4 May 2020

போடா வாடா பொட்டைக் கண்ணா!

செய்யு - 438        

            காலம் கொஞ்சம் ஓடுறப்போ மனுஷரோட மனசு மாறுது. அப்போ நடக்குற சம்பவங்கள் மனச கொஞ்சம் மாத்துது. இப்போ பெரியவரோட மனசுலயும் கொஞ்சம் இளப்பம் உண்டாயிருந்துச்சு. செயா அத்தை வேற ‍ஒரு நாளு வுடாம பெரியவர்ர வுட்டுக் கழட்டிக்கிட்டு இருந்துச்சு. வாயில வந்தபடி கண்டமேனிக்குப் பேசிக்கிட்டுக் கெடந்துச்சு. கலியாணம் ஆன நாள்லேந்து இத்து மாதிரி அத்து புருஷங்காரன பேசுனது கெடையாது. அத்து அப்பிடிப் பேசுறாப்புல ஆயிடுச்சு பெரியவரோட நெலமெ. அதுக்கு மருமவப் போனது கூட பெரிசா தெரியல, தம்பிக்காரனுக்கு மருவாதிக் கொடுக்கலைன்னு கோவம்.
            கலா அத்தாச்சி வந்ததும் வராதுமா பெரியவர்ர போட்டுத் தாக்குனுதுல கிட்டதட்ட அவரு நெலைகொலைஞ்சிப் போயிருந்தாரு. கடைசியா கலா அத்தாச்சிப் போறப்ப சொன்ன, "யப்பா நீஞ்ஞ பண்றதெல்லாம் சரியில்ல. எத்தனெ நாளைக்கு இப்பிடியே மாமா வூட்டுலயே மருமவப் பொண்ண வுட்டு வைப்பே? கடிசா யண்ணனெ வுட்டு அழைச்சிட்டு வார வழியப் பாரு!"ங்ற வார்த்தை ஒவ்வொண்ணும் அவரோட காதுல திரும்ப திரும்ப எதிரொலிச்சிக்கிட்டெ இருந்துச்சு. இப்பிடி ஏதேதோ ஞாபவத்துல நடந்ததுல திருவாரூரு டவுனு வந்ததெ தெரியல. கக்கத்துல வெச்சிருந்த தெனசரி பேப்பர எடுத்து ஒரு பார்வைய ஓட்டுனாரு. போன தடவெ திருவாரூரு வந்தப்போ வாங்குன தெனசரித் தாளு அது. எங்கப் போனாலும் அவரு கக்கத்துல தெனசரி தாளு ஒண்ணு அத்து பழசா இருந்தாலும் இருக்கணும், எடது கையில கடியாரம் இருக்கணும். இப்போ அந்த பழைய தெனசரித் தாள அதெ திரும்ப கக்கத்துல வெச்சிக்கிட்டுப் பக்கத்துல இருந்த கடையில அன்னிய தெனசரி பேப்பரு ஒண்ணையும், ரெண்டு சிகரெட்டையும் வாங்குனாரு.
            சிகரெட்டுல  ஒண்ணுத்த பத்த வெச்சிக்கிட்டு, இன்னொன்ன சட்டைப் பையில வுட்டுக்கிட்டு தெனசரித் தாள ஒரு பார்வைப் பாத்தாரு. பெறவு என்ன நெனைச்சாரோ அதெ பழைய தெனசரி தாள வெச்ச கக்கத்துலயே புதுசா வாங்குனதையும் மடிச்சி வெச்சிக்கிட்டாரு. ரொம்ப பொறுமையா சிகரெட்டு முழுசையும் இழுத்து முடிச்சாரு. இழுத்து முடிச்சிப்புட்டு கையில கட்டியிருந்த கடிகாரத்தோட மண்டெய மறுகை வெரலால பிடிச்சி ஒரு ஆட்டு ஆட்டி சிலுப்பி விட்டாப்புல பன்னி விட்டுப்புட்டு மணியப் பாத்தாரு. இந்நேரத்துக்கு மவ்வேம் ஆபீஸ்லத்தாம் இருப்பான்னு நெனைச்சுக்கிட்டு ஆபீஸ் நம்பருக்குத்தாம் பண்ணணும்னு தனக்குத்தானே மெதுவா சொல்லிக்கிட்டாரு.
