19 May 2020

கொரோனா எனும் புதிய கலாச்சாரம்!

கொரோனா எனும் புதிய கலாச்சாரம்!

            கொரோனா என்பது சிங்கிளாக இருக்கும் வரைக்கும் அது சிங்கம் போல ராஜ மரியாதையோடு கவனிக்கப்படும் என்று நினைக்கிறேன். அதுவே பன்றிகளைப் போல கூட்டமாகி விட்டால் பன்றிகளுக்குக் கிடைக்கும் அதே மரியாதைத்தான் கிடைக்கும் போலிருக்கிறது.
            கூட்டம் குறைவாக இருக்கும் வரையில் மருத்துவமனைகளில் வைத்துப் பார்ப்பார்கள். கூட்டம் பெருகி விட்டால் வீட்டில் வைத்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகள் இருக்குமா என்று தெரியவில்லை.
            நமக்குப் பல நேரங்களில் உரிய மரியாதை கிடைக்காமல் போவதற்கு நாம் கூட்டமாகப் பல்கி இருப்பதுதான் காரணமோ என்ற நினைப்புத் தோன்றுவதுண்டு. நம் வீட்டி‍லேயே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் செல்லம் கொஞ்சுவார்கள். பத்துப் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அடி வெளுத்து வாங்குவார்கள். நம் வீட்டிலிருந்து நாடு வரைக்கும் ஒரே கலாச்சாரம்தான் போலிருக்கிறது.
*****
            சமீப நாட்களாக எதைப் பேச ஆரம்பித்தாலும் அது கோரோனாவில் சென்று முடிவது எதேச்சையாக நிகழ்கிறதா? திட்டமிட்டு நிகழ்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை.
            அன்று இயற்கை வேளாண்மை, ரசாயன உரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு பல விசயங்களில் சுழன்று கடைசியில் கொரோனாவில் வந்து முடிந்தது இப்படி, 'கோரோனாவை அழிக்கும் ஏதோ ஓர் உயிர் நம் இயற்கையில் இருந்திருக்கும். அது நமது ரசாயன மற்றும் பூச்சிக்கோல்லி பயன்பாடுகளால் அந்த உயிரி அழிந்து விட்டது!'
            அதற்குப் பிறகு ஒன்று புரிந்தது, கொரோனோ நம் ரத்தத்தோடு கலந்து விட்டதோ இல்லையோ, நாடி, நரம்பு, சதை, எலும்பு, பேச்சு என்று ஒன்று பாக்கியில்லாமல் கலந்து விட்டது என்பது.
*****
            கொரோனா கிரோனான்னு அதெ ஞாபகத்துல கடைத்தெரு போவும் போது மூக்குப்போடியும், கட்டப் போகையிலையும் வாங்கியாந்திட மறந்துடாதடா என்கிறார் தாத்தா. நமக்குக் கடைத்தெரு போகும் போது கொரோனா பயம் என்றால், தாத்தாவுக்கு மூக்குப்பொடியும், கட்டப் போகையிலையும் வாங்கிட்டு வர்ற மறந்துடுவாங்களோங்ற பயம். அவங்கவங்களுக்க அவங்கவங்க பயம். சர்வம் கொரோனா மயம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...