9 May 2020

வீடு மாடு கொல்லை கதாச்சித்திரம்!

செய்யு - 443        

            பெரியவரு சொன்னபடி வெள்ளை மாடு அம்மு கிடேரி கன்னாத்தாம் போட்டுச்சு. ரொம்ப சுலுவா பெரியவரு கன்னுக்குட்டியை இழுத்து வெளியில போட்டுட்டாரு. அது ஒரு லாவகம். மாடு கன்னுக்குட்டிப் போட்டதும் ஒடனே நஞ்சு போட்டுட்டா நல்லது. அது போடுற வரைக்கும் நின்னு நாயீ கீயி வாய வைக்காம அதெ சேகரம் பண்ணி வைக்கப்பிரியில கட்டி ஊருக்கு வெளியில இருக்குற ஆல மரத்துல கொண்டுப் போயிக் கட்டிப்புட்டு வந்துப்புடுறது. மாடு போடுற நஞ்சை நாயீ நக்கித் தின்னுப்புட்டா அத்து மாட்டுக்கு நல்லதில்லன்னு ஒரு நெனைப்பு.
            சீக்கிரமாவே நஞ்சைப் போடணுங்றதுக்காக மூங்கித்தழைய வெட்டிப் போடுறது. அதுக்காகவே கொல்லைக் கடைசியில எல்லாரு வூட்டுலயும் மூங்கிக் குத்து ரெண்டு இருக்கும். ஒத்தை மூங்கிக் குத்தை யாரும் போடுறதில்ல. அதுக்கு ரெண்டு பயன்பாடு. ஒண்ணு மாட்டுக்கான பயன்பாடு இந்த மாதிரிக்கி, இன்னொண்ணு மனுஷனுக்கான பயன்பாடு. மாட்டுக்கு இந்த மாதிரி நேரத்துலன்னா மனுஷனுக்கு எந்நேரத்துக்கும் வேலி முள்ளுக்கும், மூங்கிக் கழிக்கும்ன்னும் அதோட உபயோகம் இருந்துகிட்டே இருக்கும்.
            டவுன், பட்டணம்ன்னா காம்பெளண்டு சொவருங்க இருக்கும். கிராமந்தானே, இங்க கிராமத்து வேலிங்க எல்லாம் உயிர்வேலிங்கத்தாம். போத்தா வெச்சா கிளேரியாவும், பூவரசும், ஒதியனும், கலியாண முருங்கையும், இலுப்பையும் மரமா போயிருக்கும். கொல்லைக் கடெசீன்னா மட்டும் கள்ளியில வேலி. அதுக்கு அடைப்புல்லாம் கெடையாது. கள்ளிய நட்டு வெச்சிட்டா போதும். அதுவே வேலித்தாம். இந்த வேலி மரங்களுக்கு இடையில ஒண்ணு ரெண்டு வேப்பமரமும் அதுவா அமைஞ்சிடும். அதுல மூங்கி முள்ள வெச்சி வேலியா அடைச்சிடுறது. மூணு வரிச்சிலேந்து, அஞ்சு வரிச்சி வரைக்கும் வசதிக்கு தக்கபடி வேலி இருக்கும். அஞ்சு வரிச்சி வெச்சு கட்டற வேலி பாக்குறதுக்கு எடுப்பா நல்லா அம்சமாத்தாம் இருக்கும்.
            கிராமத்து வூடுங்க பெரும்பாலும் கூரை வூடுங்க அப்போ. வூட்டுக் கட்டுமானத்துக்கு மூங்கிக் கழிகளோட உபயோகம் இருந்துகிட்டெ இருக்கும். கோடை வந்துட்டுன்னா வூட்டுக்கு மின்னாடி பந்தல் போட்டுக்கிடறதுக்கும் அதோட உபயோகம் இருந்துக்கிட்டெ இருக்கும். ஒவ்வொரு வூட்டுலயும் பத்துப் பாஞ்சு மூங்கிக் கழிக கொல்லை ஓரமா கூடுதலாத்தாம் கெடக்கும், எந்த நேரத்துல வேணும்னாலும் எடுத்துச் செஞ்சிக்கிறாப்புல. கிராமத்து வூடு, கொல்லையப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சா, ஒண்ணெ சொல்லிப்புட்டு இன்னொண்ண வுட்டுப்புட முடியாதுல்ல. மொத்தமா அந்த அமைப்பப் பாக்குறப்ப அதுலயே ஒரு கதெ இருக்கும், அத்தனை வருஷத்துக் கிராமத்து அமைப்போட கதெ.