            திருவாரூரு பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வழக்கமா பண்ற எஸ்.டி.டி. பூத் கடை பக்கமா வந்தாரு. ரெண்டு மூணு பேரு பேசிக்கிட்டு இருந்தாங்க. உள்ளார உக்காந்திருந்த பொண்ணுகிட்டெ, பாக்கெட்டுல வெச்சிருந்த டைரியில இருந்த நம்பர எடுத்துக் கொடுத்துட்டுப் பக்கத்துல கெடந்த நாற்காலியில உக்காந்து, கக்கத்துல வெச்சிருந்த தெனசரித் தாளை எடுத்து ஒரு பார்வைய ஓட்டுறாப்புல ஓட்டுனாரு. "உள்ளார பூத்ல போயி பேசுதீயளா? வெளிக்கா இப்பிடியே பேசுதீயளா?"ன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு. "வெசயம் பெரிசா யில்ல. ஒரு சேதித்தாம். இப்பிடிக்கி வெளியிலயே வெச்சிப் பேசிப்புடறேம்!"ன்னாரு இவரு. அப்பன்னா ஒடனே போடுறேம்ன்னு அந்தப் பொண்ணு உக்காந்திருந்த மேசைக்குப் பக்கத்துல இருந்த போன்ல நம்பர்ர போட்டுச்சு. இப்போ  திரும்பவும் தினசரி தாளு மடங்கி கக்கத்துல போனுச்சு பெரியவருக்கு. போனப் பிடிச்சிக்கிட்டு பெரியவரு பேசுனாரு.
            "யார்ரு சந்தானமா? நாம்ம யப்பா பேசுறேம்டா!"ன்னாரு பெரியவரு.
            "சொல்லுப்பா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அத்து வந்து நீயி ராத்திரிக்கா கெளம்பி இஞ்ஞ வார வாணாம். காலைக்கி திட்டைக்கு மாமா வூட்டுக்குப் போயிடு. அஞ்ஞருந்து நீயி கட்டுனவளெ அழைச்சிக்கிட்டு சென்னைப் பட்டணத்துக்குப் போயிடு. இஞ்ஞ வேலங்குடிக்கு வந்து தலைவெச்சிப் படுக்காதே!"ன்னாரு பெரியவரு.

            "ன்னப்பா சொல்றே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அதாம்டா சொன்னேம்ல. அதாங்! நீயி மாமா வூட்டுக்குப் போயி அதெ மொதல்லல அழைச்சிட்டுப் போ!"ன்னாரு பெரியவரு.
            "அதாங் ஏம் திடீர்ன்னு? அதெல்லாம் பேசி வெச்சித்தாம் கொண்டாரணும். இப்பிடியே வுட்டா துளித்துப் போயிடும்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "சொல்றேம்லடா! திருவாரூ பஸ் ஸ்டாண்டுல உள்ள கடையில நின்னு பேசிட்டு இருக்கேம். குடும்ப விசயத்தெ விரிவால்லாம் பேச முடியாது. ரொம்ப நேரத்துக்குப் பேசுனா காசியும் ஆயிடும். கையில காசியும் ரொம்ப கொண்டு வாரல்ல. சொன்னதெ பண்ணு. மிச்சத்தெ பெறவு பேசிக்கிடலாம்!"ன்னாரு பெரியவரு.
            "யப்பா! போனை வெச்சிடாதே! அந்த பஸ் ஸ்டாண்டு கடைத்தானே. நமக்குப் பழக்கமான கடைத்தாம். காசி கூட ஆனாலும் அஞ்ஞ வாரப்ப நாம்ம கொடுத்துக்கிறதா சொல்லு. என்னா வெசயம்ன்னு தெளிவா சொல்லு. மாமா வூட்டுக்குப் போனா அத்து கேக்குற கேள்விக்கு என்னத்தெ பதிலச் சொல்றது? இப்பிடி தலையும் யில்லாம வாலும் யில்லாம போடா அழைச்சிட்டு வாடான்னா புரியலப்பா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.
