செய்யு - 451
குமாரு அத்தானோட கலியாணத்துல வந்த சனங்க
எல்லாம் பஞ்சம் பசி பட்டினியில அடிபட்டது போல நொந்து நூலாயி போறாப்புல ஆயிட்டுங்க.
தாது வருஷத்துப் பஞ்சத்துல அடிபட்ட சனங்க போல எல்லாம் பேசிட்டுப் போனதுங்க. குமாரு
அத்தானோட கலியாணத்த பண்ணி வெச்ச வெதத்துல சந்தானம் அத்தானுக்குக் கொஞ்சம் கெட்ட பேருதாம்.
"இவ்வேம் ன்னாட ஊரு கோயிலு கும்பாபிஷேகம், வூட்டுக் குடிபோறது எல்லாத்தையும்
நல்ல வெதமா பண்ணி வுட்டுப்புட்டு, தம்பிக்கார்ரேம் கலியாணத்தெ இப்பிடி பண்ணி வுட்டுப்புட்டானே?"ன்னு
சுப்பு வாத்தியாரு வெசனப்பட்டுக்கிட்டாரு. "எல்லாம் கோயிலு, வூடுன்னு நல்ல வெதமா
அமைஞ்சதுல கண்ணு பட்டாப்புல ஆயிடுச்சு மாமா. அதாங் இப்பிடியாயிடுச்சு!"ன்னு சந்தானம்
அத்தான் அதுக்கு ஒரு பதிலெச் சொன்னுச்சு.
கலியாணத்துக்குக் கெளம்பி வர்ற சனங்க எந்த
நேரத்துல கெளம்பி, எங்கேயிருந்து வருதுங்களோ, அதுகளுக்குக் கொஞ்சமாச்சும் சாப்பாடு
இல்லன்னா ஒடம்பும், மனசும் தொவண்டாப்புல ஆயி ஒடிஞ்சிப் போயிடுதுங்க. கலியாணத்துக்கு
வந்த சனங்க சாப்புடாம கெடக்குறது கூட அப்போ பெரியவருக்குப் பெரிசா தெரியல. ஒடனே சென்னைப்
பட்டணம் எப்பக் கெளம்பலாம்ன்னு சொன்னாரு பாருங்க அதெத்தாம் யாராலயும் தாங்க முடியல.
"அதாங் கலியாணம் முடிஞ்சிடுச்சுல்ல. அதது கதையெ இனுமே அததுத்தாம் பாத்துக்கிடணும்.
காலம் பூரா நாமளே கூடவே இருந்தா பாத்துக்கிட முடியும்? நீயி கெளம்புடா சந்தானம்!"ன்னு
நெலையா நிக்க ஆரம்பிச்சிட்டாரு. அவரு அந்த அளவுக்குப் போயி இருந்த இத்தனை நாள்ல சென்னைப்
பட்டணத்து ஆளு போலவே மாறிப் போயிட்டாரு. என்னவோ யாரோ வூட்டுக் கலியாணத்துக்கு வெசாரிக்க
வந்தவரு போல தலையக் காட்டிட்டு கெளம்பணும்னு குதியா குதிச்சாரு. அது ஒரு மனநெலை, அவருக்குன்னு
அவரே உருவாக்கிக்கிட்ட மனோதர்மம். வேலங்குடியிலயே இருக்கணும்ன்னு மின்னாடி அவரு நெனைச்சதும்
அப்பிடித்தாம், இப்போ சென்னைப் பட்டணத்துலயே இருக்கணும்னு நெனைக்குறதும் அப்பிடித்தாம்.
அவர்ர சமாதானம் பண்ணி ஒரு ரெண்டு நாளு வேலங்குடியில தங்க வைக்கிறது செருமமாப் போச்சு.
"இந்தக் கூத்தடிக்கிறதுக்கு இவர்ர
ஏம்டா இஞ்ஞ கொண்டாந்து அலமலந்துப் போறே? இதுக்குப் பேயாம அஞ்ஞயே வுட்டுப்புட்டு வந்தேன்னா
கலியாண பாரத்துல ஒண்ணு கொறைஞ்சிருக்கும்! இப்பிடி ஒரு மனுஷம் நின்னா கலியாண ஆன வூட்டுச்
சோலிகளப் பாக்குறதா? இவுகளப் பாக்குறதான்னு தெகைச்சில்லா நிக்க வேண்டிக் கெடக்கு.