            பெரும்பாலான கிராமத்து வூடுகளோட அமைப்பு எப்படி இருக்கும்ன்னா, வேலியோரத்துல ஒண்ணு ரெண்டு முருங்கெ மரம், அப்பிடியே கொஞ்சம் நடந்து வந்தா மாட்டுக் கொட்டகை, அதெ ஒட்டியோ, கொஞ்சம் தள்ளியோ வைக்கப்போரு, அதுக்கு மின்னாடியோ, பின்னாடியோ இல்ல அதெ ஒட்டியோ பைப்படி, பைப்புத் தண்ணி ஓடுற எடத்துல வாழெ மரம் ரெண்டோ மூணோ, கொல்லையோட நாலு மூலைக்கும் தென்னெ மரம், கொல்லைக் கடைசியில மூங்கிக் குத்து, அந்த மூங்கிக் குத்துக்குக் கொஞ்சம் மின்னாடி காது வலி வந்தா சுட வெச்சி பிழிஞ்சி ஊத்துறதுக்கு மருளு. இதுக்கு எடையில எங்கயாவது எடமிருந்தா அதுக்குனுன்னு தனியா வேலிப்படல வெச்சி அதுக்குள்ள கீரெ, வெண்டி, கொத்தவரை, அவரெ, பொடலன்னு கறிக்காயிச் செடிங்க, மிளகா செடிங்க பத்து பதினைஞ்சு, தக்காளிச் செடிங்க ஒண்ணு ரெண்டு, அத்தோட ஓமவல்லி, சிறியாநங்கெ, தூதுவளெ இருக்கும். கொஞ்சம் வவுறு சரியில்லன்னாலும் சரித்தாம், சளி புடிக்குறாப்புல தோணுனாலும் சரித்தாம் ஓமவல்லி எலைய பறிச்சி அப்பிடியே அலசிப்புட்டு சாப்புடுறது. எந்தப் பூச்சிக்கடியா இருந்தாலும் சிறியாநங்கையைப் பறிச்சி அத்தோட நாலு மெளக வெச்சி மென்னுப்புடுறது. ஒரு சில வூட்டுக் கொல்லையில ஏதோ ஒரு எடத்துலயோ கொல்லக் கடெசீக்கு மின்னாடியோ எலுமிச்சை மரம், அத்தோட மாதுள மரம் ஒண்ணும் உண்டு.
            கோடையில தென்னை மரத்தெச் சுத்தி கொளத்துப் பொருக்கை அடிச்சி வெச்சிருப்பாங்க. அப்பிடி அடிச்சி வெச்சிருக்கிற அந்தப் பொருக்குல்ல வல்லாரச் செடியக் கிள்ளி நட்டு விட்டா அது பாட்டுக்கு தென்னை மரத்தெச் சுத்தி மனுஷனுக்குக் காடு போல முடி வளந்தா எப்பிடி இருக்குமோ அப்பிடி வளந்து கெடக்கும். கொளத்துப் பொருக்குக்கும் அதுல ஊத்துற தண்ணிக்கும் வல்லாரை அப்பிடிக் கெளம்பிக் கெடக்கும். ஒடம்பு சூடுன்னாலும், நீர்க்கடுப்புன்னாலும் கொஞ்சம் வல்லாரையைப் பறிச்சி அரைச்சிக் குடிச்சா போதும், அரைச்சுக் குடிக்க அலுப்புன்னா அப்பிடியே பறிச்சி அலசிட்டு வாயில போட்டு மென்னுட்டா போதும். ஒடம்பு குளிர்ச்சிக்கு வல்லாரைன்னா, மழைக்காலத்துல ஒடம்பு சூட்டுக்கு தூதுவளெ. மழைக்காலம் ஆரம்பிச்சுன்னா தூதுவளெ ரசம் இல்லாம சோத்தெப் பொங்காதுங்க கிராமத்துச் சனங்க. அப்பிடியே மழைக்காலத்துல பொழுது மசங்க ஆரம்பிச்சிட்டா வேலிக்கால்ல இருக்குற கலியாண முருங்கெ மரத்துலேந்து இலையப் பறிச்சி அடையத் தட்டிப்புடுமுங்க. இப்பிடி ஓரளவுக்கு மாட்டுக்கும் மனுஷனுக்குமான அத்தனெ சமாச்சாரங்களும் வூட்டைச் சுத்தி இருக்கும்.
