19 May 2020

வீட்டோட வந்த மருமகப் பிள்ளை!

செய்யு - 453        

            வேலங்குடி சின்னவரு ராயநல்லூர்ல மக வூட்டுல இருந்தாரு. வேலங்குடிக்கும் ராயநல்லூருக்கும் நாலஞ்சு பர்லாங் தூரம் இருக்கலாம். வேலங்குடியிலேந்து போற ரோடு திருவாரூரு மெயின்ரோட்டுல சேர்ற எடத்துல இருக்குற ஊருதாம் ராயநல்லூரு. வேலங்குடி சின்னவருக்கு மொத்தம் மூணு மகளுக இல்லியா. அதுல ரெண்டாவது மக சுவாதி அத்தாச்சிய திருவாரூக்குக் மேற்கால இருந்த அப்பனூர்ல இருந்த மாப்புளைக்குக் கட்டிக் கொடுத்திருந்தாரு. அப்பனூருல கட்டிக் கொடுத்திருந்த ராசேந்திரம் அத்தான் வெளிநாட்டு மாப்புள. துபாய்ல தையல் கடையில வேல பாத்துட்டு இருந்தவரு. கலியாணத்துக்காக அப்பனூரு வந்தவரு கலியாணம் முடிஞ்ச கையோட துபாயி கெளம்பிட்டாரு. சுவாதி அத்தாச்சி கொஞ்ச காலம் வரைக்கும் புகுந்த வூட்டுல அப்பனூர்ல இருந்துச்சு. பெரசவத்துக்காக மொத பொண்ணு பொறக்குறப்ப பொறந்து வூட்டுக்கு வேலங்குடி வந்தது, அப்பா வூட்டோடயே தங்கிடுச்சு. அப்பனூர்ல கொண்டு போயி விட நெனைச்சப்போ அங்கல்லாம் போயி இருக்க முடியாதுன்னு சுவாதி பிடிவாதமா நின்னுடுச்சு.
            பொண்ணு இப்பிடிப் பண்ணுதுன்னே சின்னவரு பொண்ணைச் சமாதானம் பண்ணப் பாத்தா, "அவரு அஞ்ஞ இருந்து நாம்ம போவலன்னா நம்மள குத்தம் சொல்லலாம். அவரு இருக்குறது துபாயில. நாம்ம அப்பனூர்ல இருக்குறது அவுக யில்லாம. அவுக யில்லா அஞ்ஞ அப்பனூர்ல இருந்தா ன்னா? இஞ்ஞ வேலங்குடியில இருந்தா ன்னா? ரண்டும் ஒண்ணுத்தாம்! நாம்ம இஞ்ஞ இருக்குறது ஒஞ்ஞளுக்குச் சொமையா பட்டா சொல்லுங்க கெளம்பிடுறேம்!"ன்னுடுச்சு. பொண்ணு இப்பிடிச் சொன்ன பெறவு சின்னவரும் இருந்துட்டுப் போவட்டும்ன்னு வுட்டுப்புட்டாரு. அதே நேரத்துல, பொண்ணை இப்பிடி ரொம்ப நாளு வூட்டுல வெச்சிருந்தா ஊருக்குள்ள வேற மாரிப் பேச்சாவும்னு சின்னவரு என்ன பண்ணாருன்னா, மாப்புள்ள இருக்குற துபாயிக்கு வெலாவாரியா வெளக்கி ஒரு கடிதாசிய எழுதுனாரு. அப்பல்லாம் அந்தக் காலத்துல வெளிநாட்டுக்குக் கடுதாசித்தாம். கடுதாசிப் போயிச் சேர்றதுக்கு பாஞ்சு நாளும், திரும்ப பதிலு வந்துச் சேர்றதுக்கு பாஞ்சு நாளும் ஆவும். மொத்தத்துல ஒரு மாசம்.
