5 May 2020

மவராசியா இருடியம்மா!

செய்யு - 439        

            சீட்டுக்கட்டுல இருக்கற சீட்டை ஒண்ணுமேல ஒண்ணு அடுக்கி வெச்சி அடியில இருககுற ஒரு சீட்டைத் தட்டி வுட்டா போதும் வரிசையா எல்லாம் வுழுவுற மாதிரிக்கிச் சம்பவம் அது பாட்டுக்கு அடுத்தடுத்து வேகமா நடக்க ஆரம்பிச்சிது.
            பெரியவரு சொன்னபடி மறுநாளு காலங்காத்தால சென்னைப் பட்டணத்துலேந்து திருவாரூருக்கு வந்து, அங்கயிருந்து வடாவதிக்கு வர்ற மொத எட்டாம் நம்பரு பஸ்ஸைப் பிடிச்சி திட்டையில சுப்பு வாத்தியாரு வூட்டுல இருந்துச்சு சந்தானம் அத்தான்.
            சந்தானம் அத்தான் வந்ததும் வராததுமா வெங்குதாம் மொத கேள்வியக் கேட்டுச்சு, "ன்னப்பா! இப்பத்தாம் பொண்டாட்டி நெனைப்பு வந்து பொண்டாட்டியப் பாக்கணும்னு தோணுச்சா?"ன்னு.
            சந்தானம் அத்தான் ஒண்ணும் பதில் சொல்ல முடியாம சிரிச்சிது.
            "ன்னா விசயம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேடிக்கையா.
            "தனத்த அழைச்சிட்டுப் போறேம் மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "நாம்ம போவ முடியாதுப்பா!"ன்னுச்சு தனம் அத்தாச்சி பிகு பண்ணிக்கிட்டு. தனம் அத்தாச்சியோட மனசுக்குள்ள சந்தோஷம் மொகத்துல நல்லாவே தெரிஞ்சிச்சு.
            "புருஷங்கார்ரேம் வந்துக் கூப்புட்டா நாம்ம எப்பிடி அனுப்பாம இருக்குறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் சரித்தாம்பா! இப்போ ன்னா நெனைப்புல கூப்புட வந்துருக்கார்ன்னு கேட்டுச் சொல்லுங்க?"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "அத்துவும் சரித்தாம்! ன்னா நெனைப்புன்னு நமக்கும் தெரியலயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பா நேத்திக்கு போன அடிச்சுச்சு அழைச்சிட்டு வாரச் சொல்லிடுச்சு! நீஞ்ஞ எல்லாம் சேந்துகிட்டு இப்பிடில்லாம் கேள்வியக் கேப்பீங்கன்னு தெரியும். ‍அதெ சொல்லியே கேட்டேம். போயி கூப்புடு. மாமா அனுப்பி வுடும். அழைச்சிட்டு வான்னு மட்டுந்தாம் சொல்லிச்சு. வேற நமக்கொண்ணும் தெரியாது! நீஞ்ஞ ன்னா பேசுனீங்க? ஏது பேசுனீங்க?ன்னு நாம்மத்தாம் ஒஞ்ஞகிட்டே கேக்கணும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "நாம்ம அஞ்ஞப் போயி மாசக் கணக்காவுதுப்பா! அஞ்ஞ ன்னா நடக்குது, ஏத்து நடக்குது? ஒரு சங்கதி நமக்குத் தெரியாதுப்பா! தனத்தோட அண்ணங்கார்ரேம் ரவித் தம்பி வந்துட்டுப் போனதுதாம். அத்து வந்து தனத்த கூப்புட்டுப் பாத்துச்சு. தனம் போவ முடியாதுன்னுடுச்சு. நாமளும் ஒண்ணும் சொல்லல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அஞ்ஞ சென்னைப் பட்டணத்துல ஆபீஸூக்கு வந்து கலாவும் சத்தம் போட்டுச்சு காச் மூச்சுன்ன கன்னா பின்னான்னு. நாமளும் ஒண்ணும் பேசல. அது பாட்டுக்குப் பேசிட்டு அது பாட்டுக்குக் கெளம்பிடுச்சு. மறுநாளு அதாங் நேத்திக்கு யப்பா போன அடிச்சி அழைச்சிட்டு வாரச் சொல்லிடுச்சு. நமக்கும் அதெத் தாண்டி ஒண்ணும் தெரியல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "ல்லப்பா! நாம்ம போவ முடியாது!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "இதுலல்லாம் வீம்புப் பண்ணிக்கிட்டு நிக்கக் கூடாது. புருஷங்காரனெ வந்துக் கூப்புடுறாங்றப்பறம் கெளம்பிடணும். கொழந்தெ குட்டியாவணும். போயிக் குடித்தனத்த பண்ணு ஆயி!"ன்னுச்சு வெங்கு.
