18 May 2020

சாவுக்கு வந்த உறவும், வராத உறவும்!

செய்யு - 452        

            பெரியவரு வேலங்குடிங்ற கிராமத்தோட பூர்வீகமனா ஆட்கள ஒருத்தரு. வேலங்குடின்னு ஒரு கிராமம் உருவானப்போ அங்க இருந்த நாலு குடும்பங்கள்ல பெரியவரோடு குடும்பமும் ஒண்ணு. அதுக்கு மின்னாடி வரைக்கும் வேலங்குடிங்றது பெரும் வயக்காடு மட்டுந்தாம். மனுஷங்க இல்லாத வெறும் வயக்காடும் கூட. வேலங்குடியில இவுங்க குடி வந்து உருவாக்குன தெருதாம் வேலங்கடிக்கு மொத தெரு. இப்போ இருக்குற ஆட்களெல்லாம் பின்னாடி படிப்படியா வந்து குடியேறுன ஆளுகத்தாம். அப்பிடிப்பட்ட ஆளு செத்துப் போனதால, வேலங்குடியில ஒரு சனம் பாக்கியில்லாம பெரியவரு வூட்டு மின்னாடித்தாம் நின்னுச்சு.
            சேதியக் கேள்விப்பட்டு விருத்தியூரு பத்மா பெரிம்மா உட்பட எல்லாரும் வந்துப்புட்டாங்க. ரொம்ப நாளா அறுபட்டுப் போயிக் கெடந்த அண்ணன் தங்காச்சி உறவு. ஒரு கல்யாணங் காட்சி, தேவ திங்கன்னு எதுக்கும் கூடாம போன ஒறவு. நெலம் வாங்குனப் பெரச்சனைல்ல அடிபட்டு அறுபட்ட ஒறவு. சுப்பு வாத்தியார்ர பகைச்சி வுட்டாப்புல பண்ணணும்ன்னு நெனைச்சிக் கூட்டு சேர்ந்த ரெண்டுமே பகைச்சி வுட்டாப்புல ஆன உறவு. எதேச்சையா எங்காச்சிம் பாத்தாலும் கூட பாக்காதது போல கடந்துப் போன ஒறவு. எதெ தவுத்தாலும் சாவுக் காரியத்த தவித்துப்புடக் கூடாதுங்றதுக்காக இப்போ வந்துட்டுப் போன ஒறவு. இப்பிடி இந்த ஒறவப் பத்தி பல வெதமா சொல்லலாம்.
            கூட செயராமு பெரிப்பா, அதுகளோட புள்ளைப் பொண்ணுவோன்னு ஒரு பெருங்கூட்டமா வேன்ல வந்து ஒரு பெருமாலையக் கட்டி கொண்டாந்து போட்டுச்சு பெரிம்மா. பெரியவருக்கு ஒவ்வொரு சனமும் கட்டிக் கொண்டாந்து போட்ட மாலையில பெரிய மாலெ பெரிம்மா கட்டிட்டு வந்ததுதாம். மாலை கட்டுறப்பவே பெரிம்மா சொல்லிடுச்சாம், "போடுற மாலையிலயே பெரிய மாலையா யண்ணனுக்கு நாம்ம போடுற மாலைத்தாம் இருக்கணும். அதுக்கு தகுந்தாப்புல எம்மாம் காசி ஆனாலும் பரவாயில்ல பூக்காரரே! அம்மாம் பெரிசா கட்டிப் போடுங்க!"ன்னு. அதுல ஒரு வறட்டு கெளரவம், நல்லது கெட்டதுன்னு எதுக்கும் வந்துப் பாக்காம சாவுன்னா பந்தாவா வந்துப் பாத்துப்புட்டுப் போறதுன்னு அதெ பத்தியும் சில சனங்க காதுபடாம பேசிட்டு இருந்துச்சுங்க. அவ்வளவு பெரிய மாலைய உக்காந்து கட்டி வாங்க ஒரு மணி நேரத்துக்கு மேல உக்காந்து வாங்கிப்புட்டு வந்து, அதெ ஒரு நிமிஷத்துக்குள்ளு போட்டுப்புட்டு, ஒரு பத்து நிமிஷம் உக்காந்து அழுதிருக்கும். அவ்வளவுதாங் வந்தச் சொவடு தெரியாம கெளம்பிடுச்சுங்க பெரிம்மா குடும்பத்துச் சனங்க.