அப்பிடியே பட்டினியா கொண்டு போயி அஞ்ஞ தள்ளு. மயக்கம் அடிச்சி வுழுவட்டும்!"ன்னு
செயா அத்தை மனசொடிஞ்சிப் போயி சொன்னுச்சு.
இப்படி ஒருத்தரு பேசுறப்போ சுத்தி இருக்குற
சனங்களும் அப்பிடியேவா பேச முடியும். அதெ சமாதானம் பண்ணுறாப்புல, "அதாங் குமாரு
பயலுக்கும் கலியாணம் ஆயிடுச்சுல்ல யக்கா! இனுமே இஞ்ஞ ஒனக்கு ன்னா சொலி? நீயும் அஞ்ஞப்
போயி யத்தானோட இருந்துக்கிடலாம் யக்கா! ஒனக்கும் ஒரு தொணையா ஆவும். யத்தானுக்கும்
ஒரு தெம்பாவும் ஆவும்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு செயா அத்தை சொன்னதைக் கேட்டுப்புட்டு.
"என்னடாம்பீ நீயி அவர்ர சமாதானம்
பண்ணுவேன்னு பாத்தா நம்மள கெளப்பி வுடுறதுல நிக்குறீயே? இந்த வயசுல அஞ்ஞப் போயி எப்பிடிடா
கெடக்க முடியும்? அவருதாங் புத்தி வதியழிஞ்சுப் போயிச் சொல்றார்ன்னா நீயி அதுக்கு
மேல கெளம்புறே? இஞ்ஞ கெடக்குற மாடு கன்னுக, நெல புலத்தையெல்லாம் எப்பிடிப் பாக்கணும்ன்னு
மருமவ்வேகிட்டெ சொல்லிக் கொடுத்துப்புட்டுத்தாம் கெளம்பணும்டா! ஒரு நாளு, ரண்டு நாளுல்ல
உருவானதில்லடாம்பீ இத்து! காலாங்காலமா ஒழைச்சிப் பாடுபட்டு உண்டு பண்ணது, உரு பண்ணது.
இனுமே அவுகளுக்கு அஞ்ஞ ன்னா வேல சொல்லு! அதாங் ஒரு மருமவ்வே வந்துப்புட்டுல்லா. அதெ
வேலயப் பாக்கச் சொல்லிப்புட்டு நாம்ம மேம்பார்வெ பாத்துக்கிட்டு இவரையும் பாத்துக்கிட்டுக்
கெடப்பேம் பாரு!"ன்னுச்சு செயா அத்தை.
"நீயி நெனைக்குற மாதிரி இல்லக்கா
யத்தானோட மனசு. அத்து மாறிப் போச்சு. யத்தானோட மனசு அப்போலேந்து பிடிவாதமான மனசு.
புள்ளையோ எல்லாம் இப்போ வசதியா இருக்குதுங்க. இந்த வசதி யில்லன்னா யத்தாம் இஞ்ஞ இருக்கக்
கூடிய ஆளுத்தாம். ஒரு புள்ளியோளும் நம்மளப் பாத்துக்கிட வாணாம், நாமளே நம்மளப் பாத்துக்கிடறேம்ன்னு
சொல்லக் கூடிய ஆளுத்தாம். அதெ நாம்ம ஒரு கொறையா சொல்லல. வயசும் ஆயிடுச்சு. ஒடம்பும்
பலவீனமா போச்சுது. சொகமா இருக்குற எடத்தெ மனசு நாடுறதெ தடுக்கறதுக்கில்ல. கடெசிக்
காலுத்துல இனுமே போயி புத்தியக் கொள்முதலு பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நிக்கப்படாது
பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெச் சொல்லு! புருஷனா? குடித்தனமா?ன்னு
பாத்தா நமக்கும் ரண்டு பக்கமும் நெலை கொள்ளல. செரி கொஞ்ச நாளு இஞ்ஞ இருந்து பாத்து
ஒரு வழியப் பண்ணி வுட்டுப்புட்டாவது அஞ்ஞப் போயித்தாம் கெடக்கணும். இதுகளுக்குப் பாக்க
வேண்டியதெயும் பாத்தாச்சி, பாடுபட வேண்டியதையும் பாடுபட்டாச்சு. எப்பிடிப் பாத்தாலும்
இன்னும் கொஞ்ச நாளு இஞ்ஞ கெடந்துத்தாம்டா ஆவணும்டாம்பீ!"ன்னுச்சு செயா அத்தை.