            ஒரு நிமிஷம் தனம் அத்தாச்சிக்கு என்ன சொல்றதுன்னு புரியல. பெறவு நெதானிச்சிக்கிட்டுச் சொன்னுச்சு, "செரிம்மா! கெளம்புறேம். ஆன்னா வேலங்குடிக்கு அழைச்சிட்டுப் போவக் கூடாது. நேரா சென்னைப் பட்டணம்தாம். சம்மதம்ன்னா கேட்டுச் சொல்லுங்க கெளம்புறேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "யப்பாவே சொல்லிடுச்சு! இனுமே வேலங்குடி பக்கம் தல வெச்சிப் படுக்காதேன்னு. யப்பாரையும் மவனையும் பிரிச்சிப்புட்டே. சந்தோஷந்தானே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சாரே ஒஞ்ஞ யப்பா! அத்து சந்தோஷமா? நாம்ம கட்டுனப் பொடவையோட இஞ்ஞ வர்றேமே! மாத்துக்குக் கட்டிக்க ன்னா பண்ணுவேம்ங்ற நெனைப்பு இருந்துச்சா ஒஞ்ஞளுக்கு? நீஞ்ஞ பாட்டுக்குத்தானே கெளம்பி சென்னைப் பட்டணம் போனீங்க ன்னா ஏதுன்னு கூட பாக்காம? செரி போனீங்க! போன இத்தனெ நாள்ல ஒரு வெசாரிப்பு, எப்பிடி இருக்கேம்? ஏத்து இருக்கேம்?ன்னு ஒரு கடுதாசி. ஒண்ணும் கெடையாது. பிரிச்சிப்புட்டமாம்லே பிரிச்சிப்புட்டேம். நீஞ்ஞல்லாம் எதுக்கு ஒரு பொண்ணுக்குத் தாலியக் கட்டுறீங்க? கட்டுனா கடெசி வரைக்கும் கண் கலங்க வெச்சுக் காப்பாத்தணும். முடியலியா ஒஞ்ஞ யப்பா சொல்றபடியே கேட்டுக்கிட்டு சாமியார்ரா இருந்துக்கிடணும். அதெ வுட்டுப்புட்டு நமக்கு ஏம் தாலியக் கட்டுனீரு?"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "இந்த வாயித்தாம் ஒனக்கு! அடங்குறீயா? ன்னவோ வேலங்குடியிலயே கெடக்குற மாதிரிக்கி. அஞ்ஞ சென்னைப் பட்டணத்துல நீயும் நானும்தான கெடக்குறேம். ஒரு நாளு, ரெண்டு நாளு இஞ்ஞ வந்துட்டுப் போறப்ப அத்து யப்பா சொல்றபடி நடந்துகிட்டாத்தாம் ன்னவாம்? சென்னைப் பட்டணத்துல நாம்ம ஒன்னய எதாச்சிம் கேட்டிருப்பேமா? சமைச்சிக் கொடுத்தாலும் சரித்தாம், கொடுக்காட்டியும் சரித்தாம். நாம்ம பாட்டுக்குப் போவேம், வருவேம். எல்லா எடத்துலயும் அப்பிடியே இருக்க முடியுமா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "நமக்கு வாயின்னா அன்னிக்குப் பேசிருக்கணும். அன்னிக்குத்தாம் ஒண்ணும் பேசலையே. நாம்ம பாட்டுக்குத்தானே வந்தேம். அத்துச் செரி சென்னைப் பட்டணத்துல நாம்ம வந்து குடித்தனம் நடத்தி எத்தனெ நாளுக்கு நீஞ்ஞ சாப்புடாம போனீயே? ஒஞ்ஞள மாதிரியா நாம்ம அடிக்கடி சென்னைக்கும் வேலங்குடிக்கும் அடிக்கடி வந்துட்டுப் போயிட்டு இருந்தேம்? பஸ்ல வந்தது ஒடம்புக்கு முடியல, ரொம்ப தூரம் பெரயாணம் பண்ணிப் பழக்கமில்ல. தலவலியுமா, வயித்துப் பெரட்டலுமா இருந்தேச்சுன்னு கெடந்தா, அதுக்கு இம்மாம் பஞ்சாயத்து வெச்சா ன்னா பண்றது?"ன்னுது தனம் அத்தாச்சி.