            இத்தனெ நாளு வராம இருந்தது பேச்சுல்ல, இப்போ வந்துட்டுப் போறதுதாங் பேச்சு. வறட்டுக் கெளரவமோ, பந்தாவோ அது பேச்சுல்ல. அதுக்கு மத்தில சாவுன்னு சங்கதித் தெரிஞ்ச பிற்பாடு வந்துப் பாத்துட்டுப் போறதுதாங் அன்னிக்கு பேச்சானுச்சு.  பகையாளி வூடா இருந்தாலும் செத்த பிற்பாடு வர்றவங்கள யாரும் தடுக்குறதில்ல. இப்ப மட்டும் ஏம் வர்றேன்னு கேக்குறதில்ல. மனுஷன் வாழுற வரைக்கும் மருவாதிக் கொடுக்காட்டியும், செத்த பிற்பாடு மருவாதிக் கொடுக்கணுங்றது ஒரு சம்பிரதாயமா இருக்கு. சாவுக்கும் ஒரு மனுஷன் வரலன்னாத்தாம் ஒறவுங்றது நெசமாலும் அந்துட்டதா அர்த்தமாகுது. அதுக்கு மின்னாடி அந்துப் போறதெல்லாம் ஒறவு அந்தப் போறதா அர்த்தமாவாது. அது வரைக்கும் எத்தனெ கலியாணம், காதுகுத்தி, வளைகாப்பு, பொங்க சீரு, தீவாளி சீருன்னு எதுக்கும் வர வேண்டியதில்ல. ஆன்னா சாவுக்கு வந்துதாம் தீரணும். அது ஒரு முக்கியமான எடம். ஒறவ முறிக்கிறதா வேணாங்றதாங்ற எடம். அந்த வெதத்துல உசுரோட இருக்குற மனுஷனுக்கு அதுவரைக்கும் கெடைக்காத மருவாதி செத்த பின்னாடி கெடைக்குது.
            உசுரோட மனுஷன் உலாத்துற வரைக்கும்தாம் அவனோட விருப்பு, வெறுப்பு, சண்டெ, சமாதானம் எல்லாம் உலாத்தும் போலருக்கு. செத்த பின்னாடி அதுவும் செத்துப் போயிடும் போலருக்கு. அங்க மிச்சமிருக்கிறது ஒண்ணுமில்லே. அது வரைக்கும் அந்த மனுஷன் மேல இருந்த வெறுப்பு, வேகம், கோவம், கொந்தளிப்பு எல்லாமும் அந்த மனுஷனோடயே செத்துப் போயிட்டதா நெனைச்சி யார்ரா இருந்தாலும் பாக்க வந்துடுவாங்க. அதே போல சாவு சேதி சொல்லி வுடுறப்பவும் ஒறவாளி, பகையாளின்னு பாக்காம எல்லாத்துக்கும் சொல்லி விட்டுடுவாங்க. அதுக்கு அவுங்க வர்றதை வெச்சி ஒறவெ வெச்சிக்கிறதா, துண்டிச்சிக்கிறதான்னு கடெசீக் கட்டமா முடிவு பண்ணிக்கிறது. ஒரு வெதத்துல சாவுங்றது ஒரு மனுஷனோட உசுரு முடியுற எடமாவும், ஒறவு இருக்காங்ற முடிவு பண்ணுற எடமாவும் இருக்கும். சாவுக்கு வாரதவங்களோட ஒறவும் செத்துப் போயிட்டதாத்தாம் அர்த்தம். சாவுக்கு வாரம பெறவு வந்து ஒறவு கொண்டாட முடியாது. சாவுக்குக் கூட வராத பயதானே நீயின்னு பாக்குற எடமெல்லாம் நாக்கைப் பிடுங்றதுக்குன்னே நாலு பேரு அதுக்குன்னே மொளைச்சிடுவாம்.
