20 May 2020

முகம் பார்க்க முடியாது!

செய்யு - 454        

            வேலங்குடி பெரியவரோட சாவுக்குச் சொந்த பந்தம், ஊருக்காரவுங்க, ஒண்ணு விட்ட ஒறவுக்காரங்கன்னு எல்லாரும் வந்த பிற்பாடும் வராத ஒருத்தரு யாருன்னா பார்த்தா அது வேலங்குடி சின்னவருதாம். கடெசியா ஒரு மொறை தம்பிக்கார்ரேன் வந்து பாக்காம அண்ணங்கார்ரேன் சடலத்தை எப்பிடி எடுக்குறதுன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிட்டாங்க. கிராமத்துல அப்பிடிச் சில நடைமுறைகளைப் பாக்கத்தாம் செய்வாங்க. அவசர அவசரமா செத்துட்டாலும் அவசர அவசரமா போயி காட்டுல உக்காந்துட முடியாது. பாக்க வேண்டிய எல்லாம் மொகம் பாத்த பிற்பாடும் பொணத்தைக் கொண்டு போயி வைக்க வேண்டிய எடத்துல வைப்பாங்க. பாக்க வேண்டியவங்கள்ல ஒருத்தரு ரெண்டு பேரு தொலைதூரத்துலேந்து வர தாமசம் ஆனாலும் அவரு வந்து மொகம் பாக்குற வரைக்கும் அப்பிடியே காத்திருப்புலத்தாம் கெடக்கும் பொணம். ஒரு மனுஷன் செத்தப் பின்னாடியும் நாறாம காடு போயிச் சேர்றது ஒறவுக்காரவுங்ககிட்டதாம் இருக்கு.
            உசுரோட இருக்குறப்ப ஒரு மனுஷன வந்து பாக்குறோமோ இல்லியோ, செத்த பிற்பாடு மொகம் பாக்குறது ரொம்ப முக்கியம். எல்லாரும் மொகம் பாத்த பிற்பாடுதாம் பொணம் பொறப்பட்டாக வேணும். அப்பிடி மொகம் பாக்க முடியாத நெல வந்துடக் கூடாதுன்னுத்தாம் யாரும் கடல் கடந்துல்லாம் பயணம் போகக் கூடாதுன்னு ஒவ்வொரு குடும்பத்துலயும், குல முறையிலயும் ஒரு வழக்கமே இருந்ததா சொல்லுவாங்க. கடல் கடந்துப் போனவருக்குச் சாவு சேதி சொல்றதும் கஷ்டம், அவரு சேதி தெரிஞ்சி வந்துப் பாக்குறதும் கஷ்டம். கடல் கடந்துப் போனவரு வருவாருன்னு நெனைச்சிக்கிட்டு எத்தனெ நாளுக்கு பொணத்தை நடுவூட்டுல போட்டுட்டு உக்காந்திருக்க முடியும்?
            இப்பிடில்லாம் மொறை தலை பாக்குற வழக்கத்துல ஒடன் பொறந்த தம்பிக்காரனா இருந்துகிட்டு வந்துப் பாக்கலன்னா அதெ எப்பிடி எடுத்துக்கிடுறது? செரி தம்பிக்காரனா வேணாம், பக்கத்து வூட்டுக்காரனா ஒரு எட்டு வந்து மொகத்தப் பாத்துட்டுப் போனா கூட விசயம் முடிஞ்சிப் போயிடுச்சு. செரி பக்கத்து வூட்டுக்காரனா கூட வேணாம், தெருக்காரனா, ஊருக்காரனா வந்து பாத்துட்டுப் போனா கூட விசயம் முடிஞ்சிடுச்சு. கஷ்ட நஷ்டத்துல மொகம் கொடுத்து பாக்காம இருக்குறதெ கூட யாரும் பெரிசா நெனைச்சிக்கிறதில்ல. சாவுக்கு வந்து மொகம் பாக்காம இருக்குறதெ பெரிசாத்தாம் நெனைக்குறாங்க.