"போதும் போ யக்கா! பாடு பட்டதுல்லாம்
போதும். கடெசிக் காலத்துலயாவது கொஞ்சம் ஒடம்பு அடங்கி அசந்துப் போயிக் கெட. அதுக்கு
நீயும் சென்னைப் பட்டணம் போனாத்தாம் செரிபட்டு வரும். ஏன்னா அஞ்ஞத்தாம் நெலபுலம் இல்ல,
மாடு கன்னுகளும் இல்ல. இஞ்ஞ அதெல்லாம் இருக்கு. அத்து ஒங் கண்ணுல படுற வரைக்கும் ஒன்னாலயும்
ஓய்ஞ்சி ஓரிடத்துல உக்கார முடியா. இப்போ போவலன்னாலும் ஒரு மாசம் கழிச்சாவது ஒரு பத்து
நாளுக்குப் போயிக் கெடந்துட்டு வா. இஞ்ஞ ஒரு மாசம், அஞ்ஞ ஒரு மாசம்ன்னாவது மாத்தி
மாத்தி இருந்துட்டு வா யக்கா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நீஞ் சொல்றதுங் செரித்தாம். அதெ
பெற்பாடு பாக்கலாம். நீயி யத்தாம் கெளம்புற வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போயிட்டு
கெடடாம்பீ! அப்பத்தாம் நமக்குக் கொஞ்சம் மனசுக்குப் புரிஞ்சாப்புல இருக்கும். மனசும்
தெளிஞ்சாப்புல இருக்கும்!"ன்னுச்சு செயா அத்தை.
அதுப்படி சுப்பு வாத்தியரு சாயுங்காலம்
சாயுங்காலமா வேலங்குடிக்குப் போறதும் ராத்திரியில திரும்புறதுமா கெடந்தாரு.
சென்னைப் பட்டணம் கெளம்புறதப் பத்தி அவர்ர
யாரு எது சொல்றதுப் பத்தியும் பெரியவரு அலட்டிக்கல. கொறை சொல்றதெப் பத்தியும் கொறைபட்டுக்கல.
அவுங்க மனசுக்கு அவுங்க சொல்றாங்க, நம்ம மனசுக்கு நாம்ம சொல்றேம்ன்னு இருந்தாரு.
புதுசா கலியாணம் ஆன சோடிங்க உள்ள வூட்டுல
ஒரு ரெண்டு நாளாச்சியும் பெரியவங்க இருந்து நல்லது கெட்டது சொன்னாத்தானே அதுகளுக்கு
மனசுக்கு ஒரு தெம்பாவும், குடும்பத்தெ நடத்த அது ஒரு உபயோகமாவும் இருக்கும். பொண்ணு
மாப்புள அழைப்புன்னு ஒரு மூணு அழைப்புகள வேற செஞ்சி வுட்டு ஆவணும். பேருக்காவது அதைப்
பண்ணித்தாம் வுட்டாக வேண்டிக் கெடக்கு. மின்னாடி காலத்துல அதுக்கு ஒரு ஆழமான அர்த்தம்
இருந்திருக்கணும். இப்போ அதுக்கான அர்த்தமெல்லாம் போயி அந்தப் பழக்கத்த வுடவும் முடியாம,
செஞ்சிக்கவும் முடியாம அவசரக் கோலத்துல அதெ செஞ்சித் தொலைய வேண்டியதா இருக்கு. அதுக்குல்லாம் சேத்தாவது கொறைஞ்சது ஒரு ரெண்டு
நாளாச்சியும் இருந்துத்தாம் ஆவணும். அதுக்கு பெரியவர்ர பிடிச்சி நிறுத்தி வைக்கிறதுக்குள்ள
போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.
