செய்யு - 444
களத்து மேட்டுல போட்டு உளுத்தஞ் செத்தையையோ,
பயித்தஞ் செத்தையையோ போட்டு அடிச்சி காத்துல தூத்துன பிற்பாடு அது வூடு வந்து சேந்தா
அடுத்த வேல ஆரம்பிக்கும். அதெ மேக்கொண்டு சுத்தம் பண்ணுற வேல. உளுந்தோ பயிறோ வெளையுறதுல
பெனாட்டி எடுத்துப்புட்டுன்னா மாவுக்கே ஒரு மூட்டை ஒன்றரை மூட்டை வீதம் காணும். அந்த
அளவுக்கு கொடி கொடியா படர்ந்து சடை சடையா காய்ச்சித் தள்ளிப்புடும். ஒரு மூட்டைங்றது
இருவத்து நாலு மரக்கா கணக்கு. முப்பது அப்பிடியில்லன்னா முப்பத்தோரு மரக்கா ஒரு குவிண்டாலு
எடைக்கு நிக்கும். அப்பிடிக் கணக்குப் பாத்தா ஒரு மூட்டைங்றது முக்காக் குவிண்டால நெருங்கும்.
நல்ல வெளைச்சல்ன்னா மூட்டை மூட்டையா உளுந்தும்
பயிறுமா நெல்லு மூட்டைகளப் போல வூட்டுல கெடக்கும். அப்பிடி வெளைஞ்சு தள்ளுச்சுன்னா
அதெ சுத்தம் பண்ணி வடவாதியில யாரும் போட மாட்டாங்க. மாட்டு வண்டியக் கட்டிக்கிட்டு
திருவாரூருக்குக் கொண்டு போயி போடுறது. திருவாரூர்ல போயி யேவாரிக்கிட்டெ போட்டா
குவிண்டாலுக்கு நூத்து அல்லது எரநூத்து ரூவா கூடுதலா கெடைக்கும். ஏழெட்டு மூட்டைன்னா
கணக்கு என்னாச்சு? அப்பிடிப் போட்டுப்புட்டு வர்ற வண்டியிலயே வூட்டுக்குத் தேவையான
சாமாஞ் செட்டுகள வாங்கியாந்துடுறது. உளுந்தும், பயிறும் வண்டியிலப் போயி கிரைண்டரு,
இரும்பு பீரோ, ஆனைக்கா குவளென்னு வூட்டுக்கு அப்போ என்ன தேவையா இருக்கோ அதுவா வண்டியில
திரும்பும். ஒரே வண்டியில உளுந்துப் பயித்த எடுத்துட்டுப் போயி, அதெ வண்டியில சாமாஞ்
செட்டுகள வாங்கிப் போட்டா ஒண்ணுக்கு ரெண்டாவா வண்டிச் சத்தம் கொடுக்கப் போறேம்?
ஒரே வண்டிச் சத்தம்தானே!
திருவாரூரு போறதுக்கு மின்னாடி அந்த உளுந்தையும்,
பயித்தையும் சுத்தம் பண்ற வேல இருக்கே, அத்து ஒரு வார காலத்துக்கு நடக்கும். திருவாரூரு
கொண்டு போறப்ப யேவாரி ஒவ்வொரு மூட்டையையும் அவுத்துக் கொட்டி சுத்தம் பாத்து அவரோட
சாக்குக்கு மாத்தித்தாம் எடையப் போட்டு எடுப்பாரு. அப்பிடி மாத்திப் பாக்குறப்போ
சுத்தம் இல்லன்னா ஒண்ணு எடுக்க மாட்டாரு, இல்லேன்னா வேலையக் கொறைச்சிப் போட்டுப்புடுவாரு.