            ஒரு மாசம் கழிச்சி கடுதாசி சின்னவருக்கு மாப்புள்ள ராசேந்திரம் அத்தாங்கிட்டேயிருந்து கடுதாசி வந்துச்சு, சுவாதி விருப்பப்படியே வேலங்குடியிலயே இருக்கட்டும்னு. அதுபடியே அவரு துபாயிலேந்து திரும்புனப்போ நேரா அப்பனூருக்குப் போவல. நேரா வேலங்குடிக்குத்தாம் வந்தாரு. வேலங்குடிக்கு வந்துட்டுப் பேருக்கு அப்பனூரு போயி ஒரு பார்வெ பாத்துட்டு வந்தாரு. அதுக்குப் பெறவு அவரு பயணத்துல திரும்புனப்போ எல்லாம் வேலங்குடியோட நிறுத்திக்கிட்டாரு. அப்பனூரு பக்கமே எட்டிப் பாக்குறதில்லே. அத்தோட சம்பாதிக்கிற காசியையும் திருவாரூரு போஸ்ட் ஆபீஸ்ல மாமனாருப் பேருக்கு வெஸ்டர்ன் யூனியன்ல வாங்கிக்கிடுற மாதிரி அனுப்ப ஆரம்பிச்சாரு. சின்னவரு கையில பணம் பொரள ஆரம்பிச்சது. சின்னவரு யோசிக்க ஆரம்பிச்சாரு, இந்தக் காலத்துல இப்பிடி ஒரு மாப்புள்ளையான்னு. ஒரு வகையில மாப்புள துபாய்ல இருந்தாலும் மவளுக்காக அவரு வூட்டோட வந்த மாப்புளன்னு நெனைச்சுச் சந்தோஷப்பட்டுக்கிட்டாரு. மாப்புள்ள தம் பேருக்கு அனுப்புற காசிக்கு விசுவாசம இருக்கணுமேன்னு பொண்ணு சுவாதி பேர்ல ராயநல்லூர்ல ஒரு எடத்தெ வாங்கிப் போட்டாரு.
            வேலங்குடியிலயே ஒரு எடத்தை வாங்கிப் போட்டிருந்திருக்கலாம் சின்னவரு. ஆனா அவரு வேலங்குடியிலேந்து கப்பிப் பேந்துப் போன ரோட்டு வழியா மெயின்ரோட்டுக்கு நாலைஞ்சு பர்லாங்குல்ல நடக்கணும், வண்டியில போவலாம்னாலும் தடுமாறில்லா விழுவணும். அந்தச் செருமம் நம்மோட போவட்டும்னு நெனைச்சவரு மவளுக்கு மெயின்ரோட்டுக்குப் பக்கத்தாப்புல இருக்குற ராயநல்லூர்ல வாங்கிப் போட்டாரு. வூட்டுலேந்து டவன்னா வடிவத்துல எரநூறு அடி தூரம் சந்து வழியா போயித் திரும்புனா பஸ் ஸ்டாப்பு வந்துப்புடும். அப்படிப்பட்ட எடமா வாங்கிப் போட்டாரு. எடம்ன்னா எடம் பெரும் எடம். தாராளமா நாலு வூடு கட்டிக்கிடலாம்ங்ற அளவுக்கு. வர்றது வெளிநாட்டுக் காசி. எடத்தெ வாங்கிப் போடுறதுல எந்தப் பணப் பிரச்சனையும் இல்லாம, கேட்ட காசியக் கொடுத்து வாங்கிப் போட்டாச்சு. அதுல இன்னொண்ணு திட்டம் என்னான்னா, பிற்பாடு புள்ளைகளுக்கு யாருக்காவது வூடு கட்டணும்ன்னா மருமவங்கிட்டெ பணத்தெ கொடுத்துப்புட்டு வூட்டை அங்கத்தாம் கட்டணும், வேலங்குடியில கட்டப்படாதுங்ற நோக்கத்துலயும் வாங்கிப் போட்டுருந்தாரு சின்னவரு.
            ராசேந்திரம் அத்தானுக்கு ஒரு கொணம் என்னான்னா வருஷத்துக்கு ஒரு தவாவோ, ரண்டு வருஷத்துக்கு ஒரு தவாவோ பயணத்துலேந்து திரும்பும். ஒரு மாசமோ ரண்டு மாசமோ ஊர்ல தங்கிருக்கும். திரும்பவும் பயணத்துக்குக் கெளம்பிடும். அப்பிடி துபாய்க்கும் வேலங்குடிக்கும் வந்துப் போனதுல மொதோ ஒரு பொம்பளைப் புள்ளைக்குப் பெறவு ரண்டாவதா ஒரு பொம்பளைப் புள்ள ஆனுச்சு. ரெண்டாவது புள்ளைக்கும் பொறந்த வூட்டுலேந்து பெரசவம் ஆவுற பாக்கியம் சுவாதி அத்தாச்சிக்குத்தாம் வாய்ச்சுது. ரண்டு பொம்பள புள்ள ஆன பெற்பாடு மூணாவது ஒரு ஆம்பளெ புள்ள ஆனப்பயும் அதோட பெரசவமும் ஆயி வூட்டுல ஆவுற அதிர்ஷ்டமும் அடுத்ததா சுவாதி அத்தாச்சிக்கு வாய்ச்சுது. மொத்தத்துல சுவாதி அத்தாச்சி கலியாணம் ஆயி புகுந்த வூட்டுல இருந்ததுன்னா ஒரு ஏழெட்டு மாசம் இருக்கும் அவ்வளவுதாங். மித்தபடி பொறந்துலேந்து அதுக்குக் கொழந்தைங்க மூணு இப்போ பொறந்தது வரைக்கும் அதுக்கு பொறந்த வூட்டுலயே இருக்குற சாதகம் அமைஞ்சிப் போச்சு.