            விருத்தியூரு பெரிம்மா ஒரு வார்த்தை சொல்லிருந்துச்சு, "நாம்ம செத்தா கூட அவ்வேம் எம் மூஞ்சல முழிக்கக் கூடாது. அதே போல அவ்வேம் செத்தாலும் நாம்ம அவ்வேம் மூஞ்சுல முழிக்க மாட்டேம்!"ன்னு. அண்ணன் தங்காச்சிக்குள்ளார இத்து எத்தனெ நாளுக்கு நீடிக்கும்ன்னுத்தாம் ஒறவுக்கார சனங்க நெனைச்சதுங்க. பெரியவரு சாவுற வரைக்கும் நீடிச்ச இது, அவரோட சாவுல வந்து முறிஞ்சிச்சு.
            அந்தச் சாவுல பத்மா பெரிம்மா வந்தது எல்லா சனத்துக்கும் ஆச்சரியம்ன்னா, சுப்பு வாத்தியாருக்கு உண்மையிலயே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. பெரிம்மாவ தனியா பிடிச்சு சுப்பு வாத்தியாரு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாரு, "எங்க யண்ணி நீங்க வராம போயிடுவீயோன்னு நெனைச்சிட்டு இருந்தேம்? ஒறவுல அப்பிடில்லாம் ஆவாதுங்றதெ நிரூபிச்சிட்டீங்க! என்னத்தெ இருந்தாலும் பெரியவங்க பெரியவங்த்தாம்!"ன்னாரு.
            பத்மா பெரிம்மாவுக்கும் மனசுல உள்ளதெ கொட்டணும் போல இருந்திருக்கணும். கூட வந்த எல்லா சனத்தையும் போயி வேன்ல ஏறச் சொன்னுச்சு. சுத்திலும் ஒரு பார்வையப் பாத்துட்டு, பேசுற பேச்சு அக்கம் பக்கத்துல யாரு காதுக்கும் விழாதுங்ற அளவுக்கு சுப்பு வாத்தியார்ர அழைச்சிக்கிட்டுப் போயி பெரிம்மா பேச ஆரம்பிச்சிது.

            "அத்து எப்பிடிம்பீ வாராம போவேம்? நம்மள அந்தப் பாடு படுத்துனவேம் எப்பிடிச் செத்துக் கெடக்குறாம்னு பாக்குறதுக்காவது வந்துட்டுப் போவாம இருப்பனா? ஒனக்கு மிந்தி நாம்ம போறேமா? நமக்கு மிந்தி நீயி போறீயா? அதெ வெச்சித்தாம் யாரு செஞ்சது குத்தம்? யாரு செஞ்சது குத்தமில்லன்னு அந்த அய்யனாருக்குத் தெரியும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். இப்போ மொதல்ல போயிச் சேந்தது யாரு? இப்போ தெரியுதாம்பீ யாரு செஞ்சது குத்தங்றது? அநியாயக்காரனுக்கு சாவு மொதல்ல வரும். ஞாயமா நடக்கறவங்களுக்குத்தாம் சாவுங்றது, எப்பிடியெப்படியெல்லாம் அநியாயம் செஞ்சவங்கல்லாம் சாவுறாங்கன்னு கண்ணால கடெசீயில எல்லாத்தையும் பாத்துட்டு போறாப்புல வரும். நம்மட வூட்டுக் காசிய முழுங்கிட்டு அந்தக் காசியில நெலத்த வாங்கிப் போட்ட பயலாச்சே. இப்போ எதெ எடுத்துகிட்டு போவப் போறாம்? கடெசியில ஆறடி நெலந்தாம் போ! அந்த எடத்துல கூட இன்னும் கொஞ்சம் நாள்ல இன்னொருத்தனெ பொதைக்கத்தாம் போறாம். அப்பிடிப் பாத்தா அதுவும் சொந்தமில்லெ. எதுக்கு இந்த ஆட்டம் ஆடணும்ங்றேம்? இப்பிடி ஆடாத ஆட்டம் போட்டா எல்லாத்துக்கும் மிந்தி மண்ணுக்குள்ள  அடங்க வேண்டியத்தாம்!"ன்னு பெரிம்மா சொன்னதும் சுப்பு வாத்தியாருக்கு பகீர்ன்னு போச்சுது.