எடுக்காட்டியும் பெரச்சனெ, வெலையக் கொறைச்சாலும் பெரச்சனெ. திரும்ப அதெ அங்க வெச்சு
சுத்தம் பண்றது முடியாது, திரும்ப கொண்டாந்து சுத்தம் பண்ணி அங்க கொண்டு போறதுன்னு
வேலை ரெட்டிச்ச வேலையப் போயிடும். அதுக்காகவே சனங்க ஒவ்வொண்ணும் உளுந்தையும், பயித்தையும்
வேல மெனக்கெட்டு உக்காந்து மணி மணியா சுத்தம் பண்ணிக் கொண்டுட்டுப் போவுமுங்க. சில
பேரு ஆளுகள வெச்சி பொடைச்சிச் சுத்தம் பண்றதும் உண்டு. சுப்பு வாத்தியாரு ஆளு வெச்சிக்கிட்டா
செலவுன்னு அவரே உக்காந்து பெரும்பாலும் ராப்பொழுதுல கண்ணு முழிச்சி கொஞ்சம் கொஞ்சமா
அந்த சுத்தம் பண்ற வேலயச் செஞ்சிக்கிட்டுக் கெடப்பாரு. அப்பிடிச் சுத்தம் பண்ற உளுந்தோ,
பயிறோதாம் வூட்டோட சாமானோ, நகை நெட்டாவோ ஆவுதுங்றப்போ அந்த வேலையச் செய்யுறதுக்கு
சலிக்கவோ அலுக்கவோ ரெண்டுமே இருக்காது.
உளுந்து பயிறு எடுத்து முடிச்சி அத்து
வூட்டுக்கு வந்தா இப்பிடிச் சுத்தம் பண்ற வேல இருக்குங்றது பெரியவருக்குத் தெரியும்.
அந்த மாதிரி நாட்கள்ல அவரும் வந்து உக்காந்து பேசிக்கிட்டெ பொடைச்சிக் கொடுத்துட்டுப்
போவாரு. அப்பிடித்தாம் உளுந்து பயிறு எடுக்குறப்போ வந்தவரு, மாடு கன்னு போட்டதெப்
பாத்தவரு, வேல நெரம்ப இருக்குமேன்னு நெனைச்சிக்கிட்டு அவராவே மூணு நாளு கழிச்சி வந்து
பொடைக்க ஆரம்பிச்சாரு.
பெரியவரு கையில மொறம் இருக்கு. பக்கத்துல
சணல் சாக்குல உளுந்து இருக்கு. அதெ அள்ளிப் போட்டு பொடைக்குறதுக்கு வசதியா வெச்சுக்க
இந்தாண்ட பக்கத்துல ஒரு அன்னக்கூடை இருக்கு. பொடைச்சுப் போட்ட உளுந்த கொட்டறதுக்கு
வசதியா அந்தாண்ட பக்கத்துல ஒரு அன்னக்கூடை இருக்கு. பொடைச்சு எடுத்ததுப் போக வர்ற
தூசு, தும்பட்டை, கல்லு, மண்ணெ அப்பிடியே பக்கத்துலயே கொட்டுறாரு. அவரு உட்கார்றதுக்கு
வசதியா அடியில ஒரு பலவாக் கட்டையப் போட்டுருக்காரு. அவருக்கு அப்பிடியே எதுத்தாப்புல
சுப்பு வாத்தியாரும் அதெ அமைப்போடு உக்காந்து பொடைச்சுக்கிட்டு இருக்காரு. பெரியவரோட
கையி பொடைக்க ஆரம்பிச்சுட்டுன்னா எந்திரத்தெ போல வேல பாக்கும். அந்த எந்திர வேகம்
சுப்பு வாத்தியாருக்கு வராது.
ராச் சாப்பாட்ட முடிச்சிட்டு ஒம்போது
மணி வாக்குல சுப்பு வாத்தியாரு பொடைக்க ஆரம்பிச்சார்ன்னா பன்னெண்டு மணி வாக்குல படுத்துடுவாரு.
பெறவு மறுநாளுத்தாம் வேலை ஆவும். பெரியவரு வந்துட்டா அப்பிடியில்ல ஒரு ராத்திரித்தாம்,
அத்து எத்தனெ மூட்டை இருந்தாலும் விடிய விடிய உக்காந்து பொடைச்சி முடிச்சிடுவாரு.
அவரு ஒருத்தரு, சுப்பு வாத்தியாரு இன்னொருத்தருன்னு ரெண்டு பேர்ரா சேர்றப்ப வேல ராவோட
ராவா முடிஞ்சிடும். ராத்திரி முழுக்க அந்த வேல நடந்து முடியறதுக்கான கச்சாப் பொருளே
பேச்சுத்தாம். விடிய விடிய கதா காலட்சேபங்ற மாதிரிக்கிப் பேச்சுலயே அத்தனெ உளுந்தும்,
பயிறும் சுத்தமாயிடும். மனசும் அத்தோட சுத்தமாயிடும். மனசுல என்ன ஒரு கொறை இருந்தாலும்
அத்து நிறைவா போயிடும். மொறத்துல பொடைக்குறது உளுந்துக்கும், பயிறுக்கும்னா, வாயில
பேசுறது மனசுக்கும் அத்தோட நெறைவுக்கும்.