            கிராமத்துல மாடுக கன்னுக்குட்டியைப் போடுறதும், போட்டக் கன்னுக்குட்டி எழுந்து நிற்க கொஞ்ச நேரம் தடுமாறுறதும், அப்பிடியே எழுந்து தத்தக்கா பித்தக்கான்னு நடந்து பாலு குடிக்கப் போறதும் பாக்குறதுக்கு ரொம்ப ரசமான விசயங்க. மனுஷன மாதிரி இல்ல கன்னுகுட்டிங்க. மனுஷன் பொறந்து எழுந்து நிமுந்து நடக்குறதுக்குள்ள எப்படியும் மண்டிப் போட்டு, செவத்தைப் பிடிச்சிக்கிட்டு, நடைவண்டியத் தள்ளிக்கிட்டு அப்பிடியிப்படின்னு ஏழெட்டு மாசமாவது ஆயிடும். கன்னுக்குட்டிகளும், ஆட்டுக்குட்டிகளும் மனுஷனுக்கு அப்பிடியே நேர்மாறு. ரொம்ப வேகம். போட்ட கொஞ்ச நேரத்துலயே எழுந்து நடக்க ஆரம்பிச்சிடும்ங்க. பாலைக் குடிச்சிப்புட்டு கொஞ்ச நேரம் நின்னுச்சுன்னா பெறவு அப்பிடியே அங்க இங்க வெலகி நடை நடந்து, கொஞ்சம் கொஞ்சமா ஓட்டத்துல பிடிச்சிடுமுங்க. தன்ன வுட்டு வெலகி கன்னுக்குட்டிப் போறதெ மாடு செருமி செருமிக் கூப்புடும் பாருங்க. கன்னுக்குட்டிக்கு இப்போ ஓடுறதுல ஆர்வம் வந்துப்புடும். பசிக்குற வரைக்கும் அதுக்கு ஓடுறதுலத்தாம் ஆர்வம் இருக்கும். கன்னுக்குட்டிக்குத் தெரிஞ்ச ஒரே வெளையாட்டு ஓடுறதுதாம். மாட்டுக்குத் தெரிஞ்ச ஒரே வெளையாட்டு கன்னுக்குட்டியை நக்கிக் கொடுக்குறதுதாம். எல்லாம் வேடிக்கையா இருக்கும். பொறந்த ரெண்டு நாள்ல அதுக ஓடுற ஓட்டத்தோட வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுறதுக்கு இருவது வயசு ஆன மனுஷனாலயும் முடியாது.       

            கன்னுக்குட்டிகள்லயே மாஞ்செவலையா போடுறது பாக்குறதுக்கு அப்பிடியே மான்குட்டியப் போல அம்புட்டு அழகா இருக்கும். ம்மே, ம்மேன்னு அது கத்திக்கிட்டு ஓடுறதெப் பாத்தா மான்குட்டித் தோத்துப் போயிடும். கன்னுக்குட்டி இல்லாத வரைக்கும் வூட்டுத் தொறப்புக்கு படலு இருக்கலாம், இல்லாம இருக்கலாம். கன்னுக்குட்டி வந்தப் பெறவு படலு இல்லாம இருந்தா கன்னுக்குட்டி தெருவுக்கு ஓடுச்சுன்னா அதெ எந்தப் பயில்வானா இருந்தாலும் சரித்தாம், ஒட்டக்காரனா இருந்தாலும் சரித்தாம் பிடிக்க முடியாது. ஓட்டம்ன்னா ஓட்டம் மின்னலு வேகத்துல ஓடும். பெரியவருக்குக் கன்னுக்குட்டின்னா உசுரு. அதுக கூடயே வெளையாண்டுகிட்டுக் கெடப்பாரு. சமயத்துல கன்னுக்குட்டியைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டே அதுக கூடயே மாட்டுக் கொட்டில்லயே படுத்துப்புடுவாரு.