            உசுரோட இருக்குறப்போ ஒரு மனுஷன மொகம் கொடுத்துப் பாக்குறதுல, பேசுறதுல பிடிச்சிருக்கும், பிடிக்காம இருக்கும். அதெ மனுஷருக்கு மனுஷரு ஏத்துக்காம இருக்க முடியாது. செத்துப் போன ஒரு மனுஷனோட விசயத்துல பிடிச்சிருக்கு, பிடிக்கலங்ற எல்லாமும் அந்த மனுஷனோட செத்துப் போயிடுறதால அந்த மொகத்தப் பாத்தே தீரணும். எடுக்கப் போற கடெசி நேரத்துலயாவது வந்துப்புடுவார்ன்னுத்தாம் எழவு வூட்டுல உக்காந்திருந்த அத்தனெ சனங்களும் உக்காந்திருங்க. "பாக்க வேண்டிய ஆளுக எல்லாம் பாத்தாச்சுன்னா கெளம்ப வேண்டிய பொணம் கெளம்பிப் போயிட்டே இருக்கும்!"ன்னு சாவுப் பந்தல்ல உக்காந்துகிட்டு நாலு கிராமத்துப் பெரிசுங்க பேசிகிட்டுக் கெடந்துச்சுங்க.
            ஒரு கலியாணம், காதுகுத்தலு, சடங்கு, வளைகாப்புன்னா பாக்கு வெத்தலெ மொய்ப்பணம் எல்லாம் வெச்சிக் கொடுத்து வந்துட்டுப் போங்கன்னு அழைப்புல்லாம் கொடுத்து வாரச் சொல்லலாம். சாவுக்கு அப்பியெல்லாம் எப்பிடிக் கூப்புடுறது? சேதி தெரிஞ்சிட்டுன்னா வர வேண்டியவங்க வீணா அலம்பல் பண்ணிட்டு இல்லாம வந்து நின்னுப்புட்டுப் போயிடணும். ஆனா நேரம் ஆயிட்டுப் போவுது. சின்னவரே காங்கலையே.
            "இப்பிடியே எம்புட்டு நேரந்தாம் பொணத்தெ கெடத்துறது? கெராமத்துலேந்து போயி நாலு பேரு பாத்துப்புட்டு என்ன ஏது? ஆளு அஞ்ஞ நல்லூர்ல இருக்கா? இல்லியா? என்ன ஏது சேதின்னு அறிஞ்சிட்டு வாங்கப்பா! நாளைக்கி நாம்ம மொகம் பாக்காம எடுத்துப்புட்டதா வழக்கு ஆயிடப்படாது!"ன்னாரு ஊருக்கார நாட்டாமெ. அதுப்படி நாலு பேரு கெளம்பி ராயநல்லூரு சுவாதி அத்தாச்சி வூட்டுக்குப் போனா, சின்னவரு வூட்டை விட்டு வெளியில வர மாட்டேங்றாரு.
            "வெளியில வந்து ஒரு வார்த்தெ சொல்லிப்புட்டா மேக்கொண்டு முடிவெ பண்ணிப்புடலாம். கூடப் பொறந்த ஒடம்பொறப்போட சாவுங்றப்போ மின்னாடி நின்னு ஆவ வேண்டிய காரியத்தெ பாக்காம இப்பிடி சமைஞ்ச பொண்ணாட்டம் வூட்டுக்குள்ளார உக்காந்துகிட்டா ன்னா அர்த்தம்?"ன்னு போன நாலு பேர்ல ஒருத்தரு உள்ளார கொரலு கொடுத்துப் பாத்தாரு.
            சின்னவரும் உள்ளார இருந்து கொரலு கொடுத்தாரு, "நம்மள எதிர்பாக்க வாணாம். ஆவ வேண்டிய காரியத்தெ பாக்கலாம்!"ன்னு.