"யம்பீ! சாவுங்ற வார்த்தையெ கவனிச்சீங்களா?"ன்னாரு
பெரியவரு. ஏற்கனவே அவரோட பேச்சுல மெரண்டுப் போயி உக்காந்த சுப்பு வாத்தியாரு,
"ஏம் யத்தாம் அந்த வாக்குலயே பேசிட்டு இருக்கீயே?"ன்னாரு.
"பேசித்தாம்பீ வடியணும் இத்து. என்னவோ
நெனைப்பு அப்பிடித்தாம் போயிட்டு இருக்கு. பேச்சுத்தாம்பீ இதுக்கு ஒரே வடிகாலு. அதாங்
கெளம்பி வந்துப்புட்டேம். மனசுக்குள்ள சாவு, பயம்ங்ற மாதிரியான தூசியும் தும்பட்டையுமா
சேந்துப் போச்சும்பீ! அதெ பேசிப் பொடைச்சி அந்தாண்ட போடணும்பீ!"ன்னாரு. அதுக்கு
மேல பெரியவர்ர ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நெனைச்ச சுப்பு வாத்தியாரு அவரு போக்குல,
"செரி! சொல்லுங்கத்தாம்!"ன்னு வுட்டுப்புட்டாரு.
"சாவுங்ற வார்த்தைய கவனிங்களேம்.
சாவச் சொல்லுது பாருங்க அந்த வார்த்தெ. சாவுன்னு அதெ ரண்டு எழுத்துல சொன்னாலும் செரித்தாம்,
சான்னு ஒத்த எழுத்துல சொன்னாலும் செரித்தாம் அத்து சாவுதாம்பீ. போயிச் சேர வேண்டியதுதாங்.
மருவாதியா வயசு ஆச்சா காட்டுல போயிக் கெடந்து அப்பிடியே போயிச் சேந்துப்புடணும்.
கதைகள்ல பாருங்க ராசாவுக்கு வயசாச்சுன்னா, ஆசனத்தெ புள்ளையோகிட்டெ ஒப்படைச்சிட்டு
காட்டெ நோக்கிப் போயிடுவாங்க. அப்பிடி காட்ட நோக்குப் போவலன்னாலும் காடுதாம்பீ!
அதாங் சாக்காடு. வார்த்தையெ கவனிங்க சாக்காடு. சாக்காடு கண்ட பின்னே போயிச் சேர்ற
எடத்துக்குப் பேரு சுடுகாடு. பொறப்பு வூடு, எறப்பு காடு. வூட்டுலத் தொடங்கிக் காட்டுலப்
போயி முடியுது வாழ்க்கெ. வூடு, காடு இதுக்கு எடையில மனுஷம் பாடு. அதாங் வாழ்க்கெ!
சாவப் பத்தி மட்டும் செத்துப் பாத்தாத்தாம் தெரிஞ்சிக்க முடியும். ஆன்னா செத்த பின்னாடி
தெரிஞ்சிக்க முடியாது!"ன்னாரு பெரியவரு. இப்பிடி பேசிக்கிட்டெ வேல பாட்டுக்கு
வேல போவுது, பேச்சு பாட்டுக்குப் பேச்சும் போவுது.
"நீஞ்ஞ சொல்றது செரித்தாம்! வாழ்க்கையில
எதுவும் நிச்சயமில்லாம்பாங்க. ஆன்னா ஒரு விசயம் நிச்சயம் அத்து சாவுதாங் யத்தாம். அதெ
யாரு தடுக்க முடியும்? யாரு நிறுத்த முடியும்? பொறந்தப்பயே நிச்சயமாவுற விசயம் அத்து.
பொறக்குறப்பயும் இறக்கிறாம், பொறந்த பிற்பாடும் இறக்கிறாம், பொறந்து நல்லா வாழ்ந்து
முடிச்சப் பிற்பாடும் இறக்கிறாம், நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கிறப்பவும் இறக்கிறாம்.
எப்படியோ மனுஷனா பொறந்தவேம் இறந்துத்தாம் போவ வேண்டியிருக்கு யத்தாம்! அதுல பயப்படறதுக்கு
ஒண்ணுமில்லன்னுத்தாம் நெனைக்கிறேம் யத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அப்பிடி மட்டும் சொல்லாதீங்க யம்பீ!