            மாடு கன்னுக்குட்டியைப் போட்டுச்சுன்னா கொறைஞ்சது மூணு நாளைக்காவது பருத்திக் கொட்டையை ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி அரைச்சி வைக்கணும். கன்னுப் போட்ட மாட்டுக்கு வவுற எதமா ஆவணுங்றதுக்காகவும், பாலு நல்லா சொரக்கணுங்றதுக்காகவும் அதெ செய்வாங்க. அதெ கடையில வாங்கியாந்து ஊற வெச்சி அரைக்கணும், அரைக்கணும், அப்பிடி அரைக்கணும். அம்புட்டுச் சீக்கரத்துல அரைபடாது. அதெ அரைச்சி முடிச்சிட்டா அடுத்ததா, கன்னுக்குட்டிக்கு வூட்டுல இருக்குற பழந்துணியில முறுக்கிக் கயித்தப் போடணும். இதெயெல்லாம் செய்யுறதுன்னா பெரியவருக்கு தனி குஷியே வந்துப்புடும். பக்கத்துல யாராச்சியும் உக்கார வெச்சுக்கிட்டு இப்பிடித்தாம் தங்காச்சின்னு ஆரம்பிச்சி அவரு அனுபவத்துல மாடுக கன்னு போட்ட அத்தனையையும் வருஷ வாரியா சொல்லி, இது வரைக்கும் எத்தனை கன்னுக்குட்டிகளுக்கு இப்பிடித் துணி கயிறு போட்டு இருக்கார்ங்றது வரைக்கும் சொல்லிப்புடுவாரு. மாடு கன்னு போட்ட வூடுங்றது கிட்டத்தட்ட புள்ளெ பிரசவம் ஆன வூடு மாதிரித்தாம்.
            மாட்டோட பாலு தெளியுற பால்காரருக்குப் பால கொடுக்க மாட்டாவோ. அத்தனை நாளு வரைக்கும் வூட்டுலயும், அக்கம் பக்கத்து வூட்டுலயும் சீம்பாலுதாம். சீம்பால குடிக்கிறதுன்னா வூட்டுல சிறுசுகளுக்கு இடையே போட்டா போட்டித்தாம். அதோட ருசி அப்பிடி. பாலு அப்பிடியே மணல் மணலா அதெ குடிக்க குடிக்க ஆசெ தீராது. அக்கம் பக்கத்து வூட்டைத் தாண்டி ஒறவுக்காரவுங்க வூடு வரைக்கும் சீம்பாலு போவும். "எஞ்ஞ வூட்டுல மாடு கன்னு போட்டிடுச்சு!"ன்னு சொல்லி அந்தச் சீம்பால கொடுத்து வுடுறதுல மனசுல ஒரு நெறைவு, வூட்டுல ஒரு புள்ளையே பொறந்த மாதிரிக்கி.
            மாடு கன்னுக்குட்டியை நக்குறதப் பாத்து கன்னுக்குட்டியும் மாட்டை நக்கிக் கொடுக்கும். பெரியவரு கன்னுக்குட்டிய நெத்தியில ஒடம்புலன்னு எந்நேரத்துக்கும் தடவிக் கொடுத்துட்டு இருப்பாருல்லா, அதுல கன்னுக்குட்டி இவரையும் கண்டபடிக்குப் போட்டு நக்க ஆரம்பிச்சிடும். கன்னுக்குட்டி நக்குறதெ மாடு தாங்கும் மனுஷன் தாங்க முடியாது. என்னவோ உப்புத்தாள வெச்சி தேய்க்குறாப்புல சொர சொரன்னு ஒரு மாதிரியா இருக்கும். ஆனா பெரியவருக்கு அதுதாங் ரொம்ப பிடிக்கும். கன்னுக்குட்டி நக்க நக்க அதெ ரொம்ப ரசிச்சுக்கிட்டுக் கெடப்பாரு.