            ரண்டு பொம்பள புள்ளெ, ஒரு ஆம்பளெ புள்ளன்னு ஆனதும், பொம்பளெப் புள்ளைகள கரை சேக்குறாப்புல நகை நட்ட சேக்கணும், ஆம்பளெ புள்ளைய நல்ல வெதமா படிக்க வைக்கணும், அதுக்கெல்லாம் காசில்லாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னுனு சொல்லிக்கிட்டு ராசேந்திரம் அத்தான் அது பாட்டுக்கு துபாயில ஒரு காலுமாவும், வேலங்குடியில ஒரு காலுமா நின்னுகிட்டு இருந்துச்சு. என்னவோ வருஷத்துக்கு ஒரு தவா டூருக்கு ஊருக்கு வந்துட்டுப் போறாப்புலத்தாம் ராசேந்திரம் அத்தான் வந்துட்டுப் போயிட்டுக் கெடந்துச்சு. புள்ளெ குட்டிகள வளக்குற அத்தனெ பொறுப்பும் சின்னவரு தலையிலயும், ரசா அத்தை தலையிலயும் விழுந்துச்சு. 

            பேரன் பேத்தின்னு ஆனதுக்குப் பிற்பாடு, ஒவ்வொரு வருஷமும் மருமவன் அனுப்புற காசிலேந்து சின்னவரு ஒவ்வொரு வேலையா செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு வருஷம் ரெண்டு வூடு கட்டுற அளவுக்கு அஸ்திவாரத்தெ போட்டாரு. அதுல செலவான காசியப் பாத்துப்புட்டு ரண்டு வூட்டுல ஒண்ணோட அஸ்திவாரத்தெ அப்பிடியே போட்டுப்புட்டு, மறுவருஷம் இன்னொண்ணுல மட்டும் வூட்டை எழுப்பி ஒட்டிப் போட்டாரு. ஒரு வருஷம் பூரா சிமெண்ட் போஸ்ட்டை வாங்கிப் போட்டு கம்பி வேலிய வெச்சி வாங்குன எடம் மொத்தத்தையும் அடைச்சாரு.
            ஒரு வருஷம் வேலங்குடியில கொஞ்சம் வயலுகள மக பேருக்கு வாங்கிப் போட்டாரு. கட்டிப் போட்ட வூட்டை ஒரு வருஷம் பூச்செல்லாம் மொறையா பூசி ராயநல்லூர்ல வூட்டைக் கட்டி முடிச்சி வேலைய முடிச்சாரு. வூட்டுக்கான வேலை முடிஞ்சதும் மவளைக் கொண்டு போயி அங்க ராயநல்லூர்ல குடி வெச்சாரு. அவரு மவளைக் கொண்டு போயி வெச்ச நேரம் பேத்திக வளந்து திருவாரூரு இங்கிலிபீஸூ பள்ளியோடத்துக்குப் போவ ஆரம்பிச்சிதுங்க. இத்தனைக்கும் அவரு ராயநல்லூர்ல கட்டுன வூட்டுக்குப் பக்கத்துலத்தாம் அரசாங்கத்துப் பள்ளியோடம் இருந்துச்சு. இந்த வூட்டுலேந்து அந்தாண்ட தாவிக் குதிச்சா பள்ளியோடத்துல போயி உக்காந்துப்புடலாம். இருந்தாலும் பேத்திகள அதுல படிக்க வைக்கக் கூடாதுன்னு நெலையா நின்னு திருவாரூர்ல வேன்ல போயிட்டு வார்றாப்புல இங்கிலீபீஸ் பள்ளியோடத்துல மெனக்கெட்டுக் கொண்டு போயிச் சேத்துப்புட்டு வந்தாரு. வெளிநாட்டுலேந்து மருமவன் அனுப்புன காசிய படிப்புக்காக வாரி எறைச்சாரு.