            மொறைப்படின்னு பாத்தா இதெ சுப்பு வாத்தியாருதாம் சொல்லணும். பத்மா பெரிம்மாவும், பெரியவரும் இந்த விசயத்துல சுப்பு வாத்தியாருக்குத்தாம் அநியாயத்தையும், துரோகத்தையும் சேத்துப் பண்ணாங்க. அதெ அப்பிடியே பெரியவரும், பெரிம்மாவும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தரு பண்ணிக்கிட்டதா நெனைச்சிக்கிட்டதப் பத்தி என்னத்தெ சொல்றது? அவுங்க நடத்துனது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, நெனைச்சிக்கிட்டது வேறொண்ணு. அதெ பத்திப் பேசச் சொன்னா ரெண்டு பேருமெ சுப்பு வாத்தியாருக்குப் பண்ணதை விட்டுப்புட்டு ஒருத்தருக்கொருத்துர பண்ணத்தைத்தாம் மாத்தி மாத்திச் சொல்லுவாங்க. அதுல பெரியவரு பேச முடியாத சாவு நெலைக்குப் போயிட்டாரு. பேசக் கூடிய நெலையில இருக்குறது பெரிம்மாத்தாம். அதால அது பேசுது.     
            "இதுக்கு நீஞ்ஞ யண்ணி வந்திருக்கவே வேண்டியதில்லயே? நீஞ்ஞ பேசுனாப்புல செத்தாலும் வர மாட்டேன்னு வைராக்கியமா இருந்திருக்கலாமே?"ன்னாரு பொசுக்குன்னு சுப்பு வாத்தியாரு.
            "இப்ப மட்டும் வந்து மூஞ்சுல முழிச்சிட்டதாவ நெனைச்சிக்கிட்டே? ம்ஹூம்! அது கெடையாது. அதாஞ் சொன்னேனே! நம்மள ன்னா பாடு படுத்துனீயே! அம்மாம் பாடு படுத்துனெ நீயி எந்தக் கதியில போயிருக்கேன்னு தூர நின்னு பாக்கத்தாம் வந்தேம். அடப் பாவி அப்பிடியெல்லாம் பண்ணி இப்பிடிப் போயிட்டீயே? நாம்ம வாங்கிட்டுக் கொண்டாந்து போட்ட மாலைய தூக்கக் கூட ஒடம்புல தெம்பு இருக்கா இல்லையாங்றதெ பாக்கத்தாம் வந்தேம். அப்பிடியெல்லாம் பண்ணவேம் எந்தக் கதியில போவாம்ன்னு எம் பொண்ணு புள்ளைக்கிச் சொல்லாம சொல்லியாவணும்ல அதுக்கத்தாம் வந்தேம். அதாங் வந்தேம், உக்காந்தேம் ஒரு பத்து நிமிஷம் போயிட்டியேடா பாவிப் பயலேன்னு நெனைச்சு அழுதேம். எதிராளி இப்பிடி எடுபட்டுப் போயிட்டீயே! துரோகி இப்படி திடுதிப்புன்னு போயிட்டீயேன்னு ஒப்பாரிய வெச்சேம். கணக்குல ஒண்ணு முடிஞ்சதுப் போ! முடிஞ்சதெ பாக்காம இருக்க முடியுமா? கடெசீக் காரியம் நமக்கு ஒண்ணு மிச்சம் இருக்குல்ல. அதாங் தலைய முழுவுறது. அதெ இஞ்ஞ வாராம எப்பிடிப் பண்ணுறது? அதுக்குத்தாம் வந்தேம்! இஞ்ஞ போற வழியிலயே ஆறோ, கொளமா இருந்தா முழுவிட்டுப் போறேம்!"ன்னுச்சு பெரிம்மா.