            "அதெ எடுத்துச் சொல்லணும். அதெ வுட்டுப்புட்டு பாஞ்சாலி தலைய விரிச்சிப் போட்டதுப் போல வந்து திண்ணையில தலைவிரிக்கோலமா நனைஞ்சப் பொடவையோட வந்து உக்காந்தா தெருவுல வர்றவேம் போறவேம் ன்னா நெனைப்பாம்? அதாங் யப்பாவுக்குக் கோவம் வந்துடுச்சு!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "தூங்கிட்டு இருக்குற பொம்முனாட்டி மேல தண்ணியக் கொண்டாந்து ஊத்தலாமா? அத்து எந்த ஊரு ஞாயம்? பொம்பள படுத்துக் கெடக்குற எடத்துல ஒஞ்ஞ அப்பாருக்கு ன்னா வேல? அதெ கேக்கல! இப்போ வந்து பெரிசா பேசிக்கிட்டு?"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "யப்பா அப்பிடித்தாம்! அத்து ரொம்ப கஷ்டப்பட்டது. இப்பிடியிப்பிடில்லாம் இருந்தாத்தாம் குடும்பத்தெ கரை சேக்க முடியும்ன்னு அதுக்கு ஒரு நெனைப்பு. அப்பிடி இருந்த வாசித்தாம் இப்போ நாமெல்லாம் இந்த நெலையில இருக்கேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "ஏம் இஞ்ஞ யப்பால்லாம் கஷ்டப்படலீயா? அவுங்கல்லாம் எப்பிடி இருக்காங்க?"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            சந்தாம் அத்தானுக்குச் சிரிப்பு வந்துடுச்சு. "மாமாவச் சொல்லுதீயா? அத்து எப்பவும் அப்பிடித்தாம். ஒரு வூட்டுக் கஷ்டம்ன்னா அத்து கஷ்டமா தெரிஞ்சிருக்கும். அதுக்கு அஞ்ஞ விருத்தியூர்லயும் கஷ்டந்தாம். அஞ்ஞயிருந்து வேலங்குடிக்கு வந்தாலும் கஷ்டந்தாம். அப்பிடியே கோவில்பெருமாளுக்குப் போனாலும் கஷ்டந்தாம். இப்போ இஞ்ஞ திட்டையிலயும் அப்பிடித்தாம். நெறைய கஷ்டங்கள சந்திச்சா எதுவும் கஷ்டமா தெரியாது. மாமாவுக்குப் பாத்தீன்னா அஞ்ஞ விருத்தியூர்ல அண்ணங்காரரு மூத்தவரு. இஞ்ஞ கலியாணம் பண்ண எடத்துலயும் மொத மருமவ்வேம் கெடையாது. அதால அத்து எல்லாத்துக்கும் அடங்கிப் பழக்கமா போயிடுச்சு. யப்பா அப்பிடியில்லயே. அதுதாம் குடும்பத்துக்கும் மூத்தப் புள்ளே. அஞ்ஞ விருத்தியூருக்கும் அதுதாங் மொத மருமவ்வேன். எட்டுப் புள்ளைகள வேற பெத்துப் போட்டுடுச்சு. ஒவ்வொரு எடத்துலயும் அத்து பொறுப்பா நடந்துக்க வேண்டிய நெலே. அப்பிடியொரு நெலையால எதாச்சிம் தப்புன்னா அத்துக்கு நாம்மதானே பதிலச் சொல்லணுங்ற ஒரு நெனைப்பு அதுக்கு. அதாலயே எல்லாத்திலயும் இப்பிடி இருக்கணும், அப்பிடி இருக்கணுங்ற கொணம் அதுக்கு இயல்பாவே வந்துடுச்சு. இப்போ அதுல என்னத்தெ கொறையக் கண்டே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "ச்சும்மா கதெ வுடாதீங்க? கேள்வியக் கேட்டா பெலாக்கணம் பாடிட்டு? ஒஞ்ஞ யப்பா பண்ணது தப்பே இல்லேங்றீங்களா?"ன்னுச்சு தனம் அத்தாச்சி இப்போ கோவமா.