            மாடு கன்னுபோட்டு கன்னுக்குட்டியைப் பாத்ததுல பெரியவருக்கு எல்லாமே மறந்துப் போச்சு. மத்தியானத்துக்கு மேல சாயுங்காலமா கெளம்புறேன்னு சொன்னவரு அன்னிக்குப் பூரா தங்கி மறுநாளு காலையிலத்தாம் கெளம்புனாரு. அப்பிடிச் சமயத்துல அவரு வந்துட்டுப் போறது ரொம்ப ஒத்தாசையாப் போயிடும் சுப்பு வாத்தியாருக்கு. அப்பிடி வந்துப் பேசிட்டுப் போனவரு போன மூணாவது நாளே கெளம்பித் திரும்ப திட்டைக்கு வந்துப்புட்டாரு.
            "என்னத்தாம் போன வேகத்துலயே சொவத்துல எறிஞ்ச பந்தாட்டம் திரும்புதீயளே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யில்லம்பீ! மாடு வேற கன்னுப் போட்டுச்சு. உளுந்து பயிறு வேற எடுத்துப் போட்டு அடிச்சிருப்பீயே! ஒதவிக்கு ஆளு பத்தாதுல்ல. அதாங் நெனைப்பா இருந்துச்சு. கெளம்பி வந்துட்டேம்!"ன்னாரு பெரியவரு. இப்போ இருக்குற மாரியெல்லாம் உளுந்து, பயித்தை சல்லடை வெச்சி சலிக்குறாப்புல அப்போ எதுவுங் கெடையாது. மொறத்தை வெச்சித்தாம் பொடைப்பாங்க. பொடைப்புன்னா பொடைப்பு ரொம்ப சுத்தமா ஒரு கல்லு கப்பி இல்லாம இருக்கும். உளுந்துன்னா உளுந்தா மட்டும் இருக்கும். பயிறுன்னா பயிறா மட்டும் இருக்கும். கலப்பு கொஞ்சம் கூட இருக்காது. பெரியவரு உக்காந்து பொடைக்க ஆரம்பிச்சார்ன்னா எத்தனை மூட்டை உளுந்தா இருந்தாலும், பயிறா இருந்தாலும் அவரு பாட்டுக்குப் பொடைப்பாரு. அதுல ஒரு சின்ன தூசி, தும்பட்டையப் பாக்க முடியாது. பொடைச்சிக்கிட்டெ அவரு பேசுறதும், பேசிக்கிட்டெ அவரு பொடைக்குறதும் எவ்வளவோ கதைகள, அனுபவங்க விசயங்கள இழுத்தாந்து போடும். ஒவ்வொண்ணையும் சொல்லிப்புட்டு மனுஷன்னா இப்பிடியிப்பிடித்தாம் இருக்கணுங்ற விசயத்தையும் அழுத்திச் சொல்வாரு. அவரு சொல்ல சொல்ல ஒரு மனுஷனுக்குள்ள இம்புட்டு ஞாபவம் இருக்குமான்னு நமக்கே ஆச்சரியமா இருக்கும்.
