செய்யு - 450
வேலங்குடி பெரியவரு கண்ண மூடுறதுக்கு மின்னாடி
கடெசியாப் பாத்த சுப காரியம்ன்னா அத்து குமாரு அத்தாம் கலியாணம்தாம். ரொம்ப வேடிக்கையா
நடந்த கலியாணம்ன்னுத்தாம் அதெ பத்திச் சொல்லணும். கலியாணம்ன்னா எம்புட்டு கறாரா கட்டுச்
செட்டா நடக்கணும்னு பெரியவரு நெனைச்சி நடந்துப்பாரோ அதுக்கு நேர்மாறா நடந்தது குமாரு
அத்தானோட கலியாணம்.
பெரியவரோட ஒடம்பு படுக்குறது, உட்கார்றதுன்னு
நெலமெ மோசமாவ ஆரம்பிச்சதுக்குப் பின்னாடி சந்தானம் அத்தான் குமாரு அத்தானோட கலியாணத்தெ
சென்னைப் பட்டணத்துலயே வெச்சி வெரசா முடிச்சிப்புடலாம்னு நெனைச்சுச்சு. அது ஒரு வகையில
அதுக்குச் செளகரியமும் கூட. இப்போ பெரியவரோட குடும்பத்துல பெரும்பாலான சனங்க எல்லாம்
சென்னைப் பட்டணத்துலத்தாம் இருந்துச்சுங்க. செயா அத்தை, குமாரு அத்தான், பெறவு பொண்ணு
வூட்டு தரப்பு, சுப்பு வாத்தியாரு குடும்பம்ன்னு இவுங்க மட்டுந்தாம் சென்னை பட்டணத்துக்கு
வெளியில இருந்தாங்க. ஒரு வேனைப் பிடிச்சிக் கூட எல்லாத்தையும் சென்னைப் பட்டணத்துக்கு
வர்றாப்புல பண்ணிப்புடலாம்ன்னு சந்தானம் அத்தான் நெனைச்சுச்சு. அதுக்குப் பெரியவரு
சம்மதிக்கல. புலிவலம் பெருமாள் கோயில்ல வெச்சித்தாம் குமாரு அத்தானோட கலியாணத்தெ
பண்ணணுங்றதுல பிடிவாதமா இருந்தாரு பெரியவரு.
சென்னையில வெச்சி ஒரு கலியாணத்தெ முடிக்கிறதுங்றது
சந்தானம் அத்தானுக்கு சுலுவு. அதுவே வேலங்குடி வந்து, புலிவலம் கோயில்ல வெச்சு பாக்குறதுன்னா, இங்க வந்து ஏற்பாடுகளப் பண்ணிப்
பாக்குறது கொஞ்சம் மெனக்கெடுதாம் அதுக்கு. அத்தோட வேலங்குடியில கட்டுன வூட்டோட கிரகப்
பிரவேசம், பிள்ளையாரு கோயிலோட கும்பாபிஷேகம்ன்னு பெரியவர்ர சென்னைப் பட்டணத்துலேந்து
அழைச்சிட்டு வந்து அப்பவே ரொம்ப செருமப்பட்டுப் போச்சு சந்தானம் அத்தான். பெரியவர்ர
கார்ல ஏத்தி உக்கார வெச்சி, எறக்கி வுட்டு எடத்தெ மாத்திக் கொண்டு போறதெல்லாம் அதுக்கு
ரொம்பவே பெரும்பாடா இருந்துச்சு. அதையெல்லாம் கணக்குப் பண்ணித்தாம் சந்தானம் அத்தான்
எல்லாத்தையும் சென்னைப் பட்டணத்துல வெச்சி முடிச்சிப்புடலாங்ற அப்பிடி ஒரு யோசனையில
நின்னு பாத்துச்சு.