            பேத்திகளுக்கும் ராயநல்லூர்லேந்து வேன்ல போயிட்டு வாரதுக்கு அந்த வூடு கட்டுனது ரொம்பவே வசதியா இருந்துச்சு. அதுல ரொம்ப பெருமெ சின்னவருக்கு. பேத்தியோ என்னமா தாட் பூட்டுன்னு சட்டையையும் பூட்டையும் போட்டுட்டு, பின்னாடி பேக்கைத் தூக்கிட்டு வேன்ல போவுதுங்கோன்னு சொல்லிப் பூரிச்சிப் போனாரு சின்னவரு. அடுத்த கொஞ்ச வருஷங்கள்ல பேரனும் தாட் பூட்டுன்னு சட்டையும் பூட்டுமா பேக்குமா படிக்கப் போனாம். சின்னவருக்கு இருப்பு கொள்ளல. பேரன் படிச்சி கலெக்டரு ஆயிடுவாம், பேத்திகப் படிச்சி டாக்கடருங்க ஆயிடும்னு வெத வெதமா கனவு காண ஆரம்பிச்சாரு.
            பேரன் பேத்திக படிப்புக்காகப் போயிட்டு வர்றதுக்கு மட்டுமில்லாம, திருவாரூரு போயிட்டு வர்றதுக்கும் ராயநல்லூரு ரொம்ப வசதி. பக்கத்துலயே பஸ் ஸ்டாப்பு. அங்கேருந்து பஸ் ஏறுனா நேரா திருவாரூர்ல போயி எறங்கிடலாம். அங்கயிருந்து பஸ் பிடிச்சி ஏறுனா நேரா ராயநல்லூரு ஸ்டாப்புல எறங்கி வூட்டுக்கு வந்துப்புடலாம். ராயநல்லூர்ல இப்பிடி வூட்டைக் கட்டி, அங்கேயிருந்து வேலங்குடிக்கு சைக்கிள்ல வர்றப்போ சின்னவருக்கு நெஞ்சு நிமுந்துக்கும். பாத்தியாடா நம்மட பவுசுங்ற மாதிரிக்கி எதுர்ல படுற ஆளுககிட்டெ பேச ஆரம்பிச்சிடுவாரு. "மருமவ்வன்னா நமக்கு வாய்ச்ச மாரில்லா இருக்கணும். இன்னமும் வரவு செலவு கணக்குல்லாம் நாம்மத்தாம். பேரன் பேத்திகள என்னமா படிக்க வெச்சிட்டு இருக்கிறேம் தெரியுமா? படிக்குறதுக்குன்னே டானிக்லாம் வாங்கிக் கொடுக்குறேம்டா!"ன்னு அளந்து தள்ளிப்புடுவாரு.
            சின்னவரு மவளக் கொண்டு போயி ராயநல்லூர்ல குடிவெச்ச பெற்பாடு அவரோட பெரும்பாலான நாட்கள் அங்கத்தாம் ஓடுனுச்சு. ரசா அத்தையும் அங்கத்தாம் எப்பவும் தங்கிடுச்சு மவளுக்கும், பேத்திக்கும் சோறாக்கிப் போட்டுகிட்டு. பள்ளியோடம் கெளம்புற பேரன் பேத்தியோளுக்குச் சாப்பாட்டைச் செஞ்சு போட்டு, சாப்புட வெச்சி, மத்தியானத்துக்கும் சேத்துச் சோத்து மூட்டையக் கட்டி வுட்டு, பூட்‍டுக்குள்ள கால திணிச்சி, சட்டையில டைய்யல்லாம் கட்டி வுட்டு அதுகள வேன்ல கொண்டு போயி அடைச்சிட்டு வாரதுன்னு சாமானிய வேலையா? காலையிலயே அஞ்சு மணிக்கு வேலைய ஆரம்பிச்சத்தாம் ஏழரை மணிக்கெல்லாம் பாம் பாம்ன்னு அடிக்குற வேனுக்குள்ள புள்ளீயோள ஏத்தி வுட முடியும்.