            பெரியவர்கிட்டெ அப்பிடி அவரு பாத்து அறிஞ்சு, அவருக்கு மின்னாடியிருந்த பெரிசுக மூலமா கேட்டிருந்த கதைகள்ன்னு நாலைஞ்சு தலைமுறைகளுக்கான குடும்பக் கதைக இருந்துச்சு. ஒவ்வொரு தலைமுறையிலயும் நடந்த நல்லது, கெட்டது சமாச்சாரங்க அத்தனையும் அவரு மனசுல அப்பிடியே இருந்துச்சு. எல்லா கதைகளையும் சொல்லிப்புட்டு கடைசியில அவனவனும் ஒண்ணுத்தையும் எடுத்துக்கிட்டுப் போவ முடியாமத்தாம் செத்தாம்பாரு சிரிச்சிக்கிட்டெ. அழிஞ்சிப் போனவம் போயிட்டாம், அவனோட நல்லதும், கெட்டதும் அழியல, அதெ அழிக்க முடியலம்பாரு. அதெ அழிக்க முடியாதுங்றதாலத்தாம் நல்லது கெட்டதுல சூதானமா இருக்கணும்பாரு. அன்னிக்கு அவரோட பேச்சுல சாவு குறித்த சங்கதித்தாம் அதிகமா இருந்துச்சு. சாவு தன்னை நெருங்கிக்கிட்டு வர்றது போல அவருக்கு உணர்வு தோணிக்கிட்டே இருந்திருக்கணும்.
            "ஒடம்புக்கு ஏத்தோ பண்ணுதும்பீ! என்னன்ன சொல்லத் தெரியல. நம்மப் பேச்சு நிக்கப் போறதா அடிக்கடி ஒரு நெனைப்பு வருதும்பீ! அதாங் பேச வேண்டிய எல்லாத்தையும் பேசிப்புடணும்ன்னு நெனைக்கிறேம். பேச வேண்டிய அத்தனையையும் பேசிப்புட்டா சாவு வந்தாலும் நிம்மதியா போயிச் சேரலாம் பாருங்க. சாவு வர்றதுக்கு மின்னாடி பேச வேண்டியதெ பேசிப்புடணும்பீ! அப்பிடி பேசாம வுட்டுப்புட்டா உசுரு ஊசலாடும்பீ! அம்மாம் சீக்கிரமா உசுரு பிரியாது. எத்தெ பேச நெனைச்சோம்மோ அத்து ஒத்த வார்த்தையா தெரண்டு வர்ற வரைக்கும் வெலகாம கெடக்கும் உசுரு. பேசிப்புட்டா அத்து பாட்டுக்குப் பிரிஞ்சிடும் உசுரு. நெறைய பேசணும்பீ!"ன்னாரு பெரியவரு.
            "அதெல்லாம் ஒஞ்ஞளுக்கு ஒண்ணும் ஆவாது யத்தாம். அறுவது எழுவதெ நெருங்குறப்ப அப்பிடி ஒரு நெனைப்பு வர்றது மனுஷனுக்கு இயற்கைத்தாம். பிற்பாடு எண்பது தொண்ணூற நெருங்குறப்போ மறுக்கா அப்பிடி ஒரு நெனைப்பு வரும். அத்து எல்லாத்துக்கும் உள்ளதுதாம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "கடெசீக் காலத்துல சட்டுன்னு படுத்தோமா? பட்டுன்னுப் போயிச் சேந்தோமான்னா இருந்த தேவல! கெடந்துச் சாவக் கூடாதும்பீ! ஒறக்கத்துலு உசுரு பிரியுற வரம் வேணும்பீ! செத்தா கூட மனுஷனுக்கு ஆசெ தீராதுங்ற மாதிரி சாவுறது கூட இப்பிடித்தாம் சாவணும்னு நமக்கு ஒரு ஆசைத்தாம்! என்னத்தெ பண்றது மனுஷனோட உசுரே ஆசைத்தாம். அந்த ஆசையிலத்தாம் உசுரு ஆடிட்டு இருக்குது. அந்த ஆசை இல்லன்னா உசுரு தானா போயிடும்பீ! ஆசெ கெளம்பி உசுரைக் கட்டி வைக்கலன்னா உசுரு எஞ்ஞ நிக்கும்பீங்க!"ன்னாரு பெரியவரு.
            பெரியவரு பேசுறதெப் பாத்து சுப்பு வாத்தியாருக்குத் தூக்கிப் போட ஆரம்பிச்சிடுச்சு, இப்பிடி சாவு சாவுன்னு பேசிட்டு இருக்காரேன்னு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...