்புடணும்னு
தோணுனதால கெளம்பி வந்துப்புட்டாரு. ஆளு நல்ல ஓங்கு தாங்கலான உசரமில்லையா. அவரு தூரத்துல
வார்றப்பவே வெங்கு பாத்துட்டு அவரு வர்ற தெசை நோக்கி ஓடிப் போவுது. சுப்பு வாத்தியாரு
நிமுந்துப் பாத்தவரு, குனிஞ்சி திரும்பவும் உளுத்தஞ் செத்தைய எடுக்க ஆரம்பிச்சிட்டாரு.
குனிஞ்சி உளுத்தம் செடியப் பொறுக்கிக்கிட்டு இருந்த விகடு நிமுந்துப் பாத்து அவனும்
யம்மாக்காரிய நோக்கி ஓடுறாம். செய்யு அவ்வே பாட்டுக்கு வரப்புல வெளையாட்டிட்டு இருந்தவே
அவளும் ஓடியார்றா.
"யண்ணேம்! அஞ்ஞ வூட்டுப்பக்கத்துலயே
யாருட்டயாவது சொல்லி வுட்டா ன்னா? தூரத்துலயே ஒரு கொரலு கொடுத்தா ன்னா? நலுங்காம
நடந்து வர்றீயேளே?"ன்னுச்சு வெங்கு.
பக்கத்துல ஓடியாந்த விகடுவெப் பாத்து,
"போடா! நீயிப் போயி வெரசா வூட்டைத் தொற. நாம்ம தங்காச்சியத் தூக்கிட்டு யண்ணனை
அழைச்சிட்டுப் பின்னாடி வர்றேம்!"ன்னுச்சு வெங்கு.
"போவலாம் யங்கச்சி! இன்னிக்கு வூட்டுல
தங்கி காலங்காத்தாலத்தாம் போவப் போறேம். பொழுது இருக்கு. ஆளுக்கொரு ஒரு தவா குனிஞ்சி
எந்திரிச்சா ஆளுக்கு அஞ்சு குழி உளுத்தச் செடிய பறிச்சிப் போட்டுப்புடலாம். அப்பிடியே
எல்லாம் எறங்குங்க. பெறவு போயிக்கிடலாம் வூட்டுக்கு!"ன்னாரு பெரியவரு.
"அதெப் பாத்துக்கிடலாம் வாங்கண்ணே!
எங்கப் போயிடப் போவுது?வயல்லத்தான கெடக்கப் போவுது!"ன்னுச்சு வெங்கு.
"அதாங் தப்பு! வேல முடிஞ்சாத்தாம்
பேச்சு, குசலம்ல்லாம். வேலை கெடக்குறப்போ அதுக்குல்லாம் வேலயில்ல. எறங்கு வயல்ல. புள்ளீயோள
எறக்கி வுடு. ஆளுக்கு ரண்டப் பறிக்கட்டும். சின்னப் பொண்ணு எம்மாம் பறிக்குறான்னுப்
பாக்குறேம். நாம்ம கட்டிக்கப் போறவளாச்சே! பொண்ணோட சமத்தெப் பாக்குறேம்!"ன்னாரு
பெரியவரு.
"ம்ஹூம்! அதல்லாம் மாட்டேம்!"ன்னு
சிணுங்குனா செய்யு.
"செரி! செரி! உளுத்தம் செத்தைய எடுப்
பாப்பேம்! சமத்தா இருந்தாத்தாம் கட்டிப்பேம். ல்லேன்னா கெடையாது!"ன்னு அவரு பாட்டுக்கு
உளுத்தஞ் செத்தைய எடுக்க எறங்க ஆரம்பிச்சிட்டாரு. எறங்க ஆரம்பிச்சிட்டார்ன்னா, தோள்ல
கெடந்த துண்டெ எடுத்து தலையில கட்டுனாரு. கையில கெடந்து கடியாரத்த கழட்டி துணிப் பையிக்குள்ளப்
போட்டு, கக்கத்துல இருந்த தெனசரித் தாளையும் அதுக்குள்ள போட்டு வரப்போரமா வெச்சிட்டு
வேட்டிய மடிச்சிக் கட்டிட்டுச் செத்தைய எடுக்க எறங்கிட்டாரு.அப்பிடியே எடுத்துக்கிட்டு
சுப்பு வாத்தியாரு பக்கமா போயிட்டாரு. சுப்பு வாத்தியாரு வாங்க யத்தாம்ன்னு கூட சொல்லல.
அவரு பாட்டுக்குக் கண்டும் காணாத மாதிரிக்கி எடுத்துக்கிட்டு இருக்கிறாரு. பெரியவரும்
அவர்ரா ஒண்ணும் பேசல. அவரோட போட்டிப் போட்டுக்கிட்டு
எடுக்குறது போல உளுத்தஞ் செத்தைய எடுத்துப் போடுறாரு.
ஒரு நாளுக்கு நல்லா வெரசா மெனக்கெட்டு
எடுத்தா ஒரு ஆளு முப்பது குழி அளவுக்கு உளுத்தஞ் செத்தையோ, பயித்தஞ் செத்தையோ எடுக்கலாம்.