            போயிக் கேட்டவங்களுக்குக் கடுப்பாயிடுச்சு. "எத்தா இருந்தாலும் வெளியில வந்து மொகங் காட்டிப் பேசோணும். இப்பிடி உள்ளார உக்காந்துப்புட்டு அவமதிக்கிறாப்புல பேயக் கூடாது. பெறவு கெராமக் கூட்டம் போட்டு வெசாரிக்கிறாப்புல ஆயிடும்!"ன்னு ஒருத்தரு சொன்ன பிற்பாடுதாம் சின்னவரு வூட்டை வுட்டு வெளியில வந்தவரு.
            "நமக்கு அவ்வேம் அண்ணணும் யில்ல. நாம்ம அவனுக்குத் தம்பியும் யில்ல. அப்பவே கண்ணதாசன் பாடி வெச்சுப்புட்டாம், அண்ணன் ன்னடா? தம்பி ன்னடா? அவசரமான ஒலகத்திலேன்னு. அவ்வேம் ன்னா அண்ணேன்? நமக்கு அண்ணனா இருக்க தகுதியே இல்லாதவேம். அவனுக்கும் நமக்கும் வேலிச் சண்டெ வந்தப்போ யாரு வந்து ஞாயம் பண்ணா? எம்மட பொண்ணு ஓடிப் போன பெரச்சனையில என்னத்தெ யாரு வந்து ஞாயம் பண்ணா? அன்னிக்குல்லாம் கெடக்கணும்னு விட்டுப்புட்டு, இன்னிக்கு அந்தச் சந்தானம் பயெ ஒஞ்ஞளுக்கு ஒரு கோயில்ல கட்டிக் கொடுத்துப்புட்டாம், வூட்டெ பெரிசா கட்டிப்புட்டாம்ன்னு, பொணத்தெ தூக்கி அந்தாண்ட போட்டா ஆளாளுக்கு சரக்கெ வாங்கிக் கொடுப்பாங்றதுக்காக பேச வந்துப்புட்டீங்களா?"ன்னாரு சின்னவரு.
            "நடுவூட்டுல பொணத்தப் போட்டுட்டுக் கூப்புட வந்திருக்கோம். இப்பிடில்லாம் கூப்புடறது எந்து ஊருலயும் மொறையில்ல. மொறைகெட்ட தனமாத்தாம் வந்திருக்கேம். அத்தெ ஒத்துக்கிடுறோம். ஆனது ஆயிப் போச்சு. அதெ பேசுறதுக்கு இத்து நேரமில்ல. வந்தா ஒறவு நெலைக்கும். இல்லன்னா ஒறவு வெட்டுன்னாப்புல போயிடும். கெராமத்துல அப்பிடில்லாம் எல்லாத்துலயும் பாத்துட்டு வுட்டுக்கிட்டு இருக்க முடியாது. நெதானிச்சு ஒரு முடிவெ எடுக்கணும்!"ன்னாங்க வந்தவங்கள ஒருத்தரு.
            "அதாஞ் சொல்லிட்டேம்ல. இப்பிடி ஆவும்ணுத்தாம் நாம்ம வூட்டை வுட்டு வெளியில வரல. வந்ததுக்கு சிண்டெ முடிஞ்சி வுட்டுப்புட்டு, சண்டெ பிடிச்சிட்டு நிக்குறீங்க?"ன்னாரு சின்னவரு.
            "அண்ணேம் தம்பிங்ற கூடப் பொறந்த ரத்தம், ஒறவுங்றதுக்காக கூட வர வாணாம். ஊருக்கார்ரேங்ற மொறையில வந்துத் தலையக் காட்டிட்டுப் போறதுதாங் நல்லது. நாளைக்கி நல்லது கெட்டதுன்னா ஊரு வேணும் பாத்துக்கிடுங்க ஆச்சாரி! இப்போ இதெ வுட்டுப்புட்டு பெறவு பொடணியில அடிச்சிட்டு பின்னாடி அழுவுறதுல அர்த்தம் இருக்காது!"ன்னாங்க கடெசீயா ஒரு மொறை எச்சரிக்கிறாப்புல கூப்புடப் போனவங்க.