            "மறுக்கா சொல்றேம்ன்னு தப்பா நெனைச்சிக்கிட வாணாம். இப்படிப் பேசிட்டு இதுக்கு நீஞ்ஞ வந்திருக்கக் கூட வாணாம் யண்ணி! வூட்டுலயே கெடந்திருக்கலாம். உத்தமாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெப்படி வாராம இருக்க முடியும்? நாளைக்கி தூக்கி வளத்த தங்காச்சி பத்மா வராமா போயிட்டான்னு பேரு ஆயிடக் கூடாது பாரு? பத்மா வந்தாங்ற பேரு இருக்கணும். ஆன்னா எதுக்கு வந்தான்னு ஏம் வந்தான்னு யாருக்கும் தெரியக் கூடாது. யாருக்கும் தெரியக் கூடாதுன்னா ஒனக்கும் தெரியாமப் போயிடக் கூடாதுல்ல. அதுக்காகத்தாம் நின்னு மெனக்கெட்டுச் சொல்லிட்டுப் போறேம். நீயும் இஞ்ஞ ரொம்ப நேரம் நீக்காதீயே யம்பீ! காரியம் முடிஞ்சிடுச்சுல்ல, மாலையப் போட்டாச்சுல்ல. கெளம்பிக்கிட்டெ இரு. ஒடம்பெல்லாம் வெஷம். அப்பிடி வெஷத்த வெச்சிக்கிட்டா எத்தனெ நாளுக்கு உசுரோட இருக்க முடியும். அந்த வெஷமே கொன்னுபுடுச்சு. பாம்பா வெஷத்த ஒடம்புக்குள்ள வெச்சிக்கிட்டு உசுரோட இருக்குறதுக்கு? மனுஷம் இல்லையா. மனுஷன மாதிரித்தாம் இருக்கோணும். பாம்பெ மாதிரி இருக்கக் கூடாது. அப்பிடி இருந்தா இப்பிடித்தாம் கெதியாவும்!  அதுலயும் பாரு வெஷம் வெச்சிருக்குற பாம்பு அடிபட்டுச் சாவுறதெ? என்னத்தெ சொல்ல? நாம்ம கெளம்புறோம்பீ! வேனுக்கார்ரேம் வேற வாடகைய நிப்பாட்டிப் போட்டா கூடுதலா கேப்பாம். இந்தப் பயெ எழவுக்கு வந்து எம் வூட்டுக் காசிய ஏம் நாம்ம கூடுதலா எழக்கணும்?" அப்பிடின்னு சொல்லிட்டு விறுவிறுன்னு கெளம்பிப் போயிடுச்சு பத்மா பெரிம்மா. பத்மா பெரிம்மா போறதையே ஒண்ணும் சொல்ல முடியாம பாத்துகிட்டு நின்னாரு சுப்பு வாத்தியாரு.
            அண்ணிக்காரவோ வந்ததுல சுப்பு வாத்தியாரு கண்ணுத் தண்ணி மாளாமா உருகிப் போயி தூரத்துல நின்னு பேசுறதா அதெ பாத்த சனங்க பேசிக்கிட்டுங்க. "ன்னா வாத்தியார்ரே! அவுங்க வந்து மொகத்தெ காட்டிட்டுப் போனது வரைக்கும் பரவால்ல. நீஞ்ஞ பாட்டுக்கு ஓரத்துல ஒதுங்கி அவுங்களோட பேசிட்டு நின்னா எப்பிடி? அவுங்க கெளம்புறப்படி கெளம்பட்டும். குத்தமில்லே. வாஞ்ஞ இஞ்ஞ வந்து நீஞ்ஞ ஆவ வேண்டியதெ முடுக்கி வுடுங்க. ஒண்ணும் ஆவுறாப்புல தெரியல பாருங்க!"ன்னாங்க வேலங்குடி ஊருப் பெரிசுங்க. அவுங்க அப்பிடிப் பேசுறதுக்குக் காரணம் இருக்கு. இன்னும் சாவுக்கு வர வேண்டிய ஆளுகளோட கணக்கு இருந்துச்சு. அவுங்க வர்றாம எடுக்குறதா வேணாமாங்றதெ முடிவு பண்ண வேண்டிய எடத்துல சுப்பு வாத்தியாருதாம் இருந்தாரு. எதுலயும் வெரசா ஒரு முடிவுக்கு வர முடியாத ஆளு வேறயா சுப்பு வாத்தியாரு. அதால நேரம் வேற அது பாட்டுக்கு அடிச்சிட்டுப் போயிட்டு இருந்துச்சு. 