            "அதல்லாம் குடும்ப வழக்குன்னா ஆயிரம் இருக்கு. எல்லாத்தியும் வெலா வாரியால்லாம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. அழைச்சிட்டு வான்னா வார வேண்டியதுதாங். ஏம் என்னான்னு கேள்விக் கேட்டப்புட்டு இருந்தா, நேர்லயா பேசுறேம். போன்லல பேசுறேம். விசயம் அவ்வளவுதாங். நீயி அழைச்சிட்டு சென்னைப் பட்டணத்துக்கு வா. நாம்ம ரெண்டு நாளாவட்டும். திரும்ப ஒனக்கு அடிச்சிப் பேசுறேம்!"ன்னு சொல்லிப்புட்டு போனை வெச்சிப்புட்டாரு பெரியவரு. வெச்சவரு பொண்ணுகிட்டெ நூத்து ரூவா தாள எடுத்து நீட்டுனாரு. போன்ல பேசுறப்போ கையில காசி இல்லன்னு சொல்லிப்புட்டு நூத்து ரூவாயி தாள எடுத்து நீட்டுறாரேன்னு ஆச்சிரியமா பாத்துச்சு அந்தப் பொண்ணு. நூத்து ரூவாயித் தாள மேசை டிராயர்ல வாங்கிப் போட்டுக்கிட்டு மிச்ச சில்லரை எழுவத்து ஆறு ரூவாயி அம்பது பைசாவா அவருகிட்டெ நீட்டுனுச்சு.
            பெரியவரு பூத்தை வுட்டு வெளியில வந்தாரு. நேரா பழைய பஸ் ஸ்டாண்டு பக்கமா நடையப் கட்டி வாழக்கவெட்டி மதகுப் பக்கமா போற ரோட்டுல நடையைக் கட்டுனாரு. வர்ற வழியில இருந்தா சிவராமுராவ் இனிப்புக் கடையில நின்னு நூறு கிராம் அல்வாவச் சாப்புட்டாரு. இன்னொரு நூறு கிராம் அல்வாவ வாங்கி வேட்டி மடிப்புல கட்டுனாரு. போறப்ப எங்கயாச்சிம் எடையில சாப்புடலாமுன்னு. ஒரு பொட்டிக் கடை பக்கமா ஒதுங்கி, அங்க தொங்கிட்டு இருந்த நெருப்பு வெச்சக் கயித்துல சிகரெட்ட பத்த வெச்சாரு. அவரு பாட்டுக்கு நடையக் கட்டுனாரு. ரயிலு பொகை வுட்டுக்கிட்டே வேகமா போறாப்புல போறாரு பெரியவரு. அவரு வுடுற பொகை மேக மூட்டத்துல கலந்து மேகமா தெரளுறாப்புல அவரு மனசு பூரா நெனைப்புக ஒவ்வொண்ணும் மேக மூட்டமா தெரளுது.
            செயா அத்தைய கல்யாணம் கட்டிக்கிட்டு வேலங்குடி அழைச்சிட்டு வர்றப்போ நடந்த சம்பவம் பெரியவர மனசுக்குள்ள வந்துப் போவுது. அப்போ சுப்பு வாத்தியாரு சின்ன புள்ளெ. வெவரம் தெரியாத வயசுன்னும் சொல்ல முடியாது, வெவரம் தெரிஞ்ச வயசுன்னும் சொல்ல முடியாது. குடும்பத்துல வறுமை, கஷ்டம்ன்னாலும் பாசக்கார பய புள்ளையா வளந்தவரு. ரெண்டு தாய்மாரும், ரெண்டு யக்காக்காரியும் வளத்தப் பய புள்ள. செயா அத்தையக் கலியாணத்த கட்டிக்கிட்டு அஞ்ஞ விருத்தியூர்ல எத்தனெ நாளுக்கு இருக்க முடியும் பெரியவரு? செயா அத்தைய கூட்டிக்கிட்டு வேலங்குடி வந்தாவணும் இல்லையா. அழைச்சிக்கிட்டுக் கெளம்புறாரு பெரியவரு. சுப்பு வாத்தியாரு ரகளைப் பண்றாரு அக்காக்காரிய அனுப்ப வுடாம.
            ரத்தினம் ஆத்தாவும், தையல்நாயகி ஆத்தாவும் வந்து சுப்பு வாத்தியார்ர சமாதானம் பண்ணுதுங்க. "கலியாணம் ஆயிட்டா அத்து புருஷங்காரனோடத்தாம் போவணும்டா மவனே! எஞ் சின்ன புள்ளே!"ன்னு. சுப்பு வாத்தியாரு அத்தாங்காரங்ற மருவாதி யில்லாம, "யக்கால்லாம் வார முடியாது. அவனெ தனியா போவச் சொல்லு!"ன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றாரு. இதெ கேட்டுச் சிரிக்கிறதா? அழுவுறதா?ன்னு தெரியாம அங்க விருத்தியூர்ல எல்லாத்துக்கும் ஒரே கொழப்பம். பெறவு என்ன பண்றது? பெரியவருதாங் எறங்கி வந்து அன்னிக்கு ராத்திரி அங்க விருத்தியூர்ல கெளம்பி விடியக்காலையில சுப்பு வாத்தியாரு எழுந்திரிக்கிறதுக்கு மின்னாடி திருட்டுப் பய கணக்கா செயா அத்தைய கூப்பிட்டுக்கிட்டு இருட்டு கழியாத நேரத்துல செயா அத்தையோட நடையக் கட்டுனாரு.