ஒலகத்துலயே ரொம்ப பெரிய பயம் அதுதாம்பீ! எதுக்கும் பயப்படாத மனுஷங் கூட சாவுக்குப்
பயப்படுவாம். எமன் எருமையில வந்துட்டு இருக்காம்னு சொல்லு நல்லா இருக்குற மனுஷனும்
ஒரு நிமிஷம் செத்துப் பொழைப்பாம். அந்தச் சாவே தடுக்குறதுக்குத்தாம்னே இத்தனெ ஆஸ்பத்திரியோள
கட்டி வெச்சிருக்காம். என்னென்னவோ வைத்தியத்தெப் பண்ணிப் போராடுறாம். சாவு மேல பயம்
இல்லன்னா மனுஷம் பாட்டுக்கு அத்து வர்றப்ப போயிச் சேர வேண்டியத்தானே. அத்து முடியாதும்பீ!
அந்தப் பயம் சாவுற வரைக்கும் மனுஷனுக்கு இருந்துட்டுத்தாம் இருக்கும். அந்தப் பயத்த
மட்டும் ஒரு மனுஷனால செயிக்க முடியாது. வேணும்னா வெளியில சொல்லிக்கிடலாம் நமக்குச்
சாவப் பத்தின பயம் இல்லன்னு. அப்பிடிச் சொல்றதெ பயத்தோட அடையாளந்தாம்பீ! அந்த பயம்
மட்டும் இல்லன்னா மனுஷன கையில பிடிக்க முடியும்னு நெனைக்குறே? ஒரு நாளு செத்துப் போவப்
போறோங்ற பயந்தாம் மனுஷன ஒரு நெலைப்பாடா நிக்க வைக்குது. எவனுக்கும் சாவுல்லன்னு வெச்சுக்கோ,
அவ்வவ்வேம் போடுற ஆட்டத்தெ பூமியால தாங்க முடியாதும்பீ!"ன்னாரு பெரியவரு.
இப்பிடி பெரியவரு இன்னிக்குச் சாவு புராணத்துல
ஆரம்பிச்சிட்டாரேன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அவருக்கு ஆறுதலா சொல்றாப்புல,
"அத்து கெடக்கட்டும்! அத்து வர்றப்போ வாரட்டும் யத்தாம்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"மனுஷன் செத்தப் பின்னாடி என்னாவாம்னு
தெரியுமா யம்பீ?"ன்னாரு பெரியவரு வுடாம.
"செத்தப் பின்னாடி அவ்வளவுதாங். அதுக்குப்
பின்னாடி ஒண்ணுமில்ல. பழுத்து உதுந்த இலையப் போலத்தாம். கதெ முடிஞ்சது. வெட்டுன கெளையப்
போலத்தாம். ஒட்ட வைக்க முடியாது. பதியனும் போட முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"காத்தா, நீரா, நெருப்பா, நெலமா,
ஆகாசமா கலந்து பொறக்குற மனுஷன் திரும்ப நெருப்புல எரிஞ்சோ, மண்ணுல பொதைஞ்சோ திரும்பவும்
காத்தாவும், நீராவும், நெருப்பாவும், நெலமாவும், ஆகாசமாவும் பிரிஞ்சுப் போயிடுறாம்பீ!
ஒடம்புல இத்தனையும் உசுரு இருக்குற வரைக்கும் சேந்து இருக்கு. உசுரு பிரிஞ்சா போய்ட்டு
வர்றேம்னு டாட்டா காட்டிப்புட்டுப் பிரிஞ்சிப் போயிடுது. காத்து, நீரு, நெருப்பு,
நெலம் எல்லாம் எஞ்ஞ இருக்கு சொல்லுங்க. எல்லாம் ஆகாசத்துலத்தாம் இருக்கு. நீஞ்ஞ மண்ணுல
இருக்குறதால மண்ணுன்னு சொல்லிடப்புடாது. ஒட்டுமொத்த மண்ணும் பூமியாயி அத்து ஆகாசத்துலத்தாம்
இருக்கு, சொழண்டுகிட்டுக் கெடக்கு. பூமியச் சுத்திலும் ஆகாசம்தானேம்பீ! அப்ப எல்லாம்
ஆகாசத்துலத்தான இருக்கு எல்லாமும். அதாங் கடெசியில கதெ முடிஞ்சப் பிற்பாடு ஆகாசத்தப்
பாத்துக் கும்புட்டப் போடுறாம். ஆகாசத்துல இருக்குற நட்சத்திரத்துல ஒண்ண செத்துப்
போன ஆசாமிகள்ல ஒண்ணா பாக்குறாம். எல்லாம் ஆகாசத்துல அடக்கம். காத்து, நீரு, நெருப்பு,
நெலம், ஆகாசம்ன்னு உசந்த எடத்துல அத்துதான இருக்குது!"ன்னாரு பெரியவரு.