இந்த நடைமொறைகளையெல்லாம் செய்யுறதுல ரொம்ப
ஆச்சாரமா இருக்குற ஆளு அவரு. கலியாணத்துக்கான பலகாரங்கள செஞ்சி அதெ சொந்தக்காரங்களுக்குப்
பொட்டணம் கட்டிக் கொடுக்குறதிலேந்து, ஊர்ல இருக்குற சனங்க ஒவ்வொண்ணுத்துக்கும் வூடு
வூடா போயிக் கொடுக்குறது வரைக்கும் மின்னாடி நின்னு செய்வாரு. அவர்ரப் போல ஜாங்கிரிப்
போடுறதுக்கும், மைசூர்பா செய்யுறதுக்கும், இனிப்புச் சேவு பண்ணுறதுக்கும் ஆளில்ல.
பலகாரம் செய்யுறதுக்குன்னு உக்காந்துப்புட்டா எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிப்புட்டுத்தாம்
எழும்புவாரு. அவரோட உக்காந்து கூட மாட ஒத்தாசைப் பண்ற சனமெல்லாம் இடுப்பெ வலிக்குது,
முதுகெ வலிக்குதுன்னு பத்து தடவைக்கு மேல எழுந்திரிச்சி எழுந்திரிச்சிப் போயிட்டு
வந்துப்புடும். பெரியவரு பலகாரம் பண்ற செலையப் போல உக்காந்திருப்பாரு.
அதுக்குப் பெறவு சம்பந்தம் கலக்குறதுக்குக்
கறி விருந்து பண்ணி ஒறவுமொறைகள கலந்து வுடுறது வரைக்கும் கலியாண வூட்டுல தங்கி அதையெல்லாம்
முடிச்சி வுட்டுட்டுத்தாம் வூடு திரும்புற ஆளு அவரு. அந்தக் கறிவிருந்து சமையல்லயும்
அவரோட கை மணம் மணக்காம இருக்காது. அப்படிப்பட்ட ஆளு, அவர்ரா இப்பிடி மாறிட்டாருன்னு
வேலங்குடிச் சனங்களுக்கே ஆச்சரியமா போச்சுது அவரு நடந்துகிட்டெ மொறை. அந்த அளவுக்கு
சின்ன புள்ளெ கணக்கா அவரு அடம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. ஒரு சின்ன புள்ளைய வெச்சிச்
சமாளிக்கிறதெ வுட அவர்ர வெச்சிச் சமாளிக்கிறது பெரும்பாடா போச்சுது. "ன்னடா கெளம்பச்
சொன்னா உக்காந்து கெடக்கீங்களே? காதுல சொல்றது வுழுவுதா? ஒரு பெரிய மனுஷந்தான சொல்றேம்?
இப்பிடி யிருந்தா என்னத்தெ பண்ணுறது? பெறவு ஒரு பெரிய மனுஷனா நமக்கு ன்னா மருவாதி?"ன்னு
இஷ்டத்துக்குப் பெரியவரு பேச ஆரம்பிச்சாரு அந்த ரெண்டு நாளுக்குள்ள வெத வெதமா.
வேலங்குடியிலயும் செரி, ஒறவு மொறைகள்லயும்
பல வெதமான பஞ்சாயத்துகள பண்ணி வுட்ட ஆளு வேற இவரு. ஞாயம் வைக்க ஆரம்பிச்சார்ன்னா எதுத்தாப்புல
நிக்குற ஆளு எதிர்வாதத்தெ வைக்க முடியாது. அப்பிடி ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு வெரல வுட்டு
கணக்குப் பண்ணி பாய்ண்ட் பாய்ண்டா எடுத்து வெச்சி பேசுற ஆளு. அவரு அப்பிடி பேசுன ஞாயத்தையெல்லாம்
இப்போ எடுத்து வெச்சா அத்தனையும் இப்போ அவருக்கு எதிரா மாறிப் போயிடும். ஆன்னா அவரு
என்னத்தெ பேசுனாலும், எப்பிடி நச்சரிச்சாலும், போட்டுப் புடுங்கியே எடுத்தாலும் யாருமே
அவரு மேல கோவப்படல. கோவப்படவும் முடியல. எப்பிடி இருந்த ஆளு இப்பிடி ஆயிட்டார்ன்னு
எல்லாத்துக்கும் இரக்கம்தாம் தோணுதே தவுர வேகம் உண்டாவுல. ஏதோ நேரந்தாம் இப்பிடி
பேசுறாப்புல ஆவுதுன்னு அதுக்கு ஒரு ஞாயத்தெ சனங்க கண்டுபிடிச்சி அடங்கிப் போச்சுதுங்க.