            இப்போ நடக்கறப்போ அந்தச் சம்பவம் அலை அலையா மனசுக்குள்ள அடிக்க தனக்குத்தானே சிரிச்சிக்கிட்டாரு பெரியவரு. அப்பிடிச் சிரிச்சிக்கிட்டெ தனக்குத் தானே பேசிக்கிறாரு, "ன்னா பண்றது? அப்பம் யில்லாம வளந்த பய புள்ள சுப்பு. வளத்தது எல்லாம் சுத்தி நின்ன பொம்பளைங்க. யம்மக்காரி ரண்டு, யக்காக்காரி ரண்டு. யண்ணன்னு ஒருத்தம் இருந்தாலும் வேலைக்குப் போறது வாரதோட செரி. பெறவு இநதப் புள்ள கெளம்பி தங்காச்சிக்காரிய வளத்தது அது ஒரு கதெ. பொம்பளப் புள்ளைங்க மனசு கலங்குனா அதுக்குத் தாங்காது. அதாங் அன்னிக்கு தனத்த அடிக்கப் போனதும் கோவம் வந்து நம்மளப் பிடிச்சி தள்ளி வுட்டுப்புடுச்சு. வெவரம் தெரியாத வயசுல நம்மள ஒண்ணு கெடக்க அவனே இவனே போடா வாடா பொட்டக்கண்ணா எஞ்ஞ யக்காவ வுட்டுப்புட்டு போடான்னு பேசுனாலும், வெவரம் தெரிஞ்ச பெற்பாடு அத்து காட்டுற மருவாதிய யாராலயும் காட்டிட முடியாது. அத்துவும் நம்ம குடும்பத்துக்காக எம்மாம் பாடுபட்டுக்கிட்டு இருக்கு. இத்தனெ புள்ளைகளையும் தோள்ல சொமந்தது அதுதாங். ன்னா ஒரு கொறை? மூத்தப் பொண்ண கட்டிட்டு மருமவனா வந்திருந்தா திருப்தியா போயிருக்கும். ஆண்டவேம் நமக்கு அந்தக் கொடுப்பினையக் கொடுக்கல. பரவால்ல இப்பவும் நம்ம குடும்பத்தெ அதுதாங் தாங்கி நிக்குது. மச்சாங்கார்ரேம் குடும்பத்துக்கு ஒண்ணுண்ணதும் தனம் பொண்ண ‍அழைச்சிக் கொண்டு போயி கண்ணுக்குக் கண்ணாத்தாம் பாத்துக்கும். வேற ஒருத்தன்னா இந்நேரத்துக்கு ரெண்டு பக்கமும் இல்லாததையும் பொல்லாததையும் பத்த வெச்சி குடும்பத்தெ பிரிச்சிருப்பாம். கடெசியில அத்து ஜெயிச்சுப்புட்டுச்சு. அத்துச் செரி யாருகிட்டெ தோத்தேம்? நம்மட மச்சாங்கார்ரேங்கிட்டத்தான. ன்னா ஒரு சங்கட்டம்ன்னா அத்து மொகத்தப் பாத்து இனுமே பேசணும். அதுக்கு எப்போ காலம் வாரப் போவுதோ? நேரம் வாரப் போவுதோ? அந்த ஆண்டவேம்தான் ஒரு நல்ல வழியக் காட்டணும்!"ன்னு பேசிட்டு வந்தவரோட கையில இருந்த சிகரெட்டு தங் கதை முடிஞ்சிட்டுங்றதெ காட்டுது. அதெ அப்பிடியே கீழே போட்டு காலால ஒரு நசுக்கு நசுக்குனவரோட கையி இப்போ அவரை அறியாம வேட்டி மடிப்புக்குப் போவுது. அங்கத்தானே அவரு வாங்கி வெச்சிருக்குற அல்வா இருக்குது.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...