            பெரியவரோட பொணம் இடுகாட்டுக்குக் கெளம்புறதுக்கு ராத்திரி ரொம்ப நேரம் ஆனுச்சு. தூரத்துலேந்து வர வேண்டிய சனமெல்லாம் வந்த பிற்பாடு, பக்கத்துலேந்து முக்கியமா வர வேண்டிய ஒருத்தரு வாரல. அவரு வந்துப்புடுவாருங்ற நெனைப்புல பொணத்தை ரொம்ப நேரமா போட்டு வெச்சிருந்தாங்க. அப்பிடி வந்து கெடசீயா மொகத்தப் பாக்க வேண்டிய ஆளு யாருன்னு ஒங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லே. பெரியவரோட கூடப் பொறந்த ரத்தம், உடன் பொறந்த ஒறவு அவரோட தம்பிக்காரரான சின்னவருதாம். அத்துச் செரி பக்கத்துப் பக்கத்து வூட்டுல இருக்குற ஆளு வந்து சேர்றதுக்கு எம்மாம் நேரமாவும்? சீக்கிரமே வாராட்டியும் பரவாயில்ல, குண்டு கட்டா தூக்கியாந்து மொகத்தைக் காட்டிப்புட்டு பொணத்தை எடுங்கன்னுத்தானே சொல்றீங்க?
            அதாங் இப்போ முடியாது. ஏன்னா அவரு இப்போ பக்கத்துலு வூட்டுல இல்ல. வூட்டைப் பூட்டிப்புட்டு ராயநல்லூர்ல ரெண்டாவது மக சுவாதி வூட்டுல இருக்காரு. எப்போ சென்னைப் பட்டணத்துல பெரியவரு செத்துட்டார்ன்னு சேதி வந்துச்சோ அப்பவே மொத வேலையா வூட்டைப் பூட்டிட்டு ரசா அத்தையோட மக வூட்டுக்குப் போனாரோ இப்ப வரைக்கும் அங்கத்தாம் இருக்காரு. அவர்ரப் போயி சமாதானம் பண்ணாத ஆளு கெடையாது. எதுக்குச் சமாதானம்ன்னா கடெசீயா ஒரு மொறைக் கூட பொறந்த பாவத்துக்கு மொகத்தெ ஒரு தவா வந்துப் பாத்துட்டுப் போவன்னும்னுத்தாம். பாவம் பெரியவரு. அவரு செத்து சென்னைப் பட்டணத்துலேந்து கொண்டு வர்ற ஒரு நாளு, இங்க வேலங்குடியில சொந்தப் பந்தங்க வந்து பாக்கணும்னு ஒரு நாளு ஆக ரெண்டு நாளா கூலர் பாக்ஸ்ல கெடந்து நாறிகிட்டு கெடக்காரு. இதுல தம்பிக்கார்ரேம் வந்துப் பாக்கணுங்றதுக்காக ராப்பூரா வேற காத்துட்டுக் கெடக்குறாரு. இது மாதிரியான தம்பிக்காரனோட பொறக்குற அண்ணங்கார்ரனெல்லாம் செத்தாலும் போயிச் சேர வேண்டிய எடத்துக்குப் போயி சேர்றது சாமானியமில்லன்னு எழவு வூட்டுல இருந்த சனங்க பேசுற அளவுக்கு நெலமெ ஆயிப் போயிடுச்சு.
            ஏம் பெரியவரோட சாவுக்கு சின்னவரு வர்ற மாட்டாம அழிச்சாட்டியும் பண்றாங்றதுக்குப் பின்னாடியும் ஒரு கதெ இருக்கு. ஏற்கனவே நீலதாட்சி அத்தாச்சி சந்தானம் அத்தானப் பத்திக் கேக்கப் போயி வந்ததுதாங் இந்தக் கதெ. இப்போ சின்னவரு ஏம் பெரியவரு சாவுக்கு வர மாட்டேங்றார்ன்னு இன்னொரு கதெ. கதெ மேல கதெ. அதான்னே இந்தப் பாழாப் போன ஒறவும், வீணாப் போன வாழ்க்கையும்.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...