            சின்னவரு அசைஞ்சுக் கொடுக்கல. "இத்துப் பரம்பரைப் பகை. பத்து நிமிஷத்துல ஞாயம் பண்ணிட முடியாது. அவ்வேம் நமக்கு வாணாம், நாம்ம அவனுக்கு வாணாம்ன்னு எழுதி வெச்சிக்கிட்ட சாசனம். அவ்வேம் சாவுக்கு நாம்ம போவக் கூடாது. ஒருவேள நாம்ம செத்திருந்தா அவனும் வாரக் கூடாது. சோத்துல உப்பப் போட்டுத் திங்குறவேம் அதெத்தாம் செய்வாம். மானங்கெட்ட பயன்னா எதெ வேணாலும் செய்வாம். இத்து எஞ்ஞ ரண்டு குடும்பத்துக்குள்ள இருக்குற பெரச்சனெ. இத்தெ ஊருப் பெரச்சனையாக்கிக் குளிரு காயலாம்ன்னு நெனைக்காதீயே. எங் குடும்பத்துக்கு அவ்வேம் வாணாம். அவ்வேம் குடும்பத்துக்கு நாம்ம வாணாம். எஞ்ஞ ரண்டு குடும்பத்துக்கு எடையில ஒட்டும் கெடையாது, ஒறவும் கெடையாது. ஒட்டும் ஒறவும் இல்லாதவேம் வூட்டுக் காரியத்துக்கு நாம்ம வாரணும்னு ஏம் நெனைக்குறீயே? அவ்வேம் வூட்டுத் தேவைக்கு நம்ம வூட்டுலேந்தோ, நம்ம வூட்டுத் தேவைக்கு அவ்வேம் வூட்டுலேந்தோ வர்றது என்னிக்கோ அந்துப் போச்சு. அந்துப் போனது அந்துப் போனதுதாம். ஒடைஞ்சிப் போன கண்ணாடியெ ஒட்ட வெச்சா நல்லா இருக்காது. துண்டுப் போட்ட மரத்துண்டெ திரும்ப மரத்துல ஒட்ட வெச்சா நல்லா இருக்காது. வெலகுனது வெலகுனதுதாங். வெட்டுனது வெட்டுனதுதாங். சாவை வெச்சி ஒட்ட வைக்க நெனைக்காதீங்க. அப்பிடி ஒட்ட வைக்க நெனைச்சா சாவு வுழுவுறதெ யாராலயும் தடுக்க முடியா. உள்ளெ கெடக்குற உளிய எடுத்தாந்து எவ்வேம் நெஞ்சுல பாய்ச்சுவேம்ன்னு நமக்கே தெரியாது!"ன்னாரு பாருங்க சின்னவரு, அவரு மின்னாடி நின்னா நாலு பேரும் இருந்த எடம் தெரியாம எடத்தெ காலி பண்ணிட்டு வந்துப்புட்டாங்க.
            "பொணத்தெ வந்துப் பாத்துப்புட்டுப் போயான்னா, நம்மள பொணமாக்கிப் புடுவேம்ன்னு பேசுறாம்யா கிட்டான் ஆச்சாரி! ன்னா கொழுப்புங்றே? ஊருல வெச்சிச் செஞ்சாத்தாம்யா செரிபட்டு வருவாம். செத்த பின்னாடி என்னய்யா பகெ வேண்டிக் கெடக்கு? ஆளே போயிட்டாம் இஞ்ஞ. பகையாமுல்ல பகையாம்? மனுஷன் செத்துப் புகையா போன பெற்பாடு எந்தப் பகைய வெச்சி என்னத்தெ ஆவும்? செத்தப் பின்னாடி சேத்து வெச்சிருக்குற பொருளையே எடுத்துட்டுப் போவ முடியல. பகைய எடுத்துப் போறானாமுல்ல. நாம்மப் போயிக் கூப்புடதுக்கு அவ்வேம் அலறி அடிச்சிட்டு வந்திருக்கணும்யா! ஊரு கட்டுமானம் செரியில்லே!"ன்னாங்க சின்னவரோட வூட்டுக்குப் போயிட்டு வந்தவங்க.