அத்தோட இந்தச் செல மாசங்கள்ல சந்தானம்
அத்தான் சென்னைக்கும் வேலங்குடிக்கும் கோயிலு கட்டுமானம், வூட்டோட கட்டுமானம்ன்னு,
ஊரு வெவகாரம்ன்னு அலைஞ்சி அலைஞ்சி அலுத்துப் போயிருந்துச்சு. இருந்தாலும் உசுரு போற
கால கட்டத்துல இருக்குற அப்பங்காரரோட பிடிவாதத்துக்குக் குறுக்கால நிக்க விரும்பல
சந்தானம் அத்தான். இது ஒரு வேள அப்பங்காரரோட கடெசி ஆசையா இருந்து, அத்த நிறைவேத்த
முடியாம போயிடுச்சுன்னா பெறவு அது காலா காலத்துக்கும் மனசுக்கு ஒரு பெரும் கொறையா
வேறல்ல போயிடும். இப்போ நெலமெ எல்லாம் கொஞ்சம் கொழப்படியாத்தாம் போச்சு. வூட்டு
கிரகப் பிரவேசம், கோயிலு கும்பாபிஷேகம் முடிஞ்சி, இப்போ குமாரு அத்தானோட கலியாணம்ன்னு
எல்லாத்தையும் ஒண்ணு மாத்தி ஒண்ணு அடுத்தடுத்தாப்புல அததுக்கான நேரம் வர்றப்பவே வேக
வேகமா செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு பக்கம்ன்னா, அப்பங்காரரோட உசுரு எப்ப வாணாலும்
பிரியலாங்ற நெலையில அவரு உசுரு போறதுக்கு மின்னாடியே இதையெல்லாம் கண்ணால காண வெச்சிப்புடணுங்ற
நெருக்கடி இன்னொரு பக்கம் சந்தானம் அத்தானுக்கு. அதால காரியங்க நடக்குறது அரைகொறையா
இருந்தாலும் சரித்தாம், கொறைபாடுக இருந்தாலும் சரித்தாம், ஏத்தோ நடந்து முடிஞ்சா
சரித்தாங்ற மனநெலைக்கு அது வந்திருந்துச்சு.
புலிவலம் பெருமாள் கோயில்ங்றது பெரியவரோட
ஆதர்சம்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்லே. அவரோட அத்தனெ வருஷ வேலங்குடி வாழ்க்கையிலும்
அவரு குடும்பத்துக்கான கலியாண விஷேசங்க எல்லாம் அங்கத்தாம் நடந்திருக்கு. அங்க வெச்சிச்
செஞ்சாத்தாம் அவருக்குத் திருப்திப்படும். பெருமா கோயில்ல கலியாணத்தப் பண்ணாத்தாம்
பெரு வாழ்வு வாழலாம்பாரு. அவருக்கு மனசுக்கு ஒண்ணுன்னா அவரு போயி உக்கார்ர எடம் அங்கத்தாம்.
பெருமாளேன்னு போயி கோயில்ல உக்காந்தா அங்க அவருக்கு எது கெடைக்கணுமோ அத்து கெடைச்சிடுறதா
சொல்வாரு. அங்க வெச்சி தன்னோட ஏழு புள்ளைங்களோட கலியாணத்தையும் பாத்தவருக்கு இப்போ
கடெசியா எட்டாவது புள்ளையோட கலியாணத்தையும் அங்க வெச்சிப் பாத்துட்டார்ன்னா அவரோட
கணக்கு முடிஞ்சிடுச்சு.
வேலங்குடி பெரியவரோட புள்ளீயோ கலியாணமெல்லாம்
கிட்டதட்ட ஒரே மாதிரியா நடந்த கலியாணங்கத்தாம். ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வந்தா
இன்னொரு கலியாணம் எப்பிடி நடக்கும்ங்றதெ நடக்குறதுக்கு மின்னாடி கண்ணுல காட்டுறாப்புல
சொல்லலாம். நீங்களும் அப்பிடி ஒரு சில கலியாணத்தைத்தாம் பாத்திருக்கீங்களே! மறுக்கா
இப்போ அதெப் பத்திச் சொல்லணும்ன்னா, புலிவலத்துல மண்டபமோ, சத்திரமோ எது வாடகைக்குக்
கெடைக்குதோ, அதெ எடுத்துக்கிடறது. அங்கப் போயி மொத நாளு ராத்திரியே தங்கிக்கிடறது.
காலங்காத்தால ஆறு மணியிலேந்து ஒம்போது மணி வாக்குல கலியாணத்த கோயில்ல வெச்சி முடிச்சிடுறது.
அதுவும் மொத தாலி, பெறவு நாகவல்லி முகூர்த்த்துக்கு ரெண்டாவது தாலின்னு ரெண்டு மூகூர்த்தத்தையும்
அடுத்தடுத்தாப்புல வேகமா செய்ய வெச்சி முடிச்சிடுறது. இங்க கலியாணத்தை ஐயருமாருகள வெச்சிச்
செய்யாம இதுக்குன்னே இவுங்க வகையறாவுல இருக்குற வாத்தியாருமாருகள வெச்சிச் செய்யுறதுன்னு
இதுக்குன்னு ஒரு கிளிஷேவே இருக்கு.
