நம் மீதான குற்றச்சாட்டுகளுக்கான காரணம்
என்ன?
அடிக்கடி நம் மீது நீட்டப்படும் பொதுவான
குற்றச்சாட்டு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாம் நடப்பதில்லை என்பதுதான். கடைசி கட்டமாக
பொதுமக்கள் மீது குற்றம் சாட்ட இந்த வாக்கியம் போதுமானதாக இருக்கிறது.
உண்மையில் சொல்லப் போனால் சட்டதிட்டங்களுக்கு
கட்டுப்பட்டு நடத்தல் என்பது நமது கலாச்சாரமாக மாறவில்லை. நம்மை அறியாமலேயே விதிமீறல்
நடைபெறுவதும், அதை தட்டிக் கேட்க முடியாமல் போவதும் நமது கலாச்சாரமாகவே ஆகி விட்டது.
வெளிநாட்டில் இப்படியெல்லாம் இல்லை என்கிறார்கள்.
அப்படியென்ன வெளிநாட்டில் மட்டும் சரியாக சட்டதிட்டங்களை மதித்து நடந்து விட்டார்கள்?
கோரோனாவின் காரணமாக ஊரடங்கு அறிவித்த எத்தனை நாடுகளில் மக்கள் வீடடங்கி கொரோனா
பரவலைத் தடுத்தார்கள்? கொரோனா பரவி கொத்துக் கொத்தாய் மனிதர்கள் மடிவதைப் பார்த்த
பின்பே கட்டுபாட்டுக்குள் வந்தார்கள்.
பலவிதங்கள் பொதுமக்கள் குறை கூறப்படுகிறார்கள்,
அவர்கள் இடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ப் போகிறார்கள், புழங்குகிறார்கள் என்று.
இடித்துக் கொண்டும், கூட்டம் கூட்டமாகவும் போக அவர்களா பழகினார்கள்? அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டார்கள்.
ஐம்பது பேர் செல்லும் பேருந்துகளில் நூறுக்கும் மேல் செல்ல பழக்கப்படுத்தப்பட்டார்கள்.
நூறு பேர் கூடும் இடங்களில் இருநூறு பேர் கூட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள். இருநூறு
பேருக்குச் சேவை செய்யும் வளாகத்தில் நானூறு பேர் திரள செய்யப்படுகிறார்கள். பொருள்களை
முறையாக விநியோகிக்க திட்டமிடப்படாதக் காரணத்தால் முண்டியடித்துக் கூடுகிறார்கள்.
வாகன நெரிசல் என்ற பெயரில் அவர்கள் ஈக்களைப் போல மொய்க்க வைக்கப் படுகிறார்கள்.
பொதுமக்களின் வாழ்வில் அன்றாட அடிப்படைச்
சிரமங்களை நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் சிந்தனை
செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட சிந்தனை மழுங்கியவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
இதற்கும் காரணத்தைக் கலாச்சாரத்தின் மீது
வீசுவதே நமது பழக்கமாகி விட்டதால், அந்த வழியிலேயே இதற்கான பதிலையும் சொல்ல வேண்டியதாக
இருக்கிறது. ஏனென்றால் பொதுமக்களின் மீது குறையை வாரி இறைப்பது நமது கலாச்சாரமாகி
விட்டது. அந்த பொதுமக்களில் நாமும் ஒருவர் என்பதை அறியாமல் நாம் ஒவ்வொருவரும் இதைச்
செய்து கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
*****
No comments:
Post a Comment