சாவைப் பத்திப் பேசுறதுன்னா மனுஷனுக்குத்
தத்துவமும் வந்துப்புடும்னு நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. சாவு பயத்தெ தத்துவம்தாம்
கொஞ்சம் தள்ளி வைக்குது. சாவு பயத்தெ அத்துதாம் தெளியவும் வைக்குது. எப்பிடியோ பேசித்
தெளிச்சா செரித்தாம்ன்னு நெனைச்ச சுப்பு வாத்தியாரு மேக்கொண்டு பேசாம உக்காந்திருந்தாரு.
பெரியவரே பேச ஆரம்பிச்சாரு, "ஏம்பீ!
மனுஷன் மறுபொறப்பு பொறக்குறதெ பத்தியெல்லாம் நீஞ்ஞ நம்புறீங்களா?"ன்னு கேள்வியக்
கேட்டுக்கிட்டு.
"என்னவோ புல்லாயி பூண்டாயின்னு பாட்டெ
கேட்டதோட செரித்தாம். அத்தெப் பத்தில்லாம் யாரு யோஜனெ பண்ணா? அத்தெ யோஜனெ பண்ற மாதிரிக்கி
நமக்கு நேரந்தாம் எஞ்ஞ இருக்கு? ஓடுற ஓட்டத்துல அந்த வேல இந்த வேலன்னு வேலைகளக் கவனிக்கவே
நேரம் சரியா இருக்கு! நீஞ்ஞ வந்தா கொஞ்சம் பேசுறதுக்கு நேரம் இருக்கு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"பாட்டனப் போல இருக்கே, முப்பாட்டனப்
போல பேசுறேன்னு சொல்றதெ கேட்டுருக்கீல்ல யம்பீ! அதாங் மறுபொறப்புங்றது. நம்மளோட
கொணம், நெறம், உருவம்ன்னு நம்ம மவ்வேம் மவளோட புள்ளைகளுக்கு ஏத்தோ ஒண்ணு நம்ம வடிவத்துல
ஒரு பொறப்பு இருக்கத்தாம் செய்யும்பீ. நாமளே ரெண்டு தலைமொறை, மூணு தலைமொறைக்கு மின்னாடி
உள்ள ஒருத்தராத்தாம் பொறந்திருப்பேம். அதுல மாத்தம் கெடையாது. அப்போ பொறப்பு இருக்கத்தாம்
செய்யும்பீ!"ன்னாரு பாருங்க பெரியவரு, அந்த எடத்துல பிடிச்சிக்கிட்டாரு சுப்பு
வாத்தியாரு.
"அதாங் மறுபொறப்பு இருக்குல்லா யத்தாம்!
பெறவு ஏம் சாவ நெனைச்சிப் பயந்துக்கிட்டு. இப்போ செத்து இன்னொரு தலைமொறையில பொறக்கத்தாம்
போறீங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாம்பீ விசயம். சமயத்துல மனசுக்குப்
புரியுது, சமயத்துல புரிஞ்சிக்க மறுக்குது. அந்தக் கொழப்பம்தாம்பீ! மொத்தத்துல பொறப்புங்றதும்
கெடையாது, எறப்புங்றதும் கெடையாது. மனுஷன் சொழண்டுகிட்டுக் கெடக்காம்பீ! இப்பிடி மறுக்கா
மறுக்கா பொறந்து சாவுக்குப் பயந்துட்டுக் கெடக்கறதெ அறுக்கணுங்றாம்பீ நம்ம கதெகள்ல!"ன்னாரு
பெரியவரு.
"அப்பிடின்னா மறுபொறப்பு வேண்டாங்றீங்களா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அத்தெ நாம்ம ன்னாத்தா முடிவு பண்றது?
அந்த ஆண்டவேம்தாம்லா முடிவா பண்ணணும்!"ன்னாரு பெரியவரு.