கலியாணத்த முடிச்சி மண்டபத்துல காலைச்
சாப்பாடு. பெறவு இருக்குறவங்களுக்கு பதினோரு மணி வாக்குல மத்தியானச் சாப்பாட்ட போட்டா
கலியாணம் முடிஞ்சது. பெரியவரு இதுல கால்ல சக்கரத்தக் கட்டிட்டு, கண்ணுல கடியாரத்த மாட்டிட்டு
சொழல்வாரு. அதால எல்லாம் நேரா நேரத்துக்குச் சரியா நடக்கும். ஒரு தேவைன்னா ஒருத்தரு
அப்பிடிச் சொழண்டாத்தாம் காரியமெல்லாம் சரியா நடக்கும். அதுவும் குறிப்பா நல்ல நேரம்
போறதுக்குள்ள தாலிய கட்டி முடிக்க முடியும். அதுதாங் கலியாணத்துல ரொம்ப முக்கியம்.
பெரியவரு இப்போ ஓய்ஞ்சிக் கெடக்குறாரு. இப்போ குமாரு அத்தாம் கலியாணத்துக்கு அப்படி
நின்னுச் செய்யுறதுக்கு யாரு இருக்கா? சுப்பு வாத்தியாரு அப்பிடி நின்னுச் செய்யலாம்ன்னா
பெரியவரு அளவுக்கு அவருக்கு ஆளுமெ பத்தாது. அத்து பெரியவருக்குத்தாம் வரும். அதெ விட்டா,
சந்தானம் அத்தான் அப்பிடி நின்னுச் செய்யலாம்ன்னா ஒரே ஆளா அத்து எல்லா காரியத்தையும்
பாத்து இப்போ கொஞ்சம் தொவண்டுப் போயிக் கெடக்கு.
பொதுவா இப்போ கலியாணத்துக்கு வர்ற எல்லா
சனமும் தூக்கம் எப்போ கலையுதோ அப்போ எழுந்திரிக்கிற சனங்களாத்தாம் இருக்கு. அதுவும்
இங்க இருக்குற சனங்க பெரும்பாலும் சென்னைப் பட்டணத்துலேந்து வந்ததுங்க. ஒவ்வொண்ணும்
ராத்திரி முழுக்க ஒண்ணு பத்து மணிக்கும், ஒண்ணு பன்னெண்டு மணிக்கும், ஒண்ணு நடுராத்திரி
ரெண்டு மணிக்கும், ஒரு சிலதுங்க மூணு மணிக்கும்ன்னு ஒவ்வொரு நேரத்துலு வந்துச்சுங்க.
கலியாணம்தான் முக்கியமான வேலைன்னு வந்துப் போன காலம் இந்தக் கால கட்டத்துல ரொம்பத்தாம்
மாறிப் போவுது. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்களோட வேலை முக்கியம்ன்னு ஆகிப் போவுது.
அதுக்கு இடையிலத்தாம் கலியாணங் காட்சின்னு வந்துப் போறது நடக்குது. முன்ன காலத்தப் போல யாரு மின்னாடி வந்தா, யாரு
பின்னாடி வந்தான்னு பாக்குறதுக்கு இப்போ எந்தத் தேவையில முடியுது? கலியாணத்துக்கு
வந்து ஒருத்தரு தலையக் காட்டுனாராங்றதெ பாக்குறதெ பெரும்பாடா போவுது.
பெரியவர்ர சென்னைப் பட்டணத்துலேந்து இங்க
கொண்டு வர்றதே பெரும்பாடாத்தாம் இருந்துச்சுங்றதெ சொல்ல வேண்டியதில்ல. அவரோட ஒடம்பு
ரொம்ப லேவுடியா போச்சுது. அதுக்குத் தகுந்தாப்புல அவர்ர கார்ல கொண்டாந்து, மண்டபத்துல
நாற்காலியில மெதுமெதுன்னு இருக்குறாப்புல தலையணையெல்லாம் வெச்சு அவர்ர உக்கார வெச்சா
அதுல சாஞ்சுக்கிட்டு அவரு பாட்டுக்குச் சொகமா தூங்கிட்டுக் கெடக்குறாரு. வயசாசிக்
காலம் கடந்தக் காலத்துல அவரு எழுந்திரிக்கலன்னு அவரை கொறை சொல்ல முடியாது. அத்தோட
ஒடம்பு வேற முடியாதவரு.