            கடெசீயா கிராமத்துப் பெரிசுங்க மத்தியில ஒரு பேச்சு நடந்துச்சு. கிராமத்துச் சார்பாவும் பேச வேண்டியதெ பேசி ஆயிடுச்சு. அதுக்கு மேல அம்மாம் பிடிவாதம் பண்ற மனுஷனெ ஒண்ணும் பண்ண முடியாதுன்னும், ஆத்தோட போறன்னு நிக்குற மனுஷன என்னத்தெ கையக் கொடுத்து தூக்கி வுடுறதுன்னும் பேசிக்கிட்டாங்க. இருந்தாலும் கடெசீ ஒரு முயற்சியா ஒறவுமொறையிலேந்து யாராச்சியும் ஒருத்தரெ வுட்டுப் பேசிப் பாத்துப்புட்டா நல்லதுன்னு முடிவு பண்ணாங்க. கொஞ்சம் பொறுத்துப் போறதால ஒண்ணும் கெட்டுப் போயிடப் போறதில்லன்னு கொதிச்சுப் போயி நின்ன ஆளுகளெ சமாதானமும் பண்ணாங்க. ஒறவு மொறையிலேந்து ஒருத்தர்ர அனுப்பிப் பேசுறதுன்னா, யார்ர அனுப்புறதுன்னு யோசிச்சப்போ சுப்பு வாத்தியாருதாம் அதுக்குச் சரியான ஆளு, பேசுறதுக்கான்ன மொறையுள்ள ஆளுன்னு அவரையே தேர்வு பண்ணி அனுப்புனாங்க கிராமத்துல.
            அனுப்புறப்போ ஒரு விசயத்தைச் சொல்லித்தாம் அனுப்புனாங்க, "இத்து ஒஞ்ஞ ஒறவுமொறையிலயே நீஞ்ஞளே பேசிச் சரிபண்ணிக்கிட வேண்டிய வெசயம். இப்பிடிக் கிராமம் தலையிடுறாப்புல நடக்குறது ஏத்தாப்புல படல. இருந்தாலும் பாருங்க நாளைக்கு கிராமத்து மேல சடவு வந்துப்புடக் கூடாது. பண்ண வேண்டியதெ பண்ணுணோம், ஆவ வேண்டிய ஆத்துனோங்ற பேருத்தாம் கிராமத்துக்கு இருக்கணும். பெசிக் கொண்டார முடியுமான்னு பாருங்க!" அப்பிடின்னு.
            சுப்பு வாத்தியாரும் அவுங்ககிட்டெ ஒரு விசயத்தைச் சொல்லிட்டுத்தாம் கெளம்புனாரு. "நாம்ம இஞ்ஞ வாரதுக்கு மின்னாடியே அஞ்ஞ வந்துட்டுத்தாம் இஞ்ஞ வந்தேம். அப்பவே ஒரு வார்த்தெ வந்துத் தலையக் காட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டுத்தாம் வந்தேம்! எப்பிடியும் வந்துப்புடுவார்ன்னுத்தாம் நெனைச்சேம். இப்பிடிப் பண்ணிட்டு உக்காந்திருப்பார்ன்னு நெனைக்கல. ஒறவுக்கார ஆளுங்கள்லயும் பல பேத்துப் போயிச் சொல்லிட்டுத்தாம் வந்திருக்காங்க. சாவு காரியத்துக்குல்லாம் இப்பிடி மல்லுகட்டிக் கூப்புட்டுட்டு நிக்கக் கூடாது. ஆன்னா நிக்க வேண்டியதா கெடக்கு. நாம்ம போயிப் பேசுனா மனசு மாறலாம்ன்னு நெனைக்குறீங்க. அப்பிடி ஒரு வாய்ப்போ சந்தர்ப்பமோ இருந்தா அந்த வாய்ப்புக்கும் எடம் கொடுத்துதாம் ஆவணும், அந்தச் சந்தர்ப்பத்துக்கும் எடம் கொடுத்துதாம் ஆவணும். கெளம்பிப் போயிப் பேசுறேம்!"ன்னுச் சொல்லிட்டுக் கெளம்புனாரு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...