            "யம்மாடி! யப்பாடி! புருஷம் பொண்டாட்டிக்குள்ள சண்டெ போடுறதெ வுடுங்க. மொதல்ல. நல்ல நாளு அதுவுமா சமைச்சிப் போடுறேம். சாப்புட்டுட்டுக் கெளம்புற வழியப் பாருங்க!"ன்னுச்சு வெங்கு.
            "ன்னம்மா நீஞ்ஞளும் நம்மள கெளப்பி வுடுறதிலயே இருக்கீங்க?"ன்னுச்சு தனம் அத்தாச்சி பொய் சிணுங்கலா.
            "நீயி எத்தனெ நாளு வந்து இருந்தே? ன்னா காரணம், ஏத்துன்னு இத்தனெ நாளு எதாச்சிம் வெசாரிச்சிருப்பேனா? நம்மட புருஷங்கார்ரேங்கிட்ட ஒரு வார்த்தெ கேட்டதில்லே. அன்னிக்கு ஒஞ்ஞ அண்ணம் வந்தப்பத்தாம் ஓரஞ்சாரமா கொஞ்சம் புரிஞ்சிச்சு. அப்பவாச்சிம் எதாச்சிம் கேட்டுருப்பேனா? இப்ப ஒன்னயக் கட்டுனவேம் வந்துக் கூப்புடுறாம். அவ்வேம்தானே ஒமக்குச் சாமி. அவ்வேம் கூப்புடுறப்போ எப்பிடி போவாம இருக்குறது? அதாங் மொதல்ல கெளம்புற வழியப் பாருங்றேம். போயிக் கெளம்பி இருந்துட்டு ஒரு பத்து நாளு கழிச்சி வந்து ஒம் இஷ்டத்துக்கு எத்தனெ நாளு வேணும்னாலும் இருந்துட்டுப் போ. யாரு வேண்டாங்றா?"ன்னுச்சு வெங்கு.
            "யத்தெ சொல்றதெ கேளு. கெளம்புற வழியப் பாரு! யத்தே சாப்பாடுல்லாம் வாணாம். இப்போ கெளம்புன்னா ராத்திரி போயிடலாம். வேல கெடக்கு யத்தே அப்படியப்படியே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "யிப்போ கெளம்புறதா இருந்தா அவுங்கள மட்டும் கெளம்பச் சொல்லுங்க யம்மா! நாம்ம இருந்துச் சாப்புட்டுப்புட்டு ராத்திரித்தாம் கெளம்புவேம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "பொழுது ஆவுதுடி. அஞ்ஞ ஒரு கான்ட்ராக்ட் போச்சுன்னா யாரு அதெ பிடிச்சித் தருவா? நாம்ம சைட்ல போயி நின்னத்தாம் ஆளுக வேலையப் பாப்பாம். துட்டு இருந்தாத்தாம் அஞ்ஞ தட்டு நெறையச் சோத்தப் போட்டுச் சாப்புடலாம். நாம்ம இஞ்ஞ ஊருக்கு வந்திருக்குற சேதி தெரிஞ்சா போதும் அஞ்ஞ ஒருத்தெம் வேலையப் பாக்க மாட்டாம். சோலிய முடிச்சிப்புடுவானுவோ!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "ஒரு நாள்ல ஒண்ணும் லட்ச ரூவாயிப் போயிடாது! இருந்து ராத்திரி அழைச்சிட்டுப் போறதா இருந்தா வர்றேம். இல்லன்னா உக்கார வாணாம். நீஞ்ஞ ஒஞ்ஞ ஆபீஸையே கட்டிட்டு அழுவுங்க. நாம்ம இஞ்ஞயே இருந்துக்கிடுறேம். நமக்கென்ன இஞ்ஞ கொறைச்சலு? அஞ்ஞயாவது ஒஞ்ஞளுக்குச் சமைச்சிக் போட்டுக்கிட்டுக் கெடக்கணும். இஞ்ஞ யம்மா சமைச்சிப் போட்டுப்புடுவாங்க. நாம்ம பாட்டுக்கு மகாராணியாட்டம் உக்காந்துட்டுச் சாப்புட்டுக்கிட்டுக் கெடக்கலாம்."ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "இப்பத்தானே தெரியுது? ஏம் இஞ்ஞ கெளம்பி வந்தேன்னு? செரி மாப்புள எஞ்ஞ இருக்காம்? வந்ததுலேந்து கண்ணுலயே பட மாட்டேங்றாம்!"ன்னுச்சு சந்தானம் யத்தான்.