இதுல இன்னொரு வேடிக்கைன்னா, மாமங்காரரான
சுப்பு வாத்தியாரும் அந்தக் கலியாணத்துக்கு விடியக்காலையிலத்தாம் டிவியெஸ்ல பின்னாடி
வெங்குவ வெச்சிக்கிட்டுக் கெளம்பி அஞ்சரை மணி வாக்குல புலிவலத்துக்குப் போயிச் சேந்தாரு.
புள்ளைக ரெண்டு பேரையும் எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி வந்து சேருங்கன்னு சொல்லிட்டாரு.
அஞ்சரை மணிக்குக் காலையில வடவாதியில எடுக்குற அந்த மொத பஸ்ஸே பிடிச்சி ஏறுனா ஆறு மணிக்கோ,
ஆறே காலுக்கோ புலிவலத்துப் போயி எறங்கிடலாம். அதுல புள்ளைக வந்துச் சேரட்டும், நாம்ம
மின்னாடிப் போயிச் சேருவோங்றது அவரோட திட்டம்.
சுப்பு வாத்தியாரு போயிச் சேந்து பாத்தப்போ
மொத்த மண்டபமெ தூக்கத்துல கெடக்கு. ஆறு மணிக்குக் கலியாணத்த வெச்சிட்டு இப்படி கும்பகர்ண
தூக்கம் தூங்குதுங்களே சனங்கன்னு அவரும் வெங்குவுமா சனங்கள எழுப்புனா ஒண்ணும் எழும்ப
மாட்டேங்குது. எல்லாம் பெரண்டு பெரண்டோ, சுருண்டு சுருண்டோ படுத்துக்கிடுதெ தவுர
ஒண்ணுத்தையும் கெளப்ப முடியல. பெரியவரு அப்பிடியே பொம்மையப் போல உக்கார வெச்சது உக்காந்தபடியே
ஒறங்கிட்டு இருக்காரு. இதுவே அவரு நடமாட்டமா இருந்திருந்தா எத்தனெ கொடம் தண்ணி எத்தனெ
பேரு தலையில ஊத்திருக்குங்றதெ கணக்குப் பண்ண முடியாது. சந்தானம் அத்தானே கடுமையான தூக்கத்துலத்தாம்
இருந்துச்சு.
சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தானெ தட்டித்
தட்டி எழுப்புறாரு. அதுவும் எழுந்திரிக்காம அப்பிடியே படுத்துக் கெடக்குது. அதுக்குள்ள
மணி ஆறே காலு தாண்டிடுச்சு. எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி ஏறிப் போன விகடுவும்,
செய்யுவும் அங்கப் போயி பாக்குறப்போ மண்டபமே உறங்குறாப்புல சனங்க ஒவ்வொண்ணும் அங்கயும்
இங்கயும் உருண்டுகிட்டுக் கெடக்குதுங்க. விகடு போனதுக்குப் பெறவு சந்தானம் அத்தான்
ஒடம்ப புடிச்சி உலுக்கி எழுப்புனாம். சந்தானம் அத்தான் கண்ண கசக்கிக்கிட்டு எழுந்திரிச்சி
உக்காந்துச்சு.
சுப்பு வாத்தியாரு, "நாளைக்கி நடக்குற
கலியாணத்துக்கு இன்னிக்கே வந்துட்டேம் போலருக்கேடாம்பீ? ன்னா இன்னிக்குக் கலியாணத்
தோது உண்டா எப்பிடி?"ன்னாரு. அப்பத்தாம் சந்தானம் அத்தான் கையில கட்டியிருந்த
கடியாரத்தப் பாத்து, "யய்யோ மாமா! நேரமாயிடுச்சே. இந்நேரத்துக்கு கலியாண வேல
ஆயிருக்கணுமே! நீயாச்சியும் கொஞ்சம் சீக்கிரமா வந்து எழுப்பிருக்கக் கூடாதா?"ன்னுச்சு.
அப்பத்தாம் செயா அத்தை சத்தம் போட்டுச்சு,
"ஏம்டா சந்தானம் சந்தானம்ன்னு வாயிக் கிழியுறாப்புல சத்தம் போடுறேம். எழும்ப
மாட்டேங்றே. செரி நீந்தாம் எழும்பல. சுத்தில கெடக்குற சனத்துலு ஒண்ணு கூடயா எழும்பக்
கூடாது. நாம்ம எழுப்பியும் ஒண்ணும் எழும்பல. அத்து மாமா வந்து எம்மாம் நேரமா ஒண்ணொண்ணையும்
எழுப்புது? ஒண்ணும் கெளம்ப மாட்டேங்குது. அதுவும் எம்மாம் நேரந்தாம் எழுப்பிப் பாக்கும்?