அம்பது குழி அளவுக்கு எடுக்குற அசுரப்பிடி ஆளுக எல்லாம் உண்டு. நாம்ம சொல்றது சராசரி
மனுஷக் கணக்கு. பெரியவரு வந்ததுலேந்து அவரும் சுப்பு வாத்தியாரும் போட்டிப் போட்டுக்கிட்டு
ரெண்டு பேரும் எடுத்ததுல ஒன்றரை மணி நேரத்துல ஆளுக்குப் பத்துக் குழி மேனிக்கு இருவது
குழி அளவுக்கு செத்தைய எடுத்துப் போட்டுருக்காங்க. அதுக்குள்ள பொழுது மசங்கிடுச்சு.
போதும்ன்னு போட்டுப்புட்டு சுப்பு வாத்தியாரு நிமுருறாரு. நிமுந்தவரு கெளம்புறாரு.
பெரியவரும் நிமுந்து சுப்பு வாத்தியாரோட கெளம்புறாரு. அப்பிடியே வெங்குவும், விகடுவும்
கெளம்புறாங்க. வெங்கு செய்யுவ தூக்கி இடுப்புல வெச்சிக்கிட்டு, "நீயிப் போயிச்
சீக்கரமா வூட்டைத் தொறந்து வெளக்கைப் போடுடாம்பீ! அப்பிடியே தவளைப் பானையில தண்ணி
அடிச்சி வையி! கெளம்பு! வெரசாப் போயிக் காரியத்தப் பாரு!"ன்னுச்சு வெங்கு. விகடு
வேகமா கெளம்பி முன்னால போயிட்டு இருந்தாம்.
சுப்பு வாத்தியாரு, பெரியவரு, செய்யுவ
தூக்கி வெச்சிக்கிட்ட வெங்கு எல்லாம் நடந்து வர்றாங்க வயக்காட்டுப் பாதை வழியா. வெங்குவும்
பெரியவரும் மட்டும் அது இதுன்னு குடும்ப விசயங்களப் பத்திப் பேசிட்டு வர்றாங்க. சுப்பு
வாத்தியாரு ஒண்ணும் பேசாம மெளனமாவே வர்றாரு.
வூட்டை நெருங்குன வூட்டைத் தொறந்து வெளக்கைப்
போட்டு தயாரா வெச்சிருக்காம் விகடு.
"எலே யம்பீ! மாமாவ கொல்லைப் பக்கம்
அழைச்சிட்டுப் போயி கையி காலு அலம்பி தண்ணி அடிச்சி வுட்டு துண்டெ கொடுடா!"ன்னு
வெங்கு விகடுவெப் பாத்து சத்தம் கொடுக்குது. ஒரு வழியா கையி, காலு அலம்பி எல்லாம்
கூடத்துல வந்து உக்கார்றாங்க. அதுக்குள்ள டீத்தண்ணிய போட்டு, "இதெ எடுத்துட்டுப்
போயி மாமாகிட்டெ கொடுடா!"ங்குது வெங்கு லோட்டாவையும், லோட்டா மேல ஒரு பெரிய
தம்பளரைக் கவித்துக் கொடுக்குது. மித்தவங்களுக்கு எல்லாம் நடுத்தரமான தம்பளர்ல டீத்தண்ணிய
ஊத்தி வெச்சி கண்ணால காட்டுது. அதுக்கு அர்த்தம் மாமாட்டெ கொடுத்துப்புட்டு மித்ததெ
அவுங்கவுங்க எடுத்துக்கிடணுங்றது.
விகடு வாங்கிட்டுப் போயிக் கொடுக்குறாம்.
பெரியவரு வாங்கி நெதானமா ரெண்டு ஆத்து ஆத்தி கொஞ்சம் வாயில வுட்டு சூடு பாத்துக்கிட்டு,
"நல்லா பதமாத்தாம் ஆயி கொடுத்து விட்டுருக்கே!"ன்னு லோட்டாவுலேந்து டீத்தண்ணிய
உறிஞ்சுறாரு. உறிஞ்சி முடிச்சிப்புட்டு ஆவ்ன்னு ஒரு ஏப்பத்தெ வுட்டவரு, குரலு தழுதழுக்க
சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "நம்மட காலத்துக்குப் பெறவு நீந்தாம்பீ பாத்துக்கிடணும்"ன்னு
சொன்னாரு பாருங்க பெரியவரு. அது வரைக்கும் பேசாம மல்லுகட்டிக்கிட்டு இருந்த சுப்பு
வாத்தியாரு, "ஏந்த்தாம்! ன்னா பேச்சுப் பேசுறீங்க?"ன்னு அவரும் தழுதழுத்தாரு.
ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க இப்போ. இத்தனை நாளும் பேசாத பேச்சையெல்லாம் சேத்து
வெச்சி பேச ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும். இனி விடிய விடிய சிவராத்திரியோ, வைகுண்ட
ஏகாதசியோ அது அந்த ரெண்டு பேருக்குத்தாம் தெரியும்.
*****
No comments:
Post a Comment