            "ஒஞ்ஞள மாதிரியா பள்ளியோடம் போவச் சொன்னா கொளத்தாங்கரையில அம்மணக்குஞ்சியா நீச்சல அடிச்சிக்கிட்டுக் கெடக்கும் யம்பீ? அத்து கொல்லைப்பக்கமா உக்காந்து படிச்சிட்டுக் கெடக்கு. பத்தாப்புல படிக்குது!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "ஒனக்கு அந்தக் கதை வரைக்கும் இஞ்ஞ வந்து தெரிஞ்சிடுச்சா? எல்லாம் எந் நேரம்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அதுக்காகத்தானே இஞ்ஞ வந்தேம். ஒஞ்ஞளோட, ஒஞ்ஞ குடும்பத்தோட அத்தனெ ரகசியமும் தெரிஞ்சாச்சு. இனுமே நம்மள அந்தாண்ட இந்தாண்ட வெரட்டிப்புடலாமுன்னு கனவு காணாதீயே!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "ஒன்னய யாரு வெரட்டுனா? நீயா கெளம்பியாந்தே! ப்போ நீயா பேசிட்டுக் கெடக்கே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "ம்ஹூக்கும்! இதுக்கொண்ணும் கொறைச்சல் யில்ல. நமக்குப் பாப்பா பொறந்தா யம்பீக்குத்தாம்ங்க கட்டி வைக்கணும்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "யாரு மாப்புள்ளைக்கா?"ன்னு சொல்லி சிரிச்சிச்சு சந்தானம் அத்தான்.
            "ஏம் சிரிக்கிறீங்க? யம்பீ கெராமத்துலு இருக்குதுன்னா? அத்துப் படிச்சிப் பெரிய அளவுக்கு வந்துப்புடும்ங்க!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "படிச்சி யாரு பெரிய அளவுக்கு வந்திருக்கா? அதுல்லாம் யில்லே. நமக்கு விருப்பம்தாம். மாமா கொடுக்கணும்ல. அத்துக் கொடுக்காது. நெருங்குன சொந்தம்ன்னு வேற எடத்துல பாத்துக்கிடுடான்னு சொல்லிட்டுப் போயிடும். எஞ்ஞ யக்காவையே கட்டிக்கிட முடியாதுன்னு ஒத்தக் கால்ல நின்னு மூணாங் கிளாஸ் படிச்ச யத்தையக் கட்டிக்கிட்டு தெரியுமா? எஞ்ஞ யக்கா பத்தாப்புல ஸ்கூல் பர்ஸ்ட்டுல்லா தெரியும்ல!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அதெல்லாம் ஒஞ்ஞ மாமாவுக்கு மூணாப்புப் போதும். இப்போ என்னத்தெ கொறைஞ்சிப் போயிடுச்சு?"ன்னுச்சு வெங்கு.
            இப்படிப் பேச்ச வேடிக்கையும் வெளையாட்டுமா போயிட்டு இருந்தப்ப சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "செரி! செரி! அவுங்கவுங்கப் போயி அவுங்கவுங்க வேலையப் பாருங்க! யம்பீ நீயி சென்னைப் பட்டணத்துலேந்து வந்திருக்கே. ஒடம்பு அசதியா இருக்கும். பாயை விரிச்சிப் போட்டுப் படு. பொண்டுகப் போயி ஆவ வேண்டிய காரியத்தெ பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. எல்லாமும் கலைஞ்சிப் போச்சுதுங்க.