அசந்துப் போயிடுச்சு. இப்பிடி ஆம்பளையும் பொம்பளைுயுமா படுத்துக் கெடந்தா என்னத்தெ
பண்ணுறது? இந்த மாதிரி ஒரு கூத்தெ நாம்ம எந்தக் கலியாணத்துலயும் பாத்ததில்லடா!"ன்னு.
இப்பிடியா பொண்ணு வூடு, மாப்புள வூடுன்னு ஒண்ணு பாக்கியில்லாம தூங்கிக் கெடந்த கூத்து
குமாரு அத்தாம் கலியாணத்துலத்தாம் நடந்துச்சு. செயா அத்தை ஒண்ணு மட்டுந்தாம் நேரத்துக்கு
எழும்பிக் குளிச்சி முடிச்சிப் பட்டுப் பொடவையக் கட்டிக்கிட்டு உக்காந்திருந்துச்சு.
கிட்டதட்ட அவுங்கவுங்க வந்துட்டுப் போற காரியம்தாம் பெரிசுங்ற மாதிரியும், கலியாணத்தெ
நேரம் கெடைக்குறப்ப இருக்குற நேரத்துல பண்ணிக்கிடலாம்ங்ற மாதிரிக்கி நெலமெ மாறியிருந்துச்சு.
அதுக்குப் பெறவுதாம் காரியங்க வேகமா நடக்க
ஆரம்பிச்சு. சந்தானம் அத்தான் கையில துண்ட ஒண்ணு வெச்சிக்கிட்டு, அதெ ரெட்ட மடிப்பா
போட்டுக்கிட்டு அதாலயே அடிச்சி ஒவ்வொருத்தரையா எழுப்புனுச்சு. பளிச் பளிச்ன்னு வுழுந்த
அடியில ஒவ்வொண்ணும் எழுந்துச்சுங்க. எல்லாம் எழும்பி குளிச்சி முடிச்சி அலங்காரத்தெல்லாம்
பண்ணிட்டு வாரறதுக்குள்ள மணி எட்டுக்கு மேல ஆயிடுச்சு. அதுக்குப் பெறவு அரக்கப் பரக்க
கோயிலுக்குக் கெளம்பிப் போனா அங்க கலியாணத்தெ பண்ணி வைக்கிற வாத்தியாரு எல்லா ஏற்பாட்டையும்
செஞ்சி வெச்சிட்டு என்னடா ஒருத்தரும் ஆள காணுமேன்னு உக்காந்திருக்காரு.
பட்டணத்து அலங்காரப் பிரியர்கள் எல்லாம்
ஒவ்வொண்ணா கோயிலுக்கு வந்துச் சேர்றதுக்குள்ள எட்டரைக்கு மேல ஆச்சுது. ஒம்போதெ நெருங்கறதுக்குள்ள
கலியாணத்த முடிச்சாவணுமேன்னு எல்லாம் அவசர அவரமா நடந்துச்சு. வேகம்ன்னா அப்பிடி ஒரு
வேகம். ஒரு கால் மணி நேரம் கூட இருக்காது. சர சரன்னு கலியாணச் சடங்குகள பேருக்கு முடிச்சி
தாலிய கட்ட வெச்சாரு வாத்தியாரு. எல்லாத்தையும் கிட்டதட்ட பிரக்ஞை இல்லாதவரு போல பாத்துக்கிட்டே
நாற்காலியில உக்காந்திருந்தாரு பெரியவரு. இதுல இருக்குற சனங்களே எழும்பிக் கெளம்பாத
நெலையில அவர வேற ஒரு ஆளு குளிப்பாட்டித் தொடைச்சி வுட்டு, உடுப்புகள உடுத்தி வுட்டு,
கைத்தாங்கலா கார்ல ஏத்தி எறக்கி கொண்டு வந்து உக்கார வைக்கிறது பெரு வேலையா இருந்துச்சு.