ஒரு வழியா எல்லாத்தையும் சமாளிச்சு அவர்ர
சென்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போயாச்சு. இனுமே வேலங்குடிப் பக்கமே தலைவெச்சுப்
படுக்கக் கூடாதுங்ற மாதிரிக்கி அவரு சென்னைப் பட்டணத்துல கெளம்பிப் போனதுலேந்து பேசிக்கிட்டு
இருந்திருக்காரு. "யப்பாடி! ஆவ வேண்டிய கதெயெல்லாம் ஆயாச்சு. இனுமே அந்தப் பக்கம்
தலெ வெச்சுப் படுக்கணும்னு அவசிமில்லடா சந்தானம்!"ன்னிருக்காரு. மனுஷன் பேசுறப்படி
எப்படி நடந்துக்க முடியுதுங்றீங்க? அதால பேசுறப்ப ரொம்ப கவனமாத்தாம் பேச வேண்டிக்
கெடக்கு. அங்கல்லாம் போக மாட்டேம், அவ்வேம் மூஞ்சுல முழிக்க மாட்டேம்ன்னு, அந்த வூட்டு
வாசப் பக்கம் கூட தலெ வெச்சிப் படுக்க மாட்டேம்ன்னுல்லாம் சொல்றதெ வுட சொல்லாம இருக்குறது
ரொம்ப நல்லது. ஏன்னா எங்க போவ மாட்டேம்ன்னு வாயி சொல்லுதோ, அங்க போற மாதிரிக்கி
காலம் செஞ்சுப்புடுது. யாரு மூஞ்சுல முழிக்க மாட்டேம்ன்னு சொல்றோமோ அந்த மூஞ்சுல
போயி மெனக்கெட்டு முழிக்குறாப்புல காலம் செஞ்சிப்புடுது. யாரு வூட்டு வாசல்ல தலெ வெச்சுப் படுக்க மாட்டேம்ன்னு
சொல்றோமோ, அந்த வூட்டு வாசல்ல தலைகீழா வுழுவுறாப்புல காலம் செஞ்சிப்புடுது. பெரியவரு
நெலையும் அப்பிடித்தாம் ஆச்சுது. பெரியவரு வேலங்குடிப் பக்கம் தலைவெச்சு படுக்குறாப்புல
ஆயிடுச்சு.
குமாரு அத்தாம் கலியாணத்துக்கு வேலங்குடி
வந்து இருந்தவரு, திரும்ப மூணு மாசத்துல வேலங்குடிக்கே வர்ற மாதிரி ஆயிடுச்சு. இனுமே
அவரு சென்னைப் பட்டணம் போவணும்னு அடம் பண்ண முடியாது. எப்போ கெளப்புவீங்கன்னு நச்சரிக்க
முடியாது. இனுமே இங்க தலெ வைக்க மாட்டேம்னுல்லாம் சொல்ல முடியாது. இனுமே அவரு இஞ்ஞத்தாம்
தங்கியாவணும். அவரு தலெ வேலங்குடிய வுட்டு அந்தாண்ட இந்தாண்ட நகர முடியாது. ஆம்மா,
பெரியவரு சென்னைப் பட்டணத்துல வேலங்குடிக்குப் பொணமா திரும்புனாரு.
காத்துல சாஞ்ச ஆலமரம் போல இருந்தாரு பெரியவரு
வாதத்துல விழுந்தப்போ. வாதமும் ஒரு வகையில காத்துதானே. பெரியவரும் ஒரு வகையில ஆலமரம்தானே.
அந்த ஆலமரத்தெ விழுதுகளப் போல புள்ளைங்க தாங்கிட்டு நின்னாங்க. அந்த ஆலமரம் அதுவா
காத்துல அசைஞ்சி நகந்து அந்தாண்ட இந்தாண்ட வுழுவப் பாத்தப்பவும் அந்த விழுதுக ஆலமரத்தெ
வுடல. அந்த ஆலமரத்தோட விதி முடிஞ்ச பிற்பாடு விழுதுகள்தாம் என்ன பண்ணும்? அப்பிடித்தாம்
பெரியவரோட உசுரு பிரிஞ்ச பின்னாடி அவர்ர வேலங்குடிக்கு கொண்டாந்தாங்க.
*****
No comments:
Post a Comment