"அப்போ அந்த ஆண்டவனெ அத்தெ முடிவு
பண்ணித் தொலையட்டும். நாம்ம ஏம்த்தாம் வீணா அதெ நெனைச்சிக் கவலெ பட்டுக்கிட்டு? பொறப்பும்
எறப்பும் அவ்வேம் கையில. வாழ்க்கெ மட்டும் நம்ம கையில!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாம்பீ! அதாம்பீ! இந்தப் பக்குவம்
இருக்குல்லா. அத்து இப்பிடித்தாம் பேசப் பேச வரும். அதுக்குத்தாம் இந்தப் பேச்சு. இப்போ
கொஞ்சம் மனசுக்கு எதமாத்தாம் இருக்கு!"ன்னாரு பெரியவரு. சுப்பு வாத்தியாருக்கும்
இப்போ மனசு கொஞ்சம் இதமா இருந்துச்சு. ஏன்னா அதுக்குப் பெறவுத்தாம் பெரியவரு பேச்சைக்
கொஞ்சம் மாத்துனாரு.
மனுஷன் தனிச்சிப் போறதா நெனைக்குறப்ப
சாவு பயம் மனசுல வந்துப்புடும் போலருக்கு. என்னவோ தனிச்சிப் போறாப்புல ஒரு நெனைப்பு
பெரியவருக்கு வந்திருக்கணும். அதைத்தாம் சுப்பு வாத்தியாருகிட்டெ பேசிப் பேசித் தீத்துக்கிட்டாரு.
சாவை விரும்புறாப்புல ஒரு மனசும், அதெ வெறுக்குறாப்புல ஒரு மனசுமா ரெண்டுங்கெட்டாங்
மனசுலத்தாம் அந்தப் பேச்சு நடக்கும். சாவுறதுக்கு ஆசை உள்ளது போல ஒரு மனசும், ஆசை
இல்லாதது போல இன்னொரு மனசும் ஒரே மனசே ரெண்டு மனசா பிரிஞ்சிச் சண்டைப் போட்டுக்கிடும்.
ஒரு வகையான மனக்கொழப்பம்தாம் அது. விட்டுப் பிரிஞ்சிப் போனா தேவலைன்னும், இருந்து
இன்னும் கொஞ்ச காரியத்தெ பாக்க வேணும்ன்னும் மனசு மதிலு நிக்குற பூனையை வுட மோசமா
அல்லாடும்.
பக்கத்துல தம்பிக்கார்ரேம் வூட்டுலயும்
பெருஞ்சண்டையா இருந்துச்சு. பேச்சு வார்த்தெ இல்லாம இருந்துச்சு. மருமவளான தனம் அத்தாச்சி
மேல வேற இனம் புரியாத வெறுப்பு. அதுக்கு ஏத்தாப்புல மகளான கலா அத்தாச்சிப் பேசிட்டுப்
போன பேச்சு. பெரியவருக்கு இது வரைக்கும் வாழ்ந்துட்டு வந்த வாழ்க்கை மொறை தப்போங்ற
எண்ணம் உண்டானதோட விளைவாத்தாம் அவரோட மனப்போக்கு இருக்கணும். அவரோட மனசுல பிடிப்பு
வுட்டுப் போனதோட அடையாளம் அது. அதுக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு அடிக்கடி வேலங்குடிக்குப்
போறதுமா, பேசிட்டு வர்றதுமா இருக்குறதும், பெரியவரும் திடுதிப்புன்னு கெளம்பி வர்றதும்
பேசுறதுமா இருக்குறதும் பிற்காலத்துல ஒரு நாலு வருஷத்துல மாறி மாறி நடந்த சம்பவங்க.
சாவுங்றது மனுஷன் நெனைக்கிறப்போ வர்றதோ,
நெனைக்காம இருக்குறப்ப வராம போறதோ கெடையாது. அதுவா வர்றப்ப வரும், வெலகிப் போறப்ப
வரும். அதுக்குன்னு நேரங் காலம் கெடையாது. கடியாரத்தப் பாக்குற பழக்கமோ, காலண்டர்ர
பாக்குற கொணமோ சாவுக்குக் கெடையாது. காலக் கணக்கோ, நேரக் கணக்கோ இல்லாம வர்றதுதாம்
சாவு.
பேச்சு கொஞ்சம் தெசை மாறி கடைசிக் காலத்துல
எப்பிடி தன்னோட வாழ்க்கெ போவப் போகிறதுங்றதப் பத்தி பெரியவரு பேச நெனைச்சாரு.
*****
No comments:
Post a Comment