            கொஞ்ச நாளு ரசா அத்தை வேலங்குடியும், ராயநல்லூருமா இருந்துப் பாத்துச்சு. மாறி மாறி இருந்ததுல அங்க வேலங்குடியில சமைச்சும், இங்க ராயநல்லூர்ல சமைச்சும் ரெண்டு எடத்துலயும் சமைச்சு அலுத்துப் போச்சுது ரசா அத்தைக்கு. காலையில விடிஞ்சதும் விடியாதுமா அஞ்சு மணிக்குள்ள எழும்பி வேலங்குடியிலேந்து இந்தக் கப்பிப் பேந்த ரோட்டுல சின்னவரோட சைக்கிள்ல உக்காந்துகிட்டு டார்ச் லைட்ட அடிச்சிக்கிட்டு ராயநல்லூரு போயிட்டு வர்றது செருமமா வேற இருந்துச்சு. பாத்துச்சு ரசா அத்தை அங்கயும் சமைச்சு, பாத்திரங்களக் கழுவி, இங்கயும் சமைச்சுப் பாத்திரங்கள கழுவி, போயிட்டு வாரதுலயும் பெரும்பாடு ஆயி செருமப்படுறதுக்கு, ராயநல்லூர்லயே தங்கிப்புடுறதுன்னு முடிவு பண்ணி அங்கயே தங்கிடுச்சு. ஒரு நாளு கெழமன்ன மட்டுந்தாம் வேலங்குடிக்கு வர்றதுன்னு ஆச்சுது. அத்தோட வாரத்துல ரண்டு நாளு, மூணு நாளுன்னு வேலங்குடிக்கு வர்றது, வந்து வூட்டெ கூட்டுப் பெருக்கிச் சுத்தம் பண்றது,  சித்தெ நேரம் படுத்துக் கெடந்துட்டு திரும்ப ராயநல்லூரு கெளம்பிடுறதுன்னு ஒரு வழக்கத்துக்கு வந்திடுச்சு ரசா அத்தை.
            சின்னவரு வேலங்குடியில காலங்காத்தால குளிச்சிட்டுக் கெளம்புனார்ன்னா பகல் முழுக்க ராயநல்லூரு மக வூட்டுலத்தாம் தங்குறது. ராவான்னா மட்டும் ராத்திரி சாப்பாட்ட சாப்புட்டுப்புட்டு ராயநல்லூர்லேந்து கெளம்பி வேலங்குடிக்கு வூட்டுல வந்து படுத்திருந்துப்புட்டு பொழுது விடிஞ்சதும் குளிச்சி முடிச்சிப்புட்டு மொத வேளையா ராயநல்லூரு மவ வூட்டுக்குக் கெளம்பிடுவாரு. இப்பிடித்தாம் ராயநல்லூர்ல மவளுக்கு வூடு கட்டுனதிலேந்து அவருக்குப் பொழுது ஓட ஆரம்பிச்சிது. அப்பிடி வேலங்குடிக்கு வந்துட்டுப் போயிட்டு இருந்தவரு, பெரியவரு செத்த சேதி தெரிஞ்சதும் அன்னிக்கு ராத்திரி வேலங்குடி வராம அங்க ராயநல்லூரு மக வூட்டுலயே தங்கிட்டாரு.
            "என்னப்பா இன்னிக்கு ராத்திரி வேலங்குடி போவலியா?"ன்ன மக சுவாதி கேட்டதுக்கு, சின்னவரு சொன்னாரு,     "அந்த வெனைப் புடிச்ச குமாரு பயலுக்குக் கலியாணம் முடிங்ச கையோட சென்னைப் பட்டணம் போவணும்னு நின்னாம்ல எங் கூட பொறந்த வெனை அதாங் அந்த அயோக்கியப் பயெ எங் அண்ணங்கார்ரேம் ஒம்மட பெரியப்பங்கார்ரேம்! அந்த வெனை கடைசியா உசுரோட வேலங்குடி வந்து சென்னைக்குத் திரும்புச்சுல்ல, இப்போ அத்து உசுரு இல்லாம பொணமா திரும்புதாம். அஞ்ஞப் போயிக் கெடந்தா எட்டிப் பாக்கலேங்ற கொறை வரும். ஏம் அந்தக் கொறைக்கு நாம்ம எடம் கொடுக்கணும்? அந்த வெனைப் போயி காட்டுல அடங்கட்டும், நாம்ம வூட்டுப் பக்கம் போறேம்!"ன்னாரு சின்னவரு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...