இதுவே அவருக்கு பிரக்ஞை மட்டும் கொஞ்சம் இருந்திருந்தா வாத்தியாரு பக்கத்துலயே உக்காந்து
எது எது எந்த மாதிரிக்கி நடக்கணுங்றதெ வாத்தியாருக்கே பாடத்தெ நடத்துறாப்புல நடத்திட்டு
இருப்பாரு. எவ்வளவோ கட்டுசெட்டா ஆச்சாரமா நடந்துட்டு இருந்த கலியாண மொறைக மொத மொதல்ல
மாறுனதுன்னா அத்து குமாரு அத்தாம் கலியாணத்துலதாம். எல்லாம் அவசர அவசரமா அலங்கோலமா
அரக்கப் பரக்க ஒருவழியா நடந்து முடிஞ்சிது.
கலியாணத்துக்கு நேரமாச்சுன்னு கால்ல வெந்நிய
ஊத்துனாப்புல கெளம்புன சனங்க ஒவ்வொண்ணும் மண்டபத்துலேந்து ஒரு வாயி காப்பித்தண்ணியக்
கூட வாயில ஊத்தாம வந்ததுல கலியாணம் முடிஞ்சதும் பசித் தாங்க முடியல. கலியாணத்த முடிச்சு
பொண்ணையும் மாப்புள்ளையையும் மண்டபத்துக்குக் கொண்டு போறதுக்கு மின்னாடி ஒவ்வொண்ணும்
அதது வேக வேகமா மண்டபத்துக்குச் சாப்பாட்டுக்கு ஓடுனா பாதி சனத்துக்குத்தாம் சாப்பாடு
இருக்கு, பாதி சனத்துக்குச் சாப்பாடு இல்ல. சாப்பாடு கெடைக்காத சனங்க ஒவ்வொண்ணும்
சுத்தியிருந்த டீக்கடையிலயும், சாப்பாட்டுக் கடையிலயும் கெடைச்சதெ வாங்கித் தின்னு
பசியாத்திக்கிறாப்புல ஆயிடுச்சு. அத்தோட கலியாணம் முடிஞ்ச ஒடனேயே, இதுக்கு மேல இங்க
இருந்தா கொலைபட்டினிப் போட்டே கொன்னுப்புடுவாங்கன்னு நெனைச்சிதோ என்னவோ, ஆள வுடுங்கடா
சாமின்னு, முக்காவாசி சனங்க ஒவ்வொண்ணும் கெடைச்ச பஸ்ஸப் பிடிச்சி ஏறி அதது ஊருக்குப்
பசியும் பட்டினியுமா கெளம்பி ஓடிடுச்சுங்க.
அன்னிய கலியாணத்துல பொண்ணு மாப்புள்ளையே
சரியா சாப்புடாம பட்டினிக் கெடக்கறாப்புல ஆயிடுச்சு. அதுதாங் உச்ககட்ட சோகம். பொண்ணு
மாப்பிள்ளைக்கே வவுத்துப் பசிக்கு ஒண்ணும் கெடைக்கலங்றப்போ கலியாணத்துக்கு வந்த மித்தவங்க
கொறைபட்டுக்கிறதுல என்னா இருக்கு சொல்லுங்க. பெறவு ஒரு வழியா வேலங்குடி வந்துதாம்
இருந்த சனத்துக்கு ரவாவுல உப்புமாவக் கெளறிப் போட்டு பசிய ஆத்துறாப்புல ஆயிடுச்சு.
எப்பிடியோ ஒரு வழியா ஏதோ பேருக்குக் கதையக் கட்டி வுட்டா ஆச்சுங்ற அளவுக்கு வேடிக்கைக்
கூத்தாப் போயிடுச்சு குமாரு அத்தாங் கலியாணம். இன்னொரு வகையில ஒரு கலியாணத் தேவைன்னா
அதுக்காக எவ்வளவு மெனக்கெடணும், எவ்வளவு முங்கூட்டியே ஏற்பாடுகள பண்ணி வெச்சிருக்கணும்,
அதுக்காக பெரியவரு எப்பிடியெல்லாம் பாடுபட்டுருப்பாருங்றதெ உணர்த்துனது குமாரு அத்தானோட
கலியாணந்தாம்.
இந்தக் கலியாணம் நடந்ததுல, இன்னொரு முக்கியமான
விசயம் சொல்லணும்ன்னா எல்லா சொந்தக்கார, சாதிக்கார குடும்ப சனங்களும் வந்திருந்த
இந்தக் கலியாணத்துக்கு வராத ஒரே குடும்பம்ன்னா அத்து சின்னவரோட குடும்பம்தாம்! அந்த
அளவுக்கு அண்ணன் தம்பி ரெண்டு பேரு குடும்பத்துக்கும் பகை முத்திப் போயிருந்துச்சு.
*****
No comments:
Post a Comment