            அன்னிக்கு ராத்திரி எட்டு மணி வாக்குல எட்டாம் நம்பர் பஸ்ஸூக்கு சந்தானம் அத்தானும், தனம் அத்தாச்சியும் கெளம்புறதுக்கு மின்னாடி சுப்பு வாத்தியாரு திருவாரூரு போயி ரெண்டு பேருக்குமா வேட்டிச் சட்டை, பொடவை துணி மணியெல்லாம் எடுத்தாந்து ரெண்டு பேருக்கும் வெச்சிக் கொடுத்து வழியனுப்பி வெச்சாரு. கெளம்பிப் போறப்ப தனம் அத்தாச்சியோட கண்ணு நெறைஞ்சு தண்ணித் தண்ணியா ஊத்துது.
            "நாம்ம நம்ம பொறந்த வூட்டுலேந்து இவரு கூட வந்தப்போ கூட இவ்ளோ அழலம்மா!"ன்னுச்சு தனம் அத்தாச்சி. அதெ கேட்டதும் எல்லாத்தோட கண்ணுலயும் தண்ணிக் கோத்துக்கிடுச்சு. கடெசீயா செய்யுவத் தூக்கி ரொம்ப நேரத்துக்குக் கொஞ்சுனுச்சு தனம் அத்தாச்சி. ‍அவளோட ரெண்டு கன்னத்துலயும் மாறி மாறி முத்தத்தெ கொடுதுச்சு தனம் அத்தாச்சி. "இவளெ மருமவளா கொண்டு போயிட்டா தேவலாம்! இனுமே இவளுக்கு எப்பிடிப் பயல பெக்குறது? பெத்தா அவ்வேம் வயசுல கம்மியா இருப்பாம். இவ்வே வயசுல கூடல்ல இருப்பா. யம்மா நீஞ்ஞ இவளெ இன்னும் கொஞ்சம் தள்ளிப் பெத்துருக்கலாம்!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.
            "ஆமாண்டியம்மா! ஏற்கனவெ அவ்வேம் பயலுக்கும் பொண்ணுக்கும் ஒம்போது வருஷம் வித்தியாம்டியம்மா!"ன்னுச்சு வெங்கு.
            "ஏம் மாமா அப்பிடின்னா இன்னொரு பொண்ண பெத்துக்கிடறது?"ன்னுச்சு சந்தானம் அத்தான் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "யப்பாடி நாஞ்ஞ பெத்துகிட்டதெல்லாம் போதும். இனுமே நீஞ்ஞத்தாம் நல்லபடியா இருந்து ஒத்துமையா புள்ளெ குட்டிகளப் பெத்துக்கிடணும். அடுத்த மொறை ஒஞ்ஞளப் பாக்குறப்போ கையில ஒரு கொடுக்கோடப் பாக்கணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            அதெ கேட்ட ஒடனே சந்தானம் அத்தானும், தனம் அத்தாச்சியும் சுப்பு வாத்தியாரையும், வெங்குவையும் கெழக்குப் பாக்க நிக்க வெச்சி கால்ல விழுந்து கும்புட்டாங்க.
            "வூடு நெறைய புள்ளைக்குட்டி அங்கன இங்கனன்னு வெளையாடுறாப்புல பெத்துக்கிட்டு மவராசியா இருடியம்மா!"ன்னு வெங்கு தனம் அத்தாச்சிய எழுப்பி வுட்டு நெத்தியில குங்குமத்த வெச்சி வுட்டுச்சு.
            "ந்நல்லா புத்தியா இருடாம்பீ!"ன்னு சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தான் நெத்தியில விபூதியப் பூசி வுட்டாரு. தன்னோட சட்டைப் பையிலேந்து நூத்து ரூவா தாள ஒண்ணு எடுத்து தனம் அத்தாச்சியோட கையிலயும் கொடுத்தாரு.
*****


No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...